"கம்யூனிசம் காகிதத்தில்
பார்க்கும் போது மட்டும் சிறப்பாக உள்ளது" என்பது கம்யூனிஸ்ட்டுகளுக்கு
எதிராக பெரும் அளவில் வீசப்படும் கருத்தாகும். இவ்வாறு கூறுபவர்கள் கம்யூனிசத்திற்கு
எதிரானவர்களும் முதலாளியத்தின் ஆதரவாளர்களும் மட்டும் இவ்வாறு கூறுவதில்லை. முதலாளியத்தைக்
கடுமையாக விமர்சிப்பவர்கள் கூட , கம்யூனிசத்தை கற்பனாவாதக் கனவாக அல்லது ஒரு சர்வாதிகார
ஆட்சியாகக் கருதி அதைத் தவிர்க்க வேண்டும் எனக் கூறுகின்றனர்.
இரண்டு அடிப்படையான
காரணங்களில் இருந்து இந்த விவாதம் எழுகிறது. அவை:
i) மார்க்சிய சோசலிசம் பற்றிய முழுமையான தெளிவு
இல்லாதது, மற்றும் கற்பனாவாத சோசலிசத்திலிருந்து மார்க்சிய சோசியலிசம் எவ்வாறு
வேறுபடுகிறது என்பதைச் சரியாகப் புரிந்து கொள்ளாதது.
ii)
கற்பனை
செய்வதற்கான திறமை இல்லாததும் நம்பிக்கை இழந்த தன்மையும்.
இவை இரண்டையும் நாம்
மிக ஆழமாக ஆராய்வோம்.
1)
"சோசலிசம்"
என்பதன் அர்த்தத்தை தவறாகப் புரிந்து கொள்வது.
"சோசலிசம் என்பது
அரசாங்கமே மக்களுக்கான அனைத்தையும் செய்வது"
சோசலிச அமைப்புமுறை என்பது "அரசே மக்களுக்குத் தேவையான அனைத்தையும் செய்யும்;
அது சந்தையை
கட்டுப்படுத்தும்; அவ்வாறு கட்டுப்படுத்துவதன் மூலம் மக்களுக்கு சேவை
செய்யும்" என்றே பெரும்பாலும் புரிந்து கொள்ளப்படுகிறது. சோசலிசம் குறித்த
இந்தக் கருத்து மக்கள் மத்தியில் திட்டமிட்டு பரப்பப்படுகிறது;
ஊன்றப்படுகிறது. இந்தியா போன்ற பல
நாடுகள், 1991-- ஆம் ஆண்டுக்கு முன்பு "சோசலிச நாடுகள்"
என்று பலரும் நம்புவதற்கு இது ஒரு முக்கியமான காரணமாகும். ஏனென்றால் அரசே உரிமங்கள்
வழங்குவதற்கான கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தது; மேலும் சில தொழில்
துறைகளையும் மற்றும் சில முக்கியமான திட்டங்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள்
வைத்திருந்தது.
இந்த அமைப்பின்
பொருளாதாரச் சரிவுகள், தோல்விகள், 'சோசலிசத்தின் தோல்விக்கு' அடையாளங்களாகக்
காட்டப்பட்டன. இதற்கான விளக்கம் மிக எளிமையானது. அரசாங்கம் பொருளாதாரத்தைத் தன்
கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது; பொருளாதாரம் வளர்ச்சி அடையவில்லை;
மாறாக வீழ்ச்சி அடைந்தது. அதனால்
சோசலிசம் தோல்வி அடைந்தது.
ஆனால் இந்தப் புரிதல், அசு என்ன செய்தது என்பதையே அடிப்படையாகக் கொண்டிருந்தது.
அரசை யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்ற கேள்வியை இது முன் வைக்கவில்லை.
அரசு நாட்டின்
சந்தையை ஒழுங்குபடுத்துகிறது, சில தொழில் துறைகளைச் சொந்தமாகக் கொண்டுள்ளது, நாட்டின் உற்பத்தியின் சில பகுதிகளை தன்னுடைய
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுள்ளது என்னும் நிலை மட்டுமே சமூகத்தின் வர்க்கப் பண்பை
மாற்றி விடாது. எந்த வர்க்கம் அதிகாரத்தை வைத்துள்ளது, அதன் மூலம் உற்பத்தி,
விநியோகம்
மற்றும் நுகர்வு ஆகியவை எவ்வாறு ஒழுங்கமைக்கப்படுகிறது என்பதே அடிப்படையாகும்.
