MELS
இணைய வழிப் பயிலரங்கில் லெனின் எழுதியுள்ள ஏப்ரல் ஆய்வுரைகள் என்ற நூல் பற்றி தோழர்.
அ.கா.ஈஸ்வரன் அறிமுக உரை ஆற்றியுள்ளார் (https://senthalam.com/1402).
மார்க்சியத்தைப் பற்றிய அவருடைய தவறான புரிதலை
விளக்கி “சோசலிசப் புரட்சி ஒரு செயல்தந்திரம்”
- அ.கா.ஈஸ்வரன் கண்டுபிடித்துள்ள புதிய கோட்பாடு! என்னும் கட்டுரையை வெளியிட்டோம் (https://senthazhalmagazine.blogspot.com/2025/06/blog-post_30.html).
ஆனால்,
எமது விமர்சனத்தை புரிந்துக் கொண்டு பதிலளிக்காமல் தொடர்ந்து சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கின்றார்.
எமது கட்டுரையின் மீது அ.கா.ஈஸ்வரன் எழுதிய மறுப்புரைக்கான பதில் தான் இந்தச் சிறிய
பதிவு.
நீங்கள்
(அ.கா.ஈஸ்வரன்) கூறுவது போல ரசியாவில் அக்டோபரில் லெனின் சோசலிசப் புரட்சியை
நடத்தியதற்குக் காரணம் ரசியாவில் தோன்றிய இரட்டை ஆட்சிமுறை காரணமல்ல. முதல்
கட்டத்தில் அதிகாரம் முதலாளிகளின் கைகளுக்கு வந்தது. அதனால் முதலாளியப் புரட்சி
கட்டம் முடிவுற்றது. அதன் காரணமாகவே சோசலிசப் புரட்சி திட்டத்தை லெனின் முன்
வைத்தார். அதனைத் தெளிவாகவே லெனின் கீழ்க்காணும் வரிகளில் குறிப்பிடுகிறார்.
“இன்றைய
ரசிய நிலைமையின் குறிப்பான அம்சம் என்னவென்றால், நாடு
புரட்சியின் முதல் கட்டத்தைக் கடந்து அதனுடைய இரண்டாவது கட்டத்திற்குச் சென்று கொண்டிருக்கிறது.
பாட்டாளிகளிடம்
போதிய வர்க்க உணர்வும், போதிய அமைப்புப்
பலமும் இல்லாததால் முதல் கட்டத்தில் அரசியல் அதிகாரம் முதலாளிகளின் கைகளுக்கு வந்தது.
இரண்டாவது
கட்டத்தில் அரசியல் அதிகாரம் பாட்டாளிகளிடமும் விவசாய வர்க்கத்தில் மிகமிக ஏழையாக உள்ள
பகுதியினரிடமும் வர வேண்டும்.” (அழுத்தம்
லெனின் அவர்களுடையது. April Theses, p.8).
மேலும்
“புரட்சியின் முதலாவதும், முதன்மையானதும், அடிப்படையானதுமான அடையாளம் என்னவென்றால்
அரசு அதிகாரம் ஒரு வர்க்கத்திடமிருந்து இன்னொரு வர்க்கத்திடம் செல்வதாகும்.
கண்டிப்பான அறிவியல் சார்ந்தும், நடைமுறை அரசியல் சார்ந்தும் புரட்சி என்ற
வார்த்தையின் பொருள் இதுதான்.
இந்த
அளவில் ரசியாவில் முதலாளிய அல்லது முதலாளிய ஜனநாயகப் புரட்சி முடிவுற்று விட்டது.”
தனது ஏப்ரல் ஆய்வுரையில் எழுதினார். (லெனின், மேலே குறிப்பிடப்பட்ட நூல், பக்.15)
இரட்டை
ஆட்சி தோன்றியது சோசலிசப் புரட்சியைத் தொடர்ந்து மேலே கொண்டு செல்வதற்கு ரசியாவில்
சாதகமாக அமைந்த ஒரு அம்சம்தான். ஆனால் அது புரட்சியின் கட்டத்தைத்
தீர்மானிக்கவில்லை. அரசியல் அதிகாரம் முதலாளிகளின் கைகளுக்கு வந்ததுதான்
புரட்சியின் கட்டத்தைத் தீர்மானித்தது.. அதை லெனின் தெளிவாகவே மேலே
குறிப்பிட்டுள்ளார்.
