Skip to main content

நீட் (NEET) தேர்வை ஒழித்து விட்டால் அடித்தட்டு ஏழை மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி கிடைத்து விடுமா?

தமிழகத்தில் நீட் (NEET) நுழைவுத் தேர்வு இரத்து செய்வது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.இராசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. நீட் நுழைவுத் தேர்வின் காரணமாக தமிழக மாணவர்கள் மருத்துவப் படிப்பைப் பெறமுடியாமல் பாதிக்கப்பட்டு வருவதாகவும், நீட் தேர்வை ஒழித்துக்கட்டி தமிழக மாணவர்களுக்கு மருத்துவம் பயில்வதற்கான வாய்ப்புகளை மீட்டெடுக்கவேண்டும் என்றும் பிரச்சாரங்கள் முதலாளித்துவக்கட்சிகளாலும், முற்போக்காளர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் சிலராலும் தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றன.

நீட் நுழைவுத் தேர்விற்குப் பிறகு  தமிழக மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதில் என்ன விதமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன? அதற்கு முன்பு நிலைமை எப்படி இருந்தது? அதனுடைய அடிப்படையான காரணங்கள் என்னென்ன என்பதனைப் பற்றி எந்தவிதப் புரிதலும் இல்லாமல் நீட் தேர்வு தமிழக மாணவர்களை வஞ்சிக்கிறது எனக் கூறி மாணவர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது.

வசதி படைத்தவர்களுக்கே மருத்துவக் கல்வி!

நீட் தேர்வு மட்டுமல்லாமல், இதற்கு முன்பான தேர்வு முறையும் கூட தனியார் பள்ளிகளில் படித்த, வசதி படைத்த  தமிழக மாணவர்கள் மட்டுமே பயன்பெறும் வகையில்தான் இருந்தது. 2017 நீட் தேர்வு நடைமுறைக்கு வருவதற்கு முன்னர், தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களே பன்னிரெண்டாம் வகுப்பில் அதிகளவில் மதிப்பெண்கள் பெற்று பெருமளவிலான மருத்துவ இடங்களைக் கைப்பற்றினர்.

    பள்ளிக் கல்வியில் தனியார்மயம் விரிவடைந்த பிறகு அரசு மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் பெயர்பெற்ற தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களை தனியார் பள்ளிகளில் பல ஆயிரம் ரூபாய் செலவழித்துப் படிக்கக்கூடிய மேல்தட்டு மற்றும் நடுத்தர வகுப்பைச் சார்ந்த மாணவர்களே பெற முடிந்தது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் அடித்தட்டு வகுப்பைச் சார்ந்த மக்கள் சொற்பமான எண்ணிக்கையில் மட்டுமே உள்ளே நுழைய முடிந்தது.  இராசிபுரம், நாமக்கல், திருச்செங்கோடு பகுதிகளில் இத்தகைய தனியார் பள்ளிகள் மிகவும் பிரபலமாக இருந்தன. மேலும், தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகள் ஈடுகொடுக்கமுடியாததால் இதுபோன்ற உயர்கல்வி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களின்  எண்ணிக்கை தொடர்ச்சியாகக் குறைந்து வருகிறது.

2006 லிருந்து 2016 ஆம் ஆண்டு வரையிலான பத்து வருட காலத்தில் வெறும் 213 அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமே அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தனர். இது ஒரு வருடத்திற்கானது அல்ல, பத்து வருடத்திற்கானது. அதாவது அந்த பத்து  வருடத்தில் மொத்தம் 29,225 மாணவர்கள் மருத்துவப்படிப்பில் சேர்க்கப்பட்டனர், இவற்றில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே (0.7 சதவீதம்) அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம்  கிடைத்தது. அதே போன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மொத்தமுள்ள 6132 இடங்களில் 65 அரசுப் பள்ளிமாணவர்கள் மட்டுமே (1.1 சதவீதம்) சேர்ந்தனர். ஆனால் நீட் தேர்வை எதிர்ப்பதாகக் கூறிக் கொள்பவர்கள், இதற்கு முன்னர் அரசுப் பள்ளியில் பயிலும் அடித்தட்டு ஏழை மக்கள்  மருத்துவப் படிப்பில் அதிகளவில்  சேர்ந்ததுபோலவும், அது தற்பொழுது பறிக்கப்பட்டு வருவது போலவும் போலியான பிம்பத்தை  உருவாக்குகின்றனர்.

