Skip to main content

இந்தியாவின் சீனப் பொருள்கள் புறக்கணிப்பும், சீனப்பாதையைப் பின்பற்றுதலும்

சர்வதேச அளவிலான முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடி கோடிக்கணக்கான தொழிலாளர்களை வேலையற்றவர்களாக்கி வீதியில் தள்ளியுள்ளது. வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள், பின் தங்கிய நாடுகள் என அனைத்தும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவித்து வருகின்றன. கொரானா நோய்ப் பெருந்தொற்றினால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலானது முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மக்களைத் திசை திருப்ப வசதியான காரணமாக அமைந்துள்ளது.

அரசின் கஜானாவைக் கபளீகரம் செய்தல், இயற்கை வளங்களைச் சூறையாடல், தங்களுக்குச் சாதகமாகச் சட்டங்களைத் திருத்தம் செய்து கொள்ளல், அடித்தட்டு மக்களின் மீது மேலும் மேலும் நெருக்கடிகளை திணித்தல் என இந்த அசாதாரண சூழலை இந்த நாட்டின் ஆளும் முதலாளி வர்க்கம் பயன்படுத்தி வருகிறது. மேலும், இந்த நெருக்கடிகளுக்குத் தீர்வாக உள்நாட்டுத் தயாரிப்புகள், உள்ளூர் மக்களுக்கு வேலை எனத் தேசியவாத முழக்கங்களை முன்வைத்து மக்களை ஏமாற்ற முயற்சி செய்து வருகிறது.

பின்னலமைப்பு முறையிலான தயாரிப்பு (Network Produts)

உற்பத்தியானது தேசியத் தன்மையை இழந்து சர்வதேசத் தன்மையை பெற்று வருவது அதிகரித்த அளவில் உள்ளது. இன்றைய பின்னலமைப்பு முறையிலான   தயாரிப்புகள் (Network Products) என்பது பன்னாட்டு நிறுவனங்கள் ஒரு பொருளின் உதிரி பாகங்களை  பகுதி பகுதியாக உலகின் பல்வேறு இடங்களில் தயாரித்து அதனை ஓரிடத்திற்குக் கொண்டு வந்து ஒருங்கிணைத்து (Assemble) முழுமையடைந்த உற்பத்திப் பொருளாக்கி உலகச் சந்தைக்கு ஏற்றுமதி செய்வதாகும்.  

மூலதனமானது சொந்த நாட்டிலோ அல்லது வேறு ஒரு நாட்டிலோ ஒரு  பொருள் உற்பத்தியின் முழு நிகழ்வுப்போக்கையும் நிகழ்த்துவதில்லை. மாறாக, அது பொருள் உற்பத்தியைப் பல்வேறு கட்டங்களாகப் பிரித்து அதனை உலகின் பல்வேறு நாடுகளில் பகுதி பகுதியாக நிறைவேற்றுகிறது. மலிவான கூலி உழைப்பு, மூலப்பொருட்கள், சந்தை வாய்ப்புகள், வரி சாதகங்கள் போன்றவை எங்கெல்லாம் அவற்றிற்கு சாதகமாக உள்ளனவோ அங்கு உற்பத்தியின் பல்வேறு செயல்பாடுகளை நிகழ்த்துகின்றன.

இந்தப் பன்னாட்டு நிறுவனங்களின் பின்னலமைப்பு முறையிலான தயாரிப்புதான் சீனாவில் அதிகளவில் நடைபெற்று வருகிறது. சீனா உற்பத்திக்கான உதிரி பாகங்களை இறக்குமதி செய்து அதனை ஒருங்கிணைத்து முழுமையான உற்பத்திப் பொருளாக்கி அனைத்து நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறது. இதில் சீன மூலதனம் மட்டுமல்லாமல் பன்னாட்டு மூலதனமும் ஈடுபட்டுள்ளது. சீனாவின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தில் இது முக்கிய பங்காற்றுகிறது. 2001 -2006 க்கும் இடைப்பட்ட காலத்தில் சீனாவில் ஏற்றுமதி மூலம் உழைப்பு செறிந்த துறைகளில் ஆரம்பக் கல்வியைப் பயின்றவர்களுக்கு 7 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

