Skip to main content

முதலாளித்துவ நெருக்கடிகளின் உலகமயமாக்கல்

பவானிசங்கர் நாயக்                             தமிழில்: நிழல்வண்ணன்

 

பெருந்தொற்றுக்குப் பிந்தைய பொருளாதார மீட்சி நிச்சயமற்றதாகத் தெரிகிறது, முதலாளித்துவத்தின் கற்பனை எல்லைக்குள் கொள்கை வகுப்பின் ஒவ்வொரு பிரிவிலும் பொருளாதாரக் கருத்துருக்கள் மங்கலாகவே தெரிகின்றன. வெஸ்ட்பாலியன் சர்வதேச அமைப்பு முறைக்குள் பலமாக நிலவும் பலதரப்பு ஒத்துழைப்பு என்பது சிதறுண்டு, ஐரோப்பிய மைய பக்கச்சார்பு, ஜனநாயகக் குறைபாடு, முன்னாள் காலனிய வல்லரசுகளின் நிறுவன மேலாதிக்கம் ஆகியவற்றுக்குள் புதைந்துவிட்டதன் காரணமாக அதன் இருத்தலுக்கே அச்சுறுத்தலை எதிர்கொண்டுவருகிறது. உலகம் முதலாளித்துவத்திற்குள்ளேயே ஏற்படும் நீண்டகால நெருக்கடிக்குள் சென்றுகொண்டிருக்கிறது. முதலாளித்துவ அமைப்பு இந்த நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு பயன்தரக்கூடிய எந்த ஒரு மாற்றினையும் வழங்கத் தவறியுள்ளது.  அதற்கு மாறாக, மக்களிடையே நெருக்கடிகளின் உலகமயமாக்கலையும் துயரங்களையும் அதிகரிக்கவே செய்துகொண்டிருக்கிறது. பட்டினி, வீடின்மை, வேலையின்மை ஆகிய இடர்ப்பாடுகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.  அத்தியாவசியப் பொருட்களையும் சேவைகளையும் அணுகுவதும், அவை கிடைப்பதும், அவற்றின் விநியோகமும் அருகிக்கொண்டே வருகிறது. சந்தைகள் சுருங்கிக் கொண்டிருக்கின்றன; மூழ்கிக் கொண்டிருக்கின்றன. உற்பத்தியாளர்கள், நுகர்வோர் ஆகிய இருவருமே அவர்களுடைய அன்றாட வாழ்க்கையில் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறார்கள்.

உலகமயமாக்கல் மற்றும் அதன் மினுமினுப்பின் மோசடிகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகின்றன. அதிகாரத்தின் இந்தக் குறுகிய மனம் படைத்த ஏமாற்றுக்காரர்கள் தமது வசதிபடைத்த கூடுகளுக்குள் பாதுகாப்பாக வாழ்கின்றனர்., மேலும் தற்போதைய நெருக்கடி முதலாளித்துவ நெருக்கடியோ, உலகமயமாக்கலின் நெருக்கடியோ அல்ல என்று அவர்கள் தீவிரமாக வாதிடுகிறார்கள். தற்போதைய நெருக்கடி பேராசை கொண்ட, பகுத்தறிவற்ற தனிநபர்கள் மற்றும் திறனற்ற அரசாங்கங்கள், உற்பத்தித் திறனற்ற அரசுகள் ஆகியவற்றின் விளைபொருள் என்று கட்டுக்கதைப் பிரச்சாரத்தை அவர்கள் கட்டவிழ்த்து விடுகிறார்கள். தடையில்லாச் சந்தை வழியிலான அமைப்புக்கள்தாம் பயனளிக்கத்தக்க, தகுதிவாய்ந்த மாற்றுக்களாகும். தற்போதைய  பொருளாதார, சமூக, அரசியல் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் கொரோனாப் பெருந்தொற்று ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள உலகலாவிய சுகாதார நெருக்கடிகள் அரசுகள் மற்றும் அரசாங்கத் தோல்விகளின் விளைவுகள் ஆகும் என்று வாதிடுவதன் மூலம் இந்தப் பிற்போக்கு மற்றும் வரலாற்றுக் கதையாடல்கள் முதலாளித்துவத்திற்கு உதவுகின்றன.

