Skip to main content

இலக்கு இணைய இதழின் பதில் மீது சில கருத்துரைகள்!

1. இந்தியாவின் இன்றைய புரட்சிக் கட்டம் சோசலிசப் புரட்சிதான் என எங்களுடைய நிலைப்பாட்டிற்கு இலக்கு குழு பதில் அளிக்கும்போது, அக்டோபர் புரட்சியின் நான்காம் ஆண்டு ஒட்டி லெனின் எழுதிய கட்டுரையை (இலக்கு கூறுவது போல அது லெனின் ஆற்றிய உரை அல்ல) “திருப்பிப் பார்த்து உடும்புப் பிடியாகப் பிடித்துள்ள சோசலிசப் புரட்சி பற்றி வாய்ப்பாட்டு வாதத்தை லெனின் அக்டோபர் புரட்சியின் படிப்பினையில் என்ன சொல்லியுள்ளார் என்பதைக் கிரகித்து மற்றவற்றைப் பேசட்டும். எனக் கூறுகிறது.

அந்தக் கட்டுரையில் லெனின் என்ன கூறுகிறார் எனப் பார்ப்போம். ‘1917 வரை ரசியாவில் இருந்து வந்த மத்தியகாலப் பண்புகள், பண்ணையடிமைத்தனம் நிலப்பிரபுத்துவம் ஆகியவற்றை அக்டோபர் புரட்சி ஒழித்தது. சமூகப் பிரிவுகள்(social estates) நில உரிமை ஆகியவற்றை ஒழித்தது. பெண்களின் நிலைமையை மாற்றியது. மத ஒடுக்குமுறை, தேசிய இன ஒடுக்குமுறை ஆகியவற்றை ஒழித்தது. இவை முதலாளிய ஜனநாயகப் புரட்சியின் உள்ளடக்கம். 125 ஆண்டுகளுக்கு முன்பு பிரான்சிலும், 250 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்திலும் நடந்த முதலாளிய ஜனநாயகப் புரட்சியின் போது கூட இவை ஒழிக்கப்படவில்லை. நாம் பத்து வாரங்களில் (அக்டோபர் 25,1917 லிருந்து ஜனவரி 5,1918 க்குள்) இதைச் சாதித்தோம். முதலாளிய ஜனநாயகவாதிகளும், தாராளவாதிகளும் (கேடட்டுகள்), குட்டி முதலாளிய ஜனநாயகவாதிகளும் (மென்சுவிக்குகளும், சோசலிசப் புரட்சியாளர்களும்) அவர்கள் ஆட்சியில் இருந்த எட்டு மாதங்களில் செய்ததை விட ஆயிரம் மடங்கு அதிகமாக நாம் சாதித்துள்ளோம். ... நம்முடைய முதன்மையான, உண்மையான பாட்டாளி வர்க்கப் புரட்சியின், சோசலிச செயல்பாடுகளின், துணை விளை பொருளாக (by product) நாம் முதலாளியப் புரட்சியின் பிரச்சனைகளை முடித்துள்ளோம். சீர்திருத்தங்கள் புரட்சிகர வர்க்கப் போராட்டத்தின் துணை விளை பொருள்கள் என நாம் எப்பொழுதும் கூறி வந்துள்ளோம். முதலாளிய ஜனநாயகச் சீர்திருத்தங்கள் பாட்டாளி வர்க்கத்தின், அதாவது, சோசலிசப் புரட்சியின் துணை விளை பொருள்கள் என நாம் கூறினோம், அதைச் செயலிலும் நிரூபித்து உள்ளோம். இவ்வாறு லெனின் தனது கட்டுரையில் கூறுகிறார். (Lenin, C.W.33 p.53,54).(அழுத்தம் எமது)

இங்கு லெனின் கூறுவதை நாம் புரிந்து கொள்ளவில்லையா, இல்லை அவர்கள் புரிந்து கொள்ளவில்லையா?

