Skip to main content

அயோத்தி ராமர் கோவில் திருட்டும் ஊழலும்!

 

தங்களுடைய அரசியல் நோக்கத்திற்காக வரலாற்றைத் திரித்து, மதவெறி சாயம் பூசி, திட்டமிட்டுத் தொடர்ந்து முஸ்லிம்களின் மீது வெறுப்பை அதிகரித்து 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 6--ஆம் நாள் விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பிற சங் பரிவாரங்களுடன் இணைந்து பிஜேபி இந்துத்துவ சக்திகள் 1528 – 1529 இல் கட்டப்பட்ட பாப்ரி மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கின. பிறகு அந்த இடத்தில் ராமருக்குக் கோவில் கட்டப்பட்டது.

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட 22.01.2024 அன்று "இது காலண்டரில் குறிக்கப்பட்ட நாள் மட்டுமல்ல ஒரு புது யுகத்தின் விடியலாகும்" என்று பிரதமர் மோடி பிரகடனம் செய்தார். இந்தியா முழுவதும் பரவலாகப் பல ஆண்டுகளாகப் போராட்டங்களை நடத்திக் கட்டப்பட்டது ராமர் கோவில். இந்தக் கோவிலின் நிர்வாகம் மிகுந்த அதிகாரம் கொண்ட "ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த் ஷேத்ரா ட்ரஸ்ட்" கீழ் உள்ளது. பக்தர்கள் வழங்கிய சிறு தொகை முதல் தங்கம், வெள்ளி மற்றும் விலையுயர்ந்த நகைகள், பெரும் தொகை நன்கொடைகளை இது நிர்வகித்து வருகிறது. இந்த ட்ரஸ்ட் பிரதமர் மோடியால் நேரடியாக நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு அவருடன் நேரடி தொடர்பு கொள்ளும்படி அமைக்கப்பட்டதாகும். மோடியின் நேரடிக் கண்காணிப்பில் இருக்கும் என்று அவராலேயே அறிவிக்கப்பட்ட ஒன்றாகும். கோவில் கட்டுவது, தொடர்ந்து அதை நிர்வகிப்பது என்னும் இதன் செயல்பாடு ஆரம்பத்தில் இருந்தே எதேச்சாதிகாரத் தன்மை கொண்டதாகவே இருந்து வருகிறது. அதிகாரத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் (RSS) ஆகியவை பங்குகொண்டது நிதி முறைகேடுகளுக்கு வழி வகுத்ததோடு, மதத்துக்கும் அரசியலுக்கும் இடையிலான வேறுபாட்டையும் அழித்தது. பிஜேபியின் தலைவர்களும் மதத் தலைவர்களும் மதம், அரசியல் இரண்டுக்கும் இடையில் நீண்ட காலமாக இருந்து வந்த வேலியைத் தகர்த்து அரசியலும் மதமும் ஒன்றிணைந்த அமைப்பை உருவாக்கினார்கள். இந்தப் போராட்டத்தின் ஊடாக, விஷ்வ ஹிந்து பரிஷத்தால் வெற்றிகரமாக அயோத்தி ராமர் 'கடவுள்' என்பதிலிருந்து மாற்றப்பட்டு 'அரசியல் அடையாளம்' ஆக்கப்பட்டார். இதனால் ஆன்மீகம் தொலைந்து ரியல் எஸ்டேட் கொள்ளையும் மிகப்பெரிய திருட்டும், நிதி முறைகேடும் நடந்துள்ளது.

ராமருக்கு கோவில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்ட நாளிலிருந்து நன்கொடைகள் வெள்ளமாகப் பெருக ஆரம்பித்தது. இந்தியப் பிரதமர் மோடி கோயில் கட்டப்பட முக்கியமான தலைமை பூசாரி ஆகவும் இருந்தார்; அவர்தான் ராமர் கோவிலைப் பற்றி தீர்மானிக்கும் முழு அதிகாரமும் கொண்டிருந்தார். பிரதமர் அலுவலகம் நன்கொடைகளுக்கான முழு நிர்வாகப்பொறுப்பையும் ஏற்றுக்கொண்டிருந்தது.

