Skip to main content

அரசு என்றால் என்ன? அதன் பாத்திரம் என்ன?

 

அரசு இருக்கும் வரை சுதந்திரம் இருக்காது; சுதந்திரம் இருக்கும் போது அரசு இருக்காது -லெனின்

நாம் வர்க்கப் போராட்டத்தில் ஈடுபடும்போது, அமைப்பை எதிர்த்துப் போராடும் போது, முதலாளித்துவ அமைப்பை அச்சுறுத்தும் போது, நாம் அரசு அதிகாரத்தை எதிர்கொள்கிறோம். காவல்துறைதான் நமது ஆர்ப்பாட்டங்களை நெருக்கமாகக் கவனித்துக்கொள்கிறது. நாம் அவர்களுக்கு ஏற்ற வகையில் நடக்காவிட்டால் அல்லது போர்க்குணத்துடன் இருந்தால் நம்மைக் கைது செய்கிறது. நீதிமன்றங்கள் காலநிலை மாற்றம் தொடர்பான செயல்வீரர்களை சிறைக்கு அனுப்பி வைக்கின்றன. எளிய இளைஞர்கள் போதைப் பொருள் வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறைகளில் அடைத்து வைக்கப்படுகின்றனர். இந்தச் சட்டங்களை நிர்வகிக்கும் அரசாங்க அதிகார வர்க்கங்களால் அடிமைப்படுத்தப்படுகிறோம்

அரசின் இயல்பையும் தோற்றங்களையும் புரிந்து கொள்வதுதான் முக்கியமானது. முதலாளித்துவத்தின் கீழ் நமது வாழ்க்கை வர்க்கம் மற்றும் வர்க்க வேறுபாடுகளால் வடிவமைக்கப்படுகிறது. “நிலவும் சமுதாயத்தின் இது வரையிலான வரலாறு வர்க்கப் போராட்டங்களின் வரலாறே” என்பது மார்க்ஸ் மற்றும் எங்கல்ஸ் ஆகியோரின் கம்யூனிஸ்டு அறிக்கையில் உள்ள புகழ்பெற்ற வரிகளாகும். இதில் சுரண்டப்படும் வர்க்கங்களின் எதிர்ப்புப் போரட்டங்களும் அடங்கும். ரோமப் பேரரசில் அடிமைகளின் கலகங்களும், மத்தியகால பிரிட்டனின் விவசாயிகளின் எழுச்சிகளும், அல்லது இன்றைய தொழிலாளர் வர்க்கத்தின் மறியல் போராட்டங்களும் இவ்வகையில் அடங்கும். இருப்பினும், சுரண்டப்படும் வர்க்கங்களைக் கீழ்ப்படிய வைப்பதற்கான ஆளும் வர்க்கங்களின் போராட்டம் வர்க்க சமுதாயங்களில் எப்போதும் இருந்து வந்துள்ளன. அவர்கள் இதைச் செய்வதற்கு வரலாற்றில் பல்வேறு கருவிகளைப் பயன்படுத்தியுள்ளார்கள். இன்று அவர்கள் மக்களைப் பிரித்தாளுவதற்கு ஊடங்களின் வழியே பிரசாரத்தைச் சார்ந்திருக்க முடிகிறது. ஆனால் தொழிலாளர் வர்க்கத்தை அதன் இடத்திலேயே வைத்திருப்பதற்கு ஆளும் வர்க்கம் அச்சுறுத்தலையும் வன்முறையையும் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது,

இந்த வர்க்கப் பகைமைகளின் உற்பத்திப் பொருளே அரசு ஆகும். அரசு “ஆயுதம் தாங்கிய மனிதர்களின் சிறப்பு அமைப்புக்களால்” ஆனது என்று எங்கல்ஸ் கூறியுள்ளார். சிறைகள், காவல்துறை, படை மற்றும் நீதிமன்றங்கள் போன்ற அதன் தேர்ந்தெடுக்கப்படாத அதிகார வர்க்க அமைப்புக்கள் ஆகியவை அரசின் ஆயுதங்கள் ஆகும். அரசு “சட்டபூர்வ வன்முறையின்” ஏகபோகத்தை வைத்திருக்கிறது. காவல்துறை, குற்றம், தண்டனை அளித்தல், மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் ஆகியவை இந்த ஏகபோகத்தைப் பலப்படுத்துவதற்கும் ஆர்ப்பாட்டங்களின் தாக்கத்தையும் அளவையும் குறைப்பதற்கும் மேற்கொள்ளும் முயற்சிக்கு எடுத்துக்காட்டாகும். இதற்காக பல சட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

பிரிட்டன் மற்றும் அமெரிக்கா போன்ற தாராளவாத ஜனநாயக நாடுகளில் கூட தேவைப்படும் போது அரசு வன்முறையைப் பயன்படுத்துகிறது. உலகெங்கும் ஆளும் வர்க்கங்கள் தங்கள் ஏகாதிபத்திய நலன்களை அதிகரித்துக் கொள்வதற்கு அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றன.