“பழைய
போல்சுவிக்குகள்” எனப்படுபவர்கள் அதை ஏற்றுக் கொள்ள மறுத்தனர். ‘“பாட்டாளி
வர்க்கம் மற்றும் விவசாயிகளின் புரட்சிகரமான ஜனநாயக சர்வாதிகாரத்தினால்தான்”
முதலாளிய ஜனநாயகப் புரட்சி முடிவு பெறும் என நாம் எப்பொழுதும் சொல்லிக்
கொண்டிருக்கவில்லையா?” என்று கேட்டனர்.
அவர்களுக்குப்
பதில் கூறும் விதமாகவே, லெனின் பின்வருமாறு கூறுகிறார்: ‘புதிய, நிலவி வரும் உண்மை
நிலையின் குறிப்பான அம்சங்களை ஆய்வு செய்யாமல் புரிதலற்று மனப்பாடம் செய்துள்ள
சூத்திரங்களை வலியுறுத்தி வருகின்றனர்’ என “பழைய போசுவிக்குகளை” லெனின்
விமர்சிக்கிறார். முதலாளிய ஜனநாயகப் புரட்சி இன்னும் முடிவுறவில்லை எனச்
சூத்திரம்போலத் திரும்பத் திரும்பக் கூறும் பழைய போல்சுவிக்குகளைத்தான் லெனின்
இவ்வாறு விமர்சிக்கிறார். முதலாளியப் புரட்சி முடிவுற்றது என்பதை வலியுறுத்தும்
விதமாக அவர்களுக்கு விளக்குகிறார்.
இன்னொரு
பக்கம் மென்சுவிக்குகள் நாடாளுமன்றக் குடியரசு அமைக்க வேண்டும் கூறுகின்றனர்.
அவர்களுக்குப் பதில் அளிக்கும் விதமாகவே ஒரு பக்கம் ஏற்கனவே சோவியத் அதிகாரம்
தோன்றியுள்ள நிலையில் நாடாளுமன்றக் குடியரசு அமைப்பது என்பது சோவியத்
குடியரசிலிருந்து பின் நோக்கிக் செல்வதாகும் என லெனின் பதில் அளிக்கிறார்.
ரசியாவில் சோவியத் ஆட்சி என்ற இணை ஆட்சி தோன்றியது ரசியா தொடர்ந்து சோசலிசப் புரட்சியை நடத்தி முடிக்கச் சாதமாக இருந்தது. அதனால்தான் அந்தக் குறிப்பான நிலைமைக்கு ஏற்ற குறிப்பான செயல்தந்திரங்களாக விளக்கப் பிரச்சார வேலையைச் செய்ய வேண்டும்; சக்திகளைச் சேர்க்க வேண்டும்; இவ்விரண்டு வேலைகள் மூலம் சோவியத்துகளில் பெரும்பான்மையைக் கஷ்டப்பட்டு அடைய வேண்டும்; அதன் மூலம் சோவியத்துகளின் கொள்கையை மாற்ற வேண்டும்; சோவியத்துகள் மூலம் அரசாங்கத்தின் கொள்கையையும் அரசாங்கத்தில் வீற்றிருந்த நபர்களையும் மாற்ற வேண்டும் என்று லெனின் விரும்பினார். இவைதான் குறிப்பான நிலையில் லெனினால் முன் வைக்கப்பட்ட செயல் தந்திரங்கள். நீங்கள் கூறுவது போல சோசலிசப் பரட்சி என்ற செயல் தந்திரத்தை அவர் முன் வைக்கவில்லை. ஏனென்றால் சோசலிசப் புரட்சி என்பது செயல் தந்திரமல்ல. லெனின் சொல்லாததை நீங்கள் லெனின் கூறியதாகக் கூறுகின்றீர்கள். அவ்வாறு லெனின் எங்கு கூறியுள்ளார், சுட்டிக் காட்டுங்கள் என்று கேட்டால் மழுப்பலான பதிலைக் கூறுகின்றீர்கள்.
