Skip to main content

தொழிலாளர்களைக் காவு கொள்ளும் இந்திய முதலாளி வர்க்கம்!


மோடி அரசாங்கம் 2014 ஆம் ஆண்டு முதல் முறையாக ஆட்சியைப் பிடித்ததிலிருந்து தொழிலாளர் சட்டங்களை முதலாளிகளுக்கு சாதகமாகத் திருத்துவதில் முனைப்பாக செயல்பட்டு வருகின்றது. அந்த வகையில் 44 தொழிலாளர் சட்டங்களை எளிமைப்படுத்துவதாகக் கூறி நான்கு சட்டத் தொகுப்புகளாக மாற்றி தொழிலாளர்களுக்கு இருந்த குறைந்தபட்சப் பாதுகாப்பு அம்சங்களையும் இல்லாமல் செய்யும் முயற்சியில் இந்த அரசு ஈடுபட்டு வருகின்றது. அதில் ஒரு பகுதியான ஊதிய சட்டத் தொகுப்பு மசோதா கடந்த 2019 ஆகஸ்டு மாதத்தில் நிறைவேற்றப்பட்டது. மற்ற மூன்று சட்டத் தொகுப்புகள் நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் கொரானா நோய்த்தொற்று நெருக்கடியைப் பயன்படுத்தித் தொழிலாளர் சட்டங்கள் என்பதே இல்லாமல் செய்வதற்கான வேலைகளில் இந்திய அரசும் மாநில அரசுகளும் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நெருக்கடியான காலத்தில் கோடிக்கணக்கான தொழிலாளர்களும், உழைக்கும் மக்களும் வேலையின்றி, வருவாய் ஏதுமின்றி அடிப்படைத் தேவைகளுக்கே துன்பப்பட்டு வருவது குறித்து அரசு எந்தக் கவலையும் கொள்ளவில்லை.

புலம் பெயர் தொழிலாளர்கள் வேலையில்லாததால் உண்ண உணவின்றியும், மிக நெருக்கமான இடங்களில் தங்கியிருப்பதால் நோய்த்தொற்று அபாயத்திலும் இருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுப்பதற்கோ அல்லது அவர்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கோ மத்திய அரசும் மாநில அரசும் எந்த முயற்சிகளும் மேற்கொள்ளவில்லை.

இதனால் தங்கள் உயிரைக் காப்பாற்றி கொள்ள சொந்த ஊருக்கு நடந்தே செல்லும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மத்திய மாநில அரசுகளின் திட்டமிடாத இந்த ஊரடங்கினால் இதுவரை 383 புலம் பெயர் தொழிலாளர்கள் இறந்துள்ளதாக ‘தி ஒயர்’ என்னும் இணையதள இதழ் தெரிவிக்கின்றது.

கொரானா நோய்த்தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு இந்த அரசால் முடியவில்லை. உலகளவிலும் நிலைமை இத்தகையதாகவே உள்ளது. உயிர்காக்கும் மருத்துவத் துறை முதலாளிகளின் இலாபத்தையே அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளதால் மக்கள் நலனைக் காப்பதில் அக்கறை கொள்ளவில்லை. பொருளாதாரம் தொடர்ந்து சரிந்து வருவதால் ஏற்பட்டுள்ள முதலாளிகளின் பாதிப்பைச்  சரி செய்வதற்காக, இனிமேலும் ஊரடங்கை நீட்டிக்க விரும்பாத இந்திய அரசு கொஞ்சம் கொஞ்சமாகத் தொழில் நிறுவனங்களை இயக்க அனுமதித்து வருகின்றது. உழைக்கக் கூடிய அடித்தட்டு மக்களை இந்தப் பேரிடர் காலத்தில் பராமரிக்க வக்கற்ற அரசு முதலாளிகளுடைய உற்பத்தி பாதிக்கப்பட்டு இலாபம் பாதிக்கப்படுவதால், நோய்த் தொற்றை பற்றிக் கவலை கொள்ளாமல் நோயோடு வாழப் பழகிக் கொள்ள வேண்டும் எனவும், அனைவரும் வேலைக்குத் திரும்ப வேண்டும் எனவும் அறிவித்துள்ளது

முதலாளிகள் தங்கள் இழப்பைச் சரி கட்டும் வகையில் தொழிலாளர்களை மேலும் கடுமையாகச் சுரண்டுவதற்குத் தொழிலாளர் சட்டங்களிலிருந்து விலக்களிக்கும் வேலையில் மத்திய மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.

