Skip to main content

ரசியா- உக்ரைன் போரும் மக்களும்

 கெட்ட போரிடும் உலகை

வேரொடு சாய்ப்போம்.

-        பாரதிதாசன்

கடந்த மாதம் பிப்ரவரி 24 ந் தேதி உக்ரைனின் மீது தொடங்கிய ரசியப் படைகளின் தாக்குதல்கள் தொடர்ந்து இன்று (மார்ச் 20) இருபத்தைந்தாவது நாளாகத் தொடர்கிறது. ரசியாவின் மேற்கு எல்லை ஓரமாக உள்ள உக்ரைன் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில் (NATO) சேர முயற்சி செய்து கொண்டிருந்தது. அதை ரசியா விரும்பவில்லை. ஏனென்றால் அவ்வாறு உக்ரைன் நேட்டோவில் சேர்ந்து விட்டால் மெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் படைகள் உக்ரைனின் பாதுகாப்பு என்ற பெயரில் ரசியாவின் மேற்கு எல்லையில் கொண்டு வந்து நிறுத்தப்படும். அணு ஆயுதங்கள் உட்பட அனைத்துப் படைக்கலன்களும் ஏவுகணைகளும் ரசியாவின் எல்லையில் குவிக்கப்படும். அது ரசியாவின் பாதுகாப்புக்குப் பேராபத்தாக முடியும் என ரசியா கருதியது. அதனால் உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேருவதைக் கடுமையாகப் புடின் எதிர்த்தார்


மேலும் நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைந்து விட்டால், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் தனக்குத் துணைக்கு வரும் என்ற துணிச்சலில், கருங்கடல் பகுதியில் உக்ரைன் தனது மேலாதிக்கத்தை நிறுவி, ரசியாவின் கடல் வழிப் போக்குவரத்தைத் தடுக்கும் அபாயமும் உள்ளது. கருங்கடல் பகுதியைத் துண்டிப்பதன் மூலம் மத்தியதரைக் கடல் வழியையும் துண்டிக்க முடியும். அது ரசியாவின் பொருளாதாரத்துக்குப் பேராபத்தாக முடியும். அதனால் பொருளாதார ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியில், உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேருவதன் மூலம், நேட்டோவின் ஆதிக்கம் நிறுவப்படுவதை ரசியா சிறிதும் விரும்பவில்லை.

சோவியத் ரசியா உடைந்த பிறகு, சோவியத்துடன் வார்சா ஒப்பந்தத்தில் கூட்டாக இருந்த பல்கேரிய, ருமேனியா, லித்வியா, எஸ்டோனியா போன்ற பல கிழக்கு ஐரோப்பிய நாடுகள் நேட்டோ அமைப்பில் இணைந்தன. அதன் மூலம் நேட்டோ அமைப்பு தன் ஆதிக்கத்தை ரசியாவின் மேற்கு எல்லை வரையிலும் நீட்டித்துள்ளது. இந்த நிலையில் உக்ரைனும் நேட்டோவில் இணைந்து விட்டால் நேட்டோ ரசியாவின் வாசற்படியில் வந்து விடும்.

2014ல் உக்ரைனின் அதிகாரத்தில் இருந்த விக்டர் யானுகொவித்ச் ரசியாவிற்கு ஆதரவானவராக இருந்தார். அவருக்கு எதிராக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் ஆதரவாளர்களும் நவ நாஜிகளும் மக்களைத் தூண்டி விட்டதன் மூலம் அவரை ஆட்சியிலிருந்து வீழ்த்தினர். அவர் ரசியாவில் தஞ்சம் புகுந்தார். உக்ரைன் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் செல்வாக்கு மண்டலமாக மாறியதை ரசியா விரும்பவில்லை. உக்ரைனின் தெற்குப் பகுதியில் இருந்த க்ரீமியாவை ரசியா கைப்பற்றித் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது

ஏற்கனவே உக்ரைனின் கிழக்குப் பகுதியில், அதாவது ரசியாவின் மேற்கு எல்லையை ஒட்டிய பகுதியில், டோனேத்ஸ் (Donetsk), லுஹான்ஸ் Luhans) ஆகிய இரு மாநிலங்கள் உக்ரைனில் இருந்து தனி நாடுகளாகப் பிரிந்து போவதற்காகப் போராடி வருகின்றன. தனி நாடு கோரிப் போராடி வரும் கிளர்ச்சிப் படைகளை எதிர்த்து உக்ரைன் படைகளும் துணை இராணுவப் படைகளும் தாக்குதலைத் தொடுத்து வருகின்றன. துணை இராணுவப் படையினருடன் நவ நாஜிகளும் சேர்ந்து கிளர்ச்சியாளர்களைத் தாக்கி வருகின்றனர். உக்ரைனின் மக்கள் தொகையில் 30% மக்கள் ரசிய மொழி பேசுபவர்கள். இந்த நிலையில், ரசிய மொழி பேசும் மக்களை நவ நாஜிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற காரணத்தைக் கூறி ரசியப் படைகளை உக்ரைனில் இறக்கியுள்ளார் புடின். ஆனால், உண்மையான நோக்கம் உக்ரைன் நேட்டோவில் சேர்வதைத் தடுப்பதுதான்.

தொடர்ந்து இருபத்தைந்தாவது நாளாக நடந்து வரும் இந்தப் போரில் இது வரையிலும் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என முப்பது இலட்சத்திற்கும் மேலான மக்கள் தங்கள் இருப்பிடங்களை இழந்தும், உடைமைகளை இழந்தும், உண்பதற்கு உணவின்றியும் உக்ரைனை விட்டு வெளியேறி உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆயிரக்கணக்கான மக்களும், இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான படை வீரர்களும் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரம் குடியிருப்புகள் குண்டு வீச்சினால் தகர்த்துத் தரைமட்டமாக்கப்பட்டு வருகின்றன. பல்லாயிரக்கணக்கான தொழிற்சாலைகள் அழிக்கப்பட்டு வருகின்றன. சமூகத்தின் ஒரு பகுதி அழிக்கப்பட்டு வருவதுடன், சமூகம் இது நாள் வரையிலும் கடினப்பட்டு உழைத்துச் சேமித்து வைத்துள்ள அனைத்துச் செல்வங்களையும் இந்தப் போர் அழித்து வருகிறது.  



உக்ரைனின் மீதான ரசியாவின் தாக்குதலைக் காட்டுமிராண்டித்தனமானது எனக் கூறி அமெரிக்க, ஐரோப்பிய நேட்டோ நாடுகளும், ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளும் கடுமையாகச் சாடி வருகின்றன. அமெரிக்காவும் இங்கிலாந்தும் ரசியாவின் மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளன. ரசிய முதலாளிகளின் அயல்நாட்டு வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளன. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் முதலாளிய நிறுவனங்கள் ரசியாவில் தங்கள் பணியை முடக்கியுள்ளன.

உக்ரைனின் இறையாண்மையை ரசியா மதிக்கவில்லை எனக் கூறி ரசியாவின் ஆக்கிரமிப்பு யுத்தத்தை உலகில் உள்ள அனைத்து நாடுகளும் கண்டிக்க வேண்டும் என்றும், அமெரிக்கா ரசியாவின் மீது விதித்துள்ள பொருளாதாரத் தடைகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அமெரிக்காவும் அதன் கூட்டாளி நாடுகளும் கோரி வருகின்றன. தாங்கள் நாகரிகமானவர்கள் என்றும் ரசியா காட்டுமிராண்டித்தனமான நாடு என்றும் கூறிக் கொள்கின்றன. ஆனால் கடந்தகால வரலாறு அவர்கள் எவ்வளவு போலித்தனமானவர்கள் என்பதை அம்பலப்படுத்துகின்றன.