ஒரு முதலாளிய அரசு நாட்டின்
சந்தையை முறைப்படுத்த முடியும்; சில நிறுவனங்களைச் சொந்தமாகக் கொண்டிருக்க முடியும்.;
நாட்டின்
பொருளாதாரத்தில் வலிமையாகக் குறுக்கிட முடியும். இவை அனைத்தையும் முதலாளிய அரசு என்பதிலிருந்து
சற்றும் மாறாமல், செய்யலாம். ஆகவே, அரசு எவ்வளவு கட்டுப்பாட்டைச்
செலுத்துகிறது என்பதை விட எந்த வர்க்கம் அரசைக் கட்டுப்படுத்துகிறது,
அந்தக்
கட்டுப்பாடு யாருடைய நலனுக்காகச் சேவை செய்கின்றது என்பதே அடிப்படையானது.
எந்த ஒரு பொருளாதார
அமைப்பின் தன்மையை, பண்பைப் புரிந்து கொள்ள நாம் முதலில் கேட்க வேண்டிய கேள்வி,
ஆளும்
வர்க்கம் எது? என்பதே.
சோசலிசம் என்பது, ஆளும் வர்க்கத்தை அரசு
கட்டுப்பாட்டுக்குள் வைப்பதே!
சமத்துவம் மற்றும் ஒருவரோடு
ஒருவர் ஒத்துழைத்து வாழும் கூட்டுச் சமூகம் பற்றிய கருத்து மார்க்ஸ்,
ஏங்கல்ஸ் காலத்துக்கு முன்பே
இருந்தது. தொடக்க காலச் சிந்தனையாளர்கள் முதலாளித்துவத்தில் தனிமனிதவாத
அடிப்படையில் தோன்றிய புதிய, தனித்துவமான பிரச்சனைகளைக் கவனித்து ஒரு மேம்பட்ட உலகத்தைக் கற்பனை செய்தனர்.
இதற்கான தீர்வாக அவர்கள், முதலாளித்துவ வர்க்கத்தை தார்மீக ரீதியாக அறிவுறுத்தி,
அவர்களை
நன்னெறிப்படுத்தி, அதன் மூலம் அவர்கள் தங்களது அதிகாரத்தை கைவிட்டு, ஒரு மேம்பட்ட
உலகத்திற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தனர். அவர்கள் அரசை
முதலாளியத்தின் அத்து மீறல்களைக் கட்டுப்படுத்தி, சமூகத்தின் நலன்களில் அக்கறை
கொண்டு செயல்படும் ஒரு நிறுவனமாக, நீதியின் மிகச் சிறந்த அமைப்பாகக் கருதினார்கள்.
எவ்வாறாயினும், இது சோசலிசம்
என்னும் கருத்தை அறநெறி சம்பந்தப்பட்ட பொருளாக மாற்றியது. இது தனிப்பட்ட
முதலாளிகளின் தீய செயல்களைக் கட்டுப்படுத்தி, மனச்சாட்சி மற்றும்
நேர்மையான அறநெறிகள் வழியாக ஒழுங்குபடுத்தும் செயல்களைச் செய்வது நல்ல அரசின்
கடமை என்னும் கருத்தை உருவாக்கியது. இந்தப் பார்வை, அரசு மூலதனத்தின் நலன்களுக்கு
எதிராகச் செயல்பட முடியும், செயல்படும் என்றும், மேலும் ஆளும்
வர்க்கத்தை, அதனுடைய நலன்களுக்கு எதிராகச் செயல்படும் வகையில் அதை, மனம் திருந்தச்
செய்ய முடியும் என்றும் கருதியது.
ஆனால் அரசு ஆளும்
வர்க்கத்தின் நலன்களுக்கு எதிராகச் செயல்பட முடியுமா?
உண்மையில் வரலாற்றுக்
காலந் தொட்டு அரசு எப்போதுமே ஆளும் வர்க்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு
அமைப்பாகவே இருந்து வருகிறது. . அடிமைச் சமுதாயத்தில் அரசு அடிமை உடைமையாளர்களின்
அரசாகவும், பின்னர் நிலப் பிரபுத்துவ சமூகத்தில் அரசர்கள் மற்றும் பெரும் நில
உடமையாளர்களின் அரசாகவும் இருந்தது. முதலாளியத்தில் முதலாளிகளின் அரசாக உள்ளது.
