Skip to main content

தொழிலாளி வர்க்க ஒற்றுமையை பறைசாற்றும் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கு வாழ்த்துகள்!

 

தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாகிய ஒசூரில் தொழிலாளர்களின் ஐக்கியத்தை உருவாக்கவும் வலுப்படுத்தவும், பாட்டாளி வர்க்க அரசியலை அவர்களிடம் கொண்டு செல்லவும் பல்வேறு தொழிற்சங்கங்களின் முன்முயற்சியில் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (Hosur Trade Union Federation -HTUF) தொடங்கப்பட்டுள்ளது.

அதன் உருவாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக துவக்க மாநாடு ஏப்ரல் 6 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது

ஒசூர் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து பாட்டாளி வர்க்க அணியை வலுபடுத்துவது, பல்வேறு அரசியல் கருத்துகளால் பிளவுபட்டு இருக்கும் தொழிலாளர்கள் பாட்டாளி வர்க்கத்தின் சரியான அரசியலைப் பற்றிக் கொண்டு, வர்க்க உணர்வு பெற்று ஐக்கியப்பட்டு ஓரணியில் திரளும் வகையில் அவர்களிடம் தொடர்ந்து உரையாடுவது, முதலாளித்துவத்தின் கொடும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் உதவுவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பில் மற்ற தொழிற்சங்கங்களும் இணைந்து பாட்டாளி வர்க்கத்தின் கரத்தினை வலுபடுத்துமாறு கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

துவக்க மாநாட்டில் கூட்டமைப்பின் உறுப்பு தொழிற்சங்கங்கள் மட்டுமல்லாது, ஒசூர், சென்னை, கோவை ஆகிய பகுதிகளிலிருந்தும் சகோதர தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அசோக் லேலண்ட் யுனெட்டெட் எம்ப்ளாயீஸ் யூனியன் (யூனிட் 1), டைட்டான் எம்ப்ளாயீஸ் யூனியன், பாட்டா எம்ப்ளாயீஸ் யூனியன், மைக்ரோலேப்ஸ் எம்ப்ளாயீஸ் யூனியன், ஜி இ எம்ப்ளாயீஸ் யூனியன், பிரிக்கால் எம்ப்ளாயீஸ் யூனியன், ராயல் என்பீல்ட் எம்ப்ளாயீஸ் யூனியன், கொமாட்சு எம்ப்ளாயீஸ் யூனியன், 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கம் ஆகிய சங்கங்களின் சார்பில் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் உருவாக்கம், அதன் நோக்கங்கள் மற்றும் செயல்திட்டங்கள் குறித்தும், தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியம் குறித்தும், கூட்டமைப்பைச் சார்ந்த கன்சாய் நெரோலாக் தொழிற்சங்கம், மைவா பார்மா எம்ப்ளாயீஸ் யூனியன், வெண்ட் இந்தியா தொழிலாளர் சங்கம், வெக் இண்டஸ்ட்ரீஸ் தொழிலாளர் சங்கம், மைலான் லேபரட்டரீஸ் தொழிலாளர் சங்கம், பேராகோட் புராடக்ட்ஸ் யுனெட்டெட் எம்ப்ளாயீஸ் யூனியன், ஏசியன் டுபாக்கோ எம்ப்ளாயீஸ் யூனியன், டெரக்ஸ் எம்ப்ளாயீஸ் யூனியன் சங்க நிர்வாகிகள் வலியுறுத்திப் பேசினர்.

ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் துவக்க மாநாட்டிற்கு ஏராளமான தொழிற்சங்க நிர்வாகிகளும், திரளான தொழிலாளர்களும், அவர்களின் குடும்பங்களும், பொது மக்களும் கலந்து கொண்டனர். மாநாட்டின் இறுதியில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

1. தொழிலாளர்கள் நலனைப் பாதிக்கக் கூடிய வகையிலும், தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளைப் பறிக்கும் வகையிலும் இயற்றப்பட்டுள்ள புதிய தொழிலாளர் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதைக் கைவிட வேண்டும்.