முதலாளிய வர்க்கம் அதிகாரத்தில் இருந்தாலும் முதலாளியப் புரட்சியின் கடமைகளை அது முழுமையாக நிறைவேற்றாது என்பதைத்தான் லெனின் இங்கு சுட்டிக் காட்டுகிறார். முதலாளியப் புரட்சி நடந்து நூற்று இருபத்தைந்து கடந்து விட்ட பிரான்சிலும், இரு நூற்று ஐம்பது ஆண்டுகளாகி விட்ட இங்கிலாந்திலும் கூட முதலாளியப் புரட்சியின் கடமைகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்கிறார் லெனின். முதலாளியப் புரட்சியின் கடமைகளை பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான சோசலிசப் புரட்சிதான் முழுமையாக நிறைவேற்றும் என்கிறார்.

இங்கு முதலாளி வர்க்கத்தின் கையில் அதிகாரம் இருந்தாலும், அது நிலப்பிரபுத்துவ எச்சங்களை ஒழிக்காது. சாதியப் பாகுபாடுகளை, ஒடுக்குமுறைகளை, பெண்ணடிமைத்தனத்தை, மத ஒடுக்கு முறையை, தேசிய இன ஒடுக்குமுறையை ஒழிக்காது. முதலாளிய ஜனநாயகப் புரட்சியின் கடமைகளை நிறைவேற்றாது. எனவேதான் இங்கு பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான ஒரு சோசலிசப் புரட்சியின் பகுதியாகவே, துணை விளை பொருளாக முதலாளிய ஜனநாயகப் புரட்சியின் கடமைகள் நிறைவேற்றப்படும் என்கிறோம். லெனினியத்தின் வழி காட்டுதலின்படி இதைக் கூறுகிறோம்.

ஆனால் இலக்கு என்ன கூறுகிறது? இங்கு நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறை இருக்கின்றது, சாதிப் பாகுபாடுகளும் ஒடுக்குமுறைகளும் இருக்கின்றன; தேசிய இன ஒடுக்குமுறை இருக்கின்றது. மத ஒடுக்கு முறை இருக்கின்றது. இங்கு முதலாளியப் புரட்சி முடிந்திருந்தால் இவை அனைத்தும் ஒழிக்கப்பட்டிருக்கும். அதனால் இங்கு நடத்தப்பட வேண்டியது புதிய ஜனநாயகப் புரட்சிதான் என்கிறது. இரு நூறு ஆண்டுகளுக்கு முன்பு முதலாளியப் புரட்சி நடந்த நாடுகளில் கூட மத்திய கால எச்சங்கள் நிலவுவதாக லெனின் குறிப்பிடுகிறார். ஏனென்றால் முதலாளி வர்க்கம் புரட்சிகரமான முறையில் அனைத்தையும் உடனடியாக மாற்றி அமைக்காது. அது சீர்திருத்த முறையில் தனது நலன்களுக்கு ஏற்ற வகையில்தான் மாற்றி அமைக்கும். இங்கும் அதுதான் நடந்து வருகிறது. முதலாளியம் முழுமையான, முரண்பாடற்ற ஜனநாயகத்தைக் கொண்டு வராது. பாட்டாளி வர்க்கம்தான் முழுமையான, முரண்பாடற்ற ஜனநாயகத்தை புரட்சிகரமான முறையில் கொண்டு வரும். அது சோசலிசப் புரட்சியின் துணை விளை பொருளாக அமையும்.

இலக்குக் குழு லெனினின் அந்தக் கட்டுரையை மீண்டும் ஒரு முறை படித்து விட்டு, அதன் சாரத்தை முழுமையாகப் புரிந்து கொண்டு பொழிப்புரை எழுதுவது நல்லது.

2. புரட்சியின் முதலாவதும், முதன்மையானதும், அடிப்படையானதுமான அடையாளம் என்னவென்றால் அரசு அதிகாரம் ஒரு வர்க்கத்திடமிருந்து இன்னொரு வர்க்கத்திடம் செல்வதாகும். கண்டிப்பான அறிவியல் சார்ந்தும், நடைமுறை அரசியல் சார்ந்தும் புரட்சி என்ற வார்த்தையின் பொருள் இதுதான்.