அரசு எப்பொழுதும் இருந்து வந்துள்ளதா?

அரசு எப்பொழுதும் இருந்து வந்துள்ளது என்று கூறுவது தருக்கரீதியாகச் சரியானது என்று பலருக்குத் தோன்றுகிறது. மனித வரலாறு முழுவதிலும் மக்கள் தாங்களாகவே புராதன குடும்ப அல்லது குல வடிவில் அமைப்பாக இருந்து வந்துள்ளனர். இது அரசு அல்லவா? “இதுவரை இருந்துவரும் சமுதாயம் அனைத்தின் வரலாறும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே” என்று மார்க்சும் எங்கல்சும் கம்யூனிஸ்டு அறிக்கையில் கூறியுள்ளனர். ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தின் மீது மேலாதிக்கம் செலுத்துவதற்கு எப்போதும் ஓர் அரசு இருந்துள்ளது என்று இதற்குப் பொருளாகாதா?

“நிலவிவரும் சமுதாயம்” என்று கூறுவதன் மூலம் அவர்கள் வர்க்க சமுதாயம் பற்றிப் பேசுகிறார்கள். வர்க்கங்கள் தோன்றுவதற்கு முன்பும் சமுதாயங்கள் இருந்துள்ளன. இதை மார்க்ஸ் “புராதன கம்யூனிசம்” என்று குறிப்பிடுகிறார். எப்படியானாலும் அவற்றை வர்க்கத்திற்கு முந்தைய சமுதாயம் என்று குறிப்பிடுவது எளிதாக இருக்கும். இந்தச் சமுதாயங்களை நாம் இலட்சிய சமுதாயங்களாகக் கருதக் கூடாது. ஆனால் அவை வர்க்கங்கள் இல்லாத, சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறை இல்லாத, மிகவும் சமுத்துவமான சமுதாயங்கள் சாத்தியம் என்பதை நமக்குக் காட்டுகின்றன. பெண்கள் மீதான ஒடுக்குமுறை, பாலியல் மற்றும் பாலின ஒடுக்குமுறை அங்கு இருந்ததாக எந்த மானிடவியல் சான்றுகளும் இல்லை.

அடிப்படையில், அங்கு வர்க்கங்கள் இல்லாததால் ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தின் மீது ஒடுக்குமுறையில் ஈடுபடும் வாய்ப்பே இல்லை. ஆட்சி செய்வதையே நோக்கமாகக் கொண்டு பிறரை ஆளுகின்ற ஒரு கூட்டம் அங்கு எந்தக் கட்டத்திலும் இல்லை. ஒரு வர்க்கத்தை நசுக்க வேண்டிய தேவை அங்கு இருக்கவில்லை, எனவே அரசு அங்கு இருக்கவில்லை. தாழ்ந்த வர்க்கம் என்று ஒன்றும் இல்லை என்பதால் தாழ்ந்த வர்க்கங்களை ஒடுக்குவதற்கான சிறைகள், காவல்துறை அல்லது பிற அடக்குமுறைக் கருவிகள் போன்ற எதுவும் அங்கு இல்லை.

வர்க்கப் பிரிவினைகள் தோன்றத் தொடங்கிய பிறகே, கட்டுப்பாட்டுக்கும் ஒடுக்குவதற்குமான ஓர் இயந்திரமாக அரசு தோன்றத் தொடங்கியது. அரசின் வளர்ச்சியை ‘குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றங்கள்’ என்ற நூலில் எங்கல்ஸ் விளக்கியுள்ளார். நிலையான விவசாய வளர்ச்சி சமுதாயத்தில் “உபரி” உற்பத்திக்கு எவ்வாறு அனுமதித்தது என்பதை அவர் விவரிக்கிறார். புதிய உற்பத்தி முறைகளுக்கு பெரும் திட்டமிடல் தேவைப்பட்டது. அதாவது முதுகெலும்பை முறிக்கும் உழைப்பிலிருந்து சிலர் பிரிக்கப்பட்டனர்.

காலப் போக்கில், உபரியைக் கட்டுப்படுத்தியவர்கள் ஒரு வர்க்கமாக அமைந்தனர். சமுதாயத்தின் ஒரு சிறிய பிரிவு பிறரது உழைப்பில் வாழ முடிந்தது, மேலும் அவர்களுக்கு “ஆயுதம் தாங்கிய மனிதர்கள் அடங்கிய ஒரு தனி அமைப்பு தேவைப்பட்டது”, அல்லது சுருக்கமாகச் சொன்னால் அரசு தேவைப்பட்டது. லெனின் விவரிப்பது போல, அரசு “வர்க்கப் பகைமைகளின் சமரசத்துக்கு இடமற்ற நிலைமையின் உற்பத்திப் பொருள் மற்றும் வெளிப்பாடே ஆகும்.”

