இந்திய அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோதச் சட்டங்களுக்கு எதிராக
10க்கும் மேற்பட்ட மத்திய தொழிற்சங்கங்களின்
சார்பில் நாடு தழுவிய 48 மணி நேர பொது வேலை நிறுத்தம் கடந்த மார்ச் மாதம் 28, 29
ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
கடந்த சில ஆண்டுகளாகவே ஆண்டுக்கு ஒருமுறை
நடத்தப்படும் இந்தப் பொது வேலைநிறுத்தம் வெறும் சடங்குத்தனமாகவே தொடர்ந்து நடத்தப்பட்டு
வருகின்றது.
பல ஆண்டுகளாகப் பொதுக் கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப் பெறும் இந்த வேலைநிறுத்தங்கள்
ஆளும்வர்கக்கங்களையோ அல்லது அதற்குத் துணை நிற்கும் அரசாங்கத்தையோ சிறிதும் அசைக்க
முடியவில்லை. ஆட்சியாளர்கள் அதைச் சிறிதும் சட்டை செய்வதில்லை. போதுமான தயாரிப்புகள்
இல்லாமல், முறையான பிரச்சாரங்கள் இல்லாமல்,
பரந்துபட்ட அளவில் தொழிலாளர்களை அணி திரட்டாமல்,
மேம்போக்கான அறிவித்தல்களின் மூலம்,
பெயரளவில்தான் தொழிலாளர்கள் அணி
திரட்டப்படுகின்றனர். தொழிலாளர்களிடம் ஆளும் முதலாளிய வர்க்கத்தைப் பற்றியும், அதன்
சுரண்டலுக்கு ஆதரவான அரசின் சட்டங்களைப் பற்றியும் விரிவான
முறையில் பிரச்சாரம் செய்யப்படாததால் அவர்கள் மத்தியில் வர்க்க உணர்வும் அரசியல்
உணர்வும் மிகக் குறைவாகவே காணப்படுகிறது.
ஒரு சமூகத்தின் இதய ஓட்டமே உற்பத்தியின் நிகழ்வுப் போக்குதான். அந்த
உற்பத்தியின் மையமாக இருப்பவர்கள் தொழிலாளிகள். அவர்கள் உழைப்பதை நிறுத்தினால்
சமூகத்தின் இயக்கமே நின்று விடும். ஆனால் தொழிலாளர்கள் அவர்களின் வலிமையை அறியாமல்
சிதறுண்டு கிடக்கின்றனர். அவர்கள் தங்களுடைய வலிமையை உணர ஒன்றுபட வேண்டும்; வர்க்க
உணர்வு பெற வேண்டும். அரசியல் உணர்வு பெற வேண்டும். பாட்டாளி வர்க்கத்திற்கான ஒரு
தொழிற்சங்கம் இந்தக் கடமைகளைத் தனது இலட்சியங்களாகக் கொண்டு தொழிலாளர்கள்
மத்தியில் பிரச்சாரம் செய்து அவர்களை ஒரு
ஆற்றல்மிக்க அமைப்பாக, சமூக
மாற்றத்திற்கான அமைப்பாக மாற்ற வேண்டும்.
ஆனால் இங்குள்ள தொழிற்சங்கங்கள் இந்தக் கடமைகளைப் புறக்கணிக்கின்றன. பல
தொழிற்சங்கங்கள் முதலாளிய வர்க்கத்தின் ஏஜண்டுகளாகச் செயல்படுகின்றன என்றே
கூறலாம். இதனால் பெரும்பான்மையான தொழிலாளர்கள் மத்தியில் அரசின் தொழிலாளர் விரோதப்
போக்கைப் பற்றிய விழிப்புணர்வு கூட இருப்பதில்லை.
எனினும், சில இடங்களில் மட்டும் தொழிலாளர்கள் கிளர்ந்தெழுந்து வர்க்க
உணர்வுடன் போராட்டக்களங்களில் அணி திரள்கின்றனர்.
ஆனால்,
தலைமை தாங்கும் தொழிற்சங்கங்களோ
தொழிலாளர்களின் கோபத்தைத் தணிப்பதற்கான ஒரு வடிகாலாக மட்டுமே
இந்த வேலை நிறுத்தப் போராட்டங்களை முன்னெடுக்கின்றன. இதன் மூலம் ஆளும்
வர்க்கத்தின் மீது இருக்கின்ற வெறுப்புணர்வுகள் மட்டுப்படுத்தப்பட்டுத் திசை திருப்பப்படுகின்றன.
இந்த ஆண்டு நடைபெற்ற பொது வேலைநிறுத்தத்தில் வங்கி,
இன்சூரன்ஸ்,
தபால் அலுவலகங்கள்,
போக்குவரத்து,
பொதுத்துறைநிறுவனங்கள்,
அரசுஊழியர்கள்,
சுரங்கத் தொழிலாளர்கள் எனப் பலதுறைகளைச்
சேர்ந்த தொழிலாளர்கள் பல்வேறு இடங்களில் கலந்து கொண்டனர்.