ஆனால் மென்சுவிக்குகளும் சோசலிசப் புரட்சியாளர்களும் பெரும்பான்மையினராக இருந்த அந்த சோவியத்துகள் கூட 1917 ஜூலையில் நடந்த தொழிலாளர்கள், படை வீரர்களின் எழுச்சி அடக்கி ஒடுக்கப்பட்ட பிறகு முதலாளிகளின் தற்காலிக அரசாங்கத்தின் தொங்கு சதையாக மாறி விட்டது. சோவியத் அதிகாரம் முடிவுக்கு வந்தது. அந்தக் கட்டத்தில் போல்சுவிக்குகள் தங்களுடைய செயல்தந்திரத்ததை மாற்றிக் கொண்டனர்.
‘நிலைமை மாறுதலடைந்திருந்ததை உத்தேசித்து போல்சுவிக் கட்சி தன்னுடைய செயல்தந்திரத்தை மாற்றிக் கொள்வதென்று தீர்மானித்தது; தலை மறைவாகச் சென்றது. ... ஆயுத பலம் கொண்டு முதலாளிகளின் அதிகாரத்தை வீழ்த்தி சோவியத்துகளின் அதிகாரத்தை உருவாக்குவது என்ற நோக்கத்தை மனதில் கொண்டு ஆயுதம் தாங்கிய எழுச்சிக்கு வழிகோல ஆரம்பித்தது.’ (அழுத்தம் எமது. சோவியத் கம்யூனிஸ்ட் (போல்சுவிக்) கட்சியின் வரலாறு , பக்.317-318)
இவ்வாறு இரட்டை ஆட்சி இருக்கும்போது அமைதியான முறையில் தொழிலாளர்களையும் படை வீரர்களையும், விவசாயிகளையும் வென்றெடுத்து சோவியத்தில் பெரும்பான்மையாக மாறுவதற்காக வைக்கப்பட்ட செயல்தந்திரங்கள் வேறு; அதே சமயத்தில் இரட்டை ஆட்சி முடிவுக்கு வந்ததும் வைக்கப்பட்ட ஆயுதமேந்திய புரட்சி என்ற செயல்தந்திரம் வேறு. 1917 பிப்ரவரிப் புரட்சிக்கும் அக்டோபர் புரட்சிக்கும் இடையில், இரு வேறுபட்ட செயல் தந்திரங்கள் வைக்கப்பட்டதைப் பார்க்கின்றோம். ஆனால் கட்டம் ஒன்றுதான் ,அது சோசலிசப் புரட்சிக் கட்டம். உங்களுடைய கருத்துப்படி இரட்டை ஆட்சி என்ற குறிப்பான நிலைமை முடிந்ததும் “சோசலிசப் புரட்சி என்ற செயல்தந்திரத்தைக்” கை விட்டிருக்க வேண்டுமல்லவா? ஆனால் கட்சி சோசலிசப் புரட்சியைக் கைவிடவில்லை. ஏனென்றால் சோசலிசப் புரட்சி என்பது திட்டம், நீங்கள் கூறுவது போல குறிப்பான நிலைமைக்கு வைக்கப்படும் செயல்தந்திரமல்ல.
அதே போல 1905 முதல் 1917 பிப்ரவரிப் புரட்சி வரையிலும் புரட்சியின் கட்டம் முதலாளியப் புரட்சிக் கட்டமாக இருந்தாலும் புரட்சி அலையின் ஏற்றஇறக்கங்களுக்கு ஏற்ப பலவேறு செயல்தந்திரங்கள் கடைப்பிடிக்கப்பட்டதை ஏற்கனவே உங்களுடைய கட்டுரையின் மீதான எமது விமர்சனத்தில் சுட்டிக் காட்டியுள்ளோம். ஆனால் அவற்றை நீங்கள் உள்வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை.
