ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் மாநிலங்களின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக, முதலாளித்துவக் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. பிரதானக் கட்சிகள் ஒன்றையொன்று எதிர்க்கொள்ள பிராந்திய, சிறுபான்மையின, ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதித்துவ கட்சிகள் என்பனவாகத் தம்மைக் காட்டிக் கொள்ளும் சிறுசிறு கட்சிகளுடன் பேரம் பேசிக் கொண்டு வருகின்றன. இவர்களிடையே நடைபெறும் பேரங்களும், பங்கீடுகளும் ஆட்சியதிகாரத்தைச் சுவைப்பதும், பங்கு போட்டுக் கொள்வதும், அதன் மூலம் கொள்ளையடிப்பதுமான நோக்கத்தைக் கொண்டவையாகும். சிறுசிறு கட்சிகளைப் பொறுத்தவரை சட்டமன்ற மாளிகையில் சில இருக்கைகளை வென்றெடுக்கவும், தமது இருப்பை தக்கவைத்துக் கொள்ளவும், ஆளும் வர்க்கத்தின் வாலாக இருப்பதன் மூலம் தமது நலனை பாதுகாத்துக் கொள்ளவும் முயன்று வருகின்றன.
இந்திய ஆட்சியதிகாரத்தில் பாஜகவும், தமிழகத்தில் அதன் நேச சக்தியான அதிமுகவும் இருந்து வரும் நிலையில், இந்தக் கூட்டணியை எதிர்கொள்ளும் மற்றக் கட்சிகள் (பிரதான கட்சி மற்றும் சிறு சிறு கட்சிகள் உட்பட) எவையும் ஆட்சியதிகாரத்தில் இருக்கும் கட்சிகளின் (பாஜக+அதிமுக) மக்கள் விரோதப் பாசிசச் செயல்பாடுகளை அம்பலப்படுத்தாமல் அவ்வப்பொழுது சில முணுமுணுப்புகளை மட்டுமே வெளிப்படுத்தி வருகின்றன. முதலாளித்துவ ஜனநாயகத்தைத் தாங்கள் கொண்டு வருவோம் என்ற குறைந்தபட்சத் திட்டத்தைக் கூட முன்வைக்காமல், ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான பேரங்களையும், பங்கீடுகளையும், பணப்பரிமாற்றங்களையும் செய்து கொண்டிருக்கின்றன. ஏனெனில் இந்தக் கட்சிகளும் அந்தப் பாசிசப் போக்கின் ஓர் அங்கமே, இவர்கள் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தாலும் சுரண்டும் வர்க்கத்தின் நலனுக்காக, இத்தகைய பாசிச நடவடிக்கைகளை முன்னெடுக்கவே செய்வார்கள் என்பதை நமக்கு வரலாற்று அனுபவம் காட்டுகிறது.
ஆனால், பாசிசத்தை வீழ்த்த பாஜகவை தேர்தல் களத்தில் வீழ்த்த வேண்டும் என்று கூறி அதற்காக புரட்சிகர இயக்கங்கள் எனத் தம்மைக் கூறிக் கொள்ளும் பல குட்டி முதலாளித்துவ இயக்கங்கள் பிரச்சாரக் களத்தில் இறங்கியுள்ளன. மிகவும் பலவீனமாகவும், உழைக்கும் வர்க்கத்திடையே எந்த செல்வாக்கும் இல்லாத இந்த இயக்கங்கள் பாசிசத்திற்கு எதிரான வேலைத்திட்டத்தை தாமும் முன்னெடுப்பதாகக் கூறி பாசிச பாஜகவை வீழ்த்துவோம் என்ற ஒற்றை முழக்கத்துடன் களத்தில் குதித்துள்ளனர். பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகளில் அதைத் தோல்வி அடையச் செய்வோம், அதன் மூலம் பாசிசத்தை வீழ்த்துவோம் எனக் கூறி வருகின்றனர்.
