Skip to main content

ஒடுக்கு முறைக்கு எதிரான எம்ஆர்எப் (MRF) தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

 

மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி என்ற பெயரில் 1946 இல் இருந்து இயங்கி வரும் MRF நிறுவனம் சென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதியில் சுமார் 79 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. நிறுவனம் பெரும் லாபம் அடைந்து வந்தாலும் தொழிலாளர்களின் நலன்கள், ஊதியம், பணிப் பாதுகாப்பு, நிரந்தர வேலை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்து வந்தது. நிர்வாகத்தின் எதேச்சதிகாரப் போக்கிற்கு எதிராக, தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளைப் பாதுகாக்க சங்கம் அமைத்துப் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

சென்னையை தலைமையிடமாக கொண்டு 1946 இல் துவங்கபட்ட எம்ஆர்எப் (MRF) நிறுவனம் திருச்சி, பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும், பல மாநிலங்களிலும் கிளைகளை அமைத்து டயர் மற்றும் இரப்பர் பொருட்கள், பெயிண்ட், பொம்மைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியா முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

திருவெற்றியூர் கிளையில் 1970, 1980, 1990 ஆகிய காலகட்டங்களில் தொழிலாளர்கள் தங்களுடைய நீண்ட நெடிய வீரமிக்க போராட்டத்தின் மூலமாக நிர்வாகத்தை அடிபணிய வைத்து கோரிக்கைகளை வென்றெடுத்தனர். தொழிலாளர்களின் வர்க்க உணர்வு மிக்க போராட்டங்கள்தான் இந்த வெற்றிகளுக்கு அடிப்படையாக இருந்தது. 2007-ஆம் ஆண்டு நிர்வாகம் சட்டவிரோதக் கதவடைப்பு செய்தது, இதை எதிர்த்து தொழிற்சங்கம் தொடர்ச்சியாக 64 நாட்கள் போராடி தமிழக சட்டமன்றத்தில் சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து பிரச்சனை முடித்து வைக்கப்பட்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் தொழிலாளர்களின் பணி ஓய்வு மற்றும் மரணத்தினால் ஏற்பட்ட காலி பணியிடங்களை உடனடியாக நிரந்தர தொழிலாளர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் என்றும், அதற்காக, ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் பயிற்சித் தொழிலாளர்களை 1996 ஆம் ஆண்டு முத்தரப்பு ஒப்பந்தத்தின்படியும், தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தொழிலாளர்களுக்கு நிரந்தர நிலையை அளித்தல்) சட்டம், 1981 அடிப்படையில் 480 நாட்கள் பணி செய்தவர்களை நிரந்தரப்படுத்தக் கோரியும் சங்கத்தின் சார்பில் 06.09.2025 அன்று ஒரு நாள் அடையாளப் பட்டினிப் போராட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில் கடந்த 21 ஆண்டுகளாக தொழிலாளர்களுக்கு வழங்கி வந்த முன்கடன்(Loan), குடும்ப மருத்துவக் காப்பீடு (Medical Insurance Policy) ஆகியவற்றை நிர்வாகம் தர மறுத்து வருகின்றது.

NAPS (National Apprenticeship Promotion Scheme) பயிற்சித் தொழிலாளர்களை நிரந்தரம் செய்யாமல் அவர்களைப் பயிற்சித் தொழிலாளர்களாகவே வைத்து அவர்களின் உழைப்பைச் சுரண்டும் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்தும், தொழிலாளர்களின் நலத்திட்டங்களை மறுத்து மிரட்டும் போக்கைக் கண்டித்தும், தொழிலாளர்கள் இரண்டு நாள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

