Skip to main content

உலகு தழுவிய அளவில் முதலாளிய நெருக்கடியும் மக்களின் போராட்டங்களும்!



தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற கொள்கையானது பின் தங்கிய நாடுகளிலும் முதலாளிய உற்பத்திமுறை மிக வேகமாக வளர வழி வகுத்துள்ளது. உலகத்திலுள்ள எந்த நாடும் உலக முதலாளியத்திலிருந்து  துண்டித்துத் தனியே செயல்பட முடியாத நிலையை இது உருவாக்கியுள்ளது. இந்த மாற்றம் தவிர்க்க இயலாதபடி முதலாளிய சமூகத்திற்கே உரிய நெருக்கடிகளான சமூக ஏற்றத்தாழ்வு, வேலையின்மை,  வறுமை என அனைத்தையும் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் தோற்றுவித்துள்ளது. இந்த நெருக்கடிகளின் காரணமாக உழைக்கும் மக்களின் போராட்டங்கள் உலகெங்கும் பல நாடுகளில் வெடிக்கின்றன. தற்சமயம், அத்தகைய போராட்டங்கள்  சிலி, லெபனான், ஈக்குவடார், ஈராக், அமெரிக்கா  ஆகிய  நாடுகளில் வெடித்து அந்த நாடுகளின் அரசுகளை முடக்கும் நிலைக்குக் கொண்டு சென்றுள்ளன.
சிலி
சிலி அரசானது மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள் என சாதாரண மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் பொதுப் போக்குவரத்துக் கட்டணங்களை வெகுவாக உயர்த்தியது. அதனால் கோபமடைந்த மாணவர்களும் இளைஞர்களும் மக்களும் அந்த நாட்டின் தலைநகரான சான்தியாகோ நகரில் போராட்டத்தில் இறங்கினர். போராட்டம் அடுத்த சில மணி நேரங்களில் நாட்டின் மற்ற நகரங்களுக்கும் வேகமாகப் பரவியது. ஏறக்குறைய 68 தனித்தனி ஆர்ப்பாட்டம், பேரணிகளில் 4,25,000 பேர் பங்கேற்றதாக அரசு செய்திகள் கூறுகின்றன. உண்மை நிலை அதை விடப் பன்மடங்கு இருக்கும் என போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவிக்கின்றனர். மக்கள் போராட்டத்தை ஒடுக்க சிலி அதிபர் செபஸ்தியான் பிரனவ் நெருக்கடி நிலையை அமல்படுத்தியுள்ளார்.

இதனால் அரசு படைகள் வீதிகளில் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களின் மீது வன்முறையை ஏவி ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டது. போலிசாரின் துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலியானார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பெண்கள், சிறுவர்கள் உட்பட 5000 பேர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
லெபனான்
லெபனானில் வாட்ஸ்-ஆப் பயன்பாட்டாளர்கள் மாதம் ஆறு டாலர்கள் வரியாக செலுத்த வேண்டும் என்ற அரசின் ஆணைக்கு எதிராகத் தொடங்கிய போராட்டமானது அரசின் பொருளாதாரக் கொள்கைகள், வரி விதிப்புகள் ஆகியவற்றுக்கு எதிரான மாபெரும் போராட்டமாக மாறி நாடு முழுவதும் பரவியது. அந்த நாட்டில் உள்ள பல்வேறு இஸ்லாமியப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் கிறிஸ்தவர்களும் தங்களுடைய வேற்றுமைகளை மறந்து உழைக்கும் மக்களாக இணைந்து அரசுக்கு எதிரான போராட்டத்தில் இறங்கினர். இப்போராட்டத்தில் சுமார் இருபது இலட்சம் பேர் கலந்து கொண்டதாகச் செய்திகள் கூறுகின்றன.
மக்களின் உறுதியான போராட்டத்தைக் கண்டு அஞ்சிய சிலி அரசு போக்குவரத்துக் கட்டண உயர்வையும்,  லெபனான் அரசு  வாட்ஸ்-ஆப் மீதான வரியையும் திரும்பப் பெற்றன. அத்துடன் குறைந்தபட்சமான சில பொருளாதார நிவாரணங்களையும் அறிவித்தன. இதன் மூலம் மக்களின் கோபத்தைத் தணிக்க முடியுமென அவை நம்பின. ஆனால் மக்கள் இவற்றை ஏற்பதாக இல்லை. நிலவுகின்ற அரசு தங்கள் நலனுக்கான  அரசு இல்லை என்றும், அந்த அரசின் பொருளாதாரக் கொள்கைகளும் வரி விதிப்புகளும் தங்களுடைய வாழ்க்கையை நெருக்கடிக்கு உள்ளாக்கித் தங்களை வாழ வழியற்றவர்களாக மாற்றுவதாக மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். எனவே இந்த அரசானது அதிகாரத்திலிருந்து தூக்கி எறியப்பட வேண்டும் என்றும், புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

