Skip to main content

கொரோனாவிலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டிய முழுப் பொறுப்பும் அரசுக்கும் முதலாளிய வர்க்கத்திற்கும்தான் உண்டு!

 

கொரோனாப் பெருந்தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் மக்களை வேகமாகப் பாதித்து வருகின்றது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வசதியில்லாமல் கொத்துக்கொத்தாக உயிரிழக்கும் அவல நிலை நாடெங்கிலும் தலை விரித்தாடுகிறது. அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவக் கட்டமைப்புகள் இல்லாததாலும், ஆக்சிஜனுடன் கூடிய  படுக்கைகள் போதுமான அளவு இல்லாததாலும் மருத்துவமனையின் தரைகளிலும் வளாகங்களிலும் எண்ணற்ற நோயாளிகள் மருத்துவத்திற்காகக் காத்துக் கிடக்கின்றனர். பெரும்பாலான நோயாளிகள் உரிய சிகிச்சை பெற முடியாமல் பரிதாபமாக இறந்து போகின்றனர்.

ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகள் ஆம்புலன்சுகளிலும், ஆட்டோவிலும் உட்கார்ந்து கொண்டு மருத்துவமனைகளுக்கு வெளியே   காத்துக் கிடக்கின்றனர். பெரும் தேடலுக்கும், காத்திருப்புகளுக்கும் பின்னர் சிலருக்கு மட்டுமே ஆக்சிஜன் வாயு கிடைக்கிறது. எத்தனை பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர் என்ற உண்மை விவரங்கள் மறைக்கப்படுகின்றன. மின் மயானங்களில் பிணங்கள் எரிப்பதற்காக வரிசையில் காத்துக் கிடப்பதையும், சுடுகாடுகளில் ஒரே நேரத்தில் பல பிணங்கள் கூட்டாக எரிக்கப்படுவதையும் நாள்தோறும் செய்திகளில் பார்க்க முடிகிறது. இரவும் பகலும் மரண ஓலங்கள் கேட்ட வண்ணம் உள்ளன. நம்மைச் சுற்றித் தெருக்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் ஏராளமான உயிரிழப்புகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் என நாள்தோறும் பலர் நோய்த் தொற்றினால் இறந்த செய்தி நமது காதில் விழுந்த வண்ணம் உள்ளது. ஆனால் அரசின் புள்ளி விவரங்களோ மிக சொற்பான அளவையே காட்டுகின்றன. . இந்திய அரசு இது வரையிலும் 2.5 இலட்சம் மக்கள்  கொரோனாவுக்குப் பலியாகி உள்ளனர் எனக் கூறிய போதிலும் அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகம் இந்தியாவில் இதுவரையிலும் 7.5 இலட்சம் மக்கள் இறந்துள்ளனர் என்ற அதிர்ச்சிகரமான  செய்தியை வெளியிட்டுள்ளது. .

கொரோனா  முதல் அலையின்போது ஏற்பட்ட உயிரிழப்புகள்  அந்த நோய்த்தொற்று பற்றிய புரிதல் இல்லாததால் நடந்தது என கூறிக் கொண்டாலும் கூட அதற்குப் பிறகாவது உரிய மருத்துவ கட்டமைப்புகள் மற்றும் மக்களின் வாழ்வாதாரத் தேவைகளை நிறைவேற்ற இந்திய அரசு உடனடியாகப் போதிய கவனம் செலுத்துவதில்லை, இதனால் ஏராளமான மக்கள் உயிரையும் வாழ்வாதாரத்தையும் இழந்து வருகின்றனர். மேற்கு நாடுகளில் இரண்டாம் அலைப் பரவல் மற்றும் அதன் வீரியம் குறித்து பரவலாக எச்சரிக்கை செய்யப்பட்டது; இங்குள்ள மருத்துவ அறிஞர்களும் இந்தியாவில் இரண்டாவது அலை ஏற்படும் என்று சென்ற ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மாதங்களிலிருந்தே இந்திய அரசை எச்சரித்து வந்தனர். ஆனால் இந்திய அரசோ  செவிடன் காதில் ஊதிய சங்கு போல அதனைச் சிறிதும்  சட்டை செய்யவில்லை.

