’பசியினால்
சாவதைவிட நோய்த் தொற்றுகளால் செத்துப்போனாலும் பரவாயில்லை’ என்கிறார் உத்திரப்பிரதேசத்
தொழிலாளி (தீக்கதிர், 30.03.2020). நொய்டாவில் ஜவுளிக்கடை ஒன்றில் வேலைபார்த்து
வந்த இவர் சொந்த ஊரான கான்பூருக்கு செல்ல 500 கி.மீ நடந்தே செல்ல வேண்டிய அவல
நிலைக்குத் தள்ளப்பட்டார். மார்ச் 25 முதல்
அமலாக்கப்பட்ட முடக்கத்தால் இவர் வேலை பார்த்து வந்த ஜவுளிக்கடையும் மூடப்பட்டது.
இதனால் வருமானமின்றி பசியால் வாடிவந்த நிலையில் வேறு வழியின்றிச் சொந்த ஊருக்குத் திரும்பினார். போக்குவரத்து வசதி எதுவுமில்லாத
காரணத்தால் ஆயிரக்கணக்கான மக்களோடு இவரும் நடைபயணமாகவே சொந்த ஊருக்கு
திரும்பினார்.
வேலை செய்து வந்த இடத்தில் பசியால் சாவதைக்
காட்டிலும் நோய்த்தொற்று ஏற்பட்டாலும் சொந்த ஊரில் சாவதே மேல் என இவர் மட்டும்
கூறவில்லை. இடம்பெயர் தொழிலாளர்கள் அனைவரின் நிலையுமே இத்தகையதாகத்தான் உள்ளது.
இந்த நிலை இடம்பெயர் தொழிலாளர்களுக்கு
மட்டுமல்ல, அன்றாடக் கூலிகளாக வேலை செய்யும் தொழிலாளர்களின் நிலையும் இது தான்.
வேலை இல்லாத காரணத்தால் வருவாய் எதுவுமின்றி எத்தனை நாள் இவர்கள் பட்டினியை
எதிர்க் கொள்ள முடியும்? அரசின் மெத்தனப் போக்கும், அற்ப உதவியும் எத்தனை நாள்
தாக்குப் பிடிக்கும்?
இந்த அசாதாரண சூழலில் கொரானா பாதிப்பிலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டியதும், தனிமைப்படுத்தல்
மற்றும் இயல்பு வாழ்க்கை முடக்கத்தால் பசியால் வாடும் மக்களை பாதுகாப்பதும் அரசின்
தலையாய கடமையாகும். ஆனால், இந்திய அரசு இந்த
இரண்டு விடயங்களிலும் காட்டி வரும்
மெத்தனப் போக்கைப் பார்த்தால் அடித்தட்டு உழைக்கும் மக்கள் கடுமையாகப்
பாதிக்கப்படும் அபாயம் அதிகமாகவே இருக்கின்றது.
இந்தியாவில் கோவிட்19 எனப்படும் முதல் கொரானா
நோய்த்தொற்று அறிகுறி ஜனவரி 30 ஆம் தேதி கேரளாவில் உறுதிப்படுத்தபட்டது. ஆனால்,
மோடி அரசு இந்த பயங்கர நோய்த் தொற்றை பரவாமல் தடுக்கவும், கட்டுபடுத்தவும்,
நோயிலிருந்து காக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதனையும் எடுக்காமல் மீளாத்
துயிலில் இருந்தது.
நோய்த்தொற்றின்
தாக்கம் பல்வேறு மாநிலங்களிலும் பரவ ஆரம்பித்த பின்னர் மாநில அரசுகள் தங்கள்
பகுதிக்குள் வெவ்வேறு வகையிலான கட்டுப்பாடுகளை விதிக்க ஆரம்பித்தன. ஆனால், இவை கூட
ஒருங்கிணைந்த நடவடிக்கையாக இல்லாமல், திட்டமிட்ட நடவடிக்கையாக இல்லாமல்
மேம்போக்கான நடவடிக்கையாகவே இருந்தது. வெளி நாடுகளிலிருந்து இந்தியாவிற்குள்
வருபவர்களைப் பரிசோதிக்கவும், கண்காணிக்கவும் ஒருங்கிணைந்த திட்டமிட்ட நடவடிக்கை
எதுவும் இந்திய அரசு எடுக்கவில்லை. மாநில அரசுகளையே அந்த நடவடிக்கையை மேற்கொள்ளச்
சொன்னது. இந்தக் கண்காணிப்பு நடவடிக்கை கூட பெரளவிற்கே செய்யப்பட்டது.
மார்ச் 14 ஆம் தேதி தான் இந்திய அரசு
தன்னுடைய அண்டை நாடுகளின் எல்லையை மூட உத்தரவிட்டது. எனினும், மோடி அரசு இன்னமும்
குடியுரிமை சட்டத்திற்காகப் போராடும் மக்கள் மீதான அடக்குமுறை, மத்திய பிரதேச
மாநிலத்தில் காங்கிரஸ் அரசைக் கவிழ்த்து பிஜேபி அரசை பதவியில் அமரவைத்தல், ராமர்
கோவில் கட்டுவதற்கான அறட்டளை தொடக்கம் போன்ற அரசியல் விளையாட்டுகளில் மட்டுமே
தன்னுடைய முழுக் கவனத்தையும் செலுத்தி
வந்தது.
முதல் நோய்த்
தொற்று கண்டறியப்பட்டு 50 நாட்கள் கழித்து மார்ச் 19 ஆம் தேதி தான் கொரானா
பாதிப்பு குறித்து நாட்டு மக்களிடையே உரையாற்றப் போவதாக மோடி அறிவித்தார்.
நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நம்மை மீட்பதற்கு முக்கியத் திட்டங்களை
அறிவிப்பார் என மக்கள் எதிர்பார்த்திருந்த வேளையில் அவரின் உரை வெற்று அறிவிப்பாக
இருந்தது. கொரானா பாதிப்புக்குள்ளானவர்களுக்கான மருத்துவ ஏற்பாடுகள் குறித்தோ,
வேலை இல்லாது பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றுவது குறித்தோ எதுவும்
அவருடைய உரையில் இல்லை.
மார்ச் 22 அன்று ஒரு நாள் ஊரடங்கு உத்தரவைக்
கடைப்பிடிக்க வேண்டும் என்று சொன்ன மோடி மருத்துவ பணியாளர்களையும், நெருக்கடி
நிலைக்காகப் பணியாற்றி வரும் மற்ற அரசு ஊழியர்களையும் பாராட்டும் விதமாகக்
கைதட்டி, மணி அடித்து ஒலி எழுப்ப வேண்டும் என வெற்று அறிவிப்பை அறிவித்தார்.
பசியோடு இருக்கும் ஏழைகளால் எப்படிக் கை தட்டி ஒலி எழுப்ப முடியும்.
பணக்காரர்களும், நடுத்தர வர்க்கமும் மட்டுமே எழுப்பிய இந்த ஆரவாரக் கூச்சல்களை
ஊடகங்கள் திருப்பித் திருப்பிப் போட்டுக் காட்டி மகிழ்ந்தன. வேலை இல்லாத சூழலில்
அடுத்தடுத்த நாட்களை எப்படி எதிர்கொள்வது என்ற கவலையுடன் இருக்கும் மக்கள் பக்கம்
தங்கள் கேமிராக்களை இவர்கள் திருப்பவில்லை, திருப்ப மறுக்கிறார்கள். இவர்களின் இந்தியா என்பது பணக்காரர்களும், ஆளும் வர்க்கத்தை ஆதரிக்கும்
நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவர்களை மட்டுமே குறிக்கிறது.
மார்ச் 23 ஆம் தேதி வரை நடைபெற்ற நாடாளுமன்ற
பட்ஜெட் கூட்டத்தொடரில் கொரானா பேரிடரை சமாளிக்கும் வகையில் நிதித்தொகுப்பை
அறிவிக்க வேண்டும் என எதிர்க் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. ஆனால், இதனை
காதில் வாங்கி கொள்ளாமல், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எந்த அறிவிப்பும் செய்யாமல்
கூட்டத்தொடரைக் கால வரையின்றி ஒத்தி வைத்தது மோடி அரசு.
தமிழக அரசு மார்ச் 24 ஆம் தேதி மாலை 6 மணி
முதல் மார்ச் 31 வரை 144 தடை உத்தரவை பிறப்பித்தது. பெரும்பாலான மாநில அரசுகள் இதே
போன்ற அறிவிப்பைச் செய்து வந்திருந்தன. இதனால் 23 ஆம் தேதி இரவு தமிழகத்தின்
நகரங்களிலிருந்து சொந்த ஊருக்குச் செல்வதற்காக, வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில
மக்கள் பேருந்து நிலையங்களிலும், இரயில் நிலையங்களிலும் குவிந்தனர். வழக்கமாக
இயங்கும் அளவிற்குக் கூட பேருந்துகள் இயக்கப்படவில்லை. கூட்ட நெரிசலில் மக்கள்
சிக்கித் தவித்தனர். எந்தக் காரணத்திற்காக 144 தடை உத்தரவை அரசு பிறப்பித்ததோ
அந்தக் காரணமே கேள்விக் குறியாகும் வகையில் அரசின் திட்டமிடாத போக்கு இருந்தது..
அரசின் திட்டமிடாத அறிவிப்பால், மாற்று ஏற்பாடு இல்லாததால் உருவான நெரிசல் கொரானா
அபாயத்தை அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு செல்லும் அபாயம் நேர்ந்தது.
மோடி அரசு அடுத்த நாள் தான், அதாவது முதல்
தொற்று இந்தியாவில் கண்டறியப்பட்டு 54 நாட்கள் கழித்து 21 நாள் ஊரடங்கை (மார்ச் 25
– ஏப்ரல் 14) அமல்படுத்தியது. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதனையும் செய்யாததன்
விளைவு சமூக விலகலை அறிவிக்க வேண்டிய
நிலைக்குத் தள்ளப்பட்டது. அதுவும் கூட மக்களின் அன்றாடத் தேவைகள் குறித்தோ, உணவு, மருந்து உள்ளிட்ட தேவைகள்
குறித்தோ, அதனால் ஏற்படப்போகும் வேலை இல்லாத நிலை குறித்தோ, வெளி
மாநிலங்களிலிருந்து வேலைக்காக இடம் பெயர்ந்தவர்கள் குறித்தோ எள்ளளவும்
சிந்திக்காமல், அவர்களுக்கான திட்டமிடல் எதுவும் செய்யாமல் திடீரென ஒரு மோசமான
உத்திரவைப் பிறப்பித்ததன் மூலம் கொரானா பாதிப்பைக் காட்டிலும் பெரும் சுமையானது
சாதாரண அடித்தட்டு மக்கள் மீது திணிக்கப்பட்டது.
மக்கள் வெளியே
வரக்கூடாது, தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுரை மட்டும் மோடி
கூறினாரே தவிர, வீட்டிற்குள் முடக்கப்பட்ட பிறகு மக்கள் உயிர் வாழ்வதற்குத்
தேவையான உணவுப் பொருட்கள் எப்படிக் கிடைக்கும் என்பது குறித்து எதுவும் கூறவில்லை.
