Skip to main content

பாட்டாளி வர்க்கத்திற்கு வழி காட்டும் ஃபாக்ஸ்கான் பெண் தொழிலாளர்களின் வீரம் செறிந்த போராட்டம்!

 

தைவான் நாட்டைச் சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் உலக அளவில் செல்போன் மற்றும் மின்னணு உதிரிப் பாகங்களைப் பிற நிறுவனங்களுக்கு உற்பத்தி செய்து கொடுக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்று.

ஆப்பிள், மைக்ரோசாப்ட், சியோமி போன்ற பல நிறுவனங்களுக்கு உதிரிப் பாகங்களை உற்பத்தி செய்து கொடுத்து வருகின்றது, இந்தியாவில் நோக்கியா நிறுவனத்திற்கும் உதிரிப் பாகங்களை உற்பத்தி செய்து கொடுக்கும் நிறுவனமாக 2007 இல் கால் பதித்தது; இன்று தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தனது கிளைகளை விரித்துள்ளது.

இந்தியாவில் மட்டுமல்லாது உலக அளவில் 3 கண்டங்களில் 12 லட்சம் தொழிலாளர்களின் உழைப்பில் வளரும் இதன் ஆண்டு வருமானம் சுமார் 1.3 லட்சம் கோடி ரூபாய் ஆகும். உலகத்தில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் உதிரிப் பாகங்களில் சுமார் 40% ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது.

தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் பன்னாட்டு நிறுவனம்

உலகம் முழுவதும் தொழிற்சாலைகளைக் கொண்டிருப்பதால் ஒரு மாபெரும் பன்னாட்டு உற்பத்தி மையமாக உருவாகி, தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையிலும், அரசிடம் தனக்கான சலுகைகளை நிர்ப்பந்தித்துப் பெறும் அளவுக்கும் மிகப் பெரும் நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

தொழிலாளர்கள் போதிய பாதுகாப்பின்றி மோசமான பணிச் சூழல்களில் வேலைகள் செய்யும்படி நிர்பந்தம் செய்யப்படுகிறார்கள். விடுமுறைகள் தரப்படாமலும் குறைந்த ஊதியம் வழங்கப்பட்டும் தொழிலாளர்கள் கடுமையாகச் சுரண்டப்பட்டு வருகின்றனர். தொழிலாளர்கள் எக்காரணம் கொண்டும் ஒருங்கிணைந்து விடுவதைத் தடுப்பதற்குத் தொழிலாளர்கள் மத்தியில் எந்த ஒரு தொடர்பு ஏற்படுவதையும் தடுப்பதில் கைதேர்ந்த நிர்வாகமாக ஃபாக்ஸ்கான் செயல்படுகிறது. தொழிலாளர்கள் சங்கம் அமைக்கும் உரிமையையும் அதன் கூட்டுப் பேர உரிமையையும் மறுத்து, சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்பட்டு வருகின்றது.

சீனாவில் 2010இல் ஃபாக்ஸ்கான் தொழிலாளர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உயிரை விடுவதே மேல் எனும் சூழலில் ஆலையில் இருந்து குதித்து கொத்துக்கொத்தாகத் தற்கொலை செய்து கொண்டதைச் செய்தித்தாள்கள் தெரிவித்தன. 2012ஆம் ஆண்டு ஆப்பிள் உதிரிப் பாகங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் ஆலையில் சோதனை செய்த பொழுது சீனாவின் சட்டங்களுக்கு எதிராகப் பள்ளி மாணவர்களை உற்பத்தியில் ஈடுபடுத்தியதை ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஒப்புக்கொண்டது. இருப்பினும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் குழந்தைத் தொழிலாளர்களை வைத்துச் சுரண்டும் போக்கை நிறுத்திக் கொள்ளவில்லை.

