Skip to main content

தொழிலாளர்களை கொத்தடிமைகளாக்கும் கிக் (GIG) பொருளாதாரம்!

கிக்(GIG) பொருளாதாரம் என்பது குறுகிய கால, நிச்சயமற்ற தன்மையதான வேலைப் பிரிவினையை அடிப்படையாகக் கொண்டது. குறுகிய காலத்திற்கு மட்டுமே பணிக்கு அமர்த்தி, தான் விரும்பும் பொழுது அமர்த்தவும், துரத்தவும் (HIRE and FIRE) கூடிய நிரந்தரத் தன்மையற்ற வேலைமுறையைக் கொண்டு தொழிலாளர்களை வரைமுறையின்றிச் சுரண்டக் கட்டமைக்கப்பட்டு வரும் இந்த வேலை முறை இன்று பரவலாக அதிகரித்து வருகிறது. கிக் வேலைமுறையில் இருக்கும் வேலைகள் தற்காலிகமானவையோ, பருவகாலங்களைச் சார்ந்ததோ அல்ல, தொடர்ச்சியான வேலைகளை அளிக்கும் சாத்தியங்களைக் கொண்டவையாகும். வேலைகள் நீடித்த தன்மையைக் கொண்டதாக இருந்தாலும், அதில் பணியாற்றும் தொழிலாளர்கள் தற்காலிக நிலையிலேயே வைக்கப்பட்டு சுரண்டப்படுகின்றனர்

இந்த வேலை முறையில் வேலை நேரமானது மிக குறுகியதாகவோ அல்லது மிக நீண்டதாகவோ இருக்கக் கூடும். இது வேலையின் அளவு அடிப்படையில் ஊதிய முறையைக் கொண்டுள்ளது. எனினும் வேலையானது தொடர்ச்சியாகக் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. முதலாளிகள் வேலை வழங்கும்பொழுது முடித்துத் தர வேண்டும், மற்ற நேரங்களில் வேலைக்காகக் காத்திருக்க வேண்டும். இந்தக் காத்திருப்புக் காலத்திற்கு எந்தவித ஊதியமும் கிடையாது. சில நேரங்களில் நீண்ட நேரம் காத்திருந்தாலும் வேலை தரப்படுவதில்லை. இதனால், கிக் தொழிலாளி வெறுங்கையோடு வீடு திரும்ப நேரிடுகிறது.

கிக் வேலைமுறையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் தொழிலாளர்கள் முதலாளிகளிடம் தானே ஒப்பந்ததாரராகச் செயல்படுகிறார். இதன் மூலம் இருவரும் ஓர் ஒப்பந்த அடிப்படையில் வேலை மற்றும் அதற்கான கூலி ஆகியவற்றை முடிவு செய்து கொள்கின்றனர். இது பார்ப்பதற்கு பரஸ்பர ஒப்பந்தம் போலத் தோன்றினாலும், தொழிலாளர்கள் முதலாளிகளிடம் எந்தவிதமான நிபந்தனையும் விதிக்க முடியாது.

உழைப்புச் சந்தையில் வேலையில்லாத பட்டாளம் பெரும் அளவில் இருப்பதால், மிக மிகக் குறைந்த கூலிக்குப் போட்டி போட்டுக் கொண்டு வேலை செய்யத் தொழிலாளர்கள் தயராக உள்ளனர். இதனால், முதலாளிகள் விதிக்கும் நிபந்தனைகளை வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொள்ளும் நிலைக்குத் தொழிலாளர்கள் தள்ளப்படுகின்றனர். இந்த ஒப்பந்தத்தில் தொழிலாளர்கள் எந்தத் திருத்தத்தையும் கோர முடியாது. ஒரு பக்கத்தில் பார்க்கப் போனால் இது கொத்தடிமை முறையின் இன்னொரு முகமாக உள்ளது.