மார்ச் 24 ஆம் தேதிக்கு பிறகு டெல்லியில்
நடந்தேறிய காட்சிகள் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது நிகழ்ந்த கொடும்
துயரம் நிறைந்த இடப் பெயர்வுக் காட்சிகளை நினைவுபடுத்துவதாகப் பத்திரிக்கை
செய்திகள் தெரிவிக்கின்றன. இடம் பெயர் தொழிலாளர்கள் குறிப்பாக வெளி மாநிலத்
தொழிலாளர்கள் இதனால் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். பெரு
நகரங்களிலிருந்து தங்கள் சொந்த ஊருக்குத் திரும்புவதற்காக ஆயிரம் கி.மீ வரை நடந்தே
செல்ல வேண்டிய அவலத்திற்கு மக்களைத் தள்ளியது மோடி அரசு.
பெருநகரங்களில் குடியேறியுள்ள மக்கள்
பெரும்பாலும் அமைப்பு சாரா வேலைகளில் உள்ளவர்கள். இந்தியாவில் 90 சதவீதத்திற்கு
அதிகமான தொழிலாளர்கள் அமைப்புசாரா தொழிலாளர்களாக உள்ளனர். அவர்கள் ஒரே முதலாளியின்
கீழ் வேலை செய்பவர்கள் அல்ல. இவர்களுக்குத் தொடர்ந்து வேலை கிடைப்பதும் கிடையாது.
ஒப்பந்தத் தொழிலாளர்கள், சிறு-குறு நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள்,
கட்டுமானத் தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், கடைகளில் வேலை செய்யும்
தொழிலாளர்கள், வாகன ஓட்டுநர்கள் என பல்வேறு பிரிவினர் உள்ளனர். இவர்கள்
பெரும்பாலும் வேலை செய்யும் இடங்களுக்கு அருகிலேயே சிறிய கூடாரங்களை அமைத்துக்
கொண்டு தங்குவதோ அல்லது பாலத்திற்கு அடியில், பேருந்து நிலையங்கள், இரயில்
நிலையங்கள், தெரு ஓரங்களில் தங்கியோ பணி
புரிபவர்கள். சிலர் மிக சிறிய அறையில் பத்து முதல் 15 பேர் வரை தங்கி வேலைக்கு
சென்று வருபவர்கள். மேலும் வெளியூர்களில் தங்கிப் படிக்கும் மாணவர்களின்
விடுதிகளும் மூடப்பட்டதால் அவர்களும் வேறு
வழியின்றி சொந்த ஊருக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
திடீரென மோடி அறிவித்த ஊரடங்கால் இந்த
மக்களின் அன்றாட வாழ்விற்கான வருவாய் பாதிப்பதோடு, அவர்கள் தங்குவதற்கான இடங்களும்
கேள்விக் குறியாகி விட்டது. இவர்கள் அன்றாட உணவுத் தேவைகளுக்குத் தினமும் ஈட்டும்
கூலிகளையே சார்ந்துள்ளனர். உழைப்புச் சுரண்டலின் காரணமாக உணவுப்பொருட்கள் சேமிப்போ
அல்லது பணச் சேமிப்போ என்றுமே இவர்களிடம் இருந்ததில்லை இவர்கள் பாதுகாப்பாகவும், சுகாதாரமாகவும்
தங்குவதற்கோ, இவர்களின் உணவு தேவைக்கான வருவாயை ஈடு செய்வதற்கோ மோடி அரசு
சிந்தித்துக் கூடப் பார்க்கவில்லை. ஏனெனில் இவர்களை
மக்களாகக் கூட இந்த அரசு கருதவில்லை.
வேலை இல்லாமல் தொடர்ந்து எத்தனை
நாட்களுக்குத்தான் பட்டினி கிடக்க முடியும்? வாடகை வீட்டில் இருப்பவர்களை வாடகை
கொடுக்க முடியாததால் வீட்டின் உரிமையாளர்கள் வெளியேற்றினர். கையில்
குழந்தைகளுடனும், மூட்டை முடிச்சுகளுடனும் குடும்பம் குடும்பமாக நெடுஞ்சாலைகளில்
மக்கள் நடந்தே பயணிக்க துவங்கினர். வழியில் சாப்பிடுவதற்குக் கூட எதுவும்
இல்லாமல், தண்ணீர் இல்லாமல், கடும் வெயிலில் நடந்தே சென்றனர்.
ஐந்து இலட்சத்திற்கும் மேலான மக்கள் நடந்தே
தங்கள் சொந்தக் கிராமங்களுக்குச் சென்றதாக ’தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ்
கூறுகின்றது. இவ்வளவு மக்கள் கூட்டம் சொந்த ஊருக்குச் செல்வதற்கு அவதியுறுவதைக்
கண்டு, அதற்கான ஏற்பாடுகளைச் செய்யாமல், நகரங்களிலிருந்து மக்கள் வெளியேறுவதைத்
தடுக்க மாநில அரசுகளுக்கு மோடி உத்தரவிட்டார். மாநில எல்லைகளை மூடச் சொன்னார்.
ஆனால், இந்த மக்கள் தங்குவதற்கு மாற்று ஏற்பாடுகள் எதுவும் செய்யவில்லை. சில
இடங்களில் மாநில அரசுகள் அரசு கட்டிடங்களில் அவர்களை தங்க வைக்க ஏற்பாடு
செய்துள்ளன. அதன் மூலம் கூட்டமாக ஒரே இடத்தில் தங்குவதற்கான வாய்ப்பை
அரசே ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. ஏழை மக்களை ஓரே இடத்தில் குவிப்பதால் ஏற்படும்
அபாங்கள் குறித்து அரசுக்குக் கவலைக் கொள்ளவில்லை.
இவற்றையெல்லாம் மீறிச் சொந்த ஊர்களுக்குத்
திரும்பியவர்கள் மீது உத்திரப்பிரதேச அரசு மனிதாபிமானமற்று நடந்து கொண்டது.
