செப்டம்பர் 22ந் தேதி தேசியப் புலனாய்வு
அமைப்பும் (NIA) அமலாக்கத் துறையும் போலிசும் இணைந்து இந்திய ஒன்றியம் முழுவதும்
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா (popular Front of India), இந்திய சமூக
ஜனநாயகக் கட்சி (SDPI) ஆகிய அமைப்புகளைச்
சேர்ந்த தலைவர்கள், ஊழியர்கள் என 109 பேரைக் கைது செய்துள்ளது. மத வெறியைத் தூண்டி
மக்களைப் பிளவுபடுத்துகின்றன; உடற்பயிற்சி என்ற பெயரில் இளைஞர்கள் மத்தியில் மத
வெறியையும் வன்முறை எண்ணங்களையும் உருவாக்குகின்றன; நாட்டுக்கு எதிராகச் சதி
செய்கின்றன; அந்நிய நாடுகளிலிருந்து இரகசியமாகப் பணம் வாங்கி அதை நாட்டிற்கு
எதிராகப் பயன்படுத்துகின்றன ஆகிய காரணங்களுக்காக அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்
மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசின் புலனாய்வு நிறுவனமும் போலீசும் கூறுகின்றன.
மத வெறுப்பைத் தூண்டுவது, மத அடிப்படையில்
கலவரங்களைத் தூண்டுவது, தம்மைக் கடுமையாக விமர்சிக்கும் ஜனநாயக சக்திகளைக் கொலை
செய்வது, அந்நிய நாடுகளிலிருந்து பணம் பெறுவது ஆகிய செயல்களில் ஆர்.எஸ்.எஸ்ஸும், சங்கப் பரிவாரங்களும் கூட ஈடுபட்டு
வருகின்றன. ஆனால் தேசியப் புலானாய்வு நிறுவனமோ அமலாக்கத் துறையோ போலீசோ அந்த
அமைப்புகள் மீது எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்காது. ஏனென்றால் அவை ஆளும்
கட்சியான பா.ஜ.க.வின் உறுப்புகள். அந்த அமைப்புகள் புலனாய்வு நிறுவனங்களையும்
போலீசையும் கட்டுப்படுத்தும் அதிகாரத்தில் உள்ளன. எனவே அந்த அமைப்புகளைச்
சேர்ந்தவர்கள் வெறித்தனமாக மத வெறுப்புப் பேச்சுகளைக் கக்கினாலும் அவர்கள்
மீது போலீசும் நீதிமன்றங்களும் கடுமையான நடவடிக்கைகளை
எடுப்பதில்லை. மென்மையாகவே நடந்து கொள்கின்றன; கைது
செய்யப்படுவதற்கு முன்பே பிணையில் வந்து விடுகின்றனர். ஆனால் இந்துத்துவ
வெறியர்களின் மத வெறிப் பேச்சை அம்பலப்படுத்தும் ஜனநாயக சக்திகள் கைது
செய்யப்படுகின்றனர். பொய்யான சதி வழக்குகள் போடப்பட்டு ஆண்டுக் கணக்கில்
கேட்பாரற்றுச் சிறையில் அடைக்கப்படுகின்றனர். நீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டு அவர்களுடைய
விசயத்தில் எப்பொழுதும் பார்வையின்றியே இருக்கின்றாள்.
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவும் இந்திய சமூக
ஜனநாயகக் கட்சியும் மதவாத அமைப்புகள் என்று இந்த அரசு கூறினால் அவைகளின்
தோற்றத்திற்கு பா.ஜ.க.வும் ஆர்.எஸ்.எஸ்சும், சங்கப் பரிவாரங்களுமே முழுப் பொறுப்பேற்க
வேண்டும். பெரும்பான்மையாக உள்ள இந்துக்களின் வாக்கு வங்கியைக் குறி வைத்தே இந்த
அமைப்புகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. 1991ல் இந்த அமைப்புகள் பாபர் மசூதியை
உடைத்தன. அந்த மோசமான நிகழ்வு முஸ்லீம் மக்களின் மனதில் ஆறாத காயத்தை
ஏற்படுத்தியது; கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்திய அரசு நீதியின் பக்கம்
நிற்கும்; தங்களுடைய நலன்களைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையை அவர்கள் இழந்தனர்.
