இந்தியாவில் உள்ள முதலாளிய ஜனநாயகத்தில் மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை. பேச்சுரிமை, எழுத்துரிமை, கூட்டம் கூடும் உரிமை எனப் பல உரிமைகள் அடிப்படை உரிமைகளாக அரசியல் அமைப்புச் சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. ஆனால் இவற்றில் பேச்சுரிமை, எழுத்துரிமை, கூட்டம் கூடும் உரிமை போன்றவை எல்லாம் ஏட்டளவிலேயே உள்ளன; அவை நடைமுறையில் அதிகார வர்க்கத்தின் தயவிலேயே உள்ளன. இவற்றில் வாக்களிக்கும் உரிமை மட்டும் இது நாள் வரையிலும் கட்டுப்படுத்தப்படாமலும் பறிக்கப்படாமலும் இருந்து வந்தது. இன்று அந்த உரிமையும் ஆட்சியாளர்களால் பறிக்கப்பட்டுள்ளது.
சிறப்புத் தீவிரத் திருத்தம் (Special Intensive Revision) என்ற பெயரில் நாடு முழுவதும் 13 கோடி மக்களின் வாக்குரிமையை இந்தியத் தேர்தல் ஆணையம் பறித்துள்ளது. ஆளும் கட்சியான பாஜக வின் விசுவாசமான ஏஜண்டாக இருந்து, மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளில் முக்கியமான ஒன்றான வாக்குரிமையைப் பறித்து ஜனநாயக விரோதியாக, மக்கள் விரோதியாக, தேசத் துரோகியாக மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு, கையும் களவுமாகப் பிடிபட்டு நிற்கிறார் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார். இந்த மக்கள் விரோதி பதவி விலக வேண்டும்; கைது செய்யப்பட வேண்டும் எனக் கோரி இன்று நாடு முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள், வழக்குரைஞர்கள், எதிர்க்கட்சியினர் என அனைத்துப் பகுதி மக்களும் போராடி வருகின்றனர். ஆனால் அவருக்கு இருந்த Z+ பாதுகாப்பை மேலும் பலப்படுத்தி, அவரைக் காப்பாற்றி வருகிறது பாஜக அரசாங்கம். தனது விசுவாசமான ஏஜண்ட்டை பாஜக கைவிட்டுவிடுமா?
பாஜக அரசாங்கம் ஞானேஷ்குமாரை திட்டமிட்டே தலைமைத் தேர்தல் ஆணையராகக் கொண்டுவந்தது. தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் (நியமனம், பணி நிபந்தனைகள், மற்றும் பதவிக் காலம்) சட்டம், 2023 ன் படி முதல் தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டவர் ஞானேஷ்குமார். பிரதமர் , உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரைக் கொண்ட ஒரு குழுவால் தலைமைத் தேர்தல் ஆணையரும் இரு தேர்தல் ஆணையர்களும் நியமிக்கப்படலாம் என உச்ச நீதிமன்றம் வழிகாட்டியது. ஆனால் பாஜக அரசாங்கமோ உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டலை ஏற்றுக் கொள்ளாமல் பிரதமர், ஒன்றிய அமைச்சர்களில் ஒருவர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரைக் கொண்ட தேர்வுக் குழுவை அமைக்கும் வகையில் சட்டத்தைக் கொண்டு வந்தது. இந்தச் சட்டத்தின்படி ஆளும் கட்சியைச் சேர்ந்த பிரதமரும் இன்னொரு அமைச்சரும் தேர்வுக்குழுவில் இருப்பார்கள். தேர்வுக்குழுவில் அவர்கள் பெரும்பான்மையாக இருப்பதால், அவர்கள் விருப்பத்தின்படியே தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்படுவார்கள். எதிர்க்கட்சித் தலைவரின் கருத்து இங்கு செல்லுபடியாகாது. இந்த அடிப்படையில் தேர்வுக்குழுவில் இருந்த நரேந்திர மோதி, அமித்சா ஆகியோரின் விருப்பப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் ஞானேஷ்குமார். இந்தச் சட்டத்தின்படி, தேர்தல் ஆணையர்கள் தங்கள் பணிக் காலத்தில் செய்த செயல்களுக்காக அவர்கள் ஓய்வுபெற்ற பிறகும் கூட, அவர்களை குடிமைச் சட்டத்தின் படியோ குற்றவியல் சட்டத்தின் படியோ தண்டிக்க முடியாது. உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்குக் கூட இந்தச் சட்டப் பாதுகாப்புக் கிடையாது. அந்த அளவுக்குச் சட்டப்பாதுகாப்பைக் கொண்டிருப்பதால்தான் ஞானேஷ்குமார் துணிந்து இந்த மக்கள் விரோதச் செயலில் ஈடுபட்டுள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் எந்த முடிவும் மூன்று ஆணையர்களின் ஏகமனதாக இருக்க வேண்டும். மாறுபட்ட கருத்து எழும்போது பெரும்பான்மையினரின் கருத்து ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். ஆனால் ஞானேஷ்குமார் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து நடைமுறைப்படுத்தி உள்ளார்; தன்னிச்சையாக படிவம் 6ல் மாற்றங்களைச்செய்துள்ளார்; பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, சட்டத்திருத்தத்தின் மூலம் மட்டுமே படிவம் 6ல் மாற்றம் செய்ய முடியும். இந்த மாற்றங்கள் இந்தியக் குடியுரிமைச் சட்டத்தின் பிரிவுகளை உள்ளடக்கியிருந்தது. அந்தப் பிரிவுகள் குறிப்பிடும் தகுதிகளை, அதற்கான சான்றுகளை வாக்காளர் தர வேண்டும் எனத் திருத்தப்பட்ட படிவம் 6 கோரியது. ஆனால் சட்டப்பிரிவு 326ன் படி வாக்காளர் தகுதிக்கு அவை தேவையற்றவை என்றும், இதன் மூலம் தேர்தல் ஆணையம் குடிமகன்களின் தேசியப் பதிவேட்டை மறைமுகமாகத் தயாரிக்கப் பார்க்கிறது என்றும் முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா கூறுகிறார். இந்த மாற்றத்தின் காரணமாக போதிய சான்றுகளை மக்களால் வழங்கப்பட முடியாத காரணத்தால் கோடிக்கணக்கான தகுதி பெற்ற வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற முடியாமல் போனார்கள். இதனால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் ஏழைகள், தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள், இஸ்லாமிய மக்கள், பெண்கள், வேலை தேடி வெவ்வேறு மாநிலங்களுக்குப் புலம் பெயர்ந்தவர்கள்.
மேலும், படிவம்-7 மூலம் வாக்களர் பட்டியலில் உள்ள பெயர்களுக்கு ஆட்சேபனை தெரிவித்து அந்தப் பெயர்களை நீக்கக் கோரலாம். இந்தப் படிவத்தை யார் கொடுக்கின்றார்கள் என்பதை உறுதிப்படுத்தாமலும், அவர்களுடைய ஆட்சேபனைகள் உண்மைதானா? என்பதைச் சோதிக்காமலும் இலட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. சான்றுகள் சரிபார்க்கப்பட்டு வாக்காளர் பட்டியலில் பெயர்கள் சேர்க்கப்பட்ட பிறகும் அதற்கு ஆட்சேபனை தெரிவித்து 16 இலட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. ஆட்சேபனை தெரிவித்தவர்கள் யார் என்ற விவரத்தை தலைமைத் தேர்தல் அதிகாரி இதுவரையிலும் வெளியிடவில்லை.
மேலும், ஒவ்வொரு மாநிலத்திலும் தகுதியான பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், தகுதியற்ற பெயர்களை நீக்கவும் அந்தந்த மாநிலத்தில் உள்ள தலைமைத் தேர்தல் அதிகாரி செய்ய வேண்டும். தேர்தல் ஆணையத்தின் இணையதளம் மூலம் அந்தச் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனால் இப்பொழுது தேர்தல் ஆணையத்தின் இணையதளம் மத்தியத்துவப்படுத்தப்பட்டது. அதன் காரணமாக வாக்களர் பட்டியலில் பெயரைச் சேர்ப்பதோ நீக்குவதோ மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரியினால் செய்ய முடியாது. வாக்காளர் பட்டியலின் முழுக்கட்டுப்பாடும் தேர்தல் ஆணையத்தின் கையில் இருக்கும். அது தனது விருப்பம் போல பெயர்களைச் சேர்க்கலாம் அல்லது நீக்கலாம்.