வர்க்கங்கள் மாறிவந்ததைப் போலவே காலப் போக்கில் அரசும் அதன் வடிவத்தை மாற்றிக்கொண்டது. கிரேக்க நகர அரசுகள் மற்றும் ரோமானியப் பேரரசு போன்ற அடிமைச் சமுதாயங்களில், அடிப்படைப் பிரிவினை அடிமைகளுக்கும் அடிமை உடமையாளர்களுக்கும் இடையிலானதாக இருந்தது. நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில், முதலில் தங்களுக்கிடையில் சண்டையிட்டுக் கொண்டிருந்த போர்ப் பிரபுகளுக்கு (சிற்றரசர்கள்) இடையிலும் பின்னர் மையப்படுத்தப்பட்ட முடியரசர்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையிலும் இருந்தது. கட்டமைப்பு என்னவாக இருந்தாலும் ஆளும் வர்க்கம் அரசை தங்கள் வர்க்க ஆட்சியை உயர்த்திப்பிடிப்பதற்காக பயன்படுத்தியது.

முதலாளித்துவ அரசு

நிலப்பிரபுத்துவம் வர்க்கச் சுரண்டலை அடிப்படையாகக் கொண்டதும் முன்னெப்போதையும் விட வலிமையான அரசைக் கொண்டதுமான இன்னொரு வர்க்க சமுதாயமான முதலாளித்துவத்துக்கு வழிவிடத் தொடங்கியது. 1789 ஆம் ஆண்டின் பிரெஞ்சுப் புரட்சி -- மார்க்ஸ் அதை “முதலாளித்துவப் புரட்சி” என்று குறிப்பிடுவார் – முந்தைய முற்றதிகார அரசு முதலாளித்துவ வளர்ச்சிக்குத் தடையாக இருந்ததால், முதலாளித்துவப் புரட்சி அதைத் துடைத்தெறிந்தது. அது முதலாளித்துவம் வளர்ச்சியடைந்து ஐரோப்பாவெங்கும் அதிகாரத்தைப் பெறுவதற்கு வழிவகுத்தது.

தொழில் புரட்சியும், பெரும் அளவிலான வர்த்தக விரிவாக்கமும், ஏகாதிபத்திய முன்னெடுப்புகளும் ஒரு புதிய வர்க்கம் உறுதிப்படுவதற்கு உதவியாக இருந்தன. இந்தக் குழுவையே இப்போது நாம் முதலாளிய வர்க்கம் என்று அழைக்கிறோம். ஆனால் மார்க்சும் எங்கல்சும் எழுதியுள்ளதைப் போல முதலாளித்துவம் தனக்கான “சவக்குழியைத் தோண்டுவோரை” உருவாக்கிக் கொண்டிருந்தது. முதலாளிகளின் இலாபத்திற்கு மூலாதாரமாக இருக்கும் தொழிலாளர் வர்க்கம் பெரிய நகர்ப்புற மையங்களில் ஒன்றாகத் திரண்டு அதை எதிர்த்துப் போராடத் தொடங்கியது. முதலாளித்துவத்துக்கு உள்நாட்டிலும் அயல்நாடுகளிலும் தனது ஆட்சியை திடப்படுத்திக் கொள்வதற்கு சக்திவாய்ந்த அரசு தேவைப்பட்டது. எடுத்துக்காட்டாக, பிரிட்டனில் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து, வன்முறையானதும் அதிகாரம் கொண்டதுமான ஒரு புதிய அமைப்பான நிரந்தரக் காவல்துறையின் உருவாக்கத்தை நாம் காண்கிறோம்.

இன்று, முதலாளித்துவத்தின் தடம் பதியாத பகுதிகள் எதுவும் இந்தப் பூமியில் இல்லை. முதலாளித்துவ அரசுகள் தாராளவாத ஜனநாயகம், எதேச்சாதிகாரம் போன்ற பல்வகையான வடிவங்களை எடுத்த போதிலும் அவை யாவும் ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தின் மீதான ஆட்சியை நிறுவுவதற்கானவைதாம்.