சர்வதேச நிறுவனங்கள் உலகளவில் உதிரி பாகங்களை சீனாவிற்குக் கொண்டு வந்து முழுமையடைந்த உற்பத்திப் பொருளாக மாற்றி உலகம் முழுவதும் சந்தைக்குக் கொண்டு சென்று விற்பனை செய்கின்றன. சீனாவின் இந்த வழிமுறையைத்தான் இந்தியா தற்பொழுது ‘இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்’ (Make in India) என்ற முழக்கத்தின் கீழ் செயல்படுத்த முனைகிறது. ”உலகிற்காக இந்தியாவில் உற்பத்தியை முழுமையாக்குங்கள் (Assemble in India for the world)” என்பதுதான் அதன் நோக்கம். இதன் மூலம் உலக சந்தைக்கான ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கை 2025க்குள் 3.5 சதவீதமாகவும், 2030க்குள் 6 சதவீதமாகவும் உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. 2018ல் அதன் அளவு 1.7 சதவீதம்தான். மேலும் இந்தத் திட்டத்தின் மூலம் 2025 இல் 4 கோடி வேலை வாய்ப்புகளும் 2030 இல் 8 கோடி வேலை வாய்ப்புகளும் கிடைக்கும் என இந்தியா எதிர்பார்க்கிறது.

பன்னாட்டு மூலதனங்களுக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு

பன்னாட்டு மூலதனங்களை எதிர்நோக்கிக் காத்திருக்கும் இந்திய அரசு, சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தகப் போரை தனக்கு சாதகமாக்கிக் கொள்ளப் பார்க்கிறது. அமெரிக்கா-சீனா இடையிலான மோதலின் காரணமாக சீனாவை விட்டு வெளியேறும் பன்னாட்டு மூலதனங்களை இந்தியாவிற்குக் கொண்டு வர முயற்சி செய்கிறது. இதற்காக அமெரிக்கா மற்றும் வளர்ந்த நாடுகளின் ஆதரவை பெறுவதற்கு இந்திய- சீன எல்லைப் பிரச்சனை மற்றும் சீனப் பொருட்களின் மீதான தடை போன்ற தந்திரங்களை இந்திய அரசு கையாள்கிறது. அதோடு மட்டுமல்லாமல், தொழிலை எளிதாகத் தொடங்கவும், தொழிலாளர் சட்டங்களை மேலும் முதலாளிகளுக்குச் சாதகமாக மாற்றவும் பல்வேறு சட்டத் திருத்தங்களைச் செய்து பன்னாட்டு மூலதனங்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றுக் கொண்டிருக்கிறது.

சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தகப் போரின் காரணமாக மட்டும் சர்வதேச நிறுவனங்கள் சீனாவில் இருந்து இதர பகுதிகளுக்குச் செல்லவில்லை. ஏற்கனவே, தொழிலாளர் பற்றாகுறை மற்றும் ஊதிய அதிகரிப்பின் காரணமாகக் குறைந்த செலவில் தொழிற்துறை பொருட்களுக்கான உற்பத்திக் கூடம் என்ற நிலையை சீனா இழக்க தொடங்கியுள்ளது. உழைப்புச் செறிவு சார்ந்த துறைகளில் ஏற்பட்டுள்ள இந்த வெற்றிடத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என இந்தியா முயற்சி செய்து வருகிறது. சர்வதேச ஏற்றுமதியில் சீனாவின் பங்கு 12.8 சதவீதமாக இருக்கையில் இந்தியாவின் பங்கோ 1.7 சதவீதம் என்ற அளவிலேயே உள்ளது.

2000 ஆம் ஆண்டிற்குப் பின்பு, சீனாவின் ஏற்றுமதியில் மூலதனச் செறிவு (capital intensive) சார்ந்த பொருட்களின் பங்களிப்பு அதிகமாவதற்கு முன்பு 1980 – 2000 ஆம் ஆண்டுகளில் மரபுசார்ந்த திறனற்ற உழைப்புச் செறிவு சார்ந்த பொருட்களின் பங்கு அதிகமாக இருந்தது. சீனாவின் ஏற்றுமதி ஊக்குவிப்புக் கொள்கையானது உள்நாட்டுத் தொழிற்துறையையும் உலகு தழுவிய மதிப்புச்  சங்கிலித்தொடரையும் (Global value chains) இணைக்கும் வகையில் இருந்தது. மூலதனச் செறிவு சார்ந்த துறைகளில் இறக்குமதி செய்யப்பட்ட உதிரி பாகங்களை ஒருங்கிணைத்து முழுமையடைந்த உற்பத்திப் பொருளாகத்  தயாரிக்கும் பெரிய தயாரிப்புக் கூடமாக சீனா விளங்கி வருகிறது.

