Skip to main content

கூலி உயர்வுக்குப் போராடும் தொழிலாளர்கள் கிரிமினல் குற்றவாளிகளா?

 

ஏப்ரல், 2026--இல், இந்தியத் தலைநகர் அருகிலுள்ள -- தொழிற்சாலை நகரங்களான மானெசர், நொய்டா ஆகியவற்றில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தனர்; இவர்களுக்கு எதிராக ஆளும் பாரதிய ஜனதா நாடாளுமன்றத்தில் சட்டமாக்கப்பட்ட பாரதிய நாகரிக் சுரக்ஷ சன்ஹிதாவில் குறிப்பிடப்பட்ட விதிகளை ஒட்டி ஏராளமான முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன. முதலில் பார்க்கும்போது இந்த முதல் தகவல் அறிக்கைகள் வழக்கம்போல சட்ட ஒழுங்குப் பிரச்சினைகளாக --- சட்டத்திற்குப் புறம்பான கூடுதல், கலவரங்கள், சொத்துக்களைச் சேதப்படுத்துதல், காவல்துறையினர் மீது தாக்குதல் என்று பதிவு செய்திருப்பது போல் தோன்றும்; ஆனால் அவற்றை உன்னிப்பாகக் கவனத்துடன் பார்க்கும்போது, ஊதியம் கோரும் உழைப்பாளர்களின் போராட்டத்தை பொது ஒழுங்கு குலைப்பு மற்றும் தீவிரமான குற்றச் செயல்களாக பட்டியலிட்டு, திட்டமிட்டு தொழிலாளர்களுக்கு விரோதமாக தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவாக காவல்துறை பதிவு செய்திருப்பது தெளிவாகத் தெரிய வரும். 

இந்த வருடத்தின் துவக்கத்தில் இருந்து தொழிலாளர் போராட்டங்களும் வேலை நிறுத்தங்களும் பிஹார் மாநிலத்தின் பரவுனியில் துவங்கி பானிபட், ஃபரிதாபாத் மற்றும் ஹரியானாவின் மானெசர் மற்றும் உத்திரபிரதேசத்தின் நொய்டா வரையிலும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.  

பலவிதமான தொழிற்சாலைகள், பல மாநிலங்கள், பல விதமான தொழிலாளர்கள் --- ஆனால் பிரச்சனை ஒன்றே! ஒவ்வொரு நாளும் விலைவாசி உயர்ந்து கொண்டே இருக்கும்போது ஊதியத்தில் எந்தவிதமான உயர்வும் இல்லாத தன்மை,, 12 மணி நேர வேலைக்கு எட்டு மணி நேரம் மட்டுமே ஊதியம் வழங்கப்படுதல், , நிலையற்ற பாதுகாப்பற்ற வேலைச் சூழல், வருமானத்தை மிஞ்சிய விலைவாசி உயர்வு, எரிவாயு கிடைப்பதில் சிக்கல் என்று தொழிலாளர்களின் வாழ்க்கைப் பிரச்சனை இன்று உச்சத்தை அடைந்துள்ளது. 2026-- ஆம் ஆண்டில் இந்தத் தொழிலாளர்கள் இடையே இருக்கும் பொதுவான அம்சம் என்னவென்றால் இவர்கள் அனைவரும் ஒப்பந்த தொழிலாளர்கள் என்பதுதான்; அடிப்படையில் பாதுகாப்பற்ற நிலைமையில் இருப்பவர்கள்; ஆனால் அவர்களின் அடிப்படை உரிமைகளுக்காக --- பணி நிரந்தரம், விலைவாசிக்கு ஏற்ற ஊதிய உயர்வு ஆகியவற்றிற்காக அவர்கள் போராடும் போது அவர்களைக் கிரிமினல் குற்றவாளிகள் என்று அரசு முத்திரை குத்துகின்றது.