ஆனால் இன்னும் நீங்கள் உங்களுடைய தவறை ஒப்புக்கொள்ள மறுப்பதோடு மட்டுமல்லாமல் அதை நியாயப்படுத்தவும் செய்கிறீர்கள். கம்யூனிசக் கட்டம் என்னும் இறுதிக் கட்டத்தை அடைவதற்கான “செயல்தந்திரமே” சோசலிசம் என்று கூறி வார்த்தை விளையாட்டில் ஈடுபடுகின்றீர். ரசியாவில் இரட்டை ஆட்சி அதிகாரம் என்னும் குறிப்பான நிலையில் வைக்கப்பட்டது சோசலிசப் புரட்சி என்ற “செயல்தந்திரம்” என ஒரு பக்கம் கூறுகின்றீர்கள். இன்னொரு பக்கம் சோசலிசப் புரட்சி முடிந்ததும் கம்யூனிசத்தை அடைவதற்கும் சோசலிசம் ஒரு “செயல்தந்திரம்” என்று இன்னொரு அபத்தமான கருத்தை வைக்கின்றீர்கள்? இது உங்களுக்கே அபத்தமாகத் தெரியவில்லையா?
உங்களுடைய அபத்தமான முடிவுகளுக்கு எல்லாம் காரணம் திட்டம்
(programme), மூலவுத்தி (strategy), செயல்தந்திரம் (tactics) ஆகியவற்றுக்கு
இடையிலுள்ள வேறுபாடுகளைப் பற்றியும், அவற்றுக்கு இடையில் உள்ள உறவுகள் பற்றியும்
உங்களுக்கு எதுவும் தெரியவில்லை என்பதுதான். முதலில் அவற்றைத் தெரிந்து
கொள்ளுங்கள். பிறகு விவாதிப்போம்.
சோசலிசத் தொழிலாளர் இயக்கம்
//நீங்கள் (அ.கா.ஈஸ்வரன்) கூறுவது போல ரசியாவில் அக்டோபரில் லெனின் சோசலிசப் புரட்சியை நடத்தியதற்குக் காரணம் ரசியாவில் தோன்றிய இரட்டை ஆட்சிமுறை காரணமல்ல. -//
ReplyDeleteஇது என்னுடைய கருத்தல்ல, லெனினது கருத்தே என்பதற்கு என்னுடைய வகுப்பில் நிறைய ஆதாரத்தைத் தந்துள்ளேன். அதனை படித்துப் புரிந்து கொள்ள முயற்சிக்காமல் என்னை மார்க்சிய விரோதி என்று முத்திரை குத்தினால் போதும் என்று நினைத்து விட்டீர்கள்.
ஆனால் லெனின் கருத்துகளின் அடிப்படையில் பேசுவது மார்க்சிய விரோதம்!!! என்றால் அப்படிப்பட்ட மார்க்சிய விரோதியாகவே!!! நான் இருப்பதில் மகிழிவு கொள்கிறேன்.
இரட்டை ஆட்சி முறைக்கும் ஏப்ரல் ஆய்வுரையில் கூறப்பட்ட சோஷலிசப் புரட்சிக்கும் உள்ள தொடர்பைப் புரிந்து கொள்வதற்கு, லெனின் எழுத்துக்களை மட்டும் இங்கே பயன்படுத்தப்படுத்தப் போகிறேன். அவருக்கும் மார்க்சிய விரோதி பட்டம் கொடுக்க விரும்பினால் கொடுதிடுங்கள்.
இந்த மேற்கோள்கள் அனைத்தும் எனது வகுப்பில் இடம் பெற்றதுதான்.
அனைத்து மேற்கோள்காளையும் கொடுத்துவிட்டு எனது இணைப்புக் கருத்தோடு எனது பதிலை நிறைவு செய்கிறேன்.
லெனின்-
“உடனே சோஷலிசத்தை அடைவதற்கு நம்மிடம் போதிய நாகரிக வளர்ச்சி இருக்கவில்லை, ஆனால் அதற்கு வேண்டிய அரசியல் முன்தேவைகள் நம்மிடம் இருக்கின்றன.”
