2026 ஆம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவப் படிப்புச் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு தேசிய தேர்வு முகமையால் (NTA) மே 3 ஆம் தேதியன்று நாடு முழுவதும் நடத்தப்பட்டது. இந்தத் தேர்வில் 22 இலட்சத்திற்கும் அதிகமான மாணாக்கர்கள் பங்கேற்றனர். தேர்வு நடந்த இரண்டு நாட்களில் வினாத்தாள் கசிந்த செய்தி வெளியானது. இந்த வினாத்தாள் கசிவு முறைகேடு மிகப்பெரிய அளவில் நடைபெற்றுள்ளது அம்பலமானது. மேலும், மத்திய இடைநிலைக் கல்வி(CBSE) வாரியத் தேர்வு மற்றும் விடைத்தாள் திருத்தத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மன உளைச்சல்களையும், அரசின் மீதான அதிருப்தியையும் அதிகப்படுத்தியது. நீட் தேர்வு இரத்து செய்யப்பட்டதால் மன அழுத்தத்திற்காக ஆளான 21 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இதனால், நாடு முழுவதும் மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. வேலையில்லா இளைஞர்களை 'கரப்பான் பூச்சிகள்' மற்றும் 'ஒட்டுண்ணிகள்' என்று ஒப்பிட்டு இந்தியத் தலைமை நீதிபதி கூறிய கருத்துகளுக்கு எதிர்வினையாக உருவான கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) 2026 ஜூன் 6 அன்று டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தைத் தொடங்கியது. இவர்களுடன் இடதுசாரி மாணவர் அமைப்புகளான AISA, AISF மற்றும் SFI ஆகியவையும் கைகோர்த்தன. முதல் நாளில் சுமார் 2,000-க்கும் குறைவான மாணவர்களே பங்கேற்றனர். ஜூன் 7 முதல் 19 வரை, டெல்லியில் தொடர் போராட்டங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.
ஜூன் 20 அன்று நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான மாணவர்களும் இளைஞர்களும் ஜந்தர் மந்தரில் திரண்டனர். ஜூன் 21 அன்று நீட் மறுதேர்வு எழுதி முடித்த கையோடு போராட்டக் களத்திற்கு வந்த மாணவர்களின் வருகையால் போராட்டம் தீவிரமடைந்தது.
ஜூன் 28 அன்று லடாக்கைச் சேர்ந்த கல்விச் சீர்திருத்தவாதி ‘சோனம் வாங்சுக்’ தன்னை ஒரு "கௌரவ கரப்பான் பூச்சி" என்று அறிவித்துக் கொண்டு ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். அவருடன் இணைந்து 20-க்கும் மேற்பட்ட மாணவர்களும் நீட் உள்ளிட்ட தேர்வுகளில் நடந்து வரும் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும், தேர்வு ரத்து மற்றும் மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு 1 கோடி நிதி இழப்பீடு வழங்க வேண்டும், ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் போராடிய மாணவர்கள் மீது காவல்துறை பதிவு செய்த FIR வழக்குகளை எவ்வித நிபந்தனையுமின்றித் திரும்பப் பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மேலும், தேசிய தேர்வு முகமையில் (NTA) சீர்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும், வினாத்தாள் கசிவு கும்பல் (மாஃபியாக்கள்) மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், மாணவர் விரோதப் போக்குடைய புதிய கல்விக் கொள்கை (NEP) 2020 கைவிடப்பட வேண்டும் என்ற பதாகைகளும் உயர்த்தப்பட்டன.
போராட்டங்கள் டெல்லியைத் தாண்டி இந்தியாவின் பல நகரங்களுக்கும் பரவியது. புனே, ஜெய்ப்பூர், அமிர்தசரஸ், பெங்களூரு மற்றும் ஹைதராபாத், ஆகிய நகரங்களில் பேரணிகளும், ஆர்ப்பாட்டங்களும் நடந்து வந்தன.
உண்ணாவிரதப் போராட்டம் நாடு தழுவிய அளவில் கவனம் பெற்றதால், ஜூலை 18 அன்று அதிகாலையில் மாற்று உடைகளில் வந்த டெல்லி போலீசார், போராட்டப் பந்தலைச் சுற்றி வெள்ளைத் துணிகளைத் திரையாகக் கட்டி, பலவந்தமாக சோனம் வாங்க்சுக்கை வாகனத்தில் ஏற்றி சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மாணவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவரையும் போலீசார் குண்டுக்கட்டாகத் தூக்கி போராட்டக் களத்திலிருந்து அப்புறப்படுத்த முயற்சி செயதனர். ஜந்தர் மந்தர் பகுதியை விட்டு வெளியேற மறுத்த பல போராட்டக்காரர்களைத் தற்காலிகமாகக் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்தனர். பந்தல்கள் பிரிக்கப்பட்டு, அந்த இடத்தை உடனடியாக காலி செய்யுமாறு டெல்லி போலீசார் உத்தரவிட்டனர்.
