Skip to main content

கொரோனாப் பெருந்தொற்றும் பொருளாதார நெருக்கடியும்!

 

கொரானா பேரிடரினால் சர்வதேச அளவில் அனைத்து நாடுகளும் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளன. தங்களை வளர்ந்த நாடுகள், நாகரிகமடைந்த நாடுகள், தன்னிறைவு பெற்ற நாடுகள் எனத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் ஏகாதிபத்திய நாடுகளின் இந்தக் கதையாடல்கள் எல்லாம் தவிடுபொடியாகிப் பொருளாதாரத்தில் பெரும் சரிவு ஏற்பட்டு வருகிறது. உற்பத்தியும் விநியோகமும் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இந்த நெருக்கடியிலிருந்து மீள முதலாளித்துவ அரசுகளால் அறிவிக்கப்பட்ட சலுகைகளின் பெரும்பகுதி சுரண்டும் வர்க்கங்களின் இலாபத்தை ஈடுகட்டுவதற்கு வழங்கப்பட்டுள்ளதே தவிர, தங்கள் வருவாய் இழந்து, அன்றாடத் தேவைகளுக்கு அல்லல்படும் மக்களுக்கோ, பட்டினி கிடந்து சாகும் மக்களுக்கோ சொற்பமான அளவையே அளித்துள்ளது. 

அரசிடம் சலுகைகள் பெற்ற முதலாளிகளோ, வேலைவாய்ப்பைப் பெருக்கி, கூலியை உறுதிப்படுத்திப் பொருளாதார நெருக்கடியைச் சரி செய்வதற்கு எந்தவித முயற்சியையும் செய்யாமல், அதனைத் தங்களுக்கான வருவாயாகச் சுருட்டிப் பையில் வைத்துக் கொண்டனர். இதனால் சாதாரண அடித்தட்டு மக்கள் பெரும் நெருக்கடிக்குள் சிக்கித் தவித்து வருகின்றனர். உலகளாவிய அளவில் ஏற்பட்டுள்ள இந்தப் பாதிப்பில் சிக்கியுள்ள சில நாடுகளைப் பற்றி மட்டும் விரிவாகப் பார்ப்போம்.

இங்கிலாந்து

கொரானாப் பெருந்தொற்று பேரிடரால் இங்கிலாந்து நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த ஆண்டு(2020) 9.9 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. இந்தளவிற்கான பெரிய சரிவினை 1709 ஆம் ஆண்டிற்கு பிறகு தற்பொழுது தான் இங்கிலாந்து சந்தித்துள்ளது. 1921 ஆம் ஆண்டைய பெரும் நெருக்கடியின் பொழுது கூட 9.7 சதவீத சரிவையே சந்தித்தது.

1709 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடுங்குளிரினால் ஆறுகளும், நீர்நிலைகளும் உறைந்து போயின. இங்கிலாந்து மட்டுமல்லாமல், வடக்கு மற்றும் மத்திய ஐரோப்பிய நாடுகளில் இத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டன. ஏராளமானோர் அந்தக் கடுங்குளிரினால் உயிரிழந்ததோடு, நாட்டின் பொருளாதாரம் நிலை குலைந்தது.

கொரானாப் பெருந்தொற்றிற்கு முன்பிருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவை விட ஏப்ரல் 2020 இல் 25 சதவீதம் குறைந்துவிட்டது. ஜூலை 2021ல் கூட இங்கிலாந்து கொரானாப் பெருந்தொற்றிற்கு முந்தைய உள்நாட்டு உற்பத்தியின் அளவை எட்டவில்லை. அந்த அளவை விட இரண்டு சதவீதம் குறைவாகவே இருந்தது. அடுத்த ஆண்டு(2022) செப்டம்பர் வரை இந்த நிலையே நீடிக்கும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

