Skip to main content

E20 பெட்ரோல் -- முதலாளிகளுக்கு இலாபம், விவசாயிகளுக்கு நாமம், மக்களுக்கு உணவுப் பற்றாக்குறை

 

பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனால் கலப்புச் செய்து E20 பெட்ரோலாக விற்பதன் மூலம் நாம் இப்பொழுது எரிபொருளுக்காக அந்நிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதற்காகச் செலவிடப்படும் அந்நியச் செலாவணி குறையும் என்றும், எத்தனால் தயாரிப்பதற்காக கரும்பு, மக்காச் சோளம் ஆகியவற்றை விவசாயிகளிடமிருந்து வாங்குவதால் விவசாயிகள் அதிக இலாபம் பெறுவார்கள் என்றும், மேலும் E20 பெட்ரோலைப் பயன்படுத்துவதால் பசுமைக் குடில் வாயுக்கள் வெளியிடப்படுவது குறையும் என்பதால் சுற்றுச் சூழல் பாதுகாக்கப்படும் என்றும் ஒன்றிய அரசாங்கம் கூறி வருகிறது.

அரசாங்கம் அறிவித்துள்ள இலாபம் உண்மையில் விவசாயிகளுக்குக் கிடைக்குமா? இதனால் அதிகம் பயனடைபவர்கள் யார்? இதன் பின் விளைவாக மக்களின் உணவுப் பாதுகாப்பு எவ்வாறு பாதிக்கப்படும்? என்பது பற்றிப் பார்ப்போம்.

மக்காச் சோளத்தின் நிலப் பரப்பு அதிகரிப்பு

பெட்ரோலுக்கான எத்தனால் தயாரிப்பதற்கு முதலில் கரும்பு பயன்படுத்தப்பட்ட போதிலும் இப்போது மக்காச்சோளமே மிகப்பெரிய முக்கியமான ஆதாரமாக உள்ளது. இந்த அரிசி இந்திய உணவுக் கழகத்திலிருந்து பெறப்படுகிறது. 2022 --23 முதல் 2025-- 26 வரையிலான காலகட்டத்தில் மக்காச்சோளம் பயிரிடப்படும் நிலப் பரப்பு ஏறக்குறைய 10.74 மில்லியன் ஹெக்டர் அளவிலிருந்து 14.41 மில்லியன் ஹெக்டேர்களாக (3.67 மில்லியன் ஹெக்டேர் நிலம்) அதிகமானது. இந்த அதிகப்படியான நிலம் அரிசி, சிறுதானியங்கள், எண்ணெய் வித்துகள், பருப்புகள், கேழ்வரகு, சோயா பீன்ஸ் ஆகியவை விளையும் நிலத்தை மக்காச்சோளத்திற்காக மாற்றியதால் கிடைத்தது. மத்திய பிரதேசம் மற்றும் மத்திய இந்தியாவில் சோயா பீன்ஸ்க்கு பதிலாக மக்காச்சோளம் விளைவிக்கப்படுகிறது; கர்நாடகாவில் கேழ்வரகு, சோளம், நிலக்கடலை மற்றும் சிறுதானியங்கள் விளையும் நிலம் மக்காச்சோள நிலமாக மாற்றப்பட்டுள்ளது; சட்டீஸ்கர் மாநிலத்தில் சிறுதானியங்கள், கொள்ளு, மற்றும் உள்ளூர் பருப்பு வகைகளை ஒழித்து விட்டு மக்காச்சோளம் விளைவிக்கப் படுகிறது. பஞ்சாபில் அரிசி விளையும் நிலம் மக்காச்சோளத்திற்காக மாற்றப்படுகின்றது.

சமையல் எண்ணெய் மற்றும் பருப்பு இறக்குமதி

நிதி ஆயோக் அமைப்பின் பிப்ரவரி 2024, அறிக்கையின்படி 2047 -- 48 ஆம் வருடங்களில் 49 -- 57 மில்லியன் டன்கள் பருப்புகள் தேவைப்படும்; ஆனால் இந்தியா வெறும் 47 மில்லியன் டன்களை மட்டுமே விளைவிக்கும்; அப்போது 31-- 33 மில்லியன் டன்கள் சமையல் எண்ணெய் தேவைப்பட்டாலும் இந்தியா வெறும் 24 மில்லியன் டன்கள் மட்டுமே விளைவிக்கும். இப்போதே இந்தியா அதன் தேவையில் 60% சமையல் எண்ணெயை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது.