போலீசாரின் தடைகளையும் மீறி போராட்டம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது. சோனம் வாங்சுக் மருத்துவமனையில் இருந்தபடியே தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். அதே நேரத்தில், அவருடன் இருந்த 21 மாணவர்களும் ஜந்தர் மந்தர் களத்தில் தங்களின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடாமல் தொடர்ந்தனர்.
ஜூலை 20 அன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதை ஒட்டி, 'சலோ சன்சாத்' பேரணி (நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணி) அறிவிக்கப்பட்டது. ஜூலை 20 காலையில், AISF, AISA, SFI போன்ற இடதுசாரி மாணவர் அமைப்புகளின் ஆதரவோடு 20,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் திரண்டனர். போராட்டத்தைக் கண்டு அஞ்சிய அதிகார வர்க்கம் நாடாளுமன்றத்தின் வடக்கு நுழைவாயிலை மூடியது; மத்திய டெல்லி முழுவதும் மொபைல் இணைய சேவையை முடக்கியது.
'அரசு விழித்தெழுந்து எங்கள் குரலைக் கேட்க வேண்டும்' என்று வலியுறுத்தும் கொடிகளையும் பதாகைகளையும் போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர். பிற்பகலில், நாடாளுமன்றத்துக்குச் செல்லும் சாலைகளில் போராட்டக்காரர்களைக் கலைப்பதற்காக “பாதுகாப்புப்” படையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர்; அதனைத் தொடர்ந்து பதற்றம் மேலும் அதிகரித்தது.
டெல்லி போலீசும் விரைவு அதிரடிப் படையும் (RAF) ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் தாக்குதல் நடத்தின. அவர்கள் இளைஞர்களைக் கொடூரமாகத் தாக்கி தரையில் இழுத்துச் சென்றனர். பெண் மாணவர்கள் மோசமாக நடத்தப்பட்டும், அறையப்பட்டும், அவர்களின் ஆடைகள் கிழிக்கப்படும் நிலைக்கு ஆளாக்கப்பட்டும் கொடுமைப்படுத்தப்பட்டனர். மேலும் நெரிசல் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்படும் சூழலை உருவாக்கினர். பெல்லட் துப்பாக்கிகள் (pellet guns), மின் அதிர்வு ஏற்படுத்தும் தடிகள் (shock batons), ஆணிகள் பொருத்தப்பட்ட லத்திகள் போன்ற கொடூரமான ஆயுதங்களை டெல்லி போலீஸ் போராட்டக்காரர்கள் மீது பயன்படுத்தி அரசின் கோரமுகத்தை வெளிப்படுத்தியது.
மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் எழுப்பிய நியாயமான பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்குவதற்குப் பதிலாக, அரசு இந்தப் போராட்டங்களை சட்டம்-ஒழுங்குப் பிரச்சினையாகக் கருதியது. நாடாளுமன்றத்திற்கு வெளியே மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது போலீஸ் கொடூரமான தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த வேளையில், பிரதமர் அதே கட்டிடத்தின் பின்பக்க வழியாக, மறைப்புக் கண்ணாடிகள் பொருத்தப்பட்ட காரில் பாதுகாப்பாக வெளியேறினார்.