உலகளாவிய மதிப்புச் சங்கிலித் தொடரில் வளரும் நாடுகளின் பங்களிப்பு குறைவாக இருப்பதால் மூலதனச் செறிவு சார்ந்த உற்பத்திப் பொருள்களை ஏற்றுமதி செய்தல் என்பது கடினமாக உள்ளது. வளர்ந்த நாடுகள் இந்தியாவிலிருந்து மூலதனச் செறிவு சார்ந்த துறைகளின் ஏற்றுமதிக்கான வாய்ப்பை விட திறனற்ற உழைப்புச் செறிவு சார்ந்த துறைகளின் ஏற்றுமதிக்கான வாய்ப்புகளையே வழங்குகின்றன.

சீனப் பொருட்கள் மூலதனச் செறிவு சார்ந்த துறை அல்லது உழைப்புச் செறிவு சார்ந்த துறை ஏதுவாக இருந்த போதிலும் பின்தங்கிய, வளரும், வளர்ந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. 2000 – 2015 க்கும் இடைப்பட்ட காலத்தில் சீனாவின் ஏற்றுமதி இந்தியாவை விட சராசரியாக 743 சதவீதம் அதிகமாகி உள்ளது. வளர்ச்சியடைந்த நாடுகள் சீனாவின் ஏற்றுமதியை முழுவதுமாகத் தடை செய்தால் இந்த வித்தியாசமானது முழுவதுமாக மறைந்து விடும் (வெறும் 37 சதவீதம் என்ற அளவில் குறைந்து விடும்) என இந்தியா கனவு காண்கிறது


உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உதிரிபாகங்களை கொண்டு உள்நாட்டு உற்பத்தி சங்கிலித்தொடரை வலுப்படுத்துவது சிறந்ததா? அல்லது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உதிரிபாகங்களை கொண்டு முழுமையடைந்த உற்பத்திப் பொருட்களை தயார் செய்து ஏற்றுமதி செய்வது சிறந்ததா? என்ற பிரச்சனைக்கு இந்திய ஆளும் வர்க்கம் இரண்டாவதையே தேர்ந்தெடுத்துள்ளது. சீன முன்மாதிரியை இது பின்பற்றுகிறது. மூலப்பொருட்கள் மற்றும் உதிரிபாகங்களுக்காக உள்நாட்டைச் சார்ந்திருப்பதை விட உலகளாவிய மதிப்புச் சங்கிலித் தொடரில் இந்தியா பங்கேற்பதன் மூலம் உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கம், மொத்த ஏற்றுமதியின் அளவு அதிகரிப்பு ஆகியவற்றிற்கு வழிவகுக்கும் என இந்திய அரசு கருதுகின்றது.

எனினும், உலகளாவிய மதிப்புச் சங்கிலித் தொடரில் உற்பத்தியின் முக்கிய பகுதிகளான மூலதனம் மற்றும் திறன் சார்ந்த துறைகளை (ஆராய்ச்சி, அறிவுசார் பகுதிகள், வடிவமைத்தல், வர்த்தக முத்திரை, சந்தைப்படுத்துதல்) வளர்ந்த நாடுகள் தங்கள் கட்டுபாட்டிற்குள் வைத்திருக்கின்றன. நேரடி உற்பத்தியை மட்டும் வளரும் நாடுகளுக்கு வழங்குகின்றன. வால்மார்ட், அடிடாஸ், நைக் உள்ளிட்ட நிறுவனங்கள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.

உலகளாவிய ஏற்றுமதியில் பின்னலமைப்பு முறை  தயாரிப்பு மூலம்  உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் பங்களிப்பு 42 சதவீதமாக உள்ளது. இதில் ஆசியாவின் பங்கு உயர்ந்து வரும் நிலையில் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் பங்கு குறைந்து வருகிறது. ஆசியாவிலும் பெரும்பான்மையாக கிழக்காசியாவிலேயே உற்பத்தி நடைபெறுகிறது. அதாவது வளரும் பின் தங்கிய நாடுகளில் மலிவான கூலியுழைப்பைச் சுரண்டுவதற்காகவே உலகளாவிய மதிப்புச் சங்கிலித் தொடர் மற்றும் வலைப்பின்னல் முறை தயாரிப்பு போன்ற திட்டங்களை ஏகாதிபத்தியங்கள் முன்வைக்கின்றன. எனினும் மூலதனம் மற்றும் திறன் சார்ந்த துறைகளை முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்வதன் மூலம் பெருமளவிலான இலாபத்தை அவை குவித்துக் கொள்கின்றன.