இந்த அளவில் ரசியாவில் முதலாளிய அல்லது முதலாளிய ஜனநாயகப் புரட்சி முடிவுற்று விட்டது.இவ்வாறு லெனின் தனது ஏப்ரல் ஆய்வுரையில் கூறுகிறார்..(The April Thesis- Lenin, p.15. Progress Publishers,Moscow,1980)

அரசியல் அதிகாரம் எந்த வர்க்கத்தின் கையில் உள்ளதோ அதை வைத்துத்தான் புரட்சியின் கட்டத்தைத் தீர்மானிக்க வேண்டும் என லெனின் தனது ஆய்வுரையில் கூறியதை இலக்கு மறுத்தது. அரசியல் அதிகார மாற்றத்தை மட்டுமே அளவுகோலாக எடுத்துக் கொள்வது அரசியல் குறுக்குவாதம் என்றும், லெனின் அரசியல் அதிகாரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினாலும் ஒருபோதும் அரசியல் அதிகார மாற்றம் மட்டுமே போதுமான அளவுகோல் என்று கூறவில்லை என்றும் கூறியது. மேலும் ஒரு நாட்டின் பொருளாதார அடித்தளம், நிலவுடைமை அமைப்பு, ஏகாதிபத்திய சார்பு, வர்க்க உறவுகள் ஆகியவற்றையும் சேர்த்து ஆய்வு செய்ய வேண்டும் என லெனின் கூறுகிறார் என்றும் இலக்கு கூறியது. லெனின் இவ்வாறு எங்கு கூறுகிறார் எனச் சான்றுகளுடன் விளக்க வேண்டும் என நாம் கேட்டதற்கு அதற்கு குறிப்பான பதிலை அதனால் தர முடியவில்லை. பக்கம் பக்கமாக, சமூக ஜனநாயகத்தின் இரு போர்த் தந்திரங்கள், ஏப்ரல் ஆய்வுரைகள் ஆகிய லெனினின் நூல்களிலிருந்து பொழிப்புரை வழங்குகிறது. நாம் கேட்பது குறிப்பான பதில். அதற்கு அவர்களிடம் பதில் இல்லை. குறிப்பான பதிலைத் தராமல் பக்கங்களை நிரப்பி நழுவிச் செல்கிறது இலக்கு.

மேலும், ஒவ்வொரு புரட்சியிலும் அய்யத்திற்கு இடமில்லாமல் முக்கியமான கேள்வியாக இருப்பது அரசியல் அதிகாரத்தைப் பற்றிய கேள்விதான். எந்த வர்க்கம் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றதோ அது அனைத்தையும் தீர்மானிக்கின்றது என்கிறார் லெனின் (லெனின், தொ. நூ. தொ. 25, பக்கம். 370).

லெனினின் கூற்று இந்தியாவிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. 1947 ல் இந்தியாவில் அதிகாரத்திற்கு வந்த முதலாளி வர்க்கம் தனது நலன்களுக்கு ஏற்ற வகையில் நிர்வாக முறைகளை மாற்றி அமைத்தது. சமஸ்தானங்களை ஒழித்துத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. விவசாய உற்பத்தியைச் சீர்திருத்த முறையில் படிப்படியாக மாற்றி அமைத்து முதலாளிய உற்பத்தி முறையின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்துள்ளது. கடந்த எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் நடந்துள்ள மாற்றங்களுக்கு எல்லாம் காரணமாக இருப்பது அனைத்தையும் தீர்மானிக்கின்ற நிலையில் அதிகாரத்தில் உள்ள முதலாளி வர்க்கம்தான். அதனால்தான் அரசியல் அதிகாரம் எந்த வர்க்கத்தின் கைகளில் இருக்கிறது என்பதுதான் புரட்சியின் கட்டத்தைத் தீர்மானிக்கிறது என லெனின் கூறினார். முதலாளி வர்க்கத்தின் கைகளில் உள்ள அரசியல் அதிகாரத்தைப் பாட்டாளி வர்க்கத் தலைமையில் நடக்கும் சோசலிசப் புரட்சி மூலம் கைப்பற்றி நாட்டை சோசலிசப் பாதைக்குக் கொண்டு செல்ல முடியும். நிலப்பிரபுத்துவ எச்சங்களையும், மத்திய காலப் பண்பாடுகளையும் ஒழித்து, முழுமையான ஜனநாயகத்தை நிறுவ முடியும்.