தொடக்கத்தில், மாணவர்களின் போராட்டங்களிலிருந்து விலகியிருந்த எதிர்கட்சிகள், பின்னர் நேரில் சென்று ஆதரவை தெரிவித்தல், சில அடையாளப் போராட்டங்களை நடத்துதல், நாடாளுமன்றத்தை முடக்குதல் ஆகியவற்றோடு தங்கள் நடவடிக்கையை நிறுத்திக் கொண்டன. இந்த ஆட்சியில் கல்விதுறையில் ஏற்பட்டுள்ள சீரழிவு, தனியார்மயமாக்கலினால் மாணவர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள், கல்வி முதலாளிகள் மற்றும் ஆட்சியாளர்களின் இலஞ்சம் - ஊழல் போக்குகள் மாணவர்களின் வாழ்வைச் சீரழித்து வருவது ஆகியவற்றை அம்பலப்படுத்தி அரசை எதிர்ப்பதற்குப் பதிலாக மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் விட்டுக்கொடுக்காத, உறுதியான போராட்டத்தைத் தங்களின் அரசியல் இலாபத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ளவே இந்தக் கட்சிகள் முயன்றன. ஏனெனில் இந்தக் கட்சிகளின் கடந்த கால ஆட்சியின்போதும் இதே போன்றுதான் வினாத்தாள்கள் கசிவுகளும், கல்வித் துறைச் சீரழிவும், தனியார்மயமாக்கலும், இலஞ்சமும் ஊழலும் தொடர்கதையாக இருந்தன. அதனால் அவற்றில் இந்தக் கட்சிகள் தங்கள் கவனத்தைக் குவிக்காமல் போராட்டத்தைத் தங்களுக்குச் சாதகமாக எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்பதிலேயே கவனமாக இருந்தன.
அமைதியாகப் போராடிக் கொண்டிருக்கிற மாணவர்கள் மீது, டெல்லி போலீசின் மிருகத்தனமாமான தாக்குதல்கள் மற்றும் அத்துமீறல்கள் குறித்து குற்றம் சாட்டும் மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் நரேந்திர மிஸ்ரா உச்ச நீதிமன்றத்தை வலியுறுத்தியபோது, இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த், 'எங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்' என்று பதிலளித்தார். கொடூரமான தடியடியைக் காட்டும் காணொலிக் காட்சிகளைத் தன்னால் ஆதாரமாக கொண்டு வர முடியும் என்று வழக்கறிஞர் குறிப்பிட்டபோது, தலைமை நீதிபதி, 'எங்களுக்குக் காணொலிகளில் ஆர்வம் இல்லை; அவற்றைப் பார்க்க எங்களுக்கு நேரமுமில்லை' என்று கூறினார். தந்தக் கோபுரங்களில் அமர்ந்து கொண்டு ஆளும் வர்க்கத்திற்கு சாமரம் வீசிக் கொண்டிருப்பவர்களுக்கு எளிய மக்களின் துயரங்களை அறிவதற்கும், அதைக் களைவதற்கும் நேரமும் மனமும் இருக்காது என்பது இயல்புதான்; இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை.
போராட்டம் தீவிரமாகி வருவதையும், போராட்டக்காரர்களின் கோரிக்கை அடுத்து பிரதமரின் பதவி விலகலை நோக்கியதாக மாறுவதையும் கண்டு ஆட்சியாளர்கள் அச்சமடைந்தனர். சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வர அமைச்சர்கள் பேச்சுவார்த்தையை நடத்தினர்.
தேர்வு முறை சீர்திருத்தம் குறித்து நாடாளுமன்றத்தில் முழுமையான விவாதம் நடத்தப்படும், நீட் முறைகேடு மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும், மற்றும் அமைதியான முறையில் போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படும் என மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர் சோனம் வாங்சுக்கை நேரில் சந்தித்து அரசின் எழுத்துப்பூர்வ உறுதிமொழியை வழங்கிய பிறகு 2026 ஜூலை 23 அன்று தனது 26 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருந்தபோது கூட வாய் திறக்காத பிரதமர் மோடி, இந்தப் போராட்டம் அண்டை நாடுகளில் நடந்ததைப் போன்று ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பும் போராட்டமாக மாறும் என்று அஞ்சியதால் சமூக ஊடகங்களில் இரண்டு முறை காணொலி வாயிலாக வேண்டுகோள் விடுத்தார்.
வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஈடுபட்ட "குற்றவாளிகளைக் கண்டறிவது" உள்ளிட்ட பல நடவடிக்கைகளைத் தனது அரசு எடுத்துள்ளதாகவும், விரைவு நீதிமன்றங்களை அமைக்கும் பணிகளைத் துரிதப்படுத்த அரசு முயற்சிக்கும் என்றும் காணொலியில் அறிவித்தார்.