பல்வேறு சிந்தனைப் போக்குகளைச் சார்ந்த வலதுசாரிப் பொருளியலாளர்கள், தாராளவாதக் கருத்துரையாளர்கள், சம்பளம் வாங்கும் அறிவுஜீவிகள் மற்றும் ஆலோசகர்கள் சமத்துவ ஜனநாயகம், அமைதி மற்றும் வளமையை அதிகரிப்பதில் உலகமயமாக்கலின் முழுமையான தோல்விகளை மூடி மறைத்து, முதலாளித்துவ உலகமயமாக்கலைப் போற்றிப் புகழ்ந்து அதைச் சித்தாந்தரீதியாக நியாயப்படுத்துகிறார்கள்.

முதலாளித்துவத்தின் கீழ் உலகமயமாக்கல் நெருக்கடிகள் ஆளும் வர்க்கங்கள் மற்றும் ஆட்சியில் இல்லாத வர்க்கங்களின் நான்கு குறிக்கோள்களுக்கு பயனளிப்பவையாக இருக்கின்றன. முதலாவதாக, இந்தக் கேலிக்குரிய பிரச்சாரம் தங்களுடைய கூட்டு விருப்பத்தின் உதவியுடன் அவர்கள் அமைத்துள்ள அரசு மற்றும் அரசாங்கத்தை மக்கள் நிராகரிக்கச் செய்கிறது.  இரண்டவதாக, அது தங்களுடைய சொந்தத் திறமைகள் மற்றும் அறிவுத்திறனில் குடிமக்களின் நம்பிக்கை குறையச் செய்கிறது.  அது அவர்களைப் பலவீனப்படுத்தி அவர்களுடைய சொந்த மெய்நிலைமைகளைப் பகுப்பாய்வு செய்யவும் பிரதிபலிக்கவும் செய்கிறது. மூன்றாவதாக, அது அரசைப் பலவீனப்படுத்தி, அறிவியல் உணர்வு மற்றும் முற்போக்கான எதிர்காலத்தின் அடிப்படையில் பொது நன்மைக்கான சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சார மாற்றத்திற்கான கருவிகளாக உள்ள அரசாங்கங்களின் திறன்களை அழிக்கிறது. இறுதியாக, அது ஜனநாயகக் கலாச்சாரத்தை அழித்து, அதனிடத்தில் எதேச்சாதிகாரத்தை முன்வைக்கிறது, அது முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கு ஏற்றதாக இருக்கிறது. இந்த வழியில், நெருக்கடிகளால் முடுக்கிவிடப்பட்டுள்ள எதேச்சாதிகாரத்தை நிறுவுவதில் மையமான தூண்களாக இருக்கும் இந்த நான்கு குறிப்பான குறிக்கோள்களை அடைவதற்கு, பிற்போக்கு அரசியல் மற்றும் உலக முதலாளித்துவத்தின் போலிக் கதையாடல்கள் உதவுகின்றன. முதலாளித்துவ நெருக்கடிகளின் உலகமயமாக்கல் என்பது எதேச்சாதிகார அரசியலின் உலகமயமாக்கலைக் குறிக்கிறது.

ஆறு பெரிய உள்ளார்ந்த முதலாளித்துவ நெருக்கடிகளை உலகம் எதிர்கொண்டுள்ளது. அதாவது, 1) கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால் ஏற்பட்டுள்ள உலகளாவிய சுகாதார நெருக்கடிகள், 2) சுற்றுச்சூழல் நெருக்கடிகள், 3) பொருளாதார நெருக்கடிகள், 4) அரசியல் நெருக்கடிகள், 5) இராணுவ நெருக்கடிகள், 6) ஆட்சி நிர்வாக நெருக்கடிகள் ஆகியவை. இந்த ஆறு நெருக்கடிகளும் ஒன்றுக்கொன்று இணைந்தவையாகும். ஒரு நெருக்கடி இன்னொன்றைத் தூண்டிவிடுகிறது. இவற்றைத் தனித்தனியே தீர்ப்பது சாத்தியமில்லாதது. ஆகவே, இந்த நெருக்கடிகளை ஒன்றாகப் புரிந்துகொள்ளவும் தீர்க்கவும் பொருத்தமான மாற்றுக்களைக் கண்டறியவும் ஓர் ஒருங்கிணைந்த மற்றும் பன்முக அணுகுமுறை தேவைப்படுகிறது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுச் சுகாதார நெருக்கடிகள்

