தமிழகத்தில் நீட் (NEET) நுழைவுத் தேர்வு இரத்து செய்வது குறித்து ஓய்வு பெற்ற
நீதிபதி ஏ.கே.இராசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. நீட் நுழைவுத் தேர்வின் காரணமாக தமிழக மாணவர்கள்
மருத்துவப் படிப்பைப் பெறமுடியாமல் பாதிக்கப்பட்டு வருவதாகவும், நீட் தேர்வை ஒழித்துக்கட்டி தமிழக மாணவர்களுக்கு
மருத்துவம் பயில்வதற்கான வாய்ப்புகளை மீட்டெடுக்கவேண்டும் என்றும் பிரச்சாரங்கள் முதலாளித்துவக்கட்சிகளாலும், முற்போக்காளர்கள் என்று தங்களை அழைத்துக்
கொள்ளும் சிலராலும் தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றன.
நீட் நுழைவுத் தேர்விற்குப் பிறகு தமிழக
மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதில் என்ன விதமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன? அதற்கு முன்பு நிலைமை எப்படி இருந்தது? அதனுடைய
அடிப்படையான காரணங்கள் என்னென்ன என்பதனைப் பற்றி எந்தவிதப் புரிதலும் இல்லாமல் நீட்
தேர்வு தமிழக மாணவர்களை வஞ்சிக்கிறது எனக் கூறி மாணவர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப்பட்டு
வருகின்றது.
வசதி
படைத்தவர்களுக்கே மருத்துவக் கல்வி!
நீட் தேர்வு மட்டுமல்லாமல், இதற்கு முன்பான தேர்வு முறையும் கூட தனியார் பள்ளிகளில் படித்த, வசதி படைத்த தமிழக மாணவர்கள் மட்டுமே பயன்பெறும் வகையில்தான் இருந்தது. 2017 நீட் தேர்வு நடைமுறைக்கு வருவதற்கு முன்னர், தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களே பன்னிரெண்டாம் வகுப்பில் அதிகளவில் மதிப்பெண்கள் பெற்று பெருமளவிலான மருத்துவ இடங்களைக் கைப்பற்றினர்.
2006 லிருந்து 2016 ஆம் ஆண்டு வரையிலான பத்து
வருட காலத்தில் வெறும் 213 அரசுப் பள்ளி
மாணவர்கள் மட்டுமே அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தனர். இது ஒரு வருடத்திற்கானது அல்ல, பத்து வருடத்திற்கானது. அதாவது அந்த பத்து வருடத்தில் மொத்தம் 29,225 மாணவர்கள் மருத்துவப்படிப்பில்
சேர்க்கப்பட்டனர், இவற்றில் ஒரு
சதவீதத்திற்கும் குறைவாகவே
(0.7 சதவீதம்) அரசுப் பள்ளி
மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம்
கிடைத்தது.
அதே போன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மொத்தமுள்ள 6132 இடங்களில் 65 அரசுப் பள்ளிமாணவர்கள்
மட்டுமே (1.1 சதவீதம்) சேர்ந்தனர். ஆனால் நீட் தேர்வை எதிர்ப்பதாகக் கூறிக்
கொள்பவர்கள், இதற்கு முன்னர்
அரசுப் பள்ளியில் பயிலும் அடித்தட்டு ஏழை மக்கள்
மருத்துவப் படிப்பில் அதிகளவில் சேர்ந்ததுபோலவும், அது தற்பொழுது பறிக்கப்பட்டு வருவது போலவும்
போலியான பிம்பத்தை உருவாக்குகின்றனர்.
உயர்,
நடுத்தர வர்க்க மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு!
நீட் தேர்வானது சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுவதால், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகளில்
பயின்ற மாணவர்கள் மட்டுமே இந்தத் தேர்வை எதிர்கொண்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர முடிந்தது. தமிழக அரசின் சமச்சீர் கல்வியைப் பின்பற்றும் தனியார்
பள்ளி மாணவர்களின் பாடத்திட்டம் போதுமானதாக இல்லாததால் அவர்கள் இதனை எதிர்கொள்ள முடியவில்லை. அதனால் தனியார் பள்ளிகளில் பயின்ற
மாணவர்கள் கடந்த காலத்தைப் போல அதிக அளவில் மருத்துவக் கல்லூரிகளில் சேர
முடியவில்லை
2016 ஆம் ஆண்டு பன்னிரெண்டாம்
வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்வியில் சேர்க்கை நடைபெற்றபொழுது நாமக்கல்
மாவட்டத்தில் படித்த 957 மாணவர்கள் மருத்துவப்
படிப்பில் சேர்ந்தனர். இவர்கள் அனைவரும் அந்த மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில்
பெரும் செலவு செய்து படித்தவர்கள்.