2. வேலைகளை நிரந்தரப்படுத்தாமல், தொழிலாளர்களை ஏமாற்றி வரும் முறைகளான FTE (Fixed Term Employment), NAPS (National Apprenticeship Promotion Scheme), NATS (National Apprenticeship Training Scheme) ஆகியவற்றை நீக்க வேண்டும். இதில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் மற்றும் பயிற்சித் தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அரசுத்துறை மற்றும் தனியார் துறைகளில் 480 நாட்களுக்கு மேல் பணிபுரிந்து வரும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் தற்காலிகத் தொழிலாளர்களை தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் (தொழிலாளர்களுக்கு நிரந்தர தகுதிநிலை வழங்குதல்) 1981ன் அடிப்படையில் உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்

3. வேலைநீக்கம் என்னும் மோசமான ஆயுதத்தைத் தடைசெய்வதோடு, நிர்வாகத்தால் எந்த ஒரு தொழிலாளியும் பாதிக்கப்படாமல் இருக்க வேலைநீக்கத் தடைசட்டத்தை உடனடியாகக் கொண்டுவரவேண்டும். ஏற்கனவே பணிநீக்கம் செய்யப்பட்ட, பாதிக்கப்பட்ட அனைத்துத் தொழிலாளர்களுக்கும் உரிய இழப்பீடுகளோடு வேலை வழங்கப்பட வேண்டும்.

4. அனைத்துத் தொழிலாளர்களுக்கும் 8 மணி நேர வேலைநாளை உத்திரவாதப்படுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும், தொழில்நுட்ப வளர்ச்சி அதிவேகமாக வளர்ந்து வரும் நிலையில், தொழிலாளர்களின் வேலைப் பளுவைக் குறைக்கும் வகையில் 6 மணிநேர வேலைநாள் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும்.

5. தொழில் ரீதியாகவும், உற்பத்தியுடன் இணைத்தும் குறைந்தபட்ச சம்பளம் நிர்ணயிப்பதைத் தவிர்த்து, தற்போதுள்ள விலைவாசி உயர்வுக்கு ஏற்ப குறைந்தபட்ச சம்பளச் சட்டத்தில் திருத்தம் செய்து சாதாரண தொழிலாளிக்கு மாதம் 30,000 ரூபாய் குறைந்தபட்ச சம்பளமாக வழங்க வேண்டும். மேலும், போனசுக்கான உச்சவரம்பை நீக்க வேண்டும்.

6. வேலை செய்யும் இடங்களில் ஆண் – பெண் தொழிலாளர்களிடையே உள்ள பாகுபாடு ஒழிக்கப்பட வேண்டும். ஊதியம், பதவிஉயர்வு ஆகியவற்றில் பெண் தொழிலாளர்களுக்குக் காட்டப்படும் பாகுபாடுகளை ஒழிக்க வேண்டும். இரவு நேரங்களில் பெண்கள் பணி புரிவதற்கு அனுமதியளிக்கும் சட்டத்திருத்தங்களை இந்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். பெண் தொழிலாளர்களின் மீதான பாலியல் ரீதியான தாக்குதல்களைத் தடுப்பதற்கு பெண் தொழிலாளர்கள் மட்டுமே அடங்கிய குழுக்களை ஆலைதோறும் கட்டாயம் அமைக்க வேண்டும். பெண் தொழிலாளர்கள் பணிபுரியும் அனைத்து ஆலைகளிலும் குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

7. இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமையான தொழிற்சங்க உரிமையின் அடிப்படையில் சங்கம் அமைத்த காரணத்திற்காக பேரோகோட் ஆலை நிர்வாகத்தால் பணிநீக்கம் செய்யப்பட்ட 68 தொழிலாளர்களுக்கும், ராஜாகிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் ஆலையிலிருந்து கட்டாய விருப்ப ஓய்வுத் திட்டத்தின் மூலம் வெளியேற்றபட்ட 42 தொழிலாளர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும். இத்தனை மாதங்களாக வேலையின்றித் தவித்து வரும் தொழிலாளர்களுக்கு அந்த நாட்களைப் பணிபுரிந்த நாட்களாகக் கணக்கிட்டு, அதற்கான இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