இரண்டாம் அலையிலிருந்து மக்களைப் பாதுகாக்க மருத்துவக் கட்டமைப்பு வசதிகளைப் பலப்படுத்தவோ அல்லது வாழ்வாதரத்திற்குத் தேவையான அடிப்படைகளை மக்களுக்கு எடுத்து சென்று சேர்க்கவோ குறிப்பிடத்தக்க எந்த முயற்சியையும் அரசு மேற்கொள்ளவில்லை. ஐந்து மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்ற அனைத்துக் கட்சிகளும் முழு வீச்சில் செயல்பட்டன. ஆட்சியைக் கைப்பற்றுவதே அவர்களின் நோக்கமாக இருந்ததே தவிர, இரண்டாம் அலையிலிருந்து மக்களைப் பாதுகப்பாதற்கான முன்னோக்கு நடவடிக்கைகள் குறித்து எந்த முயற்சியும் இல்லை. ஆளும் கட்சியும், எதிர்க் கட்சிகளும் இதில் ஒரே மாதிரியான கண்ணோட்டத்தையே கொண்டிருந்தன.

நாட்டின் அனைத்துக் குடிமக்களுக்கும் தடுப்பூசி போடவேண்டிய நிலையில், இந்த அரசு தடுப்பூசி உற்பத்தியை அரசுடைமையாக்காமல் முதலாளிகளிடம் கையளித்து விட்டு அவர்கள் கொள்ளையடிப்பதற்கு வழிவகுத்துள்ளது. ஆக்சிஜன் மற்றும் மருந்துகள் தட்டுப்பாட்டைப் பயன்படுத்திக் கொண்டு முதலாளிகள் கள்ளச் சந்தையில் விற்பனை செய்து கொள்ளையடித்து வருகின்றனர். தனியார் மருத்துவமனை முதலாளிகளோ நிலவும் உயிர்ப் பயத்தைப் பயன்படுத்திக் கொண்டு இலட்சம் இலட்சமாக ரூபாய்களை மக்களிடமிருந்து பகற்கொள்ளை அடித்து வருகின்றனர். மக்கள் தங்களிடமிருக்கும் கொஞ்சம் நஞ்சம் சேமிப்புகளையும், அற்பச் சொத்துகளையும் அவர்களிடம் பறிகொடுத்து விட்டு ஓட்டாண்டிகளாகி வருகின்றனர்.

ஒரு புறம் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு இறப்பதும், உரிய மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் இறப்பதும் அதிகரித்து வரும் நிலையில், இன்னொரு புறம் பசியாலும், பட்டினியாலும், தற்கொலைகளாலும் மக்கள் மடிந்து வருகின்றனர்.

முதல்  அலையில் தங்களுடைய சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ள புலம் பெயர் தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் எந்த வேலையும் கிடைக்கப் பெறாமல் கிராமங்களிலேயே தங்கியுள்ளனர். இதனால் இன்று விவசாயத் துறையில் 90 இலட்சம் தொழிலாளர்கள் கூடுதலாகக் குவிந்துள்ளனர்.

ஏப்ரல் 2020 முதல் மார்ச் 2021 வரையிலான காலகட்டத்தில் அமைப்பாக்கப்பட்ட துறைகளில் பணிபுரிந்த நிரந்தர மற்றும் தற்காலிகத் தொழிலாளர்கள் 98 இலட்சம் பேர் வேலைகளை இழந்துள்ளனர். இவர்களில் 62 சதவீதம் பேர் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள், 38 சதவீதம் பேர் நகர்ப்புறத்தை சேர்ந்தவர்கள்