கிருமித்தொற்றை அகற்றுவதாக கூறி விலங்குகளின் மீது தண்ணீர் பீய்ச்சியடிப்பதை
போன்று இரசாயன மருந்து கலந்த தண்ணீரை அந்த மக்கள் மீது பீய்ச்சி அடித்துள்ளது.
வெளி நாடுகளிலிருந்து இந்தியாவிற்குள் நுழையும் பணக்காரர்கள் மீது இத்தகைய செயலை
இந்த அரசு செய்து விட முடியுமா? சொந்த மாநில மக்களையே விலங்குகள் போன்று
நடத்தியதானது நாகரிக சமூகத்தில் உள்ள அனைவருக்கும் அதிர்ச்சியைத் தரக் கூடியது.
நீண்ட நெடிய நடைபயணம் மூலம் சொந்த ஊருக்குச்
செல்லும் வழியில் பசியால் 117 பேர் இறந்துள்ளதாக சிபிஎம் பொதுசெயலாளர் சீத்தாராம்
யெச்சூரி தெரிவிக்கிறார். கேரளாவில் தோட்ட வேலைகளில் வேலை செய்து வந்த
தொழிலாளர்கள் தடையுத்தரவிற்குப் பின்பு சொந்த ஊருக்குத் திரும்பப் போக்குவரத்து
வசதி இல்லாத காரணத்தால் மேற்குத் தொடர்ச்சி மலை வழியாகத் திரும்பினர். அப்பொழுது
ஏற்பட்ட காட்டுத் தீ விபத்தில் சிக்கி 4 பேர் பலியாகினர்.
இந்த அரசு வெளிநாட்டில் பணிபுரியும் பணக்கார,
நடுத்தர வகுப்பு மக்களை விமானங்கள் மூலம் இந்த நாட்டிற்கு அழைத்து வந்தது. அதே
போன்று, இந்தியாவில் தங்கியுள்ள வெளி நாட்டவர்களை தனி விமானம் ஏற்பாடு செய்து
அவர்களைச் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கின்றது. ஆனால் சொந்த நாட்டில் வாழும்
அடித்தட்டு மக்களை, அன்றாடக் கூலிகளை அவர்களின் சொந்த ஊருக்குப் பாதுகாப்பாக அனுப்புவதற்கு எந்தவிதமான ஏற்பாடும் செய்ய
வில்லை.
இன்னும் நகரங்களிலேயே தங்கியிருப்பவர்களுக்குக்
கூட பாதுகாப்பு அச்ச உணர்வு அதிகரித்துள்ளது. வெளி மாநிலத் தொழிலாளர்களின் மீது
தாக்குதல் நடத்தப்படும் அபாயம் உள்ளதாக அனைத்து மாநிலங்களிலும் உள்ள இடம்பெயர்
தொழிலாளர்கள் கவலையுறுகின்றனர். அதேநேரத்தில் வருவாய் இல்லாத காரணத்தினால் எத்தனை
நாட்கள் அவர்கள் அரை பட்டினியோடு தாக்குப் பிடிப்பார்கள் என்று தெரியவில்லை.
அரசின் திடீர் முடக்கத்தால் பெரும்பாலான
கடைகள் மூடப்பட்டன. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் உணவு தானியங்கள் மற்றும்
காய்கறிகளுக்காகத் திறந்திருக்க கூடிய ஒரு சில கடைகளில் குவிகின்றனர். மக்கள்
தொகையின் அளவிற்கேற்ப கடைகளைத் திறந்து வைக்கவோ அல்லது குடியிருப்புப்
பகுதிகளுக்கே அத்தியாவசிய உணவுப் பொருட்களைக் கொண்டு சேர்க்கவோ அரசு எதனையும்
திட்டமிடவில்லை. மேலும், கடைகளில் கூடும் கூட்டத்தைக் காரணம் காட்டிக் கடைகளுக்கு
சீல் வைக்கப்படுகின்றது. இதனால் திறந்திருக்கும் கடைகளின் எண்ணிக்கையும் குறைந்து
மேலும் மக்கள் கூட்டம் அதிகரிக்கவே வழி வகுக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு எந்தத்
தடையும் இல்லை என்று அறிவித்து விட்டு, அதனை வாங்க வரும் மக்களை தடுத்து
நிறுத்துவதும், தடியடி நடத்துவதும், வாகனங்களைப் பறிமுதல் செய்வதும் என அரசு
எந்திரம் மக்கள் மீது ஈவு இரக்கம் எதுவுமின்றிக் காட்டுமிராண்டித்தனமான
தாக்குதல்களை நடத்தி வருகிறது.
வேலைக்கு வராத நாட்களுக்கும் அனைத்துத்
தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என அரசு வெறும் அறிவிப்பை மட்டுமே
செய்தது. ஆனால், அரசாணையை வெளியிடவில்லை. தெளிவான அறிவிப்பு இல்லாததால்,
முதலாளிகள் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க மறுக்கின்றனர். சில இடங்களில்
வெட்டப்பட்ட ஊதியம் வழங்கபடுகின்றது. இதற்கு முரணாக அரசின் ஏர் இந்தியா நிறுவனமே
ஒப்பந்த அடிப்படையில் அமர்த்தப்பட்ட 100க்கும் மேற்பட்ட விமானிகளை பணியிலிருந்து
நீக்கி விட்டது.
இந்திய அரசோ, மாநில அரசாங்கங்களோ
அறிவித்துள்ள நிவாரணங்கள் ஏமாற்று வேலையாக உள்ளது. இந்திய அரசு ரூ.1.7 இலட்சம்
கோடி அளவிலான நிவாரணத் தொகுப்பை அறிவித்தது. ஆனால், இவற்றில் ரூ.1.1 இலட்சம் கோடி
என்பது அரசின் ஏற்கனவே திட்டமிட்ட பணிகளுக்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டதாகும்.