அதே சமயத்தில் பா.ஜ.க.விற்கு எதிராக நிற்கும் திமுக தலைமையில் உள்ள கூட்டணிக்கு இவர்கள் எத்தகைய கோரிக்கைகளையும் நிபந்தனையாக முன்வைக்காமல் அந்தக் கூட்டணிக்கு ஆதரவாக நிபந்தனையற்ற பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றனர். இந்த இயக்கங்கள் நிபந்தனைகளை முன்வைத்தாலும் முதலாளியக் கட்சிகளின் கூட்டணி இவர்களின் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. ஏனென்றால் அக்கட்சிகளை நிர்பந்திக்கும் அளவுக்கு இந்த இயக்கங்கள் மக்கள் பலம் வாய்ந்தவை இல்லை. அது முதலாளியக் கட்சிகளுக்கும் நன்கு தெரியும். வேண்டுமென்றால் இந்த இயக்கங்களை முதலாளியக் கட்சிகள் கறிவேப்பிலை போலப் பயன்படுத்திக் கொள்ளும்.
இந்தக் குட்டி முதலாளித்துவக் கட்சிகளின் ஆதரவை காங்கிரசோ அல்லது திமுகவோ ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பதுதான் உண்மை. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் இதே போன்று இந்தக் கட்சிகள் பாஜகவிற்கு மாற்றாக காங்கிரசு – திமுக கூட்டணியை வலிந்து ஆதரித்தன. அந்தத் தேர்தலில் தமிழகத்தில் திமுக – காங்கிரசு கூட்டணி 38 நாடாளுமன்ற இடங்களை வென்றது. கடந்த இரண்டாண்டுகளில் திமுக, காங்கிரசு அல்லது இதர கூட்டணி கட்சிகள் பாஜகவின் பாசிசப் போக்கிற்கு எதிராக எத்தகைய போராட்டங்களை முன்னெடுத்தன? ஜனநாயக உரிமைகளுக்காக இவைகளின் நாடு தழுவிய இயக்கங்கள் என்னென்ன? இதற்கெல்லாம் பதில் பூஜ்யம் தான்.
சட்டமன்ற அல்லது நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் மட்டும் பாஜகவை தோற்கடிப்பதன் மூலம் எப்படி பாசிசத்தை வீழ்த்த முடியும்? பாசிசத்திற்கு மாற்று முதலாளித்துவ அரசியல் கட்சிகளை மாற்றுவதல்ல, தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையிலான சோவியத் வடிவிலான ஆட்சியதிகாரமே மாற்றாக இருக்க முடியும்; அதற்காகத் தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், வறிய, ஏழை விவசாயிகள் ஆகியோரைப் புரட்சிகர அரசியல் தலைமையின் கீழ் ஒன்று திரட்டுவது அவசியம். அத்தகைய பணிகளே இன்றைய முதன்மையான பணியாக இருக்க வேண்டும். ஆனால் புரட்சிகர இயக்கங்கள் என்று தம்மைக் கூறிக் கொள்ளும் இந்தக் கட்சிகள் இத்தகைய முதன்மையான பணிகளைக் கைவிட்டு, முதலாளிய வர்க்கக் கட்சிகளின் வாலாக மாறி முதலாளிய வர்க்கத்திற்கே சேவை செய்து வருகின்றன. அதன் மூலம் தமது குட்டி முதலாளிய வர்க்கத்தன்மையை அம்பலப்படுத்திக் கொண்டுள்ளன.
இந்தியப் பெருமுதலாளி வர்க்கத்தின் நலனுக்காக உழைப்புச் சக்தியைத் தவிர வேறு ஏதுமற்ற பாட்டாளிகளும், சிறு உடைமையாளர்களும் கடுமையாக நசுக்கப்பட்டு வருகின்றனர். பாதிப்படைந்த சிறு முதலாளி வர்க்கங்கள் தமது இழிநிலைக்குக் காரணம் ஆட்சியில் இருக்கும் கட்சிகள் தான் எனக் கருதிக் கட்சிகளை மாற்றினால் நிலைமைகள் மாறும் எனக் கருதுகின்றன. இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போல இந்தக் கட்சிக்கு அந்தக் கட்சி பரவாயில்லை எனக் கருதுகின்றன. இந்தக் கண்ணோட்டமே பாஜகவை வீழ்த்த வேண்டும் என எழும் முழக்கமாக வெளிப்படுகின்றது. ஆனால் இந்திய அளவில் பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய இரண்டு பிரதான கட்சிகளும் பெரு முதலாளி வர்க்கத்தின் நலனுக்காக உழைக்கும் வர்க்கம் மற்றும் சிறு உடைமையாளர் வர்க்கத்தின் வாழ்வைச் சூறையாடும் கட்சிகள்தான்.
