கற்பனைகளும் விருப்பங்களும்
அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ஜ.க. இருபது
இடங்களில் போட்டியிடுகிறது. மத வெறி பிடித்த பாசிசக் கட்சியான பா.ஜ.க.வை இங்கு கால்
ஊன்ற விடக் கூடாது என்று கூறி பல சிறு அமைப்புகள்
மக்கள் இயக்கங்கள் என்ற பெயரில் ஒன்று சேர்ந்து அக்கட்சி போட்டியிடும் இடங்களில் அதற்குக் கட்டுத் தொகை கூடக் கிடைக்கவிடாமல் தோற்கடிக்க வேண்டும்
என்று தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றன. பல சீர்திருத்தவாதக் கோரிக்கைகளை முன்வைத்து
அவற்றை ஏற்றுக் கொள்ள தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகளை மக்கள் வலியுறுத்த வேண்டும் என்கின்றன. அந்தக் கோரிக்கைகள் தமிழ் மக்கள்
எதிர்கொண்டிருக்கும் நெருக்கடிகளைத் தீர்க்கும் என்கின்றன. இவை இவர்களுடைய கற்பனைகளையும்
விருப்பங்களையும் வெளிப்படுத்துகின்றனவே தவிர அதற்கு மேல் வேறு எந்தவிதமான விளைவையும்
ஏற்படுத்தப் போவதில்லை. மேலும் இருபது இடங்களில் பா.ஜ.க. வைத் தேர்தலில் வீழ்த்தி
விடுவதன் மூலம் பாசிசத்தை தமிழ் நாட்டில் கால் ஊன்ற விடாமல் தடுத்த விடலாம் என அந்த
அமைப்புகள் கருதுகின்றன. அதே சமயத்தில் பா.ஜ.க.
வின் எடுபிடி, அடிமை என அதே அமைப்புகளால் கடுமையாக
விமர்சிக்கப்பட்டு வரும் அ.தி.மு.க. வை வீழ்த்துவது
பற்றி அவை எதுவும் கூறுவதில்லை. பா.ஜ.க. வெற்றி
பெறாவிட்டாலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றால் அது மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க.வின்
அடிமையாக, எடுபிடியாகத்தானே இங்கு ஆட்சி செய்யும்? அது பாசிசத்தின் வெற்றியாக இருக்காதா?
மக்கள் இயக்கங்கள் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள் என வெளிப்படையாகக்
கூறுவதில்லை. அவ்வாறு கூறினால் தாங்கள் இது வரையிலும் பூசி வந்த புரட்சிகர சாயம் வெளுத்து
விடும் என அஞ்சுகின்றன போலும்!
தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி பாசிச எதிர்ப்புக் கூட்டணியா?
இதுநாள் வரையிலும் தேர்தல் புறக்கணிப்பைத்
தமது புரட்சிகர நிலைப்பாடு என்று கூறி வரும் இ.பொ.க.(மா-லெ) வின் மாநில அமைப்புக் குழுவிலிருந்து
அண்மையில் பிரிந்து வந்துள்ள மருதையன் குழு கார்ப்பொரேட்-காவிப் பாசிசத்தை வீழ்த்த
தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள் என வெளிப்படையாகவே வேண்டுகோள் விடுத்துள்ளது.
தனக்கு புரட்சிகர முக்காடு இனியும் தேவையில்லை
என அது முடிவெடுத்து விட்டது போலும்!
இன்றைய மிகப் பெரும் அபாயம் பாசிசம்தான் என்றும்,
அதை வீழ்த்த வேண்டுமானால் தி.மு.க. கூட்டணிக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்றும்,
அக்கூட்டணியினால்தான் பாசிசத்தை வீழ்த்த முடியும் என்றும், அந்தக் கூட்டணிக்கு வாக்களிக்காமல்
பிற கட்சிகளுக்கு வாக்களிப்பவர்கள் அனைவரும் பாசிசத்திற்குத் துணை போகின்றவர்கள் என்றும்
மருதையன் ஒரு நேர்காணலில் கூறுகிறார். அதே சமயத்தில், பாசிசத்தைத்
தேர்தல் மூலம் வீழ்த்த முடியாது என்றாலும் தேர்தல் களத்திலும் அதை வீழ்த்த வேண்டும்
என்பதற்காகவே தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்கிறார்.
