Skip to main content

தொழிலாளர்கள் நலனில் அக்கறையற்ற தமிழ்நாடு அரசும் தொழிற்சங்கத் தலைமைகளும் !

 இந்திய அரசினால் தொழிலாளர் சட்டங்கள் திருத்தப்பட்டு 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் நான்கு புதிய சட்டத்தொகுப்புகளாக மாற்றப்பட்டன. இந்த சட்டத் திருத்தங்களுக்கு எதிராகத்  தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களும் தங்கள் எதிர்ப்புகளைப் பலவகைகளில் தெரிவித்து வந்தாலும் இந்திய அரசோ புதிய தொழிலாளர் விரோதச்  சட்டங்களை நிறைவேற்றியதோடு அதனை நடைமுறைப்படுத்தும் வேலையிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது.

அந்த வகையில் மாநில அரசுகள் இந்தச் சட்டங்களையொட்டி மாநில அளவில் அதற்கான விதிமுறைகளை வகுக்க மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. மத்திய அரசின் உத்தரவையொட்டி அனைத்து மாநில அரசுகளும் அதற்கான வேலைகளைத் தொடங்கியிருக்கின்றன.

தமிழ்நாட்டிலும், மாநில அரசானது மூன்று சட்டத் தொகுப்புகளுக்கான   (ஊதிய சட்டத் தொகுப்பு, பணியிடப் பாதுகாப்பு ஆரோக்கியம் மற்றும் பணிநிலைமைகள் குறித்த சட்டத்தொகுப்பு, தொழில் உறவுகள் சட்டத்தொகுப்பு) விதிமுறைகளை ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி வெளியிட்டிருக்கின்றது. இதன் மீதான கருத்துகள், ஆலோசனைகள், ஆட்சேபனைகளை  45 நாட்களுக்குள் தெரிவிக்கவேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கின்றது.


ஆனால், இந்த விதிமுறைகள் அனைத்துத்  தொழிலாளர்களும் புரிந்துக்கொள்ளும் வகையில் தாய் மொழியான தமிழில் இல்லை. பெரும்பாலான தொழிலாளர்கள் புரிந்துகொள்ள முடியாத வகையில் ஆங்கிலத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சட்டத் துறையில் உள்ளவர்களே புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அதிகாரவர்க்கத்தினால் ஆங்கிலத்தில் தயாரிக்கப்படும் அரசு ஆணைகள் எப்பொழுதும் சிக்கலான வாக்கியங்களையும், சொற்றொடர்களையும் கொண்டிருக்கும்.

இந்த நிலையில் குறைந்த அளவே படிப்பறிவு கொண்ட தொழிலாளர்களால்  அந்த அரசாணையைப் படித்துப் புரிந்து கொண்டு ஆலோசனைகளும் கருத்துகளும், ஆட்சேபனைகளும் எப்படித் தெரிவிக்க முடியும்? தொழிலாளர்கள் நலனில் அக்கறை கொண்ட ஒரு அரசாக இருந்தால் அரசாணையைத் தாய் மொழியில் கொண்டு வந்திருக்க வேண்டாமா? அதுவும்எங்கும் தமிழ்’,  ‘எதிலும் தமிழ்’  எனக் கூறிக் கொள்ளும் கட்சியின் தலைமையின் கீழ் உள்ள  அரசு, ‘தமிழினத் தலைவரின் வாரிசுகளின் அரசுஎனக் கூறிக் கொள்ளும் ஒரு அரசு ஏன் பாமரர்கள் புரிந்து கொள்ள முடியாத ஒரு அந்நிய மொழியில் அரசாணையைக் கொண்டு வர வேண்டும்? அப்படியானால் அரசின் உண்மையான நோக்கம் என்னவாக இருக்கும்? தொழிலாளர்கள் இந்தச் சட்டத்தைப் படித்துப் புரிந்து கொண்டு, அதற்கு எதிரான கருத்துகளை, ஆட்சேபனைகளை முன் வைத்துவிடக் கூடாது கூடாது என்பதைத் தவிர அதன் நோக்கம் வேறு எதுவாக இருக்க முடியும்? தொழிலாளர்கள் மத்தியிலிருந்து எந்தவிதமான ஆட்சேபனைகளும் எதிர்ப்பும் இல்லை எனக் கூறி சட்டத்தை எளிதாக நிறைவேற்றி விடலாம் இல்லையா?

அரசு மட்டும் அல்லாமல்,  இங்குள்ள தொழிற்சங்கத் தலைமைகளும் தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்டதாக இல்லை. எந்தத் தொழிற்சங்கத் தலைமையும் அந்தச் சட்ட முன் வரைவைத் தமிழில் கொண்டு வர வேண்டும் எனக் கோரவில்லை. தொழிலாளர்கள் புரிந்துக் கொள்ளும் வகையில் தமிழில் சட்ட முன் வரைவைக் கொண்டு வந்து அதைத் தொழிலாளர்கள் மத்தியில் வைத்து விவாதித்து, அந்தச் சட்டத்த்தினால் தொழிலாளர்களுக்கு விளையப்போகும் பாதகமான விசயங்களைப் பற்றிய விழிப்புணர்வைத் தொழிலாளர்கள் மத்தியில் உருவாக்க வேண்டும் என்ற அக்கறை சிறிதும் அந்தத் தொழிற்சங்கத் தலைமைகளுக்கு இல்லை.


