Skip to main content

பரவட்டும் தீ!

 

செப்டம்பர் 17 அன்று ஃபிரான்சின் வால்-டி - மார்ன் மாகாணத்தில் உள்ள க்ரேடெய்ல் என்ற இடத்தில் இருக்கும் ஒரு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் தொடங்கிய போராட்டம் இன்று ஐரோப்பாவில் பல நாடுகளில் பற்றிப் பரவி பெரும் காட்டுத் தீயாக மாறியுள்ளது. 

தொழிலாளர்களும் ஏழைகளும் வாழும் புறநகர்ப்பகுதியில் உள்ள லைஸ் செயின்ட் எக்ஸ்பெரி என்னும் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் பள்ளியில் இடிந்து விழும் நிலையில், ஒழுகும் கூரைகளைக் கொண்ட பழுதடைந்த கட்டிடங்களில்தான் நாங்கள் அமர வேண்டியுள்ளது. போதிய ஆசிரியர்களும் உதவியாளர்களும் இல்லை. படித்து முடித்த பிறகு வேலை கிடைக்கும் என உறுதியாகக் கூறமுடியாத நிச்சயமற்ற நிலை. இதற்குத் தீர்வு வேண்டும்' எனக் கூறிப் போராட்டத்தில் இறங்கினர். இந்தச் செய்தி சமூக ஊடகங்கள் மூலம் நாடெங்கும் பரவியது. சில வாரங்களில் 600 பள்ளிக்கூடங்களில் உள்ள மாணவர்கள், பல பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள், தொழிற்சங்கங்கள், அலுவலகப்பணியாளர்கள், வேலை இல்லாதவர்கள், ஓய்வூதியர்கள் என சமூகத்தின் பல்வேறு பகுதியினரும் பள்ளி மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகத் தெருக்களில் இறங்கினர்.

மாணவர்களின் கோரிக்கைகளுடன் மக்களின் பிரச்சினைகளான உணவுப் பொருட்களின் விலையேற்றம், எரிபொருளின் விலையேற்றம், வீட்டு வாடகை உயர்வு, குடியிருக்கப் போதிய வீடுகள் இல்லாமை, விலை உயர்வைச் சரிக்கட்டும் அளவுக்கு ஊதிய உயர்வு இல்லாமை, நிச்சயமற்ற வேலையின் தன்மை, அதிகரித்து வரும் ஏற்றத்தாழ்வு ஆகியவை இணைந்து மாபெரும் மக்கள் போராட்டமாக வெடித்தது. 

இந்தப் பிரச்சினைகளுக்குக் காரணம் இம்மானுவேல் மேக்ரான் தலைமையில் உள்ள முதலாளிய அரசாங்கத்தின் தாராளவாதக் கொள்கைகளும் நடவடிக்கைகளும்தான். முதலாளிகளுக்கு அரசாங்கம் வரிச்சலுகைகளை அளித்தது; கார்ப்பரேட் வருமானத்தின் மீது இருந்த 33.5% வரியை 25% ஆகக் குறைத்தது; இலாபம் தரக்கூடிய அரசின் நிறுவனங்களைத் தனியார்மயமாக்கியது; தொழிலாளர் சட்டங்கள், ஓய்வூதியச் சட்டங்கள், வேலை இல்லாத காலத்து காப்புச் சட்டங்கள் ஆகியவற்றில் மாற்றத்தைக் கொண்டு வந்து மக்கள் நலன்களுக்காக ஒதுக்கப்படும் அரசாங்கத்தின் நிதியைக் குறைத்தது; சிக்கன நடவடிக்கைகள் எனக் கூறி கல்வி, சுகாதாரம், போக்குவரத்து ஆகியவற்றுக்கான நிதியைக் குறைத்தது; 2026ல் மட்டும் 4000 ஆசிரியர்களின் பதவிக்கு முடிவு கட்டியது; அதே சமயத்தில் இராணுவத்திற்காக 600 கோடி யூரோ டாலர்களை ஒதுக்கியது; முதலாளிகளுக்கான வரிச்சலுகைகளையும் அதிகரித்தது. இத்தகைய நடவடிக்கைகளால் நாட்டைப் பெரும் கடன் சுமையில் ஆழ்த்தியுள்ளது மேக்ரான் அரசாங்கம். இப்போதைய அதன் பொதுக் கடன் 4 இலட்சம் கோடி அமெரிக்க டாலர்களாகும், அதாவது அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 120% ஆகும்.