கொரோனா வைரஸ் பெருந்தொற்று, வைரஸ்கள் அவற்றின் இயற்கையான வசிப்பிடத்திலிருந்து மனித உடலுக்குப் பரவுவது, முதலாளித்துவத்தின் கீழ்,  பெருகிவரும் வனவிலங்குகள் வர்த்தகம், காடுகளை அழித்தல், அளவுக்கு மிகுதியாக இயற்கையைச் சுரண்டுவதால் இயற்கையான வனவிலங்குகள் வசிப்பிட இழப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருக்கிறது. இலாபத்திற்காக இயற்கையைப் பணமாக்கல்தான் உடல்நலப் பெருந்தொற்றுக்கான அடித்தளமாகும். ஓர் அண்மை ஆராய்ச்சியின்படி, ஒவ்வொரு நூற்றாண்டிலும் இரண்டு வைரஸ்கள் அவற்றின் இயற்கையான வசிப்பிடத்திலிருந்து மனித உடலுக்குள்  நுழைகின்றன. கொரோனா வைரஸின் காரணமான சுகாதார நெருக்கடியும் பிற வடிவிலான உலகளாவிய சுகாதார நெருக்கடிகளும் முதலாளித்துவத்தின் விளைபொருளாகும். மனித உடலையும் இயற்கையையும் இலாபத்தை விரிவாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் மூலாதாரங்களாக முதலாளித்துவம் கருதுகிறது. அது நோய்களை காப்பீடுகளுக்கும் மருந்து விற்பனைப் பெருங்குழுமங்களுக்குமான வணிக வாய்ப்புக்களாகப் பயன்படுத்துகிறது.  இலாப நோக்குள்ள மருத்துவப் பராமரிப்பு மற்றும் பொருளாதார முறை உலகெங்கும் சுகாதார நெருக்கடியை உருவாக்குகிறது.  பொது சுகாதார உள்கட்டமைப்புக்களின் தனியார்மயமாக்கலும் மருத்துவப் பராமரிப்புச் சேவைகளை கார்பொரேட்மயமாக்கலும் காரணமாக  கொரோனா வைரஸ் பெருந்தொற்று நிலவும் சுகாதார நெருக்கடிகளைத் தீவிரப்படுத்துகிறது.  உடல்நலத்தை மனித உரிமைகளாகக் காண்பதும் நோயிலிருந்து இலாபம் தேடும் நோய் வணிகப் பொருளாதார மாதிரியைக் கைவிடுவதும்தான் இதற்கு மாற்றாகும். மருத்துவப் பராமரிப்பை தேசியமயமாக்குவதும் உலகதழுவியதாக்குவதும்தான் ஒரே மாற்றாகும்.

சுற்றுச்சூழல் நெருக்கடிகள்

முன்னெப்போதும் கண்டிராத தற்போதைய சுற்றுச்சூழல் நெருக்கடி இயற்கையானது அல்ல. சுற்றுச்சூழல் என்பது முதலாளித்துவத்தின் கீழ் பேராசை அடிப்படையிலான வளர்ச்சியால் சீர்குலைக்கப்பட்டு வருகிறது. முதலாளித்துவப் பொருளாதார அமைப்பு  இயற்கை மூலவளங்களை அளவுக்கு மிகுதியாகச் சுரண்டுவதன் மூலம் சூழலியல் அமைப்புக்குள் மோசமான சமநிலைச் சீர்குலைவை ஏற்படுத்துகிறது என்பதை சுற்றுச்சூழல் நெருக்கடியின் மிகுதியான அளவும் தீவிரமும் வெளிப்படுத்துகின்றன.  உலகம் வெப்பமயமாதலிலிருந்து மாசுக்கள் மற்றும் நச்சுமயமாதல் வரை முதலாளித்துவத்தின் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் துய்த்தல் கொள்கையின் விளைவுகளாகும். முதலாளித்துவம் இலாபத்தை அதிகபட்சமாக்குவதற்காகச் சுற்றுச்சூழலை பணமயமாக்கிவிட்டுள்ளது. அது நிலம், நீர், காற்று ஆகியவற்றை சீரழித்துவிட்டது. காற்று மற்றும் நீர்வழிப் பரவும் நோய்கள் முதலாளித்துவ அமைப்பால் உற்பத்திசெய்யப்பட்ட சுற்றுச்சூழல் நெருக்கடியின் விளைவுகளாகும். சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள சரிசெய்யமுடியாத நாசம் மனித உயிர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். சுற்றுச்சூழல் நெருக்கடி உலகளாவிய பொருளாதார மற்றும் சுகாதார நெருக்கடியைத் தீவிரப்படுத்துகிறது. பேராசை அடிப்படையிலான இலாப நோக்கு முதலாளித்துவப் பொருளாதாரத்தை மாற்றி அமைப்பது சமூக வாழ்வாதாரத்தின் எதிர்காலத்திற்கு ஓர் இன்றியமையாத தேவையாகும்.