பிரிட்டனில், 20 ஆம் நூற்றாண்டிலிருந்து, முதலாளித்துவ அரசு, வயது வந்த அனைவருக்குமான வாக்குரிமை கொண்ட, அதாவது ‘மக்களுக்கான மக்களின் அரசாங்கம்’ என்று தன்னை ஜனநாயகமாக அறிவித்துக் கொண்டிருந்தது. ஆனால் ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை யாரோ ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்காக 15 நிமிடங்கள் செலவழிப்பது மிகவும் வரம்புக்கு உட்படுத்தப்பட்ட ஜனநாயகமே. பாராளுமன்ற ஜனநாயகம் பெரிய பொருளாதார முடிவுகளை எடுப்பதை பெரும் முதலாளிகளின் கரங்களில் விட்டுவிடுவதாகும், தொழிலாளர் வர்க்கத்தின் கரங்களில் அல்ல. பாராளுமன்றம் வாக்காளர்களுக்குப் பொறுப்புடன் இருப்பதில்லை. பாராளுமன்ற உறுப்பினர்களைத் தவிர்த்துவிட்டு, நீதிபதிகள், படைத்தலைவர்கள் தொடங்கி காவல்துறை தலைவர்கள் வரை அரசின் பெரும்பாலான பதவிகளில் உள்ளோர் தேர்ந்தெடுக்கப்படாத மற்றும் சக்திவாய்ந்த பரந்த அதிகார வர்க்கங்களின் பகுதியாக இருக்கின்றனர். ஆட்சிப் பணிகளில் உள்ள பதவிகளுக்கு நாம் வாக்களிப்பதில்லை, அப்பதவிகளில் உள்ளோர் பெரும் முதலாளிகளின் நிறுவங்களுடன் கரம் கோர்த்துக் கொள்கின்றனர்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, அரசு பெருமளவுக்கு சமூகத் தேவைகளுக்கு விரிவடைந்தது. கீழிருந்து தோன்றிய இயக்கங்களும் போரின் பயங்கரங்களும் அரசின் பாத்திரத்தை, மருத்துவப் பராமரிப்பு, மக்கள் நலம், மற்றும் கல்வி ஆகியவற்றுக்கு விரிவாக்கம் செய்தது. 1943 இல் முதலாளித்துவக் கட்சி ஒன்றின் மூத்த உறுப்பினர், “நீங்கள் மக்களுக்கு சமூக சீர்திருத்தத்தைத் தரவில்லை என்றால் அவர்கள் உங்களுக்கு சமூகப் புரட்சியைத் தருவார்கள்..” என்று கூறினார்:

எவ்வாறாயினும், அரசின் இந்தச் செயல்பாடுகள் இன்னும் மூலதனக் குவிப்புக்கு சேவை செய்ய முடியும். அனைவருக்குமான மருத்துவப் பராமரிப்பு என்பதன் பொருள் தொழிலாளர் நல்ல உடல்நலத்துடன் இருந்தால் அவர்களுடைய உற்பத்தித் திறன் மிகுதியாகும் என்பதாகும். நவீன முதலாளித்துவத்துக்குத் தேவையான திறன்மிக்க, கல்வியறிவு பெற்ற தொழிலாளர்களை உத்தரவாதப்படுத்துவதற்கே கல்விமுறை உதவுகிறது. அது நமது ஆட்சியாளர்களுக்கு ஒரு சித்தாந்தப் பாத்திரமாகவும் சேவை செய்கிறது. முதலாளித்துவ சித்தாந்தத்தையும் கதைகளையும் உயர்த்திப் பிடிக்கிறது. இந்தச் சீர்திருத்தங்களால் தொழிலாளர்கள் பயனடைந்த போதும், அவை முதலாளித்துவ அரசின் வர்க்கத் தன்மையை மாற்றுவதில்லை.

சில அரசுகள் இன்னும் தாராளமான ஒரு தோற்றத்தை எடுக்கின்றன. “ஆயுதம் தாங்கிய மனிதர்களின் சிறப்பு அமைப்புக்கள்” ஆயுதம் தாங்கிய ஆண்கள் மற்றும் பெண்களின் சிறப்பு அமைப்புக்களாக ஆயின. நமது அரசுகள் மிகவும் முற்போக்கனவையாகத் தெரியலாம், ஆனால் நாம் அவற்றின் அதிகாரத்தை எதிர்க்கிற போது, அரசின் அமைப்புக்கள் நம் மீது தாக்குதல் தொடுக்கின்றன.

அரசு பற்றி மார்க்சின் பார்வைகளில் ஏற்பட்ட மாற்றம்

சமூக அமைப்பை நிலைநிறுத்துவதற்கு சமுதாயத்துக்கு ஓர் அரசு தேவைப்படுகிறது என்று பலர் வாதிடுகின்றனர். 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளின் தொடக்ககால முதலாளித்துவத் தத்துவவாதிகள் இதை “மனித இயல்பு” என்று கூறினார்கள். கார்ல் மார்க்ஸ் உயிரோடு இருந்த காலத்தில் இது பொதுவான ஒரு வாதமாக இருந்தது, மேலும் அது இன்றும் பிரபலமாக இருக்கிறது.