உயர், நடுத்தர வர்க்க மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு!

நீட் தேர்வானது சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுவதால், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் மட்டுமே இந்தத் தேர்வை எதிர்கொண்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர முடிந்தது.  தமிழக அரசின் சமச்சீர் கல்வியைப் பின்பற்றும் தனியார் பள்ளி மாணவர்களின் பாடத்திட்டம் போதுமானதாக இல்லாததால் அவர்கள் இதனை எதிர்கொள்ள முடியவில்லை. அதனால் தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் கடந்த காலத்தைப் போல அதிக அளவில் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியவில்லை

2016 ஆம் ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்வியில் சேர்க்கை நடைபெற்றபொழுது நாமக்கல் மாவட்டத்தில் படித்த 957 மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர்.  இவர்கள் அனைவரும் அந்த மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் பெரும் செலவு செய்து படித்தவர்கள். ஆனால் அடுத்த ஆண்டு 2017 இல் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டபொழுது மருத்துவப் படிப்பில்  சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 109 ஆகக் குறைந்தது. ஏனெனில் தனியார்பள்ளியில் படித்தாலும் நீட் தேர்வானது சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் அமைந்திருந்ததால் மாணவர்கள் இதனை எதிர்கொள்ள முடியவில்லை. நீட் தேர்வினால் பலன் பெற்றது சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைக் கொண்ட தனியார் பள்ளி மாணவர்கள்தான்.

திடீரென நடைபெற்ற இந்த மாற்றத்தினால் தமிழக அரசின் பாடத்திட்டத்தின் கீழ் தனியார்பள்ளிகளில் பயின்று வந்த நடுத்தர, மேல்வகுப்பைச் சார்ந்த மாணவர்கள் பெரும்  பாதிப்படைந்தனர். நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து மருத்துவக்  கல்லூரியில் சேர வேண்டுமானால் பெரும் செலவு செய்து நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்களில் சேர வேண்டும். தற்பொழுது அனைத்து தனியார் பள்ளிகளும் நீட் பயிற்சி வகுப்பு என்ற பெயரில் கட்டணம் வசூல் செய்து கூடுதல் கொள்ளையடித்து வருகின்றன; பல தனியார் பள்ளிகள்  சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்குத் தங்களை மாற்றிக் கொண்டன.  தனியார் பள்ளிகளில் ஆயிரக்கணக்கில் செலவழித்து படித்துவந்த மாணவர்கள் தற்பொழுது நீட் பயிற்சி மையங்களுக்காகவும் செலவழிக்க வேண்டும்.  தங்கள் பிள்ளைகளை மருத்துவர்களாக்கி விட்டால் சமூக வாழ்வில் உயர்ந்த இடத்தை  அடைந்து விடலாம் என்று கருதி வரும் உயர் நடுத்தர வர்க்கத்திற்கும் நடுத்தர வர்க்கத்திற்கும்  இந்தச் செலவுகள் பெரும் சுமையாகி விட்டது. நீட் தேர்வு அவர்களுடைய கனவைச் சிதைத்து விட்டது. அதன் காரணமாகவே அவர்கள் கடுமையாக நீட் தேர்வை எதிர்த்து வருகின்றனர்.

மற்றபடி, அவர்களுடைய கோரிக்கையில் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களின் நலன்கள் எதுவுமில்லை. பொத்தாம் பொதுவாக தமிழக மாணவர்களுக்கான பிரச்சனை என்ற பெயரில் மேல்தட்டு மற்றும் நடுத்தரவகுப்பைச் சார்ந்தமாணவர்களின் நலன்கள்தான் முன்வைக்கப்படுகின்றன.  ஆனால்,  நீட் தேர்வினால் அடித்தட்டு மாணவர்களும்  கிராமப்புறமாணவர்களும் பாதிக்கப்படுவதாகக் கூறி தமிழ் நாட்டிலுள்ள அனைத்து மாணவர்களின்  பிரச்சினையாக அதைக் கூறி வருகின்றனர். அதன் மூலம் அடித்தட்டு வர்க்கங்களைச் சேர்ந்த மாணவர்களின் பிரச்சனைகளை வெளியே தெரியாமல் மூடி மறைக்கப் பார்க்கின்றனர்.