இத்தகைய தன்னிச்சையான நடவடிக்கைகள் மூலம் 13 கோடி மக்களின் வாக்குகளைப் பறித்துள்ளார் ஞானேஷ்குமார். தேர்தல் ஆணையத்தில் உள்ள சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோசி ஆகிய இரு ஆணையர்களும் ஞானேஷ்குமாரின் தன்னிச்சையான முடிவுகளுக்கு ஆட்சேபனை தெரிவித்து பத்து மாதங்களில் 14 கடிதங்கள் எழுதி உள்ளனர். இந்த விவரங்கள் The New Indian Express ல் வெளிவந்த போதுதான் ஞானேஷ்குமார் கையும் களவுமாகப் பிடிபட்டார்.
படிவம் 6ல் சேர்க்கப்பட்ட புதிய விதிகளுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது என இப்போது ஞானேஷ்குமார் கூறுகிறார். அதன் மூலம் உச்ச நீதிமன்றத்தின் மீது பழியைப் போட்டு தப்பித்துக்கொள்ளப் பார்க்கிறார். ஆனால் தலைமை நீதிபதியோ நாங்கள் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்கிறார். தொடக்கத்திலிருந்தே தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக, வாக்காளர் இந்த நாட்டின் குடிமகன்தான் என்பதை நிரூபிக்கத் தேவையான ஆதாரங்கள் உட்பட, பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் போடப்பட்டன. ஆனால் உச்சநீதிமன்றம் அவற்றைக் கண்டு கொள்ளவில்லை; ‘ தேர்தல் ஆணையம் சுதந்திரமான அமைப்பு. அதன் நடவடிக்கைகளில் நாங்கள் தலையிட முடியாது’ என்று கூறி தனது பொறுப்பைத் தட்டிக் கழித்தது. இலட்சக்கணக்கான தகுதியான வாக்காளர்களின் வாக்குகள் பறிக்கப்படுகின்றன என வாதிட்ட போது, மக்களின் ஜனநாயக உரிமை பாதிக்கப்படுகிறது என்ற உணர்வு சிறிதும் இல்லாமல் அவர்கள் அடுத்த தேர்தலில் வாக்களிக்கலாம் என சாதாரணமாகக் கூறியது. இதன் மூலம் உச்சநீதிமன்றம் ஞானேஷ்குமாரின் எதேச்சதிகரமான நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்தது. அமைதியாக இருந்து விட்டு இன்று தனது பொறுப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள நாங்கள் படிவம் 6ல் செய்யப்பட்ட விதிகளுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்கிறது. 13 கோடி பேர்களின் வாக்குகள் பறிக்கப்பட்டதில் உச்சநீதிமன்றத்திற்கும் பெரும் பொறுப்பு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
பதின்மூன்று கோடி மக்களின் வாக்குரிமைகளைப் பறித்த ஜனநாயக விரோதி தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் எனக் கோரி மாணவர்களும் இளைஞர்களும் கல்லூரிப் பேராசிரியர்களும் பள்ளிக் கூட ஆசிரியர்களும் வழக்குரைஞர்களும் பத்திரிகையாளர்களும் தலைநகர் தில்லியில் ஜந்தர் மந்தர் மைதானத்தில் அக்டோபர் 10 ந் தேதி நடக்க இருந்த கண்டன ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கரப்பான் பூச்சி ஜனதாக் கட்சி (CJP) அழைப்பு விடுத்திருந்த போதும், இந்திய மாணவர் கூட்டமைப்பு (SFI), அகில இந்திய மாணவர் அமைப்பு (AISA), கிராந்திகாரி யுவ சங்காத்தனா (KYS) இந்தியத் தேசிய மாணவர் சங்கம் போன்ற மாணவர் அமைப்புகளும், மேலும் பல இளைஞர் அமைப்புகளும், இ.பொ.க (மா), திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்ற கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் அணியினரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தை முறியடிக்க பாஜக அரசாங்கம் பல கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டது; நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தில்லிக்கு வரும் 200 தொடர்வண்டிகளை இரத்து செய்தது; தில்லியில் 45 மெட்ரோ தொடர்வண்டி நிலையங்களை மூடியது; இணையதளத்தை முடக்கியது; தில்லியில் மக்கள் ஒன்று சேராமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. இவற்றை எல்லாம் மீறி வந்தால் ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடாமல் தடுக்கவும் கைது செய்யவும் தில்லி போலீஸ், எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய ஆயுதப்படை ஆகியவற்றைச் சேர்ந்த 41000 பேரை தில்லி முழுவதும் நிறுத்தியது; ஜந்தர் மந்தரை நோக்கிச் செல்லும் அனைத்துச் சாலைகளும் மூடப்பட்டன; 100 இடங்களுக்கும் மேல் தடையரண்கள் அமைத்து போலீசார் காவல்காத்தனர்.