முதலாளி வர்க்கத்தின் சுரண்டல் நலனுக்காகத் தொழிலாளர் சட்டங்களை மேலும் கடுமையாக்கிப் புதிய தொழிலாளர் சட்டங்களை மோடி அரசு சர்வாதிகாரப் போக்குடன் நிறைவேற்றியது. கடந்த இரண்டு ஆண்டுகளாக மோடி அரசு தொழிலாளர் விரோதச் சட்டங்களை நிறைவேற்றும் வேலையில் ஈடுபட்டு வந்தது. தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது. இதனைக் காங்கிரசோ, திமுகவோ அல்லது தொழிலாளர்களை சங்கமாகப் பெருமளவு திரட்டியுள்ள சிபிஐ, சிபிஎம் கட்சிகளோ அம்பலப்படுத்தித் தொழிலாளர்களை அணி திரட்டிப் போராடவில்லை. தொழிலாளர்களின் உணர்ச்சிகளுக்கு வடிகாலாக பெயரளவிற்கான அடையாளப் போராட்டங்களை மட்டுமே அவ்வப்பொழுது நடத்தி வருகின்றன.
புதிய வேளாண் சட்டங்களைக் கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காக நாடாளுமன்ற விதிகளைக் கூடப் பின்பற்றாமல் அவசர அவசரமாக பா.ஜ.க. அரசு நிறைவேற்றியது. இந்த சட்டத் திருத்தங்களுக்கு எதிராகப் பஞ்சாப், ஹரியானா, உத்திரபிரதேச, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சார்ந்த இலட்சக்கணக்கான விவசாயிகள் வீரியமாக நூறு நாட்களுக்கும் மேலாகத் தலைநகர் டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவசாயிகளுக்கு ஆதரவாக, இதர மாநில விவசாயிகளை அணிதிரட்டி போராட்டத்தை வலுப்படுத்துவதற்குப் பதிலாக பெயரளவில் அடையாள ஆதரவுப் போராட்டங்களை நடத்தியதோடு சிபிஐ, சிபிஎம் கட்சிகள் நிறுத்திக் கொண்டன.
காங்கிரசும், திமுகவும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் போராட்டங்களுக்கும் தமக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லாதது போன்று உள்ளன. காங்கிரசு மற்றும் திமுகவின் இந்த நிலைப்பாடு உண்மையானதுதான், ஏனெனில், இந்தக் கட்சிகளும் ஆளும் முதலாளி வர்க்கத்தின் நலனுக்காக இதே போன்று தொழிலாளர்களையும், விவசாயிகளையும் ஒடுக்கக் கூடியவைதான். எனவேதான் இந்தக் கட்சிகள் பெயரளவிற்குக் கூட அடையாளப் போராட்டங்களை நடத்துவதில்லை. பெரும்பான்மை உழைக்கும் வர்க்கங்களான தொழிலாளர்களுக்கு விவசாயிகளுக்கு விரோதமான இந்த கட்சிகளை மாற்றாக முன்வைப்பதன் மூலம் குட்டி முதலாளித்துவ கட்சிகள் உழைக்கும் மக்களை ஏமாற்ற முயல்கின்றன.
2009 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இதே குட்டி முதலாளித்துவக் கட்சிகள் ’காங்கிரசைக் கருவறுப்போம்’ என்று தேர்தல் நேரத்தில் களமிறங்கி முழங்கின.
2009 ஆம் ஆண்டு ஈழத்தில் நடைபெற்ற சண்டையில் சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய அரசானது இராணுவ மற்றும் பொருளாதார உதவியைச் செய்திருந்தது. இந்தப் போரில் இலட்சக்கணக்கான ஈழ மக்கள் கொல்லப்பட்டனர். அப்பொழுது இந்திய அரசில் காங்கிரசு கட்சியும், தமிழகத்தில் திமுகவும் அதிகாரத்திலிருந்தன. ஈழத் தமிழர்களின் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையினால் உணர்ச்சிவசப்பட்ட இதே குட்டி முதலாளித்துவக் கட்சிகள் ’காங்கிரசைக் கருவறுப்போம்’ என முழங்கினர். காங்கிரசு – திமுக அணியை வீழ்த்துவதற்கான பிரச்சாரத்தை முன்னெடுத்தன. ஆனால் அந்த தேர்தலில் காங்கிரசு – திமுக அணியானது 27 இடங்களைக் கைப்பற்றியது. எனினும் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் இந்தக் குட்டி முதலாளித்துவக் கட்சிகளின் எந்த ஆர்ப்பரிப்புகளும் இல்லாமலேயே காங்கிரசு- திமுக கூட்டணி மக்களால் துடைத்தெறியப்பட்டது.