அதனைத் தொடர்ந்து 2018ஆம் ஆண்டு அமேசான் ஈக்கோ சாதனத்தை உற்பத்தி செய்யும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் இதே போன்று சீனாவின் சட்டதிட்டங்களுக்குப் புறம்பாக சிறுவர்களை உற்பத்தியில் ஈடுபடுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

பாக்ஸ்கான் நிறுவனம் சீனாவில் தொழிலாளர்களை கடுமையாக சுரண்டி வருவதைப் போன்றே தமிழகத்திலும் தொழிலாளர்கள் மீது நெருக்கடிகளை கொடுத்து வருகின்றது. தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் தனது கிளையை அமைத்துள்ளது. சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் அமைந்திருக்கும் இந்த ஆலையில் மட்டும் சுமார் 15000 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பெரும்பான்மையோர் பெண் தொழிலாளர்களாகவும், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிபவர்களாகவும் உள்ளனர். பெண் தொழிலாளர்கள் தங்குவதற்கு சுற்றுவட்டார பகுதிகளில் ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தரக்குறைவான உணவும் ஆரோக்கியமற்ற இருப்பிட வசதிகளும்

பூந்தமல்லியில் அவ்வாறு அமைக்கப்பட்ட ஒரு விடுதியில் உணவு உட்கொண்ட பெண்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். தரக் குறைவான உணவால் அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்களை விடுதி நிர்வாகிகள் உடனடியாக மருத்துவமனைகளில் சேர்க்கவில்லை, இதற்கு முன்பும் இவ்வாறு பல முறை நடந்துள்ளதால் அவர்கள் அதை அலட்சியப் போக்குடன் அணுகியுள்ளனர். இந்த அலட்சியப்போக்குக் காரணமாக காலதாமதமாக 6 மணி நேரம் கழித்துத் தொழிலாளர்களை மருத்துவமனையில் சேர்த்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் தொழிலாளர்களின் 8 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது எனும் செய்தியை அறிந்த பிற தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை குறித்த உண்மை நிலவரத்தை அறிய வேண்டியும் அலட்சியப் போக்குடன் நடந்து கொண்ட நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் டிசம்பர் 17 வெள்ளிக்கிழமை அன்று நள்ளிரவிலிருந்து சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்; சுமார் 3000 தொழிலாளர்கள் மறியலில் கலந்து கொண்டனர்.

தொழிலாளர்கள் போராட்டத்தைக் கைவிட அரசுத் தரப்பில் நிர்ப்பந்திக்கப்பட்டது. ஆனால் நிறுவனத்தின் மீதும் விடுதி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்ட அனைத்து தொழிலாளர்கள் நிலைமையும் தெரியாத வரை போராட்டம் தொடரும் என அறிவித்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உறுதியுடன் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இரண்டு நாட்களாகப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் டிசம்பர் 18 சனிக்கிழமை அன்று மாநில அரசு காவல்துறையை கொண்டு பெண் தொழிலாளர்கள் மீது தடியடி நடத்திப் போராட்டத்தை கலைத்தது.

தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் தொழிலாளர்கள் மீது தடியடி நடத்தி அவர்களின் மீது பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்த அரசு, ஃபாக்ஸ்கான் ஆலையில் இருக்கும் குளறுபடிகளைக் களைவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆண்டுதோறும் பல்லாயிரம் கோடிகளை இலாபமாகச் சுருட்டும் பன்னாட்டுக் கம்பெனிகளின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைக் கண்டுக் கொள்ளாமல் உரிமைக்காகப் போராடும் தொழிலாளர்களை வன்முறை கொண்டு ஒடுக்கும் ஜனநாயக விரோதப்போக்கை அரசு கையாள்கிறது. மேலும் இச்சிக்கலை ஒரு விபத்து எனும் அடிப்படையில் கடந்து போக முனைகிறது. அவ்வாறு கடந்து செல்வது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். ஏனெனில் ஃபாக்ஸ்கான் நிறுவன வரலாற்றில் இவை வாடிக்கையாக நிகழக் கூடியதாகவே உள்ளது

60 க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களையும் இருபத்தி மூன்று ஆண் தொழிலாளர்களையும் காவல்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட 83 தொழிலாளர்களையும் வழக்கறிஞர்கள் மற்றும் தொழிற்சங்கச் செயற்பாட்டாளர்கள் தொடர்பு கொள்ளவும் அனுமதி வழங்கப்படவில்லை.

ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் சட்டப்படியான தொழிற்சங்கம் அமைத்துக் கொள்ள கூட நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இந்த நிலையில்தான் தொழிற்சாலையில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் ஒன்றாகக் கூடித் தன்னெழுச்சியாக மறியலில் ஈடுபட்டுள்ளார்கள் அவர்கள் இதற்கு முன்பு பல்வேறு அடக்குமுறைகளுக்கும் சட்டத்திற்குப் புறம்பான முறையிலும் வஞ்சிக்கப்பட்டும் வந்துள்ளதுதான் இந்தத் திடீர் போராட்டத்திற்குக் காரணமாக அமைந்தது.