அரசு சமுதாயத்திற்கு மேலாக இருப்பதாகத் தோற்றமளித்தாலும், உண்மையில் அரசு சமுதாயத்தின்
அங்கமாக, அதிலிருந்து தோன்றிய ஒன்றாக உள்ளது. வரலாறு குறிப்பிடுவது போல, அரசின்
முதன்மையான பணி, ஆளும் வர்க்கத்திற்கு எதிரான சக்திகளைக் கட்டுப்படுத்துவதும், நிலவி
வரும் நிலைமையைப் பாதுகாப்பதுமே ஆகும்.
நிலப்பிரபுத்துவக் காலகட்டத்தின்
இறுதி நாட்கள் இதற்கு ஒரு தெளிவான சாட்சியாகும். நிலப்பிரபுத்துவ அரசு, பல
நூற்றாண்டுகளாக, முளைத்து வரும் முதலாளி வர்க்கத்தை ஒடுக்கி வளரவிடாமல் செய்ய
முயற்சி செய்து கொண்டிருந்தது. முதலாளியத்தின் வளர்ச்சியை முடக்க,
நிலப்பிரபுத்துவ
அரசு முதலாளிகளுடன் பல போர்களை மேற்கொண்டுள்ளது. எனினும், இறுதியில்,
நிலப்பிரபுத்துவ
சமுதாயத்தில் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி அதனுடைய உற்பத்தி உறவுகளுடன் முழுவதும்
பொருந்தாத போது, நிலப்பிரபுத்துவ அரசும் அந்தச் சமூகமும் சமுதாய விதியின்படி
உடைந்து நொறுங்கின.
எடுத்துக்காட்டாக, 2008-- ஆம் வருடத்தின் உலகளாவிய நிதி
நெருக்கடியின் போது அமெரிக்க அரசாங்கம், பிரச்சனைக்கு முதன்மையான காரணமான நிலவி
வரும் சந்தையையும், முதலாளி வர்க்கத்தினரையும் அந்தச் சிக்கலில் இருந்து
காப்பாற்றியது; இதனால் உலகம் முழுவதும் மிகப் பெரும்பான்மையான உழைக்கும்
வர்க்கத்தினர் தொழிற்சாலைகளை மூடல், வேலை இழப்பு மற்றும் கடுமையான தொடர்ந்த
பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டனர்.
முதலாளியத்தில்,
அதன் நெருக்கடியான
தருணங்களில் அரசு முதலாளி வர்க்கத்தைக் காப்பாற்றுவதோடு கூடவே,
தொடர்ந்து சட்டங்கள், அடக்குமுறை, நேரடியான அரசு அடக்குமுறைக் கருவிகள் ஆகியவற்றின்
மூலம் அதை நிலை
நிறுத்தவும், விரிவுபடுத்தவும் உதவி செய்து வருகிறது. மேலும்,
அரசு
அடக்குமுறைகளை மட்டுமல்லாமல், கலாச்சாரம், கல்வி மற்றும்
அரசியல் நிறுவனங்களின் மூலமாக மக்களைத் தன்னுடைய செயல்களுக்கு ஒப்புதல்
தரும்படியும் செய்கின்றது. சமகாலத்திய எடுத்துக்காட்டாக, ஜார்கண்ட்,
ஒரிசா மற்றும்
மத்திய பிரதேச மாநிலங்களின் இயற்கை வளங்களையும் கனிம வளங்களையும் தனியாருக்கு
வழங்கி, அதன் மூலம் அவர்கள் கொள்ளை இலாபம் பெறுவதற்காக, அதை எதிர்த்த
மக்களின் போராட்டங்களை, மக்களின் எதிர்ப்பை இந்தியப் பாதுகாப்பு படைகளை அனுப்பி இந்திய
அரசு நசுக்கி வருவதைக் குறிப்பிடலாம்.
எனவே,
முதலாளிய
சமூகத்தில் அரசு முதலாளிய சக்திகளுக்கு எதிராக வலுவான தடையாக
இருக்கும் என்று கருதுவது அப்பாவித்தனமான ஒன்றாகும்; உண்மையில்,
இத்தகைய
அமைப்பில் இது அரசின் உண்மையான நடைமுறைக்கு முற்றிலும் மாறான புரிதல் ஆகும்.