தி.மு.க. கூட்டணி பாசிசத்திற்கு எதிரானது என அவர் கருதுகிறார்.
1975ல் இந்தியாவில் முதன் முதலாகப் பாசிசத்தைக் கொண்டு வந்த கட்சியான காங்கிரஸ் அந்தக்
கூட்டணியில்தான் உள்ளது என்பதை அவர் மறந்து விட்டாரா அல்லது மறைக்கிறாரா?
1977 தேர்தலில் காங்கிரசுக்கு எதிராக எதிர்க்
கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து கூட்டணி
அமைத்து காங்கிரசை வீழ்த்தின. அந்தக் கூட்டணியில் தி.மு.க.வும் இருந்தது. ஆனால் மூன்றாண்டிற்குள்ளேயே,
1980 சட்டசபைத் தேர்தலில் எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க.வை வீழ்த்துவதற்காக, “நேருவின் திருமகளே
வருக!, நிலையான ஆட்சி தருக!” எனக் கூறித் தி.மு.க. தனது பாசிச எதிர்ப்பு வேடத்தைக்
கலைத்து விட்டு காங்கிரசுடன் உறவு கொண்டது. இதுதான் தி.மு.க.வின் பாசிச எதிர்ப்பின் இலட்சணம்!
அந்தத் தி.மு.க,.தான், அதுவும் காங்கிரசைத் தனது கூட்டணியில் கொண்டுள்ள தி.மு.க.தான் பாசிசத்தை வீழ்த்தும் என மருதையன் நம்மை நம்பச்
சொல்கிறார்.
மேலும், மோடியின் கொடூர ஆட்சியின் கீழ்
குஜராத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லீம்
மக்கள் படுகொலை செய்யப்பட்டபோது மத்தியிலிருந்த வாஜ்பாயின் அமைச்சரவையில் எந்தவிதமான
மனச் சாட்சியின் உறுத்தலுமின்றி, முணுமுணுப்பும் இன்றி, பதவியே பெரிது என்று கருதி
தி.மு.க. பங்கு கொண்டிருந்ததை மருதையன் மறக்கச் சொல்கிறார்!
ஈழப் போரில் இலட்சத்திற்கும் மேலான ஈழத் தமிழர்கள்
சிங்கள இனவெறிப் படையினரால் படுகொலை செய்யப்பட்டபோது தமிழ் நாட்டின் பதவி நாற்காலியில் உடும்பைப் போல போல ஒட்டிக் கொண்டிருந்த தி.மு.க.வின்
துரோகத்தை மருதையன் மறக்கச் சொல்கிறார்!
பாசிசத்திற்கு அடிப்படையாக இருப்பதே கார்ப்பரேட்
முதலாளிகள்தான். இப்பொழுது தி.மு.க.வும் காங்கிரசும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு எதிரானவர்களாக
மாறி விட்டனவா? பாசிச எதிர்ப்புக் கட்சிகளாக
மாறி விட்டனவா?
நாற்பதாண்டுகளாகக் கிடைக்காத அவகாசம் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றால் கிடைத்து விடுமா?
