Skip to main content

நமது இலக்கு : அனைவருக்கும் கல்வி! அனைவருக்கும் கண்ணியமான வேலை!

 அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில்  7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வழி செய்யும் வகையில்  தமிழக சட்டசபையில் அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து ஏகமனதாக கடந்த செப்டம்பர் மாதம் 15ந் தேதி  ஒரு சட்டத்தை நிறைவேற்றின. அந்தச் சட்டம் ஆளுநரின் ஒப்புதலு        க்காக உடனே அனுப்பியும் வைக்கப்பட்டது. ஆனால் ஒரு மாதத்திற்கு  மேல் ஆகியும் அந்தச் சட்டத்திற்கு ஆளுநர் இந்நாள் வரை ஒப்புதல் அளிக்கவில்லை; இன்னும் மூன்று, நான்கு வாரங்கள் அவகாசம் கேட்டார். இது இந்த நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தையே கேலிக்கு உள்ளாக்கும் செயலாகும் ஆளுநரின் செயலைக் கண்டித்து  எதிர்க் கட்சிகள் அனைத்தும் போராடி வந்தன. ஆளும் கட்சியான அ.தி.மு.க.வோ ஆளுநரின் எதேச்சதிகாரச் செயலைக் கண்டிக்கத் துணிச்சல் இல்லாமல், ஆளுநரின் ஒப்புதல் கிடைக்கும் வரை மருத்துவப் படிப்புக்கான கலந்தாலோசனையை நடத்த மாட்டோம் எனக் கோழைத்தனமாக அறிவித்தது. இந்த நிலையில் திடீரென  நேற்று (29.10.2020) அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 விழுக்காடு ஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்தும் வகையில் தமிழக அரசு அரசாணை ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

அடுத்த ஆண்டு வர உள்ள சட்டசபைத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் எனக் கருதும் ஆளும் கட்சி இதைத் தனது முக்கியமான சாதனையாகப் பிரச்சாரம் செய்யப் பயன்படுத்திக் கொள்ளும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை. இந்தச் சட்டம் நடைமுறைக்கு வராத பட்சத்தில் அதைத் தனது தேர்தலில் முக்கியமான பிரச்சினையாக தி.மு.க. எடுத்துக் கொண்டிருக்கும். இப்பொழுது அதற்கு வழி இல்லாமல் போய்விட்டது.

ஆளும் கட்சியும் எதிர்க் கட்சிகளும் கூறுவதைப் போல இந்தச் சட்டத்தினால்  நாட்டில் பெரும்பான்மையாக உள்ள தொழிலாளர்களின், வறிய, ஏழை விவசாயிகளின், பழங்குடிகளின், தலித்துகளின், மீனவர்களின்  குழந்தைகளுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துவிடுமா?

இன்றைய கல்வி ஒரு குதிரைப் பந்தயம்!

படித்த மாணவர்கள் அனைவருக்கும் கண்ணியமான வாழ்க்கை நடத்தும் அளவுக்கு ஊதியம் வரக் கூடிய வேலை கிடைக்கும் நிலை இங்கு இல்லை. படித்தவர்கள் மத்தியில் கடுமையான வேலை இல்லாத் திண்டாட்டம் இங்கு நிலவி வருகிறது. இந்த நிலையில் மருத்துவப் படிப்பு ஒரு பாலைவனச் சோலை போல மக்களுக்குத் தோன்றுகிறது. மேலும் நடுத்தர வர்க்கத்தினர் சமூகத்தின் மேல்நிலைக்குச் செல்ல மருத்துவப் படிப்பை ஒரு பெரும் வாய்ப்பாகக் கருதுகின்றனர். இந்த நிலையில்தான்  நீட் (NEET) நுழைவுத் தேர்வு அவர்களின் கனவுகளின் மீது பேரிடியாக இறங்கியது. சி.பிஎஸ்.ஈ பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களே நீட் தேர்வில் வெற்றி பெறுவது அரிதாக இருக்கும்போது மாநிலப் பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களால் அதில் வெற்றி பெறுவது என்பது இயலாத ஒன்றாகவே உள்ளது.

