இலங்கை மக்கள் வரலாறு காணாத கடுமையான பொருளாதார நெருக்கடியில் இன்று சிக்கிக் கொண்டுள்ளனர். அரிசி, காய்கறிகள், சமையல் எண்ணெய் என அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளன. எரிவாயு உருளைகள், மண்ணெண்ணெய், டீசல், பெட்ரோல் ஆகியவற்றுக்காக மக்கள் மணிக்கணக்கில் நீண்ட வரிசைகளில் காத்துக் கிடக்க வேண்டிய அவலநிலை. நாள் ஒன்றுக்கு பன்னிரண்டு, பதின்மூன்று மணி நேரம் மின் வெட்டு. மருத்துவமனைகளில் போதிய மருந்துகள் இல்லாததால் அறுவைச் சிகிச்சைகள் நடைபெறுவதில்லை. போதிய தாள்கள் இல்லாததால் பல செய்தித்தாள்கள் தங்கள் வெளியீட்டை நிறுத்தி விட்டன. எழுதுவதற்குத் தாள்களும் மையும் இல்லாததால் பள்ளிகளில் தேர்வுகள் தள்ளிப் போடப்பட்டுள்ளன.
வாழ்வா
சாவா என்ற நிலையில் மக்கள் எவ்வளவு நாட்கள் இருக்க முடியும்? இந்த நிலையில்தான்
இலங்கை மக்கள் அனைவரும் இன, மத வேறுபாடின்றி, ஆண்களும் பெண்களும் பேராசிரியர்களும்
மாணவர்களும் இளைஞர்களும் வழக்குரைஞர்களும் பேராயர்களும் பாதிரிமார்களும் வீதிகளில்
இறங்கி ஆட்சியாளர்களை எதிர்த்து மாபெரும் கிளர்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அடக்குமுறைக்
கருவிகளில் ஒன்றாக இருக்கும் காவல்துறையினரும் இந்தக் கிளர்ச்சியில் பங்கு
கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். “கோத்தபய பக்சேவே ஆட்சியை விட்டு வெளியேறு,”
“மகிந்த பக்சேவே ஆட்சிய விட்டு வெளியேறு” என ஆட்சியாளர்களின் இருப்பிடங்களைச்
சூழ்ந்து கொண்டு மக்கள் போராடி வருகின்றனர்.
சுகபோக,
ஆடம்பர வாழ்க்கை நடத்தி வரும் ஆட்சியாளர்களுக்கு மக்கள் படும் வேதனை எப்பொழுதும்
எந்த நாட்டிலும் புரிவதில்லை. எல்லா நாட்டிலுமுள்ள ஆட்சியாளர்களைப் போலவே
இலங்கையின் ஆட்சித் தலைவர் கோத்தபயாவும், தங்களுடைய அவல நிலையிலிருந்து
மீள்வதற்காகப் போராடும் மக்கள் அனைவரையும் தீவிரவாதிகள் என முத்திரை குத்தி,
நெருக்கடி நிலையை அறிவித்து நாடு முழுவதும் கடுமையான அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து
விட்டுள்ளார். பத்திரிகைகளையும் சமூக ஊடகங்களையும் முடக்கி வருகிறார்.
மக்களின்
கோபம்மிக்க போராட்டங்களை எதிர்கொள்ள முடியாத அமைச்சரவை கூண்டோடு பதவி
விலகியுள்ளது. மகிந்த ராஜபக்செவின் கட்சியிலிருந்த நாற்பத்திரண்டு பாராளுமன்ற
உறுப்பினர்கள் ஆட்சிக்கான தங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளனர். இது கோத்தபயாவின்
ஆட்சிக்குப் பெரும் அரசியல் நெருக்கடியைக் கொண்டு வந்துள்ளது.