அடுத்து தமிழ் நாட்டில் பா.ஜ.க.வை வீழ்த்தி விட்டால் பாசிசம் வீழ்ந்து விடும் என மருதையன்
கருதுகிறார். மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க. எந்த நேரத்திலும் சட்டம்- ஒழுங்கு
சீர்குலைந்து விட்டது என்ற காரணத்தைக் காட்டி மாநில
அரசைக் கலைத்து விடும் என்பது அவருக்குத் தெரியாத ஒன்றல்ல. இருப்பினும் தி.மு.க. கூட்டணி
வெற்றி பெற்று விட்டால் “மூச்சு விட அவகாசம் கிடைக்கும்” (breathing space) என்றும்,
பாசிச சக்திகளுக்கு எதிராக நமது சக்திகளைப் பெருக்கிக் கொள்ள “கால அவகாசம்”
(buying time) கிடைக்கும் என்றும் அவர் கூறுகிறார்.
மேலும், ‘தி.மு.க.கூட்டணிக்கு நிபந்தனையற்ற
ஆதரவு அளிப்பது சரியா?’ என்ற கேள்விக்குப் பதில் அளிக்கும்போது ‘ நிபந்தனை விதிக்கும்
அளவிற்கு நம்மிடம் சக்தி உள்ளதா?’ எனக் கேட்கிறார். நம்மிடம் பலம் இல்லாத நிலையில்
யாருக்கும் நிபந்தனை விதிக்க முடியாது. நிபந்தனை விதித்தாலும் தி.மு.க. கூட்டணி அவற்றை
ஏற்றுக் கொள்ளாது என்பதுதான் உண்மை.
இந்த இடத்தில் நம் முன் எழும் கேள்வி என்னவென்றால்,
நாற்பதாண்டுகளுக்கும் மேலாக இயக்கம் நடத்தி, மக்களைத் திரட்டி வரும் ஒரு இயக்கத்தின் தலைமைக் குழுவில் இருந்தவர் மருதையன். இப்பொழுது
நிபந்தனை விதிக்கும் அளவுக்கு தம்மிடம் மக்கள் சக்தி இல்லை என்கிறார். இந்தப் பரிதாப
நிலைக்குக் காரணம் என்ன என்பது பற்றி அவரிடம் எந்த விதமான சுய விமர்சனம் இல்லை. நாற்பது
வருடங்களாக மக்களைத் திரட்ட முடியாத இவர்கள் தி.மு.க.கூட்டணி வெற்றி பெற்றால் கிடைக்கும்
குறுகிய கால அவகாசத்தில் மக்களைத் திரட்டி பாசிசத்திற்கு எதிரான பலத்தைப் பெற்று விடுவார்களா?
மருதையன் இது வரையிலும் இருந்த குழுவைப் பொருத்தவரையிலும்
இந்தியா அரசியல் சுதந்திரம் இல்லாத ஒரு அரை
நிலப்பிரபுத்துவ - அரைக் காலனிய நாடு; இங்கு நடத்தப்பட வேண்டியது புதிய ஜனநாயகப் புரட்சி.
இங்கு நிலப்பிரபுத்துவத்திற்கும் மக்களுக்கும் இடையிலான முரண்பாடே முதன்மையான முரண்பாடு.
இந்த முதன்மையான முரண்பாட்டை நீண்ட கால மக்கள் யுத்தம் என்ற மூல உத்தி மூலமே தீர்க்க
முடியும். ஆயுதப் போராட்டத்தின் மூலம் கிராமங்களைக் கைப்பற்றிச் செந்தளங்களை உருவாக்கி,
படிப்படியாக நகரங்களைச் சுற்றி வளைத்து இறுதியாக நாட்டை விடுதலை அடையச் செய்ய வேண்டும்
என்பதுதான் அதன் மூல உத்தி. மத்தியத்துவப்படுத்தப்பட்ட ஆட்சி நிலவாத, பல யுத்தப் பிரபுக்களின்
அதிகாரத்தின் கீழ் பல பகுதிகளாகப் பிரிந்து
கிடந்த சீனாவில் சீனக் கம்யூனிட் கட்சியால் வகுக்கப்பட்ட மூல உத்தி அது. ஆனால் அந்த
உத்தியை மத்தியத்துவப்படுத்தப்பட்ட ஒரு முதலாளிய அரசும் அதிகாரமும் நிலவும் இந்தியாவின்
பருண்மையான சூழலைக் கணக்கில் கொள்ளாது இங்கு நடைமுறைப்படுத்த விரும்புகிறது அந்தக் குழு. இந்தியாவின் பருண்மையான சூழலில் செந்தளங்களைக்
கட்டி, படிப்படியாக முன்னேறும் நடைமுறை சாத்தியமில்லை.