ஏப்ரல் மாதத்தில், நொய்டாவில் தொழிலாளர்களின் போராட்டங்கள் முதலில் அலட்சியப்படுத்தப்பட்டன; பிறகு தடை உத்தரவுகள் மற்றும் பாரதிய நாகரிக் சுரக்ச சன்ஹிதா சட்டத்தின் 170 -- வது விதியின்படி தொழிலாளர்கள் அனைவரும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்; ஏப்ரல் 12-ஆம் தேதியிலிருந்து 16- ஆம் நாள்வரை ஏறக்குறைய 1100 தொழிலாளர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்; அவர்கள் லஸ்கர் சிறையில் பல நாட்கள் வைக்கப்பட்டிருந்தனர். 

மேலும், மிக மோசமான கிரிமினல் குற்றச்சாட்டுகள், அவர்கள் மீது குறைந்தபட்சம் 10 முதல் தகவல் அறிக்கைகளில் பதிவு செய்யப்பட்டன. போராடிய தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை; அவர்கள் இந்தச் சமூகத்தில் இல்லவே இல்லை என்பது போல் நிலைமை இருந்தது. 

முதல் தகவல் அறிக்கையில், ஊதியத்திற்கான போராட்டம் என்பது சட்டத்திற்குப் புறம்பாக ஒன்று கூடியதாகக் காட்டப்பட்டது; தங்களது கோரிக்கைக்காக தொழிலாளர்கள் ஒன்று கூடியது கலவரமாகக் கூறப்பட்டது; கல் வீசி எரிந்து கலவரம் செய்த கூட்டமாகத் தொழிலாளர்கள் சித்தரிக்கப்பட்டனர்; நியாயமான ஊதியத்திற்கான கோரிக்கை அச்சுறுத்தலாகச் சித்தரிக்கப்பட்டது.  

இந்த முதல் தகவல் அறிக்கைகள் கவனக்குறைவாக எழுதப்பட்டதல்ல; தெளிவாகத் திட்டமிடப்பட்ட செயலாகும்; தொழிலாளர்களின் செயல்பாடுகள் பொது அமைதியைக் குலைப்பதாக பதிவு செய்யப்பட்ட அந்த நொடியிலேயே முற்றிலும் அடக்குமுறை துவங்குகிறது. தொழிலாளர் சட்டத்திற்குத் தேவையானது சமரசம், நியாயமான தீர்வு, ஒரு தொடர் நிகழ்வு.. ஆனால் கிரிமினல் சட்டத்திற்கு இது எதுவும் தேவையில்லை; முதல் தகவல் அறிக்கை மட்டுமே தேவை.  

நொய்டாவின் அந்தப் பத்து முதல் தகவல் அறிக்கைகளை மிக கவனமாகப் படிக்கும் போது அதில் குறிப்பாக பதிவு செய்யப்படாத விடயம் என்னவென்பது தெளிவாக விளங்கும். 

ந்து வருடங்களுக்கு ஒரு முறை சட்டப்படி தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை திருத்தி அமைத்து நடைமுறைப்படுத்த வேண்டியது அரசின் கடமை. ஆனால் அரசு இதைச் செய்யத் தவறியது. இது பற்றி எந்தக் குறிப்பும் முதல் தகவல் அறிக்கைகளில் இல்லை. மேலும் அடிப்படை வசதிகள் இல்லாத, குறைந்த பட்சம் கழிவறை கூட இல்லாத ஆடை உற்பத்தி தொழிற்சாலைகளில் 10--12 மணி நேரம் வரை, ரூபாய் 6000 - லிருந்து 9000 - ஊதியத்திற்கு உழைக்கும் பெண்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. LPG -- சமையல் எரிவாயு பற்றாக்குறை பற்றி குறிப்பிடப்படவில்லை; எல்லாவற்றையும் விட முக்கியமாக இந்தத் தொழிற்சாலைகளின் தொழிலாளர்கள் பெரும்பாலும் எதுவும் சாப்பிடாமல் வெற்று வயிற்றுடன், பட்டினியுடன் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு வருவதைப் பற்றி ஒன்றுமே குறிப்பிடப்படவில்லை.

