Skip to main content

மூலதனம் விழுங்கும் மனித உயிர்கள் - ஒசூர் ஆலைகளில் நீடிக்கும் அவலம். யார் பொறுப்பு?

 

இந்தியாவின் முன்னணித் தொழில் நகரங்களில் ஒன்றாகவும், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய மையமாகவும் விளங்கிவரும் ஒசூர், பன்னாட்டு நிறுவனங்களின் கொடூர லாப வேட்டைக்கான பிரதானக் களமாக மாறிவருகிறது. கர்நாடகத் தலைநகரான பெங்களூருக்கு மிக அருகில் அமைந்ததன் காரணமாக, மூலப்பொருட்களைக் கொண்டு வருவதும், உற்பத்திப் பொருட்களை உலகச் சந்தைக்கு அனுப்புவதும் பெருநிறுவனங்களுக்கு எளிதாகியுள்ளது. இங்கு பன்னாட்டு மற்றும் பெருநிறுவனங்கள், மற்றும் அவற்றுக்கு உதிரிப்பாகங்களை உற்பத்தி செய்யும் நூற்றுக்கணக்கான குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிற் கூடங்கள் ஆகியவற்றில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

தொழிற்துறை வளர்ச்சி மற்றும் முதலீடு பெருக்கம் ஆகியவற்றின் உண்மையான அடிப்படை காரணம் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலிருந்தும், வறட்சியும் வேலையின்மையும் நிலவும் இந்தியாவின் பல்வேறு பின்தங்கிய மாநிலங்களிலிருந்தும் வந்து குவியும் ஏழைத் தொழிலாளர்களின் வியர்வையும், இரத்தமும், சிதைக்கப்பட்ட சதைகளுமே அடித்தளமாக உள்ளது. பெருநிறுவனங்கள் தங்களது லாப வரம்பை ஆண்டுதோறும் பன்மடங்கு உயர்த்திக் கொள்ள கடுமையான சுரண்டலுடன் தொழிலாளர்களின் உயிர்களும், உடல் உறுப்புகளும் சேர்த்து பலியிடப்படுகின்றன.

சமீபத்தில், ஒசூர் பகுதியில் இயங்கி வரும் Uno minda ஆலையில் ஏற்பட்ட விபத்தில் தமிழகத் தொழிலாளி ஒருவரும், வட மாநில ஒப்பந்தத் தொழிலாளி ஒருவரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர். Del Mond என்னும் ஆலையில் ஏற்பட்ட விபத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார், Rajasriya என்னும் ஆலையில் தானியங்கி இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறின் காரணமாக பணியில் இருந்த தொழிலாளரின் தலையில் இயந்திரத்தின் கூர்மையான பாகம் இறங்கி வட மாநிலத் தொழிலாளி உயிரிழந்தார். இத்தகைய உயிரிழப்புகளும், உடல் உறுப்பு இழப்புகளும் விபத்துகளும் தொடர்கதையாகி வருகின்றது.

ஆலைகளில் நடக்கும் விபத்துகள் எவையும் தற்செயலான நிகழ்வுகளோ, விதியின் விளைவுகளோ அல்ல, மாறாக, லாபத்தையே முழுமுதற் குறிக்கோளாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட முதலாளித்துவக் கொடூரத்தின் நேரடி வெளிப்பாடாகும்.