அதன் காரணமாக அது தனது கோட்பாட்டை நடைமுறைப்படுத்த
முடியவில்லை; கோட்பாடு ஒன்றாகவும், நடைமுறை
வேறாகவும் உள்ளது. நடைமுறைக்குப் பொருந்தாத மூல உத்தி பற்றிய கோட்பாட்டை பரிசீலனைக்குட்படுத்தி அதை மாற்றவும் அக்குழு முயற்சிக்கவில்லை.
அதன் கோட்பாடு அகநிலைவாதமாகவும் நடைமுறை சந்தர்ப்பவாதமாகவும் உள்ளது. அரசியலில் அகநிலைவாதத்தின்
காரணமாகத் தோன்றிய இடது விலகலையும், நடைமுறையில் சந்தர்ப்பவாதத்தையும், குறுங்குழுவாதத்தையும் கொண்டிருக்கும்
அந்தக் குழு நாற்பதாண்டுகளுக்கும் மேலாகக் களத்திலிருந்தாலும் மக்களைத் திரட்ட முடியாமல்
போனதில் வியப்பில்லை.
அக்குழுவிலிருந்து இப்பொழுது விலகி வந்திருக்கும்
மருதையன் குழுவின் அரசியலும் அதுதான்; ஒன்றே ஒன்றைத் தவிர. அதுதான் தேர்தலில் பங்கு
கொள்ளலாம் என்பது. அந்தப் பங்கேற்பு கூட செயலுத்தியாகத் தனித்து நின்று பங்கேற்பதல்ல.
முதலாளியக் கட்சிகளின் கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு என்ற முறையில் பங்கேற்பு. அதாவது
முதலாளியக் கட்சிகளின் வாலாக மாறுவது; அதாவது இடது சந்தர்ப்பவாதத்திலிருந்து வலது சந்தர்ப்பவாதத்திற்குத்
தாவுவது.
ஐக்கிய முன்னணி என்ற போலியான வாதம்!
மருதையன் போன்றவர்கள் பாசிசத்தை எதிர்க்க எதிரிகளுடன்
இணைவதில் தவறில்லை என்கின்றனர். தமது வலது சந்தர்ப்பவாதத்தை நியாயப்படுத்த வரலாற்றுச்
சான்றுகளை முன் வைக்கின்றனர். இரண்டாவது உலக யுத்தத்தில் பாசிச ஹிட்லரின் ஜெர்மனியை
வீழ்த்த இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்சு ஆகிய ஏகாதிபத்திய நாடுகளுடன் ஸ்டாலின் ஐக்கிய முன்னணி கட்டியதையும், சீனாவின் மீது ஜப்பானின்
ஆக்கிரமிப்பை எதிர்க்க சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சியாங் கே ஷேக்கின் கோமிண்டாங்குடன்
இணைந்து தேசிய ஐக்கிய முன்னணி கட்டியதையும் கூறி நியாயப்படுத்துகின்றனர். ஆனால் அவர்கள்
உண்மையை மறைக்கின்றனர்.
இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்சுடன் சோவியத்
ரசியா எந்தவிதமான நிபந்தனையின்றியும் உடன்பாடு கொள்ளவில்லை. ஹிட்லரின் தாக்குதலைத்
தாக்குப் பிடிக்க முடியாத அந்த ஏகாதிபத்திய நாடுகள், சோவியத்தின் உதவி இல்லாமல் அவனை
வீழ்த்த முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டன. ஹிட்லரின் வீழ்ச்சியைத் தீர்மானிக்கும்
நிலையில் சோவியத் அன்று இருந்தது. இறுதியாக சோவியத்துதான் ஹிட்லருக்கு மரண அடி கொடுத்தது.