3. இந்திய முதலாளி வர்க்கம் தரகு வர்க்கம் அல்ல என்றும், அது தொழில்துறை முதலாளி வர்க்கம் என்றும், மூலதனம் , சந்தை, தொழில் நுட்பம் ஆகியவற்றுக்காக ஏகாதிபத்தியங்களை அது சார்ந்திருந்தாலும் அது அரசியல் சுதந்திரம் கொண்டது என்றும் எமது ஆவணத்தில் விளக்கி உள்ளோம். 1947ல் அரசியல் சுதந்திரம் பெற்றதிலிருந்து கடுமையான காப்பு வரிகள் மூலம் அந்நிய நாட்டு முதலாளிகளின் போட்டிகளிலிருந்து தனது சந்தையைக் காப்பாற்றி வந்ததது முதலாளி வர்க்கம். ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் உள்ள முரண்பாடுகளைப் பயன்படுத்திக் கொண்டது. 1990களுக்குப் பிறகான தாராளமயமாக்கல் காலத்தில் ஓரளவு வளர்ச்சியுற்றிருந்த இந்திய முதலாளி வர்க்கம் அதைப் பயன்படுத்திக் கொண்டு வெளி நாடுகளுக்கு நிதி மூலதனங்களை ஏற்றுமதி செய்யும் நிலையை அடைந்தது. ஏகாதிபத்தியத்தின் இளைய பங்குதாரராக இன்று அது செயல்பட்டு வருகிறது. தனது நலன்களுக்கு ஏற்ற வகையில் அந்நிய நாடுகளுடன் ஒப்பந்தங்களைப் போட்டு வருகிறது. ஆனால் இவற்றைப் பற்றிய எந்தவிதமான பார்வையும் இல்லாமல் இந்திய முதலாளி வர்க்கம் இன்னும் தரகு வர்க்கமாக இருக்கின்றது என இலக்கு கூறி வருகிறது.

4. மனித உழைப்புச் சக்தி பண்டமாக மாறுவது என்பது முதலாளிய உற்பத்திமுறையின் சிறப்பான, குறிப்பான பண்பாகும் என்கிறது மார்க்சியப் பொருளாதாரம். ஆனால் இலக்குவோ கூலி உழைப்பு மட்டும் முதலாளியத்தின் முழுமையான அடையாளம் அல்ல என்கிறது; நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் இருப்பதால் விவசாயம் முதலாளித்துவமானது என முடிவெடுப்பது தவறு என்கிறது. அது எப்படி என்பதை இலக்கு விளக்க வேண்டும்.

அதே போல, நிலக் குவியல் முக்கியமானது அல்ல. அங்கு எந்த முறையில் உற்பத்தி நடை பெறுகிறது என்பதுதான் முக்கியம் என்கிறது மார்க்சியம். ஆனால் நிலக் குவிப்பு என்பது நிலப்பிரபுத்துவத்தின் முக்கியமான அடையாளம் அல்ல என்று கூறிவிட முடியாது என்கிறது இலக்கு;. அதை இலக்கு விளக்க வேண்டும்.

மேலும் இங்கு விவசாய உற்பத்தியும் விநியோகமும் சாதி அடிப்படையில் இல்லை என்பதை எமது ஆவணம் விளக்குகிறது. எமது ஆவணத்தில் கிராமப்புற நிலவுடைமையும் சாதி ஒடுக்குமுறையும் பற்றிக் குறிப்பிட்டாலும், அதற்குக் காரணமாக இருப்பது முதலாளிய நில உடைமையும் , முதலாளிய உற்பத்திமுறைச் சுரண்டலும், முதலாளிய வகைப்பட்ட ஒடுக்குமுறையும்தான். நிலப்பிரபுத்துவ வகைப்பட்ட ஒடுக்குமுறை அல்ல.