8. மைவா பார்மா ஆலைத் தொழிலாளர்கள் மற்றும் டெரக்ஸ் ஆலைத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையை நியாயமான முறையில் உடனடியாக முடித்து வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஒசூர் பகுதியில் இயங்கிவரும் அனைத்துத் தொழிற்சாலைகளிலும் சட்ட விதிமுறைகளுக்குப் புறம்பாக ஒப்பந்த தொழிலாளர் உரிமம் பெற்றும், உரிமம் பெறாமலும் தொடர் பணிகள் மற்றும் நேரடி உற்பத்தியில் பணியாற்றும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணிநிரந்தரம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

9. தொழிற்சாலைகள் நிறைந்த ஒசூர் பகுதியில் தொழிலாளர்களின் நலன்காக்கவும், தொழிலாளர் பிரச்சனைகளுக்கு விரைந்து தீர்வுகாணும் வகையிலும் தொழிலாளர் அலுவலகத்தை ஒசூர் பகுதியில் நிரந்தரமாக அமைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

10. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், அரசு போக்குவரத்துத் தொழிலாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள், மருத்துவத்துறை சார்ந்த ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து அரசுத் துறை சார்ந்த தொழிலளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு மற்றும் இந்திய அரசின் அனைத்து அரசுத் துறைகளிலும் பணியாற்றி வரும் தற்காலிக ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். அரசு சார்ந்த துறைகளில் ஒப்பந்த அடிப்படையிலான வேலைகளே இல்லை என்ற நிலைமையை உருவாக்க வேண்டும்.

11. தொழிற்சங்கப் பணிகளை முன்னெடுத்ததால் வேலைநீக்கம் செய்யபட்ட சாம்சங் தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கவும், ஹூண்டாய், ஸ்விங்ஸ் டெட்டர் ஆகிய தொழிற்சாலைகளில் நீண்ட நாட்களாக முடிவுறாமல் இருக்கும் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தைக்கு நியாயமான தீர்வினை வழங்கவும் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் தமிழகம் முழுவதும் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடிவரும் தொழிலாளர்கள் பிரச்சனைகளில் உடனடியாகக் கவனம் செலுத்தித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உத்திரவாதப்படுத்த வேண்டும்.

12. ஓய்வுக் காலத்திற்கு பின்பு கண்ணியமான வாழ்வை அமைத்துக் கொள்ளும் வகையில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டும். அதே போன்று தனியார் துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு உச்சநீதிமன்ற உத்திரவின்படி உயர் ஓய்வூதியம் (Higher Pension) வழங்குவதற்குத் துரிதமாக நடவடிக்கை எடுத்துச் செயல்படுத்த வேண்டும். ஏற்கனவே ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு ஓய்வூதியமும், நிலுவைப்பலன்களும் கிடைக்கச் செய்ய வேண்டும். விவசாயக்கூலித் தொழிலாளர்கள், அமைப்புசாராத் தொழிலாளர்கள் அனைவரும் ஓய்வுகாலத்தில் கண்ணியமான வாழ்க்கையை நடத்தும் வகையில் ஓய்வூதியம் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். அனைத்துத் தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் 15,000 ரூபாய் என நிர்ணயம் செய்ய வேண்டும்.