அரசு மற்றும் தொழிலாளர் நலத்துறையின் அதிகாரப்பூர்வ ஆவணங்கள் தமிழகத்தில் தொழிலாளர்கள் எந்தளவிற்குச் சுரண்டப்படுகிறார்கள் என்பதற்கான சாட்சிகளாக உள்ளன. தமிழகம் முழுவதும் சுமார் 31,859-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. அரசுப் புள்ளி விவரங்களின்படியே, 2019 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் மட்டும் தமிழகத் தொழிற்சாலைகளில் 837 உயிரிழப்புகளும், ஆயிரக்கணக்கான கொடூர விபத்துகளும் ஏற்பட்டுள்ளன. இவை பெரிய ஆலைகளில் வெளியே தெரிந்த கணக்குகள் மட்டுமே. சிறு, குறு நிறுவனங்களில் நடக்கும் விபத்துகள், மறைக்கப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களின் மரணங்கள், பதிவு செய்யப்படாத ஆலைகளில் நடக்கும் விபத்துகள் ஆகியவை இந்தப் புள்ளி விவரங்களுக்குள் வருவதே இல்லை. ஒரு தொழிலாளி ஆலையில் பலியானால் அது இயற்கை மரணம் அல்லது சாதாரண விபத்து அல்லது தொழிலாளி பாதுகாப்பு விதிகளை மீறியது அல்லது தொழிலாளர்களிடையே ஏற்பட்ட சண்டைகளால் நடந்தது என்று திசைதிருப்பப்பட்டு முதலாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி விடுகிறார்கள்.

பெருநிறுவனங்கள் தங்களது உற்பத்திச் செலவைக் குறைக்கவும், தொழிலாளர்களுக்குச் சட்டப்பூர்வமாக வழங்கப்பட வேண்டிய உரிமைகளை மறுக்கவும் சட்டங்களை எளிமைப்படுத்துதல் என்ற பெயரில் புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் நடைமுறைப் படுத்தபட்டு வருகின்றது. நிரந்தரத் தொழிலாளர்களை நியமித்தால் அவர்களுக்கு ஈட்டுத் தொகை, மருத்துவக் காப்பீடு, ஓய்வூதியம் மற்றும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பதால் பெருநிறுவனங்கள் அந்த முறையை முற்றிலுமாகத் திட்டமிட்டுத் தவிர்க்கின்றன.

NAPS (National Apprenticeship Promotion Scheme - தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்புத் திட்டம்), NATS (National Apprenticeship Training Scheme - தேசிய தொழிற்பயிற்சித் திட்டம்) மற்றும் FTE (Fixed Term Employment – குறித்த கால வேலைமுறை) ஆகிய திட்டங்கள் மற்றும் ஒப்பந்த, தற்காலிக வேலைவாய்ப்பு என்ற பெயரில், குறைந்த கூலிக்குத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி அதிகப்படியான உழைப்பைச் சுரண்டுகின்றன. இத்தகைய தொழிலாளர்களால் எந்த விதமான தொழிலாளர் உரிமையும், தொழிற்சங்க உரிமையும் கோர முடியாது.

காலாவதியான மற்றும் பாதுகாப்பற்ற இயந்திரங்கள், தரமற்ற பாதுகாப்பற்ற உபகரணங்கள், முறையான பயிற்சி அளிக்காமல் தொழிலாளர்களை உற்பத்தியில் ஈடுபடுத்துதல், நிரந்தரத்தன்மையுள்ள வேலைகளில் பயிற்சி அளிக்கப்படாத தற்காலிகத் தொழிலாளர்களைப் பணியில் அமர்த்துதல் ஆகிய காரணங்களால் தொழிலாளர்கள் விபத்துக்குள்ளாகின்றனர்.

இடைத்தரகர்களின் ஆதிக்கத்தில் ஒப்பந்ததாரர்கள் மற்றும் ஏஜென்சிகள் மூலம் ஆட்கள் பெறப்படுவதால், விபத்துகளுக்குப் பெருநிறுவனங்கள் எந்தப் பொறுப்பையும் ஏற்பதில்லை. ஒப்பந்ததாரரோ தலைமறைவாகிவிடுவார் அல்லது பெயரளவிலான சொற்பத் தொகையைக் கொடுத்து வழக்கை முடித்து விடுவார். முதலாளித்துவ உற்பத்தி முறையில், தொழிலாளி என்பவன் உயிர்த் தன்மையுள்ள மனிதனாகக் கருதப்படுவதில்லை; ஒரு இயந்திரத்தின் உதிரிப் பாகமாகவே கருதப்படுகின்றான்.