ஒப்பந்தத்தில் ஈடுபடும் இரண்டு தரப்பாளர்களான முதலாளியும் தொழிலாளியும் சம உரிமை பெற்றவர்கள் போன்று தோற்றம் காட்டினாலும், அது முழுக்க முழுக்க முதலாளிகளுக்கான உரிமையை மட்டுமே கொண்டுள்ளது. ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் சரத்துக்களை முதலாளி மீறினால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. ஒப்பந்தத்தை ஒருதலைபட்சமாக திருத்திக் கொள்ளவோ, ரத்து செய்யவோ முழு அதிகாரம் பெற்றவராக முதலாளி எப்பொழுதும் இருக்கிறார். எல்லாத் துறைகளிலும் தொழிலாளர்கள் எப்படி சட்ட ரீதியாக ஏட்டளவில் உரிமை பெற்றிருந்தாலும் அதனைச் செயல்படுத்த முடியாதோ, அதேப் போன்று தான் இந்தத் துறையிலும் தொழிலாளர்கள் தங்கள் சட்டபடியான உரிமையைப் பெற முதலாளிகளை அரசு இயந்திரங்கள் நிர்பந்தம் செய்யாது.

கிக் வேலை முறையானது தொடர்ச்சியான வேலைகளையோ (நீண்ட காலத்திற்கு) அல்லது நிச்சயமான வருவாயையோ தரக் கூடியதல்ல என்பதால் இதில் உள்ளத் தொழிலாளர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தைப் பாதுகாத்துக் கொள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகளில் ஈடுபட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் பிடித்தமான வேலையைச் செய்வதற்கான சுதந்திரம், வேலை நேரத்தை தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரம், ஆகியவை உள்ளது போன்று தோன்றினாலும், வேலையையும், வேலை நேரத்தையும் முதலாளிகளே நிர்ணயம் செய்ய முடியும். தொழிலை தேர்வு செய்வதற்கான தொழிலாளர்களின் சுதந்திரம் என முதலாளி வர்க்கம் கவர்ச்சிகரமாக பேசினாலும், முதலாளியின் கீழ் கூலியடிமையாக இருப்பதற்கான சுதந்திரமாகவே அது தொடர்கின்றது. இந்தப் பூச்சுகள் எல்லாம் முதலாளித்துவத்தின் சுரண்டலை மறைப்பதற்கான அலங்கார பூச்சாகத் தான் உள்ளது.

இந்தப் புதிய வேலை முறையினால் தொழிலாளர்களுக்குத் திட்டவட்டமான வேலை நேரமோ அல்லது ஓய்வு நேரமோ கிடைப்பதில்லை. முதலாளிகள் விரும்பும் பொழுது வேலை செய்ய வேண்டும் மற்ற நேரங்களில் வேலைக்காகக் காத்திருக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு வேலை மற்றும் கூலிக்கான உத்திரவாதம் (குறைந்த அளவேயான தொழிலாளர்கள் பெற்று வந்தது) என்பது கடந்தக் காலத்தவையாகி வருகின்றது. இந்த நிச்சயமற்ற வேலைத் தன்மையினால் தொழிலாளர்கள் பொருளாதார ரீதியாக பாதிப்படைவதோடு மன அளவிலும் பாதிக்கப்படுகின்றனர்.

நவீன தொழில் நுட்ப வளர்ச்சியின் ஒரு பிரிவான டிஜிட்டல்மயமாக்கலே கிக் பொருளாதாரத்திற்கான அடிப்படையாக அமைந்துள்ளது. நவீன தொழில்நுட்ப வளர்ச்சியானது வேலைவாய்ப்புகளின் அளவை சுருக்குகின்றது. வேலையில் இருக்கும் தொழிலாளர்களை வீதிக்கு தள்ளுகின்றது. மற்றோர்புறத்தில் வேலையை குறுகியகால, தற்காலிக, நிச்சயமற்ற தன்மையுடையதான கிக் வேலை முறையை உருவாக்கித் தொழிலாளர்களைக் கடுமையாகச் சுரண்டுகின்றது. குறைந்தபட்ச ஊதியத்திற்கான உத்திரவாதமோ, பாதுகாப்பான பணிச் சூழலுக்கான உத்திரவாதமோ, வருங்கால வைப்பு நிதி (PF), மருத்துவக் காப்பீடு (ESI) போன்ற சமூக நலத் திட்டங்களுக்கான உத்திரவாதமோ இங்கு கிடையாது. எட்டு மணி நேர வேலை, சங்கம் அமைக்கும் உரிமை, கூட்டு பேர உரிமை என அனைத்து உரிமைகளும் இல்லாமல் செய்யப்படுகிறது.