உண்மையில் இந்த அரசு இந்தக் குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களை உடனடியாகக் கண்டறிந்து தண்டனை கொடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் இந்தக் குற்றங்களுக்குப் பொறுப்பான மோடி அரசின் கல்வி அமைச்சர், கல்விச் செயலாளர் மற்றும் கல்வித் துறை அதிகாரிகளில் பாதி பேர் இந்நேரம் சிறையில் இருந்திருப்பார்கள். அரசாங்கத்தின், அதிகாரிகளின் உடந்தையின்றி கடந்த 12 ஆண்டுகளில் 152 முறை வினாத்தாள் கசிவு என்பது நடந்திருக்கவே முடியாது. கல்விச் செயலாளர் மீதான சமீபத்திய நடவடிக்கை கூட வெறும் கண் துடைப்புக்காகவே எடுக்கப்பட்டுள்ளது.
2014 முதல் 2026 வரை சுமார் 152 முக்கியத் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ ஊடக ஆய்வுகள் மற்றும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த வினாத்தாள் கசிவுகளால் நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக 7.5 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் மற்றும் வேலைவாய்ப்பு விண்ணப்பதாரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தக் கசிவுகளுக்காக 602 குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்ட போதிலும், இதுவரையிலும் ஒருவருக்குக் கூட தண்டனை வழங்கப்படவில்லை. தங்கள் 12 ஆண்டுகால ஆட்சியில் சீரழிக்கப்பட்ட மாணவர்களின் வாழ்க்கைக்குப் பொறுப்பேற்பதற்குப் பதிலாக அல்லது அவர்களின் குறைகளைக் கேட்பதற்குப் பதிலாக, இந்தப் பாசிச ஆட்சி வன்முறை மூலம் இளைஞர்களின், மாணவர்களின் குரல்களை ஒடுக்க நினைக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அரசுப் பணிகள் மற்றும் கல்லூரி இடங்களுக்காக லட்சக்கணக்கானோர் போட்டித் தேர்வு எழுதி வருகின்றனர். போட்டி மிகக் கடுமையானதாகவும், மிகுந்த மன அழுத்தத்தைத் தரக் கூடியதாகவும் உள்ளது. இன்று நடத்தப்படும் தேர்வு, நாளை ரத்து செய்யப்படும் தேர்வாக மாறக்கூடும் என்று ஒவ்வொரு தேர்வையும் நாடெங்கும் உள்ள மாணவர்கள் அச்சத்துடனும் ஐயத்துடனுமே எழுதி வருகின்றனர். ஒவ்வொரு கசிவின் போதும் லட்சக்கணக்கானோரின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. மாணவர்கள் பல ஆண்டுகளாகப் படித்து, நிலத்தை விற்றும், சிறு சேமிப்புகளைக் கரைத்தும், நீண்டகாலக் கடன்களைப் பெற்றும் அவர்களது குடும்பங்கள் தங்களால் சமாளிக்க முடியாத பெரும் தொகையை பயிற்சி வகுப்புகளுக்காக செலவழித்த பிறகும் இது போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன. அதனால்தான் இந்த இயக்கம் டெல்லியோடு நின்றுவிடவில்லை. ஏறக்குறைய அனைத்து நகரங்களிலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் மாபெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னை, பெங்களூரு, கோவா, மும்பை, பாட்னா, இட்டா நகர் என இந்தியாவின் பெரு மற்றும் சிறு நகரங்களின் எண்ணற்ற மூலைகளுக்கும் பரவியது.
போராட்டத்திற்கு வினாத்தாள் கசிவு ஒரு தூண்டுதலாக மட்டுமே இருந்தது. ஊழல், வேலையின்மை, கல்வி மற்றும் மருத்துவத்தில் தனியார் ஆதிக்கம், உயர்ந்து வரும் கல்விக் கட்டணங்கள், அதிகரித்து வரும் பணவீக்கம், விலைவாசி உயர்வு, மோசமான நிர்வாகம், மத வெறுப்பு அரசியல் மற்றும் நாட்டின் எதிர்காலம் குறித்து சிறிதளவும் நம்பிக்கையளிக்காத நிறுவனங்கள் ஆகியவற்றின் மீதான இளைஞர்களின் மனதில் பல ஆண்டு காலமாக நீறு பூத்த நெருப்பாக இருந்த கோபமே இப்போது போராட்ட எரிமலையாக வெடித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவருமே மாணவர்கள் அல்ல. இந்த அரசின் மக்கள் விரோதச் செயல்பாடுகளால் பாதிக்கப்பட்டிருந்த இளைஞர்கள், இளம் தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் எளிய மனிதர்கள் எனப் பலரும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
போராட்டக்காரர்களின் எழுச்சியைக் கண்டு அச்சமடைந்த அரசு, வேறு வழியின்றி கல்வி அமைச்சர் தர்மேந்திர பிராதனை பதவியிலிருந்து விலகச் செய்தது. நாடு முழுவதும் போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும் என்று மோடி அரசு அளித்த வாய்மொழி உறுதியின் அடிப்படையில், ஜந்தர்-மந்தர் மற்றும் நாடு முழுவதும் நடைபெற்று வந்த மாணவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். ஜூலை 20 அன்று மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு எதிராக பெல்லட் துப்பாக்கிகள் (pellet guns), மின் அதிர்வு தரும் தடிகள் (shock batons) மற்றும் ஆணிகள் பொருத்தப்பட்ட லத்திகள் ஆகியவற்றைப் பயன்படுத்தியதற்கும், பெண் மாணவர்களைத் தாக்கி மோசமாக நடத்தியதற்கும் காரணமான போலீசார் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அளிக்கப்பட்ட உத்திரவாதத்தின்படி எந்தவொரு விசாரணைக் குழுவையும் அரசு இதுவரை அமைக்கவில்லை.