நீறு பூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருந்த மக்களின் பிரச்சினைகள் மாணவர்களின் போராட்டத்தால் கிளறி விடப்பட்டது. அக்டோபர் 17ந் தேதி எட்டு இலட்சம் மக்கள் போராட்டத்தில் இறங்கினர். நாடு முழுவதும் போராட்டம் பரவியது. அமைதியாகப் போராடிய மக்கள் மீது போலீஸ் அடக்குறையைக் கட்டவிழ்த்து விட்டது. கோபம் கொண்ட மக்களில் ஒரு பகுதியினரால் பாரிசில் புகழ்பெற்ற பல கட்டிடங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. பல வாகனங்கள் தீக்கு இரையாக்கப்பட்டன. பல வணிக வளாகங்கள் சூறையாடப்பட்டன. நூற்றுக்கணக்கான சிறுவர்கள் உட்பட 6000 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 

'முதலாளிய ஊடகங்கள் அமைதியான எங்களுடைய போராட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வில்லை; எங்கள் பொதுக்கூட்டங்களின் புகைப்படத்தை அவை வெளியிடவில்லை; எங்கள் துண்டுப் பிரசுரங்கள் என்ன கூறுகின்றன என்பது பற்றி எதுவும் கூறவில்லை. மக்கள் மீது தொடுக்கப்பட்ட போலீசின் வன்முறை பற்றிப் பேசவில்லை; ஆனால் போலீசின் வன்முறைக்கு எதிர்வினையாற்றிய சிறு பகுதியினரை வன்முறையாளர்களாகக் காட்டுவதற்கு அவை முக்கியத்துவம் கொடுக்கின்றன. அதன் மூலம் அரசின் அடக்குமுறையை நியாயப்படுத்துகின்றன; திட்டமிட்டே அவை இவ்வாறு செய்கின்றன' என்று கூறி போராட்டக்காரர்கள் முதலாளிய ஊடகங்களின் ஒரு பக்கச் சார்பை அம்பலப்படுத்துகின்றனர். 

ஃபிரான்சில் தொடங்கிய இந்தப் போராட்டம் இத்தாலி, பெல்ஜியம், ஸ்பெயின், போர்ச்சுகல், ஜெர்மனி, அல்பேனியா ஆகிய நாடுகளுக்கும் பரவியுள்ளது.

இந்த நாடுகளில் நடைபெறும் மக்கள் போராட்டங்களுக்கு எல்லாம் பொதுவான காரணங்களாக இருப்பவை உணவு, எரிபொருள் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள கடுமையான விலை ஏற்றங்கள், வீட்டு வாடகை பன்மடங்கு அதிகரிப்பு, விலை வாசிகளின் உயர்வுக்கு ஏற்ப கூலி உயராத நிலை, கடினமான வேலை நிலைமைகள், கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்ற பொதுச் சேவைகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியை அரசாங்கம் குறைத்து அந்தச் சேவைகளை சீர் குலைத்தது, அதனால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிகப்படியான பொருளாதாரச் சுமைகள், மாணவர்களும் இளைஞர்களும்  எதிர் கொள்ள வேண்டிய நிச்சயமற்ற எதிர்காலம், சமூகத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான ஏற்றத்தாழ்வுகள்.

இந்தப் பிரச்சினைகளுக்கு எல்லாம் காரணமாக இருப்பது அந்த நாடுகளில் உள்ள முதலாளி வர்க்கத்தின் சுரண்டலும் அதைக் காப்பாற்றி வரும் அரசும்தான். முதலாளி வர்க்கம் ஒரு பக்கம், தன்னுடைய இலாபத்திற்காகவும் மூலதனக் குவிப்புக்காகவும் மக்களின் உழைப்பைக் கடுமையாகச் சுரண்டி வருகிறது; இன்னொரு பக்கம், தன்னுடைய இலாபத்தைக் குறையாமல் பார்த்துக் கொள்ள பெரும் வரிச் சலுகைகளைப் பெறுகிறது. அதனால் ஏற்படும் நிதிப் பற்றாக்குறையைச் சரி செய்ய அரசாங்கம் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்ற பொதுச் சேவைகளுக்கு வழங்கி வரும் நிதியைக் குறைத்து மக்களைப் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளுகிறது. மேலும், முதலாளி வர்க்கம் தன்னுடைய சுரண்டல் அமைப்பைக் கட்டிக் காப்பாற்றுவதற்காக இராணுவத்துக்கும் இராணுவத் தளவாடங்களுக்கும் போலீசுக்கும் அதிகாரவர்க்கத்தினருக்கும் பெரும் அளவு செலவு செய்கிறது. இக்காரணங்களால் ஏற்படும் நிதிச் சுமை அனைத்தும் நேர்முக வரியாகவும் மறைமுக வரியாகவும் மக்கள் தலையில் வீழ்கிறது. 

