வேலை பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!
ராஜா கிரவுன்ஸ்
அண்ட் கேன்ஸ் என்னும் நிறுவனம் ஒசூர் பகுதியில் 1998 முதல் செயல்பட்டு வருகின்றது. இது வெள்ளீயத்தால்
(தகரத்தால்) ஆன கொள்கலன்களை, தகரக்குவளைகளை உற்பத்தி
செய்கின்றது. இந்த ஆலையின்
முதலாளி இந்தியாவை பூர்வீமாக கொண்டவராக இருந்தாலும், தற்பொழுது கென்யாவில் வசித்து வருகின்றார்.
தொடக்கம் முதலே
இந்த ஆலையானது தொழிலாளர்களின் உழைப்பை வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்து வருகின்றது. வேலைக்கு அமர்த்தப்பட்ட
தொழிலாளர்கள் நீண்டநாட்கள் பணிபுரிந்து வந்தாலும் அவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யாமலும், நியாயமான ஊதியம்
வழங்காமலும் தொழிலாளர்களை வஞ்சித்து வந்தது.
தொழிலாளர்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து 52 தொழிலாளர்கள் மட்டும் நிரந்தரம் செய்யப்பட்டனர்.
இவர்களும் ஆறு வருடங்களுக்கும்
மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்கள்,
பயிற்சித் தொழிலாளர்கள் என மாற்றிமாற்றி அவர்களை வகைபடுத்தி பின்னரே நிரந்தரம்
செய்யப்பட்டனர். அதற்குப்
பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைக்கப்பட்டுச் சுரண்டப்பட்டு
வருகின்றனர். தற்பொழுது
வரை 450க்கும்
மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில்தான் பணிபுரிந்து வருகின்றனர்.
நிரந்தரத் தன்மையுள்ள
பணிகளில் நீண்டநாட்களாகப் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் சுரண்டப்படுவதிலிருந்து
தடுக்க தொழிலகப் பாதுகாப்பு அதிகாரிகளோ தொழிலாளர் துறை ஆணையர்களோ எந்தவித அக்கறையும்
காட்டுவதில்லை. இது குறித்து
புகார் அளித்து, தகுந்த
நடவடிக்கை எடுத்துத் தொழிலாளர்களுத்குப் பணிப்பாதுகாப்பு வழங்கக் கோரினாலும், அது செவிடன் காதில்
ஊதிய சங்குபோல் தான் உள்ளது.
பாஜகவிற்கு மாற்று
திராவிடம் என மார் தட்டிக்கொள்ளும் தமிழக ஆட்சியாளர்கள் முதலாளிகளின் நலனுக்காக, கொள்ளை இலாபத்திற்காக
தொழிலாளர்களைச் சுரண்டுவதிலும்,
ஜனநாயக உரிமைகளைப் பறிப்பதிலும்,
தொழிலாளர்களின் மீது அடக்குமுறைகளை ஏவுவதிலும் எள்ளளவும் சளைத்ததில்லை என்பது எல்லா
காலக்கட்டங்களிலும் நிரூபித்து வருகின்றது. ஆனால் சீர்த்திருத்தவாதத்தில் மூழ்கிப்போன இடதுசாரிகள் தமிழக அரசிற்கு
முட்டுக்கொடுத்து அதனைக் காப்பாற்றி வருவதன் மூலம் தொழிலாளர் வர்க்கத்திற்குப் பெரும்
தீங்குகளைச் செய்து வருகின்றனர்.
பணிப்பாதுகாப்பு, நியாயமான ஊதியம்
வேண்டி தொழிலாளர்கள் சிபிஐ கட்சியின் தொழிற்சங்கமான ஏஐடியூசியுவில்(AITUC) இணைந்தனர். தொடக்கத்தில் தொழிலாளர்களுக்கு
ஆதரவாகச் செயல்படுவது போன்று காட்டிக் கொண்டாலும், பின்னர் அந்த சங்கத்தின் தலைமை நிர்வாகத்தின் கைப்பாவையாக மாறி
தொழிலாளர் விரோதப் போக்கை கைக்கொண்டது.
நிர்வாகத்தின் அடாவடிப் போக்கை எதிர்த்துக் குரல் கொடுக்கும் தொழிலாளர்களைப் பணிமாற்றம்
செய்வது, வேலைநீக்கம்
செய்வது எனப் பழிவாங்கப்பட்டனர்.
10 நிரந்தரத் தொழிலாளர்கள் ஒவ்வொருவராக பணிநீக்கம் செய்யப்பட்டனர். ஆனால் சங்கமோ
தொழிலாளர்களைத் திரட்டி அவர்களுடைய குறைகளைத் தீர்க்கப் போராட முன் வரவில்லை.