முதல் கட்டமாக, குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், அரியானா, இமாச்சல பிரதேசம், பஞ்சாப் மாநிலங்கள் வேலை நேரத்தை 8 மணியிலிருந்து 12 மணி நேரமாகவும், வாரத்திற்கு 72 மணி நேரமாகவும் நீட்டித்து உத்திரவு பிறப்பித்துள்ளன. ஏற்கனவே இந்த நெருக்கடியினால் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ள நிலையில் இந்த வேலை நேர நீட்டிப்பின் மூலம் ஒரு பக்கம் கடுமையான சுரண்டலுக்கு வழி வகுக்கப்பட்டுள்ளது. மறுபக்கம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகாமல் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கும் வழி வகுக்கப்படுள்ளது.

இந்த நேர நீட்டிப்பு மூன்று மாதங்களுக்கு என அரசு தெரிவித்தாலும், இதனைத் தொடர்ந்து நீட்டிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது. மற்ற மாநில அரசுகளையும் இந்த நேர நீட்டிப்பிற்கு ஆளும் முதலாளி வர்க்கம் நிர்ப்பந்தித்து வருகின்றது.

அடுத்ததாக, ஒட்டு மொத்தமாகத் தொழிலாளர் சட்டங்களிலிருந்து விலக்களிக்கும் வகையில் மத்தியப் பிரதேசம், உத்திரப்பிரதேசம், குஜராத் மாநில அரசுகள் அரசாணைகளைப் பிறப்பித்துள்ளன.

மத்தியப் பிரதேச அரசு தொழிற்சாலை சட்டம்’, ’மத்தியப் பிரதேசத் தொழில் உறவு மற்றும் தொழில் தகராறு சட்டம்’, ’ஒப்பந்தத் தொழிலாளர் சட்டம்ஆகியவற்றிலிருந்து 1000 நாட்களுக்கு விலக்களித்து அரசாணை பிறப்பித்துள்ளது. இதன் மூலம் முதலாளிகள் விரும்பினால் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்தவும் பின்னர் தூக்கியெறியவும் சட்டரீதியான வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

உத்திரப் பிரதேச அரசு 35 தொழிலாளர் சட்டங்களிலிருந்து (மொத்தம் 38) மூன்று வருடங்களுக்கு விலக்களித்து உத்திரவிட்டுள்ளது. பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், புதிய முதலீடுகளை ஈர்க்க வேண்டியும் உற்பத்திச் செயல்பாடுகளை முடுக்கி விடவும் வேண்டியுள்ளதால் இந்த விலக்குகள் அவசியமாகிறது என உத்திரப்பிரதேச அரசு கூறுகிறது.

இதன் படி, தொழிற்சாலைகளில் குடிநீர், உணவகம், கழிவறை, போதுமான வெளிச்சம், போதுமான காற்றோட்டம், அமரும் வசதி, முதலுதவி வசதி, பாதுகாப்புக் கவசங்கள், குழந்தை பராமரிப்பு மையம், வாரந்திர விடுமுறை போன்ற எவற்றையும் உத்திரவாதப்படுத்தத் தேவையில்லை. இவைகளை உத்திரவாதப்படுத்துவதிலிருந்து முதலாளிகளுக்கு விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. தொழிற்சாலைகளில் பராமரிக்கப்பட வேண்டிய எந்த ஆவணங்களும் பராமரிக்கப்படத்  தேவையில்லை.

மேலும், புதிய தொழிற்சாலைகள் தொழிற்சாலைச் சட்டத்தின் விதிமுறைகளைப் பின்பற்றியுள்ளனவா என்பது குறித்து தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டியதில்லை. மூன்றாம் தரப்பு யாரேனும் ஆய்வு செய்து அறிக்கை அளித்தாலே போதும் என்கிறது மத்தியப்பிரதேச அரசு. இனிமேல் புதிய தொழிற்சாலை தொடங்குவதற்கான பதிவை ஒரே நாளில் முடித்துவிட வேண்டும் (இதற்கு முன்னர் 30 நாட்கள்). ஒரு நாளைக்கு மேல் பதிவு முடிக்கப்படவில்லையெனில் மாநில அரசு அதற்கான நஷ்ட ஈட்டை உரிய நிறுவனத்திற்கு அளிக்கும் என மத்தியப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

குஜராத் அரசும் புதியதாகத் தொடங்கப்படும் தொழிற்சாலைகளுக்கு தொழிலாளர் சட்டங்களிலிருந்து 1200 நாட்களுக்கு விலக்களிப்பதாக அறிவித்துள்ளது. 37 ஆயிரம் ஹெக்டர் நிலம் தொழிற்சாலைகளுக்கு ஒதுக்கப்படும் வகையில் தயாராக உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. முதலாளிகளுக்கு 7 நாட்களுக்குள் நிலம் ஒதுக்கப்படும் என்றும் 15 நாட்களுக்குள் அவர்களுக்கு உரிமம் மற்றும் அனைத்து அனுமதிச் சான்றிதழ்களும் வழங்கப்படும் என அரசு கூறியுள்ளது.