தொழிலாளர்கள் தொழிற்சாலையிலிருந்து விடுதிக்குச் செல்லப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அவர்கள் வெளியே செல்ல வேண்டுமென்றால் கடிதம் கொடுத்து அனுமதி பெற்றுத்தான் செல்ல வேண்டும். அவர்கள் எங்கே செல்கின்றனர், யாரைச் சந்திக்கின்றனர் என்ற பல கேள்விகளை விடுதி அதிகாரிகள் கேட்ட பின்னரே அவர்களுக்கு அனுமதி தருவார்கள். 10 நபர் தாங்கக்கூடிய ஒரு அறையில் 20 பேர் வலுக்கட்டாயமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கே இருபது நபருக்கு ஒரு கழிப்பறை மட்டுமே உள்ளது. தொழிற்சாலையிலும் விடுதியிலும் அவர்கள் மீது கண்காணிப்பும் கடுமையான பணிச் சூழலும் நிலவி வந்துள்ளது.

தொழிலாளர்கள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதை ஃபாக்ஸ்கான் நிறுவனம் நேரடியாகவும் மறைமுகமாகவும் தடுத்து வந்துள்ளது. விடுதியில் உணவு தரம் இல்லாததால் அவ்வப்போது தொழிலாளர்கள் நோய்வாய்ப்பட்டு வந்துள்ளனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் IMA விடுதியில் தங்க வைக்கப்பட்ட தொழிலாளர்கள் தரமற்ற உணவை உட்கொண்டதால் கடுமையான உடல் நலக் கேட்டிற்குத் தள்ளப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தங்கியிருந்த விடுதி நிர்வாகத்திற்கு எதிராக மாவட்ட ஆட்சியாளர் குற்ற வழக்கை பதிவு செய்துள்ளார். இது குறித்து குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார். ஆனால் இது போன்ற நிகழ்வு உலகெங்கிலும் ஃபாக்ஸ்கானில் நடப்பது முதல் முறை அல்ல, தமிழகத்திலும் பல முறை நடந்துள்ளது

முதலாளி வர்க்கத்தைக் காப்பாற்றும் அரசும் ஆளும் கட்சிகளும்

தமிழ்நாட்டில் 2007ல் நோக்கியா சப்ளையராக ஃபாக்ஸ்கான் நிறுவனம் தனது தடத்தைப் பதித்தது. 2010ல் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் பெரும்பான்மையானோர் சிஐடியு தொழிற்சங்கத்தில் இணைந்தனர். ஆனால் நிர்வாகம் சிஐடியு சங்கத்தை அங்கீகரிக்க மறுத்து சட்டவிரோதமாகத் தொமுச சங்கத்தை மட்டும் அங்கீகரித்தது. மேலும் 2015ஆம் ஆண்டு நோக்கியா தொழிற்சாலை மூடப்பட்டதைக் காரணமாக வைத்து 1300 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்தது ஃபாக்ஸ்கான் நிறுவனம்.

அதே நேரம் ரைசிங் ஸ்டார் என்ற ஒரு நிறுவனத்தைப் பதிவு செய்து ஆந்திரா -தமிழ்நாடு எல்லையில் உள்ள ஸ்ரீ சிட்டியில் சியோமி போன்களை தயாரித்தது. பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு வேலையை மறுக்கவே புதிய நிறுவனம் துவங்கப்பட்டது. ஒரு சில வருடங்களிலேயே ரைசிங் ஸ்டார் நிறுவனம் சுங்குவார்சத்திரம் ஆலையில் மீண்டும் இளம் பெண் தொழிலாளர்களை ஒப்பந்தத் தொழிலாளர்களாக வைத்து உற்பத்தியை ஆரம்பித்தது. அதன் பின்னர் ரைசிங் ஸ்டார் நிறுவனத்தை பாரத் FIH என்ற பெயரில் தன்னுடைய நிறுவனமாக மாற்றி கொண்டது. இதேபோன்று ஃபாக்ஸ்கான் நிறுவனம் அரசின் துணைகொண்டு தொழிலாளர்களைப் பல்வேறு முறையில் வஞ்சித்து வருகிறது.

