இந்திய ஆட்சியாளர்களைக் கரப்பான் பூச்சிகள் பயமுறுத்தத் தொடங்கியுள்ளன. ஆச்சரியமாக உள்ளதா? ஆச்சரியப்பட்டாலும் உண்மை அது தான்.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த், 'இந்த நாட்டில் உள்ள வேலை இல்லாத இளைஞர்களை கரப்பான்பூச்சிகள்,
ஒட்டுண்ணிகள்`
என ஒரு விசாரணையின்போது குறிப்பிட்டு தனது அதிகாரச் சாட்டையை இளைஞர்கள் மீது சொடுக்கினார். அது இருக்கும் இடம் தொியாமல் வசித்து வந்த "கரப்பான்பூச்சிகளை " உசுப்பி விட்டுவிட்டது. 'ஆம், நாங்கள் கரப்பான்பூச்சிகள்தான்' என்று கூறிக்கொண்டு இளைஞர் பட்டாளம் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயரில் அணி திரளத் தொடங்கி விட்டது.
அமெரிக்காவில் போஸ்டன் பல்கலைக் கழகத்தில் பட்ட மேற்படிப்பு படித்து வரும் அபிஜித் தீப்கே என்னும் மகாராட்டிரத்தைச் சேர்ந்த. இளைஞரால் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயரில் ஓர் இணையதளக் கட்சி மே, 16 அன்று தொடங்கப்பட்டது. அது "வேலை இல்லாமல், சோம்பேறிகளாக உள்ள, மறக்கப்பட்ட குடிமகன்களுக்கான இந்தியாவின் மிகவும் உண்மையான அரசியல் கட்சி" எனத் தன்னை அறிவித்துக் கொண்டுள்ளது. அது கேலியும் கிண்டலுடன் இந்திய அரசியல் தலைவர்களையும் ஆட்சியாளர்களையும் அவர்களின் போலியான வாக்குறுதிகளையும் அதிகார நிறுவனங்களையும் நையாண்டி செய்யத் தொடங்கியுள்ளது. வேலை இல்லாத் திண்டாட்டம், விலைவாசி ஏற்றம், ஊழல், நீட் கேள்வித் தாள் கசிவு எனப் பல்வேறு விடயங்களைப் பற்றியும் இளைஞர்களின் கோபத்தையும், விரக்தியையும் ஏமாற்றங்களையும் வெளிப்படுத்தி வருகிறது.
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஒரு சில நாட்களிலேயே நாடெங்கும் பரவலாக மக்களின் கவனத்தை ஈர்த்து, இப்பொழுது 2 கோடி பேர்களை இன்ஸ்டாகிராமில் தன்னைப் பின்தொடர வைத்துள்ளது. X தளத்திலும் பல இலட்சம் பின் தொடர்பவர்களைக் கொண்டுள்ளது. பல ஆண்டுகளாக இருக்கும் காங்கிரஸ் கட்சி, பாரதிய ஜனதா கட்சி ஆகிய கட்சிகளின் கணக்குகளை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்பவர்களை விட கரப்பான் பூச்சி ஜனதா கட்சி கணக்கைப் பின்தொடர்பவர்கள் இன்று அதிகமாகி உள்ளனர்.
கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் வளர்ச்சி வேகத்தைக் கண்டு அஞ்சிய ஒன்றிய பாஜக ஆட்சியாளர்கள் 'X' தளத்திற்கு நெருக்குதல் கொடுத்து அதில் இருந்த கரப்பான் பூச்சிக் கட்சியின் கணக்கை முடக்கியுள்ளனர். வங்காளதேசத்திலும்,
நேபாளத்திலும் Gen z இளைஞர்கள் போராட்டம் வெடித்து ஆட்சியைத் தூக்கி எறிந்தது போல இங்கும் இளைஞர்கள் போராட்டத்தைத் தொடங்கி தனது ஆட்சியை இந்த இயக்கம் தூக்கி எறிந்துவிடுமோ என பாஜக கட்சிக்கு பயம் வந்துவிட்டது. அதனால் அந்த இயக்கம் வளர்ந்துவிடக் கூடாது எனக் கருதி முளையிலேயே கிள்ளி எறியத் துடிக்கிறது. இருப்பினும், 'கரப்பான் பூச்சி திரும்ப வந்துவிட்டது'
என்ற பெயரில் அக்கட்சி புதிய கணக்கை X தளத்தில் மீண்டும் தொடங்கிவிட்டது. 'கரப்பான் பூச்சியை யாராலும் அழிக்க முடியாது' என்று கூறிக் கொண்டு ஆட்சியாளர்களின் மீது கேலியும் கிண்டலுமான கணைகளைத் தொடுத்துவருகிறது;
இப்பொழுது பெரும் இணைய தள இயக்கமாக வளர்ந்து வருகிறது.
அந்தக் கட்சி ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு மாநிலங்கள் அவை உறுப்பினர் போன்ற பதவிகள் அளிக்கத் தடை, கட்சி தாவும் அரசியல்வாதிகள் தேர்தலில் நிற்க இருபதாண்டுகள் தடை, பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 50% ஒதுக்கீடு, கார்ப்பரேட் முதலாளிகளுக்குச் சொந்தமான ஊடகங்களின் உரிமங்களை இரத்து செய்து சுதந்திரமான ஊடகங்களுக்கு வழிவகுத்தல், கல்வித் துறையில் சீர்திருத்தம் ஆகியவற்றைத் தனது கொள்கைகளாக அறிவித்துக்கொண்டுள்ளது. இவை மேலோட்டமான, சீர்திருத்தக் கருத்துகளாக இருந்தாலும், அந்த இயக்கம் மக்களைப் பாதித்து வரும் அன்றாடப் பிரச்சினைகளைப் பற்றியும் பேசி வருகிறது.
பெட்ரோல், டீசல், எரிவாயு ஆகியவற்றின் கடுமையான விலை உயர்வு, உணவு உட்பட அனைத்துப் பொருட்களின் விலை உயர்வு, உரங்களின் விலை உயர்வு, உரப் பற்றாக்குறையினால் வேளாண்மை உற்பத்தி பாதிப்பு, பள்ளி, கல்லூரித் தேர்வுகளில் ஊழல், வேலை இல்லாத்திண்டாட்டம்,
தொழிற்துறையில் புதிய முதலீடுகள் இல்லாமை, முக்கியமான உற்பத்தித் துறைகளில் தேக்கம், வர்த்தகப் பற்றாக்குறை, அந்நிய முதலீடுகள் வெளியேறுதல், அந்நியச் செலாவணி இருப்புக் குறைந்து வருதல், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருதல் என இந்தியப் பொருளாதாரம் பெரும் நெருக்கடியில் இருக்கிறது. அதனால் அனைத்துப் பகுதி மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, விரக்தியுற்று ஆட்சியாளர்களின் மீது அதிருப்தியுடனும் கோபத்துடனும் இருந்து வருகின்றனர். இந்த நிலைமையில் கரப்பான் பூச்சி ஜனதாக் கட்சியின் கொள்கை மேலோட்டமான சீர்திருத்தக் கொள்கைகள்தான் என்றாலும், இந்த இயக்கம் வளர்ச்சிப் போக்கில் ஆட்சியாளர்களின் மீது மக்களுக்கு உள்ள அதிருப்தியையும் கோபத்தையும் பயன்படுத்திக்கொண்டு பெருங்காட்டுத் தீயாக மாறி தம் ஆட்சிக்கு முடிவு கட்டிவிடும் என ஆட்சியாளர்கள் அஞ்சுகின்றனர். அண்டை நாடுகளான இலங்கை, வங்காள தேசம், நேபாளம் ஆகியவற்றில் நடந்த மக்கள் எழுச்சிகளையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் கண்டுள்ள ஆட்சியாளர்கள் அஞ்சுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