எனவே
சோசலிசம் என்பது அறநெறியில் வேர்கொண்டுள்ள, அரசின் மனச் சாட்சியை அடிப்படையாகக்
கொண்டது என்னும் பிரபலமான கருத்து கற்பனாவாதமாகும். ஏனென்றால் இந்தச் சிந்தனை பொருளாயத உண்மையை
அடிப்படையாகக் கொண்டதல்ல.
மார்க்சியவாதிகள்
முன்வைக்கும் சோசலிசம் என்பதன் பொருள் என்ன?
மார்க்சிய சோசலிசம்,
இதற்கு
முற்றிலும் மாறான, வித்தியாசமான அணுகுமுறையை முன் வைக்கிறது. அது அரசு என்பது ஒரு
புனிதமான அமைப்பு அல்லது ஹெகல் கூறுவது போல “பூமியின் மீது கடவுளின் அணி வகுப்பு”"
என்னும் கருத்தில் இருந்து மாறுபடுகிறது.
மார்க்சியம்,
அரசின் வர்க்கத்
தன்மையை, அதனுடைய செயல்பாட்டின் நீண்ட நெடிய வரலாறு
மற்றும் வர்க்கப் பிரிவினையின் அடிப்படையிலான அதன் தோற்றத்திலிருந்து புரிந்து
கொண்டுள்ளது. வர்க்கப் பிரிவினை அழிந்து, வர்க்கங்கள் இல்லாமல் போகும்போதுதான் அரசு
என்னும் அமைப்பின் தேவை இல்லாமல் போகும். இந்த இறுதி நிலையே கம்யூனிசம் ஆகும்.
சமூகம்,
வர்க்கமற்ற
சமுதாயமாக வளர்ச்சி அடைவதற்கு முன் அந்த வளர்ச்சியின் இடைக்கட்டமாக சோசலிச
அரசு உருவாகும்; அது சமுதாயத்தில் பெரும்பான்மையாக உள்ள வர்க்கத்தைப்
பிரதிநிதித்துவப்படுத்தும்; சமூகத்திற்காக உற்பத்தி செய்யும் உழைப்பாளரகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும்.
இந்தக் கட்டத்தில் உழைக்கும் வர்க்கம் அரசின் மூலமாக, கம்யூனிஸ்டு
சமுதாயத்தை அமைப்பதற்குச் சாதகமான நிலைமைகளை உருவாக்கும்.
இந்தச் சோசலிச அமைப்பில்,
அரசியல்
அதிகாரம் உழைக்கும் வர்க்கத்தின் கையில் இருக்கும்; உழைக்கும் வர்க்கம்
உற்பத்தி நிலைமைகளை மாற்றி அமைக்கும்; இறுதியாக அரசு இருப்பதற்கு அவசியமான
வர்க்கப் பிரிவினைகளை அழிக்கும். இவ்வாறு, உழைக்கும் வர்க்கம், வர்க்கங்களற்ற சமுதாயத்தை அமைக்க
அவசியமான ஒரு வழிமுறையாக சோசலிச அரசு செயல்படும்.
இயங்கியல் மற்றும் பொருள்முதல்வாதத்தை அடிப்படை விஞ்ஞானமாகக் கொண்ட
மார்க்சிய சோசலிசம் தனது லட்சியமான வர்க்கமற்ற சமுதாயத்தை, அறநெறி மற்றும்
அருவமான கருத்தாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்க முயற்சிக்கவில்லை.
அடிமைச் சமூகம்
மற்றும் நிலப்பிரபுத்துவ சமூகம் ஆகியவை அவற்றுக்குள் இருந்த முரண்பாடுகளால் அழிந்தொழிந்ததை
இயங்கியல் பொருள்முதல்வாதம் என்ற அறிவியல் அடிப்படையில்
மார்க்சியம் விளக்குகிறது. அதைப் போலவே முதலாளியத்தின் அடிப்படையான
முரண்பாட்டையும் அது ஆராய்ந்தறிந்துள்ளது. சமூகமயமாக்கப்பட்ட உற்பத்திக்கும், அதன்
பலனை தனியார் கைப்பற்றலுக்கும் இடையில் உள்ள முரண்பாடு முதலாளியத்தின் அடிப்படை
முரண்பாடாக உள்ளது.