மார்க்ஸ் 1840 களில் எழுதத் தொடங்கியபோது, “குடிமைச் சமுதாயத்தில்” அரசு மோதல்களுக்கு வெளியே நின்று, குடிமக்களின் பொதுவான நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கண்டார். அவர் தத்துவவாதி ஹெகலின் கருத்துகளின் செல்வாக்குக்கு ஆட்பட்டிருந்தார், மேலும் இளம் ஹெகலியர்கள் என்று அறியப்பட்டிருந்த புரட்சிகர ஆதரவாளர்களில் ஒருவராகவும் இருந்தார். மார்க்ஸ் முழுமையான முடியாட்சிகளின் கீழ் இருந்த நிலப்பிரபுத்துவ ஜெர்மனியில் வாழ்ந்து வந்தார். அவர் பிரெஞ்சுப் புரட்சியின் சாயலில் ஜெர்மனியில் ஒரு ஜனநாயகக் குடியரசை உருவாக்க விரும்பினார்.

ஆனால் சமுதாயத்தைப் பற்றிய மார்க்சின் வர்க்கப் பகுப்பாய்வு ஆழமடைந்த போது அரசு குறித்த அவரது புரிதலில் மாற்றம் ஏற்பட்டது. 1840 களில் தாராளவாத முதலாளிகளுடன் அவர் கூட்டணியில் இருந்து, ஜனநாயக சீர்திருத்தங்களுக்கு அழுத்தம் கொடுத்தார். ஆனால் பழைய நில உரிமையாளர்களும் புதிய தொழிலதிபர்களும் தனிச் சொத்தைப் பாதுகாப்பதில் வர்க்க ஆர்வம் கொண்டிருந்தனர். இதன் பொருள் தொழிலாளர் வர்க்கம் சமுதாயத்தைச் சோசலிச சமூகமாக மாற்றுவதற்கு அரசு இயந்திரத்தைப் பயன்படுத்த முடியாது என்பதாகும்.

1871ல் தொழிலாளர்கள் தமது எழுச்சியின் மூலம் பாரிசில் சிறிது காலம் அதிகாரத்தைக் கைப்பற்றி முதலாவது தொழிலாளர் அரசாங்கத்தை, பாரிஸ் கமயூனை உருவாக்கி இருந்தனர். இந்த எழுச்சி அரசு குறித்த மார்க்சின் கருத்துகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தின. “தொழிலாளர் வர்க்கம் ஏற்கனவே நிலவி வரும் அரசு இயந்திரத்தைக் கைப்பற்றி அதன் சொந்த நோக்கங்களுக்காக அதைப் பயன்படுத்த முடியாது” என்பதைக் கம்யூன் காட்டியதாக அவர் கூறினார். “பிரெஞ்சுப் புரட்சியின் அடுத்த முயற்சி அதற்கு மேலும், முன்பைப் போல அதிகார வர்க்க -- இராணுவ இயந்திரத்தை ஒரு கரத்திலிருந்து இன்னொரு கரத்துக்கு மாற்றுவதாக இருக்காது.” என்று அவர் வாதிட்டார். அது “அரசு இயந்திரத்தை நொறுக்குவதாக இருக்கும்.”

புரட்சிகளில், தொழிலாளர் வர்க்க மக்கள் தங்கள் சொந்த ஜனநாயக அமைப்புக்களை நிறுவினார்கள். அவை மாற்று அரசியல் அதிகாரத்திற்கான அமைப்புக்களாக அமைந்தன. இரசியாவில் புரட்சியின் போக்கில் சோவியத்துக்கள் (தொழிலாளர்கள் பேரவைகள்) நிறுவப்பட்டன. 1970 களில் ஈரான் புரட்சியின் போது அதே போன்ற தொழிலாளர்களின் பேரவைகள் (“shoras”) காணப்பட்டன. அதன் மூலம் தொழிலாளர்கள் தங்கள் வேலையிடங்களை ஜனநாயக அடிப்படையில் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இன்று சூடானிலும் அதே போன்ற அமைப்புக்களை எதிர்ப்புக் குழுக்களிடம் காணத் தொடங்கியிருக்கிறோம்.

இந்தப் பேரவைகள் என்பவை தொழிலாளர்கள் தங்கள் வேலையிடங்களின் கட்டுப்பாட்டைக் கைபற்றுவதில் அல்லது மார்க்ஸ் கூறியுள்ளதைப் போல, “உற்பத்தி சாதனங்களைக் கைப்பற்றுவதில்” முதலாவது நடவடிக்கையாக உள்ளது. சிறந்த சமுதாயத்தைக் உருவாக்குவதில் அவை முதலாவது அடி எடுத்து வைத்தல் ஆகும். மேலும் அவை ஒன்றாக இணைந்தால், இரசியாவில் போல அதிகாரத்தைக் கைப்பற்றினால் அவை தொழிலாளர் அரசின் அடிப்படையாக இருக்க முடியும்.