குடும்பத்தின் ஒரே ஆதாரமான தொழிலாளி ஆலையில் பலியாகும்போது, அவரது குடும்பம் நிரந்தர வறுமைக்கும் பாதுகாப்பற்ற நிலைக்கும் தள்ளப்படுகிறது. குழந்தைகளின் எதிர்காலம் சிதைக்கப்படுகின்றது, வயதான பெற்றோர்கள் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். உடல் உறுப்பை இழந்த தொழிலாளர்கள் வாழ்நாள் முழுவதும் உழைப்புத் திறனை இழந்து, குடும்பத்திற்குப் பாராமாக இருக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது.

பணிச் சுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தொழிலாளர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி சிப்காட் பகுதியில் இயங்கி வரும் டெல்டா என்னும் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நாகநாதன் என்னும் தொழிலாளி உடலில் தீவைத்துக் கொண்டு தற்கொலை செய்துகொண்டார். தொழிற்சாலையின் பணிச் சுமையே தம்முடைய தற்கொலைக்குக் காரணம் என்று மருத்துவ சிகிச்சையில் இருந்தபொழுது விசாரணை அதிகாரியிடம் நாகநாதன் வாக்குமூலம் அளித்தும் ஆலை நிர்வாகத்தின் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், முதலாளி வர்க்கத்தைக் காப்பாற்றி வருகின்றது.

ஊதிய உயர்வு, 8 மணிநேரவேலை, கூடுதல் வேலை நேரத்திற்குக் கூடுதல் சம்பளம், முறையாக ஊதியத்தை வழங்குதல், ஊதிய வெட்டு, பணியிடங்களில் பாதுகாப்பு, பணி நிரந்தரம் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து ஒசூரில் பல்வேறு ஆலைகளில் தொழிலாளர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

தொழிலாளர்கள் தனித்தனி ஆலைகளில் நடைபெறும் போராட்டங்கள் திசை திருப்பப்பட்டும், ஒடுக்கப்பட்டும் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமலும் போராட்டத்தில் முன்னணியில் நின்ற தொழிலாளர்கள் பழிவாங்கப் பட்டும் வருகின்றனர்.

தொழிலாளர்கள் தங்கள் ஆலைகளில் தங்களுடைய பிரச்சினைகளுக்காக ஒன்றுபட்டு போராடுவதோடு மட்டுமல்லாமல் பிற ஆலைத் தொழிலாளர்களின் போராட்டங்களுக்கும் முழுமையான ஆதரவு கொடுத்து வலுப் படுத்தவேண்டும். ஒன்றிணைந்த போராட்டத்தின் மூலம்தான் தொழிலாளர் வர்க்கத்தின் நிகழ்கால நலன்களுக்குக் குறைந்தபட்ச உத்திரவாதம் கிடைக்கும். நிகழ் கால நலன்களுக்காகப் போராடும்போதே, ஒன்றிணைந்த போராட்டத்தின் மூலம் தொழிலாளர்கள் வர்க்க உணர்வு பெற்று தங்களைக் கூலி அடிமைத் தனத்திலிருந்து விடுவிக்கக் கூடிய எதிர்கால நலன்களுக்கான அரசியல் போராட்டக் களத்தை நோக்கி முன்னேற வேண்டும்.

 

மாறன்

Comments

Popular posts from this blog

விஜய்யின் வருகை – மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

  1967 தேர்தலுக்குப் பிறகு திமுக, அதிமுக என்ற இரண்டு திராவிடக் கட்சிகளே கடந்த சுமார் அறுபதாண்டுகளாக மாறி மாறி தமிழ் நாட்டை ஆண்டு வந்த நிலையில், அண்மையில் நடந்து முடிந்த பதினேழாவது சட்டமன்றத் தேர்தலில், அந்த இரண்டு கட்சிகளும் அமைத்திருந்த கூட்டணிகளை தனி ஒரு கட்சியாக எதிர்த்து நின்று அவற்றை வீழ்த்தியுள்ளது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். தனிக் கட்சியாக ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை இடங்களைப் பெறாவிட்டாலும், 107 இடங்களைப் பெற்று அதிக இடங்களைப் பெற்ற கட்சியாக இருக்கின்றது. பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் திமுக கூட்டணியே ஆட்சிக்கு வரும் என்று கணித்திருந்த நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி எதிர்பாராத ஒன்றாகவும் பெரும் வியப்பை அளிக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது. விஜய்யின் தவெக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்திருப்பார்கள் என்றும் சொல்வதற்கில்லை. ஏனென்றால் திமுக தனது ஆட்சிக் காலத்தில் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண், தவப் புதல்வன் போன்ற திட்டங்களின் மூலம் மாதம்தோறும் பெண்களுக்கும், மாணவர்களுக்கும் நிதி வழங்கி வருகிறது. மீண்டும் ஆட்சிக்...