தொழிலாளர்கள் தங்குமிடத்தில் தேவையான இடவசதி, குளியலறை, கழிவறை, குடிநீர், காற்றோட்டமான அறைகள் ஏற்படுத்தித் தரவேண்டும், தொழிலாளர்கள் தங்கும் விடுதிக்கு உரிய சான்று பெற வேண்டும், தங்கள் இடத்திலேயே தரமான உணவுகளைச் சமைத்து அவர்களுக்கு உரிய நேரத்தில் உணவு வழங்க வேண்டும், அவசரத் தேவை கருதி தொழிலாளர்கள் விடுமுறை கோரும் பொழுது அவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் போன்ற பல்வேறு ஆலோசனைகளை மட்டுமே நிர்வாகத்திற்கு அரசு வழங்கியுள்ளது சட்டப்படி இவற்றைக் கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என அரசு உத்தரவிடவில்லை. அவற்றைப் பின்பற்றாத நிறுவனத்தின் மீது அரசு கடுமையான நடவடிக்கை எதையும் எடுப்பதில்லை.

மேலும் ஆப்பிள் நிறுவனம் தனது உதிரிப் பாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் தவறான போக்கினால் ஏற்படும் அவப்பெயர் தன்மீது வந்து சேரும் என்ற அச்சத்தில் சில தொழிலாளர் நல நடவடிக்கைகளை எடுக்குமாறு ஃபாக்ஸ்கான் நிர்வாகத்திற்கு அறிவுறுத்துகிறது.

ஆப்பிள், அமேசான் போன்ற நிறுவனங்களுக்கு தொழிலாளர்கள் நலன்கள் மீது எந்தவிதமான அக்கறையும் கிடையாது. உண்மையில் இந்தச் சுரண்டல் முறையில் அதிகம் பயனடைவது ஆப்பிள், அமேசான் போன்ற பெரும் நிறுவனங்களே. ஆப்பிள் நிறுவனம் தான் விற்கும் பொருட்களுக்கு 30 சதவீதம் லாபம் வைத்திருக்கிறது ஆனால் அந்தப் பொருட்களை உற்பத்தி செய்யும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்திற்கு லாபம் 3 சதவீதம் தான். இந்த நிலையில் ஃபாக்ஸ்கான் தனது லாபத்தைப் பெருக்க வேண்டும் என்றால் ஆலைக்கான செலவைக் குறைக்க வேண்டும். தொழிலாளர்களைக் கடுமையாச் சுரண்ட வேண்டும்; அவர்களுக்கு எவ்வளவு குறைவான கூலி கொடுக்கமுடியுமோ அந்த அளவுக்குக் கூலியைக் குறைத்துக் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு எந்தவிதமான பணிப் பாதுகாப்பு உபகரண வசதிகளும் செய்து தராமல், செலவைக் குறைத்து உற்பத்தியைப் பெருக்க வேண்டும். இவ்வாறுதான் தரமில்லாத உணவும் தரப்பட்டுள்ளது. தொழிலாளர்களை மேலும் மேலும் ஒட்டச் சுரண்டி மேலும் மேலும் லாபத்தைப் பெருக்க வேண்டும் என்பதுதான் முதலாளிகளின் ஒரே குறிக்கோள்.

