தமிழ் நாட்டில் சட்டமன்றத் தேர்தல்
விரைவில் வரப் போகின்றது. ஆளும் கட்சியான திமுகவும் எதிர்க் கட்சியான அதிமுகவும்
பெரும்பான்மையான மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சி அமைப்பதற்காக போட்டி போட்டுக்
கொண்டு மக்களுக்கான சலுகைகளை அறிவித்துக் கொண்டிருக்கின்றன.
ஆட்சியில் உள்ள திமுக ஏற்கனவே 1.3
கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மகளிர் உரிமைத் தொகையாக மாதந்தோறும் ரூ.1000
வழங்கி வருகிறது; அரசு பள்ளிகளில் பயின்று பிறகு கல்லூரிகளில் சேர்ந்து படிக்கும்
மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் மாதம் தோறும் ரூ.1000 வழங்கி வருகிறது. மேலும்
மகளிருக்கு இலவசமாக நகரப் பேருந்துப் பயணச் சலுகைகளை வழங்கி வருகிறது; பொங்கல்
பரிசாக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் 3000 ரூபாயை தைப் பொங்கலின்போது வழங்கியது.
போதாக்குறைக்கு மகளிர் உரிமைத் தொகையில் மூன்று மாதத் தொகையான 3000ரூபாயை முன்
கூட்டி வழங்குவதுடன், அத்தோடு கோடைகால சிறப்புத் தொகையாக 2000 ரூபாயையும் சேர்த்து
5000 ரூபாயை மகளிர் உரிமைத்தொகையாக இந்த மாதம் வழங்கி மகளிரைத் திக்குமுக்காட
வைத்துள்ளது. இவை அனைத்தும் தேர்தலில் வாக்குகளாக மாறி தன்னை வெற்றி பெறச் செய்து
மீண்டும் ஆட்சிக் கட்டிலில் ஏற்றும் எனத் திமுக பெரும் நம்பிக்கையுடன் இருந்து
வருகிறது.
அதே சமயத்தில் எப்படியாவது இந்த முறை
ஆட்சியை பிடித்து விட வேண்டும் எனக் கங்கணம் கட்டிக் கொண்டு அதிமுகவின் தலைவர்
எடப்பாடி பழனிசாமி கோதாவில் இறங்கி உள்ளார். தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் மகளிர்
உரிமைத் தொகையாக ரூ.2000 வழங்கப் போவதாகவும், பெண்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்க
ரூ.25000 மானியம் வழங்கப் போவதாகவும், பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்கும்
இலவசப் பேருந்துப் பயணச் சலுகை அளிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார்.
அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல, தான் ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு
குடும்பத்திற்கும் ரூ.10,000 வழங்கப் போவதாக அறிவித்துள்ளார்.
இந்தக் கட்சிகளின் நோக்கம் இலவசங்களை
வாரி வழங்குவதன் மூலம் மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்து விட வேண்டும்
என்பதுதான். 1947 க்குப் பிறகு கட்சிகள் ஆரம்ப காலத் தேர்தல்களில் வாக்களிக்கும்
மக்களுக்கு உப்புமா, காபி வழங்கி வாக்குகளைக் கவர்ந்து வந்தன. பிறகு அவை
பணமாகவும், பொருள்களாகவும் கொடுத்து வாக்குகளைப் பெறுவது எனப் பரிணாம வளர்ச்சி
பெற்றன; அதற்காக கட்சிகள் ஒவ்வொன்றும் தாம் ஆட்சியில் இருந்தபோது இலஞ்சம் மற்றும்
ஊழல்கள் மூலம் சம்பாதித்த கோடிக்கணக்கான ரூபாய்களைச் செலவழித்தன. இப்பொழுது
ஆட்சியில் இருக்கும்போது மக்களின்
வரிப்பணத்தைக் கொண்டே மக்களுக்கு சலுகைகளை வழங்கி வாக்குகளைப் பெறும் புதிய முறை
தோன்றியுள்ளது. தாம் ஆட்சியில் இருக்கும்போது கொள்ளையடித்த பணத்தைக்
குறைவாகச் செலவழித்தால் போதும்; வாக்குகளைப் பெற்று விடலாம்;
ஆட்சிக்கும் வந்து விடலாம்.
வாக்குகளின் மதிப்பை முதலாளியக்
கட்சிகள் நன்கு அறிந்துள்ளன. அதற்காகத் தேர்தலின்போது மக்களின் வாக்குகளைக் கவரப்
பல்வேறு வழிகளில் திட்டமிடுகின்றன. மக்களின் ஒப்புதலை வாக்குகளின் மூலம் பெற்று ஆட்சிக்கு
வரும் கட்சி ஐந்தாண்டுகளுக்கு அதிகாரவர்க்கத்துடன் சேர்ந்து கொண்டு முதலாளிய
வர்க்கத்திற்கு சேவை செய்கிறது; அதிகாரத்தைப் பயன்படுத்தி இலஞ்ச லாவண்யங்கள்
மூலமும், ஊழல்கள் மூலமும் தமது பண பலத்தையும், சொத்துகளையும் பெருக்கிக் கொள்கிறது.