தொழிலாளர் சட்டத் திருத்தங்களும் தொழிலாளர் வர்க்கமும்!

  இன்போசிஸ் நாராயணமூர்த்தி 19-11-2025 அன்று தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் இந்தியத் தொழிலாளர்கள் வாரத்திற்கு 72 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியதோடு, மோடி அவர்கள் வாரத்திற்கு 100 மணி நேரம் வேலை செய்வதாகவும் கூறினார். இதற்காக 9 -9 – 6 என்ற திட்டத்தை அவர் முன்மொழிந்துள்ளார், சீனாவில் சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தை மனமுவந்து பாராட்டியதோடு இந்தியாவில் சட்டப்படியாக இதனை அமல்படுத்த வேண்டும் என்றார். அதன்படி தொழிலாளர்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் வீதம், வாரத்திற்கு 6 நாள் என 72 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற திட்டத்தை அவர் முன்மொழிந்துள்ளார். 2021இல் சீன அரசு 12 மணி நேர வேலையை சட்டவிரோதம் என அறிவித்தது. வேலை நேர அதிகரிப்பால் தொழிலாளர்களின் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாகவும், பணிச்சுமை காரணமாக தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளதாகவும் சீன அரசு தெரிவித்தது. ஆனால், சீனாவில் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து படிப்பினைகளை எடுத்துக் கொள்ளாத இன்போசிஸ் நாராயண மூர்த்தி வேலை நேரத்தை ...

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ரவுடித்தனம்!

  வெனிசுலாவின் தலைவர் நிக்கோலாஸ் மது ரோ  போதைப் பொருளை அமெரிக்காவிற்குக் கடத்தும் கும்பலின் தலைவராக உள்ளார் எனக் கூறியும் அவர் பயங்கரவாதக் கும்பலுக்குத் தலைவராக உள்ளார் எனக் கூறியும் கடந்த சில மாதங்களாகவே அமெரிக்காவின் ட்ரம்ப் வெனிசுலாவைத் தம் கப்பற்படையைக் கொண்டு முற்றுகை இட்டிருந்தார். வெனிசுலாவிலிருந்து வெளியேறும் படகுகளைப் போதைப் பொருட்களைக் கடத்துவதாகக் கூறி விமானப் படைகளைக் கொண்டு தகர்த்து அப்பாவி மக்களைக் கொன்று குவித்து வந்தார். வெனிசுலாவிலிருந்து வெளி நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றிக்கொண்டு செல்லும் கப்பல்களைக் கடற்கொள்ளைக்காரனைப் போலக் கைப்பற்றித் தன் நாட்டிற்குக் கொண்டு சென்றார். இந்த நிலையில் ஜனவரி 3 ந்தேதி அதிகாலை சர்வதேச சட்டங்களையும், ஐக்கிய நாடுகளின் சபையின் விதிகளையும் மீறி, வெனிசுலாவின் இறையாண்மையையும் மீறி அமெரிக்க விமானப்படை அந்த நாட்டுத் தலைநகர் காரகஸ் மீது திடீர்த் தாக்குதலைத் தொடுத்து மதுரோவையும் அவரது மனைவி சிலியா ஃப்ளோரசையும் கைது செய்து அமெரிக்காவிற்குக் கொண்டு சென்றுள்ளது. இந்த அநீதியான செயலை அனைத்து நாடுகளும் கண்டித்துள்ளன. உண்மையில் மதுரோ போதைப் பொரு...