இங்கிலாந்து அரசு செப்டம்பர் 2021 வரை கொரானா பேரிடர் மீட்பிற்காக 29 இலட்சம் கோடி ரூபாய் செலவிட்டது. இதனால் இங்கிலாந்து அரசின் கடன் உயர்ந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவில் 84 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக அதிகரித்துள்ளதாக இங்கிலாந்து பாராளுமன்ற அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கொரானா பெருந்தொற்றில் தங்கள் சொந்த ஊருக்கு சென்ற இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட ஐரோப்பிய தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்குத் திரும்ப ஆர்வம் காட்டவில்லை. மேலும் ஐரோப்பியக் கூட்டமைப்பிலிருந்து இங்கிலாந்து வெளியேறிய  (பிரெக்சிட்டிற்கு) பிறகு அயலகத் தொழிலாளர்கள் உள்ளே நுழைவதற்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்ததால் ஐரோப்பியத் தொழிலாளர்கள் மீண்டும் இங்கிலாந்திற்குத் திரும்ப ஆர்வம் காட்டவில்லை. அதனால் பொருட்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் (டிரக்குகள்) ஓட்டும் வேலை, உணவு பதப்படுத்துதல், கால்நடை வளர்ப்பு, சுகாதாரத்துறை, பருவகாலம் சார்ந்த விவசாய வேலைகள் ஆகியவற்றிற்கு ஆட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பொருட்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் ஓட்டுவதற்கு ஆள் இல்லாமல் எரிபொருள் மற்றும் இதர உணவுப்பொருட்களை கொண்டு செல்லும் போக்குவரத்து முடங்கியது. ஒரு இலட்சத்திற்கும் அதிகமான டிரக்கு ஒட்டுநர்கள் பற்றாகுறை இருப்பதாக சரக்கு வண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஆனால், 5000 சரக்கு வண்டி ஓட்டுநர்களை இதர நாடுகளிலிருந்து கொண்டு வருவதற்கான தற்காலிக விசாவை அரசு வழங்கியுள்ளது. பிரிட்டன் வர்த்தக கூட்டமைப்பு அரசின் இந்த முடிவு "பெரு நெருப்பு ஜூவாலையின் மீது சிறிது தண்ணீர் தெளிப்பது" போன்றது என்று தெரிவித்துள்ளது.

பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. பல இடங்களில் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. எரிபொருள் பற்றாகுறையால் அத்தியாவசியப் பணிகளுக்கு கூட வேலைக்கு செல்ல முடியாமல் உள்ளனர். வாடகை கார் ஓட்டுநர்கள் எரிபொருட்கள் கிடைக்காமல் தங்களுக்கு வேலை இல்லாமல் உள்ளதாகவும், அவசரப் பயணங்களுக்குக் கூட எங்களால் வண்டிகளை இயக்க முடியவில்லை எனவும் கூறுகின்றனர்.

உற்பத்தி செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்ல போக்குவரத்து வசதி இல்லாததால் குளிர்பதனக் கிடங்குகள் நிரம்பி வழிகின்றன. இடம் இல்லாத காரணத்தால் ஒரு வாரத்திற்கான உற்பத்தி வெளியில் கொட்டப்பட்டதாகவும், போதுமான வேலை ஆட்கள் இல்லாததால் காய்கறிகள் அறுவடை செய்யப்படாமல் நிலத்திலேயே வீணாவதாகவும் இஎஸ்ஜி கூட்டுப்பண்ணைத் துணைத்தலைவர் லேன்பிரவுன் கூறியுள்ளார். பருவகால வேலைகளுக்கு ருமேனியா மற்றும் பல்கேரியாவிலிருந்து வரும் தொழிலாளர்கள் கொரானாத் தொற்றினால் வரவில்லை. விளைநிலங்களிலிருந்து உணவுப் பொருட்களை அறுவடை செய்வதும், அதனைக் கடைகளுக்குக் கொண்டு போய்ச் சேர்ப்பதும் தொழிலாளர்களின் பற்றாக்குறையால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.