கல்வித் துறையில் ஆசிரியர்கள் முதல் பேராசிரியர்கள் வரை, உணவு விநியோகம், வாகன ஓட்டுநர்கள், , தகவல் தொழில் நுட்ப பணியாளர்கள், கட்டுமான வேலைகள், ஊடகத் துறை, பொது மற்றும் சரக்கு போக்குவரத்துச் சேவைகள், ஆன்லைன் வர்த்தகம், வங்கி மற்றும் இன்சூரன்ஸ் துறை உள்ளிட்ட ஏராளமான துறைகளில் கிக் வேலை முறை அமல்படுத்தப்பட்டு வருகின்றது. பெரும்பாலும் டிஜிட்டல்மயமாக்கபட்ட துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் இத்தகைய கிக் வேலை முறையானது அனைத்து துறைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றது.

கிக் வேலைப் பிரிவானது பெருமளவிலான வேலை வாய்ப்புகளைத் தருவதால், இந்தியாவின் பொருளாதாரம் வலுவடையும் என அரசும், முதலாளித்துவவாதிகளும் புளகாங்கிதம் அடைகின்றனர். உண்மையில் இது முதலாளிகளுக்கு வரைமுறையின்றிச் சுரண்டவும், இலாபங்களில் கொழிக்கவும் சட்டப்படியான வாய்ப்புகளை ஏற்பாடு செய்து தரவே உதவுகின்றது. நாடு முழுவதும் கிக் வேலை முறையில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின் மீதான நெருக்கடிகளும், அவர்களின் போராட்டங்களும் இதனை வெளிபடுத்துகின்றன. ஒலா(OLA), உபேர்(UBER) நிறுவனங்களின் சுரண்டலுக்கு எதிரான வாகன ஓட்டுநர்களின் போராட்டங்களும், சொமோட்டா(ZOMATO), ஸ்விக்கி(SWIGGY) நிறுவனங்களின் சுரண்டலுக்கு எதிரான உணவு விநியோகம் செய்யும் தொழிலாளர்களின் போராட்டங்களும் பல்வேறு நகரங்களில் பரவி வருவதை நாம் பார்க்க முடிகின்றது. அவர்கள் தங்களைச் சங்கமாக அமைத்துக் கொண்டு கிக் வேலைமுறையின் சுரண்டலுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர்.

தன்னுடைய சிறு முதலீட்டின் மூலம் வாகனங்களை உடைமையாகக் கொண்டு வருமானம் ஈட்டிக் கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள், கார் ஓட்டுநர்கள் ஆகியோர் தனித்து இனிமேல் இயங்க முடியாமல், பெரு நிறுவனங்களின் ஒப்பந்தப் பணியாளர்களாக பணியாற்ற வேண்டியுள்ளது. ஒலா, உபேர் போன்ற நிறுவனங்கள் இதில் முன்னணி வகிக்கின்றன. வாகன உரிமையாளர்களாகவும், ஓட்டுநர்களாகவும் இருக்கும் தொழிலாளர்கள் தனித்து நின்று தொழில் செய்ய முடியாத நிலையில் இந்தப் பெரிய நிறுவனங்களிடம் உறுப்பினர்களாகப் பதிவு செய்து கொண்டு அவர்கள் மூலம் தங்களுடைய தொழிலை நடத்துகின்றனர். இதனால், இவர்களுடைய உழைப்பின் ஒருபகுதி இந்த நிறுவனங்களால் சுரண்டப்படுகின்றது. மேலும் வாகன உரிமையாளர்களுக்கான உரிய தொகையும் முறையாகத் தரப்படுவதில்லை. இந்த நிறுவனங்கள் தங்களுடைய இலாபத்தின் அளவை மேலும் மேலும் அதிகரித்துக் கொள்ளப் பல்வேறு புதிய நிபந்தனைகளை விதிப்பதோடு, சுரண்டலின் அளவையும் அதிகரிக்கிறது.

