உலக
முதலாளித்துவத்தின் புதிய தாராளவாதம் மற்றும் உலகமயமாக்கல் கொள்கைகளைத் தொடர்ந்து 1991- இலிருந்தே கல்வியில்
தனியார்மயமாக்கலும் வணிகமயமாக்கலும் அடுத்தடுத்து வந்த அரசாங்களால் பின்பற்றப்பட்டு
வருகின்றன. அரசுப் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றுக்கான அரசு நிதி ஒதுக்கீடு
படிப்படியாகக் குறைக்கப்பட்டு, உள்நாட்டு, அயல்நாட்டு தனியார் முதலீடு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. உலகவங்கியின் அழுத்தத்தால்
கல்விக்கான ஒதுக்கீடு கடுமையாகக் குறைக்கப்பட்டு வருவதன் விளைவாக பள்ளிகள்
மூடப்படுகின்றன. ஆசிரியர்கள் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. பொதுப்பள்ளி, அருகாமைப் பள்ளித் திட்டங்கள்
முடக்கப்படுகின்றன. அரசு உதவி பெறும் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் எண்ணிக்கை
குறைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் பா.ச.க. அரசு புதிய கல்விக் கொள்கை வரைவினை
இந்திய மக்கள் முன்பு விவாதத்திற்கு வைத்துள்ளது. இந்தக் கல்விக் கொள்கை வரைவு புதிய
தாராளவாதக் கொள்கையை இந்துத்துவாச் சித்தாந்தத்துடன் இணைக்கிறது. பல்வேறு மாநிலங்களில் பல்வேறு
மொழிகள் பேசும் மக்களிடையே ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே இந்த வரைவுக்
கொள்கை வெளியிடப்பட்டுள்ளது; விவாதத்திற்கு குறுகிய கால அவகாசமே அளிக்கப்பட்டுள்ளது. இதுவே ஒரு ஜனநாயக மறுப்பாகும்.
இந்த வரைவுக் கொள்கையில் பள்ளிக்கல்வி, உயர்கல்வி, கூடுதல் கவனத்துக்குரிய பகுதிகள், கல்வி முறையில் மாற்றம் ஆகிய
தலைப்புக்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றின் முக்கிய அம்சங்கள் குறித்த கருத்துக்கள் இங்கே
முனவைக்கப்படுகின்றன.
பள்ளிக் கல்வியில் தொடக்க வகுப்புக்களிலேயே
மூன்று மொழிகளைக் கற்பிக்கும் திட்டம் குழந்தைகள் மீது பெருஞ்சுமையை சுமத்துவதாக
இருக்கும். அதைவிட அதன் உள் நோக்கம் மூன்றாவது மொழியாக இந்தியை
மறைமுகமாகத் திணிக்கும் முயற்சியாகும்.
அறிவியல் கல்விக்குப் போதுமான ஆசிரியர்கள், ஆய்வகங்கள், நிதி ஒதுக்கீடு இல்லாத நிலை
குறித்து இந்த வரைவில் போதுமான கவனம் செலுத்தப்படவில்லை. (இதிகாச காலத்தில் ஏவுகணை, புஷ்பக விமானம், பிளாஸ்டிக் சர்ஜரி மூலம்
வினாயகனுக்கு யானைத் தலை போன்ற) அறிவியலுக்கு முரணான கருத்துகள் ஆளும் அரசியல்வாதிகளாலும்
அதிகாரிகளாலும் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அறிவியல் சிந்தனைகளை
ஊக்குவிப்பதற்கான தேவை குறித்து இக்கொள்கை வரைவு கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.
அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்துவதற்கு கவனம்
செலுத்துவதற்குப் பதிலாக அரசு-தனியார் கூட்டாண்மை குறித்துப் பேசுகிறது. ஏற்கெனவே தனியார் பள்ளிகள்
ஆதிக்கமும் வணிகமயமாக்கலும் அதிகரித்து வரும் வேலையில், 50 மாணவர்களுக்கும் குறைவான பள்ளிகளை அருகாமைப்
பள்ளிகளுடன் இணைக்கும் திட்டம் சிற்றூர்கள், பழங்குடிப் பகுதிகளின்
குழந்தைகளுக்குக் கல்வியை மறுப்பதாகும். போதுமான
போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையில் உழைக்கும் ஏழைப் பெற்றோர்கள் தங்கள்
பிள்ளைகளை எப்படித் தொலைதூரத்திற்கு அனுப்பிப் படிக்க வைப்பார்கள்?. தனியார் பள்ளிகளில் ஏழை
மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 25% இடங்களை கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்து
ஒழிக்கப் பார்க்கும் முயற்சியும், நாடெங்கும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட
பள்ளிகளை இணைத்தல்/மூடுதல் திட்டடத்தின் கீழ் மூடப்படும் முயற்சியும்
கண்டிக்கத் தக்கதாகும்.