இது முதலாளியம்
உற்பத்தி சக்திகளை அபரிமிதமான அளவில் உருவாக்கி இருந்தாலும்,
உற்பத்தி
சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையில் பொருந்தாத் தன்மையை உருவாக்கியுள்ளது. உற்பத்தி பெருமளவில் சமூகமயமான போதிலும்,
உற்பத்திக்கான
சாதனங்களின் உடைமை தனியார் கைகளில் உள்ளது.
இந்த முரண்பாடுகளிலிருந்து
ஒன்றோடு ஒன்று இணைந்த ஏராளமான பிரச்சினைகள் - உழைப்பாளர்கள் சுரண்டப்படுவது,
மீண்டும்
மீண்டும் உருவாகும் பொருளாதார நெருக்கடிகள், தொழிலாளர்கள் அந்நியப்படுவது, மிகப் பெரிய அளவில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்,
மனித வாழ்க்கையின் அனைத்து அம்சங்களும் வணிகமயமாக்கப்படுவது, சமூகத்தில் நிரந்தரமான கொடூரமான
வன்முறைகள் உண்மையாகவும், எப்போதும் வன்மையுடன் வெடித்துக் கிளம்பும் நிலை போன்றவை தோன்றுகின்றன. இந்த
அமைப்பை முழுமையாக மாற்றி அமைக்காமல் இந்த முரண்பாடுகளைக் களைய முடியாது என்பதை
மார்க்சியவாதிகள் புரிந்துள்ளனர். . இதற்கு ஆளும் முதலாளி வர்க்க அரசைத் தூக்கி
எறிந்து சோசலிச சமூகத்தை நிறுவுவது தேவைப்படுகிறது.
நிலவி வரும் வர்க்க உறவுகளைக் காப்பாற்றிக் கொண்டே, ஆளும் வர்க்கத்தின்
நலன்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என்கிறது கற்பனாவாத சோசலிசம்.
அதற்கு மாறாக, சோசலிசம் என்பது வர்க்க உறவுகளில் ஏற்படும் அரசியல் மற்றும்
பொருளாதார மாற்றம் என மார்க்சியவாதிகள் புரிந்துள்ளார்கள். இந்த மாற்றத்தின் மூலமே
கம்யூனிச சமுதாயத்தை அமைப்பதற்கான நிலைமைகளை உருவாக்க முடியும்.
2. கற்பனையின் பிரச்சினை
மார்க்சிய
சோசலிசத்துக்கும் சமத்துவ சமுதாயம் பற்றிய பிற கற்பனாவாத கருத்துகளுக்கும்
இடையில் உள்ள வேறுபாடு முக்கியமான ஒன்றாகும். ஆனால் இந்த வேறுபாட்டிலும் கற்பனையின்
பிரச்சனை உள்ளது. சோசலிசம் அல்லது கம்யூனிசம் என்பது இன்றைய முதலாளியத்தில்
கற்பனாவாதமாகவும் கற்பனையாகவும் தோன்றுவது போல, முன்பு உயிர் வாழ்வதற்காக
மனிதர்கள் விலங்குகளை வேட்டையாடிக் கொண்டிருந்த போதும், அல்லது அடிமைகள் மூலமாக உற்பத்தி நடந்து கொண்டிருந்த போதும்,
பண்ணை
அடிமைகள் தங்களின் பிழைப்புக்காக இரவும் பகலும் பாடுபட்ட நிலைமையிலும்
முதலாளியம் என்பதே கற்பனாவாதமாகத் தோன்றி இருக்கும்.
காலாவதியாகிப் போன சமூகத்தில் நாம் வாழும்போது,
முற்போக்கான
அமைப்பு பற்றிய கருத்து கற்பனை செய்வதற்குக் கூட சாத்தியமற்றது போலவே தோன்றும்;
நாம் காணாத ஒன்றை, அதிலும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒன்றிற்கு
முற்றிலும் எதிராக இருக்கும் ஒன்றை, கற்பனை செய்வது கடினம் என்பது இயல்பானதே. மார்க்
ஃபிஷர், முதலாளிய எதார்த்தவாதம் (Capitalist
Realism) என்னும் நூலில் சொல்வது போல, "முதலாளியத்தின்
முடிவைக் கற்பனை செய்வதைவிட உலகத்தின் முடிவைக் கற்பனை செய்வது எளிதானது”.