1970களில் சின்னஞ்சிறிய வியட்நாம் நாட்டின் மீது வரலாறு காணாத அளவுக்கு உயிர்களுக்கும் இயற்கைச் சூழலுக்கும் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய நாசகரக் குண்டுகளைப் பொழிந்து பல்லாயிரக்கணக்கான மக்களை அமெரிக்க இராணுவம் கொன்று குவித்ததை வரலாற்றில் இருந்து என்றும் மறைக்க முடியாது. 1990 களில் வளைகுடாப் போருக்குப் பிறகு ஈராக்கின் மீது பொருளாதாரத் தடைகளைக் கொண்டு வந்ததன் மூலம் அந்த நாட்டில் தேவையான மருந்துகள் கிடைக்காமல் ஐந்து இலட்சத்திற்கும் மேலான குழந்தைகள் இறப்பதற்குக் காரணமாக இருந்தது இந்த அமெரிக்காதான். ஈராக்கில் உள்ள எண்ணை வளத்தைக் கைப்பற்ற, சதாம் உசேன் ஆட்சியின் கீழ் ஈராக்கில் பேரழிவை உண்டாக்கும் ஆயுதங்கள் தயாரிக்கப்படுகின்றன என்ற பொய்யான காரணத்தைக் கூறி ஈராக்கின் மீது 2003ல் அமெரிக்கா போர் தொடுத்ததையும் அதற்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்ததையும் மக்கள் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். ஆயிரக்கணக்கில் அந்த நாட்டு மக்கள் கொல்லப்பட்டனர். அந்த நாட்டின் செல்வங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. சதாம் உசேன் காட்டுமிராண்டித்தனமாகக் கொல்லப்பட்டார். அதே போல லிபியாவின் எண்ணை வளத்தைக் கைப்பற்ற லிபியாவின் கடாபியையும் கேவலமாகக் கொன்றது அமெரிக்கா; சிரியாவில் கிளர்ச்சிப் படைகளுக்கு ஆதரவு எனக் கூறி ஆயுதங்களை இன்றும் வழங்கி வருகிறது. தனது அடியாளான இஸ்ரேல் பாலஸ்தீனர்களைக் கொன்று வருவதைத் தொடர்ந்து ஆதரித்து வருகின்றது அமெரிக்கா. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் எனக் கூறித் தனது சர்வாதிகார ஆட்சியை நடத்தி வந்தது அமெரிக்கா. இப்பொழுது அந்த நாட்டு மக்களைப் பட்டினியிலும் வறுமையிலும் தள்ளி விட்டு வெளியேறியுள்ளது. இதை எல்லாம் உலக மக்களின் கண்களிலிருந்து மறைத்து விடலாம் எனக் கருதுகின்றன அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும்.

அமெரிக்கா உலகம் முழுவதும் தனது ஏகபோக முதலாளிகளின் சுரண்டலுக்காகக் கட்டவிழ்த்துவிட்ட இந்தக் காட்டுமிராண்டிதத்தனங்களைப் பற்றி எல்லாம் காசுக்காக சோரம் போகும் முதலாளிய ஊடகங்கள் இதுநாள் வரையும் எதுவும் பேசவில்லை; ஆனால் இன்று ரசியாவின் தாக்குதலை மட்டும் உலக அமைதிக்கும், மனிதகுலத்துக்கும் ஆபத்து என்று கூறிப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டு வருகின்றன; ஒவ்வவொரு தாக்குதலையும் துல்லியமாகப் படம் பிடித்து உலகம் முழுவதும் பரப்பி வருகின்றன. அதன் மூலம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மீதான தங்களுடைய அடிமைத்தனமான விசுவாசத்தைக் காட்டிக் கொள்கின்றன.

ஜனநாயகத்தைக் காப்பது, பயங்கரவாதத்தை ஒடுக்குவது,” “அமைதியை ஏற்படுத்துவது என்னும் அமெரிக்காவின் அலங்காரமான வார்த்தைகளின் பின்னால் ஒளிந்திருப்பது அமெரிக்க ஏகபோக மூலதனங்களின் சுரண்டல் நலன்தான். அதே போல நவ நாஜிகளிடமிருந்து ரசிய மொழி பேசுபவர்களைக் காப்பாற்றும் நோக்கத்துடன் புடின் ரசியப் படைகளை இன்று உக்ரைனில் இறக்கியிருப்பதாகக் கூறிக் கொண்டாலும் அதன் பின்னால் ஒளிந்திருப்பதும் ரசிய ஏகபோக மூலதனங்களின் சுரண்டல் நலன்தான்.