2009 ஆம் ஆண்டு எந்தக் காரணத்திற்காகக் காங்கிரசைக் கருவறுப்போம் என இவர்கள் முழங்கினார்களோ அந்தச் செயலை இனி காங்கிரசோ அல்லது திமுகவோ செய்யாது என்று அந்த இரண்டு கட்சிகளும் இவர்களுக்கு உறுதியளித்தனவா? அல்லது இவ்விரண்டு கட்சிகளும் அதிலிருந்து மாறிவிட்டன என இந்தக் குட்டி முதலாளித்துவக் கட்சிகள் நம்புகின்றனவா?
பொதுவாக, உழைக்கும் வர்க்கத்திற்கு எதிராக ஆட்சியதிகாரத்திலிருக்கும் கட்சிகளின் செயல்பாடுகளை அம்பலப்படுத்தித் தொழிலாளர்களையும் விவசாயிகளையும் அரசியல்படுத்தி அணித்திரட்டும் வேலையைச் செய்யாமல், அந்தக் கட்சிகளின் மீது விரக்தி மனப்பான்மையடைந்து அவர்களை நாடாளுமன்ற–சட்டமன்றத் தேர்தல் களங்களில் தோற்கடிக்கும் வேலைத்திட்டத்தை இக்கட்சிகள் முன்வைக்கின்றன. குட்டி முதலாளித்துவ கட்சிகளில் சில 2009 இல் வெளிப்படையாக அதிமுகவை ஆதரித்தன. தற்பொழுது 2021 இல் திமுகவை ஆதரிக்கின்றன. சில கட்சிகள் 2009 இல் காங்கிரசைக் கருவறுப்போம் என்று முழக்கத்தை மட்டும் முன்வைத்தன. ஆனால் மாற்று அரசியல் கட்சியைச் சுட்டிக்காட்ட முன்வரவில்லை.
அதே போன்று தற்பொழுதும் சில கட்சிகள் பாசிச பாஜகவை தோற்கடிப்போம் என முழங்குகின்றன. ஆனால் மாற்று அரசியல் கட்சி யாரையும் சுட்டவில்லை. ஏனெனில் ஒருவேளை ஆட்சியில் இருக்கும் கட்சி அதிகாரத்தை இழந்து மாற்றுக் கட்சி அதிகாரத்தை கைப்பற்றினால் (குட்டி முதலாளித்துவ கட்சிகளின் பிரச்சாரத்தினால் அல்ல) அவர்களும் இதே போன்று உழைக்கும் வர்க்கத்திற்கு விரோதமான நடைமுறைகளை கைக்கொள்ளும் என இவர்களுக்கும் தெரியும். அந்தப் பழியிலிருந்து தாம் தப்பித்துக் கொள்வதற்காக எந்தக் கட்சியை வீழ்த்த வேண்டுமென விரும்புகிறதோ, அதை மட்டும் முன்வைப்பதும் மாற்றுக் கட்சி குறித்து மவுனம் சாதிப்பதுமாக உள்ளன. இது அந்தக் கட்சிகளின் சந்தர்ப்பவாதத்தைத்தான் அம்பலப்படுத்துகின்றன. இவர்கள் ஒரு புறம் தங்களுடைய புரட்சிகர சாயம் வெளுத்து விடக் கூடாது எனக் கருதுகின்றனர்; இன்னொரு புறம் முதலாளிய வர்க்கத்தின் மீதான தங்களுடைய விசுவாசத்தையும் அவர்களால் கைவிட முடியவில்லை. புரட்சி பேசிக் கொண்டு இருக்கும் வேறு சில குட்டிமுதலாளியக் கட்சிகள் தங்களுடைய சாயம் வெளுத்தாலும் பரவாயில்லை என வெளிப்படையாகவே திமுக-தலைமையிலான கூட்டணிக்குத் தங்களுடைய ஆதரவைத் தெரிவித்துப் பிரச்சாரம் செய்து வருகின்றன.