நீட் தேர்வு வருவதற்கு முன்பு 2015-16ல் அரசுப் பள்ளிகளில் தமிழ் பயிற்று மொழி மூலம் படித்தவர்களில் 456 பேருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், 54 பேருக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் இடம் கிடைத்துள்ளது. அதே போல 2016-17ல் 438 பேருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் 99 பேருக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் இடம் கிடைத்துள்ளது. ஆனால் நீட் தேர்வு வந்த பிறகு 2018-19ல் அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் படித்த 40 பேருக்கு மட்டும் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும்  12 பேருக்கு மட்டும் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் இடம் கிடைத்துள்ளது. அதாவது நீட் தேர்வு வந்த பிறகு அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்குக் கிடைத்த இடங்களில் 90 விழுக்காடு குறைந்துள்ளது. உண்மையில் அரசுப் பள்ளிகளில்தான் 45 விழுக்காடு மாணவர்கள் படிக்கின்றார்கள் என்ற நிலையில் அவர்களுக்குக் கிடைக்கும் இடங்களின் எண்ணிக்கையோ மிகமிகக் குறைவு என்றே கூற வேண்டும்.

இந்த நிலையில்தான் நீட் தனிப் பயிற்சி வகுப்புகள் புற்றீசல்கள் போல நாடெங்கும் தோன்றின. இதை நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு கல்வி வியாபாரிகள் மக்களைக் கொள்ளை அடிக்கத் தொடங்கி விட்டனர். ஏற்கனவே குறிப்பிட்டபடி, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்கள் மருத்துவப் படிப்பை சமூகத்தின் மேல்படிக்குச் செல்ல ஒரு வாய்ப்பாகக் கருதுவதால் ‘எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, எப்படியாவது தனது மகளையோ, மகனையோ மருத்துவராக ஆக்கி விட வேண்டும்’ எனக் கருதுகின்றனர்.  அதற்காகத் தமது சேமிப்புகள் அனைத்தையும் தமது குழந்தைகளின் தனிப் பயிற்சிக்கு எனச் செலவிடுகின்றனர். சேமிப்பு இல்லாதபோதும் கடன் வாங்கிச் செலவிடுகின்றனர். குதிரைப் பந்தயத்தில் வெற்றி பெறுவதற்காக ஜாக்கி குதிரையை  விரட்டுவது போலப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை விரட்டுகின்றனர். குழந்தைகள் முதல் முறை தேர்வில் தோற்றாலும் இரண்டாம் முறை, மூன்றாம் முறை எனத் தொடர்ந்து  மீண்டும் மீண்டும் தேர்வு  எழுத வைக்கப்படுகின்றனர். குழந்தைகளின் விருப்பங்களை பெற்றோர்கள் கணக்கில் கொள்வதில்லை; அவர்களுக்கு அவர்களுடைய கனவுகள் நிறை வேற வேண்டும்; அவ்வளவுதான்.! அழுத்தங்களையும் தோல்விகளையும் தாங்க முடியாத சில குழந்தைகள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்கின்றன. தனது பேராசைக்காக  சமூகம் தனது எதிர்காலச் சந்ததிகளைப் பலி கொடுக்கிறது. போட்டிகளும் ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்த முதலாளிய சமூகமே இந்தக் கோரமான முடிவுகளுக்குக் காரணமாகிறது.

இட ஒதுக்கீடு என்னும் மாயை!