இதில் வேடிக்கை என்னவென்றால் ஆறு மாதங்கள் கழித்து அதே நிதி ஆயோக் வெளியிட்ட மற்றொரு அறிக்கை, எண்ணெய் விளைவிக்கும் நிலத்தின் அளவு குறைந்ததே எண்ணை வித்துக்களின் உற்பத்தியில் ஏற்பட்ட சரிவுக்கு முக்கியமான காரணம் என்று அறிவித்தது. மேலும் மக்காச்சோளம் விளைவித்த நிலத்தை மீட்டெடுத்து எண்ணெய் வித்துகளை விளைவிக்க வேண்டும்.; ஏற்கனவே எண்ணெய் வித்துக்கள் விளைவித்த ஒன்பது மாநிலங்களில் இதை நடைமுறைப்படுத்தினால் 7.36 மில்லியன் டன் அதிகமாக எண்ணெய் வித்துக்கள் கிடைக்கும்; இதனால் 2.1 மில்லியன் டன் இறக்குமதியை குறைக்கும் என்று அறிவித்தது.

அதே சமயத்தில் 2047--48--இல் எரிபொருள் உற்பத்தி தேவைக்கான
மக்காசோளத்தின் தேவை 86 --109 மில்லியன் டன்கள் அதிகரிக்கும் என்றும் அறிவித்தது- அதனால் ஏராளமான நிலம் மக்காச்சோளத்தை விளைவிப்பதற்காக ஒதுக்கப்பட வேண்டும் என்றும் அறிவித்தது; அதே அமைப்பின் ஒன்றுக்கு ஒன்று முரணான இந்த இரண்டு அறிக்கைகளும் எப்படி நடைமுறைப்படுத்தப்படப் போகின்றன என்பதைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை.

தேசிய வேளாண் அறிவியல் அகாடமி (NAAS) 2024 நவம்பரில், கிழக்கு இந்தியாவில் பத்து லட்சம் ஹெக்டர் அரிசி விளைவிக்கும் நிலத்தை மக்காச்சோளம் விளைவிப்பதற்காக மாற்ற முன்மொழிந்தது; இதே நிலம்தான் எண்ணெய் வித்துக்களை உற்பத்தி செய்வதற்காக தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தது. இதில் வேதனையானது என்னவென்றால் இவை விவசாய அமைச்சகத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும் முடிவுகள் இதற்கு முற்றிலும் சம்பந்தம் இல்லாத பெட்ரோலியம் மற்றும் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகங்களால் தீர்மானிக்கப் பட்டன; மத்திய அரசாங்கம் எத்தனால் உற்பத்திக்கான மக்காச்சோளத்தை விலைக்கு வாங்கிக் கொள்கிறது . ஆனால் பருப்புகள் மற்றும் சமையல் எண்ணெய்கள் ஆகியவற்றின் உற்பத்திக்கு குறிப்பிடத்தக்க அளவில் திட்டங்கள் இல்லை.

2025--26 பொருளாதார ஆய்வு அறிக்கை, இந்தியா எரிபொருள் உற்பத்தியில் தற்சார்பு உடையதாக இருப்பதா அல்லது உணவு தானியங்கள் உற்பத்தியில் தற்சார்புடன் இருப்பதா என்னும் இந்த முரண்பாட்டை வேறு வழியில்லாமல் ஒப்புக்கொள்கிறது, ஏனென்றால் இப்போதே 2021 --இல் 3.1 மில்லியன் டன்னாக இருந்த பருப்பு இறக்குமதி 2025 இல் இரண்டு மடங்குக்கும் அதிகமாக 7.74 மில்லியன் டன்களாக அதிகரித்துள்ளது