2019 இல் இந்திய அளவில் பாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியது. அதற்குப் பின்னர் காசுமீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, குடியுரிமை திருத்தச் சட்டம், அயோத்தியில் இராமர் கோவில் கட்டுதல், ஊபா சட்டம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை, தேசியக் கல்வி கொள்கை, நிறுவனச் சட்டங்கள், வங்கிகள் ஒழுங்குமுறை எனப் பல்வேறு துறைகளிலும் சட்டங்களை அதிரடியாக திருத்தம் செய்தது. மேலும், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வை நேரடியாகச் சூறையாடும் தொழிலாளர் சட்டத் திருத்தங்கள், வேளாண் சட்டத் திருத்தங்களைக் கொண்டு வந்தன.
இந்தப் புதிய சட்டங்களை எதிர்த்துப் போராடி வரும் தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், சிறுபான்மையினர் எனப் பல்வேறு தரப்பினர் மீது பாஜக அரசு அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டு வருகின்றது. அரசின் இந்த ஜனநாயக விரோதப் போக்கு, வெகு மக்களைப் பாதிக்கும் பொருளாதார நடவடிக்கைகள் ஆகியவற்றை விமர்சனம் செய்யும் அறிவுஜீவிகள், ஜனநாயகவாதிகள், பேராசிரியர்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டு வருகின்றனர்.
பாஜகவின் இந்த ஜனநாயக விரோதப் போக்கைக் கண்டித்துத் தமிழகத்தில் பெரும்பாலான நாடாளுமன்ற இடங்களைக் கைப்பற்றிய திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் பெயரளவிற்கான எதிர்ப்புகளை மட்டும் காட்டுவதும் அல்லது மவுனம் சாதிப்பதுமாக உள்ளன. பாஜகவின் நடவடிக்கைகளைக் கண்டித்து எந்தப் போராட்டங்களிலும் அணி திரட்டல்களிலும் இந்தக் கட்சிகள் ஈடுபடவில்லை. 2019 தேர்தலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்தக் கட்சிகளை ஆதரித்த குட்டி முதலாளித்துவ கட்சிகள் திமுக+காங்கிரசு கட்சிகளைக் கடுமையான திறனாய்வு கூட செய்யவில்லை. முதலாளி வர்க்கத்தின் நலனுக்காகத் தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பாஜகவை வெறும் இந்துத்துவ கட்சியாக சித்தரித்து, அதனையே பாசிசமாக வரையறுக்கும் இந்தக் குட்டி முதலாளித்துவக் கட்சிகள் பாஜக ஆளும் முதலாளி வர்க்கத்தின் நலனுக்கானவை என்பதையோ, பெரும்பான்மை தொழிலாளர்கள் – விவசாயிகள் நலனுக்கு எதிரானவை என்பதையோ உணராமல், அந்தக் கட்சியின் முதலாளிய வர்க்க சார்பே பாசிசமாக உருவெடுக்கின்றது என்பதையும் மறுக்கின்றன.
முதலாளிய உற்பத்திமுறையில் உள்ள உள்ளார்ந்த முரண்பாடுகளே அதற்குக் காரணம். இங்குள்ள உற்பத்திமுறை மக்களுடைய தேவையின் அடிப்படையில் இல்லாமல் இலாபத்தின் அடிப்படையிலான உற்பத்திமுறையாகவும், திட்டமிடப்படாத அராஜக உற்பத்திமுறையாகவும் உள்ளது. தனது இலாபத்திற்காக உழைக்கும் மக்களைத் தொடந்து ஒட்டச் சுரண்டுவதன் மூலம் அவர்களை வறிய நிலைக்குத் தள்ளுகிறது. அவர்களால் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை அவர்களே வாங்க முடியாத நிலைக்கு அவர்களை ஓட்டாண்டியாக்குகிறது. அதன் மூலம் ஒட்டுமொத்த சமூகத்தின் வாங்கும் சக்தியை அழிக்கிறது. அதனால் சந்தை சுருங்கிப் பொருள்களை விற்க முடியாத நிலை ஏற்படுகிறது. இறுதியில் உற்பத்தி தொடர்ந்து நடைபெற இயலாமல் தேக்கமடைந்து உற்பத்தி சக்திகளை அழிக்கிறது. வேலையில்லாத பட்டாளத்தை உருவாக்குகிறது. இறுதியில் ஒட்டு மொத்த சமூகத்தின் வளர்ச்சிக்கே தடையாக மாறி விடுகிறது.