ஏற்கனவே, வங்கியிடம் கடன்பெற்றுக் கடனாளியாக இருக்கும் வாகன உரிமையாளர்கள் தங்களுடைய உழைப்பு சுரண்டப்படுவதால் வருவாய் இழப்பு ஏற்பட்டு, கடனைத் திரும்பச் செலுத்துவதில் பெரும் சிரமங்களை சந்திக்கின்றனர். இதனால் தங்களுடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருவதை உணர்ந்த இந்தத் தொழிலாளர்கள் ஒலா, உபெர் நிறுவனங்களுக்கு எதிராக ஆங்காங்கே போராட்டங்களை எழுப்பி வருகின்றனர். சிறு விவசாயிகள் எவ்வாறு தங்கள் நில உடைமையை இழந்து விவசாயத்திலிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றார்களோ அதே போன்று இவர்களும் சிறு உடைமையிலிருந்து வெளியேற்றபட்டு பெரு மூலதனத்தின் கூலியடிமைகளாக மாற்றப்பட்டு வருகின்றனர். 

இதே போன்று உணவகத்திலிருந்து உணவுப் பொருட்களை விநியோகம் செய்யும் தொழிலாளர்களுக்கு ஒரு விநியோகத்திற்கு வெறும் 20 ரூபாய் முதல் 35 ரூபாய் மட்டுமே கொடுக்கப்படுகின்றது. மேலும் இவர்கள் ஓட்டலின் வாசலில் விரும்பத்தகாத ஆட்கள் போன்று காத்துக் கொண்டிருக்க வேண்டியுள்ளது. வெயில், மழை, கடுங்குளிர் என எந்த நிலையிலும் இவர்கள் சாலைகளிலும், ஓட்டல்களின் வாசல்களிலும் கூட்டம் கூட்டமாகக் காத்துக் கொண்டிருக்கின்றனர். சில சமயங்களில் ஓட்டல் ஊழியர்களின் திட்டுகளுக்கும், தாக்குதலுக்கும் கூட ஆளாக நேரிடுகிறது.

இவற்றையெல்லாம் தாண்டி இவர்கள் பயணம் செய்யும் பொழுது ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அதற்கான முழுப்பொறுப்பு அவரையே சாரும், உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளாது. தென் சென்னையில் நடத்தபட்ட ஓர் ஆய்வில் 173 தொழிலாளர்களை ஆய்வு செய்ததில் 56 தொழிலாளர்கள் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சொமோட்டா நிறுவனமானது தொழிலாளர்களை ‘தொழில் கூட்டாளிகள்’ என அழைப்பதன் மூலம் அவர்களுக்கு தொழிலாளர் சட்டங்கள் பொருந்தாது எனக் கூறி ஏமாற்றுகிறது.

கிக் வேலை முறை தொழிலாளர்களின் மீது முதலாளிகளால் சுமத்தப்படும் நிர்பந்தங்கள் குறித்து இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம்.

வேலை இல்லாத, வேலையிழப்புக்கு ஆட்படும் தொழிலாளர்களுக்கு (கொரானா காலத்தில் வேலை இழந்தவர்களுக்கும்), குறிப்பாக சொந்தமாக இருசக்கர வாகனம் வைத்திருக்கும் தொழிலாளர்களுக்கு ஒரு வடிகாலாக இந்த வேலை இருந்தாலும், இது ஒரு நிச்சயமற்ற தன்மையையே தொழிலாளர்களுக்கு வழங்குகிறது.

ஏற்கனவே பகுதி நேர வேலை என்னும் முறையின் மூலம் தொழிலாளர்களைத் தேவைப்படும் பொழுது பணிக்கு அமர்த்தி பின்னர் தூக்கியெறியப்படும் நடைமுறையினால் தொழிலாளர்கள் நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்திய அரசு கடந்த ஆண்டு நிறைவேற்றியுள்ள புதிய தொழிலாளர் சட்டங்களில் குறிப்பிட்ட கால வேலை முறை (Fixed Term Employment – FTE) என்னும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. சில மாதங்கள் முதல் சில ஆண்டுகள் வரை வேலையில் அமர்த்தும் வகையில் இத்தகைய குறிப்பிட்ட கால வேலை முறை (FTE) பயன்படுத்தப்படுகின்றது. இந்த முறையிலும் தொழிலாளர்களை அமர்த்தவும், துரத்தவுமான (HIRE and FIRE) அதிகாரத்தை முதலாளிகளுக்கு வழங்கித் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் அனைத்தையும் இந்திய அரசு பறித்துள்ளது.

