Skip to main content

நீம் (NEEM) இளைஞர்களின் வளர்ச்சிக்கா? முதலாளிகளின் சுரண்டலுக்கா?


நீம் (NEEM - National Employment Enhancement Mission) திட்டம் கடந்த 2013-ல் காங்கிரஸ் அரசாங்கத்தால் அறிமுகம் செய்யப்பட்டது. 2017ல் பாரதிய ஜனதா அரசு அதில் பல மாற்றங்களைச் செய்து நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது.

            பள்ளி, கல்லூரி படிப்பை முடித்து விட்டு வரும் இளைஞர்களுக்குத்  தேவையான  தொழில்நுட்பத்  திறன் இல்லை என்றும், அதனால் அவர்களுக்குப் பன்னாட்டு நிறுவனங்களில்   வேலை கிடைப்பதில்லை என்றும்,‌ ஆகையால் அவர்களுக்கு தேவையான தொழில்நுட்பத் திறனை வழங்கி அதன் மூலம் அவர்களை வேலைக்குத் தயார் செய்வதற்காக இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறுகிறது. அதற்காக   படித்து முடித்து விட்டு வரும் இளைஞர்களுக்கு நிறுவனங்கள் மூன்று ஆண்டுகள் பயிற்சி அளிக்க வேண்டும் என இத்திட்டம் கூறுகிறது.

உண்மையில் இந்தத் திட்டம் இளைஞர்களின் வேலை இல்லாத் திண்டாட்டத்தைப் போக்குகிறதா?
            உண்மையில் இளைஞர்களின் நலன் மீது இந்த அரசுக்கு அக்கறை இருந்திருந்தால் படிக்கும் காலத்திலேயே கல்வி தகுதிக்கேற்ப தொழில்நுட்பப் பயிற்சி அளித்து அவர்களை வேலைக்குத் தயார்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அதைச் செய்யாமல் நீம் பயிற்சி அளிப்பது என்பதன் நோக்கம் அவர்களின் உழைப்பு சக்தியை முதலாளிகளின்  சுரண்டலுக்கு பயன்படுத்த வேண்டும் என்பதுதான்.

            பெரும் நிறுவனங்களில் ஒவ்வொரு நிரந்தரத் தொழிலாளிக்கும் பல்லாயிரக்கணக்கில் சம்பளம் தர வேண்டும். அது போக சட்டப்படி  அவர்களுக்குப் பல உரிமைகளையும் வருங்கால வைப்பு நிதி, ஓய்வு காலத்தில் பணிக்கொடை போன்ற நிதிப் பாதுகாப்புகளையும் வழங்க வேண்டும்.‌
ஆனால் நீம் திட்டத்தின் கீழ் பயிற்சி வழங்கப்படும் இளைஞர்களுக்குக் குறைந்தபட்சக் கூலி வழங்கினால் போதும், அவர்களுக்கு பிற உரிமைகளையும் பாதுகாப்புகளையும் வழங்கத் தேவையில்லை. அதே சமயத்தில்  அவர்களை ஒரு நிரந்தரத் தொழிலாளி செய்யும் அனைத்து வேலைகளிலும் ஈடுபடுத்துவதன் மூலம் அவர்களின் உழைப்பிலிருந்து அதிக அளவு இலாபம் அடைய முடியும்.

            தமிழ்நாட்டில் மட்டும் ஆண்டு தோறும் பத்து இலட்சத்திற்கும் மேலான இளைஞர்கள் படித்து முடித்து விட்டு வேலை தேடி வெளியில் வருகின்றனர். அவர்களில் பெரும்பான்மையான இளைஞர்கள் தகுதிக்கேற்ற வேலையின்மையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