இந்த நெருக்கடிகள் முதலாளியத்தின் இருப்புக்கே ஆபத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த ஆபத்திலிருந்து முதலாளியம் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகத் தான் மக்கள் மீது பாசிசக் காட்டாட்சியைக் கட்டவிழ்த்து விடுகிறது.
பாஜகவை தேர்தல் களத்தில் வீழ்த்தி விட்டாலே பாசிசம் வீழ்ந்து விடும் என்று இந்தக் குட்டி முதலாளித்துவ கட்சிகள் கருதுகின்றன. அதற்காக மாற்று கட்சிகளை நேரடியாகவோ, மறைமுகமாகவோ முன் நிறுத்துகின்றன. அதன் மூலம் முதலாளியக் கட்சிகள் மீது உழைக்கும் மக்கள் மத்தியில் பொய்யான நம்பிக்கையை ஏற்படுத்தி வருகின்றன. உழைக்கும் மக்களுக்குத் துரோகம் செய்து வருகின்றன. பாஜகவிற்கு மாற்றாக எந்தக் கட்சிகளை இந்தக் குட்டி முதலாளித்துவக் கட்சிகள் முன்வைக்கின்றனவோ, அந்த கட்சிகள் (காங்கிரசு, திமுக உள்ளிட்டவை) பாசிச பாஜகவை வீழ்த்துவோம் எனக் கூறி இதர ஜனநாயக இயக்கங்களோடு இணைவது குறித்து எந்தக் குறிப்பான திட்டத்தையும் முன்வைக்கவில்லை. மாறாக, காங்கிரசும் திமுக போன்ற மாநில கட்சிகளும் ஆட்சிக் கட்டிலில் தாம் போய் அமர வேண்டும் என்பதையே நோக்கமாக கொண்டு இதர சிறு சிறு கட்சிகளோடு கூட்டணி பேரம் நடத்தி வருகின்றன.
தமிழகத்தில் 70க்கும் மேற்பட்ட இயக்கங்கள் ஒன்றிணைந்து மக்கள் இயக்கங்கள் என்ற பெயரில் தேர்தல் களத்தில் பாசிச பாஜகவை வீழ்த்துவோம் என்ற முழக்கத்தை முன்னெடுத்தன. இதன் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான பாலன் உள்ளிட்டோரை தமிழக அரசு ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தது. இந்தச் ஜனநாயக விரோதக் கைதைக் கூட திமுகவோ காங்கிரசோ கண்டிக்கவில்லை. கேரளத்தில் ஆட்சியிலிருக்கும் சிபிஎம் கட்சி தான் தற்பொழுது மாவோயிஸ்ட்டுகளை வேட்டையாடி வருகின்றது. மாவோயிஸ்ட் ஆதரவாளர்களை மாநில எல்லைக் கடந்து தமிழகத்தில் புகுந்து சட்டவிரோதமாக கைது செய்து வருகின்றது.
காங்கிரசு கட்சியும் இதற்குச் சளைத்ததல்ல. தண்டகாரண்ய பகுதிகளில் விவசாயிகள் மற்றும் பழங்குடி மக்களைப் பசுமை வேட்டை என்ற பெயரில் வேட்டையாடியது. விவசாய பயிர்கள் மற்றும் வீடுகளைத் தீயிட்டுக் கொளுத்துதல், போராடும் மக்களைச் சட்ட விரோதமாகக் கைது செய்தல், படுகொலை செய்தல், பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை என நர வேட்டையாடியது. பாஜகவின் மதவாத போக்கிற்குக் காங்கிரசும் துணை நிற்கிறது. அயோத்தியில் இராமர் கோவிலை கட்ட பாஜக செய்யும் முயற்சிகளுக்கு காங்கிரசும் துணை நின்றது. பாபர் மசூதி இடிப்பு போன்ற நிகழ்ச்சிகளின் போது மத்தியில் காங்கிரசு அரசுதான் ஆட்சியதிகாரத்தில் இருந்தது.