ஆளும் பிஜேபிக்கு, மோடிக்கு நெருக்கமானவர்கள் ராமர் கோயில் கட்டும் டிரஸ்ட்டின் நிர்வாகிகள் ஆனார்கள். ஆனால் அடுத்த மழைக்காலத்தில் கூரை ஒழுகி அவர்களது நேர்மையை வெட்ட வெளிச்சமாக்கி விட்டது. இதோடு வெள்ளமாக பெருகிய நன்கொடைகள் எவ்வாறு கணக்கிடப்பட்டன என்பதற்கு ஒரு உதாரணம்: விஷ்வ சிந்தி சமாஜ் என்னும் அமைப்பு ஒவ்வொரு கல்லும் ஒரு கிலோ எடையுள்ள ஏறக்குறைய 200 வெள்ளிக் கற்களை நன்கொடையாக கொடுத்தது ஆனால் அதற்கான ரசீது எதுவும் வழங்கப்படவே இல்லை; கோவிலின் ட்ரஸ்ட் நிர்வாகிகள் ஏறக்குறைய 2000 - 3000 கோடி ரூபாய்களை தொடர்ந்து கொள்ளை அடித்திருக்கிறார்கள்.
இந்தத் திருட்டில் ஒரு பெரிய கூட்டமே ஈடுபட்டுள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட தங்கத்தையும் வெள்ளிக் கட்டிகளையும் உள்ளூர் நகை வியாபரிகளிடம் விற்காமல் கர்நாடகாவிற்குக் கொண்டு சென்று உருக்கியுள்ளனர். மேலும் கோவிலில் குறைவான சம்பளம் வாங்கும் கீழ் நிலை ஊழியர்களுக்காக வழங்கப்பட்ட குளிர் கால உடைகளையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. அவற்றையும் கடத்திச் சென்று விற்றுள்ளனர்.

ராமர் கோவிலில் நடந்த கொள்ளை பற்றி நாம் இப்பொழுது அறிய வந்துள்ள அளவு “ஒரு பெரிய பனிப்பாறையின் சிறு நுனியே" என்று மூத்த போலீஸ் அதிகாரியான விபூதி நாராயண் ராய் குறிப்பிடுகிறார்.

பிஜேபியுடனும் ஆர்எஸ்எஸ்-சுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் இந்தத் திருட்டில் தொடர்பு கொண்டுள்ளனர். ட்ரஸ்ட்டின் பொதுச் செயலராக இருந்த சம்பத் ராய் முக்கியமான ஆர்எஸ்எஸ் தலைவர். அது மட்டுமல்லாமல் விஸ்வ இந்து பரிசத்தின் துணைத் தலைவர்; மோடியின் நெருங்கிய நண்பராகக் கருதப்படுபவர். அவர் தற்போது தார்மீகப் பொறுப்பேற்று பதவியிலிருந்து விலகி உள்ளார். அவரது ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். பஜ்ரங்தளத்தின் நிறுவனரும் பிஜேபியின் தலைவருமான வினய் கட்டியார் ட்ரஸ்ட்டின் தலைவர்கள் மீது பகிரங்கமாகக் குற்றம் சுமத்துகிறார்.

இந்திய இந்துக் கோயில்களில் இதற்கு முன்பு பல காலமாக இத்தகைய ஊழல்கள் நடந்திருந்தாலும், ராமர் கோவிலே பிஜேபியும் அதன் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்சும் இந்திய ஆட்சியில் அமர மிக முக்கியமான காரணம் என்பதாலேயே ராமர் கோவில் ஊழல், "நேர்மையாளர்களை, ஊழலுக்கு எதிரானவர்களை, தேசபக்தர்களை" அச்சுறுத்துகிறது.