            நீம் திட்டத்தின் கீழ் பயிற்சி பெறும் அனைத்து இளைஞர்களுக்கும் பயிற்சி முடித்த பின் பயிற்சி பெற்ற நிறுவனத்தில் (அல்லது வேறு எந்த நிறுவனத்திலும்) நிரந்தர வேலை அளிப்பதில்லை. விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலர் மட்டுமே நிரந்தரமாக்கபடுகின்றனர். அதுவரை நீம் பயிற்சி தொழிலாளர்களை ஒட்ட சுரண்டிய முதலாளிகள், பயிற்சி முடிந்த பின்னர், அவர்களை வீட்டுக்கு அனுப்பி விடுகின்றனர். ‌அந்த  இளைஞர்களுக்குப் பணிக் காலத்தில் குறைந்தபட்சக் கூலியே அளிக்கப்படுகிறது. அந்தக் குறைந்தபட்சக் கூலியிலும்  பாதியை அரசாங்கம் தந்து  விடுகிறது. இவ்வாறு அரசாங்கம், மக்களின் வரிப் பணத்தை எடுத்து முதலாளிகளுக்கு வாரி வழங்குகிறது.


         
        நீம் பயிற்சி பெற்ற பிறகு, தொழில்நுட்பப் பயிற்சி பெற்றிருந்தும் அந்த இளைஞர்கள் தொடர்ந்து வேலையின்றி அலைய வேண்டியுள்ளது. அதே சமயத்தில் தொழில்நுட்பப் பயிற்சி அளித்தல் என்ற பெயரில் நிறுவனங்களுக்குக் குறைந்த கூலியில் பணியாளர்கள் தொடர்ந்து கிடைத்து வருகின்றனர். நிறுவனங்களும் மிகக் குறைவான எண்ணிக்கையில் நிரந்தரத் தொழிலாளர்களை வைத்துக் கொண்டும் பெரும் அளவில் பயிற்சித் தொழிலாளர்களுக்குக் குறைந்த கூலி கொடுத்தும் அவர்களின் உபரி உழைப்பைச் சுரண்டிப் பெரும் அளவு இலாபம் சம்பாதிக்கின்றன.
            நிரந்தரப் தொழிலாளர்கள் செய்யும் வேலையில் நீம் பயிற்சி தொழிலாளர்களை ஈடுபடுத்துவதன் மூலம் நிரந்தரப் தொழிலாளர்களின் எண்ணிக்கையை நிறுவனங்கள் குறைத்து வருகின்றன.

இந்தத் திட்டம் தொழிலாளர் சட்டங்களைத்  தகர்த்தெறிகிறது!

            தொழில் தகராறு சட்டம் 1947ன் படி, ஓராண்டு காலத்தில் 240 நாட்கள் வேலை செய்த தொழிலாளர்களுக்குச் சில குறிப்பிட்ட உரிமைகளை வழங்க வேண்டும். மேலும் தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தொழிலாளர்களுக்கு நிரந்தரத் தகுதி வழங்கல்) சட்டம் - 1981, 24 மாதங்களில் சட்டப்பூர்வ விடுமுறை, கூலியுடன் கூடிய விடுப்பு, வேலைநிறுத்தம் அல்லது ஆலைமூடல் இன்னபிற உட்பட 480 நாள் வேலை செய்து செய்திருந்தால் அவருக்குப் பணி  நிரந்தரம் செய்யப்பட வேண்டும்  என்றும், நிரந்தரத் தொழிலாளர்களுக்கு உரிய அனைத்து உரிமைகளும் பலன்களும் அவருக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறது. ‌
         ஆனால் NEEM திட்டமோ நிறுவனங்களில் தொழில்நுட்பப் பயிற்சி பெறுபவர்களுக்கான பொறுப்பை ஏஜண்டுகள் என்று கூறப்படும் இடைத்தரகர்களிடம் ஒப்படைக்கிறது.

