பா.ஜ.க.விடமிருந்து பாராளுமன்ற
ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக கன்னியாகுமரியிலிருந்து காஸ்மீர் வரையிலான “பாரதத்தை ஒன்றிணைக்கும்
நடைபயணத்தை” காங்கிரஸ் கட்சியின்
தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி தொடங்கிய சில நாட்களிலேயே, கோவாவில் அவருடைய
கட்சியைச் சேர்ந்த சட்ட மன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற ஜனநாயகத்தின் மகிமையை
வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளனர்.
செப்டம்பர் 14 ஆம் தேதி 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இணைவதற்கு கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்- ஐ சந்தித்தனர்
கோவாவின் சட்டசபையில் காங்கிரசின் உறுப்பினர்களாக இருந்த 11 பேர்களில் 8 பேர் பா.ஜ.க.விற்குத் தாவியுள்ளனர். அவர்கள் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியை பா.ஜ.க.வுடன் இணைத்து விட்டனர். மத்தியப் பிரதேசம், மகாராஸ்டிரம் ஆகிய மாநிலங்களுக்குப் பிறகு பா.ஜ.க., தனது பண பலத்தின் மூலம் “ஜனநாயகத்தை” மீண்டும் ஒரு முறை பலமாக நிலைநாட்டியுள்ளது.
இதில்
வியப்பு என்னவென்றால் கட்சி தாவிய உறுப்பினர்கள் அனைவரும் வேட்பாளராக நிற்கும்போது
வெற்றி பெற்றால் கட்சி தாவ மாட்டோம் என இந்துக் கோவில்களிலும் கிருத்துவத் திருக்கோவில்களிலும் இஸ்லாமியத்
தர்காக்ககளிலும் சத்தியம் செய்து இருந்தார்கள். அந்தச் சத்தியங்களை எல்லாம் இன்று காற்றில் பறக்க விடப்பட்டு விட்டன. சத்தியங்கள் எல்லாம் கடவுளை நம்பும்
சாதாரண மக்களுக்குத்தான். கடவுளை வைத்து மக்களை ஏமாற்றுபவர்களுக்கு அல்ல.
கோடிக்கணக்கான ரூபாய்க்கு முன்பு கடவுளாவது கத்தரிக்காயாவது. கையில் கோடிக்கணக்கில்
பணம் இருந்தால் எந்தக் கடவுளையும்
விலைக்கு வாங்க முடியும் என்பதை அவர்கள்
நன்கு அறிவார்கள்.
சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு பானாஜியில் உள்ள மகாலட்சுமி கோவிலில் காங்கிரசுக்கு விசுவாசமாக இருப்போம், கட்சி தாவ மாட்டோம் என சத்தியம் செய்த போது எடுத்தப்படம். இதனை தொடர்ந்து சர்ச் மற்றும் தர்காவிலும் இதேப் போல் செய்தனர்.
பாராளுமன்ற ஜனநாயக முறையில் அவர்களை உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு அவர்கள் பொறுப்பாக இருக்க வேண்டாமா எனப் பொறுப்பான ஜனநாயகவாதிகள் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். வேட்பாளர்கள் வாக்குகளைப் பெறுவதற்காக வாக்காளர்களின் கைகளைப் பிடிப்பார்கள், கால்களைப் பிடிப்பார்கள், எல்லாவற்றிற்கும் மேலாகப் பணத்தைக் கொடுத்து வாக்கை விலை பேசுவார்கள். வெற்றி பெற்றதும் வாக்களித்த மக்களுக்குப் பட்டை நாமம் சாத்தி விட்டு, தேர்தலில் செலவு செய்த பணத்தை விடப் பன்மடங்கு எப்படிச் சம்பாதிப்பது, எந்த வழிகளில் சம்பாதிப்பது என்பதில் முழுமூச்சாக இறங்கி விடுவார்கள். வாக்குகளைப் பெறுவதற்காக “மக்களின் ஊழியனாக இருப்பேன்” எனப் பேசுவார்கள்.
வெற்றி பெற்றதும் மக்கள்
மீது அதிகாரம் செலுத்தும் “முடிசூடா மன்னர்களாக” மாறி விடுவார்கள்; “மக்கள் தொண்டே
மகேசன் தொண்டு” எனப் பேசுபவர்கள் வெற்றி பெற்றதும் முதலாளிகளுக்கும்
ஒப்பந்ததாரர்களுக்கும் பணம் படைத்தவர்களுக்கும் விசுவாசமான ஏஜன்டுகளாக,
இடைத்தரகர்களாக மாறி விடுவார்கள்.
அவர்கள்தான் இவர்களுக்குப் படியளக்கும் பெருமாள்கள். மக்களுக்கு அவர்கள் எள்ளளவும்
அவர்கள் பொறுப்பாக இருக்க வேண்டியதில்லை. மக்களுக்கு வாக்களிப்பதைத் தவிர வேறு
எந்த உரிமையும் கிடையாது. பிரதிநிதிகள்
மீது எந்த விதமான கட்டுப்பாடும் மக்களுக்குக் கிடையாது.
முதலாளியக்
கட்சிகளுக்குக் கொள்கை கோட்பாடு என்பதெல்லாம் முதலாளிய வர்க்கத்திற்குச் சேவை
செய்வதுதான்; முதலாளிகளுக்குத் தேவையான
சட்டங்களை இயற்றுவதும் அவற்றை நிறைவேற்றுவதும்தான். அதன் மூலம் அதிகாரத்தைப்
பயன்படுத்திச் சட்ட வழிகளிலும் சட்டத்திற்குப் புறம்பான வழிகளிலும் தங்களை வளப்படுத்திக் கொள்வதுதான்.