கர்நாடகத் தொழில் மற்றும் வர்த்தகக் கூட்டமைப்பானது (Federation of Karnataka Chambers of Commerce and Industry) கர்நாடக அரசை தொழிலாளர் சட்டங்களிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்க நிர்ப்பந்தம் அளித்து வருகின்றது. தொழிற்சாலை சட்டம், தொழிற்தகராறு சட்டம், தொழிற்சாலை நிலையாணைகள் சட்டம், ஒப்பந்தத் தொழிலாளர் சட்டங்கள் போன்றவற்றை செயல்படுத்துவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என நிர்ப்பந்தம் செய்து வருகிறது. மேலும், வேலை நாளை 8 மணி நேரத்திலிருந்து 10 மணி நேரம் அல்லது 12 மணி நேரமாக அதிகரிக்கவும், தனியார் நிறுவனத் தொழிலாளர்களுக்கு 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டிற்கான அகவிலைப்படியை அளிப்பதிலிருந்தும் விலக்கு அளிக்க வேண்டும், ஆட்குறைப்பு செய்வதற்கு அரசின் அனுமதி பெறத் தேவையான உச்ச வரம்பை 100 லிருந்து 300 ஆக உயர்த்த வேண்டும் எனவும் கூறியுள்ளது. ஒருவேளை, கர்நாடக அரசு இதனைச் செய்யவில்லையெனில் புதிய முதலீடுகள் கர்நாடகாவிற்கு வராதது மட்டுமல்ல, இயங்கி வரும் நிறுவனங்களும் வெளியேற நேரிடும் என எச்சரிக்கை செய்கிறது. கர்நாடக அரசும் முதலாளிகளுக்கு ஆதரவாகத் தொழிலாளர் சட்டங்களிலிருந்து விலக்களிப்பதற்கான வேலைகளைத் துவங்கியுள்ளது.

சீனாவிலிருந்து வெளியேறப் போகும் பன்னாட்டு நிறுவனங்களை இங்கு கொண்டு வருவதற்காகவே இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக இந்த அரசுகள் அறிவித்துள்ளன. சுயசார்புப் பொருளாதாரம் எனத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் மோடி அரசு, பன்னாட்டு முதலாளிகளின் நலனுக்காக சொந்த நாட்டுத் தொழிலாளர்களின் நலனைப் பலி கொடுக்கிறது. இந்திய அரசு நேரடியாகச் செய்தால் ஒட்டு மொத்தத் தொழிலாளி வர்க்கத்தின் எதிர்ப்பை எதிர் கொள்ள வேண்டி வரும் என்பதால் பகுதி பகுதியாக, அதாவது மத்திய அரசிற்கு இணக்கமாக உள்ள (குறிப்பாக பிஜேபி ஆளும் மாநிலங்களில்) மாநில அரசுகள் மூலம் இதனைச் செய்து வருகிறது. இதன் மூலம் ஒரு நெருக்கடி கால நிலையை அரசு மறைமுகமாக திணித்து வருகிறது.

சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் விதி (ILO Convention) 87ன் கூட்டம் கூடும் உரிமை, விதி 98ன் கூட்டுப்பேர உரிமை, விதி 144ன் முத்தரப்பு கருத்து அறிதல் ஆகியவற்றை இந்திய அரசு மீறி வருவதாக இந்தியத் தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டி வருகின்றன.

மத்திய அரசின் மறைமுக ஒத்துழைப்புடன் மாநில அரசுகளால் மேற்கொள்ளபட்டு வரும் தொழிலாளர் விரோதச் சட்டங்களை எதிர்த்து நாடு தழுவிய அளவில் போராட்டங்களைக் கட்டியெழுப்பாமல் இந்தியத்  தொழிற்சங்கங்கள் உலகத் தொழிலாளர் அமைப்பிடம் சமரசம் செய்து வைக்குமாறு கோரிக்கை வைக்கின்றன. உலக முதலாளித்துவ நாடுகளின் பிரதிநித்துவ அமைப்பான ஐஎல்ஒ(ILO)வால் என்ன செய்ய முடியும்? பெயரளவிற்குச் சில ஆலோசனைகளை வழங்குவதாக அறிவிக்க முடியுமே தவிர, வேறெதுவும் செய்ய முடியாது.

பெரும்பான்மையான மக்களை வேலையில்லாத் திண்டாட்டத்திலும் வறுமையிலும் பட்டினியிலும் தள்ளி விட்டு இன்று இந்திய முதலாளிய வர்க்கம் மரணப்படுக்கையில் கிடக்கிறது; தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மக்களின் உயிரைக் காவு கேட்கிறது. இரத்த வெறி கொண்ட முதலாளியத்திடமிருந்து  தொழிலாளர்களும் அனைத்து மக்களும் பாதுகாக்கப்பட வேண்டுமானால் தொழிலாளர்கள் தலைமையில் போர்க்குணமிக்க மக்கள் போராட்டங்கள் இங்கு கட்டமைக்கப்பட வேண்டும்! 