இந்தக்
கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்குக் காரணம் இலங்கை ஆளும் வர்க்கம் தொடர்ந்து
பின்பற்றி வந்த அரசியல், பொருளாதார நடவடிக்கைகள்தான். ஈழத் தமிழர்களின் ஜனநாயகத்திற்கும்
சமத்துவத்திற்குமான நியாயமான கோரிக்கைகளை அங்கீகரிக்க மறுத்தது இலங்கை ஆளும்
வர்க்கம்; தனது அதிகாரத்தையும் சுரண்டலையும் தக்க வைத்துக் கொள்வதற்காக 1983 முதல்
2009 வரையிலும் இருபத்தாறு ஆண்டுகள் ஈழத் தமிழர்களின் போராட்டத்தை எதிர்த்துக்
கடுமையான உள்நாட்டுப் போரை நடத்தியது. இலட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தது.
பல்லாயிரக்கணக்கான மக்களை அகதிகளாக்கி நாட்டை விட்டு விரட்டியது. இந்தப்
போருக்காகத் தனது அனைத்து மூலாதாரங்களையும் செலவிட்டது. அன்னிய நாடுகளிடமும் பெரும்
அளவு கடன் வாங்கியது. இந்த நீண்ட போர் இலங்கையைப் பொருளாதார நெருக்கடியில்
வீழ்த்தியது. மேலும் 2008ல் உலகு தழுவிய அளவில் ஏற்பட்ட நிதி நெருக்கடியின்
காரணமாக இலங்கையின் அந்நியச் செலாவணியும் குறைந்தது.
பொருளாதார
நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்காக 2009ல் இலங்கை அரசு சர்வதேச நாணய நிதியத்திலிருந்து
(ஐ.எம்.எப்) 260 கோடி டாலரைக் கடனாகப் பெற்றது.
இரப்பர்,
தேயிலை, ஆயத்த ஆடைகள் ஆகியவற்றின் ஏற்றுமதி, சுற்றுலாப் பயணிகளின் வருகை, அன்னிய
நாடுகளில் வேலையில் இருப்பவர்கள் அனுப்பும் டாலர் ஆகியவற்றின் மூலமே இலங்கை அந்நியச்
செலாவணியைப் பெற்று வருகிறது. அதே சமயத்தில் எரிபொருள், வேதியியல் உரங்கள் என
அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றையும் அது இறக்குமதி செய்ய வேண்டிய நிலையில்
உள்ளது.
ஏற்றுமதிப்
பொருட்களின் விலை சர்வதேசச் சந்தையில் வீழ்ச்சி அடைந்ததைத் தொடர்ந்து அந்நியச்
செலாவணி இருப்பும் குறைந்தது. அதனால் 2016 முதல் 2019 வரையிலும் மூன்றாண்டுகளுக்கு
150 கோடி டாலரை ஐ.எம்.எப். இடமிருந்து அப்பொழுது ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசியக்
கட்சி மேலும் கடனாகப் பெற்றது.
அந்தக்
கடனுக்காக ஐ.எம்.எப். கடுமையான நிபந்தனைகளை விதித்தது. அவை: 2020ல் நிதிப்
பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5%க்கும் மேல் இருக்கக் கூடாது; வரிக்
கொள்கையையும், வரி நிர்வாகத்தையும் சீர்திருத்தி அமைக்க வேண்டும்; செலவுகளைக் குறைக்க
வேண்டும்; பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்க வேண்டும்; டாலருடனான பரிவர்த்தனை
விகிதங்களில் மாற்றம் செய்ய வேண்டும், அதாவது இலங்கையின் ரூபாய் மதிப்பைக் குறைக்க
வேண்டும்; அந்நிய முதலீடுகளுக்கு உள்ள தடைகளை நீக்க வேண்டும்.
ஆமை
புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படாது என்பார்கள். அதே போல ஐ.எம்.எப்.
புகுந்த நாடும் உருப்படாது என்பதற்கு இலங்கை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ஐ.எம்.எப்.