(சிறியதாயினும் சிறந்ததே நன்று -தேர்வு நூல்கள் தொகுதி 12 – பக்கம்- 345)
“அரசியல் முன்தேவைகள் நம்மிடம் இருக்கின்றன” என்று லெனின் கூறியதை நாம் நான்றாக கவனத்தில் கொள்ள வேண்டும். இதனைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால், லெனின் ருஷ்யாவில் நடத்த வேண்டியது சோஷலிசப் புரட்சி என்று ஏன் கூறினார் என்பதைப் புரிந்து கொள்ள முடியாது.
---------
ReplyDelete“இதனுடன் அக்கம் பக்கமாக முக்கியமான, அதிகாரபூர்வமல்லாத, இன்னும் வளர்ச்சி பெற்றிராத, ஒப்பளவில் பலவீனமான தொழிலாளர் அரசாங்கம் தோன்றியுள்ளது. அது பாட்டாளி வர்க்கத்தின், நகர்ப்புற மற்றும் நாட்டுப்புற மக்கள் தொகையின் ஏழைகள் பகுதி முழுமையின் நலன்களை வெளிப்படுத்துகிறது. இதுவே பெத்ரோகிராதில் உள்ள தொழிலாளர் பிரதிநிதிகளின் சோவியத் ஆகும். இது படைவீரர் விவசாயிகளுடனும், விவசாயித் தொழிலாளிகளுடனும் தொடர்பை நாடுகிறது. விவசாயிகளை விட மேலதிகமாக விவசாயித் தொழிலாளிகளிடம் குறிப்பாயும் முதன்மையாயும் தொடர்புகளை நாடுகிறது.
மெய்யான அரசியல் நிலைமை இத்தகையதே. இதை நாம் ஆகக்கூடுமான அளவு புறநிலையான துல்லியத்துடன் முதலில் வரையறுக்க முயல வேண்டும். அதன் வழியில், மார்க்சியப் செயற்தந்திரங்கள் சாத்தியமான ஒரே உறுதியான அடித்தளத்தை —மெய்நடப்புகளின் அடித்தளத்தை- அடிப்படையாகக் கொள்ள முடியும்.”
(தொலைவில் இருந்து எழுதிய கடிதங்கள் 22-23)
இங்கே லெனின், முதலாளித்துவ அரசுக்குப் பக்கத்தில் தொழிலாளர்களின் சோவியத் இருப்பதை சுட்டிக்காட்டும் போது, “மெய்யான அரசியல் நிலைமை இத்தகையதே” என்கிறார். இதனுடன் முன்பு நாம் பார்த்த, சோவியத் அரசை முன்வைத்து லெனின் கூறிய, “அரசியல் முன்தேவைகள் நம்மிடம் இருக்கின்றன” என்பதையும் இணைத்துப் பார்க்க வேண்டும். அப்படி பார்க்கும் போது, முதலாளி வர்க்கத்தின் அரசுக்கு இணையாகத் தோன்றிய உழைப்பாளர்களின் சோவியத் அரசை முன்வைத்தே ருஷ்யாவில் சோஷலிசப் புரட்சி நடத்த வேண்டும் என்கிற முடிவுக்கு லெனின் வந்துள்ளார் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
--------
“நமது புரட்சியின் மிகவும் குறிப்பிடத்தக்கதான இயல்பு என்னவென்றால் இது இரட்டை ஆட்சியைக் கொண்டுவந்திருக்கிறது என்பதே. இந்த உண்மையை முதலாவதாயும் முதன்மையாயும் புரிந்து கொள்ள வேண்டும்: இது புரிந்து கொள்ளப்படாவிட்டால் நாம் முன்னேற முடியாது.
ReplyDeleteநாம் பழைய 'சூத்திரங்களை'”, உதாரணமாக போல்ஷிவிசத்தின் சூத்திரங்களை எவ்வாறு நிறைவு செய்வது, திருத்தம் செய்வது என்பதை நாம் தெரிந்திருக்க வேண்டும். மொத்தத்தில் அவை சரியாகவே இருந்தன என்ற போதிலும் அவற்றின் தூலமான செயலுருவம் வேறாக மாற்றம் அடைந்திருக்கிறது.