8.7 கோடி விவசாயிகளுக்கு 2000 ரூபாய் அறிவிப்பு என்பது பிரதமர் கிசான் யோஜனா
திட்டத்தின் கீழ் ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட திட்டமாகும். வெறும் 60 ஆயிரம் கோடி
ரூபாய் மட்டும் தான் கொரானா பாதிப்பிற்காக ஒதுக்கப்பட்ட நிதியாகும்.
அரசால் அறிவிக்கப்பட்ட 500 ரூபாய் முதல் 2000
ரூபாய் வரையிலான நிவாரணம் எப்படி ஒரு குடும்பம் ஒரு மாதத்திற்கு வாழ்வதற்குப்
போதுமானதாக இருக்கும்? அரசு அறிவித்துள்ள பணப் பலனை பெற வேண்டுமானால் கூட மக்கள்
அந்தந்தத் திட்டங்களின் கீழ் பதிவு செய்திருக்க வேண்டும். அனைத்து மக்களும் அரசின்
திட்டங்களில் பதிவு செய்து கொண்டவர்கள் இல்லை. மத்திய அரசும், மாநில அரசுகளும்
அளித்த அற்பத் தொகையில் எப்படி 21 நாட்களை ஒரு குடும்பம் சமாளிக்கும் என்று இந்த
ஆட்சியாளர்கள் எண்ணிப் பார்ப்பதில்லை.
கார்ப்பரேட்டுக்களின் நலனுக்காக 2014 ஆம்
ஆண்டு மட்டும் ரூ.7.78 இலட்சம் கோடிகளும், 2018 – 2019 இல் ரூ.1.83 இலட்சம்
கோடிகளும், 2019 இல் மட்டும் ரூ.76 ஆயிரம் கோடிகளும் நிவாரணங்களாகவும் வரிச்சலுகைகளாகவும் வாரி வழங்கும் மோடி
அரசுக்கு ஏழை மக்களுக்கு நெருக்கடி காலங்களில் நிவாரணம் வழங்குவதற்குக் கூட மனம்
வரவில்லை. மேலும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்காக என்று கூறிக் கடந்த
ஆண்டு ரிசர்வ் வங்கியில் இருந்து ரூபாய் ஒரு இலட்சத்து 76 ஆயிரம் கோடி பணத்தை
எடுத்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரி சலுகைகளை வாரி வழங்கியது. அந்தப் பணம்
ரிசர்வ் வங்கியில் இருந்திருந்தால், இது போன்ற நெருக்கடி நிலைமைகளைச் சமாளிக்கப்
பயன்படுத்தியிருக்கலாம்.
நாளொன்றுக்கு சொந்தச் செலவிற்காக
இலட்சக்கணக்கில் செலவிடும் ஆட்சியாளர்களுக்கு இந்த மக்கள் வாழ்ந்தாலென்ன?
செத்தாலென்ன? நிவாரணம் அளிப்பதைப் போல கண் துடைப்பு நாடகம் நடத்தினால் போதும்.
இந்திய அரசின் கைகளில் 7.5 கோடி டன்
தானியங்கள் இருப்பில் உள்ளது. ஊரடங்கு அமல்படுத்தி இரண்டு வாரங்கள் ஆகிவிட்ட
நிலையில் இந்தத் தானியங்களை இதுவரை மக்களிடம் கொண்டு சேர்க்க ஆட்சியாளர்கள் எந்த
நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாநில அரசுகள் வழக்கமான உணவுப் பொருட்களை மட்டுமே
வழங்குகின்றன. தானியங்கள் கெட்டு நாசமானாலும், எலிகளும் பெருச்சாளிகளும் தின்று
வீணடித்தாலும் பரவாயில்லை, ஆனால், ஏழை எளிய மக்களுக்கு மட்டும் அதைக் கொடுக்க
இந்திய ஆட்சியாளர்களுக்கு மனம் வருவதில்லை. இதற்கு முன் மன்மோகன் சிங் ஆட்சியின்
போது, வீணாகும் இந்த உணவு தானியங்களை ஏழை மக்களுக்கு அளிக்க நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், மன்மோகன் சிங் அரசு அதனை
மறுத்துவிட்டது என்பதை இங்கு நினைவு கூரலாம்.
கிராமபுறங்களில் விவசாயிகளின் நிலைமையும்
மோசமானதாக உள்ளது. விளைநிலங்களில் விளைந்த பொருட்களை அறுவடை செய்வதற்கோ,
விளைபொருட்களைக் கிடங்கிற்கும், சந்தைக்கும் எடுத்து செல்வதற்கோ எந்தவித
முன்னேற்பாடுகளும் செய்யவில்லை. இதனால் விவசாயிகளின் பயிர்கள் விளைநிலங்களிலேயே
அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கில் கடன் வாங்கி விவசாயம் செய்த
விவசாயிகள் அதனை அறுவடை செய்ய முடியாமல், சரியான விலைக்கு விற்க முடியாமல் மேலும்
கடனாளியாகக் கூடிய சிக்கலில் தவித்து வருகின்றனர். விவசாயிகளிடமிருந்து கொள்முதல்
செய்யும் சொற்ப இடைத்தரகர்களும் மிகவும் அடிமாட்டு விலைக்கு விளைபொருட்களை
வாங்கிச் சந்தையில் மிக அதிக விலைக்கு விற்றுக் கொள்ளை இலாபம் அடித்து
வருகின்றனர். விவசாயிகளின் இந்தச் சிக்கலை தீர்க்காமல் வெறும் இரண்டாயிரம் ரூபாய்
அளிப்பதாகக் கூறுவது கேலிக் கூத்தாக உள்ளது.