விவசாயத்தில் எவ்வாறு முதலாளிய உற்பத்திமுறை ஊடுருவி ஆதிக்கம் பெற்றுள்ளது என்பது பற்றி ஏராளமான மார்க்சிய அடிப்படையிலான ஆய்வுகள் கடந்த பல பத்தாண்டுகளாக வெளி வந்துள்ளன. .பொ.. (மார்க்சிஸ்ட்) வின் ஓர் ஆய்வுக் குழு விவசாய வர்க்கங்களைப் பற்றிய ஒரு அறிக்கையை 2016 ல் வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வுக் குழுவின் அறிக்கை கிராமப் புறங்களில் விவசாய வர்க்கங்களிடையே ஏற்பட்டுள்ள பிளவுகள், மாற்றங்கள், விவசாயத்தில் முதலாளிய உற்பத்திமுறையின் ஆதிக்கம், கிராமப் புறங்களில் ஆதிக்கம் பெற்றுள்ள விவசாய வர்க்கங்கள் பற்றி விரிவாக விளக்குகிறது இந்த ஆய்வுகளை எல்லாம் இலக்கு வாசிக்க வேண்டும். ஏற்கனவே வாசித்திருந்தால் அவை எவ்வாறு தவறு என விளக்க வேண்டும்.

5. இன்று பெரும் நில உடைமையாளர்களும் பணக்கார விவசாயிகளும் உற்பத்தியிலும், பல்வேறு அதிகார அமைப்புகளிலும், முதலாளியக் கட்சிகளிலும் எவ்வாறு செல்வாக்கு செலுத்துபவர்களாக உள்ளனர் என்பதை மேலே குறிப்பிடப்பட்ட ஆவணம் கூறுகிறது. பணக்கார விவசாயிகளும், நடுத்தர முதலாளிகளும் இன்றைய அரசு அதிகாரத்தில் பங்கு வகிப்பவர்கள். அதனால் பயன் அடைந்து வருபவர்கள். இவர்களைத்தான் புரட்சியின் நண்பர்கள் என இலக்கு கூறுகிறது. அதிகாரத்திலும் பொருளாதார ஆதிக்கத்திலும் அவர்கள் இன்று என்ன பங்கு வகிக்கின்றார்கள் என்பதை அறியாமல் அவர்களைப் புரட்சியின் நண்பர்களாகப் பார்க்கிறது. இன்னும் அவர்கள் புதிய ஜனநாயகப் புரட்சி என்ற மாயையில் இருப்பதால் அவர்களால் எதார்த்தத்தைப் பார்க்க முடியவில்லை.

6. எமது ஆவணம் தேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமையைக் கோட்பாட்டளவில் அங்கீகரிக்கிறது. அதே நேரத்தில் குறிப்பிட்ட தேசிய இனம் பிரிந்து செல்வதை ஆதரிப்பது தொழிலாளர் வர்க்கத்தின் ஐக்கியத்திற்கு எதிரானது என வாதிடுகிறது என இலக்கு கூறுகிறது. ஒரு தேசிய இனம் பொது வாக்கெடுப்பு மூலம் பிரிந்து போவதை நாம் தேசிய சுய நிர்ணய அடிப்படையில் அங்கீகரிக்கின்றோம்.. அதே சமயத்தில்,முதலாளி வர்க்கத்தின், குட்டி முதலாளி வர்க்கத்தின் நலன்களுக்காகப் பிரிந்து போவதை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யும் உரிமை பாட்டாளி வர்க்கத்திற்கு உண்டு. இருப்பினும் அந்தத் தேசிய இன மக்களிடத்தில் நடத்தப்படும் பொது வாக்கெடுப்பு பிரிவினைக்கு பெரும்பான்மை ஆதரவாக அமைந்தால் அதைப் பாட்டாளி வர்க்கம் ஏற்றுக் கொள்ளும். இதுதான் அரசியல் சுய நிர்ணயம் பற்றி லெனின் கூறுவதும்.

7. “முதன்மை முரண்பாடு தீர்ந்தால் எல்லா பிரச்சினைகளும் தீரும் என நாம் கூறியதாக இலக்கு அப்பட்டமாகத் திரிக்கிறது.

நாம் கூறியது என்ன? சமூகத்தில் பல முரண்பாடுகள் இருந்தாலும் அவை ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்பு கொண்டவை என்பது உண்மை. பல முரண்பாடுகள் நிலவினாலும் அவற்றில் மிக மிக முக்கியமானது முதன்மை முரண்பாடாகும். அதனுடைய தீர்வு பிற முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு வழி வகுக்கும் என்பதுதான் மார்க்சியம். முதலாளிய சமூகத்தில் பாட்டாளி வர்க்கத்திற்கும் முதலாளி வர்க்கத்திற்கும் இடையிலான முரண்பாடுதான் முதன்மை முரண்பாடு. இந்த முதன்மை முரண்பாட்டைத் தீர்க்கும்போதுதான் பிற முரண்பாடுகளையும் தீர்க்க முடியும் என்பதுதான் இயங்கியல் . இதைத்தான் மாவோ தனது முரண்பாடு பற்றிய கட்டுரையில் விரிவாக விளக்குகிறார்