இந்தத் திட்டத்தின்படி,

       1.     ஏஜண்டுகள் திறன் பெறாத தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்சக் கூலி கொடுத்தால் போதும்.
2.  இந்தத் தொழிலாளர்களுக்கு எந்தவிதமான சட்ட பலன்களையும் வழங்கத் தேவையில்லை. 
3. வேலையில் ஈடுபடுத்தப்படும் பயிற்சித் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு NEEM ஏஜண்டுகள்தான் பொறுப்பு .ஒரு வேளை விபத்து ஏதும் ஏற்படும் என்றால் தொழிலாளர் இழப்பீடு சட்டத்தின்படி (workmen compensation act) ஏஜண்டுதான் இழப்பீடு அளிப்பார்.

            பயிற்சித் தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியச் சட்டம், தொழிலாளர் இழப்பீடு சட்டம் இவைகள் மட்டுமே பொருந்தும்.

            நிறுவனங்கள் இனி நிரந்தரத் தொழிலாளர்களைக் குறைவாக வைத்துக் கொண்டு, பயிற்சித் தொழிலாளர்களை அதிக அளவில் அமர்த்திச் செயல்படும். இந்த நிலையில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும், நிரந்தரப் பணி என்பதும் வெறும் கனவாகவே இருக்க முடியும்.

     காங்கிரஸ் அரசாங்கமாக இருந்தாலும் சரி அல்லது பாரதிய ஜனதா அரசாங்கமாக இருந்தாலும் சரி, அது முதலாளிகளின் இலாபத்தைக் காப்பாற்றுவதற்கான அரசாங்கமாகவே இருக்கிறதே தவிர பெரும்பான்மையான  மக்களின், தொழிலாளர்களின் நலன்களைக் காப்பாற்றும் அரசாங்கமாக இருப்பதில்லை. இதனால்தான் நாட்டில் மக்களிடையே ஏற்றத்தாழ்வு மிகப் பெரும் அளவு அதிகரித்து வருகிறது.

       ஆக்ஸ்ஃபாம் சர்வதேச அமைப்பின் நிர்வாக இயக்குநர் வின்னிபான்யிமா, ''இந்தியாவில் உள்ள ஏழைகள் அடுத்த  வேளை சாப்பிடுவதற்கும், தங்களின் குழந்தைகளின் மருத்துவச் செலவுக்கும் போராடிவரும் நிலையில், சில குறிப்பிட்ட கோடீஸ்வரர்களின் சொத்துகளின் அளவு மட்டும் வியக்கத்தக்க வகையில் ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது” என்று கூறுகிறார். அவரது வார்த்தைகளின் மூலம் இந்திய மக்களின் நிலைமையையும் இந்த அரசாங்கம் யாருக்காகச் செயல்பட்டு வருகிறது என்பதையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

     இந்தியாவின் 50 சதவீத சொத்துகள் 9 கோடீஸ்வரர்களிடம் மட்டும் இருக்கிறது, 10 சதவீதக் கோடீஸ்வரர்கள் 77 சதவீத சொத்துகளை வைத்துள்ளனர் என்று ஆக்ஸ்ஃபாம் அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியாவில் கோடீஸ்வரர்களுக்கு அளிக்கப்படும் வரிச்சலுகைகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதும், ஏழைகள் ஆண்டுக்கு ஆண்டு மேலும் ஓட்டாண்டிகளாகி வருவதும் அதிர்ச்சி அளிக்கிறது. இது ஆரோக்கியமானதல்ல என்றும் அது எச்சரித்துள்ளது
            முதலாளிய வர்க்கத்தின் ஆட்சியில் இதைத் தவிர மக்கள் வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. இந்த ஆட்சியில் இலட்சம் கோடிகள் என்ற அளவில் முதலாளிகளின் சொத்துகள் ஆண்டுதோறும் அதிகரித்து வருகையில் மக்களுக்கு மிஞ்சுவதோ வேலையில்லாத் திண்டாட்டமும் ஏழ்மையும் வறுமையும் பட்டினியும்தான். மக்கள் அவர்களுடைய வாழ்வுக்கு அவசியமான பொருள்களைக் கூட வாங்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். அதன் விளைவைத்தான்  இன்று இந்த நாட்டில் எதிர் கொண்டுள்ளோம்.
           