1975 ல் இந்திராகாந்தியின் தலைமையில் இருந்த காங்கிரஸ் கட்சிதான் நாட்டில் பாசிசத்தை முதன்முதலாகக் கட்டவிழ்த்து விட்டது. அதை வீழ்த்துவதற்காக “இரண்டாவது சுதந்திரப் போர்” என்ற பெயரில் காங்கிரசுக்கு எதிராக அனைத்து முதலாளியக் கட்சிகளும் ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமையில் ஒன்று சேர்ந்தன. அதில் ஜன சங்கமும் (இன்றைய பா.ஜ.க.வின் முந்தைய பெயர்), ஆர் எஸ் எஸ்சும் கூட இணைந்தன. சிபிஎம் கட்சியும் சில மார்க்சிய-லெனினியக் குழுக்களும் கூட அந்தக் கூட்டணியில் இருந்தன. அந்தக் கூட்டணி காங்கிரசின் பாசிசத்திற்கு எதிராகப் பாராளுமன்றக் கூட்டணிக்கான திட்டத்தைக் கொண்டிருந்தது. 1977ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்திராகாந்தி படு தோல்வி அடைந்தார். எதிர்க் கட்சிகள் ஆட்சி அமைத்தன. மூன்று ஆண்டுகளுக்குள் அந்தக் கூட்டணி ஆட்சி வீழ்ந்தது. ஆயினும் அந்த ஆட்சி மாற்றத்தில் ஜனசங்கமும் (பா.ஜ.க.) ஆர்எஸ்எஸும் பெரும் பயன் அடைந்தன; தமது வேரை ஆழமாகப் பதிந்து தொடர்ந்து வேகமாக வளர்ச்சி பெற்று வந்தன. அதன் விளைவைத்தான் இன்று அனுபவித்து வருகிறோம். அன்றைய நெருக்கடிக் கட்டத்தில் சரியான கம்யூனிஸ்ட் கட்சி இருந்து, சோசலிசத் திட்டத்தை முன் வைத்து, நாடாளுமன்றத்திற்குப் பதிலாக எதிராக சோவியத் வடிவ ஆட்சி அமைப்புக்கு மக்களைத் திரட்டி இருந்தால் இன்று இந்தியாவின் வரலாறே வேறு விதமாக இருந்திருக்கும்.
இந்த வரலாற்றிலிருந்து புரட்சிகர இயக்கங்கள் எனத் தங்களை அழைத்துக் கொள்ளும் சில இயக்கங்கள் எந்தப் படிப்பினைகளையும் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. மீண்டும் முதலாளிய வர்க்கக் கட்சிகளை ஆட்சியில் அமர்த்துவதன் மூலம் பாசிசத்தை வீழ்த்தி விடலாம் எனக் கருதுகின்றனர். இது அவர்களுடைய அரசியல் ஓட்டாண்டித்தனத்தையே காட்டுகிறது.
உண்மையில், பாசிசத்திற்கு முடிவு கட்ட வேண்டுமானால் முதலாளிய உற்பத்திமுறைக்குப் பதிலாக மக்களைச் சுரண்டலிலிருந்து விடுதலை செய்யும் சோசலிச உற்பத்திமுறையையும், மக்கள் அனைவருக்கும் முழுமையான ஜனநாயகத்தை வழங்கும் சோவியத் ஆட்சிமுறையையும் இங்கு நிறுவ வேண்டும். மக்களில் பெரும்பான்மையாக உள்ள தொழிலாளர்களையும் விவசாயத் தொழிலாளர்களையும், வறிய, ஏழை விவசாயிகளையும் அடிப்படையாகக் கொண்டு அனைத்து உழைக்கும் மக்களையும் முற்போக்கு ஜனநாயக சக்திகளையும் அணி திரட்டி சோசலிசத்தை நிறுவுவதன் மூலமே பாசிசத்திற்கு முடிவு கட்ட முடியும்.
சோசலிசத் தொழிலாளர் இயக்கம்
தமிழ்நாடு
Comments
Post a Comment