இதனால், வேதனையடைந்த பெரும்பான்மையான
தொழிலாளர்கள் அதிலிருந்து வெளியேறி தமிழ் மாநில காங்கிரசின் கேஎம்டியூசி(KMTUC)யில் இணைந்தனர். பின்னர் இந்தச்
சங்கத்தின் தலைமை ஆளும்கட்சியான திமுகவில் இணைந்ததால் அதன் தொழிற்சங்க அணியான தொழிலாளர்
முன்னேற்ற பேரவையில் இணைக்கப்பட்டனர்.
எனினும் தொழிலாளர்கள்
மீதான நிர்வாகத்தின் அடக்குமுறைகளும் அடாவடிப் போக்குகளும் குறையவில்லை. மொத்தத் தொழிலாளர்களில் 10 சதவீதம் கூட இல்லாத
நிரந்தரத் தொழிலாளர்களை ஓட்டு மொத்தமாக வெளியேற்றுவதற்காக நிர்வாகமானது. தொழிலாளர்களின்
மீதான பணிச்சுமைகளை அதிகரிப்பது,
எந்தவிதப் பயிற்சியும் அளிக்காமல் பணிமாற்றம் செய்வது, உற்பத்தியில் ஏற்படும்
இழப்புகளுக்கு தொழிலாளர்களே காரணம் எனக் கூறி அவர்கள் மீது விசாரணை நடத்துவது எனத்
தொழிலாளர்களுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தி வந்தது.
நிர்வாகத்தின் தொழிலாளர்
விரோதப்போக்கை எதிர்த்து தொழிலாளர்களின் நலனை பாதுகாக்க வேண்டிய திமுகவின் எல்பிஎப்(LPF) தொழிற்சங்கமும், சிபிஐ(CPI) இன் ஏஐடியூசி(AITUC) தொழிற்சங்கமும்
தங்கள் விசுவாசத்தை முதலாளிக்குக் காட்டினர்.
நிர்வாகத்தின் அடாவடிப்
போக்கினால் மனஉளைச்சலால் பாதிக்கப்பட்ட தொழிலாளி ஒருவர், சனவரி 4 அன்று நிறுவனத்தின்
பொதுமேலாளரைத் தாக்க முற்பட்டதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு வழக்கு நடந்து வருகின்றது. இந்தத் தாக்குதல்
முயற்சியைப் பெரும் பூதாகர பிரச்சனையாக மாற்றி ஓட்டுமொத்தமாக 42 நிரந்தர தொழிலாளர்களையும்
கூண்டோடு காலிசெய்ய நிர்வாகம் முடிவு செய்தது.
தொழிலாளர்களின்
மனஉளைச்சலுக்கான காரணங்களை ஆராய்ந்து தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டிய அரசு அதிகாரிகள்
மவுனம் சாதித்து நிர்வாகத்தின் பணிநீக்க நடவடிக்கைகளுக்கு ஆதரவாக நின்றனர். தொழிலாளர்களுக்கு
விருப்ப ஓய்வு தருவதாகவும்,
நிர்வாகம் தரும் பணத்தை வாங்கி கொண்டு அனைவரும் வேலையை விட்டு வெளியே செல்லுமாறும்
தொழிலாளர்கள் அச்சுறுத்தபட்டனர்.
நாள்தோறும் தொழிலாளர்களை
அழைத்து விருப்ப ஓய்வு என்ற பெயரில் கட்டாய ஓய்வில் செல்ல தொழிலாளர்களை
அச்சுறுத்தியது.
அவ்வாறு செல்லவில்லையெனில் இந்தப் பணபலன் கூட இல்லாமல் உங்களை வெளியேற்றுவோம் என
மிரட்டியது.
முதலாளி வர்க்கத்தின்
கைப்பாவையாக செயல்பட்டு வந்த இரண்டு தொழிற்சங்கங்களும் விருப்ப ஓய்வுதிட்டத்தை ஏற்றுக்
கொள்வதாக நிர்வாகத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டன. தொழிற்சங்கத் தலைமைகளோடு இருந்த மற்ற சங்க நிர்வாகிகள் போதிய
புரிதல் இல்லாமல் இந்த திட்டத்தில் கையெழுத்திட்டு விட்டதாகத் தெரிவிக்கின்றனர்.
தொழிலாளர்களின்
நலனுக்காக செயல்படுவார்கள் என்று நம்பி இந்தத் தொழிற்சஙகங்களில் இணைந்த தொழிலாளர்கள்
விரக்தி நிலையடைந்தனர்.