நிரந்தரத் தன்மையுள்ள வேலைகளில் தற்காலிகமாகவே தொழிலாளர்கள் பணியாற்ற நியமிக்கப்படுவார்கள். முதலாளியின் குறைந்த கூலிக்கு உழைக்க யார் தயாராக இருக்கிறார்களோ அவர்கள் மட்டுமே பணியில் நீடிக்க முடியும், தொழிலாளர்களுக்கான ஜனநாயக உரிமைகள் கோரினாலோ, பொருளாதாரக் கோரிக்கைகளை எழுப்பினாலோ, பணியிடப் பாதுகாப்புக் குறித்துப் பேசினாலோ அவர்கள் வெளியேற்றப்பட்டு வேறொரு தொழிலாளி அங்கு அமர்த்தபடுவார். இத்தகைய செயல்களை இதற்கு முன்னர் சட்டத்திற்குப் புறம்பாக முதலாளிகள் செய்து வந்தனர், தொழிலாளர்கள் குறைந்தபட்சம் நீதிமன்றங்களையாவது நாட முடிந்தது. ஆனால், கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத் திருத்தங்கள் மூலம் முதலாளிகள் கடந்த காலத்தில் சட்டத்திற்குப் புறம்பாக செய்தவற்றிற்கெல்லாம், சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. பகுதி நேர வேலை, குறிப்பிட்ட கால வேலை முறை, கிக் வேலை முறை எனப் பல்வேறு வழிகள் மூலம் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டிக் கொழிக்கும் முதலாளி வர்க்கத்தின் பாதுகாவலனாக செயல்படும் இந்த அரசுகளை நம்பி தொழிலாளர்கள் ஏமாறக் கூடாது.

இனியும், பொருளாதாரக் கோரிக்கைகளுக்காகவோ, தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகளை வென்றெடுப்பதற்காகவோ மட்டும் தொழிலாளர்கள் போராடினால் அது தொழிலாளர்களுக்கு எந்தத் தீர்வையும் தரப்போவதில்லை. தொழிலாளர்கள் தங்களை கூலியுழைப்புச் சுரண்டலிலிருந்து விடுவித்துக் கொண்டால் மட்டுமே அவர்கள் தங்களுடைய உழைப்பிற்கு உரிய பங்கைப் பெற முடியும், தொழிலாளி வர்க்கம், தம்மை வர்க்கமாய் அணித்திரட்டிக் கொண்டு, இதர உழைக்கும் வர்க்கங்களையும் ஒருங்கிணக்க வேண்டும். தொழிலாளி வர்க்கத்தின் தலைமையிலான சோசலிச சமூகத்தைப் படைப்பதற்கான போராட்டங்களை விரைவுபடுத்த வேண்டும். சோசலிச அரசியல், பொருளாதார அமைப்பு மட்டுமே தொழிலாளர்களையும் பிற உழைக்கும் மக்களையும் அடிமைத்தனத்திலிருந்தும் சுரண்டலிலிருந்தும் விடுவிக்கும்.


சோசலிசத் தொழிலாளர் இயக்கம்
தமிழ் நாடு

Comments

  1. மிக நல்ல பயனுள்ள பதிவு
    மாலி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சாம்சங் தொழிலாளர் போராட்டம்: தலைமைக்கு வெற்றி - தொழிலாளர்களுக்கு பின்னடைவு