NAPS திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளித்தல் என்ற பெயரில் ஓராண்டு முதல் மூன்றாண்டுகள் வரை அவர்களின் உழைப்பை சுரண்டும் முறையானது இந்தியாவில் பரவலாக அனைத்து இடங்களிலும் நடைமுறைப்படுத்தபட்டு வருகின்றது. தொழிற்கல்வி பயின்ற இளைஞர்களுக்கு மட்டுமே வழங்கபட்டு வந்த பயிற்சி முறையானது தற்பொழுது, பள்ளிக் கல்வி முதல் பல்கலைகழக கல்வி வரை பயின்ற அனைத்து இளைஞர்களையும் பயிற்சி அளித்து மேம்படுத்துதல் என்ற பெயரில் முதலாளிகள் சுரண்டி வருகின்றனர். எம்.ஆர்.எப் நிறுவனமும் இத்தகைய சுரண்டல் முறையை கையாண்டு வந்த நிலையில் அதனை கைவிடக் கோரியும், அவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க கோரியும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொழிலாளர்களின் உணர்வு மிக்க போராட்டத்தை ஒடுக்கும் வகையில் நிர்வாகம் உணவகத்தை மூடியும், பேருந்து வசதியை நிறுத்தியும் உள்ளது. மேலும் 13.09.2025 அன்று முதல் தொழிலாளர்களை ஆலைக்கு உள்ளே அனுமதிக்க மறுத்து, நிர்வாகம் தரும் ஒப்புதல் கடிதத்தில் கையெழுத்து இட்டால் மட்டும்தான் உள்ளே விட முடியும் எனக் கூறி ஆலைக் கதவை மூடி உள்ளது. எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வேலைக்கு வந்த தொழிலாளர்களை அனுமதிக்க மறுத்து கடந்து 14 நாட்களாக சட்டவிரோதக் கதவடைப்பு செய்து வருகிறது

ஆலை வாயில் முன் நடைபெற்று வந்த தொழிலாளர்களின் போராட்டத்தை நீதிமன்றத்தின் துணையைக் கொண்டு நிர்வாகம் அப்புறப்படுத்தியது. தொழிலாளர்கள் வேறு இடத்தில் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

NAPS பயிற்சித் தொழிலாளர்களை நிரந்தரம் செய்யாமல் நேரடி உற்பத்தியில் ஈடுபடுத்த ஒப்புக் கொண்டால் மட்டுமே கதவடைப்பை நீக்கம் செய்யவும், பறிக்கப்பட்ட நலத்திட்டங்களை வழங்கவும் முடியும் என நிர்வாக மிரட்டல் விடுக்கின்றது. தொழிலாளர் நலத்துறை, நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதப் போக்கையும், சட்டத்திற்குப் புறம்பான மிரட்டல் போக்கையும், கண்டிக்காமல் வேடிக்கை பார்த்து வருகின்றது.

திராவிட மாடல், சமூகநீதி, உழைக்கும் மக்களுக்கான அரசு எனத் தம்பட்டம் அடிக்கும் திமுக அரசு, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், உள்ளாட்சி துறைகள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் ஒப்பந்த அடிப்படையிலேயே தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திச் சுரண்டி வருவதால், முதலாளிகளின் இத்தகைய சுரண்டல் போக்குக்கு உடந்தையாகவும், பாதுகாவலனாகவும் இருந்து வருகின்றது.

வெளிநாடுகளுக்கு சென்று முதலீட்டை ஈர்ப்பது, முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவது, ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவது என்பதெல்லாம் முதலாளிகள் இலாபத்தைப் பெருக்குவதற்கும், மக்களின் வரிப்பணத்தை சலுகைகளாக அவர்களுக்கு அள்ளிக் கொடுப்பதற்கும், அனைத்து வளங்களையும் முதலாளிகள் வரைமுறையின்றிப் பயன்படுத்திக் கொழுப்பதற்கும் தேவையான சேவைகளைச் செய்யும் சேவகனாக திராவிட மாடல் திமுக அரசு உள்ளது.

சமீபத்தில் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம், தூய்மை தொழிலாளர்கள் போராட்டம், தற்பொழுது எம் ஆர் எப் தொழிலாளர்கள் போராட்டம் எனத் தமிழகம் தழுவிய அளவில் கவனம் பெற்ற வீரியம் செறிந்த போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதே சமயத்தில், தொழிலாளர்களின் மீதான ஒடுக்குமுறைகளும், சட்டவிரோத போக்குகளும் ஏராளமாக அரங்கேறி வருகின்றன. இந்த ஒடுக்குமுறைகளும் தொழிலாளர் விரோதப் போக்குகளும் இந்த அரசு முதலாளி வர்க்கத்திற்கான அரசு என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்தி வருகின்றன.