கற்பனை செய்யத்
திறனற்று இருக்கும் நமது நிலை பிரச்சினையின் ஒரு பகுதியாக இருக்கும்போது, இந்த
அமைப்பே பிரச்சினையின் இன்னொரு பகுதியாக அமைகிறது. முதலாளியம் முந்தைய அமைப்புகள் செய்தது போலவே, தனது நலனுக்கான விதிகளை சமூகத்தின் இயல்பான
விதிகளாக ஆக்கி, அதற்கு மாற்றான ஒன்றை அபாயகரமானதாகவும், கற்பனையானதாகவும்,
சாத்தியமற்றதாகவும்
சித்தரித்து வருகிறது. அதனுடைய நெருக்கடிகள் பற்றி பரந்த அளவிலான சான்றுகள், ஊழல்
மற்றும் முரண்பாடுகள் ஆகியவை வெளிப்படையாகத் தெரிந்தாலும், நடைமுறையில் இப்போது
இருக்கும் முறை மட்டுமே சமூகத்தை ஒழுங்கமைக்கும் இயற்கையான, ஒரே சாத்தியமான வழியாக
முதலாளியம் கூறுகிறது.
முதலாளியத்தின் கைகளில் உள்ள மிக
வலிமையான ஆயுதம், "சோசலிச அரசை அமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட
முயற்சிகளின் “தோல்விகள்”, மற்றும் “சர்வாதிகாரம்" என்னும் பிரச்சாரம் ஆகும்.
மார்க்சியவாதிகளுக்கு எதிராக, இந்தப் பிரச்சார இயந்திரத்தை முடுக்கி விட முதலாளியம்
பெருமளவில் முதலீடுகலைச் செய்கிறது. இதற்காக அது இரண்டு முக்கியமான உண்மைகளை
மறைக்கிறது; அவை:
1)
சோசலிச ஆட்சி,
இன்று வரை
முதலாளியம் கொடுக்காத, கொடுக்க முடியாத அளவுக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தில் சிறந்த
முன்னேற்றத்தை கொடுத்தது.
2)
தொடர்ந்து மறைமுகமான
மற்றும் மிக வெளிப்படையான பல விதமான தலையீடுகள், பொருளாதாரத் தடைகள்,
சதிகள்,
பொருளாதார
ரீதியாகத் தனிமைப்படுத்தல் அல்லது மேற்கத்திய முதலாளியச் சக்திகளின் ராணுவ
நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலம் சோசலிச அமைப்புகள் திட்டமிட்டபடி சுதந்திரமாக
முன்னேற முடியாமல் தடுக்கப்பட்டன.
முதலாளியத்தில் உள்ள
ஓர் அம்சம் என்னவென்றால் அது தன் அமைப்பில் உள்ள பிரச்சினைகளை விமர்சிப்பதை அனுமதிக்கிறது.
திரைப்படங்கள், தொலைக்காட்சி, இலக்கியம் மற்றும் சமூக ஊடகங்கள் தொடர்ந்து இடைவிடாமல்
கார்ப்பரேட் நிறுவனங்களின் பேராசை, அரசியல்வாதிகளின் ஊழல்கள்,
முதலாளிகளின்
சுரண்டல்கள் மற்றும் சுற்றுச்சூழல் அழிப்பு ஆகியவை பற்றிச் சித்தரித்து வருகின்றன.
எனினும் இந்த விமர்சனங்கள் பெரும்பாலும் முதலாளயத்தை அச்சுறுத்துவதாக
இல்லை; ஏனென்றால் இவை மக்களுக்கு நம்பிக்கையான மாற்று அமைப்பை முன்வைப்பதே இல்லை.
இந்த அமைப்பின் தவறுகளை, பிரச்சனைகளை மக்கள் ஆர்வத்துடன் அறிந்து கொண்டாலும்,
இதற்கு
முற்றிலும் மாற்றான வேறு ஒரு சிறந்த சமுதாய அமைப்புக்கு வாய்ப்பே இல்லை
என்றே அவர்கள் கருதுகிறார்கள்.