நான்டோ என்னும் உணவகம் கோழி இறைச்சி பற்றாக்குறையினால் 45 கிளைகளை மூடியுள்ளது. மெக்டானால்ட் உணவகம் பல்வேறு உணவு வகைகளைத் தயாரிப்பதை நிறுத்தியுள்ளது. பிரிட்டன் கோழி வளர்ப்புக் கவுன்சில் கோழி இறைச்சி உற்பத்தி 10 சதவீதம் குறைந்துள்ளதாகவும், 16 சதவீதம் வேலைக்கு ஆட்கள் இல்லாமல் உள்ளதாகவும் தெரிவிக்கிறது.

நுகர்வுப் பண்டங்களை உற்பத்தி செய்த இடத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு எடுத்து செல்ல டிரக்குகள் இல்லாதததால் நுகர்வு பண்ட விற்பனையகங்களில் பொருட்கள் இல்லாமல் காலியாக உள்ளன. இந்த நெருக்கடி நீடித்தால், எதிர்வரும் குளிர்காலம் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை காலம் சிரமம் மிகுந்ததாக இருக்கும் என மக்கள் அஞ்சுகின்றனர்.

கடினமான நீண்ட நேர வேலை, போதுமான ஓய்வு எடுப்பதற்கான வசதியின்மை போன்ற காரணங்களால் டிரக்குகளை இயக்கும் வேலைக்கு உள்நாட்டில் ஆட்கள் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியனில் உள்ள வளர்ந்த நாடுகளில் இத்தகைய வேலைகள் செய்வதற்கு ஐரோப்பிய யூனியனில் உள்ள ஏழ்மையான நாடுகளிலிருந்து தொழிலாளர்கள் வருகின்றனர். ஏழ்மையான நாடுகளில் உள்ள தொழிலாளர்கள் தங்கள் நாடுகளில் பெறும் கூலியை விட இங்கு அதிகமாக கிடைப்பதால் அவர்கள் இதனை நோக்கி இழுக்கப்படுகின்றனர்.

ஆனால், தற்பொழுது இங்கிலாந்து ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறியதாலும், அயலகத் தொழிலாளர்கள் நுழைவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததாலும் டிரக்குகளை இயக்குவதற்கான ஓட்டுநர்கள் பற்றாகுறை உடனடியாக அதிகரித்தது.

2020ல் மட்டும் ஐரோப்பிய யூனியனைச் சார்ந்த இரண்டு இலட்சம் தொழிலாளர்கள் இங்கிலாந்தை விட்டு வெளியேறியுள்ளனர். 2019இல் 37 இலட்சம் ஐரோப்பிய யூனியன் தொழிலாளர்கள் பணியாற்றி வந்த நிலையில் 2020இல் இது 35 இலட்சமாக குறைந்துள்ளது. ஐரோப்பிய யூனியன் அல்லாத பிற பகுதிகளிலிருந்து இங்கிலாந்திற்கு இடம் பெயர்ந்திருக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 26 இலட்சமாக உள்ளது. ஆனால், அதேசமயம் இங்கிலாந்திலிருந்து மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டும் 9.9 இலட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.

இங்கிலாந்தின் சில்லரை வணிகம், பண்ணை விவசாயம், கால்நடை பண்ணைகள், சரக்கு போக்குவரத்து மற்றும் சுகாதார துறைகள் ஐரோப்பிய யூனியன் தொழிலாளர்களையே பெரிதும் சார்ந்துள்ளது. கொரானா பெருந்தொற்றில் வெளியேறிய தொழிலாளர்கள் மீண்டும் வருவார்களா என்பது கேள்விக்குறியே!