ஆனால்,
இவையனைத்தும் பெரும்பாலும் அரசுத்துறை சார்ந்தவைகளாகவே
உள்ளன. தனியார் வங்கி ஊழியர்கள்,
தனியார் இன்சூரன்ஸ் ஊழியர்கள்,
தனியார் போக்குவரத்து ஊழியர்கள்,
மற்றும் பெரும்பான்மையான ஆலைத் தொழிலாளர்கள்,
சேவைத்துறை சார்ந்த தொழிலாளர்கள் வழக்கம்
போலத் தங்கள் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
இத்தகைய இடங்களில் மத்திய தொழிற்சங்கங்கள் தங்கள் கிளைகளை வைத்திருந்தாலும்,
சந்தர்ப்பவாதப்போக்குடன் அடையாளமாகச் சில
போராட்டங்களை நடத்திவிட்டுத் தங்கள் கடமைகளை ஆற்றி விட்டதாக மன நிறைவு அடைந்து
விட்டன. ஒரு சில ஆலைகளில் மட்டும் ஒரு நாள் வேலைநிறுத்தம் நடைபெற்றது. எந்த ஒரு தனியார்
ஆலையிலும் இரண்டு நாட்கள் பொது வேலைநிறுத்தம் நடந்ததாகச் செய்திகள் இல்லை. சில இடங்களில் வேலைநிறுத்த
நாளை விடுப்பாகக் கழித்துக்கொள்வது என்ற அடிப்படையில் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். கேரள அரசு ஊழியர்கள்
இதனடிப்படையில்தான் வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டனர்,
அதே போன்று வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட சில ஆலைகளில் ஞாயிற்றுக்கிழமைக்குப்
பதிலாக வேலை நிறுத்த நாளான திங்கள்கிழமையை வாராந்திர விடுமுறை நாளாக மாற்றிக் கொள்ள முதலாளிகளிடம் ஒப்பந்தம் செய்து
கொள்ளப்பட்டது.
தொழிலாளர்களைத் தங்கள் கோரிக்கைகளுக்காக வீரமிக்க வர்க்கப் போராட்டத்திற்குத் தயார்படுத்துவதற்குப்
பதிலாக, அரசு மீதான அவர்களின்
கோப உணர்வுகளைத் தணிக்கும் வகையிலும், சமரசப் போராட்டமாகவும்,
உப்புச் சப்பற்ற சடங்குத்தனமான போராட்டமாகவும்
திசைதிருப்பப்படுகின்றது.
தொழிற்சங்கங்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாத பட்சத்தில் உடனடியாக
அடுத்த கட்ட நடவடிக்கைகளை இவை எடுப்பதில்லை. மாறாக,
வேலைநிறுத்தம் செய்ததோடு தன்னுடைய கடமையை
முடித்துக்கொண்டு அடுத்த ஆண்டுவரை மீண்டும் ஒரு சந்தர்ப்பத்திற்காக இவை காத்துக் கொண்டிருக்கின்றன. இதன்மூலம்,
தொழிலாளர்களை நெருக்கடியான நிலைமையில் தொடர்ந்து
இருக்க வைக்கின்றன.
அமைப்பாக்கப்பட்ட தொழிலாளர்களையே மையப்படுத்தி முன்னெடுக்கப்படும்
தொழிற்சங்கங்களின் இந்தப் பொது வேலைநிறுத்தமானது,
வர்க்க உணர்வோடு அவர்களை அணி
திரட்டுவதில்லை. இந்த நிலையில் அமைப்பு சாராத் தொழிலாளர்களையும் இணைத்துக் கொண்டு செல்ல
வேண்டிய அவசியத்தை அவர்கள் அறவே கைவிட்டுவிடுகின்றனர்.
தற்போதைய சடங்குத்தனமான வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு மாறாக, தங்களுடைய பொதுவேலை நிறுத்தப்போராட்டத்தைத் தொடர் போராட்டங்களாக, ஆளும் வர்க்கத்திற்கு எதிரான அரசியல் போராட்டங்களாகக் கட்டியமைக்கும் கடமையைத் தொழிலாளர் வர்க்கம் மேற்கொள்ள வேண்டும். அப்பொழுது மட்டுமே தொழிலாளர் வர்க்கம் தங்களுடைய கோரிக்கைகளைச் சாதிக்க முடியும். தங்களுடைய இலட்சியத்தில் வெற்றி அடைய முடியும்.
குமணன்
சோசலிசத் தொழிலாளர் இயக்கம்
Comments
Post a Comment