ஓர் இரட்டை ஆட்சி குறித்து இதற்கு முன்னால் எவருமே நினைக்கவில்லை, அல்லது நினைத்திருக்கவும் முடியாது.
இந்த இரட்டை ஆட்சி என்பது என்ன?
இடைக்கால அரசாங்கத்தின், முதலாளித்துவ வர்க்கத்தினுடை அரசாங்கத்தின் அருகிலேயே இன்னொரு அரசாங்கம் உதித்தெழுந்துள்ளது. இதுகாறும் பலவீனமாயும் முளைப்பருவத்தில் இருந்த போதிலும் அது மெய்யாகவே நிலவுகிற, வளர்ந்து வருகிற ஓர் அரசாங்கம் என்பதில் ஐயமில்லை- இதுவே தொழிலாளர் மற்றும் படையாவீரர்களின் பிரதிநிதிகள் அடங்கிய சோவியத்துகளாகும்.” (இரட்டை ஆட்சி -39)
ஆக ருஷ்ய நாட்டின் புரட்சி, இரட்டை ஆட்சி கொண்டதாகவும், அதில் ஒன்று உழைப்பாளர்களின் சோவியத் ஆட்சியாக வெளிப்பட்டுள்ளது என்பதை புரட்சியின் தன்மையாக லெனின் அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார்.
இதனடிப்படையில், ஐந்தாவது ஏப்ரல் ஆய்வுரையில் லெனின் கூறியதின் பொருளைப் புரிந்து கொள்வது எளிதாக இருக்கிறது.
தொழிலாளர் பிரதிநிதிகள் அடங்கிய சோவியத்துகளில் இருந்து நாடாளுமன்றக் குடியரசுக்குத் திரும்பிச் செல்வது ஒரு பிற்போக்கு நடவடிக்கை, நாடாளுமன்ற குடியரசு வேண்டாம், சோவியத்துகளின் குடியரசு வேண்டும்.
---------
“நமது புரட்சியின் பிரதான இயல்புக்கூறு, கவனமாகச் சிந்தித்துத் தெளிய வேண்டும் என்று மிகவும் அவசர கட்டாயமாகக் கோருகிற ஓர் இயல்புக்கூறு இரட்டை ஆட்சி”
ReplyDelete(நமது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் பணிகள் -49)
--------
இரட்டை ஆட்சியின் தன்மையை லெனின் அடுத்து விளக்குகிறார்.
முதலாளித்து-ஜனநாயகப் புரட்சிக்கு அப்பால் சென்று, ஆனால் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை இன்னும் எட்டிராத நிலையில் புரட்சியின் வளர்ச்சியில், ஒர் இடைநிலைக் கட்டமாக இரட்டை ஆட்சி இருப்பதை லெனின் சுட்டிக்காட்டுகிறார். இரட்டை ஆட்சியின் பிரத்யேக நிலை என்பது இதுதான்.
“சாராரண முதலாளித்துவ-ஜனநாயகப் புரட்சிக்கு அப்பால் சென்று, ஆனால் பாட்டாளி வர்க்கம் மற்றும் விவசாயி மக்களின் தூய சர்வாதிகாரத்தை இன்னும் எட்டியிராத பொழுதில் புரட்சியின் வளர்ச்சியில் ஒரு மாறிவரும் கட்டமாய் இருக்கிறது இரட்டை ஆட்சி”
(நமது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் பணிகள் -51-52)
--------
“ தனிப்பட்ட நபர்களை அன்றி எதார்த்த நடப்பு, மக்கள் திரள் மற்றும் வர்க்கங்களை கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டிய மார்க்சியவாதிகளுக்கு, மேலே சித்தரிக்கப் பட்டுள்ள மெய்யான நிலைமையின் பிரத்தியேகத் தன்மை, இன்றைய தருணத்திற்கான போர்த்தந்திரங்களின் பிரத்தியேகத் தன்மையினை நிர்ணயம் செய்ய வேண்டும்.”