சோவியத் அந்த யுத்தத்தில் பங்கு கொண்டதன் விளைவாகக் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிஸ்ட்
கட்சிகளின் ஆட்சி நிறுவப்பட்டது.
அதே போல சீனாவில் சியாங் கே ஷேக்குடன் கம்யூனிஸ்ட்
கட்சி இணைந்து ஜப்பானின் ஆக்கிரமிப்புக்கு எதிரான தேசிய ஐக்கிய முன்னணியைக் கட்டியபோது,
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தனது கட்டுப்பாட்டின் கீழ் பெரும் தளப் பிரதேசத்தைக் கொண்டிருந்தது.
தனக்கென செம்படையைக் கொண்டிருந்தது. சியாங்கை அவருடைய படைத் தலைவர்கள் இருவரே கைது
செய்து அவரைக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் உடன்பாட்டுக்கு வரக் கட்டாயப்படுத்தும் அளவுக்கு
கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கு இருந்தது. கூட்டணியில் கட்சி தனது சுயேச்சைத் தன்மையைத்
தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டது. ஐக்கிய முன்னணி காலத்தில் ஜப்பானை
முறியடித்ததோடு மட்டுமல்லாமல், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நாடு முழுவதும் தனது அரசியல்
செல்வாக்கை விரிபடுத்திக் கொண்டது. அது தொடர்ந்து
கம்யூனிஸ்ட் கட்சி சீனாவின் அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்க உதவியது.
இந்த உண்மைகளை மறைத்து விட்டு ஐக்கிய முன்னணி
என்ற உள்ளீடு அற்ற வெற்று முழக்கத்தை அனைத்து
இடங்களுக்கும் பொருத்தி முதலாளிய வர்க்கத்திடம் எந்தவிதமான நிபந்தனையும் இன்றித் தாம்
சரணடைவதை நியாயப்படுத்தி வருகின்றனர்.
கம்யூனிஸ்டுகள் தங்களைச் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்
முதலாளியக் கட்சிகளுக்கு நிபந்தனை விதிக்கும்
அளவுக்கு இவர்களிடம் மக்கள் பலம் இல்லை. இவர்களுடைய ஆதரவு இவர்கள் ஆதரிக்கும் கூட்டணியின்
வெற்றியையோ பாசிசத்தின் வீழ்ச்சியையோ தீர்மானிக்கப்
போவதில்லை. இவர்களுடைய நிலைப்பாட்டால் இவர்களுடைய
இயக்கங்கள் வளரப் போவதில்லை. அதற்குப் பதிலாக முதலாளியக் கட்சிகளின் வாலாக மாறி இருக்கும் இடம் தெரியாமல் போய் விடும்.
பாசிசத்திற்கு எதிராக முதலாளியக் கட்சிகளின்
கூட்டணி நிற்கும் என அவர்களை நம்புவது மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கும் கதைதான்.
அது கரை கொண்டு சேர்க்காது.
தாங்கள் பெரிய சக்தியாக இல்லாதபோது பாசிசத்திற்கு
எதிராக முதலாளியக் கட்சிகளின் கூட்டணிக்கு
வாக்களிக்கக் கூறுவதால் எந்தவிதமான பயனுமில்லை. ஏனென்றால் அதன் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கக்
கூடிய நிலையில் இவர்கள் இல்லை. இவர்கள் பெரிய
சக்தியாக இருந்தால், தேர்தலின் முடிவைத் தீர்மானிக்கக் கூடிய நிலையில் இருந்தால் இவர்களே பாசிசத்திற்கு எதிரான திட்டத்தை முன்வைத்து தேர்தலில்
நிற்கலாம். ஆனால் இன்று அந்த நிலையில் இவர்கள் இல்லை. தேர்தலில் குறிப்பிட்ட கூட்டணிக்கு
வாக்களியுங்கள் அல்லது குறிப்பிட்ட கூட்டணிக்கு
வாக்களிக்க வேண்டாம் என இவர்கள் கூறினால் அதைப் பின்பற்றக் கூடியவகையில் மக்கள் எவரும் இவர்கள் பின் அணி திரண்டிருக்கவில்லை.
