Skip to main content

கட்சிகளின் வெற்றியும் மக்களின் தோல்வியும்!

அண்மையில் நடந்து முடிந்த கர்நாடகச் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மொத்தம் உள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளில் 135 இடங்களைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மை பெற்று அமைச்சரவை அமைக்கும் நிலையில் உள்ளது. ஆளும் கட்சியாக இருந்த பா.ஜ.க. 66 இடங்களில் மட்டும்  வெற்றி பெற்றுப் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. மதச் சார்பற்ற ஜனதாதளக் கட்சி 19 இடங்களை மட்டும் கைப்பற்றியுள்ளது. யாருக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காது, அந்த நிலையில் தன்னுடைய ஆதரவு இல்லாமல் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது என்று கருதிக் கொண்டிருந்த மதச்சார்பற்ற ஜனதா தளம் படுதோல்வி அடைந்துள்ளது. 

தென்னிந்தியாவிலுள்ள ஐந்து மாநிலங்களில் கர்நாடகத்தில் மட்டும் பா.ஜ.க. கட்சியின் ஆட்சி இருந்தது. 2018ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சி தனிப் பெரும்பான்மை பெறாத போதும் பல தில்லுமுல்லுகளைச் செய்து காங்கிரஸ் கட்சியிலிருந்தும், மதச் சார்பற்ற ஜனதா தளத்திலிருந்தும் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கித் தனது ஆட்சியை அமைத்தது. இந்த விடயத்தில் அந்தக் கட்சி கை தேர்ந்தது என்பதை மத்திய பிரதேசம், மராட்டியம் போன்ற மாநிலங்களின் கடந்த கால அனுபவங்கள் நிரூபிக்கின்றன. 

கர்நாடகத்தில் கிடைக்கும் வெற்றி 2024ல் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலின் வெற்றிக்கு ஒரு முன்னோட்டம் எனக் கருதி, எப்படியாவது அங்கு ஆட்சியைக் கைப்பற்றிவிட வேண்டும் எனக் கருதியது பா.ஜ.க. அதற்காக அந்தக் கட்சியின் “சகலகலா வல்லவன்” என்று கட்டமைக்கப்பட்டுள்ள  பிம்பத்தைக் கொண்டுள்ள பிரதமர் மோடி பதினாறு முறை பிரச்சாரத்திற்காக அங்கு படையெடுத்தார். பெங்களூருவில் 33 கி.மீ. சாலை வழிப் பேரணியை நடத்தினார். பல்லாயிரம் கோடி ரூபாய்கள் மதிப்புக் கொண்ட திட்டங்களை அறிவித்தார். மோடியின் முக தரிசனம் கிடைத்தால்  போதும், மக்கள் வாக்களித்து விடுவார்கள் எனத் தப்புக் கணக்குப் போட்டனர் அக்கட்சியினர். அவர் மட்டுமல்லாமல் ஒன்றிய  அமைச்சரவையில் உள்ள அவருடைய பரிவாரங்கள் அனைத்தும் கர்நாடகத் தேர்தலைக் குறி வைத்து இறக்கப்பட்டன. மோடியின் மாற்று ஆளுருவமான ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷா வறிய முஸ்லீம் மக்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டைப் பறித்து இந்துக்களுக்கு அளிப்பேன் என வாக்குறுதி அளித்தார்; அதன் மூலம் இந்துக்களின் வாக்குகளுக்குக் குறி வைத்தார்.  ஆனால் அந்தோ பரிதாபம்! அவர்களின் கனவு பலிக்கவில்லை. 

கட்டுக் கதைகளையும் பொய்களையும் புனைசுருட்டுகளையும் கொண்டு மக்களை ஏமாற்றி விடலாம் எனக் கருதும் கட்சி பா.ஜ.க.; மத வெறியை மூட்டி, சனாதனக் கருத்துகளைப் பரப்பி, மக்களை பிளவுபடுத்திப் பெரும்பான்மையாக உள்ள இந்துக்களின் வாக்குகளை எளிதாக அறுவடை செய்து விடலாம் எனத் திட்டமிடும் கட்சி; அதற்கான செயலுத்திகளை வகுத்து, மக்கள் மத்தியில் விசத்தைப் பரப்பி வரும் கட்சி; அதன் அடிப்படையிலேயே அது ஹிஜாப் விவகாரத்தைக் கிளப்பியது. மக்களைப் பிளவுபடுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. பாட நூல்களைத் திருத்தி சனாதனக் கருத்துகளைப் பரப்பும் முயற்சிகளை மேற்கொண்டது. இத்தகைய நடவடிக்கைகள் மூலம் தனது அரசியல் செல்வாக்கை வளர்த்துக் கொள்ள முடியும் எனக் கருதியது.