முதலாளிகள் உள்நாட்டு தொழிலாளர் வளத்தை மேம்படுத்த முயற்சி செய்ய வேண்டும், பிற நாடுகளின் தொழிலாளர்களை நம்பியிராமல் உள்நாட்டு தொழிலாளர்களின் திறனை மேம்படுத்தி அவர்களை பணிக்கு அமர்த்த வேண்டும் என இங்கிலாந்து அரசு கூறுகிறது. தொழிலாளர்களுக்கு சிறந்த ஊதியங்களை வழங்கினால் இதுப் போன்ற நெருக்கடிகளிலிருந்து மீள முடியும் என்றும், அளவில்லாத அயலகத் தொழிலாளர்களைச் சார்ந்திருக்க விரும்பவில்லை எனவும் அரசு கூறுகிறது.

உள்நாட்டில் அதிகரித்து வரும் வேலையின்மை பிரச்சனைகளை எதிர்கொள்ள அரசு இதனை முன்வைத்தாலும், அதனால் நடைமுறைப்படுத்த முடியாது. முதலாளிகள் உள்நாட்டு தொழிலாளர்களுக்கு கூலியை அதிகரித்துத் தரத் தயாராக இல்லை, அது குறைந்த கூலியில் பிற நாடுகளிலிருந்து தொழிலாளர்களைக் கொண்டு வர அரசை நிர்பந்தம் செய்து வருகின்றது.

இங்கிலாந்தில் ஏற்பட்டு வரும் வேலையின்மைக்கு அல்லது பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் முதலாளித்துவத்தின் சுரண்டல் வடிவமே என்பதை மறைத்து விட்டு, வெளியிலிருந்து இங்கு இடம்பெயரும் தொழிலாளர்கள் தான் காரணம் எனத் தொழிலாளர் வர்க்கத்திடையே பிளவுகளை ஏற்படுத்த முயல்கின்றது இங்கிலாந்து அரசு.

தொழிலாளர்களின் இடப்பெயர்வுக்கு காரணம் மூலதனத்தைத் தமது உடைமையாகக் கொண்டு பெரும்பான்மை உழைக்கும் மக்களைச் சுரண்டிக் கொழுக்கும் முதலாளிகளே. குறைந்த கூலியில் அதிகளவில் உழைப்புச்சக்தியை எங்கிருந்து பெறமுடியுமோ அங்கு மூலதனத்தைக் கொண்டு செல்வது அல்லது உழைப்புச்சக்திகளை (தொழிலாளர்களை) தேவையான இடங்களுக்கு இடம்பெயரச் செய்வது என்பது முதலாளித்துவத்தின் அத்தியாவசியமான தேவையாக உள்ளது. செல்வம் ஒரு சிலரின் கையில் குவிந்திருக்கும் இந்த ஏற்றத்தாழ்வான சமூகத்தில், ஏழ்மையால் வாடும் மக்கள் தாங்கள் வசிக்கும் இடங்களில் தொடர்ந்து வாழ வழியில்லாத நிலையில் பிழைப்புத்தேடி பிறபகுதிகளுக்குச் செல்லும் அவல நிலையின் காரணமாக இடம் விட்டு இடம் பெயர்தல் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி உள்ளது.

(தொடரும்)


சோசலிசத் தொழிலாளர் இயக்கம்

தமிழ்நாடு

Comments

Popular posts from this blog

தொழிலாளர் ஊதியங்கள் ஏன் எப்போதும் மிகவும் குறைவாகவே இருக்கின்றன?