பொருளாதார நெருக்கடிகள்

பொருளாதார நெருக்கடி என்பது முதலாளித்துவத்துடன் ஒருங்கிணைந்ததாகும். சிக்கன  நடவடிக்கை என்னும் தவறான தாராளவாதக் கதையாடலை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான பொருளாதார மாற்றுக் கொள்கையாக முன்வைப்பது  சந்தையை ஊக்கப்படுத்துவதற்கான தர்க்கமாகும். சிக்கன நடவடிக்கை ஒரு பொருளாதாரக் கொள்கை அல்ல, மாறாக அது முதலாளித்துவ வர்க்கங்களின் ஒரு பொருளாதாரத் திட்டமாகும், அது பெரும்பான்மையான மக்கள் மீது பொருளாதாரத் துயரங்களையும், அரசியல் மீது நம்பிக்கையற்ற தன்மையையும் சமூகரீதியான அந்நியமாக்குதலையும் திணிக்கிறது. சிக்கன நடவடிக்கை என்னும் சூனியக்காரச் செய்கையும் அதன் பொருளாதாரக் கலாச்சாரமும் நெருக்கடியை மறு உற்பத்தி செய்கிறது, மேலும் பொது மூலவளங்களை முதலாளித்துவ வர்க்கங்களின் தனிப்பட்ட சட்டைப்பைகளுக்கு மாற்றுவதற்கு சந்தைச் சக்திகளுக்கு அதிகாரமளிக்கிறது. சுருக்கமாகச் சொல்வதானால், நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான ஒரே வழி சிக்கன நடவடிக்கையை முடுக்கிவிடும் புதிய தாராளவாதப் பொருளாதாரக் கொள்கைகளை விட்டொழிப்பதே ஆகும். நிலையான பொருளாதாரம் மற்றும் மூலவளங்களின் மீது சமூக மற்றும் ஜனநாயகக் கட்டுப்பாடு அடிப்படையிலான சமுதாயத்திற்கான வெகுமக்கள் போராட்டங்களின் உதவியுடன் முதலாளித்துவத்தையும் அதன் அனைத்துக் கலாச்சாரங்களையும்  ஒழித்துக்கட்டுவதே நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான நிரந்தர மாற்றாகும்.   

அரசியல் நெருக்கடிகள்

பொருளாதாரத்தில் புதிய தாராளவாதத்திற்கு மாறியது சேமநல சமூக ஜனநாயகத்திலிருந்து முதலாளித்துவ ஜனநாயகத்திற்கு மாறுவதற்கு இட்டுச் சென்றது, அதில் தங்குதடையற்ற சந்தைச் சக்திகள் தமது மறைமுகமான கைகளுடன் சுதந்திரமாக ஆட்சி செய்கின்றன.  மிகச் சிலருக்கு வளமையையும் பெரும்பாலானவர்களுக்குத் துயரங்களையும் கொண்டுவரும் வளர்ச்சிதான் இதன் ஒட்டுமொத்த விளைவாகும். இது ஜனநாயகபூர்வமான அரசியல் சக்திகளுடைய சட்டபூர்வத் தன்மையின் வீழ்ச்சிக்கு இட்டுச் செல்கிறது. இந்தச் சூழமைவில், பிற்போக்கு மதவாத, பழமைவாத, சமூக சக்திகள் எழுச்சி பெற்று வெற்றிடத்தை நிரப்புவதோடு மட்டுமின்றி, கலாச்சாரம், மதம், மற்றும் தேசியவாதத்தின் பெயரால் முதலாளித்துவ அரசியலின் ஆட்சிக்குச் சட்டபூர்வத் தன்மையை அளிக்கின்றன. உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள தாராளவாத ஜனநாயகங்களில் நிகழும் அண்மை அரசியல் எழுச்சிகள் அரசியலில் இந்த வலதுசாரி மற்றும் பிற்போக்கைப் பிரதிபலிக்கின்றன.  இந்த அரசியல் நெருக்கடி எதேச்சாதிகாரத்திற்கு ஆதரவாக அனைத்து ஜனநாயக நெறிமுறைகளையும் மதிப்பீடுகளையும் அழிப்பதற்கு முதலாளித்துவ வர்க்கங்களுக்கு ஒரு வாய்ப்பினை அளிக்கிறது. முதலாளித்துவத்தின் கட்டமைப்பு நெருக்கடியின் இந்தத் தீர்மானகரமான காலகட்டத்தில், அது மேலும் மூலதனத்தைக் குவிப்பதற்கு எதேச்சாதிகார அரசியல் மட்டும்தான் உதவ முடியும். மக்கள்திரள் பிழைத்திருப்பதற்கான ஒரே மாற்று கூட்டுத் தொலைநோக்குடேன் கூடிய கூட்டு அரசியல் ஆகும். 