  தொழிற்சங்க அங்கீகாரத்தை முதன்மைக் கோரிக்கையாகவும் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் 37 நாட்களுக்கும் மேலாக வேலைநிறுத்தம் செய்து வந்த ‘ சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் ’ போராட்டம் , அது முன்வைத்த கோரிக்கைகளில் எதுவும் நிறைவேற்றப்படாமலேயே 15.10.2024 அன்று முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.   போராட்டங்கள் எப்பொழுதும் வெற்றியை மட்டுமே தருவதில்லை , வெற்றி மற்றும் தோல்வி இரண்டுமே மாறி மாறி வரக்கூடியதுதான் போராட்டக்களம். சில நேரங்களில் பெரும் இழப்புகளோடு கூட போராட்டக் களத்திலிருந்து பின்வாங்க வேண்டிய சூழல் ஏற்படும் , அந்தச் சூழலை உணர்ந்து போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டிய தேவையும் ஏற்படும். இதில் ஏற்பட்ட அனுபவத்தைத் தொகுத்துக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதற்கான படிப்பினையை இது கொடுக்கும். ஆனால் , போராட்டத்தின் போக்கு தொழிலாளர்களின் நலனை முன்னிறுத்தாமல் , ஏமாற்றும் போக்கைக் கைக்கொள்ளும் பொழுது அது ஒட்டுமொத்தத் தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்கே எதிராகக் கொண்டு போய் விடுகின்றது.   சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்திற்குத் தலைமை கொடுத்

வேலை பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் என்னும் நிறுவனம் ஒசூர் பகுதியில் 1998 முதல் செயல்பட்டு வருகின்றது . இது வெள்ளீயத்தால் ( தகரத்தால் ) ஆன கொள்கலன்களை , தகரக்குவளைகளை உற்பத்தி செய்கின்றது . இந்த ஆலையின் முதலாளி இந்தியாவை பூர்வீமாக கொண்டவராக இருந்தாலும் , தற்பொழுது கென்யாவில் வசித்து வருகின்றார் . தொடக்கம் முதலே இந்த ஆலையானது தொழிலாளர்களின் உழைப்பை வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்து வருகின்றது . வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் நீண்டநாட்கள் பணிபுரிந்து வந்தாலும் அவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யாமலும் , நியாயமான ஊதியம் வழங்காமலும் தொழிலாளர்களை வஞ்சித்து வந்தது . தொழிலாளர்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து 52 தொழிலாளர்கள் மட்டும் நிரந்தரம் செய்யப்பட்டனர் . இவர்களும் ஆறு வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் , பயிற்சித் தொழிலாளர்கள் என மாற்றிமாற்றி அவர்களை வகைபடுத்தி பின்னரே நிரந்தரம் செய்யப்பட்டனர் . அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைக்கப்பட்டுச் சுரண்டப்பட்டு வருகின்றனர் . தற்பொழுது வரை 450 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்பட

பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் சீர்த்திருத்தவாதத்தில் வீழ்ந்துள்ள இடதுசாரி இயக்கங்கள்

இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இடதுசாரிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் சில அமைப்புகளின் போக்குகள் அவர்களின் சீர்த்திருத்தவாதக் கண்ணோட்டத்தை அம்பலபடுத்தி வருகின்றன. நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த காங்கிரசு கட்சி இந்திய முதலாளி வர்க்கத்தின் வளர்ச்சிக்கும் சுரண்டலுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்தும் , பெரும் மூலதனம் தேவைப்படும் கனரகத் தொழில்களை மக்களுடைய வரிப் பணத்திலிருந்து அமைத்துக் கொடுத்தும், ஆரம்பக் கட்டத்தில் பன்னாட்டு மூலதனங்களின் போட்டியிலிருந்து அவர்களைப் பாதுகாத்தும் , பின்னர் இந்திய முதலாளிகள் சர்வதேச அளவில் சந்தையைப் பிடிக்கவும் , முதலீடு செய்யவும் உலகமயமாக்கல் கொள்கையை முன்னெடுத்தும் தொடர்ந்து சேவை செய்து வந்தது. அதே நேரத்தில் தொழிலாளர்களின் நலனுக்காகவும் , விவசாயிகளின் நலனுக்காகவும் , ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும் போராடிய இடதுசாரிகள் , ஜனநாயக அமைப்புகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி ஒடுக்கி வந்தது. வீரம் செறிந்த தெலுங்கானா மக்களின்