இந்தத் தவறுகள் கவனக்குறைவால் ஏற்படவில்லை; பட்டினிக்கும், எரிபொருள் தட்டுப்பாட்டுக்கும், ஊதிய உயர்வு நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்கும் ஒரு தொழிலாளி முறையிடுவது கலவரம் அல்ல. அந்தத் தொழிலாளியைக் கலகக்காரராக ஆக்குவதற்கு, அந்த தொழிலாளியின் உண்மையான தேவைகளை, அவை இல்லவே இல்லை போல மறுப்பதும் மறைப்பதுவே அடிப்படையாகும். முதல் குற்ற அறிக்கையின் அடிப்படை பணியே இதுதான்.  

தொழிற்சாலை நிர்வாகங்கள், தொழிலாளர்கள் தங்களது அடிப்படை தேவைகளைப் பற்றிப் பேசி அவர்களது பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு வாய்ப்பு அளிப்பதில்லை; இத்தகைய போக்கே, இடைவிடாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் அவர்களது பிரச்சனை அழுத்தம் தாங்க முடியாமல் வெடிப்பதற்கு காரணமாகும்; இதை முதல் குற்ற அறிக்கை தீவிரவாதமாக, கலவரமாக அறிவிக்கிறது. ஆனால் இதற்கான அடிப்படைக் காரணத்தைப் பற்றி அது பதிவு செய்வதுமில்லை, பேசுவதும் இல்லை. முதல் தகவல் அறிக்கை மட்டுமல்ல முக்கியமான பிரதான பத்திரிக்கைகளும் உழைப்பாளர்களின் போராட்டத்தின் காரணத்தை பற்றிப் பேச மறுக்கின்றன. 

தூண்டிவிடப்படுதல் என்னும் கட்டுக்கதை 

தொழிற்சங்கங்களும் மற்றும் வேறு சில வெளி அமைப்புகளும் தூண்டுவதாலேயே இந்தப் போராட்டங்கள் நடப்பதாக முதல் தகவல் அறிக்கை குறிப்பிடுகிறது; மேலும் இந்தப் புறத் தூண்டுதல்கள் இல்லாவிட்டால் தொழிலாளர்கள் அமைதியாக இருந்திருப்பார்கள் என்று குறிப்பிடுகிறது; இது திட்டமிட்டுப் பரப்பப்படும் பொய்யாகும்.  

ஏப்ரல்' 2026 இல் நடந்த இந்தப் போராட்டங்கள் தன்னெழுச்சியாக ஒவ்வொரு தொழிற்சாலையாகப் பரவிய போராட்டம் ஆகும்; தூண்டிவிடப்பட்டது என்று குறிப்பிடுவதன் மூலம் அவர்களுடைய அரசியல் உரிமையை மறுக்கிறது, அவர்களைப் பாதிக்கப்பட்டவர்களாக அங்கீகரிக்காமல், மற்றவர்களின் தூண்டுதலால் கலகம் செய்தவர்களாகக் காட்டுகிறது. இது அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு சட்டம் என்னும் ஆயுதத்தை வழங்குகிறது. இந்தப் போராட்டங்கள் தொழிற்சங்கங்களால் நடத்தப்பட்டால் அதன் அமைப்பாளர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க முடியும்; போராட்ட இடங்களில் அவர்களைக் கைது செய்யப்பட முடியும்; இரவுகளில் அவர்களது வீடுகளில் இருந்து கைது செய்யப்பட முடியும் அல்லது வீட்டுக் காவலில் வைக்கப்பட முடியும்; குறிப்பாக அங்கு நடந்ததும் இதுதான். 

இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, தொழிலாளர் பிரச்சினைகளின் அடிப்படையில் தொழிற்சங்க நடவடிக்கை என்பது ஜனநாயக உரிமையாகும்; இது தொழிலாளர் உரிமைக்காக உறுதியுடன் பாதுகாக்கப்பட்ட ஒன்றாகும். முதல் தகவல் அறிக்கை இதை அங்கீகரிக்கவில்லை.; நீதிமன்றம் முடிவெடுப்பதற்கு முன்பே, தொழிலாளர் போராட்டங்கள் உடைக்கப்படுகின்றன, அவர்கள் தோல்வி அடைகிறார்கள், அவர்களது வாழ்க்கை அழிக்கப்படுகிறது, அவர்களுக்கு கடினமான பாடம் பலவந்தமாகத் திணிக்கப்படுகிறது.