தமிழக அரசின் இந்த அரசாணையினால் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு  300 லிருந் 400 வரை  மருத்தவக் கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்புக் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.  இதனால் மட்டும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மாணவர்களின் கனவு நிறைவேறி விடாது. ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் சேர வேண்டுமானால் நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களால் நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் குறைந்தபட்ச அளவுக்குக் கூட மதிப்பெண்கள் பெற முடிவதில்லை. இந்த நிலையில் அவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டுமானால் கட்டாயம் நீட் தனிப் பயிற்சி வகுப்புகளில் சேர வேண்டும் அதற்குக் குறைந்தபட்சம் இரண்டு இலட்சம் ரூபாயாவது செலவு செய்ய வேண்டும். அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் சாதாரணத் தொழிலாளர்கள், விவசாயிகள், கீழ் நடுத்தரவர்க்கக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களால் பெரும் செலவு செய்து தங்கள் குழந்தைகளைத் தனிப் பயிற்சிக்கு அனுப்ப முடியாது. எனவே இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால் அரசுப் பள்ளிகளில் படித்து வரும் மேல்நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களின் சில குழந்தைகள் பயன் பெறலாமே தவிர தொழிலாளர், விவசாயிகள், கீழ் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களால் பயன் அடைய முடியாது என்பதுதான் உண்மை. 

மக்களுக்கு அந்நியமான கல்வி முறை!

இங்குள்ள கல்வி முறை சமூகத்தில் பெரும்பான்மையாக உள்ள தொழிலாளர்கள்,வறிய, ஏழை விவசாயிகள், பழங்குடிகள், தலித்துகள், மீனவர்கள் ஆகியோரால் பயன் அடைய முடியாத வகையில் அவர்களுக்கு அந்நியமாகவே உள்ளது. அவர்களுடைய குழந்தைகளால் அடிப்படைப்  பள்ளிக் கல்வியைக் கூட  முழுமையாக அடைய முடிவதில்லை. இந்த நிலையில் அவர்களுக்கு உயர் கல்வி என்பது  எட்டாக் கனியாகவே உள்ளது. கல்வி தனியார்மயமாக்கப்பட்ட நிலையில், வணிகமயமாக்கப்பட்ட நிலையில், உயர் கல்வி பற்றி அவர்கள் கனவு கூடக் காண முடியாது. இந்த நிலையில் தனியார் பள்ளியில் படித்து வரும் மாணவர்களுடன் அவர்களால் எக்காலத்திலும் போட்டி போட முடியாது. சாதாரண கலை  அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதே அவர்களால் பொருளாதார ரீதியில் முடியாத நிலையில் மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளைப் பற்றிக் கூறவே வேண்டாம். கல்வியில் நிலவும் இந்த ஏற்றத்தாழ்வு சாதாரணத் தொழிலாளர்கள், வறிய, ஏழை  விவசாயிகள். பழங்குடிகள். தலித்துகள், மீனவர்கள் ஆகியோரின் குழந்தைகளை எப்பொழுதும் உயர்  கல்வி பெற முடியாதவர்களாக வைத்திருக்கிறது. எப்பொழுதும் அவர்களை முன்னேற முடியாமல் தடுத்து, அவர்களை  உடல் உழைப்புத் தொழிலாளிகளாகவே வைத்திருக்கிறது. அதன் மூலம் மட்டுமே முதலாளிகளுக்குத் தேவையான உடல் உழைப்புத் தொழிலாளர்கள் குறைந்த கூலிக்குத் தொடர்ந்து கிடைப்பார்கள். தொடர்ந்து இங்குள்ள  முதலாளிய வர்க்கம்  அவர்களின் உழைப்பைச் சுரண்டி நீடித்திருக்க முடியும். எனவே இந்தக் கல்விமுறையே முதலாளிகளுக்குத் தேவையான தொழிலாளர்களை உற்பத்தி செய்வதற்கான கல்விமுறையே தவிர மக்களுக்கானதல்ல. 

அனைவருக்கும்  கல்வி ! அனைவருக்கும் வேலை! 