ஆட்சியாளர்களுக்கு எதிரான அனைத்துப் பகுதி மக்களின் வெறுப்பும் கோபமும் ஒன்றிணைந்து பேரெழுச்சியாக வெடித்து இங்குள்ள ஆட்சியாளர்கள் தூக்கி எறியப்படுவதும் சாத்தியமே. ஆட்சியாளர்களின் மீதும் வெறுப்பும், அவர்களைத் தூக்கி எறிய வேண்டும் என்ற ஒற்றை நோக்கமும் கொண்ட மக்கள் எழுச்சி வெற்றி பெற்றாலும் கூட மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் அது தொடர்ந்து நீடிப்பதில்லை. மக்களின் எழுச்சி அலை ஓய்ந்ததும் ஆளும் வர்க்கத்தின் புதிய ஏஜண்ட்டுகள் ஆட்சியில் மீண்டும் வந்து அமர்ந்து கொள்வார்கள். இலங்கையிலும் வங்காளதேசத்திலும் நேபாளத்திலும் அதுதான் நடந்தது. தன்னெழுச்சியாக எழும் எந்தப் பேரெழுச்சிக்கும் அரசியல் தெளிவும் பொருளாதாரம் பற்றிய புரிதலும், தொலைநோக்குப் பார்வையும் கொண்ட ஒரு தலைமை இருக்க வேண்டும். அப்பொழுது மட்டுமே மக்கள் எழுச்சி தன் நோக்கத்தை அடைய முடியும். மக்கள் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.
மக்கள் இன்று எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணமாக இருப்பது முதலாளி வர்க்கத்தின் சுரண்டலும், அதனைக் கட்டிக் காப்பாற்றி வரும் அதிகாரவர்க்க ஆட்சி முறையும்தான். இந்த முதலாளிய அமைப்பை மாற்றியமைக்காமல் மக்கள் பிரச்சினைகளிலிருந்து விடுபட முடியாது. இந்தச் சமூகத்தில் பொருளுற்பத்தியின் மையப்பகுதியில் இருப்பது தொழிலாளி வர்க்கம் தான். மக்கள் தொகையில் பெரும்பகுதி மக்கள் உழைக்கும் மக்கள் தான். இவர்களின் உழைப்பினால்தான் சமூகம் இன்று உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. தொழிலாளர்கள் சமூகத்தின் படிநிலையில் எல்லோருக்கும் கீழான படியில் இருக்கின்றனர். அவர்களின் விடுதலையில்தான் அனைவரின் விடுதலையும் அடங்கி உள்ளது. முதலாளி வர்க்கச் சுரண்டலையும் அதிகாரவர்க்க ஆட்சிமுறையையும் ஒழித்துவிட்டு சுரண்டலற்ற, முழுமையான ஜனநாயகத்தையும் சமத்துவத்தையும் கொண்ட சோசலிச சமூகத்தை நோக்கி மக்களை வழிநடத்திச் செல்லக்கூடிய வலிமையும் தகுதியும் திறமையும் தொழிலாளி வர்க்கத்திற்குத்தான் உண்டு.
நெருக்கடிகள் நிறைந்த இந்த சமூகச் சூழலில், மக்களை பொருளாதாரச் சுரண்டலிலிருந்தும் அடக்குமுறை முறைகளிலிருந்தும் விடுவிக்கும் வரலாற்றுக் கடமை தொழிலாளி வர்க்கத்திற்கு உண்டு. மார்க்சிய -லெனினியத் தத்துவத்தை வழிகாட்டியாகக் கொண்ட தொழிலாளர் வர்க்க முன்னணிப்படையின் கீழ் அனைத்து மக்களும் அணிதிரள வேண்டும். கரப்பான்பூச்சி ஜனதா கட்சி இயக்கத்தின் நோக்கங்களும் கூட தொழிலாளர் வர்க்கத்தின் கீழ் அணிதிரளும்போதே சாத்தியமாகும்.
மு.வசந்தகுமார்




Comments
Post a Comment