தொழிலாளர்கள் மத்தியில் வர்க்க உணர்வை ஊட்டுவது, ஓரணியில் ஐக்கியப் படுத்துவது, முதலாளிய வர்க்கச் சுரண்டலிலிருந்து விடுதலை பெறுவது என்ற உயரிய நோக்கங்களுடன் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் துவக்க விழாவைச் சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் நடத்திய ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்புத் தொழிலாளர்கள் அனைவருக்கும் சோசலிசத் தொழிலாளர் இயக்கம் தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

சோசலிசத் தொழிலாளர் இயக்கம்

தமிழ்நாடு

Comments

  1. குழந்தை பாதுகாப்பு மையங்கள் பணியில் இருக்கும் தாய்மார்களுக்கு நிம்மதி அளித்த நாட்டின் வளம் பெருக்க அருமையான திட்டம். ஓசூர் தொழிலாளர் கூட்டமைப்பிற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஒடுக்கு முறைக்கு எதிரான எம்ஆர்எப் (MRF) தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி என்ற பெயரில் 1946 இல் இருந்து இயங்கி வரும் MRF நிறுவனம் சென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதியில் சுமார் 79 ஆண்டுகளாக இயங்கி வருகிறது . நிறுவனம் பெரும் லாபம் அடைந்து வந்தாலும் தொழிலாளர்களின் நலன்கள், ஊதியம், பணிப் பாதுகாப்பு, நிரந்தர வேலை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்து வந்தது. நிர்வாகத்தின் எதேச்சதிகாரப் போக்கிற்கு எதிராக, தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளைப் பாதுகாக்க சங்கம் அமைத்துப் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர் . சென்னையை தலைமையிடமாக கொண்டு 1946 இல் துவங்கபட்ட எம்ஆர்எப் ( MRF) நிறுவனம் திருச்சி , பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும், பல மாநிலங்களிலும் கிளைகளை அமைத்து டயர் மற்றும் இரப்பர் பொருட்கள், பெயிண்ட், பொம்மைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியா முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர் . திருவெற்றியூர் கிளையில் 1970, 1980, 1990 ஆகிய காலகட்டங்களில் தொழிலாளர்கள் தங்களுடைய நீண்ட நெடிய வீரமிக்க போராட்டத்தின் மூலமாக நிர்வாகத்தை அட...

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யிலுள்ள அணியினரின் சிந்தனைக்கு...

  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஏப்ரல் 2 முதல் 6 வரை மதுரையில் நடைபெற உள்ள தனது 24வது காங்கிரசுக்காக முன் வைத்துள்ள வரைவு அரசியல் தீர்மானம் மற்றும் அரசியல் பரிசீலனை அறிக்கை பற்றி சில கருத்துகளை அந்தக் கட்சியிலுள்ள அணியினரின் சிந்தனைக்கு இங்கு முன் வைக்கின்றோம். 1. கிராமப்புறங்களில் ஆளும் வர்க்கங்களில் ஒரு பகுதியாக கிராமப்புறச் செல்வந்தர்கள் இருக்கின்றனர்’ என்றும், ‘கிராமப்புறச் செல்வந்தர்களுக்கும் ஏழை விவசாயிகள், நடுத்தர விவசாயிகள், விவசாயம் மற்றும் இதரத் துறைகளில் ஈடுபட்டு வரும் கிராமப்புற உடலுழைப்புத் தொழிலாளர்களுக்கும் இடையிலான முரண்பாடே கிராமப் பகுதிகளில் நிலவும் அடிப்படை முரண்பாடாகும்’ என்றும், .‘கிராமப்புறங்களில் வர்க்கப் போராட்டத்திற்கான ஆணி வேராக அமைகின்ற கிராமப்புற செல்வந்தர்களின் கூட்டுக்கு எதிராக கிராமப்புற ஏழைகளின் போராட்டங்கள் எதுவுமில்லை. தற்போது மாறிவிட்ட நிலைமைகளைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது நிலப்பிரபுக்களுக்குச் சொந்தமான நிலத்தைக் கைப்பற்றி அதை ஏழை விவசாயிகளின் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதற்கான போராட்டங்களை நீடித்த வகையில் தொடர்வது மிகவும் கடின...