பள்ளிக் கல்வியில் மூன்று, ஐந்து, எட்டு வகுப்புக்களில் இந்திய
அளவில் பொதுத் தேர்வு நடத்தப்படுவது, 9, 10, 11,
மற்றும் 12 ஆம் வகுப்புக்களை நான்கு ஆன்டுகள் தொகுப்பாக, பருவத் தேர்வு முறைக்குள் ( 8 செமஸ்டர்கள் ) கொண்டுவந்து ஆறு மாதங்களுக்கு
ஒருமுறை தேர்வு வைத்து வடிகட்டப்படுவது, ஒவ்வொரு கட்டத்திலும் தேசியத் தேர்வு, கலை அறிவியல் கல்லூரியில்
நுழைவதற்குக் கூடத் தேசியத் தேர்வு ஆகியவை எளிய மக்களின் குழந்தைகள்
உயர்கல்விக்குச் செல்வதைத் தடுக்கும்.
பள்ளி இறுதி வகுப்புத் தேர்ச்சியை மதிப்பீடு
செய்வதைத் தனியார் வசம் ஒப்படைப்பது, பதினான்கு வயதில் தொழிற்கல்வியை அறிமுகப்படுத்துவது போன்றவை
கிராமப்புற, நகர்ப்புற ஏழை மாணவர்களை வடிகட்டி, முதலாளிகளின் தொழிற்சாலைகளுக்கு குறைந்த
ஊதியத்தில் பணியாற்ற அனுப்பி வைக்கும் திட்டமாகும். இதற்கேற்பக் குழந்தைத்
தொழிலாளர்கள் சட்டம், தொழிலாளர்கள் சட்டங்கள் ஆகியவற்றில் திருத்தங்கள்
கொண்டுவரப்படுவதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
உயர்கல்வி நிறுவனங்களை முதலாவது, இரண்டாவது, மூன்றாவது, நான்காவது என்று தரப்படுத்துவதும், தரம் குறைந்தது
என்று மதிப்பிடப்படும் கல்லூரிகளை அவை இணைந்துள்ள பல்கலைக் கழகங்களுடன் இணைத்துவிட
வேண்டும் என்பது சமூக நீதிக் கோட்பாட்டின் அடிப்படையில் பல்லாண்டுகளாக
கட்டியமைக்கப்பட்டுள்ள பொதுக்கல்வித் திட்டத்தை நொறுக்கிவிடும்.
மேலும் தகுதி பற்றியே எப்போதும்
பேசும் வரைவுக் கல்விக் கொள்கை இட ஒதுக்கீடு குறித்து மௌனம் சாதிப்பது ஐயத்தை
எழுப்புகிறது. தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள், மூன்றாம்
பாலினத்தவர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கான சிறப்புக் கவனம்
எதுவும் வரைவுக் கொள்கையில் காணப்படவில்லை. இது சாதி, வர்க்கம், பாலின வேறுபாடுகளைக்
களையும் அரசியல் சட்டத்தின் சமூகநீதி, சோசலிச இலக்கினைப்
புறக்கணிப்பதாக இருக்கிறது.
இது கார்ப்பரேட் சமூகப்
பொறுப்புணர்வு, சமூக சேவை, நன்கொடையாளர் போன்ற பெயர்களில்
கல்வியைத் தனியாரிடம் ஒப்படைத்து, மாணவர்களை முதலாளிகளின் கருணையை எதிர்நோக்கி நிற்கச்
செய்கிறது. உயர்கல்வி நிறுவனங்களில் வணிகமயமாக்கலை வரைவுக் கொள்கை ஊக்குவிக்கிறது. தனியார் கல்வி
நிறுவனங்களில் உள்ளது போன்ற கார்ப்பரேட் மாதிரியில் நிர்வாக அதிகாரத்தை
உருவாக்குவதை முன்வைக்கிறது. உயர் கல்வி நிலையங்களில் நிர்வாகத் தலைமைகளிடம் அதிகாரம்
குவிக்கப்படுவது கொடுங்கோன்மைக்கு இட்டுச் செல்லும். செனட், கல்விப் பேரவை
போன்றவற்றில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கான பிரதிநிதித்துவம் குறித்து மௌனம்
காக்கிறது. இது கல்வி நிறுவனங்களில் ஜனநாயகத்தை அடியோடு
அழித்துவிடும்.
இந்த வரைவுக் கொள்கை இந்தியையும் சமஸ்கிருதத்தையும்
உயர்த்துவது மத்திய அரசின் பொறுப்பு என்றும், ஏனென்றால் இந்த
மொழிகள் ஒரு மாநிலத்துடனோ ஒரு சமூகத்துடனோ கட்டுப்படுத்தப்படக் கூடியது அல்ல என்று
பரிந்துரைக்கிறது. பிற இந்திய மொழிகள் அந்தந்த மாநில அரசாங்கங்களின்
ஆளுகை வரம்புக்குள் இருந்து வரும் என்றும் கூறுகிறது. இது அப்பட்டமான
மொழித்திணிப்பு மட்டுமின்றி, பார்ப்பனிய ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ளும்
முயற்சியுமாகும்.