உத்திரபிரதேசத்தின் ஆளும் பிஜேபி அரசாங்கம் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து, சிலரைக் கைது செய்து உள்ளது. சில நிர்வாகிகளை பதவிகளிலிருந்து நீக்கியுள்ளது. இருப்பினும் இந்திய அரசாங்கமும் ஆர்எஸ்எஸ்சும் நிர்வாகத்தின் அடிமட்டத்தில் இருக்கும் சில நபர்களை இந்த நிர்வாக முறைகேடுகளுக்கு காரணமாக்குவதன் மூலம், இந்தச் சூறையாடலுக்கு பொறுப்பேற்பதிலிருந்து தப்ப முடியாது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையாளர் பிரதாப் பானு மேத்தா தனது தலையங்கப் பக்கக் கட்டுரையில், "பல பத்தாண்டுகளாக ஆட்சியில் இருக்கும் மிக சக்தி வாய்ந்த அரசாங்கம் தன்னால் மட்டுமே 'ஊழலை' அடியோடு ஒழிக்க முடியும் என்று அறைகூவல் விடுத்தது; இன்று அது சக்தி இழந்து நிற்பது வினோதமாக இருக்கிறது. அசாதாரணமான ஆளுமை கொண்ட இந்தியப் பிரதமர், இந்த ஊழலின் முன் இப்பொழுது மிக அசாதாரணமான மௌனத்துடன் செயல் இழந்து நிற்பது உண்மைக் கதையைச் சொல்கிறது, குற்றத்தை தெளிவாகக் காட்டும் கதையைச் சொல்கிறது” என்கிறார். மேலும் “இது ராமராஜ்ஜியத்தை வெட்ட வெளிச்சம் ஆக்கியுள்ளது. பிஜேபி சமத்துவம் இல்லாத, நேர்மையற்ற தனது அழுகலை, அரசியல் தந்திரத்தை இப்போது மறைக்க முடியாது" என்கிறார்.

இந்துமதம் மற்றும் மத உணர்வுகள் அரசாங்கத்திற்கும் ராமர் கோவில் டிரஸ்ட்க்கும் பாதுகாப்பு கேடயங்களாக இருந்த நிலை இனிமேலும் இருக்க முடியாது என்பதை சங்பரிவாரும் ஆளும் பிஜேபியும் தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளன. பிஜேபி மற்றும் சங்பரிவார் அரசியல் மற்றும் அதிகார ஏணிகளில் ஏறி ஆட்சியைப் பிடிப்பதற்கு காங்கிரசின் ஊழலையும் குற்றச் செயல்களையும் முன்னிறுத்தி பிரச்சாரம் செய்து அரசியல் மற்றும் சமூக நேர்மை கொண்டவர்களாக தங்களைக் காட்டிக் கொண்டன; 2012--இலிருந்து அன்னா ஹசாரேயின் ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் விளைவாக மோடி தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவின் பிரதமர் ஆனார்; ஆனால் இப்போது ராமர் கோயில் கொள்ளை பற்றிய கேள்விகளைப் புறக்கணிப்பதும் பிரதம மந்திரியும் ராமர் கோவில் தலைமை பூசாரியமான மோடியின் பனிப்பாறையாய் இறுகிய மௌனமும் மக்களுக்குள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. முன்பு செய்தது போல ஆட்சியாளர்களைக் கேள்வி கேட்பவர்களை இந்துக்களுக்கு எதிரானவர்கள், இறை நம்பிக்கை அற்றவர்கள், தேச விரோதிகள் என்று முத்திரை குத்தியது போல இப்போது செய்ய முடியாமல் பிஜேபியும் சங்பரிவாரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளன. நேர்மையான ஆய்வு நடத்தப்பட்டால் அது எந்த அளவுக்கு மேல்மட்டம் வரை செல்லும் என்பதும், இது கணக்கிடுதலில் ஏற்பட்ட தவறு அல்ல திட்டமிட்டு நடத்தப்பட்ட கொள்ளை என்பதும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர் குறிப்பிடுவது போல ‘மதம் என்பது ஒரு குறிப்பிட்ட அரசியல் நோக்கத்தைக் கொண்டிருக்கும்போது மட்டுமே முக்கியத்துவம் பெறுகிறது. அங்கு அது முழுமையாக ஆட்சியாளரின் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தப்படுகிறது.’ இதற்கு மிகச் சரியான நிலவும் உதாரணம் பாப்ரி மசூதி இடிப்பும் ராமர்கோவில் எழுப்பப்பட்டதும் ஆகும்.