   உற்பத்தியான பொருட்களை விற்க முடியாத நிலை இன்று முதலாளிகளுக்கு ஏற்பட்டுள்ளது.  அதன் பொருள் அனைத்து மக்களும் தமக்குத் தேவையான பொருட்களைப் பெற்றுத் தன்னிறைவு அடைந்து விட்டார்கள் என்பதல்ல. மாறாக, அவர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கக் கூட அவர்கள் கையில் பணம் இல்லை என்பதுதான். ஏனென்றால் முதலாளிகளின் சுரண்டலால் இந்த நாட்டில் மிகப் பெரும்பான்மையான மக்கள் ஓட்டாண்டிகளாக்கப்பட்டும், வேலை இல்லாமல் ஆக்கப்பட்டும் உள்ளதால் அவர்களுக்குத் தேவையான அவசியமான பொருட்களைக் கூட வாங்க முடியாத நிலையில் உள்ளனர். அதனால்தான் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கின்றன. ஒரு பக்கம் பொருட்களின் தேக்கம், இன்னொரு பக்கம் அவசியமான பொருட்களைக் கூட  வாங்க முடியாத வறிய நிலையில் பெரும்பான்மையான மக்கள். இதுதான் முதலாளிய சமூகத்தின் முரண்பாடு. இந்தச் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ள முதலாளிகள் இன்று விழிபிதுங்கி நிற்கின்றனர்.     

            இந்த நிலை மாற வேண்டுமானால்,  முதலாளிகளின் இலாபத்தையே நோக்கமாகக்  கொண்டு செயல்படும், மக்களை ஓட்டாண்டிகளாக்கும் முதலாளிய வர்க்கத்தின் ஆட்சிக்குப் பதிலாக, மக்களின் தேவைகளின் அடிப்படையில் செயல்படும், முதலாளிகளின் சுரண்டலை ஒழித்து மக்களிடையே நிலவி வரும் ஏற்றத்தாழ்வை அகற்றும்,   அனைவருக்கும் வாழ்வையும் வளத்தையும் அளிக்கும், உழைக்கும் மக்களுக்கு ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் தொழிலாளி வர்க்கத்தின் தலைமையிலான சோசலிச சமூகம் மலர வேண்டும். அதைத் தவிர இதற்குத் தீர்வு வேறு எதுவும் இல்லை.
-  அறிவன்

Comments

  1. உபரி உழைப்பைச் சுரண்டிப் பெரும் அளவு இலாபம் சம்பாதிக்கின்றன.

    நீம் தொழிலாளர்
    உபரி போன்ற வார்த்தைகளை எளிமையாக புரிந்து கொள்ள எழுதவும்.

    ReplyDelete
  2. பெரும் நிறுவனங்களில் ஒவ்வொரு நிரந்தரத் தொழிலாளிக்கும் பல்லாயிரக்கணக்கில் சம்பளம் தர வேண்டும்.

    ஒப்பந்த & தற்காலிக, நீம் தொழிலாளர்கள் அவர்களுக்கு இது கசப்பான & Ego , மனநிலை நிரந்தர தொழிலாளிக்கு எதிராக வருத்தமும் வேதனை பெற செய்யும் எனவே மாற்ற அதிக சம்பளம் வழங்குகிறார்கள் எழுதவும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சாம்சங் தொழிலாளர் போராட்டம்: தலைமைக்கு வெற்றி - தொழிலாளர்களுக்கு பின்னடைவு