உண்மையில், இந்த நாட்டில் பெரும்பான்மையாக உள்ள உழைக்கும் மக்களே இந்த நாட்டின் அனைத்து வளங்களுக்கும் காரணமாக இருக்கின்றனர். இங்குள்ள அரசு நிர்வாகங்களும், நீதிமன்றங்களும், கல்விக் கூடங்களும், மருத்துவமனைகளும் இவர்கள் உழைப்பினால் உருவாகும் செல்வத்திலிருந்தும் நிதி ஆதாரத்திலிருந்துமே செயல்பட்டு வருகின்றன. ஆனால் அவர்களின் வீட்டுக் குழந்தைகளால் இந்த அமைப்பில் அடிப்படைக் கல்வி கூடப் பெற முடிவதில்லை என்பதுதான் உண்மை.

கல்வி இங்கு கொள்ளை இலாபம் அடிக்கும் வணிகமாக மாற்றப்பட்டுள்ளது. வசதிபடைத்தவர்களும், செல்வந்தர்களும், முதலாளிகளுமே இங்கு கல்வி பெற முடியும். பணக்காரர்களுக்கு ஒரு கல்வி, ஏழைகளுக்கு ஒரு கல்வி. இந்த ஏற்றத் தாழ்வு நீடிக்கும் வரை ஏழை வீட்டுக் குழந்தைகள் பணக்கார வீட்டுக் குழந்தைகளுடன் போட்டியிட்டு வெற்றி பெற இயலாது.

இந்த நிலையில், அரசுப் பள்ளி மாணவர்கள்  மருத்துவப் படிப்பில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டைப் பெற்றபோதும் கூட, அது அனைத்து மக்களுக்கும் கல்வியையோ, வாழ்க்கையையோ தராது. ஏனென்றால் இங்கு கோடிக்கணக்கான மக்கள் அடிப்படைக் கல்வி கூடப் பெற இயலாத நிலையில் இருக்கின்றனர். எனவே அனைவரும் கல்வியும் வாழ்க்கையும்  பெற வேண்டுமானால், கல்வித் துறையில் இருந்து தனியார்கள் வெளியேற்றப்பட வேண்டும், கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும், அனைவருக்கும் கல்வி அளிக்கும் பொறுப்பை அரசே எடுத்துக் கொள்ள வேண்டும், அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான கல்வியை அரசு அளிக்க வேண்டும், பள்ளிக் கல்வி முதல் உயர் படிப்பு வரை கல்வி இலவசமாக அளிக்கப்பட வேண்டும், பயிற்று மொழியாக அவரவர்களின் தாய் மொழியே இருக்க வேண்டும். படித்த அனைவருக்கும் கண்ணியமான வாழ்க்கை நடத்தக் கூடிய அளவுக்கு ஊதியத்தை வழங்கக் கூடிய வேலை அளிக்கப்பட வேண்டும். இந்தக் கோரிக்கைகளைத் தமது இலக்காக வைத்து தொழிலாளர்களும், வறிய ஏழை விவசாயிகளும், அனைத்து அடித்தட்டு மக்களும் ஒன்று திரண்டு போராட வேண்டும். அதன் வெற்றியே அனைவருக்கும் கல்வியையும் வாழ்க்கையையும் அளிக்கும்.

                                                                                                                                                                        - மு.வசந்தகுமார்.

 

 