முதன்மை முரண்பாடு தீர்க்கப்பட்டால் பிற முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு வழி வகுக்கும் என்றுதான் நாம் கூறுகிறோம். ஆனால் முதன்மை முரண்பாட்டைத் தீர்த்துவிட்டால் அனைத்து முரண்பாடுகளும் தீர்ந்து விடும் என நாம் இயந்திரத்தனமாகக் கூறுவதாகப் பொய் கூறுகிறது இலக்கு.

முதலாளியத்தில் உள்ள முதன்மை முரண்பாடான முதலாளி வர்க்கத்திற்கும் தொழிலாளி வர்க்கத்திற்கும் இடையிலான முரண்பாடு தீர்க்கப்பட்டால் மற்ற முரண்பாடுகள் தானாகவே அழிந்து விடும் என நாம் கூறவில்லை. அந்த முரண்பாடு தீர்க்கப்பட்டால் மற்ற முரண்பாடுகள் தீர்க்கப்பட வழி வகுக்கப்படும் என்றுதான் நாம் கூறுகிறோம். முதலாளி வர்க்கத்திற்கும் தொழிலாளி வர்க்கத்திற்கும் உள்ள முரண்பாடு எப்பொழுது தீர்க்கப்படும்? சோசலிசப் புரட்சியின் மூலம்தான் தீர்க்கப்படும்..பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மூலமே அது தீர்க்கப்படும். அதன் மூலமே சாதி முரண்பாடு, தேசிய இன முரண்பாடு, பாலின ஒடுக்கு முறை ஆகியவற்றுக்கு அடிப்படையாக இருக்கும் பொருளாதாரச் சுரண்டலையும், ஏற்றத் தாழ்வையும், பண்பாட்டுத் தளத்தையும் ஒழிக்க முடியும். முதன்மை முரண்பாட்டின் தீர்வுக்கும், பிற பிரச்சினைகளின் தீர்வுக்கும் இடையிலான இயங்கியல் உறவைப் புரிந்து கொள்ள முடியாமல் நாங்கள் இயந்திரகதியாகக் கூறுவதாக இலக்கு அவதூறு செய்கிறது.

மேலும், அதிகாரத்தில் இருக்கும், சுரண்டும் வர்க்கம் வர்க்கப் போராட்டத்தின் மூலமே வீழத்தப்பட முடியும். உழைக்கும் மக்கள் அனைவரும் சாதி வேறுபாடுகளைக் களைந்து வர்க்கமாக ஒன்றிணைந்து போராடுவதன் மூலமே சுரண்டும் வர்க்கத்தை வீழ்த்த முடியும். வர்க்கப் போராட்டம் என்ற உலைக்கலனில் சாதிய உணர்வுகள் அழிக்கப்பட்டுப் புடம் போடபபட்ட ஒரு புதிய சமூகம் உருவாகும் என எமது ஆவணம் கூறுகிறது. வர்க்கப் போராட்டத்திற்கும் சாதி ஒழிப்புக்கும் இடையில் உள்ள இயங்கியல் உறவை இலக்குவால் புரிந்து கொள்ள முடியவில்லை.

8. மேலும் நாம் முதலாளியத்தில் உள்ள முதன்மை முரண்பாடு பற்றி மாவோ கூறியதைக் கூறுகிறோம். முதலாளிய சமூகத்தில் முதலாளி வர்க்கத்திற்க்கும் தொழிலாளி வர்க்கத்திற்கும் இடையில்தான் முதன்மை முரண்பாடு. அந்த முரண்பாட்டைத் தீர்ப்பது பிற முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு வழி வகுக்கும் என மாவோ கூறுகிறார் எனக் கூறினோம். இலக்குவோ அரைக் காலனிய அரை நிலப்பிரபுத்துவ சீனாவில் அதன் புரட்சியின் பல்வேறு கட்டங்களில் நிலவிய முதன்மை முரண்பாடுகளைப் பற்றிக் கூறுகிறது. நாங்கள் கேட்ட கேள்விக்கு குறிப்பான பதிலைத் தராமல் வாதத்தைத் திசை திருப்புகிறது.