மக்களின் வறுமைக்கும், ஏழ்மைக்கும்,
வேலை இல்லாத் திண்டாட்டத்திற்கும் காரணமாக இருக்கும் முதலாளிய வர்க்கத்தின் சுரண்டலைக்
கட்டிக் காப்பாற்றவும், அதற்குச் சேவை செய்யவும்தான் இந்தக் கட்சிகள் இருக்கின்றன.
முதலாளிய வர்க்கத்தின் சுரண்டலினால்தான் கடந்த எழுபத்தைந்து ஆண்டுகளாக மக்கள்
அற்பச் சலுகைகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அவலநிலையில் வைக்கப்பட்டுள்ளனர்
என்ற உண்மையை இந்தக் கட்சிகள் சொல்லாது. உண்மையில் இங்கு நடைபெற்று வருவது முதலாளிய
வர்க்கத்தின் ஆட்சிதான் என்பதை இந்தக் கட்சிகள் மூடி மறைத்து வருகின்றன;
தாங்கள்தான் உண்மையாக ஆட்சி செய்வதாக நாடகமாடி வருகின்றன.
இந்தக் கட்சிகளுக்கு இடையில் உள்ள
போட்டியெல்லாம் தேர்தல் மூலம் மக்களின் ஒப்புதல் பெற்று யார் ஐந்து ஆண்டுகளுக்கு
தமிழ் நாட்டில் முதலாளிகளின் ஏஜண்டாக சேவை செய்வது என்பதுதான். தமிழ் நாட்டைக்
குத்தகை எடுக்கத்தான் இப்பொழுது இந்தக் கட்சிகள் மக்களின் வாக்குகளுக்கு ஏலம்
கூறிக் கொண்டிருக்கின்றன.
மாநிலமாக இருந்தாலும் இந்திய
ஒன்றியமாக இருந்தாலும் இதுதான் உண்மை. முதலாளி வர்க்கத்தின் ஏஜண்டுகள்தான் இந்தக்
கட்சிகள் என்பதை மக்கள் புரிந்து கொள்ளும்போது இந்தக் கட்சிகளின் நாடகத்திற்கும்
முடிவு கட்டப்படும்.
மு.வசந்தகுமார்


நன்று. " இலவசம்" புறக்கணிக்க பட வேண்டும்.
ReplyDeleteயார் வீட்டு காசை யாருக்கு தருவது...?
ஓநாய்கள் ஆட்டுக்குட்டியை
நினைத்து அழுவது தான் இது.
Good.
ReplyDeleteதேர்தலையொட்டி மக்களுக்கு வாக்குறுதியளிக்கப்படும் சலுகைகள் குறித்தும், அதன் பின்னணி குறித்தும் கட்டுரை நன்கு விவரிக்கிறது. அதிலும் முக்கியமாக அடுத்த சில ஆண்டுகளுக்குத் தங்களுடைய கொள்ளையைத் தொடரவும், முதலாளி வர்க்கத்திற்கு சேவை செய்யவும் மக்களிடமிருந்து கொள்ளையிடித்த பணத்திலிருந்து ஒரு சிறிய பங்கை ஒரு முதலீடாக முன்பு இக்கட்சிகள் செலவழித்து வந்ததைக் குறைத்து, மக்களிடமிருந்து கசக்கிப் பிழிந்து அரசாங்க கருவூலத்தில் உள்ள மக்கள் வரிப் பணத்தையே பயன்படுத்தி எப்படி ஆட்சியைப் பிடிப்பது என்ற புதிய யுத்தியை இந்த முதலாளித்துவக் கட்சிகள் அண்மைக் காலங்களில் பின்பற்றி வருகிறார்கள் என்பதை தோழர் அருமையாக சுட்டிக் காட்டியிருக்கிறார்.
ReplyDeleteஇதை இக்கட்சிகள் மக்களிடம் அரங்கேற்றிக் கொண்டிருக்கும் அதே வேளையில், ஆட்சியில் எந்தக் கட்சி முதலாளி வர்க்கத்தின் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும், தொழிலாளி வர்க்கத்தின் மீதும் மக்கள் மீதும் கொடூரமானத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்த எந்தக் கட்சி மிகவும் பொருத்தமானது என்பதையும் தீர்மானித்து அவர்களுக்கு பணபலம், ஊடகங்களில் பரப்புரை, மின்னணு வாக்கு இயந்திரங்கள், குண்டர்கள், வகுப்புவாத வன்முறை என பல்வேறு வழிகளில் ஆதரித்து தங்களுக்கு மிகவும் விசுவாசமான, நம்பிக்கைக்குறிய கட்சிகளை அல்லது கூட்டணியை பெரும் முதலாளிகள் ஆட்சிக் கட்டிலில் அமர்த்துகிறார்கள் என்பதை வெளிப்படையான உண்மை.
மக்களை ஆளுவது "மக்களே தேர்ந்தெடுத்த கட்சிகள் தான்" என்பது போல ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டாலும், உண்மையில் முதலாளி வர்க்கம் தான் நம்மீது ஆட்சி நடத்துகிறது என்ற தெளிவான கருத்தை கட்டுரை முன்வைக்கிறது.
தொழிலாளி வர்க்கம் விழிப்புணர்வு பெற்று, இந்த சுரண்டல் அமைப்பிற்கு முடிவு கட்ட வேண்டுமென தோழர் தொகுத்துக் கூறியிருப்பது வரவேற்க வேண்டிய மிகச் சரியான கருத்தாகும்.