பின்னலமைப்பு முறை தயாரிப்பில் இந்தியாவின் பங்களிப்பு 2000 ஆம் ஆண்டில் 2 பில்லியன் டாலரில் இருந்து 2018 ஆம் ஆண்டில் 32 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் இது 10 சதவீதம் (2018) ஆகும். ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்திக்கான தொழிற்கூடங்களை அதிகளவில் அமைத்துள்ளன. இதன் மூலம் வாகன ஏற்றுமதியானது கணிசமான அளவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மொபைல் போன் உற்பத்தியிலும் பன்னாட்டு மூலதனம் இந்தியாவில் முதலீடு செய்யப்பட்டிருந்தாலும், அது உள்நாட்டுச் சந்தைக்கே போதுமானதாக உள்ளது, ஏற்றுமதிக்கானதாக இல்லை.

போலித் தற்சார்பு

இனி தேசிய அளவிலான உற்பத்தி மற்றும் சந்தை என்பது சாத்தியமில்லாத நிலையில் முதலாளி வர்க்கமானது தற்சார்பு பொருளாதாரம் என்பதற்கான வரையறையையே மாற்றி வருகிறது. உள்நாட்டில் தயாரிப்பதையே (மூலதனம் எந்த நாட்டைச் சார்ந்ததாக இருந்தாலும்) தற்சார்பு பொருளாதாரம் என இந்தியா வரையறுக்கிறது. அதற்காகத்தான் ‘இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்’ என்ற முழக்கத்தை முன்வைக்கிறது. இதன் மூலம் பன்னாட்டு மூலதனம் இந்தியாவில் மலிவான கூலியுழைப்பைச் சுரண்டுவதற்குத் தன்னுடைய கதவுகளைத் திறந்து வைத்துள்ளது. ஆனால் முதலாளித்துவ நெருக்கடிகள் முற்றும் பொழுதெல்லாம் அன்னியப் பொருட்கள் புறக்கணிப்பு, தற்சார்பு பொருளாதாரம் என்று போலியான தேசபக்த உணர்வை முன்வைத்துப் பிரச்சனையைத் திசை திருப்புகிறது. ஒரு பக்கம் தற்சார்புப் பொருளாதாரம் என்று முழங்கி மக்களை ஏமாற்றி வருகிறது. இன்னொரு பக்கம்,  பன்னாட்டு மூலதனம் மற்றும் தொழில்நுட்பங்களைச் சார்ந்தும் இருக்கிறது. உண்மையில் தற்சார்புப் பொருளாதாரம் என்றால் என்ன?

நிலவுடைமைக் காலகட்ட சமூகமானது விவசாயப் பொருளாதாரத்தையே மையமாக கொண்டிருந்தது. மிகவும் பின் தங்கிய உற்பத்தி முறையை அடிப்படையாக கொண்டிருந்த ஒவ்வொரு கிராமமும் தன்னுடைய உற்பத்தி நடவடிக்கைகளை கிராம அளவிலேயே கொண்டிருந்தன. அது பிற பகுதிகளோடு தொடர்பற்று தனித்திருந்தது. தன்னுடைய பெரும்பகுதியான தேவைகளுக்கு உள்ளூர் உற்பத்தியையே மையமாகக் கொண்டிருந்தது. இதனால் இந்தக் கிராமபுறப் பொருளாதாரம் என்பது இயற்கைப் பொருளாதாரம் அல்லது சுயசார்பு (தற்சார்பு) பொருளாதாரம் என்றழைக்கப்பட்டது. உற்பத்தி மற்றும் விநியோகம் முழுவதும் உள்நாட்டளவிலேயே மையம் கொண்டிருப்பதும், பிற நாடுகளைச் சார்ந்திராமல் இருப்பதும் தான் தற்சார்பு பொருளாதாரமாகும்.

தொழில் மூலதனத்திற்கு முந்தைய வணிக மூலதனம் வளர்ந்து வந்தபொழுது தேவைக்கு அதிகமான உபரி பொருட்கள், கைவினை உற்பத்தி பொருட்கள் எல்லை கடந்து பிற பகுதிகளில் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டன. அதாவது உற்பத்திப் பொருட்களை எல்லை கடந்து விற்பனை செய்து வணிக மூலதனத்தைப் பெருக்கும் நிகழ்வு நடந்தேறியது. இதற்குப் பின்னர் வணிக மூலதனம் தொழில் மூலதனமாக மாறிய கட்டத்தில் உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்யவும், உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களை பெறுவதற்காகவும் முதலாளிகள் நாடு கடந்து செல்ல வேண்டியதாயிற்று.