ஒரு பக்கம் நிர்வாகத்தின் அச்சுறுத்தல் மறுபக்கம் தொழிற்சங்கத் தலைமைகளின் துரோகத்தனம்
என இரண்டு பக்கங்களும் சிக்கல்களை எதிர்கொண்ட தொழிலாளர்கள் விருப்ப ஓய்வை ஒத்துக் கொள்ள
வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டனர். நிர்வாகமானது பகுதி பகுதியாக தொழிலாளர்களை அழைத்து
நிர்ப்பந்தித்து ஒப்பந்தப்பத்திரத்தில் கையெழுத்து வாங்கியது. தொழிற்சங்கத் தலைமையோ, நிர்வாகம் தரும் தொகை, நல்ல தொகையென்றும், வாங்கிகொண்டு வெளியேறுமாறும்
நிர்வாகத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து, மறைமுகமாக தொழிலாளர்களை அச்சுறுத்தியது.
தொழிலாளி ஒருவர், தன்னுடைய உறவினரின்
இறப்பிற்குச் செல்ல வேண்டிய காரணத்தால் விடுப்பு போட்டுவிட்டுச் செல்லும்பொழுது, நிர்வாகமானது, அவரை வெளியேற விடாமல்
தடுத்து அவரிடம் விருப்ப ஓய்வுத்திட்டத்தில் கையெழுத்து போட நிரப்பந்தித்துக் கையெழுத்து
வாங்கியது. இதற்குத் தொழிற்சங்கத் தலைமையும் உடந்தையாக இருந்தது. விருப்ப ஓய்விற்கு
ஒத்துக்கொள்ள முடியாது எனப் பிடிவாதமாகப் போராடிய தொழிலாளர்களை தொழிற்சங்கத்தலைமைகள்
மூளைச்சலைவை செய்தும், அச்சுறுத்தியும்
இணங்க வைத்தனர். மே மாத இறுதிக்குள் அனைத்துத் தொழிலாளர்களும் கையெழுத்துப்போட நிர்ப்பந்திக்கபட்டு
வெளியேற்றப்பட்டனர்.
முதலாளித்துவத்
தொழிற்சங்கத் தலைமைகளால் நடுத்தெருவில் நிறுத்தப்பட்ட தொழிலாளர்கள், பின்னர் தமிழ்நாடு
தொழிற்சங்க நடுவத்தில் இணைந்து,
தங்களுக்கு விருப்ப ஓய்வு வேண்டாம் என்றும், தாங்கள் மீண்டும் பணியமர்த்தப்பட வேண்டும் எனவும் கோரிப் போராட்டங்களில்
ஈடுபட்டு வருகின்றனர். சட்டரீதியான
போராட்டங்களோடு, மற்ற தொழிற்சங்கங்களோடு
இணைந்து தொழிலாளர்திரள் போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர். ஆகஸ்டு 12 ஆம் தேதி நடைபெற
இருந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அதிகாரவர்க்கம் தடை விதித்தது. எனினும் தொழிலாளர்களும், ஒசூர் பகுதியில்
செயல்பட்டு வரும் பல்வேறு தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சட்டத்திற்குப்
புறம்பாக, அனைத்து
நிரந்தரத் தொழிலாளர்களையும் வலுகட்டாயமாக வெளியேற்றி, ஒப்பந்தத் தொழிலாளர்களைக்
கொண்டு உற்பத்தியில் ஈடுபட்டு வரும் ராஜாகிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் நிறுவனத்தின் இந்த
அடாவடிப் போக்கிற்கு அனைத்து அரசுதுறைகளும்,
அதிகாரவர்க்கமும் ஆதரவாகச் செயல்பட்டு வருகின்றன.
திராவிடமாடல் மக்களின்
நலனுக்காக செயல்படுவது போன்ற மாயை உருவாக்கும் திமுக அரசானது, தொழிலாளர்களின்
விசயத்திலும், அடித்தட்டு
மக்களின் நலன்சார்ந்த விசயங்களிலும்,
தாங்கள் பாஜகவிற்கும்,
காங்கிரசுக்கும், அதிமுகவிற்கும்
சளைத்தவர்களல்ல என்பதை எல்லா விசயங்களிலும் நிரூபித்து வருகின்றார்கள். பாசிச எதிர்ப்பு
என்ற போர்வையில் செயல்படும்,
திமுக அடிவருடிகள் வேண்டுமானால் கண்ணை மூடிக்கொண்டு இதனைக் கடந்து செல்லலாம், ஆனால், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களும், உழைக்கும் மக்களும்
பாஜக மற்றும் திமுகவை மட்டுமல்ல,
அதன் பாதந்தாங்கிகளையும் துடைத்தெறிவார்கள்.
சோசலிசத்
தொழிலாளர் இயக்கம்
தமிழ்நாடு
Comments
Post a Comment