  தொழிற்சங்க அங்கீகாரத்தை முதன்மைக் கோரிக்கையாகவும் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் 37 நாட்களுக்கும் மேலாக வேலைநிறுத்தம் செய்து வந்த ‘ சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் ’ போராட்டம் , அது முன்வைத்த கோரிக்கைகளில் எதுவும் நிறைவேற்றப்படாமலேயே 15.10.2024 அன்று முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.   போராட்டங்கள் எப்பொழுதும் வெற்றியை மட்டுமே தருவதில்லை , வெற்றி மற்றும் தோல்வி இரண்டுமே மாறி மாறி வரக்கூடியதுதான் போராட்டக்களம். சில நேரங்களில் பெரும் இழப்புகளோடு கூட போராட்டக் களத்திலிருந்து பின்வாங்க வேண்டிய சூழல் ஏற்படும் , அந்தச் சூழலை உணர்ந்து போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டிய தேவையும் ஏற்படும். இதில் ஏற்பட்ட அனுபவத்தைத் தொகுத்துக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதற்கான படிப்பினையை இது கொடுக்கும். ஆனால் , போராட்டத்தின் போக்கு தொழிலாளர்களின் நலனை முன்னிறுத்தாமல் , ஏமாற்றும் போக்கைக் கைக்கொள்ளும் பொழுது அது ஒட்டுமொத்தத் தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்கே எதிராகக் கொண்டு போய் விடுகின்றது.   சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்திற்குத் தலைமை கொடுத்

வேலை பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் என்னும் நிறுவனம் ஒசூர் பகுதியில் 1998 முதல் செயல்பட்டு வருகின்றது . இது வெள்ளீயத்தால் ( தகரத்தால் ) ஆன கொள்கலன்களை , தகரக்குவளைகளை உற்பத்தி செய்கின்றது . இந்த ஆலையின் முதலாளி இந்தியாவை பூர்வீமாக கொண்டவராக இருந்தாலும் , தற்பொழுது கென்யாவில் வசித்து வருகின்றார் . தொடக்கம் முதலே இந்த ஆலையானது தொழிலாளர்களின் உழைப்பை வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்து வருகின்றது . வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் நீண்டநாட்கள் பணிபுரிந்து வந்தாலும் அவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யாமலும் , நியாயமான ஊதியம் வழங்காமலும் தொழிலாளர்களை வஞ்சித்து வந்தது . தொழிலாளர்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து 52 தொழிலாளர்கள் மட்டும் நிரந்தரம் செய்யப்பட்டனர் . இவர்களும் ஆறு வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் , பயிற்சித் தொழிலாளர்கள் என மாற்றிமாற்றி அவர்களை வகைபடுத்தி பின்னரே நிரந்தரம் செய்யப்பட்டனர் . அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைக்கப்பட்டுச் சுரண்டப்பட்டு வருகின்றனர் . தற்பொழுது வரை 450 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்பட

பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் சீர்த்திருத்தவாதத்தில் வீழ்ந்துள்ள இடதுசாரி இயக்கங்கள்

இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இடதுசாரிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் சில அமைப்புகளின் போக்குகள் அவர்களின் சீர்த்திருத்தவாதக் கண்ணோட்டத்தை அம்பலபடுத்தி வருகின்றன. நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த காங்கிரசு கட்சி இந்திய முதலாளி வர்க்கத்தின் வளர்ச்சிக்கும் சுரண்டலுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்தும் , பெரும் மூலதனம் தேவைப்படும் கனரகத் தொழில்களை மக்களுடைய வரிப் பணத்திலிருந்து அமைத்துக் கொடுத்தும், ஆரம்பக் கட்டத்தில் பன்னாட்டு மூலதனங்களின் போட்டியிலிருந்து அவர்களைப் பாதுகாத்தும் , பின்னர் இந்திய முதலாளிகள் சர்வதேச அளவில் சந்தையைப் பிடிக்கவும் , முதலீடு செய்யவும் உலகமயமாக்கல் கொள்கையை முன்னெடுத்தும் தொடர்ந்து சேவை செய்து வந்தது. அதே நேரத்தில் தொழிலாளர்களின் நலனுக்காகவும் , விவசாயிகளின் நலனுக்காகவும் , ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும் போராடிய இடதுசாரிகள் , ஜனநாயக அமைப்புகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி ஒடுக்கி வந்தது. வீரம் செறிந்த தெலுங்கானா மக்களின்