சோசலிசத் தொழிலாளர் இயக்கம்

தமிழ்நாடு

Comments

Popular posts from this blog

ஒடுக்கு முறைக்கு எதிரான எம்ஆர்எப் (MRF) தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி என்ற பெயரில் 1946 இல் இருந்து இயங்கி வரும் MRF நிறுவனம் சென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதியில் சுமார் 79 ஆண்டுகளாக இயங்கி வருகிறது . நிறுவனம் பெரும் லாபம் அடைந்து வந்தாலும் தொழிலாளர்களின் நலன்கள், ஊதியம், பணிப் பாதுகாப்பு, நிரந்தர வேலை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்து வந்தது. நிர்வாகத்தின் எதேச்சதிகாரப் போக்கிற்கு எதிராக, தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளைப் பாதுகாக்க சங்கம் அமைத்துப் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர் . சென்னையை தலைமையிடமாக கொண்டு 1946 இல் துவங்கபட்ட எம்ஆர்எப் ( MRF) நிறுவனம் திருச்சி , பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும், பல மாநிலங்களிலும் கிளைகளை அமைத்து டயர் மற்றும் இரப்பர் பொருட்கள், பெயிண்ட், பொம்மைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியா முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர் . திருவெற்றியூர் கிளையில் 1970, 1980, 1990 ஆகிய காலகட்டங்களில் தொழிலாளர்கள் தங்களுடைய நீண்ட நெடிய வீரமிக்க போராட்டத்தின் மூலமாக நிர்வாகத்தை அட...

தொழிலாளி வர்க்க ஒற்றுமையை பறைசாற்றும் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கு வாழ்த்துகள்!

  தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாகிய ஒசூரில் தொழிலாளர்களின் ஐக்கியத்தை உருவாக்கவும் வலுப்படுத்தவும், பாட்டாளி வர்க்க அரசியலை அவர்களிடம் கொண்டு செல்லவும் பல்வேறு தொழிற்சங்கங்களின் முன்முயற்சியில் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (Hosur Trade Union Federation -HTUF) தொடங்கப்பட்டுள்ளது. அதன் உருவாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக துவக்க மாநாடு ஏப்ரல் 6 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது ஒசூர் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து பாட்டாளி வர்க்க அணியை வலுபடுத்துவது, பல்வேறு அரசியல் கருத்துகளால் பிளவுபட்டு இருக்கும் தொழிலாளர்கள் பாட்டாளி வர்க்கத்தின் சரியான அரசியலைப் பற்றிக் கொண்டு, வர்க்க உணர்வு பெற்று ஐக்கியப்பட்டு ஓரணியில் திரளும் வகையில் அவர்களிடம் தொடர்ந்து உரையாடுவது, முதலாளித்துவத்தின் கொடும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் உதவுவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பில் மற்ற தொழிற்சங்கங்களும் இணைந்து பாட்டாளி வர்க்கத்தின் கரத்தினை வலுபடுத்...

விஜய்யின் சினிமாவும் சினிமா அரசியலும்!

  கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடந்த விஜயின் அரசியல் பொதுக்கூட்டம் 10 இளம் குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 உயிர்களைப் பலி கொண்டு பெரும் துயரத்திற்குக் காரணமாகியுள்ளது. ஓர் அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்தது தமிழ்நாட்டின் கடந்த எழுபத்தைந்து ஆண்டு வரலாற்றில் இல்லை என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி மனதில் ஆழ்ந்த துயரத்தை உண்டாக்கும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் இதற்குக் காரணமாக அமைந்துள்ள அரசியல், கலாச்சாரக் கூறுகள் நமது மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன.   சினிமாவும் சினிமா அரசியலும்   எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் தனி ஒருவராக விஜய் அவர்களைப் பந்தாடுவார். கார்களிலும் விமானங்களிலும் பறந்து எதிரிகளைச் சாடுவார். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் அவரைத் தொடக்கூட செய்யாது. அரசியல்வாதிகளின் ஊழலை எதிர்த்துப் போராடுவார். ரவடிகளைத் துவம்சம் செய்வார். இப்படித்தான் விஜய் நடித்த திரைப்படங்கள் அவரை பெரும் துணிச்சலும் வீரமும் கொண்டவராக, சாகசக்காரராக, நல்லவராக, நேர்மையானவராக, நீதிக்காகப் போராடுபவராக சித்தரித்து உள்ளன. இவ்வாறு பிரம்மாண...