மும்பையிலிருந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக தில்லிக்கு. விமானத்தில் வந்த CJP யின் தலைவர்கள் அபிஜித் தீப்கே, அசுதோஷ் ரங்கா, சவுரவ் தாஸ் ஆகியோரை விமானத்தில் வைத்தே தில்லி போலீஸ் கைது செய்தது. தலைவர்களைக் கைது செய்வதன் மூலம் போராட்டத்தை முறியடித்து விடலாம் எனத் தப்புக் கணக்குப் போட்டது பாஜக அரசாங்கம். ஆனால் நடந்தது வேறு.
தில்லி பெருநகர் முழுவதும் பல்லாயிரக்கணக்கான போலீசாரை நிறுத்தியும், CJP யின் தலைவர்களைக் கைது செய்தும் கூட பாஜக அரசாங்கம் நினைத்தது போல போராட்டத்தை முறியடிக்க முடியவில்லை. நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்களும் இளைஞர்களும் போலீசாரின் தடுப்பரண்களையும் அடக்குமுறைகளையும் மீறி துணிச்சலுடன் முழக்கமிட்டுக்கொண்டு ஜந்தர்மந்தரை நோக்கிச் செல்ல முயன்றனர். தில்லி நகரம் முழுவதும் கடைகளும் வணிக வளாகங்களும் மூடப்பட்ட நிலையில் சாலைகள் அனைத்தும் போராட்டக்காரர்களால் நிரம்பியிருந்தன. ஜந்தர் மந்தர் என்ற ஒரு இடத்தில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் தில்லி நகரம் முழுவதும் நடைபெறும் போராட்டமாக மாறியது. தில்லி நகரமே ஜந்தர் மந்தராக மாறியது.
ஐயாயிரத்துக்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்; இ.பொ.க.(மா)வின் பொதுச்செயலர் பேபி, முன்னாள் முதல்வர்களான மம்தா பானர்ஜி, பினாராயி விஜயன், அரவிந்த் கெஜ்ரிவால், மாணிக் சர்க்கார் போன்றவர்களும், பாராளுமன்ற, மாநிலங்கள் அவை உறுப்பினர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர்.
இந்தப் போராட்டம் தில்லியில் மட்டும் அல்லாமல் மராட்டியம், தமிழ்நாடு, கர்நாடகம், உ.பி, பீகார், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், கோவா, அசாம், பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் என நாடெங்கும் பரவியது. ஒட்டுமொத்தமாக பாஜக அரசாங்கம் மக்களிடமிருந்து தனிமைப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டாலும் தொடர்ந்து இந்தப் போராட்டம் ஞானேஷ்குமார் பதவி விலகும் வரை தொடரும் எனப் போராட்டத்தில் கலந்து கொண்ட அமைப்புகள் அறிவித்துள்ளன. தொடர்ந்து நாள்தோறும் இந்தப் போராட்டம் நடந்து வருகிறது.
‘இந்தப் போராட்டம் அந்நிய நாடுகளால் தூண்டப்பட்டுள்ளது’ என பாஜக வின் தலைவர் நிதின் நபின் வழக்கம் போல அக்கட்சியின் பல்லவியைப் பாடியுள்ளார். இருப்பினும், “தேசத் துரோகம்” , “அந்நியச் சதி”, “அர்பன் நக்சல்” “திமகி நக்சல்” போன்ற பாஜகவின் தேய்ந்துபோன பல்லவிகளை மக்கள் இனியும் நம்பத் தயாராக இல்லை என்பதையே நாடெங்கும் தொடரும் மக்களின் துணிச்சல் மிக்க போராட்டங்கள் காட்டுகின்றன.