இந்த கோவில் பிஜேபி - ஆர்எஸ்எஸ்சுக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட திட்டம்; பிரிட்டிஷ் அரசு கைக்கொண்ட 'பிரித்தாளும் திட்டத்தின்' தொடர்ச்சி ஆகும். உடன் பிறந்த சகோதரர்கள் போன்ற முஸ்லிம்கள் மீது அதீத வெறுப்பை உருவாக்கி, மதவெறியைத் தூண்டி, ஆட்சியைப் பிடிப்பதற்காக ஏராளமானவர்களைக் கொன்று குவித்து, ஏராளமான முஸ்லிம் பெண்களை வன்புணர்வுக்கு உள்ளாக்கி, பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ்--ஆல் "உண்மையின்(!) அடிப்படையில் நியாயமான முறையில் ராமனுக்காக உருவாக்கப்பட்ட கோயில். இது. பிஜேபியின் ஆட்சி அதிகாரத்தை நிலை நிறுத்த முஸ்லிம்கள் மீதான வெறுப்பை அதிகரிப்பதற்கு இன்றும் இது சளைக்காமல் பயன்படுத்தப்படுகிறது.

11--ஆம் நூற்றாண்டில், கி.பி. 1089 - 1101 ஆண்டுகளில் காஷ்மீரை ஆட்சி செய்த ராஜா ஹர்ஸ் தேவ் தனது ஆடம்பர வாழ்க்கையால் வறண்டு போன தனது கஜானாவை நிரப்ப மிகக் கொடுமையான முறையில் மக்களின் மீது ஏராளமான வரிகளை விதித்தார்; அதோடு தன்னுடைய நாட்டிலேயே கோவில்களைக் கொள்ளையடித்து தங்கத்தாலும் வெள்ளியாலும் செய்யப்பட்ட விக்ரஹங்களை உருக்கி கஜானாவை நிரப்பினார். அவர் இந்து மதத்தவரே! இன்று ராமர் கோவிலை கொள்ளை அடித்த டிரஸ்டி உறுப்பினர்களும் சாதாரண இந்துக்கள் மட்டுமல்ல; இந்து மதக் காவலர்கள்! இந்துக்களின் 'உறுதிமிக்க' காவலர்கள்!!. மிகச் சாதாரணமான இந்து மத நம்பிக்கை கொண்டவன் கனவில் கூட நினைக்க மறுக்கும் கொள்ளையை அபரிமிதமான அளவில் கொள்ளையடித்த சங்பரிவார்கள் இந்திய மக்களுக்கு, இந்துக்களுக்கு கூறுவது என்னவென்றால் "ராமனே வெறும் கல்தான்! எங்களுடைய அரசியல் இலாபத்திற்காகவும் பொருளாதார நலன்களுக்காகவும் எங்களால் உருவாக்கப்பட்டவன்தான்!!" என்பதுதான்.