ஆட்சியிலிருக்கும் அரசு முதலாளிகளின் பாதுகாவலர்களாக மட்டுமே உள்ளது. சட்ட விதிகளுக்குப் புறம்பாக தேவையான எண்ணிக்கைக்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணியில் ஈடுபடுத்துதல், தொழிற்சங்க உரிமைகளை மறுத்தல், தொழிலாளர்களுக்கு சட்டப்படியாக உள்ள உரிமைகளையும் மறுத்தல், குறைந்தபட்சக் கூலியைக் கூடக் கொடுக்காமல் இருத்தல், பாதுகாப்பான பணிச் சூழலை ஏற்படுத்தாமல் இருத்தல், ஆரோக்கியமான இருப்பிட வசதிகளைத் தொழிலாளர்களுக்கு ஏற்படுத்தித் தராமல் இருத்தல் ஆகிய சட்ட விரோதமான நடைமுறைகளைக் கொண்டுள்ள நிறுவனங்கள் மீது இந்த அரசின் அதிகார வர்க்கம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுப்பதில்லை. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த அதிகார வர்க்கம் மட்டும் மாறுவதில்லை; அது நிலையாக நீடித்து நிற்கிறது; எப்பொழுதும் முதலாளிகளின் நலன்களைக் காப்பாற்றும் வர்க்கமாக இந்த அதிகார வர்க்கம் உள்ளது. மக்களுக்கு நல்வாழ்வு அளிப்பதாக வாக்குறுதிகளை அளித்து மக்களிடமிருந்து வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வரும் எந்தக் கட்சியும் பதவி நாற்காலியில் அமர்ந்தவுடன் முதலாளிய வர்க்கத்திற்குச் சேவை செய்யும் ஏஜண்டாக மாறி விடுகிறது. முதலாளிய வர்க்கத்தையும் அதற்குச் சேவகம் புரியும் அதிகார வர்க்கத்தையும் காப்பாற்றும் முகமூடியாகப் பதவியில் உள்ள கட்சி செயல்படுகிறது. இதைத்தான் ஃபாக்ஸ்கான் தொழிலாளர்களின் போராட்டத்தின் போதும் நாம் காணுகிறோம்.

வரலாற்றில் தொழிலாளர்களின் போராட்டத்தில் முன்னணிப் படையாகப் பெண் தொழிலாளர்கள்

ஃபாக்ஸ்கான் தொழிலாளர்களின் போராட்டம் தங்கள் சக தொழிலாளர்களுக்கு நேர்ந்த நிகழ்வைப் புறந்தள்ளாமல் பலமட்ட அதிகாரத்தை எதிர்கொண்ட உறுதியான போராட்டமாகும். இந்தப் போராட்டமே ஒரு வெற்றிதான் ஏனெனில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் எந்தவொரு போராட்டத்தையும் முன்னெடுக்க முடியாத சூழல் இன்று நிலவி வருகிறது. அந்த மோசமான நிலைமையை ஃபாக்ஸ்கான் பெண் தொழிலாளர்கள், தங்கள் வீரம் செறிந்த போராட்டத்தால் உடைத்து எறிந்து தொழிலாளர் வர்க்கத்திற்கு முன்னோடியாக இருந்து வழி காட்டியுள்ளனர்.

ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணி புரிந்து வரும் பெண் தொழிலாளர்களின் போராட்டம் 2016 ஆம் ஆண்டு பெங்களூருவில் நடந்த பெண் தொழிலாளர்களின் வீரம் செறிந்த போராட்டத்தை நமக்கு நினைவூட்டுகிறது. அந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 18, 19 ஆகிய இரு நாட்களில் பெங்களூருவில் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்களில் பணி புரிந்த ஒரு இலட்சத்திற்கும் மேலான பெண் தொழிலாளர்கள் அந்த நகரையே தங்களுடைய போராட்டத்தால் நிலைகுலைய வைத்தனர். தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து பிடிக்கும் சேமநிதி வைப்பிலிருந்து அவர்கள் ஓய்வு பெறும் வரையிலும் பணத்தை எடுக்க முடியாது என்ற இந்திய ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத ஆணையை எதிர்த்து அந்தப் பெண் தொழிலாளர்கள் வீரம் செறிந்த போராட்டத்தைத் தொடங்கினர். இரண்டு நாட்களில் ஒன்றிய அரசை மண்டியிட வைத்தனர். ஒன்றிய அரசு அந்தத் தொழிலாளர் விரோத ஆணையை உடனடியாக இரத்து செய்தது. ஃபாக்ஸ்கான் தொழிலாளர்களின் போராட்டத்திற்கும் அந்தப் போராட்டத்திற்கும் நெருங்கிய ஒற்றுமைகள் நிலவுகின்றன. இரண்டு போராட்டங்களையும் நடத்தியவர்கள் பெண் தொழிலாளர்கள். இரண்டிலும் அமைப்பாக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் இல்லை. இரண்டு போராட்டங்களும் தன்னெழுச்சியாக அமைந்தாலும் பெண் தொழிலாளர்கள் தங்களுடைய வீரம் செறிந்த போராட்டத்தை உறுதியுடன் நடத்தியுள்ளனர். பாட்டாளி வர்க்கத்திற்கு முன்னோடியாக நின்று வழி காட்டியுள்ளனர். சமூக மாற்றத்தில் தாங்கள் வலிமையான, மறுக்க முடியாத சக்தி என்பதை வெளிப்படுத்தியுள்ளனர்.