  உங்கள் உழைப்புக்கு ஏற்ற மதிப்புக் கிடைப்பதில்லை , உங்களுக்குக் கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பை விடப் பலமடங்கு உழைத்திருப்பதாக எப்போதாவது நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா ? கார்ல் மார்க்ஸ் உங்களைப் புரிந்துகொள்கிறார் . ஒட்டுமொத்தத் தொழிலாளர் வர்க்கமும் முதலாளித்துவ வர்க்கத்தால் சுரண்டப்படுகிறது என்று அவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் வாதிட்டார் . இது வெறும் மிகைப்படுத்தல் கூற்று அல்ல , மாறாக ஒரு பொருளாதார உண்மையாகும் . தொழிலாளர்கள் உருவாக்கும் மதிப்பின் ஒரு பகுதியைத் திட்டமிட்ட முறையில் திருடுவதன் மூலம் மிகுதியான செல்வத்தைக் குவிப்பதே   முதலாளித்துவத் தொழில்நிறுவனத்தின் முழுமையான நோக்கமாகும் . இந்தச் செயல்முறையே சுரண்டல் என்று குறிப்பிடப்படுகிறது . தொழிலாளர்களுக்கு அவர்களுடைய தகுதிக்குரிய ஊதியம் அளிக்கப்படுகிறது என்று முதன்மைப்போக்கு பொருளியலாளர்கள் கூறிக்கொள்கின்றனர் . தொழிலாளர்களின் ஊதியங்கள் அவர்களால் உற்பத்திப் பொருளுக்கு “ கூட்டப்படும் மதிப்பை ” குறிக்கின்றன தூரத்து நாடுகளில் பழிபாவத்திற்கு அஞ்சாத முதலாளிகள்

பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் சீர்த்திருத்தவாதத்தில் வீழ்ந்துள்ள இடதுசாரி இயக்கங்கள்

இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இடதுசாரிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் சில அமைப்புகளின் போக்குகள் அவர்களின் சீர்த்திருத்தவாதக் கண்ணோட்டத்தை அம்பலபடுத்தி வருகின்றன. நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த காங்கிரசு கட்சி இந்திய முதலாளி வர்க்கத்தின் வளர்ச்சிக்கும் சுரண்டலுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்தும் , பெரும் மூலதனம் தேவைப்படும் கனரகத் தொழில்களை மக்களுடைய வரிப் பணத்திலிருந்து அமைத்துக் கொடுத்தும், ஆரம்பக் கட்டத்தில் பன்னாட்டு மூலதனங்களின் போட்டியிலிருந்து அவர்களைப் பாதுகாத்தும் , பின்னர் இந்திய முதலாளிகள் சர்வதேச அளவில் சந்தையைப் பிடிக்கவும் , முதலீடு செய்யவும் உலகமயமாக்கல் கொள்கையை முன்னெடுத்தும் தொடர்ந்து சேவை செய்து வந்தது. அதே நேரத்தில் தொழிலாளர்களின் நலனுக்காகவும் , விவசாயிகளின் நலனுக்காகவும் , ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும் போராடிய இடதுசாரிகள் , ஜனநாயக அமைப்புகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி ஒடுக்கி வந்தது. வீரம் செறிந்த தெலுங்கானா மக்களின்

வேலை பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் என்னும் நிறுவனம் ஒசூர் பகுதியில் 1998 முதல் செயல்பட்டு வருகின்றது . இது வெள்ளீயத்தால் ( தகரத்தால் ) ஆன கொள்கலன்களை , தகரக்குவளைகளை உற்பத்தி செய்கின்றது . இந்த ஆலையின் முதலாளி இந்தியாவை பூர்வீமாக கொண்டவராக இருந்தாலும் , தற்பொழுது கென்யாவில் வசித்து வருகின்றார் . தொடக்கம் முதலே இந்த ஆலையானது தொழிலாளர்களின் உழைப்பை வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்து வருகின்றது . வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் நீண்டநாட்கள் பணிபுரிந்து வந்தாலும் அவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யாமலும் , நியாயமான ஊதியம் வழங்காமலும் தொழிலாளர்களை வஞ்சித்து வந்தது . தொழிலாளர்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து 52 தொழிலாளர்கள் மட்டும் நிரந்தரம் செய்யப்பட்டனர் . இவர்களும் ஆறு வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் , பயிற்சித் தொழிலாளர்கள் என மாற்றிமாற்றி அவர்களை வகைபடுத்தி பின்னரே நிரந்தரம் செய்யப்பட்டனர் . அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைக்கப்பட்டுச் சுரண்டப்பட்டு வருகின்றனர் . தற்பொழுது வரை 450 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்பட