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் நிலைமை!

உண்மையில்,  அரசு பள்ளிகளில் அதிகம் படிப்பவர்கள் கீழ் நடுத்தர வர்க்க மேலும்  அடித்தட்டு மக்களைச் சேர்ந்த, தொழிலாளர்கள் மற்றும்  ஏழை விவசாயிகளின் குழந்தைகள்தான். தமிழ் நாட்டில் படிக்கும் மாணவர்களில் இவர்கள்தான் மிகப் பெரும்பான்மையினர். ஆனால் இவர்களில்  எத்தனை பேர் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடிகிறது? மேலே சுட்டிக் காட்டப்பட்ட ஒரு புள்ளி விவரப்படி, பத்தாண்டுகளில் அரசு பள்ளிகளில் படித்தவர்களில் 0.7% தான் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.  இதுதான் அரசு பள்ளிகளில் படிக்கும் அடித்தட்டு மாணவர்களின் நிலைமை. ஆனால் அரசு மருத்துவக் கல்லூரிகள் அனைத்தும் பெரும்பான்மையாக இருக்கும் உழைக்கும் மக்களின் வரிப் பணத்தில்தான் இயங்கி வருகின்றன. ஆனால் அவர்களுடைய குழந்தைகளுக்கு அவற்றில் சேர முடிவதில்லை. ஆனால் தனியார் பள்ளிகளில் இலட்சக்கணக்கில் செலவு செய்து படிக்கும் செல்வந்தர்களின் குழந்தைகள் நீட் போன்ற தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் குறைந்த செலவில் படிக்க முடிகிறது. இதுதான் நிலைமை. இந்த அரசின் கொள்கைகள் அதற்குச் சாதகமாகவே  இருக்கின்றன.

கடந்த தேர்தலுக்கு முன்பு அவசர அவசரமாக, தேர்தலில் மக்களின் வாக்குகளைப் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அ.தி.மு.க. அரசு, அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% விழுக்காடு இடங்களை ஒதுக்கி அரசு ஆணை பிறப்பித்தது.  ஆனால் அரசுப் பள்ளிகளில் படிக்கும் பல இலட்சம் மாணவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது இது வெறும் கண் துடைப்புத்தான் என்பது நன்கு விளங்கும்

‘நீட்’ தேர்வினால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அதனால் ‘நீட்’ ட்டை எதிர்க்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். கடந்த கால வரலாற்றைப் பார்த்த்தால் அது உண்மை இல்லை என்று தெரியும். கடந்த காலங்களிலும்  கிராமப்புறப் பகுதி மாணவர்களுக்கு மிகவும் குறைவான அளவே மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளன.

‘நீட்’ தேர்வு இருந்தாலும் இல்லாவிட்டாலும் எப்பொழுதும்  உண்மையில் பாதிப்புக்கு உள்ளாகி வரும்  மாணவர்கள் கிராமப் புறத்தைச் சார்ந்த ஏழை, கூலி விவசாயிகள், தொழிலாளர்கள்,  நடுத்தர, கீழ் நடுத்தர  வர்க்கங்களைச் சேர்ந்தவர்களும், நகர்ப்புறத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், நடுத்தர மற்றும் கீழ் நடுத்தர வர்க்கங்களைச் சேர்ந்தவர்களும்தான்.

தலித் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் ‘நீட்’ தேர்வினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் அதை ஒழிக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. உண்மை என்னவென்றால், தலித்துகள்தான் பெரும்பான்மை அளவில் ஏழை மற்றும் கூலி விவசாயிகளாகவும், தொழிலாளர்களாகவும் இங்கு இருக்கின்றனர். அவர்களின் குழந்தைகள் அடிப்படைப் பள்ளிப் படிப்பைக் கூடப் பெற முடிவதில்லை. பள்ளிகளில் சேரும் குழந்தைகள் பள்ளிப் படிப்பையே இடையில் விட்டுவிடும் அவலம்தான் அவர்களைப் பொறுத்து இன்றும் நிலவி வருகிறது. தலித்துகள் மட்டும் அல்லாமல் மற்ற சாதிகளைச் சேர்ந்த கூலி, ஏழை விவசாயிகள் மற்றும் தொழிலாளர் வீட்டுக் குழந்தைகளின் நிலைமையும் இதுதான். பள்ளிப் படிப்பே இன்னும் அவர்களுக்குக் கனவாக இருக்கும்போது கல்லூரிப் படிப்பைப் பற்றி அவர்களால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. இந்த நிலையில் மருத்துவப் படிப்பைப் பற்றிக் கூறவே தேவையில்லை.