நமக்கு தொழிலாளர் அரசு ஏன் தேவை?

“முதலாளித்துவத்துக்கு அப்பால் அரசின் பாத்திரம் என்ன?” என்று நாம் கேட்க வேண்டும். ஒரு சோசலிசப் புரட்சிக்குப் பின்னர் உடனேயே நாம் வர்க்கமற்ற கம்யூனிச சமுதாயத்துக்குள் வந்து விடுவதில்லை. ஒரு புரட்சி மூலம் முதலாளிகளிடமிருந்து உற்பத்தி சாதனங்களைத் தொழிலாளர்கள் கைப்பற்றிய பிறகு, முதலாளிகளின் சமூக அதிகாரம் அவர்களிடமிருந்து பறிக்கப்படுகிறது. ஆனால் அப்போதும் கூட தோல்வியுற்ற முதலாளிகள் அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற முயற்சி செய்வார்கள், அவர்களைச் சமாளிக்க வேண்டும். அதே நேரத்தில் புரட்சி வெற்றி பெறாத பிற அரசுகளில் முதலாளிகள் இருப்பார்கள். இதை நாம் 1917 இரசியப் புரட்சிக்குப் பிறகு “உள்நாட்டுப் போரில்” கண்டோம். பிரிட்டன், அமெரிக்கா உட்பட உலகெங்குமிருந்து பதினான்கு ஏகாதிபத்தியங்களின் படைகள் படையெடுத்து அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற “வெள்ளைப் படைகளுடன்” சேர்ந்துகொண்டன. எனவே இந்த எதிர்ப்புரட்சிப் படைகளுடன் போரிட நமக்கு ஒரு வழி தேவை.

ஒரு வர்க்கம் மற்றொரு வர்க்கத்தின் மீதான ஆட்சி தொடரும், ஆனால் அது எஞ்சியிருக்கும் முதலாளி வர்க்கத்தின் மீதான தொழிலாளர் வர்க்கத்தின் ஆட்சியாக இருக்கும். முதலாளித்துவ அரசில், பெரும்பான்மை மக்கள் மீது சிறுபான்மையான தொழில்முறைக் கொலையாளிகளால் வன்முறையும் அதிகாரமும் செலுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, முதலாளித்துவ அரசின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதற்குப் பயிற்சி அளிக்கப்பட்ட காவலர்கள் இனவாதம் போன்ற ஆளும் வர்க்கக் கருத்துகளால் பீடிக்கப்பட்டு, தொழிலாளர் வர்க்க சமூகங்களை “சந்தேகத்துக்கு உரியவர்களாக” பார்க்கப் பயிற்சியளிக்கப்பட்டவர்கள். தொழிலாளர் வர்க்க அரசில் தொழிலாளர்களின் திரளிலிருந்து பிரிக்கப்பட்ட ஆயுதம் தாங்கிய குழுக்கள் இருக்க மாட்டா. தொழிலாளர்கள் குடிமைப் படை தொழிலாளர்களிடமிருந்து நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் வழிநடத்தப்படும். மக்களுக்குப் பொறுப்பற்ற அதிகாரிகளால் வழிநடத்தப்படாது.

இந்தப் புதிய அரசு தொழிலாளர்கள் ஜனநாயகத்தின் அடிப்படையில் அமைந்திருக்கும்; ஜனநாயக அடிப்படையில் தொழிலாளர்கள் அமைப்புக்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தும். தொழிலாளர்கள் ஜனநாயகம் இல்லாமல், அது தொழிலாளர்களின் அரசாக இருக்க முடியாது.

தொழிலாளர்கள் அரசு நிரந்தரமாக இருந்துவர வேண்டியதில்லை என்பதை நாம் வலியுறுத்த வேண்டும். அது “உலர்ந்து உதிர்ந்துவிடும்.” சர்வதேசியமும் தொழிலாளர்களின் ஆட்சியும் முந்தைய அமைப்பிற்குப் பதிலாக உலகம் முழுவதும் சோசலிசத்தைக் கொண்டுவரும் போது பழைய ஆளும் வர்க்கங்கள் மறைந்துவிடும் எதிர்ப்புரட்சி சக்திகளை நசுக்குவதற்கு தொழிலாளர்கள் அரசு பயன்படுத்திய கருவிகளின் தேவை இல்லாமல் போய்விடும். ஏனென்றால் இறுதியில் ஒடுக்குவதற்கு எதிர்ப்புரட்சி சக்திகள் எவையும் இருக்காது.