உக்ரைன் ஐரோப்பாவிலேயே அதிக நிலப் பரப்பைக் கொண்ட இரண்டாவது நாடாக உள்ளது; எண்ணெய் வளமும், கனிம வளமும், வளமான விவசாய நிலமும், இயற்கை வளங்களும் நிறைந்த நாடாக உள்ளது. இந்த வளங்களைக் குறி வைத்தே அமெரிக்க, ஐரோப்பிய ஏகபோக முதலாளிகளும் ரசிய ஏகபோக முதலாளிகளும் செயல்பட்டு வருகின்றனர்



சோவியத் ஒன்றியம் உடைந்த பிறகு பொருளாதாரரீதியாகப் பலவீனமாக இருந்த ரசியா ஈராக், லிபியா, ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை. ஆனால் கடந்த இருபது ஆண்டுகளில் தனது பொருளாதாரப் பலத்தை மீட்டெடுத்த ரசியா இப்பொழுது அமெரிக்காவுடன் மீண்டும் செல்வாக்கு மண்டலங்களுக்காகப் போட்டியிடத் தொடங்கியுள்ளது.

ஏகபோக மூலதனங்கள் தம்முடைய சந்தைக்காகவும் மூலப் பொருட்களுக்காகவும் மலிவான உழைப்புக்காகவும் உலகம் முழுவதும் தங்களுடைய செல்வாக்கு மண்டலங்களை விரிவாக்கிக் கொள்ளவும், ஏற்கனவே இருக்கும் செல்வாக்கு மண்டலங்களைத் தக்க வைத்துக் கொள்ளவும் தொடர்ந்து கடும் போட்டியில் ஈடுபட்டு வருகின்றன. வர்த்தகப் போரில் ஒன்றையொன்று வீழ்த்த முயற்சி செய்து வருகின்றன. அது முடியாதபோது ஆயுதப் போரில் இறங்குகின்றன. அதன் மூலம் சமூகத்தின் அழிவுக்கும் செல்வங்களின் அழிவுக்கும் காரணமாக அமைகின்றன.

போர்களும் அதில் ஏற்படும் அழிவுகளும் கூட ஏகாதிபத்தியங்களுக்குப் பெரும் இலாபம் அளிக்கக் கூடியவையாக அமைகின்றன. உக்ரைனுக்கு உதவுகின்றோம் என்ற பெயரில் இன்று அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும், ஆஸ்திரேலியாவும் தங்களுடைய ஆயுதங்களை விற்றுக் காசாக்கிக் கொள்கின்றனர். அந்த நாட்டைச் சேர்ந்த ஆயுதம் தயாரிக்கும் முதலாளிகள் இந்தப் போரின் மூலம் பெரும் இலாபம் அடைந்து வருகின்றனர். அவ்வாறே ரசிய முதலாளிகளும் பெரும் இலாபம் அடைந்து வருகின்றனர். இவ்வாறு முதலாளிகள் மக்களின் சாவில் பெரும் இலாபம் அடையும்சாவு வியாபாரிகளாக இருக்கின்றனர்




போருக்குப் பிறகு முற்றிலும் அழிந்த நிலையில் இருக்கும் உக்ரைனுக்கு மறுகட்டமைப்பு செய்வதற்கான உதவி என்ற பெயரில் அமெரிக்காவும் அதன் கூட்டாளி நாடுகளும் மூலதனங்களை அந்த நாட்டில் குவிக்கும். அதன் மூலம் ஏராளமான இலாபங்களைக் கொள்ளையடிக்கும். இவ்வாறு போரின் போது ஆயுத விற்பனையிலும், அதன் பிறகு மறுகட்டமைப்பிலும் ஏகாதிபத்தியங்கள் கொள்ளையடிக்கும். யானை இருந்தாலும் ஆயிரம் பொன், யானை இறந்தாலும் ஆயிரம் பொன் என்பதைப் போல ஒரு நாடு அழிந்தாலும் சரி, வாழ்ந்தாலும் சரி ஏகாதிபத்தியங்களைப் பொறுத்த வரையிலும் அவற்றிற்குக் கொழுத்த இலாபம்தான்.