இராணுவ நெருக்கடிகள்

எதேச்சாதிகார, பிற்போக்கு அரசியல் ஆட்சிகள் ஆட்சியில் நீடிப்பதற்கும் மூலவளங்களைக் கட்டுப்பாட்டில் வைத்துகொள்ளவும் மோதல்களையும், தகராறுகளையும் போர்களையும் கொண்டுவருகின்றன. தேசியவாத போர்வெறிக் கூச்சலின் உலகளாவிய வளர்ச்சி தரை, வானம், கடல் மற்றும் விண்வெளியில் இராணுவ நெருக்கடிகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. அது சர்வதேச ஆயுத வர்த்தகத்தைத் தூண்டிவிட்டுக் கொண்டும் இருக்கின்றன. காலனிய, ஏகாதிபத்திய, முதலாளித்துவ வல்லரசுகள், பேரழிவு ஆயுதங்களை விற்பதன் மூலம் தங்களுடைய பொருளாதார அடித்தளத்தை விரிவாக்கிக் கொள்வதற்கு இராணுவ நெருக்கடியை ஒரு வாய்ப்பாகக் கருதுகின்றன. துப்பாக்கிகளும் முதலாளித்துவ உலகமயமாக்கலும் சேர்ந்தே செல்கின்றன. இராணுவ-தொழில்துறைக் கூட்டு இராணுவ சக்திகளால்  வழி நடத்தப்படும் பாதுகாப்பு அரசு என்னும் கருத்தை ஆழப்படுத்துகிறது. அது மனித அழிவில் மூலதனத்திற்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது. அரசுகளும் அரசாங்கங்களும் தமது மூலவளங்கள் அனைத்தையும் இராணுவத் தளவாடங்களுக்காகச் செலவழித்துக் கொண்டிருக்கின்றன, அதேநேரத்தில் குடிமக்களோ பசி, பட்டினியிலும் ஒதுங்கிக் கொள்வதற்கு வீடுகளின்றியும் துன்புற்றுக் கொண்டிருக்கிறார்கள். இந்த இராணுவ நெருக்கடி குடிமக்களின் சேமநலத்தை குப்பைக் கூடையில் வீசியெறிகிறது. உலக அளவில் இராணுவச் செலவினங்களின் அதிகரிப்பு உலகில் சுற்றுச்சூழலுக்கும், மனித உயிர்களுக்கும், அமைதிக்கும் வளமைக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது.

ஆட்சி நிர்வாக நெருக்கடிகள்

உலகளாவிய, பிராந்திய, தேசிய, மற்றும் வட்டார நிர்வாக நெருக்கடி அதிகரித்துக் கொண்டிருப்பதை உலகம் கண்டுவருகிறது. ஆட்சி நிர்வாக நெருக்கடி என்பது சட்டத்தின் ஆட்சி, வெளிப்படைத் தன்மை, பொறுப்புடைமை ஆகியவற்றின் நெருக்கடியாகும். முதலாளித்துவத்தின் குற்றமரபுப் பண்பு ஒளிவுமறைவான, பொறுப்புடமையற்ற அமைப்பு முறையையே தெரிவுசெய்கிறது, இம்முறை பல்வேறு சட்டப் பொறியமைவுகளைக் கொண்டு மூலதனத்தைத் திரட்டுவதற்கும் தொழிலாளர்களையும் அவர்களுடைய நகர்வையும்  கட்டுப்படுத்துவதற்கும் முழுமையான சுதந்திரத்தை அளிக்கிறது. சட்டங்கள் மக்களுக்கு மட்டுமே, முதலாளித்துவ வர்க்கங்கள் சட்டங்களின் தண்டனையிலிருந்து விதிவிலக்குப் பெறுகின்றன. இந்த முதலாளித்துவ இரட்டைப்பண்பு ஆட்சி நிர்வாகத்தின் நெருக்கடியை உருவாக்குவதில் மையமாக இருக்கிறது. பொருளாதார மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள், அரசியல் சட்டமீறல்கள் மற்றும் சட்டவிரோத சிந்தனைகள் அதிகரிப்பதும் ஆட்சி நிர்வாகத்தின் நெருக்கடிக்கு இட்டுச் செல்கிறது. தாராளவாத, முற்போக்கு, சமத்துவ, கூட்டுறவு மற்றும் ஜனநாயக அட்சி நிர்வாகத்துக்கான போராட்டம் மட்டுமே மாற்றாகும். இந்த மாற்றும் கூட நிலையான இடைவெளிகளில் முதலாளித்துவத்தால் அழிக்கப்படுகிறது.