ஈராக்
ஈராக்கில் ஊழல் அரசாங்கத்தையும் வேலையின்மையையும்  எதிர்த்து தலைநகர் பாக்தாத்தில் தொடங்கிய போராட்டம் நாடு தழுவிய போராட்டமாக மாறியது. கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் முக்கிய நாடுகளில் ஒன்றான ஈராக்கில் அதில் வரும் பெரும் பகுதி வருமானத்தை பெரும் முதலாளிகள் தங்கள் உடைமையாக மாற்றி வைத்துள்ளனர். இதனால் வறுமையும் வேலையின்மையும் பெருகியதால் மக்கள் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஈராக் அரசானது போராடும் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 150 க்கும் மேலான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் 70 விழுக்காட்டிற்கும் அதிகமானவர்கள் தலையிலும் மார்பிலும் குண்டு பாய்ந்து உயிர் இழந்தவர்கள். இந்த ஒடுக்குமுறை எதிர்த்து மக்கள் போராட்டம் மேலும் தீவிரமடைந்தது.
மக்களின் போராட்டத்தை வன்முறை மூலம் ஒடுக்க முடியாது என்று உணர்ந்து பல்வேறு சலுகைகளை அறிவித்து ஏழைகளுக்கு மானிய விலையில் வீடு, வேலையற்ற இளைஞர்களுக்கு பயிற்சிப் பட்டறைகள் மற்றும் சிறு தொழில்கள் தொடங்க வங்கிக் கடன் எனப் பல்வேறு சலுகைகளை அளிக்க முன்வந்தது அரசு. மக்கள் இவற்றையெல்லாம் நிராகரித்து பிரதமரும் அவருடைய அமைச்சரவையும் பதவி விலகாமல் போராட்டம் ஓயாது என அறிவித்துள்ளனர்.
ஈக்குவடார்
ஈக்குவடார் அரசு இந்த ஆண்டு பட்ஜெட் பற்றாக்குறையைச் சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) 420 கோடி டாலர் கோரியிருந்தது. அதற்காக சர்வதேச நாணய நிதியம் பரிந்துரைத்த பொருளாதாரச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. அதன் ஒரு பகுதியாக எரிபொருளுக்கு இதுவரை அளிக்கப்பட்டு வந்த மானியம் நீக்கப்பட்டது. மேலும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியம் 20 விழுக்காடு நீக்கப்பட்டது. அரசின் இந்த நடவடிக்கைகள் தொழிலாளர்களுக்கும் உழைக்கும் மக்களுக்கும் பெரும் சுமையாக மாறின. எரிபொருள் மானியம் விலக்கப்பட்டதால் 50 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு எரிபொருளின் விலை 123 விழுக்காடு உயர்ந்தது. அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து இடதுசாரி அமைப்புகளும் தொழிற்சங்கங்களும் போராட்டத்திற்கு அழைப்பு  விடுத்தனர். இதில் ஏராளமான மக்கள் நாடு முழுவதும் கலந்து கொண்டனர். இரண்டு வாரங்களாக நடந்த போராட்டத்தை ஒடுக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஏழு பேர் உயிரிழந்தனர். இருப்பினும் மக்கள் போராட்டத்திற்குப் பணிந்து பொருளாதாரச் சீர்த்திருத்தங்களை அரசு திரும்பப் பெற்றது.