இதைத்தான் மார்க்சும் எங்கல்சும் “அரசு உலர்ந்து உதிர்தல்” என்று குறிப்பிட்டனர். “சமூக உறவுகளில் அரசின் தலையீடு ஒவ்வொரு பகுதியாக தேவையற்றதாக ஆகி, பின்னர் அது மறைந்துவிடும். ஆட்களை நிர்வாகம் செய்யும் அரசாங்கத்தின் செயல்பாடு பொருட்களை நிர்வாகம் செய்வதாக மாறும்.” என்று எங்கல்ஸ் எழுதினார். பலாத்காரத்துக்கு எந்தத் தேவையும் இருக்காது, தொழிலாளர்கள் பேரவைகளின் பொறியமைவுகள் எவ்வாறு உற்பத்தி செய்வது, எவ்வாறு மனிதர்களின் தேவைகளுக்கு ஒதுக்கீடு செய்வது என்பதைத் தீர்மானிக்கும்.

சோசலிசத்தில் குற்றங்கள் பெரிதும் வீழ்ச்சியடைந்து விடும், ஏனென்றால் மக்களுக்கு அவர்களுடைய தேவை நிறைவேற்றப்பட்டிருக்கும். அனைவருக்கும் வேலை வாய்ப்பும் இன்றியமையாத் தேவைகளும் கிடைக்கும் போது திருடவோ வழிப்பறி செய்யவோ தேவை எதுவும் இருக்காது. அதிவிரைவாக வாகனம் ஓட்டுவது, நாசவேலை போன்ற பிற குற்றங்களும் குறையும், ஏனென்றால் செலவில்லாமல் அனுபவிக்கக்கூடிய நிறைவளிக்கும் நடவடிக்கைகள் இருக்கும். ஒரு சோசலிச சமுதாயம் பிற வன்முறை மற்றும் அடக்குமுறைக் குற்றங்களின் சமூக வேர்களை அகற்றும்.

உற்பத்தியின் மிகுதியும் சம அளவிலான விநியோகமும் பணத்தின் தேவையையே இல்லாமல் செய்துவிடும். இருப்பினும் கார்ல் மார்க்ஸ் கூறுவது போல, இதுவே உலர்ந்து உதிரும் கடைசி விடயமாக இருக்கும். அடிப்படைரீதியாக, நமக்கு ஒவ்வொன்றும் உடனடியாகவும் அணுகக்கூடிய இடத்திலும் கிடைக்கும் என்பதால் நமக்குப் பணம் தேவைப்படாது.

சோசலிச சமுதாயம் “ஒவ்வொருவருக்கும் அவரவர் திறமைக்கு ஏற்ப வேலையும், ஒவ்வொருவருக்கும் அவரவர் தேவைக்கு ஏற்ப பகிர்வும்” இருக்கும் என்று மார்க்ஸ் எழுதியுள்ளார். சுரண்டலை ஒழிக்கும், அடக்குமுறையின் வேர்களை அறுத்தெறியும் நீதி மற்றும் சுதந்திரத்தின் அடிப்படையிலான ஒரு சமுதாயம், இதுவே நமது குறிக்கோள்.

இருப்பினும், “ஆயத்தமான கற்பனை உலகங்கள் இல்லை” என்றும் மார்க்ஸ் நமக்குக் கூறுகிறார். இது நாமே கீழிருந்து உருவாக்க வேண்டிய ஒன்று. இவை எதுவும் உடனடியாக நிகழாது ஆனால் அரசு உலர்ந்து உதிர்கிற போது, சோசலிசத்துக்கான நிலைமைகள் முன்னேற்றம் காண்கிற போது, இது மெய்யாகும்.

அரசு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு உருவாகியது, அதிகாரத்தைப் பெற்றது, இன்று முதலாளித்துவத்துக்கு ஆதரவாகத் துப்பாக்கிகள் இருக்கின்றன. தொழிலாளர்கள் அரசைக் கைப்பற்றுவதைத் தடுப்பதற்கு அது முழுமூச்சுடன் போராடும். நாம் முதலாளித்துவ அரசை நொறுக்கித் தள்ளுவோம். பிறகு வர்க்க சமுதாயத்தின் பகைமைகள் தீர்க்கப்படுகிற போது தொழிலாளர்கள் அரசு உலர்ந்து உதிர்ந்து மறைந்து போகும். இதை விளாதிமிர் லெனின் மிகச் சிறப்பாகக் கூறுவார்: “அரசு என்று ஒன்று இருக்கும் வரை, சுதந்திரம் என்பது இருக்காது. சுதந்திரம் இருக்கும் போது அரசு இருக்காது.”