ஆனால் எதார்த்த நிலைமைகளோ அவர்களின் கட்டுக் கதைகளையும், பரப்புரைகளையும் வெகு எளிதாக அம்பலப்படுத்தின. வேலையில்லாத் திண்டாட்டமும், விண்ணை முட்டும் விலைவாசி ஏற்றங்களும் மக்களின் வாழ்க்கைத் தரத்தைப் படுபாதாளத்திற்குக் கொண்டு சென்றன. வறுமையும் ஏற்றத்தாழ்வுகளும் அதிகரித்தன. இதில் இந்துக்கள், முஸ்லீம்கள் என்ற வேறுபாடு எதுவுமில்லை. 

இலஞ்சமும் ஊழலும் தலை விரித்து ஆடியது; அரசினால் இலாபம் அடைந்து வரும் ஒப்பந்ததாரர்களே பா.ஜ.க.வின் அரசில் மலிந்துள்ள இலஞ்சத்தை வெளிப்படையாகப் பேசினார்கள்; தாங்கள் தொழில் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதை வெளிப்படுத்தினார்கள். அதனால் அந்த அரசாங்கம் “40% கமிஷன் அரசாங்கம்” என்ற பெரும் புகழைப் பெற்றது.  

பா.ஜ.க. என்றால் வளர்ச்சி என்ற கட்டுக்கதையை மக்கள் மத்தியில் விற்பனை செய்ய முயன்றது. கர்நாடகத்தில் பா.ஜ.க. வெற்றி பெற்றால், மாநில அரசு, ஒன்றிய அரசு என்ற “இரட்டை என்ஜின்” மூலம் கர்நாடகம் வேகமாக வளர்ச்சி பெறும் என்ற பரப்புரையைக் கட்டவிழ்த்துவிட்டது. ஆனால் “இரட்டை என்ஜின்” மூலம் கர்நாடக மக்கள் வளர்ச்சியடையவில்லை. மக்களுக்குப் பதிலாக ஒன்றிய அரசின் துணையுடன் மாநிலத்தில் இருந்த ஆட்சியாளர்களே வளர்ச்சியடைந்தனர்; அவர்களுடைய வங்கிக் கணக்குகளைப் பெருக்கிக் கொண்டனர். ஆளும் கட்சி அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், அதிகாரிகளும் பெரும் வளர்ச்சியடைந்தனர். 

ஆட்சியின் மீது மக்களுக்கு இருந்த வெறுப்பை உணர்ந்து கொண்ட பா.ஜ.க.வினர் சிலரும், அந்த ஆட்சியில் சுருட்ட வாய்ப்புக் கிடைக்காதவர்களும் கடைசி நேரத்தில் காங்கிரசிற்குக் கட்சி தாவினர். 

ஆட்சியாளர்களின் மீதான மக்கள் வெறுப்பே காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக அமைந்து அது பெரும்பான்மை பலத்தைப் பெற உதவியது. மேலும், மாதந்தோறும்  குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2000, வேலை கிடைக்காத பட்டதாரிகளுக்கு ரூ.3000, வேலை கிடைக்காத டிப்ளமோ பட்டதாரிகளுக்கு ரூ.1500,  வறுமைக் கோட்டின் கீழ் உள்ள குடும்பத்திற்கு 10 கிலோ அரிசி இலவசம், பெண்களுக்கு மாநிலமெங்கும் பேருந்தில் கட்டணமில்லாப் பயணம்  போன்ற தேர்தல் வாக்குறுதிகள் என்ற தூண்டிலைக் காங்கிரஸ் சாமர்த்தியமாகப் பயன்படுத்திக் கொண்டது. 