இரண்டாம் அலையில் சிறு நகரங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் (2021) மாதம் மட்டும் 70 இலட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். இந்தியப் பொருளாதாரத்தைக் கண்காணித்து வரும் மத்திய அமைப்பின் (CMIE) மதிப்பீடு  இரண்டாவது அலையின் காரணமாக 12 கோடி பேர் வேலை இழக்க நேரிடும்  எனக் கூறுகிறது. அதே சமயத்தில் 40 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் தள்ளப்படும் அபாயநிலை ஏற்பட்டுள்ளதாகச் சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆகஸ்டு 2019 ஐக் காட்டிலும், ஆகஸ்டு 2020 இல் மக்கள் செலவிடும் அடிப்படை உணவுப் பொருட்களுக்கான செலவானது 23 சதவீதம் குறைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 23 கோடி பேர் ஏற்கனவே பெற்ற வருவாயிலிருந்து குறைந்து தேசியக் குறைந்தபட்ச ஊதியத்தை விடக் குறைவான ஊதியத்தைப் பெறுகின்றனர் என அசிம் பிரேம்ஜி பல்கலைகழகத்தால் நடத்தப் பெற்ற ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

புலம் பெயர்த் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளதால் சிறு, குறு தொழிற்சாலைகளில் வேலை செய்வதற்கு ஆட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சிறு, குறு தொழிற்சாலைகள் பெற்றுள்ள ஒப்பந்தங்களை உரிய காலத்தில் அவற்றால் நிறைவேற்ற முடியவில்லை. ஒப்பந்த வேலை அளித்த பெரிய நிறுவனங்கள் தங்களுடைய ஒப்பந்தத்தை ரத்து செய்வது அல்லது பெரிய அளவிலான அபராதத்தை விதிப்பது என்ற போக்கைக் கையாள்கின்றன. ஒரு புறம் ஒப்பந்தங்கள் இரத்தாவதும் மறுபுறம் கடன் சுமைகளும் சிறு, குறு முதலாளிகளை அச்சுறுத்தி வருகின்றன.

தொற்றுப் பரவல் அதிகமாக உள்ள மாநிலங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டாலும், முதலாளிகள் தொழிற்சாலைகளை வழக்கம் போல் இயக்கி வருகின்றனர். அத்தியாவசியப் பொருட்களைத்  தயாரிக்கும் தொழிற்சாலைகள், ஏற்றுமதி உற்பத்தி மற்றும் தொடர் செயல்முறை தொழிற்சாலைகளுக்கு (Continuous Process Industries) விலக்கு என அரசை அறிவிக்கச் செய்து வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றன. இதனால், தொழிலாளர்கள் கொரோனா  தொற்று ஏற்பட்டு உயிரிழக்கும் அவலம் நாள்தோறும் அதிகரித்து வருகின்றது. முதலாளிகள் தங்களுடைய இலாப வெறிக்குத் தொழிலாளர்களின் உயிரைப் பலியிட்டு வருவதை இந்திய அரசும் மாநில அரசுகளும் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன.

இன்னொரு புறம், தற்காலிகத் தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள், அமைப்புசாராத் தொழிலாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள் எனப்  பெரிய அளவில் வேலை இழப்புக்கு ஆளாகியுள்ளனர். சுயதொழில் செய்பவர்கள் முழுவதுமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறுகடை நடத்துபவர்கள், சாலையோர வியாபாரிகள், சிறு, குறு வணிகர்கள், சிறு முதலாளிகள் ஆகியோர் வேலை எதுவுமின்றி வருமானத்தை இழந்துள்ளனர். அரசோ வெறும் ஆயிரம், இரண்டாயிரம் தொகையை வழங்கிக் கண் துடைப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் பொருட்கள்  போதுமானவையாக இல்லை; மேலும், அவை தரமானதாகவும் இல்லை..