ஆனால் அடுத்த ஆண்டு 2017
இல் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டபொழுது மருத்துவப் படிப்பில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 109 ஆகக் குறைந்தது. ஏனெனில் தனியார்பள்ளியில் படித்தாலும் நீட்
தேர்வானது சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் அமைந்திருந்ததால் மாணவர்கள் இதனை
எதிர்கொள்ள முடியவில்லை. நீட் தேர்வினால்
பலன் பெற்றது சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைக் கொண்ட தனியார் பள்ளி மாணவர்கள்தான்.
திடீரென நடைபெற்ற இந்த மாற்றத்தினால் தமிழக அரசின் பாடத்திட்டத்தின் கீழ் தனியார்பள்ளிகளில் பயின்று வந்த நடுத்தர, மேல்வகுப்பைச் சார்ந்த மாணவர்கள் பெரும்
பாதிப்படைந்தனர். நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்கள்
எடுத்து மருத்துவக் கல்லூரியில் சேர
வேண்டுமானால் பெரும் செலவு செய்து நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்களில் சேர
வேண்டும். தற்பொழுது அனைத்து
தனியார் பள்ளிகளும் நீட் பயிற்சி வகுப்பு என்ற பெயரில் கட்டணம் வசூல் செய்து கூடுதல்
கொள்ளையடித்து வருகின்றன; பல தனியார் பள்ளிகள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்குத் தங்களை மாற்றிக்
கொண்டன. தனியார் பள்ளிகளில் ஆயிரக்கணக்கில் செலவழித்து படித்துவந்த மாணவர்கள்
தற்பொழுது நீட் பயிற்சி மையங்களுக்காகவும் செலவழிக்க வேண்டும். தங்கள்
பிள்ளைகளை மருத்துவர்களாக்கி விட்டால் சமூக வாழ்வில் உயர்ந்த இடத்தை அடைந்து விடலாம் என்று கருதி வரும் உயர் நடுத்தர
வர்க்கத்திற்கும் நடுத்தர வர்க்கத்திற்கும்
இந்தச் செலவுகள் பெரும் சுமையாகி விட்டது. நீட் தேர்வு அவர்களுடைய கனவைச்
சிதைத்து விட்டது. அதன் காரணமாகவே அவர்கள் கடுமையாக நீட் தேர்வை எதிர்த்து
வருகின்றனர்.
மற்றபடி, அவர்களுடைய கோரிக்கையில் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களின்
நலன்கள் எதுவுமில்லை. பொத்தாம் பொதுவாக தமிழக மாணவர்களுக்கான பிரச்சனை என்ற பெயரில்
மேல்தட்டு மற்றும் நடுத்தரவகுப்பைச் சார்ந்தமாணவர்களின் நலன்கள்தான் முன்வைக்கப்படுகின்றன. ஆனால்,
நீட் தேர்வினால் அடித்தட்டு மாணவர்களும்
கிராமப்புறமாணவர்களும் பாதிக்கப்படுவதாகக் கூறி தமிழ்
நாட்டிலுள்ள அனைத்து மாணவர்களின் பிரச்சினையாக அதைக் கூறி வருகின்றனர். அதன்
மூலம் அடித்தட்டு வர்க்கங்களைச் சேர்ந்த மாணவர்களின் பிரச்சனைகளை வெளியே தெரியாமல்
மூடி மறைக்கப் பார்க்கின்றனர்.
அரசு
பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் நிலைமை!
உண்மையில், அரசு பள்ளிகளில் அதிகம்
படிப்பவர்கள் கீழ் நடுத்தர வர்க்க மேலும்
அடித்தட்டு மக்களைச் சேர்ந்த, தொழிலாளர்கள் மற்றும் ஏழை விவசாயிகளின் குழந்தைகள்தான். தமிழ்
நாட்டில் படிக்கும் மாணவர்களில் இவர்கள்தான் மிகப் பெரும்பான்மையினர். ஆனால்
இவர்களில் எத்தனை பேர் மருத்துவக்
கல்லூரிகளில் சேர முடிகிறது? மேலே சுட்டிக் காட்டப்பட்ட ஒரு புள்ளி விவரப்படி, பத்தாண்டுகளில்
அரசு பள்ளிகளில் படித்தவர்களில் 0.7% தான் மருத்துவப் படிப்பில்
சேர்ந்துள்ளனர். இதுதான் அரசு பள்ளிகளில்
படிக்கும் அடித்தட்டு மாணவர்களின் நிலைமை. ஆனால் அரசு மருத்துவக் கல்லூரிகள்
அனைத்தும் பெரும்பான்மையாக இருக்கும் உழைக்கும் மக்களின் வரிப் பணத்தில்தான்
இயங்கி வருகின்றன. ஆனால் அவர்களுடைய குழந்தைகளுக்கு அவற்றில் சேர முடிவதில்லை.