அது மட்டுமல்ல. 1917 ஆம் ஆண்டு ரசியாவில் பிப்ரவரிப் புரட்சியைத் தொடங்கி வைத்தவர்களே பெண் தொழிலாளர்கள் தான் என்பதை வரலாற்று உண்மை நமக்குத் தெரிவிக்கிறது. இலட்சக்கணக்கான பெண் தொழிலாளர்கள் “ரொட்டி வேண்டும்” என்ற முழக்கத்துடன் பெட்ரோகிரேடு நகரின் வீதிகளில் தங்களுடைய புரட்சிகரமான போராட்டத்தைத் தொடங்கினர். அந்தப் போராட்டத்தின் வெடிப்பு சிறு தீப்பொறியாக அமைந்து இறுதியில் பெரும் காட்டுத் தீயாக மாறியது. அது ரசியாவில் ஜார் அரசனின் கொடுங்கோலாட்சிக்கு முடிவு கட்டியது என்பதை நாம் அறிவோம்.

முதலாளிய ஊடகங்கள் இன்று இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைப் பெருமையாக பேசிக் கொண்டு உள்ளன. இந்தியா வல்லரசு ஆகப் போகிறது என்ற மாயைகளைக் கட்டவிழ்த்துவிட்டு வருகின்றன. ஆனால், உண்மையில் இங்கே மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளனர். ஏற்கனவே அபாயகரமான நிலைமையில் வாழ்வின் விளிம்பில் இருக்கும் தொழிலாளி வர்க்கத்தை வேலையிழப்பு, போதுமான கூலி கிடைக்கப் பெறாமை ஆகியவற்றோடு கட்டுப்பாடற்ற விலைவாசி உயர்வும் மென்மேலும் நெருக்கடிக்குள் தள்ளி வருகிறது. நாட்டில் வரலாறு காணாத அளவுக்கு ஏற்றத்தாழ்வு அதிகரித்துள்ளது. நடுத்தர வர்க்கங்களும், கீழ் நடுத்தர வர்க்கங்களும், சிறு உற்பத்தியாளர்களும் தமது வருமானத்தை இழந்து மென்மேலும் ஓட்டாண்டிகளாக மாற்றப்பட்டு வருகின்றனர். மக்கள் மத்தியில் வறுமையும் பட்டினியும் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. ஆனால் அதே சமயத்தில் அதானி, அம்பானி போன்ற விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில முதலாளிகளின் கைகளில் இந்த நாட்டின் செல்வம் மென்மேலும் குவிகிறது. அவர்களின் சுரண்டலையும் அதிகாரத்தையும் சுகபோக ஆடம்பர வாழ்வையும் அதிகார வர்க்கமும் முதலாளிய ஆளும் கட்சிகளும் காப்பாற்றி வருகின்றன. ஒட்டு மொத்த சமூகமும் வெடிக்கக் காத்திருக்கும் ஒரு எரிமலையாக, நீறு பூத்த நெருப்பாக இருந்து வருகிறது. எந்த நேரமும் அது வெடிக்கலாம். அந்த வெடிப்பில் சகல அழுக்குகளும் எரிக்கப்பட்டு, சுரண்டலும் ஏற்றதாழ்வுகளும் அடக்குமுறைகளும் ஒழிக்கப்பட்டு சுதந்திரமான புதிய சமதர்ம சமூகம் ஒன்று மலரும்.

                                                                                                -  அறிவன்

Comments

  1. பாக்ஸ்கான் தொழிலாளர்களுடைய போராட்டம் வெல்க!
    தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தொழிலாளர் ஊதியங்கள் ஏன் எப்போதும் மிகவும் குறைவாகவே இருக்கின்றன?