9. முதன்மை முரண்பாடு தீர்ந்தால் எல்லா பிரச்சினைகளும் தீரும் என நாம் கூறியதாக இலக்கு அப்பட்டமாகத் திரித்ததோடு, இந்தியாவை வளர்ச்சியுற்ற முதலாளிய நாடு என்று நாம் கூறுவதாகப் பொய் உரைக்கிறது. நாம் என்ன கூறி உள்ளோம் என்பதைத் திரித்து பதில் சொல்வதும், வாதத்தைத் திசை திருப்பும் செயலும் நேர்மையற்ற செயல் என இலக்குவுக்குத் தெரியவில்லை போலும். 

10. “இங்குள்ள சிலர் ஜனநாயகப் புரட்சி எந்த மரத்தில் காய்க்கும் என்பதனை தேடுவது போல் இவர்களும் சோசலிசம் என்பது ஏதோ இவர்கள் கண்டு பிடித்த பொக்கிசம் போல் மாறாநிலையில் பேசுகின்றனர். என இலக்கு கூறுகிறது. நாங்கள்தான் சோசலிசம் என்ற பொக்கிசத்தைக் கண்டு பிடித்ததாக நாங்கள் எங்கு கூறினோம்? இவர்களுடைய கூற்றிலிருந்து இவர்கள் வெளிப்படுத்துவது என்ன? ஜனநாயகம், சோசலிசம் பற்றிப் பேசும் தகுதி இவர்களுக்குத்தான் உண்டு எனக் கருகின்றனர். மற்றவர்கள் எல்லோரும் அவை பற்றிப் பேச தகுதியும் அறிவும் அற்றவர்கள் எனக் கருதின்றனர் . அதற்கான அதிகார உரிமையை (authority) தாம்தான் கொண்டிருப்பதாகக் கருதுகின்றனர். அவர்களுடைய கருத்துகளின் மீது விமர்சனங்களை வைக்கும்போது தம்முடைய அதிகாரத்தைக் கேள்வி கேட்பதாகக் கருதுகின்றனர்; தம்முடைய அதிகாரம் உடைபடுவதாகக் கருதுகின்றனர். பதற்றமும் கோபமும் ஏற்படுகின்றன, அதனால்தான் இவை போன்ற ஏளனத்துடன் கூடிய வார்த்தைகள் இவர்களிடமிருந்து வெளிப்படுகின்றன. 

மேலும், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் பல்வேறு விதமான சோசலிசங்களைப் பற்றி மார்க்சிய ஆசான்கள் விளக்கி உள்ளனர் என்றும், நாம் கூறும் சோசலிசம் எந்த வகைப்பட்டது என்று அவர்களுக்குத் தெரியவில்லை எனக் கூறுகிறது இலக்கு ஆசிரியர் குழு. எமது ஆவணத்தைப் படித்து அது எந்த வகை சோசலிசம் என அவர்களால் முடிவு செய்ய முடியவில்லை என்றால் அவர்களுடைய மார்க்சிய அறிவையும் புரிதலையும் சந்தேகிக்கப்பட வேண்டியுள்ளது. 

11. நாம் வைத்துள்ள நிலைப்பாடுகள் மீது கேள்விகளை வைக்கும் இலக்கு அவற்றை பருண்மையான ஆதாரங்களுடன் மறுக்க வேண்டும். அதற்குப் பதிலாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது எனக் கூறி நழுவிச் செல்கிறது. அவர்கள் ஆய்வு செய்து புரட்சியின் கட்டத்தின் மீதான தங்கள் அரசியல் நிலைப்பாட்டை விரைவில் முன் வைக்க வேண்டும்.

 

சோசலிசத் தொழிலாளர் இயக்கம்


Comments

Popular posts from this blog

விஜய்யின் சினிமாவும் சினிமா அரசியலும்!

  கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடந்த விஜயின் அரசியல் பொதுக்கூட்டம் 10 இளம் குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 உயிர்களைப் பலி கொண்டு பெரும் துயரத்திற்குக் காரணமாகியுள்ளது. ஓர் அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்தது தமிழ்நாட்டின் கடந்த எழுபத்தைந்து ஆண்டு வரலாற்றில் இல்லை என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி மனதில் ஆழ்ந்த துயரத்தை உண்டாக்கும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் இதற்குக் காரணமாக அமைந்துள்ள அரசியல், கலாச்சாரக் கூறுகள் நமது மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன.   சினிமாவும் சினிமா அரசியலும்   எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் தனி ஒருவராக விஜய் அவர்களைப் பந்தாடுவார். கார்களிலும் விமானங்களிலும் பறந்து எதிரிகளைச் சாடுவார். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் அவரைத் தொடக்கூட செய்யாது. அரசியல்வாதிகளின் ஊழலை எதிர்த்துப் போராடுவார். ரவடிகளைத் துவம்சம் செய்வார். இப்படித்தான் விஜய் நடித்த திரைப்படங்கள் அவரை பெரும் துணிச்சலும் வீரமும் கொண்டவராக, சாகசக்காரராக, நல்லவராக, நேர்மையானவராக, நீதிக்காகப் போராடுபவராக சித்தரித்து உள்ளன. இவ்வாறு பிரம்மாண...

விஜய்யின் வருகை – மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

  1967 தேர்தலுக்குப் பிறகு திமுக, அதிமுக என்ற இரண்டு திராவிடக் கட்சிகளே கடந்த சுமார் அறுபதாண்டுகளாக மாறி மாறி தமிழ் நாட்டை ஆண்டு வந்த நிலையில், அண்மையில் நடந்து முடிந்த பதினேழாவது சட்டமன்றத் தேர்தலில், அந்த இரண்டு கட்சிகளும் அமைத்திருந்த கூட்டணிகளை தனி ஒரு கட்சியாக எதிர்த்து நின்று அவற்றை வீழ்த்தியுள்ளது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். தனிக் கட்சியாக ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை இடங்களைப் பெறாவிட்டாலும், 107 இடங்களைப் பெற்று அதிக இடங்களைப் பெற்ற கட்சியாக இருக்கின்றது. பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் திமுக கூட்டணியே ஆட்சிக்கு வரும் என்று கணித்திருந்த நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி எதிர்பாராத ஒன்றாகவும் பெரும் வியப்பை அளிக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது. விஜய்யின் தவெக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்திருப்பார்கள் என்றும் சொல்வதற்கில்லை. ஏனென்றால் திமுக தனது ஆட்சிக் காலத்தில் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண், தவப் புதல்வன் போன்ற திட்டங்களின் மூலம் மாதம்தோறும் பெண்களுக்கும், மாணவர்களுக்கும் நிதி வழங்கி வருகிறது. மீண்டும் ஆட்சிக்...

தொழிலாளர் சட்டத் திருத்தங்களும் தொழிலாளர் வர்க்கமும்!

  இன்போசிஸ் நாராயணமூர்த்தி 19-11-2025 அன்று தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் இந்தியத் தொழிலாளர்கள் வாரத்திற்கு 72 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியதோடு, மோடி அவர்கள் வாரத்திற்கு 100 மணி நேரம் வேலை செய்வதாகவும் கூறினார். இதற்காக 9 -9 – 6 என்ற திட்டத்தை அவர் முன்மொழிந்துள்ளார், சீனாவில் சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தை மனமுவந்து பாராட்டியதோடு இந்தியாவில் சட்டப்படியாக இதனை அமல்படுத்த வேண்டும் என்றார். அதன்படி தொழிலாளர்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் வீதம், வாரத்திற்கு 6 நாள் என 72 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற திட்டத்தை அவர் முன்மொழிந்துள்ளார். 2021இல் சீன அரசு 12 மணி நேர வேலையை சட்டவிரோதம் என அறிவித்தது. வேலை நேர அதிகரிப்பால் தொழிலாளர்களின் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாகவும், பணிச்சுமை காரணமாக தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளதாகவும் சீன அரசு தெரிவித்தது. ஆனால், சீனாவில் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து படிப்பினைகளை எடுத்துக் கொள்ளாத இன்போசிஸ் நாராயண மூர்த்தி வேலை நேரத்தை ...