மக்கள் நிலவி வரும் சமத்துவமின்மை,
சுரண்டல்
ஆகியவை பற்றிக் குற்றம் சாட்டினாலும், இவை குறிப்பிட்ட ஒரு பொருளாதார அமைப்பின்
விளைவுகள் என்று புரிந்து கொள்ள முடியாமல், எதார்த்தத்தில் இவை தவிர்க்க முடியாதவை
என்றே தொடர்ந்து நம்புகிறார்கள். எனவே, இந்தப் பிரச்சினைகள் அமைப்பு
சார்ந்தது மற்றும் நிறுவனம் சார்ந்தது என்று பார்க்கப்பட்டாலும், அதற்கான தீர்வுகள்
இந்தப் பெரிய அமைப்புக்குள்ளேயே, வலிமிக்க மெதுவான சீர்திருத்தங்கள் என்ற
தாராளவாதச் சட்டகத்தில் இருக்கின்றது என மக்கள் கருதுகிறார்கள். முதலாளியத்தில்
விமர்சனம் கடுமையாகவும், வெளிப்படையான, தீவிரமான கண்டனமாக
இருந்தாலும், அதற்கான ஒப்புக்கொள்ளப்பட்ட தீர்வு முதலாளித்துவ
அமைப்பின் குறுகிய தாராளவாத எல்லைகளை எப்பொழுதும் தாண்டுவதில்லை. முதலாளிய
அமைப்பின் நம்பகத்தன்மையை கேள்வி கேட்கும் எந்த ஒன்றும், முற்றிலும்
எதார்த்தத்திற்கு புறம்பானது, மிகவும் தீவிரவாதமானது அல்லது மிகவும் அபாயகரமானது
என்று கூறப்பட்டு ஒதுக்கித் தள்ளப்படுகிறது. எனவே, முதலாளியம் தன்னை
மிகச்சிறந்த அமைப்பு என்று பிரகடனப்படுத்திக் கொள்ளாவிட்டாலும்,
குறைவான
தீமைகளைக் கொண்டது என்றும், மக்களை “சர்வாதிகாரம்” என்ற பயங்கரமான கனவிலிருந்து,
அதாவது கம்யூனிசத்திலிருந்து பாதுகாக்கும் ஒரே கேடயம் என்றும் தன்னை அறிவித்துக்
கொள்கிறது.
அச்சத்தைப்
பரப்புதல், தவறாக வழி நடத்திச் செல்லும் தகவல்கள், ஊடகங்கள் மற்றும் கல்வியின்
மீது கட்டுப்பாடு ஆகியவற்றின் மூலம் நிலவும் முதலாளிய அமைப்பு நமது
கற்பனைகளை அழிக்கிறது; நிலவும் முதலாளிய அமைப்பே இயற்கையானது,
நிலையானது
மற்றும் வேறு மாற்று கிடையாது என்ற எண்ணத்தை மக்களிடம் வளர்க்கிறது. இது நமது
வாழ்க்கை நிலைமைகளை மனித வரலாற்றின் தொடர்பில் ஆராய்ந்து புரிந்து கொள்ளும் ஆற்றலை
அழிக்கிறது.
சந்தைப் பொருளாதாரம்
வளர ஆரம்பித்தபோது, நிலப்பிரபுத்துவ அதிகாரத்திற்கு சவாலாக, அதன் சுரண்டலை
எதிர்த்து முதலாளியம் தூக்கி எறிந்தது. தொழில்நுட்பங்களில் ஏற்பட்ட முன்னேற்றம்,
சந்தை
விரிவாக்கம் மற்றும் பயணம் மற்றும் தொடர்பு சாதனங்களில் ஏற்பட்ட முன்னேற்றங்கள்
ஆகியவற்றைக் கொண்டு அது முன்பிருந்த எந்தச் சமூக அமைப்பும் சாதிக்க முடியாத அளவுக்கு
மிகப்பெரிய அளவில் உற்பத்தி சக்திகளைக் கட்டவிழ்த்து விட்டது.
இத்தகைய முன்னேற்றங்கள் முதலாளிய அமைப்பில் இருந்தாலும்,
நம்முடைய சமூகம் மனிதனின் தேவைகள் என்னும் உண்மையான காரணத்தின் அடிப்படையில்
இல்லாமல் "லாபம்" என்னும் செயற்கையான காரணத்தின் அடிப்படையில் தன்னைக்
கட்டமைத்துக் கொண்டிருக்கிறது.