முதல் தகவல் அறிக்கை பின்வருமாறு தொடர்கிறது: தொழிலாளர்கள் ஒன்று கூடினார்கள்; காவல்துறை எச்சரித்தது; தொழிலாளர்கள் பணிந்துபோக மறுத்தார்கள்; காவல்துறை பலத்தைப் பிரயோகித்தார்கள். இது பார்ப்பதற்கு நடந்தவற்றை அப்படியே நடுநிலைமையுடன் பதிவு செய்ததைப் போல தோன்றும். ஆனால் உண்மை அதுவல்ல. இது காவல்துறை பிரயோகிக்கும் பிரம்படித் தாக்குதல், தடுப்புக் காவல், வீடுகளில் கைது செய்தல் மற்றும் முதல் தகவல் அறிக்கை ஆகியவற்றை நியாயப்படுத்துவதற்கான முன்கூட்டிய தயாரிப்பாகும்.

தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தேவையான அளவில் மட்டுமே பிரயோகிக்கப்பட்டதா? நிர்வாகமும் காவல்துறையும் இந்த தாக்குதலை முதலில் தொடங்கினார்களா? காவல்துறையால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள் வீதியில் நின்றிருந்தத்தைத் தவிர வேறு என்ன செய்தார்கள்? இந்தக் கேள்விகளுக்கான விடைகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுவிட்டன. அவர்கள் போலீசாரின் அறிவுறுத்தலுக்கு கட்டுப்படவில்லை. ஆகவே அங்கு நடந்தது கட்டுப்பாட்டை, ஒழுங்கை அமைதியை கொண்டு வருவதற்கான செயலேயாகும்‌. 

பெரிய சித்திரம்

மானெசர் மற்றும் நொய்டா முதல் தகவல் அறிக்கைகள் திடீரென்று தன்னிச்சையாக உருவாகவில்லை! இந்தியத் தொழிலாளர் மற்றும் இந்திய முதலாளித்துவம் இவற்றிற்கு இடையிலான உறவு ஏறத்தாழ 10 ஆண்டுகளாக மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது; 29 தொழிலாளர் சட்டங்கள் ஆளும் பாரதிய ஜனதா அரசாங்கத்தால் முதலாளித்துவத்திற்கு ஏற்ற நான்கு சட்டங்களாகத் திருத்தப்பட்டு நவம்பர், 2025--இல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்தது. இதன் அடிப்படையிலேயே தொழிலாளர்களுக்கு எதிரான குற்றங்களும் முதல் தகவல் அறிக்கைகளும் எழுதப்படுகின்றன. இந்தச் சட்டங்கள் தொழிலாளர்களின் கூட்டுப் பேரத்தை பலவீனமாக்குகின்றன, ஒப்பந்தத் தொழிலாளர் முறையை விரிவுபடுத்துகிறது, பணி நியமனம் மற்றும் எந்த முன்னறிவிப்பும் இன்றி பணியில் இருந்து நீக்குவது ஆகியவற்றை மிக எளிதாக்கியுள்ளன. சட்டப்படி தொழிலாளர்களுக்கு கிடைத்த பாதுகாப்பை நீக்கி அதற்கு மாறாகக் கிரிமினல் குற்றங்களை அவர்கள் மீது எளிதாகச் சுமத்தும் வாய்ப்பை இந்தச் சட்டங்கள் உருவாக்கியுள்ளன.  

இந்தச் சட்டங்கள் தொழிலாளர் நீதிமன்றங்களைப் பலவீனப்படுத்தி காவல் நிலையங்களை வலிமைப்படுத்தத் தெளிவாக வடிவமைக்கப்பட்டுள்ளன.  

