இந்த நல்லிணக்கம் உனக்கேன் உறுத்துகிறது?
மறந்துவிடாதே
ஒருபோதும்
கூண்டுப்
பறவையின் பாடல் கூட
காட்டுத்
தீயைப் போல
உலகெங்கும்
பரவலாம்
அதன் அலகில் இருக்கும் வறண்ட புல்
கூடுகட்டுவதற்காக
இருக்கலாம்
ஆனால் நீ செய்வதென்ன
சிறு பொறியால் அதைப் பற்றவைத்து
கொழுந்துவிட்டு
எரியச் செய்கிறாய்
மார்பின்
அளவல்ல ஒரு மனிதனை உருவாக்குவது
முதலைக்
கண்ணீர் கூருணர்வைக் காட்டாது
பிணியுற்ற
பறவை குறித்து நீயும் நானும்
என்ன உணர்கிறோம் என்பதுதான் விடயம்
நீ கூண்டில் அடைத்துள்ள பறவையின் பாடல்
எங்கள்
குரல்வளையில் ஆழ வேர்கொண்டுள்ளது
ஆம்,
மக்கள் ஒரு கலைஞனை அரவணைக்கிறார்கள்
அதிகாரம்
படைத்தவர்களுக்கு அவர்களைப் பற்றிப்
பேசவும்
பாடவும் பாணர்கள் வேண்டும்
மாறிக்கொண்டிருக்கும்
காற்றின்
திசையை உணர்ந்துகொள்
கூண்டின்
கதவைத் திறந்துவிடு
இல்லாவிட்டால்
சுயமோகத்
தங்க எழுத்துக்களில்
வடிவமைக்கப்பட்ட
உனது மூடங்கியைக்
கவனமாகப்
பார்த்துக்கொள்
ஒரு சிறு தீப்பொறி அதிவிரைவில் காட்டுத் தீயாக
ஆகிவிடுகிறது.
சிரிதர் நந்தேத்கர்
தமிழில் நிழல்வண்ணன்
சிரிதர்
நந்தேத்கர் புகழ்பெற்ற மராத்திக் கவிஞர், மொழிபெயர்ப்பாளரும் பதிப்பாசிரியரும் கூட. தற்போது மராட்டியத்தில் அவுரங்காபாத்தில் வசிக்கும் அவர் ஆங்கிலம் கற்பிக்கிறார். திலீப் வி சவான் இக்கவிதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். அவர் ஆங்கில இலக்கியம் கற்பிக்கிறார்; செய்தித்தாள்களுக்கு பத்திகள் எழுதுகிறார்; ஆங்கிலம், மராத்தி, இந்தி ஆகிய மொழிகள் ஒன்றிலிருந்து ஒன்றுக்கு மொழிபெயர்ப்புச் செய்துவருகிறார்.
நன்றி: ஜனதா வீக்லி
Comments
Post a Comment