அனைவருக்கும் தேவையான
உணவை வழங்குவதற்கான வழிமுறைகள் சமூகத்திடம் இருந்தபோதும், கோடிக் கணக்கான மக்கள் பட்டினியில்
வாடுகிறார்கள்.
ஏராளமான உழைக்கும்
சக்தி மற்றும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு திறன் மிக்க தானியங்கி
இயந்திரங்களைக் கொண்டு இருந்த போதும் கோடிக் கணக்கானவர்கள் வேலை இல்லாமல்
இருக்கிறார்கள்.
அறிவியல் பூர்வமான
தொழில் நுட்பங்கள் அசாதாரணமான அளவில் முன்னேற்றம் அடைந்த போதும் ஏராளமான மக்கள்
அவர்களது மிக முக்கியமான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்குக் கூட இன்னும் தொடர்ந்து
போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இது இயற்கையானதோ
அல்லது இயல்பானதோ அல்ல. இந்த நிலைமைகள் இயல்பானவை என்று நமது மனங்கள் ஏற்றுக்கொள்ளும்படி
முதலாளியம் செய்து இருக்கிறது. உடனடி எதார்த்தங்களைப் புரிந்து கொள்ள முடியாதபடி
கட்டுப்படுத்தப்பட்டுள்ள நமது கற்பனைகளை ஒழித்து, விமர்சனபூர்வமான
கண்ணோட்டத்தில் நமது நிலைமைகளை ஆராய வேண்டும்; அப்படி ஆராயும்போதுதான்,
தன்னுடைய
வளர்ச்சிக்காகத் தொடர்ந்து சுரண்டியும், மக்களுக்குத் துன்பங்களையும் வழங்கி வரும்
இந்த முதலாளிய அமைப்பை வீழ்த்தக் கூடாது எனக் கூறுவதற்கு எந்தத் தருக்கரீதியான
காரணமும் இல்லை என்பது புரியும்.
ஒரு புதிய உலகம் கட்டாயம்
தேவை
கடந்து செல்லும்
ஒவ்வொரு நொடியிலும் சமூகத்தை அழிவுக்கு இட்டுச் செல்லும் இந்த முரண்பாடான
அமைப்புக்குப் பதிலாக ஒரு புதிய உலகம் சாத்தியமானது மட்டுமல்லாமல், அத்தகைய
சமூகத்தை உருவாக்க வேண்டிய அவசரத் தேவையும் உள்ளது.
மனிதர்கள் நெருப்பைக்
கண்டுபிடித்த பிறகும் கூட நெருப்பில் உணவு சமைப்பதற்கு எப்போதுமே மாறாமல்
இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்! அல்லது விவசாயத்தின்
உற்பத்தித்திறனை அறிந்த பிறகும் சமூகம் விவசாயத்தை மேற்கொள்ளாமல் இருந்திருந்தால் மனித இனம் இத்தனை நெடுங்காலம் நீடித்து இருந்திருக்க முடியுமா?
இதே நிலைமைதான்
முதலாளியத்துக்கும்! தன்னுடைய வரலாற்றுப் பாத்திரம் முடிந்து விட்டபோதும், பொருளாதாரச்
சுரண்டல், அரசு அதிகாரம் மற்றும் கருத்தியல் மேலாதிக்கம் ஆகியவற்றின்
மூலம் மேம்பட்ட உலகு ஒன்று உருவாவதற்கான சாத்தியப்பாட்டை முதலாளியம் தொடர்ந்து தடுத்து
வருகிறது. இதற்கு முந்தி இருந்த அமைப்புகளைப் போலவே முதலாளியமும் அடியோடு உடைத்து
நொறுக்கப்பட வேண்டும். இந்த அமைப்பில் வாழும் சாதாரண எளிய மக்களால் அது
சாதிக்கப்படும்.
ஒரு புதிய உலகத்தை
உருவாக்க நாம் கற்பனா உலகம் பற்றிய கருத்துமுதல்வாத எண்ணங்களைக் கை விட வேண்டும்;
கூடவே, ஒரு வேறுபட்ட மற்றும் மேம்பட்ட எதிர்காலத்திற்கான பொருளாயதச்
சாத்தியப்பாட்டின் மீதான சந்தேகங்களை விட்டொழிக்க வேண்டும்.
ஜெகதா
நன்றி: அஞ்சலி
மற்றும் தியோ, (Young Political Workers)






Comments
Post a Comment