அந்த அதிருப்தியும் அவநம்பிக்கையும் முஸ்லீம் மதவாத அமைப்புகள் தலையெடுக்க வளமான
உரமாகின. அதற்குப் பிறகுதான் இந்திய இஸ்லாமிய மாணவர்கள் அமைப்பு, தேசிய ஜனநாயக
முன்னணி, மக்கள் நீதிப் பாசறை போன்ற அமைப்புகள் ஒன்றிணைந்து 2006ல் பாப்புலர்
ப்ரண்ட் ஆப் இந்தியா தோன்றியது; பிறகு அதன் அரசியல் அமைப்பாக 2009ல் இந்திய சமூக
ஜனநாயகக் கட்சியும் தோன்றியது.
எனவே முஸ்லீம் மதவாத அமைப்பின் தோற்றத்திற்கு
முதன்மையான காரணம் இந்துத்துவ அமைப்புகளின் மதவாதச் செயல்பாடுகள்தான். இந்துத்துவ
அமைப்புகளின் செயல்பாடுகளுக்கான எதிர்வினைதான் முஸ்லீம் மதவாதம். முஸ்லீம்
மதவாதத்தை ஒழிக்க வேண்டுமானால் முதலில் இந்துத்துவ அமைப்புகளின் மதவாதத்தை ஒழிக்க
வேண்டும்.
ஆனால் ஆட்சி அதிகாரத்தில் உள்ள இந்துத்துவ
மதவாதக் கட்சி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி முஸ்லீம் மதவாதத்தை ஒழிக்க
முயல்கிறது. மதவாதத்தைக் காட்டி அந்த அமைப்புகளை நாட்டின் விரோதிகளாகக் காட்டுவதன்
மூலம் முஸ்லீம் மக்களின் அனைவரின் மீதும் அவநம்பிக்கையை ஏற்படுத்தும் செயல்களில்
ஈடுபட்டு வருகிறது. பெரும்பான்மையான மக்களிடமிருந்து அவர்களை அந்நியப்படுத்த
முயற்சி செய்து வருகிறது.
ஜெர்மனியில் ஹிட்லரின் நாஜிசக் கட்சி முதலில்
யூதர்களை விரோதிகளாகச் சித்தரித்துப் படுகொலை செய்தது. பிறகு தொழிற்சங்கவாதிகள்,
கம்யூனிஸ்ட்டுகள் என ஒவ்வொரு பிரிவினராக வேட்டையாடியது. அதன் மூலம் ஆளும் முதலாளிய
வர்க்கத்தை நெருக்கடியிலிருந்து காப்பாற்றியது.
அதே போலத்தான், நெருக்கடியில் சிக்கியுள்ள இந்திய
ஆளும் முதலாளிய வர்க்கத்தைக் காப்பாற்ற பா.ஜ.க. இங்கு மதவாதத்தைக் கையில்
எடுத்துக் கொண்டு மக்களைப் பிளவுபடுத்தி ஒவ்வொரு பிரிவினராக வேட்டையாடி வருகிறது.
வரலாற்றிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
இல்லாவிட்டால் வரலாறு மீண்டும் திரும்பி நம்மைக் கொடூரமாக வேட்டையாடும்.
இந்துமத வாதம் என்பது வானத்திலிருந்து தொபக்கடி என்று குதித்ததல்ல. அதற்கான இம்மண்ணின் பொருளியல், அரசியல் காரணிகளே மதநம்பிக்கைகளையும் மதவாத கருத்தாக்கங்களையும் உருவாக்குகிறது. இதுவே, எல்லாவித மதவாதக் களுக்குள் அடிப்படை. மதவாதக்களுக்கு அடிப்படையான பொருளியல், அரசியல் காரணிகளை குறிப்பாக, உற்பத்திக் கட்டமைப்பைத் தகர்க்காமல் எந்த வாதத்தையும் ஒழிக்க முடியாது.
ReplyDeleteஅதுபோலவே, உடைமை உற்பத்தி முறையில் ஏற்படும் சிக்கல்களுக்கும் தேக்கங்களுக்கும் மதவாதக் கள், இனவாதங்கள் முட்டுக்கொடுப்பது போன்ற முயற்சியின் தீவிர பலன்களாக உள்நாட்டுக் கலகங்களும் எல்லைப் போர்களும்தான் நிகழ்ந்து, உலகமும் நாடுகளும் மறு ஒழுங்கிற்கு வந்துள்ளனவேயன்றி நேரடித் தீர்வுகள் எதையும் பெற்றதில்லை. ஹிட்லரின் நாஜியிசமும் வேறெதுவும் இதற்கு விதிவிலக்கல்ல.