ஆனால் மக்களுக்கோ எப்பொழுதும் பேரழிவுதான். யுத்த காலத்திலும் மக்கள் அழிவுக்கு உள்ளாகின்றனர்; தமது உயிர்களை, உடைமைகளை இழக்கின்றனர். யுத்தம் முடிந்த பிறகும் நாட்டை மறு கட்டமைப்புச் செய்வதற்கான செலவு முழுவதும் அந்த நாட்டின் மக்கள் மீது வரியாகச் சுமத்தப்படும்

2008ல் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியிலிருந்து உலகம் முழுவதும் முதலாளியம் இன்னும் மீள முடியாத நிலையில் உள்ளது. இடையில் எதிர்பாராது வந்த கொரானாப் பெரும் தொற்று ஏற்கனவே வீழ்ச்சியடைந்திருந்த பொருளாதாரத்தை மேலும் அதலபாதாளத்தில் தள்ளியுள்ளது. உலகெங்கும் வேலையில்லாத் திண்டாட்டம் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இந்தப் பொருளாதார வீழ்ச்சியிலிருந்தும், தேக்கத்திலிருந்தும் முதலாளியம் விடுபட ரசிய- உக்ரைன் போர் எதிர்பாராது வந்த பெரும் உதவியாக அமையும் எனக் கருதலாம். ஆயுத உற்பத்தி, மறுகட்டுமானத்திற்குத் தேவையான பொருட்களின் உற்பத்தி என்ற பெயரில் அந்தந்த நாடுகளில் உற்பத்தி மீண்டும் முடுக்கிவிடப்படும். அதன் மூலம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். முதலாளியம் தற்காலிகமாகத் தன்னை நெருக்கடியிலிருந்து காப்பாற்றிக் கொள்ளமுடியும்.  




இவ்வாறுதான் நெருக்கடி ஏற்படும் ஒவ்வொரு முறையும் போரின் மூலம் சமூகத்தின் ஒரு பகுதியை அழித்தும், அதன் செல்வங்களை அழித்தும் முதலாளியம் தன்னைக் காப்பாற்றிக் கொள்கிறது. இந்தப் புவிக்கோளத்தில் இலாபத்திற்கான உற்பத்திமுறையைக் கொண்டுள்ள முதலாளியம் நீடிக்கும் வரையிலும், அதனைக் கட்டிக் காப்பாற்றி வரும் முதலாளிய வர்க்க அரசுகள் நீடிக்கும் வரையிலும் போர்களை இல்லாமல் ஆக்க முடியாது. சமூகத்தின் அழிவையும் தடுக்க முடியாது. உலகம் முழுவதும் இந்த முதலாளிய அமைப்பை ஒழித்து, சுரண்டலற்ற, மக்களின் நலன் ஒன்றே அடிப்படை என்ற குறிக்கோளைக் கொண்ட சோசலிச உற்பத்தி முறையை நிறுவுவதன் மூலமே சமூகம் அழிவிலிருந்தும் காட்டுமிராண்டித்தனத்திலிருந்தும் விடுபட முடியும்

 

-         புவிமைந்தன்

                                                                               சோசலிசத் தொழிலாளர் இயக்கம் 

Comments

Popular posts from this blog

தொழிலாளர் ஊதியங்கள் ஏன் எப்போதும் மிகவும் குறைவாகவே இருக்கின்றன?