விவசாயிகள்
அடுத்த போகத்திற்கான வேலையை செய்ய முடியாத நிலையில் இருப்பதால் இந்தியாவில்
தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு மேலாக உணவு நெருக்கடி ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது.
அத்தியாவசியப் பொருட்களை அனைத்துப்
பகுதிகளுக்கும் தேவையான அளவிற்கு விநியோகிக்க எந்தவிதத் திட்டமிடலும் இல்லாததால்
உற்பத்தியான பொருட்கள் கொள்முதல் செய்யப்படாமல் அழியும் நிலையும், சந்தைக்குப்
போதுமான பொருட்கள் வரத்து இல்லாததால் விலைவாசி அதிகரிக்கும் நிலையும்
ஏற்பட்டுள்ளது. இதனால் அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையான பாதிப்புக்குள்ளாகி
வருகின்றனர்.
அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு
செல்வதற்கான சரக்குப் போக்குவரத்தைக் கூட சரியாகத் திட்டமிடவில்லை. மேலும்,
அத்தியாவசியப் பொருட்களைத் தொடர்ந்து உற்பத்தி செய்வதற்கு எந்தவித நடவடிக்கையும்
எடுக்கப்படவில்லை. மருந்து, மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் மட்டுமே
இயங்கி வருகின்றன. அதே சமயம் சில இடங்களில் அத்தியாவசியப் பொருள் உற்பத்தி என்ற
பெயரில் அத்தியாவசியமல்லாத பொருட்களை உற்பத்தி செய்வதற்குத் தொழிலாளர்கள் வேலைக்கு
வரவேண்டுமென்று முதலாளிகள் கட்டாயப்படுத்துகின்றனர்.
இந்தியாவில் 40 கோடிக்கும் அதிகமான மக்கள்
நெரிசலான நகரங்களில் வசிக்கின்றனர். இந்தப் பகுதிகளில் கொரானா நோய்த்தொற்று
பரவினால், அது பல்லாயிரக்கணக்கான மக்களைப் பாதிக்க கூடியதாக இருக்கும். ஆனால்,
அரசு நோய்த் தொற்றைப் பரவாமல் தடுக்க அனைத்து வழிகளிலும் விரைந்து செயல்படாமல்,
அனைவரும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரச்சாரம் செய்வதோடு
சரி. அவ்வாறு தனிமைப்படுத்திக் கொள்ளாதவர்கள் பொது நலனுக்கு இடையூறு செய்யக்
கூடியவர்கள் எனச் சித்தரிக்கிறது.
ஆனால், இவ்வளவு கடுமையான நோய்த் தொற்றை
சமாளிக்கக் கூடிய வகையில் இந்திய அரசின் சுகாதாரத் துறைக்குப் போதுமான கட்டமைப்பு
வசதி இருக்கின்றதா என்றால் நிச்சயம் இல்லை என்பதுதான் உண்மை.
உலக சுகாதார அமைப்பின் 2020 ஆம் ஆண்டு
அறிக்கையின் படி மக்களுக்குச் சிறந்த சுகாதார வசதிகளை அளிக்கும் நாடுகளில் முதல்
இடம் பிடித்துள்ள பிரான்சும் இரண்டாம் இடம் பிடித்துள்ள இத்தாலியும் ஏழாவது
இடத்தைப் பிடித்துள்ள ஸ்பெயினும் 18வது இடத்தைப் பிடித்துள்ள பிரிட்டனும் 37வது
இடத்தைப் பிடித்துள்ள அமெரிக்காவுமே கொரானாவை எதிர் கொள்வதில் தத்தளித்து
வருகின்றன. மொத்தமுள்ள 191 நாடுகளில் 112வது இடத்தை பிடித்துள்ள இந்தியா
கொரானாவிலிருந்து மக்களைக் காப்பற்ற போதுமான மருத்துவ கட்டமைப்புகளைக் கொண்டுள்ளது
எனக் கூற முடியுமா?
உலக வங்கியின் அறிக்கையின் படி இத்தாலி
மற்றும் ஸ்பெயினில் 1000 பேருக்கு 4.1 மருத்துவர்களளும் ஜெர்மனியில் 4.2
மருத்துவர்களும் பிரான்சில் 3.2 மருத்துவர்களும், இங்கிலாந்தில் 2.8
மருத்துவர்களும், அமெரிக்காவில் 2.6 மருத்துவர்களும் உள்ளனர். கியூபாவில் 1000
பேருக்கு 8.2 மருத்துவர்கள் உள்ளனர். ஆனால், இந்தியாவில் 1250 பேருக்கு ஒரு
மருத்துவர் மட்டுமே உள்ளார். கொரானோ நோய் பாதித்தவர்களுக்குத் தேவையான மருந்துகளோ,
மருத்துவ உபகரணங்களோ, மருத்துவப் பணியாளர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களோ
இந்தியாவில் போதுமான அளவிற்கு இல்லை.
இதனை வேலூர் மாவட்ட
ஆட்சியரின் அறிக்கை தெளிவுப்படுத்துகின்றது.
”வேலூர் மாவட்டத்தில் (ஒருங்கிணைந்த
வேலூர் மாவட்டம்) 500 பேருக்கு மேல் கொரானா பாதிப்புக்குள்ளாக வாய்ப்பிருக்கிறது.