ஸ்கை ஹாரிசன்

நன்றி: socialistworker.co.uk

தமிழில்: நிழல்வண்ணன்

Comments

Popular posts from this blog

விஜய்யின் வருகை – மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

  1967 தேர்தலுக்குப் பிறகு திமுக, அதிமுக என்ற இரண்டு திராவிடக் கட்சிகளே கடந்த சுமார் அறுபதாண்டுகளாக மாறி மாறி தமிழ் நாட்டை ஆண்டு வந்த நிலையில், அண்மையில் நடந்து முடிந்த பதினேழாவது சட்டமன்றத் தேர்தலில், அந்த இரண்டு கட்சிகளும் அமைத்திருந்த கூட்டணிகளை தனி ஒரு கட்சியாக எதிர்த்து நின்று அவற்றை வீழ்த்தியுள்ளது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். தனிக் கட்சியாக ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை இடங்களைப் பெறாவிட்டாலும், 107 இடங்களைப் பெற்று அதிக இடங்களைப் பெற்ற கட்சியாக இருக்கின்றது. பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் திமுக கூட்டணியே ஆட்சிக்கு வரும் என்று கணித்திருந்த நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி எதிர்பாராத ஒன்றாகவும் பெரும் வியப்பை அளிக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது. விஜய்யின் தவெக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்திருப்பார்கள் என்றும் சொல்வதற்கில்லை. ஏனென்றால் திமுக தனது ஆட்சிக் காலத்தில் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண், தவப் புதல்வன் போன்ற திட்டங்களின் மூலம் மாதம்தோறும் பெண்களுக்கும், மாணவர்களுக்கும் நிதி வழங்கி வருகிறது. மீண்டும் ஆட்சிக்...

தொழிலாளர் சட்டத் திருத்தங்களும் தொழிலாளர் வர்க்கமும்!

  இன்போசிஸ் நாராயணமூர்த்தி 19-11-2025 அன்று தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் இந்தியத் தொழிலாளர்கள் வாரத்திற்கு 72 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியதோடு, மோடி அவர்கள் வாரத்திற்கு 100 மணி நேரம் வேலை செய்வதாகவும் கூறினார். இதற்காக 9 -9 – 6 என்ற திட்டத்தை அவர் முன்மொழிந்துள்ளார், சீனாவில் சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தை மனமுவந்து பாராட்டியதோடு இந்தியாவில் சட்டப்படியாக இதனை அமல்படுத்த வேண்டும் என்றார். அதன்படி தொழிலாளர்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் வீதம், வாரத்திற்கு 6 நாள் என 72 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற திட்டத்தை அவர் முன்மொழிந்துள்ளார். 2021இல் சீன அரசு 12 மணி நேர வேலையை சட்டவிரோதம் என அறிவித்தது. வேலை நேர அதிகரிப்பால் தொழிலாளர்களின் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாகவும், பணிச்சுமை காரணமாக தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளதாகவும் சீன அரசு தெரிவித்தது. ஆனால், சீனாவில் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து படிப்பினைகளை எடுத்துக் கொள்ளாத இன்போசிஸ் நாராயண மூர்த்தி வேலை நேரத்தை ...

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ரவுடித்தனம்!

  வெனிசுலாவின் தலைவர் நிக்கோலாஸ் மது ரோ  போதைப் பொருளை அமெரிக்காவிற்குக் கடத்தும் கும்பலின் தலைவராக உள்ளார் எனக் கூறியும் அவர் பயங்கரவாதக் கும்பலுக்குத் தலைவராக உள்ளார் எனக் கூறியும் கடந்த சில மாதங்களாகவே அமெரிக்காவின் ட்ரம்ப் வெனிசுலாவைத் தம் கப்பற்படையைக் கொண்டு முற்றுகை இட்டிருந்தார். வெனிசுலாவிலிருந்து வெளியேறும் படகுகளைப் போதைப் பொருட்களைக் கடத்துவதாகக் கூறி விமானப் படைகளைக் கொண்டு தகர்த்து அப்பாவி மக்களைக் கொன்று குவித்து வந்தார். வெனிசுலாவிலிருந்து வெளி நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றிக்கொண்டு செல்லும் கப்பல்களைக் கடற்கொள்ளைக்காரனைப் போலக் கைப்பற்றித் தன் நாட்டிற்குக் கொண்டு சென்றார். இந்த நிலையில் ஜனவரி 3 ந்தேதி அதிகாலை சர்வதேச சட்டங்களையும், ஐக்கிய நாடுகளின் சபையின் விதிகளையும் மீறி, வெனிசுலாவின் இறையாண்மையையும் மீறி அமெரிக்க விமானப்படை அந்த நாட்டுத் தலைநகர் காரகஸ் மீது திடீர்த் தாக்குதலைத் தொடுத்து மதுரோவையும் அவரது மனைவி சிலியா ஃப்ளோரசையும் கைது செய்து அமெரிக்காவிற்குக் கொண்டு சென்றுள்ளது. இந்த அநீதியான செயலை அனைத்து நாடுகளும் கண்டித்துள்ளன. உண்மையில் மதுரோ போதைப் பொரு...