முதலாளிகளுக்கு குறைந்த விலையில் அரிசி தரை வார்ப்பு

மேலும் 2047--48--இல் இந்தியா 154 மில்லியன் டன் அரிசியை விளைவிக்கும்; அதில் 113--124 மில்லியன் டன் அரிசியே மக்களுக்கு தேவைப்படும்; எனவே இதிலிருந்து ஒரு பகுதியை எரிபொருளுக்காகக் கொடுப்பதால் மக்களுக்கு எந்தப் பிரச்சனையும் ஏற்படாது என்று நிதி ஆயோக் கமிட்டி கூறுகிறது. ஆனால் நடப்பது என்ன? அதாவது 2026 ஜூலை, மாநிலங்கள் அவையில் எழுத்து மூலமாக அரசாங்கம் தரும் தகவல்படி இந்திய உணவுக் கழகம் 6.35 மில்லியன் டன் அரிசியை எத்தனால் உற்பத்தியாளர்களுக்கு ஜூன் 25ல் இருந்து ஜூன் 26 வரை கொடுத்துள்ளது; அதற்காக 14,597 கோடி ரூபாய்களைப் பெற்றது.; எத்தனால் உற்பத்தியாளர்களுக்கு அக்டோபர் 2025 வரை அரிசி ஒரு குவின்டாலுக்கு ரூபாய் 2250--க்கு விற்கப்பட்டது; பிறகு ஒரு குவின்டால் அரசி 2320 ரூபாய்க்கு விற்கப்பட்டது; அதே சமயத்தில் இந்திய உணவுக் கழகம் 2024-- 25ல் சராசரியாக ஒரு குவின்டால் அரிசியை ரூபாய் 3719.72--ம், 2025-- 26 இல் ரூபாய் 3889.46ம் கொடுத்து வாங்கி, எத்தனால் உற்பத்தியாளர்களுக்குக் குறைவான விலையில் கொடுத்தது; சுருக்கமாகச் சொன்னால் ரூபாய் 24,700 கோடிகள் கொடுத்து வாங்கிய அரிசியை எத்தனால் உற்பத்தியாளர்களுக்கு 14,597 கோடிகளுக்கு, அதாவது ஒரு வருடத்தில் ஏறக்குறைய 10 ஆயிரம் கோடி குறைவாக, நஷ்டத்திற்கு, அரசாங்கத்தின் அறிவுறுத்தல்படி கொடுத்துள்ளது. மக்களுக்காக மக்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அமைப்பு மக்களின் சேமிப்பைக் குறைந்த விலையில் தனியாருக்கு தாரை வார்க்கிறது.

விவசாயிகளுக்கு நாமம், மக்களுக்கு விலையேற்றம்

பஜாஜ் ஹிந்துஸ்தான் சுகர், பல்ராம்பூர் சினி மில்ஸ் லிமிடெட், திரிவேணி இன்ஜினியரிங் & இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், ஸ்ரீ ரேணுகா சுகர்ஸ் லிமிடெட், டால்மியா பாரத் சுகர் & இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், EID பாரி (இந்தியா) லிமிடெட், பண்ணாரி அம்மன் சுகர்ஸ் லிமிடெட், ப்ராஜ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட். ஆகிய நிறுவனங்களுக்கு E20 எரிபொருள் உற்பத்திக்காக ஒன்றிய அரசாங்கம் கடன் வழங்கியுள்ளது. கொடுக்கப்பட்ட கடன்களுக்கு ரூபாய் 4687/- கோடி வரிவிலக்கு அளித்துள்ளது.