நிபந்தனைகளின்படி எடுக்கப்பட்ட பொருளாதார நடவடிக்கைகள் இலங்கையைப் பொருளாதார
நெருக்கடியிலிருந்து மீட்பதற்குப் பதிலாக அதனை மேலும் சீரழித்தது. 2015ல் 5% ஆக
இருந்த உள்நாட்டுப் பொருளாதார உற்பத்தியின் வளர்ச்சி 2019ல் 2.9% ஆகக் குறைந்தது.
2015ல் 31.2% ஆக இருந்த முதலீட்டு வீதம் 2019ல் 26.8% ஆகக் குறைந்தது. 2015ல் 28.8%
ஆக இருந்த சேமிப்பு வீதம் 2019ல் 24.6% ஆகக் குறைந்தது. மொத்த உள்நாட்டு
உற்பத்தியில் 2016ல் 14.1% ஆக இருந்த அரசுக்கான வருவாய் 2019ல் 12.6% ஆகக்
குறைந்தது. அதே சமயத்தில் 2015ல்மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 78.5% ஆக அரசின்
கடன் 2019ல் 86.8% ஆக உயர்ந்தது. ஐ.எம்.எப். வழிகாட்டுதல்கள் இலங்கைப்
பொருளாதாரத்தை மேலும் சீரழித்து அந்த நாட்டைக் கடன் பிடியில் சிக்க வைத்தது.
இந்த
நிலையில், 2019ல் ஏப்ரல் மாதம் ஈஸ்டர் நாளின் போது நடந்த கொடூரமான வெடிகுண்டு
தாக்குதல்கள் 253 மனித உயிர்களைக் குடித்தது. இந்தக் கொடூரமான நிகழ்வு இலங்கைக்கு
வரும் சுற்றுலாப் பயணிகளின் வரவைப் பெரும் அளவு குறைத்தது. அதன் விளைவாக அந்நியச்
செலாவணியின் வரத்து மேலும் வறண்டு போனது.
இலங்கையில்
சிங்கள இன மக்களிடையே இன வெறியைத் தூண்டி விட்டு அரசியல் இலாபம் அடைந்த அரசியல் கட்சிகளில்
முதன்மையானது இலங்கை பொதுஜன பெரமுணா. இந்தக் கட்சியை கோத்தபய ராஜபக்சேவின் குடும்பக்
கட்சி எனக் கூறலாம். ஈழத் தமிழர்களின் போராட்டத்தை அழித்தொழிப்பதில் பெரும்பங்கு
வகித்தது ராஜபக்சே குடும்பம். இவர்களின் கட்சி பல வரிச் சலுகைகளை அளிப்பதாக
வாக்குறுதி அளித்து 2019 நவம்பரில் ஆட்சியைப் பிடித்தது.
ஆட்சிக்கு
வந்ததும் கோத்தபய 2019 டிசம்பரில் மதிப்புக் கூட்டும் வரியை (value added tax)
15%லிருந்து 8% ஆகக் குறைத்தார். முன்பு இலங்கை ரூபாய் மதிப்பில் 1.2 கோடி அளவு
அல்லது அதற்கு மேலும் விற்பனை இருக்கும் நிறுவனங்கள் அனைத்தும் மதிப்புக் கூட்டு
வரியின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டியிருந்தது. ஆனால் கோத்தபய இலங்கை ரூபாய்
மதிப்பில் 30 கோடி வரை மதிப்புக் கூட்டும் வரியின் கீழ் நிறுவனங்கள் பதிவு
செய்யப்படத் தேவையில்லை என அறிவித்தார். அதன் மூலம் கொள்ளை இலாப வியாபாரிகளும்
வணிகச் சூதாடிகளும் கொழுக்க வழி வகுத்தார். அரசுக்கு மதிப்புக் கூட்டும் வரி
மற்றும் ஜி.எஸ்.டி. மூலம் கிடைத்து வந்த வரி 2019 மற்றும் 2020ல் பாதியாகக்
குறைந்தது.