“பாராளுமன்றம்
புனிதமானது”, “அரசியல் அமைப்புச் சட்டம் புனிதமானது” என அவர்கள் மூச்சுக்கு
முந்நூறு தரம் கூறிக் கொண்டாலும் பணமும் அதிகாரமுமே அவர்களுடைய இலக்கு. அந்த
இலக்கை அடைவதற்காகப் புனிதமாகக் கருதும் எதையும் அவர்கள் மீறுவார்கள், தடையாகக் கருதும் எதையும் அழிப்பார்கள்.
பாராளுமன்ற
ஆட்சிமுறை சமூகத்தில் சிறுபான்மையாக உள்ள முதலாளிய வர்க்கத்திற்கான ஆட்சிமுறை.
மேற்கத்திய நாடுகளில் முதலாளிய வர்க்கம் அந்த ஆட்சிமுறையை ஏற்படுத்தியது. பிரிட்டிஷ்
காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்தபோதே இங்கு இந்த ஆட்சிமுறை உருவாக்கப்பட்டு விட்டது..
அதே ஆட்சிமுறையை 1947க்குப் பிறகு சில சீர்த்திருத்தங்களுடன் இங்குள்ள முதலாளிய வர்க்கமும்
தனக்கேற்ற ஆட்சிமுறையாக வரித்துக் கொண்டது. இது மக்களுக்கு முழுமையான ஜனநாயகத்தை
வழங்காத அதிகார வர்க்க ஆட்சிமுறையாகும்.
உண்மையில் மக்களுக்கு முழுமையான ஜனநாயகத்தை வழங்கக் கூடிய ஆட்சிமுறை சோவியத் ஆட்சிமுறையாகும். அது முதன் முதலாக வரலாற்றில் 1871ல் பிரஞ்சு நாட்டில் பாரிசில் ஏற்படுத்தப்பட்டது. முதலாளிய வர்க்கத்தைத் தூக்கி எறிந்து விட்டு உழைக்கும் மக்கள் தலைமையில் கம்யூன் ஆட்சிமுறை கொண்டு வரப்பட்டது. தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிகளுக்கு சட்டமியற்றும் அதிகாரம் மட்டுமில்லாமல் அதை நிறைவேற்றும் அதிகாரமும் இருந்தது. அதிகாரிகளும் நீதிபதிகளும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் தவறிழைத்தால் அவர்களைத் திருப்பி அழைக்கும் அதிகாரம் மக்களுக்கு இருந்தது. இத்தகைய கம்யூன் ஆட்சிமுறைதான் 1917ல் ரசியாவில் சோசலிசப் புரட்சியின் போது உருவாக்கப்பட்டது.
வரலாற்றின்
ஒரு கட்டத்தில் பாராளுமன்ற ஆட்சிமுறை
முதலாளிய வர்க்கத்தால் உருவாக்கப்பட்டது என்றால், அதற்கு அடுத்த கட்டத்தில் சோவியத் ஆட்சிமுறை பாட்டாளி வர்க்கத்தால்
உருவாக்கப்பட்டது. பாராளுமன்ற ஆட்சிமுறை முதலாளிய வர்க்கத்திற்கு ஆனது. சோவியத் ஆட்சிமுறை பாட்டாளி
வர்க்கத்திற்கும் உழைக்கும் மக்களுக்குமானது
சோவியத்
ஆட்சிமுறை சோசலிசப் பொருளாதாரத்துடன் இணைந்தது. நாட்டில் உள்ள தொழிற்சாலைகளும்
நிலமும் சமூகம் முழுவதற்கும் சொந்தமானது, அங்கு சுரண்டுபவர்கள் இல்லை,
சுரண்டப்படுபவர்களும் இல்லை என்ற பொருளாதார அமைப்பைக் கொண்டது.
இத்தகைய ஒரு
பொருளாதார அமைப்பும் சோவியத் வடிவ ஆட்சியுமே மக்களை வேலை இல்லத்
திண்டாட்டத்திலிருந்தும் வறுமையிலிருந்தும் ஏற்றத்தாழ்விலிருந்தும் விடுவிக்கும்.
மக்களை அதிகார வர்க்கத்தின் ஆட்சியிலிருந்து விடுவிக்கும். மக்களுக்கு முழுமையான
ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும்.
பாட்டாளி மக்களும் பிற உழைக்கும் மக்களும் சுரண்டலிலிருந்தும் அடக்கு முறையிலிருந்தும் விடுபட வழி வகுக்கும் இத்தகைய ஒரு சோசலிசப் பொருளாதார அமைப்பையும் சோவியத் ஆட்சிமுறையையும் அமைக்கப் பாடுபட வேண்டிய கம்யூனிஸ்ட் கட்சிகள் பாராளுமன்றவாதத்தில் மூழ்கி முதலாளிய வர்க்கத்தின் அதிகாரத்திற்கான பாராளுமன்ற ஆட்சிமுறையைக் கட்டிக் காப்பாற்ற முயற்சி செய்து கொண்டிருப்பதுதான் பெரும் அவலம்.
- புவிமைந்தன்
Comments
Post a Comment