பெரும்பான்மை பலம் பெற்று ஆட்சி அமைக்க உள்ள காங்கிரஸ் கட்சி மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்குமா? வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்குமா? விலை ஏற்றங்களைக் குறைக்குமா? மக்களின் வறுமையைப் போக்குமா?

மே 20ஆம் தேதி ஆட்சி அமைக்கத் திட்டமிட்டுள்ள காங்கிரஸ் கட்சி அடுத்த முதல்வர் சித்தராமையாவா  அல்லது  டி.கே. சிவகுமாரா என்ற இழுபறியில் உள்ளது. எந்தக் கோஷ்டி ஆட்சியின் தலைமையில் அமர்வது, அதன் மூலம் யார் அதிக அளவு பயன் அடைவது என்ற சண்டையில் கோஷ்டிகள் ஈடுபட்டுள்ளன. ஆட்சி அமைப்பதன் நோக்கம்  மக்களுக்குச் சேவை செய்வதல்ல, மாறாக ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி யார் அதிகம் கொள்ளையடிப்பது என்பதுதான் அவர்களின் நோக்கம். சட்டமன்ற உறுப்பினர்களின் கட்சி தாவல் மூலம் ஆட்சி கவிழ்ந்தால் ஒழிய, இனி வரும் ஐந்தாண்டுகளுக்கு இவர்களின் கட்டுப்பாட்டில்தான் கர்நாடக மாநிலம் இருக்கும்; அடுத்த ஐந்தாண்டுகளுக்கு மாநிலத்தின் செல்வங்களையும் வருவாய்களையும் கொள்ளையடிக்க மக்கள் அந்தக் கட்சிக்கு ஒப்புதல் அளித்துள்ளனர். இந்த ஐந்தாண்டுகளில் முதலாளிகளுக்குச் சேவை செய்வதன் மூலமும், இலஞ்சம், ஊழல் வழிகளின் மூலமும்  தங்களுடைய செல்வத்தைப் பல மடங்கு அவர்களால் பெருக்கிக் கொள்ள முடியும். இவர்களுடைய ஆட்சி அதிகாரம் அதற்குத்தான் பயன்படுத்தப்படுமே தவிர மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்கப் பயன்படுத்தப்பட மாட்டாது. மீறிப் போனால் தேர்தல் வாக்குறுதிகளில் சிலவற்றை அது நிறைவேற்றலாம். ஆனால் அவை மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்காது. ஐந்தாண்டுகளுக்குப் பிறகு இந்த ஆட்சியாளர்கள் மீது வெறுப்புற்ற மக்கள் மாற்றினைத் தேடுவார்கள். அப்போது மாற்றாக இப்பொழுது ஆட்சி இழந்துள்ள பா.ஜ.க. வந்து நிற்கும். 

இந்த நாடகம்தான் கடந்த எழுபது ஆண்டுகளாக இந்த நாட்டில் ஜனநாயகம் என்ற பெயரில் திரும்பத் திரும்ப அரங்கேறி வருகிறது. மக்களும் கட்சிகளை மாற்றி மாற்றி வெற்றி பெறச் செய்கின்றார்கள். அவர்களுடைய பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என ஒவ்வொரு முறையும் நம்புகின்றனர். ஆனால் ஒவ்வொரு முறையும் அவர்கள் ஏமாற்றப்படுகின்றனர்; ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது; ஆனால் ஒவ்வொருமுறையும் மக்கள் தோல்வி அடைகின்றனர். இதுதான் முதலாளிய ஜனநாயகத்தின் மாய்மாலம். 

சட்டமன்ற, நாடாளுமன்றப் பிரதிநிதிகளுக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை  வாக்களித்து அவர்களைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் மட்டுமே மக்களுக்கு உள்ளது. அதன் பிறகு அவர்கள் தேர்ந்தெடுத்த அவர்களுடைய பிரதிநிதிகள் மீது அவர்களுக்கு எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லை. பிரதிநிதிகளும் மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்கள் பதவிக் காலம் முழுவதும் முதலாளிகளுக்கும், பணம் படைத்தவர்களுக்கும் விசுவாசமாக இருந்து அவர்களுக்குத் தேவையான சட்டங்களை இயற்றுபவர்களாக இருக்கின்றனர். ஒப்பந்ததாரர்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு நாட்டின் செல்வத்தைக் கொள்ளையடிப்பவர்களாக இருக்கின்றனர். அதன் மூலம் தங்கள் செல்வத்தைப் பன்மடங்கு பெருக்கிக் கொள்கின்றனர்.  அடுத்த தேர்தலில் செலவு செய்வதற்குத் தேவையான பணத்தை மட்டுமல்லாமல்,  பல தலைமுறைகளுக்குத் தேவையான சொத்துகளையும் திரட்டிக் கொள்கின்றனர். அரசியல் இவர்களுக்கு இலாபம் சம்பாதிக்கும் ஒரு தொழிலாக உள்ளது. 