முதலாளித்துவம் வளர வளர, மூலப்பொருட்கள், உற்பத்திப் பொருட்களுக்கான சந்தை, மலிவான கூலியுழைப்பு ஆகியவற்றிற்காகப் பிற நாடுகளை ஆக்கிரமிப்பது தொடங்கியது. பின் தங்கிய நாடுகள் மூலதனம், தொழில்நுட்பம் ஆகியவற்றிற்காக பிற நாடுகளைச் சார்ந்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இத்தகைய சார்புநிலை இன்றைய நிலையில் தவிர்க்க முடியாததாக உள்ளது. சொந்த நாட்டு மக்களைச் சுரண்டியதோடு மட்டுமல்லாமல், பிற நாட்டு மக்களையும் சுரண்டி மூலதனத்தைப் பெருக்க ஏகாதிபத்தியங்களிடையே போட்டி கடுமையாகி வருகிறது.

உலகமய காலகட்டத்திற்குப் பின்பு, எந்த ஒரு நாடும் பிற நாடுகளோடு பொருளாதார ரீதீயாக உறவு வைத்திருப்பது என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி உள்ளது. ஆனால், முதலாளித்துவ உற்பத்தி ஒவ்வொரு முறையும் பெரும் நெருக்கடிக்குள் சிக்கிக் கொள்ளும் பொழுது பொருளாதாரத்தைச் சீரமைப்பதாகக் கூறி, தற்சார்புப் பொருளாதார வாய்ச்சவடால்களை முதலாளித்துவ அரசுகள் அறிவிக்கின்றன. ஆனால், நடைமுறையில் அதற்கான சாத்தியம் இல்லை என்பது அந்த நாட்டு முதலாளிகளுக்கும், ஆளும் அரசுக்கும் தெரியும். முதலாளித்துவ நெருக்கடிக்கு எதிரான மக்களின் உணர்வுகளைத் திசைதிருப்பவே இந்த வாய்சவடால்கள். உண்மையில்,  இந்திய அரசு ஒருபுறம் தற்சார்பு பொருளாதாரம் என்று கூறி தேசபக்த மயக்கங்களை மக்களின் மீது திணிக்கிறது; இன்னொரு புறம், இந்திய ஆளும் வர்க்கங்கள் தன்னுடைய சுரண்டல் நலனுக்காக சர்வதேச மூலதனத்துடன் நெருக்கமான உறவுகளைப் பேணி வளர்க்கின்றன. இவ்வாறு இரட்டை வேடம் பூண்டு மக்களை ஏமாற்றி வருகின்றன.

அப்படியானால், சோசலிச சமூகத்தில் நிலைமை எப்படி இருக்கும்? சோசலிச சமூகத்திலும் பொருளாதாரம் உலகமயமாகத் தான் இருக்கும். ஆனால், அது தொழிலாளர்களைச் சுரண்டும் பொருளாதாரமாக இல்லாமல், மக்களை ஓட்டாண்டிகளாக்கும் பொருளாதாரமாக இல்லாமல் அனைத்து மக்களின் நலன் காக்கும் பொருளாதாரமாக இருக்கும். பிற நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்தும் பொருளதாரமாக இல்லாமல், சமத்துவ அடிப்படையில் அவர்களுக்குள் பரஸ்பரம் உதவி செய்யும் பொருளாதாரமாக இருக்கும். இலாப அடிப்படையில் இல்லாமல் மக்களின் தேவை அடிப்படையில் திட்டமிட்ட பொருளாதாரமாக இருக்கும். இன்று நிலவி வரும் மக்களுக்கு எதிரான உலகு தழுவிய முதலாளியத்திற்குப் பதிலாக மக்களுக்கு வாழ்வு அளிக்கும் உலகு தழுவிய சோசலிசப் பொருளாதாரமாக அது இருக்கும்.