    உண்மையில், இந்த நாட்டில் பெரும்பானமையாக உள்ள உழைக்கும் மக்களே இந்த நாட்டின் அனைத்து வளங்களுக்கும் காரணமாக இருக்கின்றனர். இங்குள்ள அரசு நிர்வாகங்களும், நீதிமன்றங்களும், கல்விக் கூடங்களும், மருத்துவமனைகளும்  இவர்கள் உழைப்பினால் உருவாகும் செல்வத்திலிருந்தும் நிதி ஆதாரத்திலிருந்துமே செயல்பட்டு வருகின்றன. ஆனால் அவர்களின் வீட்டுக் குழந்தைகளால் இந்த அமைப்பில் அடிப்படைக் கல்வி கூடப் பெற முடிவதில்லை.

கல்வி வணிகம் ஒழிக்கப்பட வேண்டும்!

கல்வி இங்கு கொள்ளை இலாபம் அடிக்கும் வணிகமாக மாற்றப்பட்டுள்ளது. வசதிபடைத்தவர்களும், செல்வந்தர்களும், முதலாளிகளுமே இங்கு உயர் கல்வி பெற முடியும். பணக்காரர்களுக்கு ஒரு கல்வி, ஏழைகளுக்கு ஒரு கல்வி. இந்த ஏற்றத் தாழ்வு நீடிக்கும் வரை ஏழை வீட்டுக் குழந்தைகள் பணக்கார வீட்டுக் குழந்தைகளுடன் போட்டியிட்டு வெற்றி பெற இயலாது.

    இந்த நிலையில்,  ‘நீட்’டை ஒழிப்போம் என்ற ஒற்றை முழக்கம் மட்டும் அனைத்து மக்களுக்கும் கல்வியையோ, வாழ்க்கையையோ தராது. ஏனென்றால் ‘நீட்’ தேர்வு பள்ளிப் படிப்பை முடித்துக் மருத்துவக் கல்லூரியில் சேர விரும்புவர்களுக்கு  மட்டுமே  இன்று தடையாக உள்ளது. மாறாக, இங்கு கோடிக்கணக்கான மக்கள் அடிப்படைக் கல்வி கூடப் பெற இயலாத நிலையில் இருக்கின்றனர். எனவே அனைவரும் கல்வியும் வாழ்க்கையும் பெற வேண்டுமானால், கல்வித் துறையில் இருந்து தனியார்கள் வெளியேற்றப்பட வேண்டும், கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும், அனைவருக்கும் கல்வி அளிக்கும் பொறுப்பை அரசே எடுத்துக் கொள்ள வேண்டும், அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான கல்வியை அரசு அளிக்க வேண்டும், பள்ளிக் கல்வி முதல் உயர் படிப்பு வரை கல்வி இலவசமாக அளிக்கப்பட வேண்டும், பயிற்று மொழியாக அவரவர்களின் தாய் மொழியே இருக்க வேண்டும்.  இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கூறி அனைத்து மக்களும் அணி திரள வேண்டும்.  அதன் வெற்றியே ‘நீட்’டுக்கும் முடிவு கட்டும்! அனைவருக்கும் கல்வியையும் வாழ்க்கையையும் அளிக்கும்!

 

சோசலிசத் தொழிலாளர் இயக்கம்

தமிழ்நாடு

Comments

Popular posts from this blog

தொழிலாளர் ஊதியங்கள் ஏன் எப்போதும் மிகவும் குறைவாகவே இருக்கின்றன?