இங்கு ஆளுகின்ற முதலாளிய வர்க்கம் இலஞ்ச, லாவண்யங்கள் மூலம் சட்டமன்ற, நாடாளுமன்றப் பிரதிநிதிகளையும், ஆட்சியாளர்களையும், அதிகாரவர்க்கத்தையும் கட்டுப்படுத்தித் தனக்குச் சேவை செய்யும் ஒரு நிர்வாக இயந்திரத்தைக் கட்டமைத்துள்ளது. அரசு நிர்வாகம் என்பதே முதலாளிய வர்க்கத்தின் பொது நிர்வாகத்திற்குச் சேவை செய்வதுதான். அதனால்தான் தங்களுக்குச் சேவை செய்யக் கூடிய,  மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லாத பிரதிநிதித்துவ ஆட்சிமுறையை இங்கு முதலாளிய வர்க்கம் ஏற்படுத்தியுள்ளது. 

இந்த ஆட்சிமுறை முதலாளிய வர்க்கத்திற்கானது. இந்த முதலாளிய சமூகத்தில் செல்வத்தை வைத்திருப்பவர்கள் எவரும் அதை மூலதனமாகப் பயன்படுத்தித் தொழிற்சாலைகளுக்கும், பெரும் பண்ணைகளுக்கும் உரிமையாளர்களாக ஆக முடியும். தொழிலாளர்களைச் சுரண்டித் தமது செல்வத்தைப் பெருக்கிக் கொள்ள முடியும். எனவே முதலாளிகளாக மாற வேண்டுமானால் மூலதனம் தேவை. அந்த மூலதனத்தைத் திரட்டி எப்படியாவது முதலாளியாக மாற வேண்டும் என்ற முதலாளியச் சிந்தனை இங்கு நிலவுவதால் ஆட்சியாளர்களும் அதிகாரவர்க்கமும் தமது அதிகாரத்தைப் பயன்படுத்திப் பல்வேறு வழிகளிலும் செல்வத்தைத் திரட்டுகின்றனர். நாய் விற்ற காசு குரைக்காது. பணத்தை எந்த வகையில்  திரட்டினால் என்ன? முதலாளிகள் ஆக வேண்டும். அவ்வளவுதான்.  அதற்கான வாய்ப்பு வசதிகளைத்தான் இங்குள்ள ஆட்சிமுறை இவர்களுக்கு ஏற்படுத்தித் தருகிறது. இந்த ஆட்சிமுறை நிலவும் வரை மக்களின் துயரம் தீராது; வாழ்வு மலராது. 

இத்தகைய முதலாளிய சமூகத்திற்குப் பதிலாக, தொழிற்சாலைகள், நிலம் போன்ற உற்பத்திச் சாதனங்களைச் சமூக உடைமையாகக் கொண்ட சோசலிச அமைப்பு உருவாக வேண்டும். தொழிற்சாலைகளையும் நிலத்தையும் தனியுடைமையாக வைத்துக் கொண்டு எவரும் தொழிலாளர்களைச் சுரண்டித் தமது வளத்தைப் பெருக்கிக் கொள்ளும் வாய்ப்பு இல்லாத ஒரு சமூகம் உருவாக வேண்டும். அப்பொழுதுதான் தமது ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்திச் செல்வத்தைக் குவிக்கும் ஆட்சியாளர்களுக்கும், அதிகார வர்க்கத்திற்கும்  முடிவு கட்ட முடியும். 