மேலும்
வருமான வரி கட்டுவதற்கான வருமான உச்சவரம்பு இலங்கை ரூபாயின் மதிப்பில் ஐந்து
இலட்சமாக இருந்ததை முப்பது இலட்சமாக உயர்த்தினார் கோத்தபய. அதன் காரணமாக 2019
மற்றும் 2020-ல் வருமான வரி கட்டுபவர்களில் 33.5% குறைந்தனர். மொத்த உள்நாட்டு
உற்பத்தி மதிப்பில் வரிக் குறைப்பினால் ஏற்பட்ட இழப்பு மட்டும் 2% ஆகும். வரிச்
சலுகைகளினால் உயர் வருமானம் கொண்ட பகுதியினர் கொழுத்தனர்.
இத்தகைய
சலுகைகளினால் அரசுக்கு வருமானம் குறைந்தது. 2019ல் ஏற்பட்ட கொரானாப் பெரும்
தொற்றால் பொருளாதாரம் மேலும் நெருக்கடிக்கு உள்ளாகியது. ஏற்றுமதி பாதிக்கப்பட்டது.
வெளி நாட்டில் வேலை செய்யும் மக்களிடமிருந்து வரும் டாலர் வரவு குறைந்தது.
அந்நியச் செலாவணி குறைந்தது. நிதிப் பற்றாக் குறை அதிகரித்தது. அரசின் கடன் சுமை
அதிகரித்து 2021ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 119% ஆக உயர்ந்தது.
கடன்
சுமையில் மீள முடியாமல் சிக்கிக் கொண்ட இலங்கை அரசு அத்தியாவசியப் பொருட்களை வாங்கக்
கூட அந்நியச் செலாவணியைக் கையிருப்பாகக் கொண்டிருக்கவில்லை. அந்த நாட்டின்
விவசாயத்திற்குத் தேவையான வேதியியல் உரங்களை வெளி நாடுகளிலிருந்தே இறக்குமதி
செய்து வந்தது. தேவையான உரங்களை வாங்க அந்நியச் செலாவணி இல்லாத நிலையில் அரசு ஒரு
கோமாளித்தனமான கொள்கை முடிவை எடுத்தது. இனி இலங்கை முழுவதும் விவசாயம் 100% அங்கக
விவசாயமாக (organic farming) மாறும் என 2021 மே மாதம் திடீரென அறிவித்தது. வெளிநாடுகளிலிருந்து
உரங்கள் இறக்குமதி செய்வதைத் தடை செய்தது. இந்த முடிவு விவசாய உற்பத்தியைக்
கடுமையாகப் பாதிக்கும் என வேளாண்மை அறிவியலாளர்கள் அறிவித்தனர்; 25% முதல் 35% வரை
நெல், தேயிலை, தேங்காய் ஆகியவற்றின் விளைச்சல்கள் பாதிக்கும் என எச்சரித்தனர்.
விவசாயிகளும் இந்த முடிவைக் கடுமையாகத் தொடர்ந்து எதிர்த்து வந்தனர்.
இதன்
விளைவாக அரசு பணிந்து 2021 நவம்பரில் உரங்களின் இறக்குமதி மீதான தடையை நீக்கியது. இடைப்பட்ட
அந்த ஆறு மாத காலத்தில் விவசாய உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. தடை
நீக்கப்பட்டாலும் அந்நிய செலாவணி பற்றாகுறையால் உரங்களின் விலை கடுமையாக
உயர்ந்தது, இதனால் விவசாயிகள் உரங்களை வாங்கி பயிர் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இன்று அரிசிக்காக சீனாவிடமும் இந்தியாவிடமும் மியான்மாரிடமும் இலங்கை கையேந்தி
நிற்கிறது. உணவுப் பொருட்களின் பற்றாக் குறையினால் மக்கள் கடும் துயருக்கு ஆளாகி
வருகின்றனர். இந்த நிலையைப் பயன்படுத்திக் கொண்டு வியாபாரிகள் மக்களைக் கொள்ளை இலாபம்
அடித்து வருகின்றனர்.