அது மட்டுமல்லாமல், நெருக்கடியில் சிக்கி வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கும் முதலாளி வர்க்கம் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள சந்தைக்காகவும் மூலப்பொருட்களுக்காகவும் கோரமான யுத்தங்களில் ஈடுபட்டு வருகிறது. ஆயுதத் தயாரிப்பும் ஆயுத விற்பனையும் இன்று முதலாளியத்திற்குப் பெரும் இலாபம் அளிக்கும் தொழிலாக மாறியுள்ளது. அதற்கு உலகில் ஏதாவது ஒரு பகுதியில் யுத்தம் நடந்து கொண்டிருக்க வேண்டும். அப்பொழுதான் ஆயுத விற்பனையின் மூலம் தொடர்ந்து இலாபத்தைப் பெற முடியும். இஸ்ரேல் காசாவில் நடத்திய இனப்படுகொலை, ரசியா - உக்ரைன் யுத்தம், அமெரிக்க, இஸ்ரேல்- ஈரான் யுத்தம், சூடானில் நடந்து வரும் சண்டை - இவை அனைத்தும் ஆயுதம் தயாரிக்கும் முதலாளிகளுக்கு இலாபத்தை வாரி வழங்கும் வற்றாத ஜீவநதிகள் போன்று உள்ளன. இஸ்ரேல் காசாவின் மீது நடத்திய போரில் இந்திய ஆயுதம் தயாரிக்கும் முதலாளிகள் பெரும் இலாபம் அடைந்ததை நாம் இங்கு நினைவு கூரலாம். இவ்வாறு முதலாளி வர்க்கம் தனது இலாபத்திற்காக மரண வியாபரியாக, மனித குலத்திற்கே எதிரியாக மாறி உள்ளது.

மனித குலத்திற்கே எதிரியாக மாறி இருக்கும் முதலாளியம் இன்று கிழடு தட்டி, மரணப் படுக்கையில் உள்ளது. வரலாற்றில் அதன் பாத்திரம் முடிவுக்கு வந்து விட்டது. இனியும் அது நீடிப்பதற்கு நியாயமான காரணம் எதுவும் இல்லை. அதைத்தான் இன்று ஐரோப்பிய நாடுகளில் அலை அலையாக மேலெழுந்து வரும் மக்கள் போராட்டங்கள் சுட்டிக் காட்டுகின்றன. மக்கள் தங்களுடைய போராட்ட அனுபவங்களில் இருந்தும் வரலாற்று அனுபவங்களிருந்தும் படிப்பினைகளைக் கற்றுக் கொண்டு சுரண்டலற்ற, சமத்துவ சமூகத்தைப் படைப்பதை நோக்கி முன்னேறுவார்கள். வெற்றி பெறுவார்கள். 

பரவட்டும் தீ! 