முதலாளித்துவம் அதன் சொந்த முரண்பாடுகளை தீர்ப்பதற்கு அதுனுள் உள்ளார்ந்த வகையில் இந்த ஆறு நெருக்கடிகளும் இடம்பெற்றிருக்கின்றன. முதலாளித்துவம்  நெருக்கடிகளின் பிறப்பிடமாக இருப்பதை முதலாளித்துவத்தின் பல்வேறு அவதாரங்கள் வெளிப்படுத்துகின்றன. முதலாளித்துவத்திற்கு உள்ளேயே நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கான மாற்று எதுவும் இல்லை. உலகமயமாக்கல் என்பது முதலாளித்துவ உலகப் பொருளாதாரமாகும். அது  அமைதிக்கும் வளமைக்கும் வாக்குறுதியளித்தது. ஆனால் மெய்நிலையில் அது நெருக்கடிகளையும் துயரங்களையும் உலகமயமாக்கிக் கொண்டிருக்கிறது. முதலாளித்துவத்தின் ஆருடக்காரர்கள் அவர்களுடைய அனைத்துக் கடவுளர்களையும் இழந்துவிட்டனர், மேலும் போலிப் பிரச்சாரக் கடவுளை வழிபடுவதும், அதன் பயன்பாடும் காலக்கெடுவைக் கடந்துவிட்டது. முதலாளித்துவ போலித்தன உருவ வழிபாடு அது தானாக உருவாக்கிக் கொண்ட நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கான மாற்று அல்ல. இது முதலாளித்துவப் பேரழிவு மற்றும் அதன் நெருக்கடிகளின் வரலாற்றுடனான நமது அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்வதற்கான நேரமாகும்.  பெரும்பான்மை மக்கள் பாதிக்கப்படும் முதலாளித்துவத்திற்குள் தனிநபர் உரிமை என்பது இல்லை. நமது தனிநபர் உரிமைகள் கூட்டு விடுதலையுடன் பரஸ்பரம் இணைக்கப்பட்டதாகும். சுதந்திரம், சமத்துவம், நீதி மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றின் அடிப்படையிலான கூட்டு எதிர்காலத்திற்கான ஒரே மாற்று முதலாளித்துவத்திற்கு எதிரான உலகளாவிய விடுதலைப் போராட்டமே ஆகும்.  தேசிய சோசலிசம் என்பது சர்வதேசிய நடைமுறையின் மூலம் மட்டுமே சாத்தியம்.  உலகளாவிய கூட்டு நடவடிக்கைகள் மற்றும் எதிர்ப்பு இயக்கங்கள் மூலம் சோசலிசமே ஒரே மாற்று என்பதையும், அதன் மறைக்கப்பட்ட புகழையும் மீண்டும் புதுப்பித்து, நிறுவமுடியும்.

 

பவானி சங்கர் நாயக், கவன்ட்ரி பல்கலைக் கழகம், ஐக்கிய அரசியம் (UK)

நன்றி: countercurrents.org      

                

Comments

Popular posts from this blog

தொழிலாளர் ஊதியங்கள் ஏன் எப்போதும் மிகவும் குறைவாகவே இருக்கின்றன?