எந்த விதமான வருமானமும் இல்லாத காரணத்தால், நோய்த் தொற்றிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்கான மருத்துவ வசதியைப் பெற முடியாமல் உள்ளதோடு, அன்றாடத் தேவைகளுக்கான அத்தியாவசியப் பொருட்களைக் கூட வாங்க முடியாமல் மக்கள் முடங்கிப் போயுள்ளனர். கையிலிருக்கும் சிறு சேமிப்பும் கரைந்து காணாமல் போய் விட்டது. உயிரைத் தக்க வைத்துக் கொள்வதற்குக் கடன் கூட பெற முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.  

விவசாயப் பொருட்களுக்கான கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால், விளைபொருட்கள் வாங்குவாரின்றித்  தேங்கிக் கிடக்கின்றன. இதனால் விவசாயிகள் வெளிச்சந்தையில் குறைந்தபட்ச ஆதார விலையை விடக் குறைவான விலையில் விற்க வேண்டியுள்ளது. காய்கறிகள், பழங்கள், கொள்முதல் செய்யப்பட்டுப் பிற இடங்களுக்கு எடுத்து செல்லப்படுவதில்லை. இதனால், விவசாயிகள் உற்பத்தியை அறுவடை செய்யாமல் அப்படியே விவசாய நிலத்தில் வீணாக விட்டுவிட வேண்டிய துயர நிலையில் உள்ளனர். ஆனால், நகரங்களிலோ பொருட்களின் வரத்தின்றி விலையேற்றம் அதிகமாக உள்ளது. அங்குள்ள மக்கள் அதிக விலை கொடுத்து அத்தியாவசியப் பொருட்களை வாங்க வேண்டியுள்ளது.

வேலை இழந்த தொழிலாளர்கள், வருமானம் இழந்த விவசாயிகள், சிறு உடைமையாளர்கள் எந்தவித வருவாயுமில்லாத காரணத்தாலும், கடன் பிரச்சனைகளாலும் குடும்பம் குடும்பமாகத்  தற்கொலை செய்து வருவது அதிகரித்து வருகின்றது.


தொடர்ந்து பெரும்பான்மையான  மக்கள் பெரும் தொற்றில் உயிரிழப்புகளையும், துயரங்களையும் சந்தித்துக் கொண்டிருக்கும்போது, வாழ்வாதாரத்தை இழந்து மடிந்து கொண்டிருக்கும்போது  அவர்களின் வாழ்வாதாரத்துக்கு எந்தவிதமான உதவியையும் மோடி அரசு அளிக்கவில்லை. ஆனால் அதே சமயத்தில்,   . முதல் அலையில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற பெயரில் இருபது இலட்சம் கோடி ரூபாய்களைப்  பெரும் முதலாளிகளுக்கு வாரி வழங்கியது மோடி அரசு. பெரும்பான்மையான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்த நிலையில், மக்களிடம் வாங்கும் சக்தி சிறிதும் இல்லாத நிலையில், சந்தை முற்றிலும்  முடங்கிப் போன நிலையில் பொருட்களை உற்பத்தி செய்து யாரிடம், எந்தச் சந்தையில் பெரும் முதலாளிகள் விற்பார்கள்? இங்கு முதலில் செய்யப்பட வேண்டியது மக்களின் வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதம் அளிப்பதும், அதை மேம்படுத்துவதும்தான். அதன் மூலமே மக்களிடம் வாங்கும் சக்தியை உயர்த்த முடியும். உற்பத்தியையும் மீட்டெடுக்க முடியும். ஆனால் நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு இங்கு பெரும் முதலாளிகளின் கருவூலத்தை நிரப்பியுள்ளது மோதி அரசு.

இன்று கொரோனா என்னும் பெரும்தொற்றுடன் மக்கள் போராடி வருகின்றனர். இதைத் தனித்தனிநபர்களாக, தனித்தனிக்குடும்பங்களாகப் பிரிந்து நின்று போராடி வெற்றிகொள்ள முடியாது. அவர்களிடம் அதற்கான வசதிகளும் வாழ்வாதாரமும் இல்லை. எனவே சமூகம் முழுவதும் ஒன்றிணைந்து போராட வேண்டும். இல்லாவிட்டால் அடித்தட்டு மக்களும், நடுத்தர மக்களும், சிறு உடைமையாளர்களும் பேரழிவுக்கு ஆளாவார்கள். சமூகத்தின் கணிசமான பகுதி அழிந்து போகும்.