அமெரிக்கா 
அமெரிக்காவில் ஜெனரல் மோட்டார்ஸ்க்கு எதிராக சுமார் 48000 தொழிலாளர்கள் நாற்பது நாட்களுக்கும் மேலாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மூன்றாவது பெரிய பள்ளி மாநிலமான சிகாகோவில் 32000 ஆசிரியர்கள், பள்ளிப் பணியாளர்கள் ஆகியோரின் வேலைநிறுத்தப் போராட்டம் இரண்டாவது வாரத்தைக் கடந்து நடைபெற்று வருகிறது. இந்தாண்டு மட்டும் அமெரிக்காவில் வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களின் எண்ணிக்கை ஐந்து இலட்சத்திற்கும் அதிகம் என்பது குறிப்பிடத் தக்கது. 
ஏற்றத்தாழ்வு   
உலக வங்கியின் புள்ளி விவரம்  2017 ஆம் ஆண்டில் சிலி நாட்டில் ஒரு விழுக்காடு மட்டுமே உள்ள பணக்கார முதலாளிகள் நாட்டின் தேசிய வருவாயில் 33 விழுக்காட்டினைக் குவித்து வைத்துள்ளதாகக் குறிப்பிடுகிறது. இலத்தின் அமெரிக்க நாடுகளில் மிகவும் முன்னேறிய நாடுகளில் ஒன்றாகவும் அதே சமயத்தில் பெரும் அளவு ஏற்றத்தாழ்வைக் கொண்ட நாடாகவும் சிலி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. லெபனானில் 1 விழுக்காடாக உள்ள பணக்கார முதலாளிகள் நாட்டின் 58 விழுக்காடு செல்வத்தைத்  தங்களின் உடைமையாகக் கொண்டுள்ளனர். அதே சமயத்தில் 50 விழுக்காட்டிற்கும் அதிகமாக உள்ள உழைக்கும் மக்கள் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவான செல்வத்தையே  உடைமையாகக் கொண்டுள்ளனர். இதே போல அமெரிக்காவிலும் 1 விழுக்காடே உள்ள பணக்காரர்கள் நாட்டின் மொத்த செல்வத்தில்  40 விழுக்காட்டைத் தங்களது உடைமையாகக் குவித்து வைத்துள்ளனர்.
இந்தப் பொருளாதார ஏற்றத்தாழ்வு முதலாளிய சமூகத்தின் தவிர்க்க முடியாத இயக்கப் போக்காகும். உலகப் பொருளாதார மந்தநிலையானது வளர்ந்த, வளரும் மற்றும் பின்தங்கிய நாடுகள் என்ற பேதம் இல்லாமல் அனைத்து நாடுகளையும் பொருளாதார வீழ்ச்சியை நோக்கித் தள்ளிக் கொண்டிருக்கிறது. அந்த நாடுகளின் முதலாளிய அரசுகள் நெருக்கடி நிலையைச் சமாளிக்க சிக்கன நடவடிக்கைகள் என்ற பெயரிலும், பொருளாதாரச் சீர்திருத்தம் என்ற பெயரிலும்  தொழிலாளி வர்க்கத்திற்கு வழங்கப்பட்ட பல்வேறு சலுகைகளையும் சட்ட ரீதியான உரிமைகளையும் திரும்பப் பெற்றும், வரிகளை உயர்த்தியும் தொழிலாளர்களின் வாழ்க்கையை நெருக்கடிக்கு உள்ளாக்கி அவர்களைப் போராட்டத்தை நோக்கித் தள்ளி வருகின்றன.
தொழிலாளர்களும், இதர உழைக்கும் மக்களும் சமூகரீதியாக இணைந்து போராடுவதன் மூலமே தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை நெருக்கடிகளுக்கான தீர்வைக் காண முடியும் என்ற உண்மையைத் தங்களுடைய ஒன்றிணைந்த போராட்டங்கள் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் தாம்  விரும்புவது சில சீர்திருத்தங்களை அல்ல, வர்க்கங்களாகப் பிளவுபட்டுள்ள ஏற்றத்தாழ்வான சமூகத்தில் வர்க்கப் போராட்டங்கள் தவிர்க்க இயலாது என்பதையும்,  அவை தவிர்க்க இயலாமல் ஓர் உயர்ந்த சமூக அமைப்பை நோக்கி சமூகத்தைக் கொண்டு செல்லும் என்பதையும் விளக்கும்  மார்க்சியத் தத்துவத்தின் சாட்சியங்களாக இந்தப் போராட்டங்கள் இருக்கின்றன. சமூக மாற்றத்திற்கான சரியான கருத்துகள் போராடும் மக்களிடையே செல்லும்போது நிச்சயம் பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தும் என்ற உறுதியான நம்பிக்கையை இந்தப்  போராட்டங்கள் நமக்கு அளிக்கின்றன.

    - செங்கதிர்

Comments

Popular posts from this blog

தொழிலாளர் ஊதியங்கள் ஏன் எப்போதும் மிகவும் குறைவாகவே இருக்கின்றன?