  உங்கள் உழைப்புக்கு ஏற்ற மதிப்புக் கிடைப்பதில்லை , உங்களுக்குக் கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பை விடப் பலமடங்கு உழைத்திருப்பதாக எப்போதாவது நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா ? கார்ல் மார்க்ஸ் உங்களைப் புரிந்துகொள்கிறார் . ஒட்டுமொத்தத் தொழிலாளர் வர்க்கமும் முதலாளித்துவ வர்க்கத்தால் சுரண்டப்படுகிறது என்று அவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் வாதிட்டார் . இது வெறும் மிகைப்படுத்தல் கூற்று அல்ல , மாறாக ஒரு பொருளாதார உண்மையாகும் . தொழிலாளர்கள் உருவாக்கும் மதிப்பின் ஒரு பகுதியைத் திட்டமிட்ட முறையில் திருடுவதன் மூலம் மிகுதியான செல்வத்தைக் குவிப்பதே   முதலாளித்துவத் தொழில்நிறுவனத்தின் முழுமையான நோக்கமாகும் . இந்தச் செயல்முறையே சுரண்டல் என்று குறிப்பிடப்படுகிறது . தொழிலாளர்களுக்கு அவர்களுடைய தகுதிக்குரிய ஊதியம் அளிக்கப்படுகிறது என்று முதன்மைப்போக்கு பொருளியலாளர்கள் கூறிக்கொள்கின்றனர் . தொழிலாளர்களின் ஊதியங்கள் அவர்களால் உற்பத்திப் பொருளுக்கு “ கூட்டப்படும் மதிப்பை ” குறிக்கின்றன தூரத்து நாடுகளில் பழிபாவத்திற்கு அஞ்சாத முதலாளிகள்

பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் சீர்த்திருத்தவாதத்தில் வீழ்ந்துள்ள இடதுசாரி இயக்கங்கள்

இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இடதுசாரிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் சில அமைப்புகளின் போக்குகள் அவர்களின் சீர்த்திருத்தவாதக் கண்ணோட்டத்தை அம்பலபடுத்தி வருகின்றன. நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த காங்கிரசு கட்சி இந்திய முதலாளி வர்க்கத்தின் வளர்ச்சிக்கும் சுரண்டலுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்தும் , பெரும் மூலதனம் தேவைப்படும் கனரகத் தொழில்களை மக்களுடைய வரிப் பணத்திலிருந்து அமைத்துக் கொடுத்தும், ஆரம்பக் கட்டத்தில் பன்னாட்டு மூலதனங்களின் போட்டியிலிருந்து அவர்களைப் பாதுகாத்தும் , பின்னர் இந்திய முதலாளிகள் சர்வதேச அளவில் சந்தையைப் பிடிக்கவும் , முதலீடு செய்யவும் உலகமயமாக்கல் கொள்கையை முன்னெடுத்தும் தொடர்ந்து சேவை செய்து வந்தது. அதே நேரத்தில் தொழிலாளர்களின் நலனுக்காகவும் , விவசாயிகளின் நலனுக்காகவும் , ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும் போராடிய இடதுசாரிகள் , ஜனநாயக அமைப்புகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி ஒடுக்கி வந்தது. வீரம் செறிந்த தெலுங்கானா மக்களின்

வேலை பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் என்னும் நிறுவனம் ஒசூர் பகுதியில் 1998 முதல் செயல்பட்டு வருகின்றது . இது வெள்ளீயத்தால் ( தகரத்தால் ) ஆன கொள்கலன்களை , தகரக்குவளைகளை உற்பத்தி செய்கின்றது . இந்த ஆலையின் முதலாளி இந்தியாவை பூர்வீமாக கொண்டவராக இருந்தாலும் , தற்பொழுது கென்யாவில் வசித்து வருகின்றார் . தொடக்கம் முதலே இந்த ஆலையானது தொழிலாளர்களின் உழைப்பை வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்து வருகின்றது . வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் நீண்டநாட்கள் பணிபுரிந்து வந்தாலும் அவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யாமலும் , நியாயமான ஊதியம் வழங்காமலும் தொழிலாளர்களை வஞ்சித்து வந்தது . தொழிலாளர்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து 52 தொழிலாளர்கள் மட்டும் நிரந்தரம் செய்யப்பட்டனர் . இவர்களும் ஆறு வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் , பயிற்சித் தொழிலாளர்கள் என மாற்றிமாற்றி அவர்களை வகைபடுத்தி பின்னரே நிரந்தரம் செய்யப்பட்டனர் . அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைக்கப்பட்டுச் சுரண்டப்பட்டு வருகின்றனர் . தற்பொழுது வரை 450 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்பட