அத்தகைய சமூகத்தில்தான் மக்களுக்கு உண்மையான ஜனநாயகமும் அதிகாரம் இருக்கும். அங்கு மக்கள் மக்கள் தங்களுடைய பிரதிநிதிகள் மீது முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பார்கள். தவறிழைக்கும் பிரதிநிதிகளைத் திரும்ப அழைக்கும் அதிகாரத்தை மக்கள் பெற்றிருப்பார்கள். மக்களின் பிரதிநிதிகளுக்கு சட்டங்களை இயற்றும் அதிகாரம் மட்டுமல்லாமல் அவற்றை நடைமுறைப்படுத்தும் அதிகாரமும் இருக்கும். அங்கு நீதிபதிகளும், அதிகாரிகளும், நிர்வாக அலுவலர்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். உண்மையில் அத்தகைய ஒரு அமைப்பில்தான் மக்களுக்கு முழுமையான ஜனநாயகம் இருக்கும். 

சோசலிச சமூக, பொருளாதார அமைப்பு மட்டுமே மக்களுக்கு உண்மையான ஜனநாயகத்தையும் அதிகாரத்தையும் உறுதிப்படுத்தும்.

- புவிமைந்தன்  

Comments

  1. புரட்சி நடக்கும் என தற்சமயம்
    நினைப்பது சரியில்லை.

    பீகாரில் CPI ML ( Liberation)
    சட்டமன்றத்தில் 12 சீட்டுகள்
    பெற்று உள்ளன
    இடது சாரி 4 மட்டுமே பெற்று உள்ளன.
    சித்தாந்தம் சரியோ இல்லையோ மக்களிடம் பணி செய்து உள்ளனர்.

    இங்கே எந்த கட்சியும் வேலை செய்வதாக தெரியவில்லை.

    புரட்சி... புரட்சி..
    என்று பேசினாலும் புரட்சி வரும் சூழ்நிலை இப்போது
    இல்லை...!

    ReplyDelete
  2. இன்றைய தேர்தல் அமைப்பு முறை பெரும் முதலாளிகளின் கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்வதற்கும், அதை ஜனநாயகம் என்று மக்களிடையில் ஒரு மாயையை உருவாக்குவதற்கும், முதலாளி வர்க்கத்திற்கு உள்ளே இருக்கும் சில முரண்பாடுகளை தீர்த்துக் கொள்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

    தற்போதுள்ள இந்த முதலாளி வர்க்க ஜனநாயகம் எந்த வகையிலும் உழைக்கும் மக்களுடைய தேவைகளையும் கண்ணோட்டத்தையும் பிரதிபலிக்கவில்லை என்பது தெள்ளத் தெளிவாக விளக்கியிருக்கிறீர்கள். மக்களை பிரதிநிதித்துவ படுத்தாத மக்கள் கைகளில் அதிகாரத்தை கொண்டு சேர்க்காத இந்த அரசியல் அமைப்பு உடனடியாக மாற்றப்பட வேண்டும்.

    இது கொடூரமாக முதலாளி வர்க்கம் தொழிலாளிகளையும் விவசாயிகளையும் சுரண்டி வருகின்ற நிலைமையில், புரட்சி என்பது உடனடி தேவையாகவும், அறிவியல் பூர்வமான சாத்தியமான மாற்றாகவும் இருக்கிறது.

    அதை நிறைவேற்றுவதற்கு அனைத்து கம்யூனிஸ்டுகளும் முற்போக்கு சக்திகளும் ஒருங்கிணைந்து செயல்பட முன்வர வேண்டும்.

    இதை தெளிவாக விளக்குகின்ற வகையில் அண்மையில் கர்நாடகத்தில் நடைபெற்ற தேர்தலை ஒரு எடுத்துக்காட்டாக பயன்படுத்தி எழுதப்பட்டிருக்கும் இந்த கட்டுரை மிகவும் சிறப்பானதாக இருக்கிறது.
    🍄🍄🍄

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சாம்சங் தொழிலாளர் போராட்டம்: தலைமைக்கு வெற்றி - தொழிலாளர்களுக்கு பின்னடைவு

