கொலை நிகழ்ந்த
முந்திய இரவு சூரியனும் சந்திரனும்
பணப்பெட்டியில் வைத்துப்
பூட்டப்பட்டிருந்தன
இந்தியக் கொடியை
அவளுடைய வாயில் திணித்து
அவளுடைய பேச்சைப்
பறித்திருந்தார்கள்
பல மனிதர்கள்
மின்னும் வாள்களுடன் விரைந்தார்கள்
தீரச் செயலுக்குப்
பெற்ற பரிசைப் போல
அவளை உயரத்
தூக்கிப்பிடித்திருந்தார்கள்
அவர்களுடைய முகத்தில்
காறித் துப்பிவிட அவள் விரும்பினாள்
ஆனால் அவர்களுக்கு
முகங்கள் இல்லை
ஏழு கடல்களின்
சக்தியும் தாக்கியதைப் போல
அவளைச் சங்கிலியால்
பிணைத்திருந்தனர்
அந்தக் காமுகர்கள்
அவள் மீது வீசப்பட்ட
வேட்டைக்காரர்கள்
வலைக்கு எதிராக
போராடிக் கொண்டிருந்த அவள்
சுற்றியிருந்த விளக்குகளுக்குப் பின்னால்
மறைந்து போனாள்
மழையெனக் கொட்டிக்கொண்டிருந்தது
அவளுடைய கண்ணீர்
ஆனாலும் தாகமெடுத்த நூற்றுக்கணக்கான நாக்குகளுக்கு
தாகம் தீரவில்லை.
ஆற்றின் கரைகளில்
சதைக் கோளங்கள்
சிதறிக் கிடந்தன
அவளுடைய ஆடைகள்
கந்தல் கந்தலாய்
கிழிக்கப்பட்டிருந்தன
அந்த நெறித்த தழுவலில் அவளது
உயிரின்
தசை நார்கள் மண்ணில் இரத்தத்தைக்
கொட்டித் தீர்த்தன
இருளின் அரக்கர்கள்
அவளுடைய கண் விழிகளைக்
கோலியாக்கி விளையாடினார்கள்
அவளுடைய தாலியை
வணிகனிடம் விற்று
குடித்துக் களிவெறியாடினார்கள்
அவளுடைய மலருடலின்
இதழ்களை
ஒவ்வொன்றாகக்
கசக்கினார்கள்
பின்னர் அவளை
எடுத்துச் சென்றார்கள்
எங்கென்று யாருக்குத்
தெரியும்?
எனது கண்மணியை
ஒருநாள் பார்த்தேன்
என்னை நான்
கண்ணாடியில் பார்த்தேன்
அவளுடைய முகம்
கறையான் புற்றாக உயர்ந்திருந்தது
அதன் உச்சியில்
ஒரு செந்நாகம் படமெடுத்து
ஆடிக்கொண்டிருந்தது
கண்ணீர் வற்றிய
அவளுடைய விழிகள்
மின்னும் குத்துவாள்களாக வானோக்கி முளைத்திருந்தன
அவளுடைய கருத்த
உடலில் கங்கையும்
யமுனையும் ஓடின
அவளுடைய வாயில்
நெருப்பு எரிந்தது
கிராமத்துப் புதரில்
நச்சரவம் ஒன்று
தங்கியிருந்தது
அதன் மொத்த
உடலும் நோய் பிடித்து
பல வண்ணப்
புள்ளிகளைக் கொண்டிருந்தது
பார்க்கும் இடங்களிலெல்லாம்
நான் புலிகளைப்
பார்க்கிறேன்
சிங்கங்களைப் பார்க்கிறேன்
சிறுத்தைகளைப் பார்க்கிறேன்
‘எனது கண்மணியின்
உடலைக் கிழித்துப் போட்டது
எந்த மிருகம்?
மரங்களும் கற்பாறைகளும்
நிமிர்ந்து நிற்கின்றன
வானை நிரம்பிக்
கொண்டிருப்பது யாருடைய குரல்?
இந்தியாவின் தெருக்களில்
வெள்ளிக் குத்துவாட்கள்
அணிவகுத்துச்
செல்கின்றன
இரத்தத்தில் முக்கியெடுத்த
கந்தைகள்
ஊர்வலத்தில் எடுத்துச்
செல்லப்படுகின்றன.
சித்தலிங்கய்யா
தமிழில் நிழல்வண்ணன்
கர்நாடகாவின் எதிர்க் கலாச்சாரத்தின் அடையாளமாகத் திகழும் சித்தலிங்கய்யா தேவய்யா (1954, பெங்களூர்) 1970 களில்
கன்னடத்தில் தலித் இலக்கியத்தைத் தொடங்கிவைத்த எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். கர்நாடகா தலித்
சங்கர்ஷ சமிதியின் நிறுவன
உறுப்பினரான அவர் தனது
கவிதை மூலமாகவும் எடுத்துக்காட்டாகத் திகழும் எதிர்ப்புப் பாடல்கள் மூலமாகவும் தலித்துக்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் பல தலைமுறைகளுக்குத் தூண்டுகோளாக இருந்துவருகிறார். ஐம்பது ஆண்டுகளாக சித்தலிங்கய்யாவின் கவிதைகள் ஆணாதிக்க சாதி
அமைப்பு முறையின் தீவிர
விமர்சனங்களாக இருந்துவருகின்றன.
நன்றி: ஜனதா வீக்லி
Comments
Post a Comment