தனது அரசியல் இலாபத்திற்காக வேளாண் சட்டங்களைத் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த முடியாது என்று சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றிய தமிழக அரசு தொழிலாளர் சட்டத்திருத்தங்களைத் தமிழ்நாட்டில் கொண்டு வர முடியாது என்ற தீர்மானம் இயற்றாமல் இந்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கிற்கு ஒத்து ஊதுகின்றது. அதன் மூலம் தான் முதலாளிய வர்க்கத்திற்கான அரசுதான் என்பதை அப்பட்டமாக ஒத்துக் கொள்கிறது.

இந்திய அரசு தொழிலாளர் சட்டங்களை இயற்றியபொழுது அதனைத் தொழிலாளர்களிடம் கொண்டு சென்று அவர்களை அணிதிரட்டிப் பரந்துபட்ட போராட்டங்களை கட்டியமைக்காமல் பெயரளவிற்கு அறிக்கைகளை மட்டும் விட்டுத் தங்கள் பாட்டாளி வர்க்கக் கடமைகளை ஆற்றி விட்டதாகத்  தொழிற்சங்கத் தலைமைகள் திருப்தி அடைந்து விட்டன.  இவர்களின் சந்தர்ப்பவாதப் போக்கைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட மோடி அரசு கடுமையான எதிர்ப்புகள் எதுவுமில்லாமல் தொழிலாளர் விரோதச் சட்டங்களை தடலாடியாக நிறைவேற்றியது.

அதேபோன்று தமிழக அரசு தற்பொழுது கொண்டு வந்துள்ள விதிமுறைகள் குறித்துத் தொழிலாளர்களிடம் தொழிற்சங்கத் தலைமைகள் கொண்டு சென்று  பரந்துபட்ட விவாதங்களை நடத்தவில்லை. தொழிலாளர் நலன்களுக்கு எதிரான சட்டவிதிகளை எதிர்த்துத் தொழிலாளர்களை அணி திரட்டவில்லை.  

இப்படி ஒரு சட்ட விதிமுறைகள் அரசால் வெளியிடப்படட்டதையே தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சங்கத் தலைமைகள் மூடிமறைத்துள்ளன. இடதுசாரிக் கட்சிகளின் தலைமையில் உள்ள தொழிற்சங்கத் தலைமைகளும் இதற்கு விதிவிலக்கல்ல.

தொழிலாளர்களின் நலனில் அக்கறையற்ற இத்தகைய தொழிற்சங்கத் தலைமைகளின் பிடியிலிருக்கும் தொழிலாளர்கள் அவர்களின் சந்தர்ப்பவாதப் போக்கிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு பாட்டாளி வர்க்கமாய் ஓர் அணிதிரள வேண்டும்.

தமிழக அரசு வெளியிட்டிருக்கும் தொழிலாளர் சட்டவிதிமுறைகளை அனைத்துத் தொழிலாளர்களும், புரிந்துகொள்ளும் வகையில் தமிழில் வெளியிட வேண்டும் என்றும், அதுவரை இந்தச் சட்ட விதிமுறைகளை இறுதி செய்வதை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து வலியுறுத்த வேண்டும்.

-                                                                                                                                                       சோசலிசத் தொழிலாளர் இயக்கம்.