  தொழிற்சங்க அங்கீகாரத்தை முதன்மைக் கோரிக்கையாகவும் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் 37 நாட்களுக்கும் மேலாக வேலைநிறுத்தம் செய்து வந்த ‘ சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் ’ போராட்டம் , அது முன்வைத்த கோரிக்கைகளில் எதுவும் நிறைவேற்றப்படாமலேயே 15.10.2024 அன்று முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.   போராட்டங்கள் எப்பொழுதும் வெற்றியை மட்டுமே தருவதில்லை , வெற்றி மற்றும் தோல்வி இரண்டுமே மாறி மாறி வரக்கூடியதுதான் போராட்டக்களம். சில நேரங்களில் பெரும் இழப்புகளோடு கூட போராட்டக் களத்திலிருந்து பின்வாங்க வேண்டிய சூழல் ஏற்படும் , அந்தச் சூழலை உணர்ந்து போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டிய தேவையும் ஏற்படும். இதில் ஏற்பட்ட அனுபவத்தைத் தொகுத்துக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதற்கான படிப்பினையை இது கொடுக்கும். ஆனால் , போராட்டத்தின் போக்கு தொழிலாளர்களின் நலனை முன்னிறுத்தாமல் , ஏமாற்றும் போக்கைக் கைக்கொள்ளும் பொழுது அது ஒட்டுமொத்தத் தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்கே எதிராகக் கொண்டு போய் விடுகின்றது.   சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்திற்குத் தலைமை கொடுத்

வேலை பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் என்னும் நிறுவனம் ஒசூர் பகுதியில் 1998 முதல் செயல்பட்டு வருகின்றது . இது வெள்ளீயத்தால் ( தகரத்தால் ) ஆன கொள்கலன்களை , தகரக்குவளைகளை உற்பத்தி செய்கின்றது . இந்த ஆலையின் முதலாளி இந்தியாவை பூர்வீமாக கொண்டவராக இருந்தாலும் , தற்பொழுது கென்யாவில் வசித்து வருகின்றார் . தொடக்கம் முதலே இந்த ஆலையானது தொழிலாளர்களின் உழைப்பை வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்து வருகின்றது . வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் நீண்டநாட்கள் பணிபுரிந்து வந்தாலும் அவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யாமலும் , நியாயமான ஊதியம் வழங்காமலும் தொழிலாளர்களை வஞ்சித்து வந்தது . தொழிலாளர்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து 52 தொழிலாளர்கள் மட்டும் நிரந்தரம் செய்யப்பட்டனர் . இவர்களும் ஆறு வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் , பயிற்சித் தொழிலாளர்கள் என மாற்றிமாற்றி அவர்களை வகைபடுத்தி பின்னரே நிரந்தரம் செய்யப்பட்டனர் . அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைக்கப்பட்டுச் சுரண்டப்பட்டு வருகின்றனர் . தற்பொழுது வரை 450 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்பட

பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் சீர்த்திருத்தவாதத்தில் வீழ்ந்துள்ள இடதுசாரி இயக்கங்கள்

இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இடதுசாரிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் சில அமைப்புகளின் போக்குகள் அவர்களின் சீர்த்திருத்தவாதக் கண்ணோட்டத்தை அம்பலபடுத்தி வருகின்றன. நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த காங்கிரசு கட்சி இந்திய முதலாளி வர்க்கத்தின் வளர்ச்சிக்கும் சுரண்டலுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்தும் , பெரும் மூலதனம் தேவைப்படும் கனரகத் தொழில்களை மக்களுடைய வரிப் பணத்திலிருந்து அமைத்துக் கொடுத்தும், ஆரம்பக் கட்டத்தில் பன்னாட்டு மூலதனங்களின் போட்டியிலிருந்து அவர்களைப் பாதுகாத்தும் , பின்னர் இந்திய முதலாளிகள் சர்வதேச அளவில் சந்தையைப் பிடிக்கவும் , முதலீடு செய்யவும் உலகமயமாக்கல் கொள்கையை முன்னெடுத்தும் தொடர்ந்து சேவை செய்து வந்தது. அதே நேரத்தில் தொழிலாளர்களின் நலனுக்காகவும் , விவசாயிகளின் நலனுக்காகவும் , ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும் போராடிய இடதுசாரிகள் , ஜனநாயக அமைப்புகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி ஒடுக்கி வந்தது. வீரம் செறிந்த தெலுங்கானா மக்களின்