ஆனால், 125 வென்டிலேட்டர்கள் மட்டுமே இருக்கிறது. கூடுதல் எண்ணிக்கையில்
வென்டிலேட்டர்கள் கிடைக்கவில்லை. அதிக அளவில் வைரஸ் தாக்கத்தினால்
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயரும் போது யாரை காப்பாற்ற வேண்டும். யாரை
காப்பாற்ற முடியாது என்ற நிலை ஏற்படும். இது மிகப்பெரிய அச்சுறுத்தலாக
விளங்குகிறது.” (தினத்தந்தி, 06.04.20)
மோடி அரசோ இதே நாளில் தான், அமைச்சர்களுடனான
கூட்டத்தில் மருத்துவ உபகரணங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகளை
ஆராயுமாறு கூறியுள்ளார். இத்தனை நாள் வரை அது குறித்தான எந்த நடவடிக்கையும்
எடுக்கவில்லை. அதோடு மட்டுமல்லாமல், ஏப்ரல் 4 ஆம் தேதி வரையிலும் கொரானா நோய்த்
தொற்று சம்பந்தமான மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்ய மோடி
அரசு அனுமதி அளித்து வந்தது.
உள்நாட்டில்
மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள்
ஆகியோருக்கான பாதுகாப்பு உபகரணங்கள் போதிய அளவில் இல்லாமல் உள்ளது. துப்புரவுத்
தொழிலாளர்களுக்கு எந்தவிதப் பாதுகாப்பு உபகரணங்களும் அரசு வழங்குவதில்லை எனத்
தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்தியாவின் சுகாதாரக் கட்டமைப்பின்
நிலைமையை இது தெட்டத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.
இந்திய நாட்டைப் பாதுகாக்க என்று கூறி
ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான கோடி ரூபாய்களை இராணுவத்திற்கும், ஆயுத உற்பத்தி
மற்றும் ஆயுதக் கொள்முதலுக்குச் செலவிட்டு வருகின்றது. இதற்காக இந்த ஆண்டு
பட்ஜெட்டில் 4 இலட்சத்து 71 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.. ஆனால், 130
கோடி மக்களின் உயிரைக் காப்பாற்றும் மருத்துவத்திற்காக 69,000 கோடி ரூபாய் மட்டுமே
ஒதுக்கப்பட்டுள்ளது.. மக்களின் பாதுகாப்புக்காக ஆயுதங்கள் வாங்குகிறோம் என்ற
பெயரில் இலட்சக்கணக்கான கோடி ரூபாய்களை கார்ப்பரேட்டுகள் இலாபமாகச் சம்பாதிக்க
இந்த அரசு வழி வகுத்துள்ளது.
கொரானா நோய்த் தொற்றில் பாதிக்கப்பட்ட
மக்களைப் பாதுகாக்க, சீனாவில் பத்து நாட்களில் இரண்டு பிரம்மாண்டமான
மருத்துவமனைகள் கட்டப்பட்டன. இங்கிலாந்தில் 19 நாட்களில் ஒரு மருத்துவமனை
கட்டப்பட்டது. ஸ்பெயினில் தனியார் மருத்துவமனைகள் அரசு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு
வரப்பட்டுள்ளன. ஆனால், இந்தியாவில் தனியாக புதிய மருத்துவமனைகளை
கட்டவில்லையென்றால் கூட, தனியார் மருத்துவமனைகளை கையகப்படுத்தி எடுத்துக்
கொள்ளாமல், சாதாரண மக்கள் பெரிதும் நம்பியிருக்கும் இரயில் போக்குவரத்தின்
பெட்டிகளை மருத்துவமனையாக மாற்றி வருகின்றது. இதற்கான பொருள் செலவும், மனித
உழைப்பும் அதிகம் என்பதோடு, இது வீணான திட்டமாகும். கேரள அரசு முன்மாதிரியாக 55
தனியார் மருத்துவமனைகளைக் கொரானா நோய் சிகிச்சை மருத்துவமனைகளாக மாற்றியுள்ளது
என்பதை இங்கு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பொருளாதாரத்திலும், தொழில் நுட்பத்திலும்,
மருத்துவ அறிவியலிலும் முன்னேறியுள்ள நாடுகள் கூட இந்தக் கொரானா
பாதிப்பைச்சமாளிக்க முடியாமல் திணறுகின்றன. அமெரிக்கா முதல் கட்டமாக இரண்டு
இலட்சம் கோடி டாலர் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. இது அந்த நாட்டு ஜிடிபியில் 10
சதவீதம் ஆகும். டென்மார்க், நெதர்லாந்து அரசுகள் தனியார் நிறுவன
தொழிலாளர்களுக்குக் கூட 75 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை ஊதியம் வழங்குவதாக
அறிவித்துள்ளது. இங்கிலாந்து அரசும் தன்னுடைய ஒட்டுமொத்த நாட்டு உற்பத்தியில் 12.5
சதவீத்தை கொரானா பேரிடருக்காக ஒதுக்கியுள்ளது. வேலை இழந்தவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு
2000 கனடா டாலர் அளிப்பதாக அந்த நாட்டின் பிரதமர் அறிவித்துள்ளார்.
அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி,
ஸ்பெயின், டென்மார்க், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து நாடுகள் கடுமையான பாதிப்பை
சந்தித்துள்ளன. பின் தங்கிய நாடுகளைக் காட்டிலும் இந்த நாடுகளில் மருத்தவ அறிவியல்
முன்னேறியுள்ளது என்பதை மறுக்க முடியாது. ஆனால் முதலாளிய நாடுகளில் அனைத்தும் இலாப
நோக்கில்தான் நடைபெற்று வருகின்றன. மருத்துவம் என்பதும் இலாபம் ஈட்டும் துறையாகத்
தனியாரின் கைகளில் உள்ளதால் பணம் படைத்தவர்கள் மட்டுமே மருத்துவ வசதியைப் பெற முடிகிறது. சாதாரண மக்கள் மருத்துவ வசதி
கிடைக்காமல் தவிக்கின்றனர். அதனால்தான் அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள்
கொரானாவிற்குப் பலியாகி வருகின்றனர்.