Comments

  1. சோசலிச தொழிலாளர் இயக்கம் குறிப்பிட்டிருப்பது போல, தமிழக அரசு பெரு முதலாளிகளுடைய நலனைப் பாதுகாப்பதற்காகவே இந்த தொழிலாளர் விரோத தொகுப்புச் சட்டங்களை நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறது. தமிழக அரசு இந்த தொகுப்புச் சட்டங்களுக்கு எதிராக சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென பல்வேறு தொழிற் சங்கங்கள், தமிழக அரசாங்கத்தைக் கேட்டிருந்துங்கூட அவற்றை தமிழக அரசு ஒரு பொருட்டாகவோ விவாதப் பொருளாகவோ எடுத்துக் கொள்ளாமல் புறக்கணித்திருக்கிறது. மேலும் இந்த தொகுப்புச் சட்டம் குறித்த ஆணையை தமிழக அரசு தமிழில் வெளியிட வேண்டும். மேலும் அது குறித்து தொழிலாளர்களிடையே விவாதிக்கவும், கருத்துக்களை அரசுக்கு அனுப்பி வைக்கவும் குறைந்தபட்ச மாக 3 மாதங்கள் தரப்பட வேண்டும் என்று எல்லா தொழிற் சங்கங்களும் ஒரு சேர கோர வேண்டும். எல்லா தொழிற் சங்கங்களும் ஒருங்கிணைந்து இந்த தொகுப்புச் சட்டங்களுக்கு எதிராக ஒரு பரந்துபட்ட போராட்டத்தை மேற் கொள்ள வேண்டும். பெரு முதலாளி வர்க்கத்தின் நலன்களையொட்டி எல்லா முதலாளித்துவ கட்சிகளும் எப்படி செயல்படுகிறார்கள் என்பதற்கு இந்த தொழிலாளர் விரோத தொகுப்புச் சட்டங்கள் பற்றிய அவர்களுடைய ஆதரவே அப்பட்டமான சாட்சியாகும். தொழிலாளி வர்க்கம் ஒன்று திரண்டு இந்த தொகுப்புச் சட்டத்தை கிழித்தெறிய போராட வேண்டும். -- தொழிலாளர் ஒற்றுமை இயக்கம்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஒடுக்கு முறைக்கு எதிரான எம்ஆர்எப் (MRF) தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி என்ற பெயரில் 1946 இல் இருந்து இயங்கி வரும் MRF நிறுவனம் சென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதியில் சுமார் 79 ஆண்டுகளாக இயங்கி வருகிறது . நிறுவனம் பெரும் லாபம் அடைந்து வந்தாலும் தொழிலாளர்களின் நலன்கள், ஊதியம், பணிப் பாதுகாப்பு, நிரந்தர வேலை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்து வந்தது. நிர்வாகத்தின் எதேச்சதிகாரப் போக்கிற்கு எதிராக, தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளைப் பாதுகாக்க சங்கம் அமைத்துப் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர் . சென்னையை தலைமையிடமாக கொண்டு 1946 இல் துவங்கபட்ட எம்ஆர்எப் ( MRF) நிறுவனம் திருச்சி , பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும், பல மாநிலங்களிலும் கிளைகளை அமைத்து டயர் மற்றும் இரப்பர் பொருட்கள், பெயிண்ட், பொம்மைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியா முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர் . திருவெற்றியூர் கிளையில் 1970, 1980, 1990 ஆகிய காலகட்டங்களில் தொழிலாளர்கள் தங்களுடைய நீண்ட நெடிய வீரமிக்க போராட்டத்தின் மூலமாக நிர்வாகத்தை அட...

தொழிலாளி வர்க்க ஒற்றுமையை பறைசாற்றும் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கு வாழ்த்துகள்!

  தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாகிய ஒசூரில் தொழிலாளர்களின் ஐக்கியத்தை உருவாக்கவும் வலுப்படுத்தவும், பாட்டாளி வர்க்க அரசியலை அவர்களிடம் கொண்டு செல்லவும் பல்வேறு தொழிற்சங்கங்களின் முன்முயற்சியில் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (Hosur Trade Union Federation -HTUF) தொடங்கப்பட்டுள்ளது. அதன் உருவாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக துவக்க மாநாடு ஏப்ரல் 6 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது ஒசூர் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து பாட்டாளி வர்க்க அணியை வலுபடுத்துவது, பல்வேறு அரசியல் கருத்துகளால் பிளவுபட்டு இருக்கும் தொழிலாளர்கள் பாட்டாளி வர்க்கத்தின் சரியான அரசியலைப் பற்றிக் கொண்டு, வர்க்க உணர்வு பெற்று ஐக்கியப்பட்டு ஓரணியில் திரளும் வகையில் அவர்களிடம் தொடர்ந்து உரையாடுவது, முதலாளித்துவத்தின் கொடும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் உதவுவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பில் மற்ற தொழிற்சங்கங்களும் இணைந்து பாட்டாளி வர்க்கத்தின் கரத்தினை வலுபடுத்...

விஜய்யின் சினிமாவும் சினிமா அரசியலும்!

  கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடந்த விஜயின் அரசியல் பொதுக்கூட்டம் 10 இளம் குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 உயிர்களைப் பலி கொண்டு பெரும் துயரத்திற்குக் காரணமாகியுள்ளது. ஓர் அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்தது தமிழ்நாட்டின் கடந்த எழுபத்தைந்து ஆண்டு வரலாற்றில் இல்லை என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி மனதில் ஆழ்ந்த துயரத்தை உண்டாக்கும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் இதற்குக் காரணமாக அமைந்துள்ள அரசியல், கலாச்சாரக் கூறுகள் நமது மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன.   சினிமாவும் சினிமா அரசியலும்   எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் தனி ஒருவராக விஜய் அவர்களைப் பந்தாடுவார். கார்களிலும் விமானங்களிலும் பறந்து எதிரிகளைச் சாடுவார். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் அவரைத் தொடக்கூட செய்யாது. அரசியல்வாதிகளின் ஊழலை எதிர்த்துப் போராடுவார். ரவடிகளைத் துவம்சம் செய்வார். இப்படித்தான் விஜய் நடித்த திரைப்படங்கள் அவரை பெரும் துணிச்சலும் வீரமும் கொண்டவராக, சாகசக்காரராக, நல்லவராக, நேர்மையானவராக, நீதிக்காகப் போராடுபவராக சித்தரித்து உள்ளன. இவ்வாறு பிரம்மாண...