இந்த கல்விக் கொள்கை வரைவின் மிக முக்கியமான
அம்சம், சட்டபூர்வச் செயல்பாடுகளும் அவற்றின் பரவலாக்கலும் அனைத்து மட்டங்களிலும்
சுதந்திரத்தையும் தன்னாட்சியையும் கொண்டுவரும் என்று கூறுகிறது. அதே நேரத்தில் அதை வெறும்
கண்துடைப்பாக ஆக்கும் வண்ணம் கல்வி தொடர்பான அனைத்து விடயங்களுக்கும் ராஷ்டிரிய
ஷிக்ஷா ஆயோக் (தேசியக் கல்வி ஆணையம்) என்ற ஒர் உயர்மட்ட அமைப்பை
உருவாக்குவதாகக் கூறுகிறது. இது கல்வியில் மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் சம அளவிலான அதிகாரத்தை
அங்கீகரிக்கும் அரசியல் சட்டத்தின் அப்பட்டமான மீறலாகும். பல்வேறு தேசிய இனங்கள், பல்வேறு மொழிகள், பல்வேறு பண்பாடுகள் கொண்ட நாட்டில்
அவற்றின் இயல்புக்கேற்ற கல்வித் திட்டத்தை வைத்துக் கொள்வதற்காகவே அரசியல்
சட்டத்தில் மாநிலப் பட்டியலில் கல்வி சேர்க்கப்பட்டிருந்தது. ஆனால் அது நெருக்கடி காலத்தில்
காங்கிரஸ் ஆட்சியில் பொதுப் பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்டது. இப்போது இந்த வரைவுக் கொள்கை இந்த
தேசியக் கல்வி ஆணையத்தின் மூலம் கல்வி தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்கும்
அதிகாரத்தை மத்திய அரசு எடுத்துக்கொண்டு, மாநில அரசுகளுக்கு
வெறுமனே அதை நிறைவேற்றும் பணியை மட்டும் அனுமதிக்கிறது. பிரதமர் தலைமையிலான இந்த ஆணையம்
அரசியல் சட்டத்தின் கூட்டாட்சித் தன்மையை அவமதிப்பதாகும்.
மேலும் மத நிறுவனங்கள், தனியார் கார்பரேட் அல்லது சேவை
நிறுவனங்கள் போன்ற பல்வேறு முகமைகளைக் கல்வித்துறையில் பங்கேற்கச் செய்வதையும்
அரசு-தனியார் சேவைக் கூட்டாண்மை பங்கேற்பையும் இக்கொள்கை
பரிந்துரைக்கிறது. இவற்றைக் கண்காணித்து ஒழுங்குபடுத்துவதற்கான வழிவகை எதுவும்
செய்யாமல், “தன்னாட்சியை” அனுமதிக்க முன்மொழியப்படுகிறது. இது தனியார் கூட்டாளிகள்
கொள்ளையடிக்கும் வகையில் கல்வியை முழுமையாக வணிகமயமாக்குவதும், கல்வியை ஏழைகளுக்கு
எட்டாக்கனியாகச் செய்வதுமாகும்.
இந்தியாவின் பாரம்பரியங்களையும்
விழுமியங்களையும் நிலைநிறுத்தக் கூடியதும் இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் தேவையை
நிறைவு செய்வதுமான ஒரு புதிய கல்வி முறையை உருவாக்குவது இந்தக் கொள்கை வரைவின்
முக்கிய நோக்கம் என்று வரைவுக் குழுத் தலைவர் கஸ்தூரிரங்கன் தெரிவிக்கிறார்.
அறநெறிகள் மற்றும் விழுமியங்கள் பகுதிகளில், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்
வலியுறுத்தும் ஜனநாயக, மதச்சார்பற்ற, சோசலிசக் கோட்பாடுகளைப் புறந்தள்ளி, யோகா, வேத கணிதம், பழங்கால இந்தியாவின் இதிகாச, அரசியல் கருத்துகளுக்கு
முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்தியாவின் பாரம்பரியம் என்பது இந்துத்துவா (பார்ப்பனிய வேதப்) பாரம்பரியம் என்றும்
இருபத்தியொன்றாம் நூற்றாண்டுத் தேவை என்பது முதலாளிகளின்/ கார்பரேட்டுக்களின் தேவை என்றும்
புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
உலக முதலாளித்துவம் தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் கொள்கையின்
அடிப்படையில் கல்வி, மருத்துவம் உட்பட அனைத்தையும் இலாபவெறியுடன்
வணிகமயமாக்குகிறது. பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ள உலக
முதலாளித்துவத்தின் கூட்டாளிகளான இந்திய முதலாளிகள் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்குப் பாசிச
ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளார்கள், அதற்கு மிகப் பொருத்தமாக, ஒரே தேசம், ஒரே இராணுவத் தலைமை, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், இந்திய (இந்துத்வா) பாரம்பரியம் என்ற முழக்கத்தைக்
கொண்ட ஆர்.எஸ்.எஸ். தனது மதவெறி நிகழ்ச்சிநிரலை நிறைவேற்ற தனது தலைமையிலான பா.ச.க. வைப் பயன்படுத்திக் கொள்கிறது.
எனவே இந்த ஜனநாயக விரோத, உழைக்கும் மக்கள் விரோத வரைவு கல்விக்
கொள்கை முற்றாக நிராகரிக்கப்பட வேண்டும்.
Comments
Post a Comment