ஆனால் தனியார் பள்ளிகளில் இலட்சக்கணக்கில் செலவு செய்து படிக்கும் செல்வந்தர்களின்
குழந்தைகள் நீட் போன்ற தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு மருத்துவக் கல்லூரிகளில்
குறைந்த செலவில் படிக்க முடிகிறது. இதுதான் நிலைமை. இந்த அரசின் கொள்கைகள்
அதற்குச் சாதகமாகவே இருக்கின்றன.
கடந்த தேர்தலுக்கு முன்பு அவசர அவசரமாக, தேர்தலில் மக்களின் வாக்குகளைப் பெற
வேண்டும் என்ற எண்ணத்தில் அ.தி.மு.க. அரசு, அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு
மருத்துவப் படிப்பில் 7.5% விழுக்காடு
இடங்களை ஒதுக்கி அரசு ஆணை பிறப்பித்தது. ஆனால்
அரசுப் பள்ளிகளில் படிக்கும் பல இலட்சம் மாணவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது
இது வெறும் கண் துடைப்புத்தான் என்பது நன்கு விளங்கும்
‘நீட்’ தேர்வினால் கிராமப்புற மாணவர்கள்
பாதிக்கப்படுகின்றனர். அதனால் ‘நீட்’ ட்டை எதிர்க்க வேண்டும் என்று சிலர்
கூறுகின்றனர். கடந்த கால வரலாற்றைப் பார்த்த்தால் அது உண்மை இல்லை என்று தெரியும்.
கடந்த காலங்களிலும் கிராமப்புறப் பகுதி
மாணவர்களுக்கு மிகவும் குறைவான அளவே மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளன.
‘நீட்’ தேர்வு இருந்தாலும் இல்லாவிட்டாலும்
எப்பொழுதும் உண்மையில் பாதிப்புக்கு
உள்ளாகி வரும் மாணவர்கள் கிராமப்
புறத்தைச் சார்ந்த ஏழை, கூலி விவசாயிகள், தொழிலாளர்கள், நடுத்தர, கீழ் நடுத்தர வர்க்கங்களைச் சேர்ந்தவர்களும்,
நகர்ப்புறத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், நடுத்தர மற்றும் கீழ் நடுத்தர
வர்க்கங்களைச் சேர்ந்தவர்களும்தான்.
தலித் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் ‘நீட்’ தேர்வினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் அதை ஒழிக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. உண்மை என்னவென்றால், தலித்துகள்தான் பெரும்பான்மை அளவில் ஏழை மற்றும் கூலி விவசாயிகளாகவும், தொழிலாளர்களாகவும் இங்கு இருக்கின்றனர். அவர்களின் குழந்தைகள் அடிப்படைப் பள்ளிப் படிப்பைக் கூடப் பெற முடிவதில்லை. பள்ளிகளில் சேரும் குழந்தைகள் பள்ளிப் படிப்பையே இடையில் விட்டுவிடும் அவலம்தான் அவர்களைப் பொறுத்து இன்றும் நிலவி வருகிறது. தலித்துகள் மட்டும் அல்லாமல் மற்ற சாதிகளைச் சேர்ந்த கூலி, ஏழை விவசாயிகள் மற்றும் தொழிலாளர் வீட்டுக் குழந்தைகளின் நிலைமையும் இதுதான். பள்ளிப் படிப்பே இன்னும் அவர்களுக்குக் கனவாக இருக்கும்போது கல்லூரிப் படிப்பைப் பற்றி அவர்களால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. இந்த நிலையில் மருத்துவப் படிப்பைப் பற்றிக் கூறவே தேவையில்லை.
கல்வி வணிகம் ஒழிக்கப்பட வேண்டும்!
கல்வி இங்கு கொள்ளை இலாபம் அடிக்கும் வணிகமாக
மாற்றப்பட்டுள்ளது. வசதிபடைத்தவர்களும், செல்வந்தர்களும், முதலாளிகளுமே இங்கு உயர்
கல்வி பெற முடியும். பணக்காரர்களுக்கு ஒரு கல்வி, ஏழைகளுக்கு ஒரு கல்வி. இந்த
ஏற்றத் தாழ்வு நீடிக்கும் வரை ஏழை வீட்டுக் குழந்தைகள் பணக்கார வீட்டுக்
குழந்தைகளுடன் போட்டியிட்டு வெற்றி பெற இயலாது.
சோசலிசத்
தொழிலாளர் இயக்கம்
தமிழ்நாடு
Comments
Post a Comment