நீட் தேர்வுத் தாள் கசிந்ததை எதிர்த்து ஜூலையில் CJP தலைமையில் நடந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் மாபெரும் போராட்டம் வெற்றி பெற்றது. கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வைக்கப்பட்டார். சென்ற முறை பணிந்த மோதியும் அமித் சாவும் இந்த முறை பணிந்து போவார்களா என்பது கேள்விக் குறியே! ஏனென்றால் ஞானேஷ்குமாரின் பதவி விலகல் அவரோடு முடிந்து விடாது. அவருடைய பதவி விலகல் என்பது மோதி, அமித் சா, ஞானேஷ்குமார் ஆகியோரின் கூட்டுச் சதியை ஒப்புக் கொண்டதாக ஆகி விடும். அதன் தொடர்ச்சியாக அவர்களும் பதவி விலக வேண்டும். சிறப்புத் தீவிரத் திருத்தத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட வாக்காளர்கள் பட்டியல் அனைத்தும் இரத்து செய்யப்பட வேண்டும். அதன் படி நடந்த அனைத்து மாநிலத் தேர்தல்களும் இரத்து செய்யப்பட வேண்டும். புதிய வாக்காளர் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு அந்த அடிப்படையில் மீண்டும் அந்த மாநிலங்களில் புதியதாகத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலுப்படும். இந்த நிலைமையை மோதி அரசாங்கம் எவ்வாறு எதிர்கொள்ளும்? இந்த நிலையில் பாஜக ஆட்சியாளர்கள் முன் உள்ள தேர்வுகள் என்னவாக இருக்க முடியும்? ஒன்று, தொடர்ந்து போராட்டத்தை அனுமதித்தால் அதுவாகவே படிப்படியாக வலுவிழந்து போகும் எனக் கருதி மென்மையான போக்கைக் கடைப்பிடிக்கலாம். அல்லது அவர்கள் எதிர்பார்ப்பது போல போராட்டம் பலவீனமடையாமல் நாடெங்கும் பரவி வலுப் பெறுமானால் ஞானேஷ்குமாரைப் பலி கொடுத்து தமது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள போராட்டக்காரர்களுடனும் எதிர்க் கட்சிகளுடனும் சமரசம் பேசலாம். இன்னொன்று, ‘அந்நிய நாடுகளின் சதிகளிலிருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும்’ எனக் கூறி இது வரையிலும் மறைமுகமாக இருந்து வரும் பாசிச அடக்குமுறைகளை வெளிப்படையாக, அப்பட்டமாக, நாடெங்கும் கட்டவிழ்த்து விட்டு தனக்கு எதிரான அனைத்துப் போராட்டங்களையும் கடுமையாக ஒடுக்கும் வழிமுறைகளை மேற்கொள்ளலாம். இன்று இந்த வழிகள்தான் பாஜக அரசாங்கத்தின் முன் உள்ளன. வெளிப்படையாக பாசிச அடக்குமுறைகளை மோதி அரசாங்கம் மேற்கொள்ளுமானால் அதுவே அந்த ஆட்சிக்கு இறுதி முடிவாக இருக்கும்.
போராட்டம் இன்று பாரளுமன்றத்தை விட்டு வீதிக்கு வந்து விட்டது. பாராளுமன்றத்திற்குள் மட்டும் இந்தப் போராட்டம் மட்டுப்படுத்தப்பட்டு இருந்தால் பாஜக பாராளுமன்றத்தில் உள்ள தனது பெரும்பான்மை பலத்தினால் இந்தப் போராட்டத்தை எளிதில் கட்டுப்படுத்தியிருக்கும். ஆனால் இன்று போராட்டம் மக்களின் அரங்கத்திற்கு, வீதிக்கு வந்து விட்டது. மாணவர்களும் இளைஞர்களும் இந்தப் போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர். அவர்களின் போராட்டம் வெற்றி பெற வேண்டுமானால் சமூகத்தில் உள்ள தொழிலாளர்கள், விவசாயிகள் உட்பட அனைத்துப் பகுதி மக்களும் போராட்டத்திற்கு ஆதரவாக ஒன்றிணைய வேண்டும்.