மு வசந்தகுமார்

Comments

  1. மாணவர் போரட்டம வெல்க.✊✊✊

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

விஜய்யின் வருகை – மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

  1967 தேர்தலுக்குப் பிறகு திமுக, அதிமுக என்ற இரண்டு திராவிடக் கட்சிகளே கடந்த சுமார் அறுபதாண்டுகளாக மாறி மாறி தமிழ் நாட்டை ஆண்டு வந்த நிலையில், அண்மையில் நடந்து முடிந்த பதினேழாவது சட்டமன்றத் தேர்தலில், அந்த இரண்டு கட்சிகளும் அமைத்திருந்த கூட்டணிகளை தனி ஒரு கட்சியாக எதிர்த்து நின்று அவற்றை வீழ்த்தியுள்ளது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். தனிக் கட்சியாக ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை இடங்களைப் பெறாவிட்டாலும், 107 இடங்களைப் பெற்று அதிக இடங்களைப் பெற்ற கட்சியாக இருக்கின்றது. பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் திமுக கூட்டணியே ஆட்சிக்கு வரும் என்று கணித்திருந்த நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி எதிர்பாராத ஒன்றாகவும் பெரும் வியப்பை அளிக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது. விஜய்யின் தவெக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்திருப்பார்கள் என்றும் சொல்வதற்கில்லை. ஏனென்றால் திமுக தனது ஆட்சிக் காலத்தில் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண், தவப் புதல்வன் போன்ற திட்டங்களின் மூலம் மாதம்தோறும் பெண்களுக்கும், மாணவர்களுக்கும் நிதி வழங்கி வருகிறது. மீண்டும் ஆட்சிக்...

தொழிலாளர் சட்டத் திருத்தங்களும் தொழிலாளர் வர்க்கமும்!

  இன்போசிஸ் நாராயணமூர்த்தி 19-11-2025 அன்று தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் இந்தியத் தொழிலாளர்கள் வாரத்திற்கு 72 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியதோடு, மோடி அவர்கள் வாரத்திற்கு 100 மணி நேரம் வேலை செய்வதாகவும் கூறினார். இதற்காக 9 -9 – 6 என்ற திட்டத்தை அவர் முன்மொழிந்துள்ளார், சீனாவில் சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தை மனமுவந்து பாராட்டியதோடு இந்தியாவில் சட்டப்படியாக இதனை அமல்படுத்த வேண்டும் என்றார். அதன்படி தொழிலாளர்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் வீதம், வாரத்திற்கு 6 நாள் என 72 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற திட்டத்தை அவர் முன்மொழிந்துள்ளார். 2021இல் சீன அரசு 12 மணி நேர வேலையை சட்டவிரோதம் என அறிவித்தது. வேலை நேர அதிகரிப்பால் தொழிலாளர்களின் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாகவும், பணிச்சுமை காரணமாக தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளதாகவும் சீன அரசு தெரிவித்தது. ஆனால், சீனாவில் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து படிப்பினைகளை எடுத்துக் கொள்ளாத இன்போசிஸ் நாராயண மூர்த்தி வேலை நேரத்தை ...

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ரவுடித்தனம்!

  வெனிசுலாவின் தலைவர் நிக்கோலாஸ் மது ரோ  போதைப் பொருளை அமெரிக்காவிற்குக் கடத்தும் கும்பலின் தலைவராக உள்ளார் எனக் கூறியும் அவர் பயங்கரவாதக் கும்பலுக்குத் தலைவராக உள்ளார் எனக் கூறியும் கடந்த சில மாதங்களாகவே அமெரிக்காவின் ட்ரம்ப் வெனிசுலாவைத் தம் கப்பற்படையைக் கொண்டு முற்றுகை இட்டிருந்தார். வெனிசுலாவிலிருந்து வெளியேறும் படகுகளைப் போதைப் பொருட்களைக் கடத்துவதாகக் கூறி விமானப் படைகளைக் கொண்டு தகர்த்து அப்பாவி மக்களைக் கொன்று குவித்து வந்தார். வெனிசுலாவிலிருந்து வெளி நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றிக்கொண்டு செல்லும் கப்பல்களைக் கடற்கொள்ளைக்காரனைப் போலக் கைப்பற்றித் தன் நாட்டிற்குக் கொண்டு சென்றார். இந்த நிலையில் ஜனவரி 3 ந்தேதி அதிகாலை சர்வதேச சட்டங்களையும், ஐக்கிய நாடுகளின் சபையின் விதிகளையும் மீறி, வெனிசுலாவின் இறையாண்மையையும் மீறி அமெரிக்க விமானப்படை அந்த நாட்டுத் தலைநகர் காரகஸ் மீது திடீர்த் தாக்குதலைத் தொடுத்து மதுரோவையும் அவரது மனைவி சிலியா ஃப்ளோரசையும் கைது செய்து அமெரிக்காவிற்குக் கொண்டு சென்றுள்ளது. இந்த அநீதியான செயலை அனைத்து நாடுகளும் கண்டித்துள்ளன. உண்மையில் மதுரோ போதைப் பொரு...