  உங்கள் உழைப்புக்கு ஏற்ற மதிப்புக் கிடைப்பதில்லை , உங்களுக்குக் கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பை விடப் பலமடங்கு உழைத்திருப்பதாக எப்போதாவது நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா ? கார்ல் மார்க்ஸ் உங்களைப் புரிந்துகொள்கிறார் . ஒட்டுமொத்தத் தொழிலாளர் வர்க்கமும் முதலாளித்துவ வர்க்கத்தால் சுரண்டப்படுகிறது என்று அவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் வாதிட்டார் . இது வெறும் மிகைப்படுத்தல் கூற்று அல்ல , மாறாக ஒரு பொருளாதார உண்மையாகும் . தொழிலாளர்கள் உருவாக்கும் மதிப்பின் ஒரு பகுதியைத் திட்டமிட்ட முறையில் திருடுவதன் மூலம் மிகுதியான செல்வத்தைக் குவிப்பதே   முதலாளித்துவத் தொழில்நிறுவனத்தின் முழுமையான நோக்கமாகும் . இந்தச் செயல்முறையே சுரண்டல் என்று குறிப்பிடப்படுகிறது . தொழிலாளர்களுக்கு அவர்களுடைய தகுதிக்குரிய ஊதியம் அளிக்கப்படுகிறது என்று முதன்மைப்போக்கு பொருளியலாளர்கள் கூறிக்கொள்கின்றனர் . தொழிலாளர்களின் ஊதியங்கள் அவர்களால் உற்பத்திப் பொருளுக்கு “ கூட்டப்படும் மதிப்பை ” குறிக்கின்றன தூரத்து நாடுகளில் பழிபாவத்திற்கு அஞ்சாத முதலாளிகள்

பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் சீர்த்திருத்தவாதத்தில் வீழ்ந்துள்ள இடதுசாரி இயக்கங்கள்

இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இடதுசாரிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் சில அமைப்புகளின் போக்குகள் அவர்களின் சீர்த்திருத்தவாதக் கண்ணோட்டத்தை அம்பலபடுத்தி வருகின்றன. நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த காங்கிரசு கட்சி இந்திய முதலாளி வர்க்கத்தின் வளர்ச்சிக்கும் சுரண்டலுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்தும் , பெரும் மூலதனம் தேவைப்படும் கனரகத் தொழில்களை மக்களுடைய வரிப் பணத்திலிருந்து அமைத்துக் கொடுத்தும், ஆரம்பக் கட்டத்தில் பன்னாட்டு மூலதனங்களின் போட்டியிலிருந்து அவர்களைப் பாதுகாத்தும் , பின்னர் இந்திய முதலாளிகள் சர்வதேச அளவில் சந்தையைப் பிடிக்கவும் , முதலீடு செய்யவும் உலகமயமாக்கல் கொள்கையை முன்னெடுத்தும் தொடர்ந்து சேவை செய்து வந்தது. அதே நேரத்தில் தொழிலாளர்களின் நலனுக்காகவும் , விவசாயிகளின் நலனுக்காகவும் , ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும் போராடிய இடதுசாரிகள் , ஜனநாயக அமைப்புகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி ஒடுக்கி வந்தது. வீரம் செறிந்த தெலுங்கானா மக்களின்

வேலை பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் என்னும் நிறுவனம் ஒசூர் பகுதியில் 1998 முதல் செயல்பட்டு வருகின்றது . இது வெள்ளீயத்தால் ( தகரத்தால் ) ஆன கொள்கலன்களை , தகரக்குவளைகளை உற்பத்தி செய்கின்றது . இந்த ஆலையின் முதலாளி இந்தியாவை பூர்வீமாக கொண்டவராக இருந்தாலும் , தற்பொழுது கென்யாவில் வசித்து வருகின்றார் . தொடக்கம் முதலே இந்த ஆலையானது தொழிலாளர்களின் உழைப்பை வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்து வருகின்றது . வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் நீண்டநாட்கள் பணிபுரிந்து வந்தாலும் அவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யாமலும் , நியாயமான ஊதியம் வழங்காமலும் தொழிலாளர்களை வஞ்சித்து வந்தது . தொழிலாளர்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து 52 தொழிலாளர்கள் மட்டும் நிரந்தரம் செய்யப்பட்டனர் . இவர்களும் ஆறு வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் , பயிற்சித் தொழிலாளர்கள் என மாற்றிமாற்றி அவர்களை வகைபடுத்தி பின்னரே நிரந்தரம் செய்யப்பட்டனர் . அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைக்கப்பட்டுச் சுரண்டப்பட்டு வருகின்றனர் . தற்பொழுது வரை 450 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்பட