இந்தப் போரில் மக்களைக் காப்பாற்ற வேண்டிய முழுப் பொறுப்பும் இந்த நாட்டின் அரசுக்கும் இங்குள்ள ஆளும் முதலாளிய வர்க்கத்திற்கும் உள்ளது. மக்களைக் கொரோனாப் பாதிப்பிலிருந்து காப்பாற்ற அனைத்து மருத்துவச் செலவுகளையும் அரசும் முதலாளிய வர்க்கமும் ஏற்றுக் கொள்ள வேண்டும். பெருந்தொற்றை முறியடிக்கும் வரையில் மக்களின் வாழ்வாதாரத்திற்கு அரசும் முதலாளிகளும் உத்தரவாதம் அளிக்க வேண்டும். மக்களைக் காப்பாற்ற வேண்டியது அரசு மற்றும் முதலாளிய வர்க்கத்தின் கடமை.  அவர்களிடமிருந்து மக்கள் இதை இலவசமாகக் கோரவில்லை. தங்களுக்கு  உள்ள உரிமையின் அடிப்படையில்தான் மக்கள் கோருகின்றனர்.

ஏனென்றால், இந்த நாட்டின் அரசும் அதிகார அமைப்புகளும், சேவை அமைப்புகளும் ஒட்டுமொத்த மக்களின் உழைப்பிலிருந்து கிடைத்த வரி வருவாயிலிருந்தே இயங்கி வருகின்றன. முதலாளிகளின் கைகளில் உள்ள செல்வங்கள்  அனைத்தும் அவர்களின் தனிப்பட்ட உழைப்பிலிருந்து உருவானவை அல்ல.  அவை இந்த நாட்டில் உள்ள ஒட்டுமொத்த சமூகத்தின் உழைப்பினால் உருவானவை. மக்கள் இல்லை என்றால் அரசும் இல்லை, அதிகார அமைப்புகளும் சேவை அமைப்புகளும் இல்லை, முதலாளிகளின் செல்வமும் இல்லை. எனவே அரசும் முதலாளிகளும் தங்களுடைய உடனடிக் கடமையாகக் கருதி மக்களைக் கொரோனாவிலிருந்து காப்பாற்றவும் அவர்களது வாழ்வாதாரத்தைக் காப்பாற்றவும் போர்க்காலம் போன்ற நடவடிக்கைகளில் உடனே இறங்க வேண்டும். இந்தக் கடமையிலிருந்து தவறினால் இந்த அரசும் ஆளும் முதலாளிய வர்க்கமும் கடுமையான பின்விளைவுகளை விரைவில் எதிர்கொள்ள நேரிடும்; மக்கள் அவர்களுக்கு மறக்க முடியாத பாடத்தைப் புகட்டுவார்கள்.   

 