  உங்கள் உழைப்புக்கு ஏற்ற மதிப்புக் கிடைப்பதில்லை , உங்களுக்குக் கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பை விடப் பலமடங்கு உழைத்திருப்பதாக எப்போதாவது நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா ? கார்ல் மார்க்ஸ் உங்களைப் புரிந்துகொள்கிறார் . ஒட்டுமொத்தத் தொழிலாளர் வர்க்கமும் முதலாளித்துவ வர்க்கத்தால் சுரண்டப்படுகிறது என்று அவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் வாதிட்டார் . இது வெறும் மிகைப்படுத்தல் கூற்று அல்ல , மாறாக ஒரு பொருளாதார உண்மையாகும் . தொழிலாளர்கள் உருவாக்கும் மதிப்பின் ஒரு பகுதியைத் திட்டமிட்ட முறையில் திருடுவதன் மூலம் மிகுதியான செல்வத்தைக் குவிப்பதே   முதலாளித்துவத் தொழில்நிறுவனத்தின் முழுமையான நோக்கமாகும் . இந்தச் செயல்முறையே சுரண்டல் என்று குறிப்பிடப்படுகிறது . தொழிலாளர்களுக்கு அவர்களுடைய தகுதிக்குரிய ஊதியம் அளிக்கப்படுகிறது என்று முதன்மைப்போக்கு பொருளியலாளர்கள் கூறிக்கொள்கின்றனர் . தொழிலாளர்களின் ஊதியங்கள் அவர்களால் உற்பத்திப் பொருளுக்கு “ கூட்டப்படும் மதிப்பை ” குறிக்கின்றன தூரத்து நாடுகளில் பழிபாவத்திற்கு அஞ்சாத முதலாளிகள்

பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் சீர்த்திருத்தவாதத்தில் வீழ்ந்துள்ள இடதுசாரி இயக்கங்கள்

இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இடதுசாரிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் சில அமைப்புகளின் போக்குகள் அவர்களின் சீர்த்திருத்தவாதக் கண்ணோட்டத்தை அம்பலபடுத்தி வருகின்றன. நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த காங்கிரசு கட்சி இந்திய முதலாளி வர்க்கத்தின் வளர்ச்சிக்கும் சுரண்டலுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்தும் , பெரும் மூலதனம் தேவைப்படும் கனரகத் தொழில்களை மக்களுடைய வரிப் பணத்திலிருந்து அமைத்துக் கொடுத்தும், ஆரம்பக் கட்டத்தில் பன்னாட்டு மூலதனங்களின் போட்டியிலிருந்து அவர்களைப் பாதுகாத்தும் , பின்னர் இந்திய முதலாளிகள் சர்வதேச அளவில் சந்தையைப் பிடிக்கவும் , முதலீடு செய்யவும் உலகமயமாக்கல் கொள்கையை முன்னெடுத்தும் தொடர்ந்து சேவை செய்து வந்தது. அதே நேரத்தில் தொழிலாளர்களின் நலனுக்காகவும் , விவசாயிகளின் நலனுக்காகவும் , ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும் போராடிய இடதுசாரிகள் , ஜனநாயக அமைப்புகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி ஒடுக்கி வந்தது. வீரம் செறிந்த தெலுங்கானா மக்களின்

வேலை பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் என்னும் நிறுவனம் ஒசூர் பகுதியில் 1998 முதல் செயல்பட்டு வருகின்றது . இது வெள்ளீயத்தால் ( தகரத்தால் ) ஆன கொள்கலன்களை , தகரக்குவளைகளை உற்பத்தி செய்கின்றது . இந்த ஆலையின் முதலாளி இந்தியாவை பூர்வீமாக கொண்டவராக இருந்தாலும் , தற்பொழுது கென்யாவில் வசித்து வருகின்றார் . தொடக்கம் முதலே இந்த ஆலையானது தொழிலாளர்களின் உழைப்பை வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்து வருகின்றது . வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் நீண்டநாட்கள் பணிபுரிந்து வந்தாலும் அவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யாமலும் , நியாயமான ஊதியம் வழங்காமலும் தொழிலாளர்களை வஞ்சித்து வந்தது . தொழிலாளர்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து 52 தொழிலாளர்கள் மட்டும் நிரந்தரம் செய்யப்பட்டனர் . இவர்களும் ஆறு வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் , பயிற்சித் தொழிலாளர்கள் என மாற்றிமாற்றி அவர்களை வகைபடுத்தி பின்னரே நிரந்தரம் செய்யப்பட்டனர் . அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைக்கப்பட்டுச் சுரண்டப்பட்டு வருகின்றனர் . தற்பொழுது வரை 450 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்பட