அமெரிக்காவில் கொரானா பரிசோதனைக்கு இந்திய
ரூபாயின் மதிப்பில் மூன்று முதல் மூன்றரை இலட்சம் வரை செலவாகும் என்றும்,
சிகிச்சைக்கு 16 இலட்சம் வரை தேவைப்படுகிறது என்றும் அமெரிக்க வாழ் இந்தியரான மீனா
தெரிவித்துள்ளார். அங்கு சாதாரண மக்கள் மருத்துவமனைகளுக்குச் சென்று மருத்துவம்
பார்த்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால்தான், நோய்த் தொற்று
இலட்சக்கணக்கிலும், மரணம் ஆயிரக்கணக்கிலும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக
தெரிவித்துள்ளார்.வளர்ந்த நாடு என்று கூறிக் கொண்டாலும் மக்களின் அடிப்படைத்
தேவையான சுகாதாரம் தனியாரிடம் உள்ளதால் மக்களைக் காப்பாற்ற முடியாமல் பின்தங்கியே
உள்ளதாகவும் கூறியுள்ளார்.( தீக்கதிர்.7.4.20) அமெரிக்கா வல்லரசு என்று
பெருமையடித்துக் கொண்டாலும், அது மக்களுக்கான நல்ல அரசாக இல்லை. அங்கு மருத்துவக்
காப்பீடு செய்துள்ள மக்களால் மட்டுமே மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற
முடியும். மற்ற மக்களால் முடியாது. அவர்கள்
வீடுகளில் முடங்கிச் சாக வேண்டியதுதான். அதைத்தான் அமெரிக்காவில் இன்று
பார்த்து வருகிறோம்.
இங்கிலாந்து நாட்டின் எம் எஸ் பிரைமர்
என்னும் கப்பலில் கொரானா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆறு பேர் இருந்த காரணத்தால்
எந்த நாடும் தங்கள் நாட்டிற்குள் அந்த கப்பலை அனுமதிக்கவில்லை. இதனையடுத்து கியூப
அரசு மனித நேயத்தோடு அதனை வரவேற்று, பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை
அளித்ததோடு அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனைகளையும் செய்தது.
கொரானா நோய்த் தொற்று என்பது அது ஒரு
நாட்டின் பிரச்சனையாக இல்லாமல் சர்வதேச பிரச்சனையாக உள்ளது. அனைத்து நாடுகளும்
பரஸ்பர உதவிகள் மூலம் மட்டுமே இந்த நோயின் பிடியிலிருந்து மாந்த குலத்தை விடுவிக்க
முடியும். முதலாளித்துவ நாடுகள் தங்கள் தேசங்களை மட்டும் எப்படியாவது காப்பாற்றி
விட வேண்டும் எனத் துடித்துக் கொண்டிருக்கின்ற அதே வேளையில், கியூபா சர்வதேசியப்
பார்வையோடு அனைத்து மக்களையும் பாதுகாக்க உதவிக்கரங்களை நீட்டி வருகின்றது.
எண்ணிக்கையளவில் நோய்த்தொற்றின் பாதிப்புகளை
நிர்ணயம் செய்ய முடியாமல் ஒவ்வொரு வினாடியும் பாதிப்புக்குள்ளானவர்களின்
எண்ணிக்கையும், இறந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
இந்தியாவைப் பொறுத்த வரையில் மோசமான இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களைப்
பாதுகாக்க கூடிய போதுமான கட்டமைப்பு வசதிகள் அதனிடம் இல்லை. எனவே, நோய்த் தொற்றால்
பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்க சர்வதேச நாடுகளோடு இணைந்து நடவடிக்கை
எடுக்க வேண்டும். மேலும், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள அடித்தட்டு உழைக்கும்
மக்களுக்கு உரிய நிவாரணத் தொகையை அளிப்பதோடு, அத்தியாவசியப் பொருட்களை
அவர்களுக்குப் போர்க்கால அடிப்படையில் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது
தான் தற்போதைக்கு அவசியமான ஒன்றாகும்.
இந்த நிலையில் நாம் வெறுமனே கை கட்டி வாய் பொத்தி வேடிக்கை பார்த்துக்
கொண்டிருந்தால் நமது அவல நிலையும் பட்டினியும் தீராது. எனவே பின்வரும்
நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு இந்த
அரசை வலியுறுத்த வேண்டும். அதற்காக உழைக்கும் மக்கள் அனைவரும் ஓரணியில் திரள
வேண்டும்!
¦ வேலையிழந்து,
வருமானமின்றி வாடும் மக்கள் அனைவருக்கும் இயல்பு நிலை திரும்பும் வரை
வாழ்வாதரத்திற்குத் தேவையான நிதி மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட வேண்டும்.
அதற்கான நிதி ஆதாரத்தை முதலாளிகளின் சொத்துகளைக் கைப்பற்றுவதன் மூலம் உண்டாக்க
வேண்டும்!
¦ இந்த பேரிடர் காலத்தைப் பயன்படுத்தி ஆட்குறைப்பு,
ஊதியவெட்டு செய்யும் முதலாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
¦ வருங்காலத்தில் இது
போன்ற நெருக்கடி நிலை உருவாகாமல் தடுக்க மக்கள் நலனை முதன்மையாகக் கருத்தில்
கொண்டு போதிய எண்ணிக்கையிலான மருத்துவமனைகளை அனைத்துக் கட்டமைப்பு வசதிகளுடனும்
மருத்துவ ஊழியர்களுடனும் நாடெங்கும் கட்டமைக்க வேண்டும்!
¦ கார்ப்பரேட் தனியார்
மருத்துவமனைகளைத் தேச உடைமையாக்க வேண்டும்!
¦ மக்கள் அனைவருக்கும்
இலவச மருத்துவ வசதி வழங்க வேண்டும்!
-
சோசலிசத் தொழிலாளர் இயக்கம்
தமிழ் நாடு.
Comments
Post a Comment