(நமது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் பணிகள் -54)
இங்கே லெனின், “மேலே சித்தரிக்கப் பட்டுள்ள மெய்யான நிலைமையின் பிரத்யேகத் தன்மை” என்பது, “இரட்டை ஆட்சியின் பிரத்யேக இயல்பும் அதன் வர்க்க முக்கியத்துவமும்” என்கிற முந்தைய உட்தலைப்புப் பகுதியே ஆகும்.
சோஷலிசப் புரட்சி என்கிற செயல்தந்திரத்தை லெனின் தேர்ந்தெடுத்தது இரட்டை ஆட்சி என்கிற பிரத்யேகச் சூழ்நிலையில் இருந்தே என்பதில் எந்த சந்தேகமும் எழாத வகையில்தான் லெனின் விளக்கி இருக்கிறார்.
-------
உங்களை நாங்கள் மார்க்சிய விரோதி என்று முத்திரை குத்த வில்லை. அது நீங்களாகக் கற்பிதம் செய்து கொண்டது. லெனினைத் தவறாகப் புரிந்து கொண்டு மற்றவர்களையும் குழப்பாதீர்கள் என்று தான் கூறுகிறோம்.
ReplyDeleteநீங்கள் கொடுத்துள்ள மேற்கோள்கள் எல்லாம் சோசலிசப் புரட்சியை தொடர்ந்து நடத்தக்கூடாது என்று கூறியவர்களுக்கு எதிராக லெனின் வைத்த வாதங்கள். இவை சரியானவை. இவற்றில் எங்களுக்கு எந்தவிதமான விமர்சனமும் இல்லை. ஆனால்
//தனிப்பட்ட நபர்களை அன்றி எதார்த்த நடப்பு, மக்கள் திரள் மற்றும் வர்க்கங்களை கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டிய மார்க்சியவாதிகளுக்கு, மேலே சித்தரிக்கப் பட்டுள்ள மெய்யான நிலைமையின் பிரத்தியேகத் தன்மை, இன்றைய தருணத்திற்கான போர்த்தந்திரங்களின் பிரத்தியேகத் தன்மையினை நிர்ணயம் செய்ய வேண்டும்.”
(நமது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் பணிகள் -54)//
என்ற மேற்கோளில் லெனின் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பான நிலைமைகளுக்கான குறிப்பான செயல் தந்திரங்கள் என்பவை யாவை என்பதை நாங்கள் ஏற்கனவே சுட்டிக்காட்டி உள்ளோம். அது நீங்கள் கூறுவது போல சோசலிசப் புரட்சி என்ற செயல் தந்திரம்(போர் தந்திரம்) அல்ல. மீண்டும் ஒருமுறை நீங்கள் சுட்டிக் காட்டியுள்ள மேற்கோளின் கீழ் உள்ள பக்திகளை நன்கு படியுங்கள். அவை தான் லெனின் கூறும் பல்வேறு செயல் தந்திரங்கள். இவற்றில் எதுவும் நீங்கள் கூறுவது போல சோசலிசப் புரட்சி என்ற ""செயல்தந்திரம்" உள்ளடங்கவில்லை. ஏனென்றால் தோழர் லெனினுக்கு செயல் தந்திரத்திற்கும் திட்டத்திற்கும் உள்ள வேறுபாடுகள் தெரியாத ஒன்று அல்ல. உங்களுடைய தவறான புரிதலுக்கு லெனினைப் பொறுப்பாக்க வேண்டாம். மீண்டும் மீண்டும் கூறுகிறோம் திட்டம் ,மூல உத்தி, செயல் தந்திரம் இவற்றுக்கு இடையில் உள்ள வேறுபாடுகளையும் உறவுகளையும் நீங்கள் புரிந்து கொள்ளவில்லை.
முதலில் அதைப் புரிந்து கொள்ளுங்கள்.
மீண்டும் உங்கள் தவறுகளுக்கு சப்பைக்கட்டு கட்டாதீர்கள்.
தவறை தவறு என்று ஒப்புக் கொள்வதுதான் அறிவு சார்ந்த நேர்மை.