                                                                                      - குமணன்

Comments

Popular posts from this blog

சாம்சங் தொழிலாளர் போராட்டம்: தலைமைக்கு வெற்றி - தொழிலாளர்களுக்கு பின்னடைவு

  தொழிற்சங்க அங்கீகாரத்தை முதன்மைக் கோரிக்கையாகவும் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் 37 நாட்களுக்கும் மேலாக வேலைநிறுத்தம் செய்து வந்த ‘ சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் ’ போராட்டம் , அது முன்வைத்த கோரிக்கைகளில் எதுவும் நிறைவேற்றப்படாமலேயே 15.10.2024 அன்று முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.   போராட்டங்கள் எப்பொழுதும் வெற்றியை மட்டுமே தருவதில்லை , வெற்றி மற்றும் தோல்வி இரண்டுமே மாறி மாறி வரக்கூடியதுதான் போராட்டக்களம். சில நேரங்களில் பெரும் இழப்புகளோடு கூட போராட்டக் களத்திலிருந்து பின்வாங்க வேண்டிய சூழல் ஏற்படும் , அந்தச் சூழலை உணர்ந்து போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டிய தேவையும் ஏற்படும். இதில் ஏற்பட்ட அனுபவத்தைத் தொகுத்துக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதற்கான படிப்பினையை இது கொடுக்கும். ஆனால் , போராட்டத்தின் போக்கு தொழிலாளர்களின் நலனை முன்னிறுத்தாமல் , ஏமாற்றும் போக்கைக் கைக்கொள்ளும் பொழுது அது ஒட்டுமொத்தத் தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்கே எதிராகக் கொண்டு போய் விடுகின்றது.   சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்திற்குத் தலைமை கொடுத்

வேலை பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் என்னும் நிறுவனம் ஒசூர் பகுதியில் 1998 முதல் செயல்பட்டு வருகின்றது . இது வெள்ளீயத்தால் ( தகரத்தால் ) ஆன கொள்கலன்களை , தகரக்குவளைகளை உற்பத்தி செய்கின்றது . இந்த ஆலையின் முதலாளி இந்தியாவை பூர்வீமாக கொண்டவராக இருந்தாலும் , தற்பொழுது கென்யாவில் வசித்து வருகின்றார் . தொடக்கம் முதலே இந்த ஆலையானது தொழிலாளர்களின் உழைப்பை வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்து வருகின்றது . வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் நீண்டநாட்கள் பணிபுரிந்து வந்தாலும் அவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யாமலும் , நியாயமான ஊதியம் வழங்காமலும் தொழிலாளர்களை வஞ்சித்து வந்தது . தொழிலாளர்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து 52 தொழிலாளர்கள் மட்டும் நிரந்தரம் செய்யப்பட்டனர் . இவர்களும் ஆறு வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் , பயிற்சித் தொழிலாளர்கள் என மாற்றிமாற்றி அவர்களை வகைபடுத்தி பின்னரே நிரந்தரம் செய்யப்பட்டனர் . அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைக்கப்பட்டுச் சுரண்டப்பட்டு வருகின்றனர் . தற்பொழுது வரை 450 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்பட

பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் சீர்த்திருத்தவாதத்தில் வீழ்ந்துள்ள இடதுசாரி இயக்கங்கள்

இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இடதுசாரிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் சில அமைப்புகளின் போக்குகள் அவர்களின் சீர்த்திருத்தவாதக் கண்ணோட்டத்தை அம்பலபடுத்தி வருகின்றன. நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த காங்கிரசு கட்சி இந்திய முதலாளி வர்க்கத்தின் வளர்ச்சிக்கும் சுரண்டலுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்தும் , பெரும் மூலதனம் தேவைப்படும் கனரகத் தொழில்களை மக்களுடைய வரிப் பணத்திலிருந்து அமைத்துக் கொடுத்தும், ஆரம்பக் கட்டத்தில் பன்னாட்டு மூலதனங்களின் போட்டியிலிருந்து அவர்களைப் பாதுகாத்தும் , பின்னர் இந்திய முதலாளிகள் சர்வதேச அளவில் சந்தையைப் பிடிக்கவும் , முதலீடு செய்யவும் உலகமயமாக்கல் கொள்கையை முன்னெடுத்தும் தொடர்ந்து சேவை செய்து வந்தது. அதே நேரத்தில் தொழிலாளர்களின் நலனுக்காகவும் , விவசாயிகளின் நலனுக்காகவும் , ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும் போராடிய இடதுசாரிகள் , ஜனநாயக அமைப்புகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி ஒடுக்கி வந்தது. வீரம் செறிந்த தெலுங்கானா மக்களின்