ஆனால், ஜூலை 26-ஆம் தேதி பீகாரில் உள்ள பாஜக அரசு சுமார் 250 முதல் 300 மாணவர்கள் மீது முதல் தகவல் அறிக்கைகளை (FIR) பதிவு செய்துள்ளது. இதில் 'திஷா ஸ்டூடண்ட்ஸ் ஆர்கனைசேஷன்' (Disha Students’ Organization), AISA மற்றும் பிற மாணவர் அமைப்புகளைச் சேர்ந்த மாணவர் செயற்பாட்டாளர்களும் அடங்குவர். மேலும், டெல்லியில் நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்ற மாணவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க டெல்லி போலீஸ் தயாராகி வருவதாகப் போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
போராட்டத்தை அடக்கி ஒடுக்கவும், சீர்குலைக்கவும், பிளவுபடுத்தவும், பலவீனப்படுத்தவும் பல முயற்சிகளைத் தொடர்ந்து மோடி அரசாங்கம் மேற்கொண்டு வந்தது. போராட்டக்காரர்களுக்கு எதிராக, ‘இந்தியாவின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாத அந்நிய நாடுகளின் தூண்டுதால் நடைபெறும் போராட்டம்,’ ‘தேச விரோதிகளின் போராட்டம்’ எனப் பல அவதூறுப் பிரச்சாரங்களை பாஜக ஆதரவு ஊடகங்களும் சங் பரிவாரங்களும் பரப்பி வந்தன; ஆனால் எதுவும் வெற்றி பெறாத நிலையில் மோடி அரசாங்கம் இறங்கி வந்தது. தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். ஆனாலும் கூட அவர் கல்வி துறையிலும், நீட் தேர்விலும் நடந்து வரும் குளறுபடிக்கு தார்மீகப் பொறுப்பேற்று விலகுவதாக அறிவிக்கவில்லை. இளைஞர்களின் போராட்டம் தேசத் துரோகிகளின் கைகளுக்குச் சென்று விடக் கூடாது எனக் கருதித் தாம் பதவி விலகுவதாகக் கூறியுள்ளார். அதன் மூலம் தன்னை ஒரு தேசப் பற்றுக் கொண்டவராகவும், மோடியின் அரசை எதிர்ப்பவர்கள் அனைவரும் தேசத் துரோகிகள் என்றும் சித்தரிக்கிறார். ‘ஆட்சியில் இருப்பவர்களுக்கே நாடு சொந்தம். அதிகாரத்தில் இருப்பவர்கள்தான் தேச பக்தர்கள், அதனை விமர்சிப்பவர்கள் அனைவரும் தேசத் துரோகிகள்’ எனக் கருதுவது ஒரு ஜனநாயக நாட்டில் ஆட்சியில் உள்ளவர்களின் மனப்பான்மை அல்ல; அது நிலப்பிரபுத்துவ மன்னர்களின், காலனிய ஆதிக்கவாதிகளின், பாசிஸ்டுகளின் மனப்பான்மையாகும். அந்த மனப்பான்மையுடன்தான் பாஜகவும் சங்க பரிவாரங்களும் அதிகார மமதையுடன் செயல்பட்டு வருகின்றன.
மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஆட்சியாளர்கள் மீதான அவநம்பிக்கையும், வெறுப்பும் கனன்று கொண்டிருந்த நிலையில், ஆம் ஆத்மி பாசறையிலிருந்து வெளி வந்த அபிஜித் தீப்கே என்பவரால் தொடங்கப்பட்ட கரப்பான பூச்சி ஜனதா கட்சி அமைப்பின் அறைகூவல் அதனை வெளிப்படுத்துவதற்கான களமாக மாறியது. ’வேலை இல்லாத இளைஞர்களை கரப்பான்பூச்சிகள், ஒட்டுண்ணிகள்’ என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி விமர்சனம் செய்ததையடுத்து, அந்தப் பெயரிலேயே அபிஜித் தீப்கே கட்சியைத் தொடங்கினார். ஆட்சியிலிருக்கும் அரசின் நடவடிக்கைகளை நையாண்டித்தனமாக அம்பலப்படுத்திய அதே வேளையில், ஆட்சியாளர்களும் அதிகாரிகளும், சட்டமும் நீதியும் எவ்வாறு ஆளும் முதலாளி வர்க்கத்தின் காவலர்களாகச் செயல்பட்டு, உழைக்கும் மக்களை அடக்கி ஒடுக்கி வருகின்றன என்பதைப் பற்றி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வாய் திறக்கவில்லை.
தற்போதைய ஆட்சியில் இருக்கும் சில நபர்கள்தான் இது போன்ற பிரச்சனைகளுக்கு காரணம், இவர்களை மாற்றி விட்டால், எல்லாம் சரியாகி விடும், நிலவுகின்ற சட்டங்களில் சில சீர்த்திருத்தங்களைச் செய்தால் மட்டும் போதும், இந்த சமுதாயத்தை நல்வழிப்படுத்த முடியும் என்ற கண்ணோட்டத்தில் தான் இந்தக் கட்சியும் செயல்பட்டு வருகின்றது. அதனால்தான் தர்மேந்திரப் பிரதான் பதவி விலகிவிட்டால் தீர்வு கிடைத்து விடும் என நினைக்கிறது.
AISA, AISF மற்றும் SFI ஆகிய இடதுசாரி இயக்கங்களின் மாணவர் அமைப்புகள் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்திருந்தாலும், போராட்டத்தின் திசை வழியைத் தீர்மானிக்கும் ஆற்றல் அவற்றுக்கு இல்லை. ஒருவேளை இடதுசாரி மாணவர் அமைப்புகள் பெரும் போராட்டங்களை முன்னெடுத்து போராட்டக் களத்தைக் கைப்பற்றியிருந்தாலும் கூட, சரியான அரசியல் திட்டமின்றி, சீர்த்திருத்தவாதப் பாதையிலும், திருத்தல்வாதப் பாதையிலும் செயல்பட்டு வரும் இந்தக் கட்சிகளின் தலைமைகளால் ஆளும் வர்க்கத்தை வீழ்த்தும் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் களமாக இதனை மாற்றி இருக்க முடியாது.
இடதுசாரி இயக்கங்களின் திருத்தல்வாதமும் சந்தர்ப்பவாதமும் மக்களின் உறுதியான நம்பிக்கையைப் பெறத் தடையாக உள்ளன; மக்களைத் திரட்டத் தடையாக உள்ளன. இடதுசாரி இயக்கங்களின் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டு பிற முதலாளியக் கட்சிகள் மக்களைத் தம் பின்னால் திரட்டிக் கொள்கின்றன. முதலாளியக் கட்சிகளின் மீது நம்பிக்கை வைக்கும் மக்கள் மீண்டும் மீண்டும் ஏமாற்றமடைந்தும், தம் துயரங்களிலிருந்து விடுபட முடியாமலும் இருந்து வருகின்றனர். இங்கு நிலவி வரும் முதலாளியச் சுரண்டல் அமைப்பே மக்களுடைய பிரச்சினைகளுக்குக் காரணம் என்பதை மக்களுக்கு விளக்கி, அவர்களைத் தம் பின்னால் அணி திரட்டி அடிப்படை மாற்றத்தை சமூகத்தில் கொண்டு வர வேண்டிய கடமை சமூக மாற்றத்தில் அக்கறை கொண்டுள்ள அனைத்து இடதுசாரிகளுக்கும் உள்ளது. எனவே இடதுசாரிகள் அனைவரும் நிலவி வரும் முதலாளியத்திற்கு மாற்றாக சோசலிச அமைப்பை உருவாக்குவதற்கான ஒரு புரட்சிகர அரசியல் திட்டத்தின் கீழ் ஒன்றிணைய வேண்டியது இன்று அவசியமாக உள்ளது.
குமணன்







Comments
Post a Comment