இந்த நிலையில் கம்யூனிஸ்டுகள் என்று தங்களைக்
கூறி கொள்பவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் தங்களைச் சுய பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள
வேண்டும். தங்களுடைய அகநிலைவாதக் கண்ணோட்டத்திலிருந்தும் குறுங்குழுவாதத்திலிருந்தும்
விடுபட வேண்டும். மக்கள் முன் சுய விமர்சனத்துடன் தங்களுடைய கடந்த காலத் தவறுகளை ஒத்துக்
கொள்ள வேண்டும்.
இந்தியாவில் ஆளும் வர்க்கமாக இருப்பது முதலாளிய
வர்க்கம்தான் என்பதையும், இங்கு முதன்மையான முரண்பாடாக இருப்பது ஆளும் முதலாளிய வர்க்கத்திற்கும்
பாட்டாளி வர்க்கத்திற்கும் இடையில்தான் என்பதையும், இந்த முரண்பாட்டை சோசலிசப் புரட்சியின்
மூலம்தான் தீர்க்க முடியும் என்பதையும் அங்கீகரிக்க வேண்டும். அந்த நோக்கத்திற்காக உறுதியான ஐக்கியப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டுவதும்,
சரியான மூல உத்தியையும் செயல் உத்தியையும்
வகுத்து தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் விவசாயத் தொழிலாளர்களையும், வறிய, ஏழை விவசாயிகளையும்,
பிற உழைக்கும் மக்கள் அனைவரையும் அணி திரட்டுவதும்தான் இன்றைய உடனடிக்
கடமைகளாக கம்யூனிஸ்ட்டுகள் முன் உள்ளன. இந்தக்
கடமைகளை நிறைவேற்றுவது கடினமானதுதான்; நீண்ட காலம் பிடிக்கக் கூடியதுதான். அளப்பரிய
அர்ப்பணிப்பையும் கடின உழைப்பையும் கோரக் கூடியவைதான். இருப்பினும் பாசிசத்தை
நிரந்தரமாக முறியடிப்பதற்கு இதுதான் ஒரே வழி; குறுக்கு வழி வேறு எதுவுமில்லை.
-
சோசலிசத் தொழிலாளர் இயக்கம்
தமிழ் நாடு.
மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்பதை வெறும் சொல்லாடலாகவே வைத்துக்கொண்டு தொழிலாளி வர்க்கத்தின் இலக்கணமாற்றத்தையும் அந்த வர்க்கத்தைக் கட்டிப் போட்டிருக்கும் தளைகளைத் தகர்ப்பதற்கு உத்திகளை வகுக்காமலும் சோஷலிசப் புரட்சி என்ற முழக்கத்தால் மட்டும் புரட்சி நடந்துவிடுமா? உலகின் 2வது பெரிய ஐனநாயக நாடு என்று சொல்லப்படுவதில் பாசிசம் மீண்டும் மீண்டும் தலையெடுக்க முடிந்தது எப்படி? மூல காரணங்கள் தெரியும் என்றாலும் ஒதுக்கி வைத்துவிட்டு வரட்டு சித்தாந்தம் பேசி மக்களை குறிப்பாக தொழிலாளி வர்க்கத்தை அணிதிரட்டுவது எப்படி? இப்போதைய தேவை நோய்தணிக்கும் மருந்தல்ல அறுவைசிகிச்சை என்றே நினைக்கிறேன்
ReplyDelete