இந்திய ஒன்றிய அரசிலும், மாநில அரசுகளிலும் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், இத்தகையை தொழிலாளர் விரோதப் போக்கை, உழைக்கும் மக்கள் விரோதப் போக்கையே கடைப்பிடித்து வருகின்றன என்பதையும். இந்த அரசு முதலாளி வர்க்கத்தின் நலன்களைக் காப்பாற்றும் அரசுதான் என்பதையும் தொழிலாளர்கள் தங்களுடைய போராட்டத்தின் மூலம் அறிந்து வருகின்றனர்.

முதலாளி வர்க்க அரசின் ஒடுக்குமுறைகளை எதிர்கொள்ளவும், அவற்றிலிருந்து விடுதலை பெறவும் வர்க்க உணர்வு பெற்ற தொழிலாளி வர்க்கம் ஒன்றிணைந்து சோசலிச சமூகத்திற்கான அரசியல் போராட்டத்தைக் கட்டமைக்க வேண்டும். அதுவே இன்று தொழிலாளி வர்க்கத்தின் முன்னுள்ள உடனடிக் கடமையாக உள்ளது.


- மாறன்

Comments

Popular posts from this blog

தொழிலாளி வர்க்க ஒற்றுமையை பறைசாற்றும் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கு வாழ்த்துகள்!

  தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாகிய ஒசூரில் தொழிலாளர்களின் ஐக்கியத்தை உருவாக்கவும் வலுப்படுத்தவும், பாட்டாளி வர்க்க அரசியலை அவர்களிடம் கொண்டு செல்லவும் பல்வேறு தொழிற்சங்கங்களின் முன்முயற்சியில் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (Hosur Trade Union Federation -HTUF) தொடங்கப்பட்டுள்ளது. அதன் உருவாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக துவக்க மாநாடு ஏப்ரல் 6 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது ஒசூர் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து பாட்டாளி வர்க்க அணியை வலுபடுத்துவது, பல்வேறு அரசியல் கருத்துகளால் பிளவுபட்டு இருக்கும் தொழிலாளர்கள் பாட்டாளி வர்க்கத்தின் சரியான அரசியலைப் பற்றிக் கொண்டு, வர்க்க உணர்வு பெற்று ஐக்கியப்பட்டு ஓரணியில் திரளும் வகையில் அவர்களிடம் தொடர்ந்து உரையாடுவது, முதலாளித்துவத்தின் கொடும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் உதவுவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பில் மற்ற தொழிற்சங்கங்களும் இணைந்து பாட்டாளி வர்க்கத்தின் கரத்தினை வலுபடுத்...

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யிலுள்ள அணியினரின் சிந்தனைக்கு...

  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஏப்ரல் 2 முதல் 6 வரை மதுரையில் நடைபெற உள்ள தனது 24வது காங்கிரசுக்காக முன் வைத்துள்ள வரைவு அரசியல் தீர்மானம் மற்றும் அரசியல் பரிசீலனை அறிக்கை பற்றி சில கருத்துகளை அந்தக் கட்சியிலுள்ள அணியினரின் சிந்தனைக்கு இங்கு முன் வைக்கின்றோம். 1. கிராமப்புறங்களில் ஆளும் வர்க்கங்களில் ஒரு பகுதியாக கிராமப்புறச் செல்வந்தர்கள் இருக்கின்றனர்’ என்றும், ‘கிராமப்புறச் செல்வந்தர்களுக்கும் ஏழை விவசாயிகள், நடுத்தர விவசாயிகள், விவசாயம் மற்றும் இதரத் துறைகளில் ஈடுபட்டு வரும் கிராமப்புற உடலுழைப்புத் தொழிலாளர்களுக்கும் இடையிலான முரண்பாடே கிராமப் பகுதிகளில் நிலவும் அடிப்படை முரண்பாடாகும்’ என்றும், .‘கிராமப்புறங்களில் வர்க்கப் போராட்டத்திற்கான ஆணி வேராக அமைகின்ற கிராமப்புற செல்வந்தர்களின் கூட்டுக்கு எதிராக கிராமப்புற ஏழைகளின் போராட்டங்கள் எதுவுமில்லை. தற்போது மாறிவிட்ட நிலைமைகளைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது நிலப்பிரபுக்களுக்குச் சொந்தமான நிலத்தைக் கைப்பற்றி அதை ஏழை விவசாயிகளின் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதற்கான போராட்டங்களை நீடித்த வகையில் தொடர்வது மிகவும் கடின...