  உங்கள் உழைப்புக்கு ஏற்ற மதிப்புக் கிடைப்பதில்லை , உங்களுக்குக் கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பை விடப் பலமடங்கு உழைத்திருப்பதாக எப்போதாவது நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா ? கார்ல் மார்க்ஸ் உங்களைப் புரிந்துகொள்கிறார் . ஒட்டுமொத்தத் தொழிலாளர் வர்க்கமும் முதலாளித்துவ வர்க்கத்தால் சுரண்டப்படுகிறது என்று அவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் வாதிட்டார் . இது வெறும் மிகைப்படுத்தல் கூற்று அல்ல , மாறாக ஒரு பொருளாதார உண்மையாகும் . தொழிலாளர்கள் உருவாக்கும் மதிப்பின் ஒரு பகுதியைத் திட்டமிட்ட முறையில் திருடுவதன் மூலம் மிகுதியான செல்வத்தைக் குவிப்பதே   முதலாளித்துவத் தொழில்நிறுவனத்தின் முழுமையான நோக்கமாகும் . இந்தச் செயல்முறையே சுரண்டல் என்று குறிப்பிடப்படுகிறது . தொழிலாளர்களுக்கு அவர்களுடைய தகுதிக்குரிய ஊதியம் அளிக்கப்படுகிறது என்று முதன்மைப்போக்கு பொருளியலாளர்கள் கூறிக்கொள்கின்றனர் . தொழிலாளர்களின் ஊதியங்கள் அவர்களால் உற்பத்திப் பொருளுக்கு “ கூட்டப்படும் மதிப்பை ” குறிக்கின்றன தூரத்து நாடுகளில் பழிபாவத்திற்கு அஞ்சாத முதலாளிகள்

பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் சீர்த்திருத்தவாதத்தில் வீழ்ந்துள்ள இடதுசாரி இயக்கங்கள்

இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இடதுசாரிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் சில அமைப்புகளின் போக்குகள் அவர்களின் சீர்த்திருத்தவாதக் கண்ணோட்டத்தை அம்பலபடுத்தி வருகின்றன. நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த காங்கிரசு கட்சி இந்திய முதலாளி வர்க்கத்தின் வளர்ச்சிக்கும் சுரண்டலுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்தும் , பெரும் மூலதனம் தேவைப்படும் கனரகத் தொழில்களை மக்களுடைய வரிப் பணத்திலிருந்து அமைத்துக் கொடுத்தும், ஆரம்பக் கட்டத்தில் பன்னாட்டு மூலதனங்களின் போட்டியிலிருந்து அவர்களைப் பாதுகாத்தும் , பின்னர் இந்திய முதலாளிகள் சர்வதேச அளவில் சந்தையைப் பிடிக்கவும் , முதலீடு செய்யவும் உலகமயமாக்கல் கொள்கையை முன்னெடுத்தும் தொடர்ந்து சேவை செய்து வந்தது. அதே நேரத்தில் தொழிலாளர்களின் நலனுக்காகவும் , விவசாயிகளின் நலனுக்காகவும் , ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும் போராடிய இடதுசாரிகள் , ஜனநாயக அமைப்புகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி ஒடுக்கி வந்தது. வீரம் செறிந்த தெலுங்கானா மக்களின்

வேலை பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் என்னும் நிறுவனம் ஒசூர் பகுதியில் 1998 முதல் செயல்பட்டு வருகின்றது . இது வெள்ளீயத்தால் ( தகரத்தால் ) ஆன கொள்கலன்களை , தகரக்குவளைகளை உற்பத்தி செய்கின்றது . இந்த ஆலையின் முதலாளி இந்தியாவை பூர்வீமாக கொண்டவராக இருந்தாலும் , தற்பொழுது கென்யாவில் வசித்து வருகின்றார் . தொடக்கம் முதலே இந்த ஆலையானது தொழிலாளர்களின் உழைப்பை வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்து வருகின்றது . வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் நீண்டநாட்கள் பணிபுரிந்து வந்தாலும் அவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யாமலும் , நியாயமான ஊதியம் வழங்காமலும் தொழிலாளர்களை வஞ்சித்து வந்தது . தொழிலாளர்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து 52 தொழிலாளர்கள் மட்டும் நிரந்தரம் செய்யப்பட்டனர் . இவர்களும் ஆறு வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் , பயிற்சித் தொழிலாளர்கள் என மாற்றிமாற்றி அவர்களை வகைபடுத்தி பின்னரே நிரந்தரம் செய்யப்பட்டனர் . அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைக்கப்பட்டுச் சுரண்டப்பட்டு வருகின்றனர் . தற்பொழுது வரை 450 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்பட