கோத்தபய
ராஜபக்சே நாட்டின் தலைவர்; மகிந்த ராஜபக்சே நாட்டின் பிரதமர். அவருடைய மூன்று
சகோதரர்களும் ஒரு மகனும் அமைச்சர்கள். நாட்டின் முழுமையான அதிகாரம் இந்தக்
கும்பலின் கையில். இந்தக் கும்பலின் ஆட்சியினால் பெரும் பயன் அடைந்தவர்கள் இலங்கை
முதலாளிகள், அதிகார வர்க்கம், மேல்தட்டு வர்க்கங்கள், வியாபாரிகள், சீன, இந்திய
முதலாளிகள், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த ஏகபோக முதலாளிகள். இவர்கள்
அனைவரும் சேர்ந்து இலங்கையின் வளத்தையும் மக்களையும் கொள்ளையடித்து விட்டு, அந்த
நாட்டு மக்களைப் பற்றாக்குறையிலும், வறுமையிலும், துயரத்திலும் தள்ளி உள்ளனர்.
இலங்கை
மக்களை சிங்களர்கள், தமிழர்கள் என இனவெறி மூட்டி, ஒருவரோடு ஒருவரை மோதவிட்டு அரசியல்
இலாபம் அடைந்து வந்த ஆளும் முதலாளிய வர்க்கத்தின் ஏஜண்டுகளான அரசியல்வாதிகளின்
வேடம் இன்று முற்றிலும் கலைந்து விட்டது. சிங்களர்களும் தமிழர்களும் முஸ்லீம்களும்
இன்று தோளோடுதோள் இணைந்து ஆட்சியாளர்களை எதிர்த்துக் கிளர்ச்சி செய்து
வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் யாழ்ப் பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்களும் சிங்கள
மாணவர்களும் இணைந்து கோத்தபயாவின் மக்கள் விரோத ஆட்சிக்கு எதிராகப் பேரணிகளை நடத்தி
வருகின்றனர். முதலாளிய ஆளும் வர்க்கத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒரு புதிய
இலங்கை உருவாகிக் கொண்டிருக்கிறது.
கடுமையான
அரசியல், பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை முதலாளிய ஆளும் வர்க்கத்தை
எதிர்த்துக் குமுறும் எரிமலையாய் வெடித்து எழுந்துள்ள மக்களின் இந்தப் போராட்டம்
தன்னெழுச்சியானது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தன்னெழுச்சியான போராட்டம்
அதற்கே உரிய வரம்புகளைக் கொண்டுள்ளது. அது தொலைநோக்குப் பார்வையையும் பருண்மையான
திட்டத்தையும் கொண்டிருக்கவில்லை.
மக்களின்
எழுச்சியை ஒன்று திரட்டி, ஆற்றல் முழுவதையும் ஒருமுனைப்படுத்தி ஆளும் வர்க்கத்தை
வீழ்த்தி, முதலாளியச் சுரண்டலுக்கும் அடக்குமுறைக்கும் மாற்றாகப் பாட்டாளி வர்க்கத்தின்
தலைமையில் சுரண்டலற்ற, முழுமையான ஜனநாயகத்தைக் கொண்ட ஓர் ஆட்சியை நிறுவுவதற்கு
மக்களின் செல்வாக்கைப் பெற்றுள்ள வலிமையான ஒரு புரட்சிகரக் கம்யூனிஸ்ட் கட்சி தேவை.
அத்தகைய கட்சி இருந்தால் மட்டுமே சமூகத்தை அடுத்தக் கட்டத்தை நோக்கி வழி நடத்திச்
செல்ல முடியும்.
புவிமைந்தன்
சோசலிசத் தொழிலாளர் இயக்கம்
Comments
Post a Comment