இது புதியது அல்ல. 2015--ஆம் ஆண்டு மானெசரில் மாருதி சுசுகி தொழிலாளர்கள் தொழிற் சங்கம் அமைப்பதற்காகப் போராடிய போது, தொழிற்துறை சார்ந்த பிரச்சனைகள் மாருதி சுசுகி நிர்வாகத்தின் திட்டமிட்ட தூண்டுதலால், சட்ட ஒழுங்குப் பிரச்சனையாக மாற்றப்பட்டது , எந்தவிதமான வன்முறையும் நடப்பதற்கும் முன்பே காவல்துறை அங்கே நிறுத்தப்பட்டது.; தொழிலாளர் துறை பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டது; அதே நேரத்தில் குற்றவியல் இயந்திரம் அங்கே செயல்படத் துவங்கியது.

மானெசரிலும் நொய்டாவிலும் 2026--இல் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை, மானெசரின் மாருதி நிர்வாகத்துடன் நடந்த தொழிலாளர் போராட்டத்தின் புதுப்பிக்கப்பட்ட முதல் தகவல் அறிக்கை ஆகும். 

தொழிலாளர்களின் கூட்டு நடவடிக்கை சட்ட விரோதமாக்கப்பட்டு உள்ளது ; தொழிலாளர்களின் போராட்டங்கள் மக்களைப் பாதிக்கும் வன்முறையாக மாற்றப்பட்டுள்ளது; பிறகு ரகசியமாக திட்டமிடப்பட்ட கிரிமினல் குற்றமாக வலியுறுத்தப்பட்டுள்ளது. மிக வலிமையாக பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கைகள், தொழிலாளர் போராட்டங்களைக் கொலை முயற்சிகளாகவும், தீ வைப்புச் சம்பவங்களாகவும் சித்தரித்து தொழிலாளர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.  

தொழிலாளர் போராட்டங்களுக்குக் காரணமான பொருளாயத நிலைமைகள் பற்றி இந்தச் சட்ட ரீதியான பதிவில் எங்குமே குறிப்பிடப்படவில்லை; தொழிலாளர்களின் கோரிக்கைகள் எங்கும் காணப்படவில்லை; இவற்றில் அவர்களது பெயர்கள் பெரும்பாலும் காணப்படுவதில்லை; ஒழுங்கற்ற கும்பல், கலகக்காரர்களின் கூட்டம், பெயர் குறிப்பிடப்படாத கலகக்காரக் கும்பல், சதித் திட்டங்கள் என்னும் வார்த்தைகளே இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இதன் ஒட்டுமொத்தமான விளைவு என்னவென்றால், உழைப்பின் மீதான நிர்வாகம் என்பது தொழிலாளர்களின் உரிமை மற்றும் அதற்கான பேச்சு வார்த்தைகள் என்பதிலிருந்து, கண்காணிக்கப்பட வேண்டிய, கட்டுப்படுத்தப்பட வேண்டிய, கிரிமினல் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட வேண்டிய ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கை என்பது இதற்கான ஆயுதமாக மாற்றப்பட்டுள்ளது. இதைப் பற்றி விரிவாக முதல் தகவல் அறிக்கைகள் சொல்வதில்லை என்றாலும், அதுதான் உண்மை. 

ஆங்கிலத்தில்: ரகி சேகல்

தமிழில் : கவிதா

நன்றி: Janata Weekly

Comments

  1. எப்படி தொழிலாளர்களுடைய நியாயமான போராட்டங்கள், ஒரு சட்ட ஒழுங்கு பிரச்சனையாக இந்திய ஆளும் வர்க்கத்தாலும், அவர்கள் அண்மையில் கொண்டு வந்துள்ள புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளாலும் மாற்றப்பட்டு, தொழிலாளிகளுடைய அடிப்படை சனநாயக உரிமைகள் தாக்கப்பட்டு வருகின்றன என்பதை இக்கட்டுரை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

    நன்றி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

விஜய்யின் சினிமாவும் சினிமா அரசியலும்!

  கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடந்த விஜயின் அரசியல் பொதுக்கூட்டம் 10 இளம் குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 உயிர்களைப் பலி கொண்டு பெரும் துயரத்திற்குக் காரணமாகியுள்ளது. ஓர் அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்தது தமிழ்நாட்டின் கடந்த எழுபத்தைந்து ஆண்டு வரலாற்றில் இல்லை என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி மனதில் ஆழ்ந்த துயரத்தை உண்டாக்கும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் இதற்குக் காரணமாக அமைந்துள்ள அரசியல், கலாச்சாரக் கூறுகள் நமது மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன.   சினிமாவும் சினிமா அரசியலும்   எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் தனி ஒருவராக விஜய் அவர்களைப் பந்தாடுவார். கார்களிலும் விமானங்களிலும் பறந்து எதிரிகளைச் சாடுவார். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் அவரைத் தொடக்கூட செய்யாது. அரசியல்வாதிகளின் ஊழலை எதிர்த்துப் போராடுவார். ரவடிகளைத் துவம்சம் செய்வார். இப்படித்தான் விஜய் நடித்த திரைப்படங்கள் அவரை பெரும் துணிச்சலும் வீரமும் கொண்டவராக, சாகசக்காரராக, நல்லவராக, நேர்மையானவராக, நீதிக்காகப் போராடுபவராக சித்தரித்து உள்ளன. இவ்வாறு பிரம்மாண...

விஜய்யின் வருகை – மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

  1967 தேர்தலுக்குப் பிறகு திமுக, அதிமுக என்ற இரண்டு திராவிடக் கட்சிகளே கடந்த சுமார் அறுபதாண்டுகளாக மாறி மாறி தமிழ் நாட்டை ஆண்டு வந்த நிலையில், அண்மையில் நடந்து முடிந்த பதினேழாவது சட்டமன்றத் தேர்தலில், அந்த இரண்டு கட்சிகளும் அமைத்திருந்த கூட்டணிகளை தனி ஒரு கட்சியாக எதிர்த்து நின்று அவற்றை வீழ்த்தியுள்ளது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். தனிக் கட்சியாக ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை இடங்களைப் பெறாவிட்டாலும், 107 இடங்களைப் பெற்று அதிக இடங்களைப் பெற்ற கட்சியாக இருக்கின்றது. பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் திமுக கூட்டணியே ஆட்சிக்கு வரும் என்று கணித்திருந்த நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி எதிர்பாராத ஒன்றாகவும் பெரும் வியப்பை அளிக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது. விஜய்யின் தவெக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்திருப்பார்கள் என்றும் சொல்வதற்கில்லை. ஏனென்றால் திமுக தனது ஆட்சிக் காலத்தில் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண், தவப் புதல்வன் போன்ற திட்டங்களின் மூலம் மாதம்தோறும் பெண்களுக்கும், மாணவர்களுக்கும் நிதி வழங்கி வருகிறது. மீண்டும் ஆட்சிக்...

தொழிலாளர் சட்டத் திருத்தங்களும் தொழிலாளர் வர்க்கமும்!

  இன்போசிஸ் நாராயணமூர்த்தி 19-11-2025 அன்று தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் இந்தியத் தொழிலாளர்கள் வாரத்திற்கு 72 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியதோடு, மோடி அவர்கள் வாரத்திற்கு 100 மணி நேரம் வேலை செய்வதாகவும் கூறினார். இதற்காக 9 -9 – 6 என்ற திட்டத்தை அவர் முன்மொழிந்துள்ளார், சீனாவில் சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தை மனமுவந்து பாராட்டியதோடு இந்தியாவில் சட்டப்படியாக இதனை அமல்படுத்த வேண்டும் என்றார். அதன்படி தொழிலாளர்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் வீதம், வாரத்திற்கு 6 நாள் என 72 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற திட்டத்தை அவர் முன்மொழிந்துள்ளார். 2021இல் சீன அரசு 12 மணி நேர வேலையை சட்டவிரோதம் என அறிவித்தது. வேலை நேர அதிகரிப்பால் தொழிலாளர்களின் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாகவும், பணிச்சுமை காரணமாக தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளதாகவும் சீன அரசு தெரிவித்தது. ஆனால், சீனாவில் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து படிப்பினைகளை எடுத்துக் கொள்ளாத இன்போசிஸ் நாராயண மூர்த்தி வேலை நேரத்தை ...