Comments

Popular posts from this blog

சாம்சங் தொழிலாளர் போராட்டம்: தலைமைக்கு வெற்றி - தொழிலாளர்களுக்கு பின்னடைவு

  தொழிற்சங்க அங்கீகாரத்தை முதன்மைக் கோரிக்கையாகவும் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் 37 நாட்களுக்கும் மேலாக வேலைநிறுத்தம் செய்து வந்த ‘ சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் ’ போராட்டம் , அது முன்வைத்த கோரிக்கைகளில் எதுவும் நிறைவேற்றப்படாமலேயே 15.10.2024 அன்று முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.   போராட்டங்கள் எப்பொழுதும் வெற்றியை மட்டுமே தருவதில்லை , வெற்றி மற்றும் தோல்வி இரண்டுமே மாறி மாறி வரக்கூடியதுதான் போராட்டக்களம். சில நேரங்களில் பெரும் இழப்புகளோடு கூட போராட்டக் களத்திலிருந்து பின்வாங்க வேண்டிய சூழல் ஏற்படும் , அந்தச் சூழலை உணர்ந்து போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டிய தேவையும் ஏற்படும். இதில் ஏற்பட்ட அனுபவத்தைத் தொகுத்துக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதற்கான படிப்பினையை இது கொடுக்கும். ஆனால் , போராட்டத்தின் போக்கு தொழிலாளர்களின் நலனை முன்னிறுத்தாமல் , ஏமாற்றும் போக்கைக் கைக்கொள்ளும் பொழுது அது ஒட்டுமொத்தத் தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்கே எதிராகக் கொண்டு போய் விடுகின்றது.   சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்திற்குத் தலைமை கொடுத்

வேலை பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் என்னும் நிறுவனம் ஒசூர் பகுதியில் 1998 முதல் செயல்பட்டு வருகின்றது . இது வெள்ளீயத்தால் ( தகரத்தால் ) ஆன கொள்கலன்களை , தகரக்குவளைகளை உற்பத்தி செய்கின்றது . இந்த ஆலையின் முதலாளி இந்தியாவை பூர்வீமாக கொண்டவராக இருந்தாலும் , தற்பொழுது கென்யாவில் வசித்து வருகின்றார் . தொடக்கம் முதலே இந்த ஆலையானது தொழிலாளர்களின் உழைப்பை வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்து வருகின்றது . வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் நீண்டநாட்கள் பணிபுரிந்து வந்தாலும் அவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யாமலும் , நியாயமான ஊதியம் வழங்காமலும் தொழிலாளர்களை வஞ்சித்து வந்தது . தொழிலாளர்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து 52 தொழிலாளர்கள் மட்டும் நிரந்தரம் செய்யப்பட்டனர் . இவர்களும் ஆறு வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் , பயிற்சித் தொழிலாளர்கள் என மாற்றிமாற்றி அவர்களை வகைபடுத்தி பின்னரே நிரந்தரம் செய்யப்பட்டனர் . அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைக்கப்பட்டுச் சுரண்டப்பட்டு வருகின்றனர் . தற்பொழுது வரை 450 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்பட

பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் சீர்த்திருத்தவாதத்தில் வீழ்ந்துள்ள இடதுசாரி இயக்கங்கள்

இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இடதுசாரிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் சில அமைப்புகளின் போக்குகள் அவர்களின் சீர்த்திருத்தவாதக் கண்ணோட்டத்தை அம்பலபடுத்தி வருகின்றன. நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த காங்கிரசு கட்சி இந்திய முதலாளி வர்க்கத்தின் வளர்ச்சிக்கும் சுரண்டலுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்தும் , பெரும் மூலதனம் தேவைப்படும் கனரகத் தொழில்களை மக்களுடைய வரிப் பணத்திலிருந்து அமைத்துக் கொடுத்தும், ஆரம்பக் கட்டத்தில் பன்னாட்டு மூலதனங்களின் போட்டியிலிருந்து அவர்களைப் பாதுகாத்தும் , பின்னர் இந்திய முதலாளிகள் சர்வதேச அளவில் சந்தையைப் பிடிக்கவும் , முதலீடு செய்யவும் உலகமயமாக்கல் கொள்கையை முன்னெடுத்தும் தொடர்ந்து சேவை செய்து வந்தது. அதே நேரத்தில் தொழிலாளர்களின் நலனுக்காகவும் , விவசாயிகளின் நலனுக்காகவும் , ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும் போராடிய இடதுசாரிகள் , ஜனநாயக அமைப்புகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி ஒடுக்கி வந்தது. வீரம் செறிந்த தெலுங்கானா மக்களின்