இந்தத் தனியார் உற்பத்தியாளர்களிடம் மக்காச்சோளத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட எத்தனாலை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அரசாங்கம் நிர்ணயத்தபடி லிட்டருக்கு ரூபாய் 71.86 ரூபாய் கொடுத்து வாங்குகின்றன; அரசாங்கம் இவர்களிடம் நீண்ட காலத்திற்கு இந்த விலையில் குறிப்பிட்ட அளவு எத்தனாலை வாங்க உறுதியான ஒப்பந்தம் செய்துள்ளது. அதோடு இவர்களுக்கு வங்கிகளில் இருந்து கடன் கிடைப்பதை உறுதி செய்துள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக 2018 - இல் இருந்து மத்திய அரசாங்கம் இவர்கள் கட்ட வேண்டிய வட்டியில் பெருத்த தள்ளுபடி செய்துள்ளது. ஆனால் மக்காச்சோளம் உற்பத்தி செய்யும் விவசாயிக்கு அரசாங்கம் குறைந்தபட்ச விலை என்று அறிவித்த விலையைக் கூட உறுதி செய்யப்படாமல், நடைமுறைப்படுத்தப்படாமல் மிகக் குறைவாகவே அவர்களுக்கு கொடுக்கிறது. ஆக, விவசாயிக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. ஆனால் அவரிடம் இருந்து வாங்கி, எத்தனால் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனங்களுக்கு, அவர்கள் உற்பத்தி செய்யும் எத்தனாலுக்கு நிலையான விலை உறுதி செய்து முதலாளிகளின் நலனைக் காக்கிறது இந்திய ஆளும் அரசாங்கம்.

மேலும், தேசிய வேளாண் அறிவியல் அகாடமி, 2024 நவம்பர் அறிக்கையின்படி அரிசி கொள்முதல் செய்வதற்கு உறுதியும் ஆதரவான விலையும் கொடுக்கப்பட்டிருப்பது போல மக்காச்சோளத்திற்கு கொடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளது. அது மக்காச்சோளம் விளைவிக்க விவசாயிகள் மாறுவதற்கு முன்பே அரசாங்கம் 'ஒரு சரியான தகுதி வாய்ந்த உறுதிப்படுத்தப்பட்ட வருமானம் தரக்கூடிய சந்தை அமைப்பை உருவாக்க வேண்டும்' என்று வலியுறுத்துகிறது. ஆனால் இது இன்று வரை எப்பொழுதுமே நடைமுறைப் படுத்தப்படவில்லை.

மார்ச் 2025 இல் இருந்து ஆகஸ்ட் 2026 வரை ரூபாய் 1.66 லட்சம் கோடிகள் மக்காச்சோள விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்டதாக அரசாங்கம் கூறுகிறது; ஆனால் வெளிச் சந்தை விலையை விட மிகக்குறைவாகவே அரசாங்கம் நிர்ணயத்துள்ள விலை உள்ளது. நவம்பர் 2025 இல் அரசாங்கத்தால் உறுதி செய்யப்பட்ட விலை குவிண்டாலுக்கு ரூபாய் 2400/- என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் விவசாயிகளுக்கு குவின்டாலுக்கு ரூபாய் 1634/- தான் கிடைத்தது;  

மேலும் மக்காச்சோளம் கோழி, வாத்து, வான்கோழி ஆகியவற்றுக்கும், மாடுகள், பன்றி, ஆடுகள் ஆகியவற்றுக்கும் தீவனமாக பயன்படுத்தப்படுகிறது; எனவே எரிபொருளுக்காக மடைமாற்றப்படும் மக்காச்சோளத்தின் பற்றாக்குறை, தீவனங்களின் விலையை மிகவும் அதிகரித்து இவற்றை வளர்ப்பவர்களை மிகுந்த சிக்கலில், வேதனையில் தள்ளியது; பின்விளைவாக இறைச்சி, முட்டை, பால் ஆகியவற்றின் விலையேற்றம் மக்களைப் பெரிதாக பாதிக்கிறது. இதை ஈடுகட்ட மக்காச்சோளம் இறக்குமதி மிகவும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அந்நிய செலாவணி சேமிப்பு என்பது மக்களை ஏமாற்றும் செயலல்லவா

2018--19--இல் எத்தனால் உற்பத்திக்காக 3 மில்லியன் மெட்ரிக் டன் சர்க்கரை, எத்தனால் உற்பத்திக்கு மடைமாற்றம் செய்யப்பட்டது; இது மொத்த சர்க்கரை உற்பத்தியில் 10% ஆகும். இது நாட்டின் சர்க்கரை சேமிப்பை குறைத்து நம் மக்களுக்கு விலையை அதிகரித்தது.