சூர்யா

Comments

Popular posts from this blog

ஒடுக்கு முறைக்கு எதிரான எம்ஆர்எப் (MRF) தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி என்ற பெயரில் 1946 இல் இருந்து இயங்கி வரும் MRF நிறுவனம் சென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதியில் சுமார் 79 ஆண்டுகளாக இயங்கி வருகிறது . நிறுவனம் பெரும் லாபம் அடைந்து வந்தாலும் தொழிலாளர்களின் நலன்கள், ஊதியம், பணிப் பாதுகாப்பு, நிரந்தர வேலை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்து வந்தது. நிர்வாகத்தின் எதேச்சதிகாரப் போக்கிற்கு எதிராக, தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளைப் பாதுகாக்க சங்கம் அமைத்துப் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர் . சென்னையை தலைமையிடமாக கொண்டு 1946 இல் துவங்கபட்ட எம்ஆர்எப் ( MRF) நிறுவனம் திருச்சி , பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும், பல மாநிலங்களிலும் கிளைகளை அமைத்து டயர் மற்றும் இரப்பர் பொருட்கள், பெயிண்ட், பொம்மைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியா முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர் . திருவெற்றியூர் கிளையில் 1970, 1980, 1990 ஆகிய காலகட்டங்களில் தொழிலாளர்கள் தங்களுடைய நீண்ட நெடிய வீரமிக்க போராட்டத்தின் மூலமாக நிர்வாகத்தை அட...

விஜய்யின் சினிமாவும் சினிமா அரசியலும்!

  கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடந்த விஜயின் அரசியல் பொதுக்கூட்டம் 10 இளம் குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 உயிர்களைப் பலி கொண்டு பெரும் துயரத்திற்குக் காரணமாகியுள்ளது. ஓர் அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்தது தமிழ்நாட்டின் கடந்த எழுபத்தைந்து ஆண்டு வரலாற்றில் இல்லை என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி மனதில் ஆழ்ந்த துயரத்தை உண்டாக்கும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் இதற்குக் காரணமாக அமைந்துள்ள அரசியல், கலாச்சாரக் கூறுகள் நமது மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன.   சினிமாவும் சினிமா அரசியலும்   எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் தனி ஒருவராக விஜய் அவர்களைப் பந்தாடுவார். கார்களிலும் விமானங்களிலும் பறந்து எதிரிகளைச் சாடுவார். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் அவரைத் தொடக்கூட செய்யாது. அரசியல்வாதிகளின் ஊழலை எதிர்த்துப் போராடுவார். ரவடிகளைத் துவம்சம் செய்வார். இப்படித்தான் விஜய் நடித்த திரைப்படங்கள் அவரை பெரும் துணிச்சலும் வீரமும் கொண்டவராக, சாகசக்காரராக, நல்லவராக, நேர்மையானவராக, நீதிக்காகப் போராடுபவராக சித்தரித்து உள்ளன. இவ்வாறு பிரம்மாண...

விஜய்யின் வருகை – மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

  1967 தேர்தலுக்குப் பிறகு திமுக, அதிமுக என்ற இரண்டு திராவிடக் கட்சிகளே கடந்த சுமார் அறுபதாண்டுகளாக மாறி மாறி தமிழ் நாட்டை ஆண்டு வந்த நிலையில், அண்மையில் நடந்து முடிந்த பதினேழாவது சட்டமன்றத் தேர்தலில், அந்த இரண்டு கட்சிகளும் அமைத்திருந்த கூட்டணிகளை தனி ஒரு கட்சியாக எதிர்த்து நின்று அவற்றை வீழ்த்தியுள்ளது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். தனிக் கட்சியாக ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை இடங்களைப் பெறாவிட்டாலும், 107 இடங்களைப் பெற்று அதிக இடங்களைப் பெற்ற கட்சியாக இருக்கின்றது. பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் திமுக கூட்டணியே ஆட்சிக்கு வரும் என்று கணித்திருந்த நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி எதிர்பாராத ஒன்றாகவும் பெரும் வியப்பை அளிக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது. விஜய்யின் தவெக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்திருப்பார்கள் என்றும் சொல்வதற்கில்லை. ஏனென்றால் திமுக தனது ஆட்சிக் காலத்தில் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண், தவப் புதல்வன் போன்ற திட்டங்களின் மூலம் மாதம்தோறும் பெண்களுக்கும், மாணவர்களுக்கும் நிதி வழங்கி வருகிறது. மீண்டும் ஆட்சிக்...