  உங்கள் உழைப்புக்கு ஏற்ற மதிப்புக் கிடைப்பதில்லை , உங்களுக்குக் கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பை விடப் பலமடங்கு உழைத்திருப்பதாக எப்போதாவது நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா ? கார்ல் மார்க்ஸ் உங்களைப் புரிந்துகொள்கிறார் . ஒட்டுமொத்தத் தொழிலாளர் வர்க்கமும் முதலாளித்துவ வர்க்கத்தால் சுரண்டப்படுகிறது என்று அவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் வாதிட்டார் . இது வெறும் மிகைப்படுத்தல் கூற்று அல்ல , மாறாக ஒரு பொருளாதார உண்மையாகும் . தொழிலாளர்கள் உருவாக்கும் மதிப்பின் ஒரு பகுதியைத் திட்டமிட்ட முறையில் திருடுவதன் மூலம் மிகுதியான செல்வத்தைக் குவிப்பதே   முதலாளித்துவத் தொழில்நிறுவனத்தின் முழுமையான நோக்கமாகும் . இந்தச் செயல்முறையே சுரண்டல் என்று குறிப்பிடப்படுகிறது . தொழிலாளர்களுக்கு அவர்களுடைய தகுதிக்குரிய ஊதியம் அளிக்கப்படுகிறது என்று முதன்மைப்போக்கு பொருளியலாளர்கள் கூறிக்கொள்கின்றனர் . தொழிலாளர்களின் ஊதியங்கள் அவர்களால் உற்பத்திப் பொருளுக்கு “ கூட்டப்படும் மதிப்பை ” குறிக்கின்றன தூரத்து நாடுகளில் பழிபாவத்திற்கு அஞ்சாத முதலாளிகள்

பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் சீர்த்திருத்தவாதத்தில் வீழ்ந்துள்ள இடதுசாரி இயக்கங்கள்

இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இடதுசாரிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் சில அமைப்புகளின் போக்குகள் அவர்களின் சீர்த்திருத்தவாதக் கண்ணோட்டத்தை அம்பலபடுத்தி வருகின்றன. நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த காங்கிரசு கட்சி இந்திய முதலாளி வர்க்கத்தின் வளர்ச்சிக்கும் சுரண்டலுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்தும் , பெரும் மூலதனம் தேவைப்படும் கனரகத் தொழில்களை மக்களுடைய வரிப் பணத்திலிருந்து அமைத்துக் கொடுத்தும், ஆரம்பக் கட்டத்தில் பன்னாட்டு மூலதனங்களின் போட்டியிலிருந்து அவர்களைப் பாதுகாத்தும் , பின்னர் இந்திய முதலாளிகள் சர்வதேச அளவில் சந்தையைப் பிடிக்கவும் , முதலீடு செய்யவும் உலகமயமாக்கல் கொள்கையை முன்னெடுத்தும் தொடர்ந்து சேவை செய்து வந்தது. அதே நேரத்தில் தொழிலாளர்களின் நலனுக்காகவும் , விவசாயிகளின் நலனுக்காகவும் , ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும் போராடிய இடதுசாரிகள் , ஜனநாயக அமைப்புகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி ஒடுக்கி வந்தது. வீரம் செறிந்த தெலுங்கானா மக்களின்

வேலை பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் என்னும் நிறுவனம் ஒசூர் பகுதியில் 1998 முதல் செயல்பட்டு வருகின்றது . இது வெள்ளீயத்தால் ( தகரத்தால் ) ஆன கொள்கலன்களை , தகரக்குவளைகளை உற்பத்தி செய்கின்றது . இந்த ஆலையின் முதலாளி இந்தியாவை பூர்வீமாக கொண்டவராக இருந்தாலும் , தற்பொழுது கென்யாவில் வசித்து வருகின்றார் . தொடக்கம் முதலே இந்த ஆலையானது தொழிலாளர்களின் உழைப்பை வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்து வருகின்றது . வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் நீண்டநாட்கள் பணிபுரிந்து வந்தாலும் அவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யாமலும் , நியாயமான ஊதியம் வழங்காமலும் தொழிலாளர்களை வஞ்சித்து வந்தது . தொழிலாளர்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து 52 தொழிலாளர்கள் மட்டும் நிரந்தரம் செய்யப்பட்டனர் . இவர்களும் ஆறு வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் , பயிற்சித் தொழிலாளர்கள் என மாற்றிமாற்றி அவர்களை வகைபடுத்தி பின்னரே நிரந்தரம் செய்யப்பட்டனர் . அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைக்கப்பட்டுச் சுரண்டப்பட்டு வருகின்றனர் . தற்பொழுது வரை 450 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்பட