சர்க்கரை ஆலைகள் எத்தனால் உற்பத்தியின் மூலம் பெரும் இலாபம் சம்பாதித்து வருகின்றன. ஆனால் அவை விவசாயிகளுக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய தொகையைக் கூட கொடுக்காமல் தாமதிக்கின்றன. வருடக்கணக்காகக் கூட அவர்களுக்குப் பணத்தை வழங்குவதில்லை. அரசாங்கமும் அரசாங்கத்தின் வழிகாட்டுதல்படி விவசாயிகளுக்கு வங்கிகள் கடன் கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாகக் கூறினாலும் ஏராளமான கரும்பு விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆனால் எத்தனால் உற்பத்தியாளர்களுக்கு வியாபாரத்தை உறுதி செய்ததோடு சிறிதும் தாமதம் இன்றி நிச்சயமாக பணம் கிடைப்பதையும் ஆளும் இந்திய அரசாங்கம் மிக வலிமையாக உறுதி செய்துள்ளது.

பாதிப்புக்கு உள்ளாகும் நுகர்வோர்

விவசாயிகளுக்கு மட்டும் அல்லாமல் E20 பெட்ரோல் பயன்பாட்டால் நுகர்வோருக்கும் எந்தவிதமான பயனுமில்லை. பெட்ரோல் விலையில் எந்தவிதமான குறைப்பையும் எண்ணெய் விநியோக நிறுவனங்கள் செய்யப்போவதில்லை.

மேலும், E 20 எரிபொருளை பயன்படுத்தும் வாகனங்களின் செயல்திறன் அதாவது ஒரு லிட்டர் எரிபொருளில் அந்த வாகனம் பயணிக்கும் தூரம் குறைகிறது; எரிபொருள் என்ஜினின் விரைவில் அரிக்கப்பட்டு பழுதடைகிறது. இதனால் வாகன பராமரிப்புச் செலவு அதிகரிக்கிறது; இது நடுத்தர மக்கள், சிறிய டெம்போ லாரிகள், ஆட்டோக்கள் ஆகியவற்றைக் கொண்டு பொருட்களை விநியோகம் செய்பவர்கள் மற்றும் சிறு வியாபாரிகளுக்கு பொருளாதார ரீதியாக மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.

எனவே ஆட்சியாளர்கள் தம்பட்டம் அடித்துக் கொள்வது போல விவசாயிகளுக்கு எந்தவிதமான இலாபமும் கிடைப்பதில்லை. நுகர்வோருக்கு நன்மையை விடத் தீமைகள்தான் கிடைக்கப் போகின்றன. மேலும் எத்தனால் உற்பத்திக்காக மக்காச் சோளம், கரும்பு ஆகியவற்றின் உற்பத்திக்காக சாகுபடி நிலம் மடைமாற்றம் செய்யப்படுவதாலும் மக்களுக்குத் தேவையான உணவுப் பயிர்கள், பருப்பு, எண்ணெய் வித்துகள் ஆகியவற்றின் உற்பத்தி பாதிக்கப்பட்டு எதிர்காலத்தில் மிகப் பெரும் அளவு உணவுப் பற்றாக் குறை ஏற்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் அரிசியை எத்தனால் எடுக்கப் பயன்படுத்துவதனாலும் மக்களின் உணவுப் பாதுகாப்பு பெரும் அளவு கேள்விக்குறியாகி உள்ளது. எதிர்காலத்தில் இந்தியா உணவுக்காக அயல் நாடுகளிடம் கை ஏந்தி வாழ நேரிடும். முதலாளிகள் தங்களுடைய இலாபத்திற்காக மக்களைப் பட்டினியில் தள்ளிக் கொண்டிருக்கின்றனர்.

-    கவிதா

Comments

Popular posts from this blog

விஜய்யின் சினிமாவும் சினிமா அரசியலும்!

  கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடந்த விஜயின் அரசியல் பொதுக்கூட்டம் 10 இளம் குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 உயிர்களைப் பலி கொண்டு பெரும் துயரத்திற்குக் காரணமாகியுள்ளது. ஓர் அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்தது தமிழ்நாட்டின் கடந்த எழுபத்தைந்து ஆண்டு வரலாற்றில் இல்லை என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி மனதில் ஆழ்ந்த துயரத்தை உண்டாக்கும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் இதற்குக் காரணமாக அமைந்துள்ள அரசியல், கலாச்சாரக் கூறுகள் நமது மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன.   சினிமாவும் சினிமா அரசியலும்   எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் தனி ஒருவராக விஜய் அவர்களைப் பந்தாடுவார். கார்களிலும் விமானங்களிலும் பறந்து எதிரிகளைச் சாடுவார். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் அவரைத் தொடக்கூட செய்யாது. அரசியல்வாதிகளின் ஊழலை எதிர்த்துப் போராடுவார். ரவடிகளைத் துவம்சம் செய்வார். இப்படித்தான் விஜய் நடித்த திரைப்படங்கள் அவரை பெரும் துணிச்சலும் வீரமும் கொண்டவராக, சாகசக்காரராக, நல்லவராக, நேர்மையானவராக, நீதிக்காகப் போராடுபவராக சித்தரித்து உள்ளன. இவ்வாறு பிரம்மாண...

விஜய்யின் வருகை – மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

  1967 தேர்தலுக்குப் பிறகு திமுக, அதிமுக என்ற இரண்டு திராவிடக் கட்சிகளே கடந்த சுமார் அறுபதாண்டுகளாக மாறி மாறி தமிழ் நாட்டை ஆண்டு வந்த நிலையில், அண்மையில் நடந்து முடிந்த பதினேழாவது சட்டமன்றத் தேர்தலில், அந்த இரண்டு கட்சிகளும் அமைத்திருந்த கூட்டணிகளை தனி ஒரு கட்சியாக எதிர்த்து நின்று அவற்றை வீழ்த்தியுள்ளது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். தனிக் கட்சியாக ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை இடங்களைப் பெறாவிட்டாலும், 107 இடங்களைப் பெற்று அதிக இடங்களைப் பெற்ற கட்சியாக இருக்கின்றது. பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் திமுக கூட்டணியே ஆட்சிக்கு வரும் என்று கணித்திருந்த நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி எதிர்பாராத ஒன்றாகவும் பெரும் வியப்பை அளிக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது. விஜய்யின் தவெக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்திருப்பார்கள் என்றும் சொல்வதற்கில்லை. ஏனென்றால் திமுக தனது ஆட்சிக் காலத்தில் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண், தவப் புதல்வன் போன்ற திட்டங்களின் மூலம் மாதம்தோறும் பெண்களுக்கும், மாணவர்களுக்கும் நிதி வழங்கி வருகிறது. மீண்டும் ஆட்சிக்...

தொழிலாளர் சட்டத் திருத்தங்களும் தொழிலாளர் வர்க்கமும்!

  இன்போசிஸ் நாராயணமூர்த்தி 19-11-2025 அன்று தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் இந்தியத் தொழிலாளர்கள் வாரத்திற்கு 72 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியதோடு, மோடி அவர்கள் வாரத்திற்கு 100 மணி நேரம் வேலை செய்வதாகவும் கூறினார். இதற்காக 9 -9 – 6 என்ற திட்டத்தை அவர் முன்மொழிந்துள்ளார், சீனாவில் சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தை மனமுவந்து பாராட்டியதோடு இந்தியாவில் சட்டப்படியாக இதனை அமல்படுத்த வேண்டும் என்றார். அதன்படி தொழிலாளர்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் வீதம், வாரத்திற்கு 6 நாள் என 72 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற திட்டத்தை அவர் முன்மொழிந்துள்ளார். 2021இல் சீன அரசு 12 மணி நேர வேலையை சட்டவிரோதம் என அறிவித்தது. வேலை நேர அதிகரிப்பால் தொழிலாளர்களின் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாகவும், பணிச்சுமை காரணமாக தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளதாகவும் சீன அரசு தெரிவித்தது. ஆனால், சீனாவில் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து படிப்பினைகளை எடுத்துக் கொள்ளாத இன்போசிஸ் நாராயண மூர்த்தி வேலை நேரத்தை ...