சோசலிசத் தொழிலாளர் இயக்கம்

தமிழ்நாடு

Comments

Popular posts from this blog

சாம்சங் தொழிலாளர் போராட்டம்: தலைமைக்கு வெற்றி - தொழிலாளர்களுக்கு பின்னடைவு

  தொழிற்சங்க அங்கீகாரத்தை முதன்மைக் கோரிக்கையாகவும் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் 37 நாட்களுக்கும் மேலாக வேலைநிறுத்தம் செய்து வந்த ‘ சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் ’ போராட்டம் , அது முன்வைத்த கோரிக்கைகளில் எதுவும் நிறைவேற்றப்படாமலேயே 15.10.2024 அன்று முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.   போராட்டங்கள் எப்பொழுதும் வெற்றியை மட்டுமே தருவதில்லை , வெற்றி மற்றும் தோல்வி இரண்டுமே மாறி மாறி வரக்கூடியதுதான் போராட்டக்களம். சில நேரங்களில் பெரும் இழப்புகளோடு கூட போராட்டக் களத்திலிருந்து பின்வாங்க வேண்டிய சூழல் ஏற்படும் , அந்தச் சூழலை உணர்ந்து போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டிய தேவையும் ஏற்படும். இதில் ஏற்பட்ட அனுபவத்தைத் தொகுத்துக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதற்கான படிப்பினையை இது கொடுக்கும். ஆனால் , போராட்டத்தின் போக்கு தொழிலாளர்களின் நலனை முன்னிறுத்தாமல் , ஏமாற்றும் போக்கைக் கைக்கொள்ளும் பொழுது அது ஒட்டுமொத்தத் தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்கே எதிராகக் கொண்டு போய் விடுகின்றது.   சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்திற்குத் தலைமை கொடுத்

வேலை பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் என்னும் நிறுவனம் ஒசூர் பகுதியில் 1998 முதல் செயல்பட்டு வருகின்றது . இது வெள்ளீயத்தால் ( தகரத்தால் ) ஆன கொள்கலன்களை , தகரக்குவளைகளை உற்பத்தி செய்கின்றது . இந்த ஆலையின் முதலாளி இந்தியாவை பூர்வீமாக கொண்டவராக இருந்தாலும் , தற்பொழுது கென்யாவில் வசித்து வருகின்றார் . தொடக்கம் முதலே இந்த ஆலையானது தொழிலாளர்களின் உழைப்பை வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்து வருகின்றது . வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் நீண்டநாட்கள் பணிபுரிந்து வந்தாலும் அவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யாமலும் , நியாயமான ஊதியம் வழங்காமலும் தொழிலாளர்களை வஞ்சித்து வந்தது . தொழிலாளர்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து 52 தொழிலாளர்கள் மட்டும் நிரந்தரம் செய்யப்பட்டனர் . இவர்களும் ஆறு வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் , பயிற்சித் தொழிலாளர்கள் என மாற்றிமாற்றி அவர்களை வகைபடுத்தி பின்னரே நிரந்தரம் செய்யப்பட்டனர் . அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைக்கப்பட்டுச் சுரண்டப்பட்டு வருகின்றனர் . தற்பொழுது வரை 450 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்பட

பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் சீர்த்திருத்தவாதத்தில் வீழ்ந்துள்ள இடதுசாரி இயக்கங்கள்

இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இடதுசாரிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் சில அமைப்புகளின் போக்குகள் அவர்களின் சீர்த்திருத்தவாதக் கண்ணோட்டத்தை அம்பலபடுத்தி வருகின்றன. நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த காங்கிரசு கட்சி இந்திய முதலாளி வர்க்கத்தின் வளர்ச்சிக்கும் சுரண்டலுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்தும் , பெரும் மூலதனம் தேவைப்படும் கனரகத் தொழில்களை மக்களுடைய வரிப் பணத்திலிருந்து அமைத்துக் கொடுத்தும், ஆரம்பக் கட்டத்தில் பன்னாட்டு மூலதனங்களின் போட்டியிலிருந்து அவர்களைப் பாதுகாத்தும் , பின்னர் இந்திய முதலாளிகள் சர்வதேச அளவில் சந்தையைப் பிடிக்கவும் , முதலீடு செய்யவும் உலகமயமாக்கல் கொள்கையை முன்னெடுத்தும் தொடர்ந்து சேவை செய்து வந்தது. அதே நேரத்தில் தொழிலாளர்களின் நலனுக்காகவும் , விவசாயிகளின் நலனுக்காகவும் , ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும் போராடிய இடதுசாரிகள் , ஜனநாயக அமைப்புகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி ஒடுக்கி வந்தது. வீரம் செறிந்த தெலுங்கானா மக்களின்