அதே சமயத்தில், ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்ற இந்தப் போராட்டத்தினுடைய ஒற்றைக் கோரிக்கையின் எல்லையைப் புரிந்து கொள்ள வேண்டும். ஞானேஷ்குமார் என்ற தனிநபர் பதவி விலகி விட்டால் மட்டும் இந்தப் பிரச்சினை தீர்ந்து விடாது. முதலாளி வர்க்கத்தின் அதிகாரத்தையும் சுரண்டலையும் காப்பாற்றி வரும் அரசு இயந்திரத்தின் பற்சக்கரங்களில் உள்ள ஒரு மரையும் திருகாணியும் தான். ஞானேஷ்குமார். அவர் போனால் அவரிடத்தில் இன்னொருவர் வருவார். அவர் இவரை விட மோசமாகக் கூட இருக்கலாம். எனவே மக்களுக்கு அதிகாரம் அளிக்கக் கூடிய புதிய அரசு இயந்திரத்தை உருவாக்குவதை நோக்கிப் போராட்டம் விரிவடைய வேண்டும்.
முதலாளிய ஜனநாயகத்தில் வாக்கு உரிமை என்பது ஒரு பெயரளவிற்கான உரிமைதான். இங்குள்ள அனைவருக்கும் வாக்குரிமை இருப்பதினாலேயே இங்குள்ள அனைவரும் சமம் என்றோ, நாட்டின் அரசியலைத் தீர்மானிப்பதில் அனைவருக்கும் சம பங்கு உள்ளது என்றோ பொருளாகி விடாது. முதலாளிய ஜனநாயகம் உள்ளடக்கத்தில் சாரமற்ற, வெறும் தோற்றத்தில் மட்டும் ஜனநாயகத்தைக் கொண்டுள்ள, பெயரளவிலான ஜனநாயகம்தான். அம்பானிக்கும் அதானிக்கும்ஒரு வாக்குதான். அன்றாடங்காய்ச்சியான சுப்பனுக்கும் குப்பனுக்கும் ஒரு வாக்குதான். அதன் காரணமாகவே அம்பானியும் அதானியும் சுப்பனும் குப்பனும் சமமாகி விட முடியாது. அம்பானிகளும் அதானிகளும் இந்த நாட்டின் அரசியலைத் தீர்மானிக்கின்றனர். சட்ட மன்ற உறுப்பினர்களையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும் அவர்கள் விலைக்கு வாங்குகின்றனர். அதிகார வர்க்கத்தினரையும் நீதித் துறையினரையும் கையூட்டுகளால் தங்களுக்குச் சேவகம் செய்யும் விசுவாசிகளாக மாற்றுகின்றனர். இதற்கெல்லாம் காரணமாக இருப்பது அவர்கள் முதலாளிகளாக, தொழிற்சாலைகளையும், பெரும் நிறுவனங்களையும் நிலத்தையும் தங்களுடைய உடைமையாகக் கொண்டிருப்பதுதான். அவர்களுடைய ஆலைகளிலும் பெரும் நிறுவனங்களிலும் நிலங்களிலும் முதுகெலும்பு தேய உழைக்கும் சுப்பன்களுக்கும் குப்பன்களுக்கும் மிஞ்சுவது ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஒரு நாள் வாக்களிக்கும் உரிமை மட்டும்தான். ஐந்தாண்டுகளுக்கு தங்களை ஆள்பவர்களை, தங்களை அடக்கி ஒடுக்குபவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமைதான்.
சுப்பன்களுக்கும் குப்பன்களுக்கும் உண்மையான ஜனநாயக உரிமை கிடைக்க வேண்டுமானால் இந்த நாட்டில் அனைவருக்கும் பொருளாதார ரீதியான சமத்துவத்தை உருவாக்க வேண்டும். தொழிற்சாலைகளும் நிலமும் சமூகத்தின் உடைமையாக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் உண்மையான ஜனநாயகம் மக்களுக்குக் கிடைக்கும். அத்தைகைய உண்மையான ஜனநாயகத்தைப் படைக்கும் நோக்கத்துடன் மக்கள் போராட்டம் விரிவடைய வேண்டும்.
மு.வசந்தகுமார்.






Comments
Post a Comment