Skip to main content

“அக்கினிப் பாதை”க்கு எதிரான இளைஞர்களின் நெருப்புப் போராட்டங்கள்!

முப்படைகளுக்கும் ஆட்களைத் தேர்ந்தெடுப்பதற்காக “அக்கினிப் பாதை” என்ற புதிய திட்டத்தை அறிவித்ததன் மூலம் இந்திய ஒன்றிய அரசு நாடு முழுவதும் இளைஞர்களைப் பெரும் போராட்டத்தில் குதிக்க வைத்துள்ளது. குறிப்பாக பீகார், உத்தரப்பிரதேசம், அரியானா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இளைஞர்கள் பெரும் போராட்டத்தில் குதித்துள்ளனர். பீகாரில் ஐம்பது ரயில் பெட்டிகளையும் ஐந்து ரயில் என்ஜின்களையும் போராட்டக்காரர்கள்  தீ வைத்துக் கொளுத்தி உள்ளனர். ரயில் நிலையத்தில் உள்ள கணினிகளையும் பிற பொருட்களையும் உடைத்து நொறுக்கியுள்ளனர். பீகாரில் மட்டும் ரூ. 200 கோடிக்கும் மேல் சேதம் இருக்கும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.  

வேலை இல்லாத் திண்டாட்டம் இளைஞர்கள் மத்தியில் கடுமையாக நிலவி வரும் நிலையில், இராணுவத்தில் சேர்வதன் மூலம் தங்களுடைய எதிர்காலத்தை உறுதிப்படுத்திக் கொள்ளலாம் எனக் கிராமப்புறத்திலுள்ள விவசாயத் தொழிலாளர்கள், வறிய, ஏழை விவசாயிகளின் பிள்ளைகளும்,  நகர்ப்புறத்திலுள்ள அடித்தட்டு மக்களின் பிள்ளைகளும் நம்புகின்றனர். எப்படியாவது இராணுவத்தில் சேர்ந்து விட வேண்டும் எனக் கருதி அதற்காகப் பயிற்சி அளிக்கும் நிலையங்களில் சேர்ந்து பல ஆண்டுகள் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு தங்களைத் தயார்படுத்திக் கொள்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கொரானா காலத்தில் இராணுவத்திற்கு ஆள் எடுக்கப்படவில்லை. ஏற்கனவே இராணுவத்தில் சேர்வதற்கான தேர்வில் கலந்து கொண்டவர்களுக்கு உடல் தகுதி, மருத்துவத் தகுதி ஆகியவற்றிற்கான சோதனைகளும் முடிந்த நிலையில் அவர்களுக்கு முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில்தான் “அக்கினிப் பாதை” திட்டம் அவர்களுடைய எண்ணத்தில் பெரும் இடியாக வீழ்ந்து பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் திட்டத்தின்படி, பதினேழரை முதல் இருபத்தி ஒன்று வயது வரை உள்ள இளைஞர்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஏற்கனவே தேர்வில் கலந்து கொண்டு முடிவுக்காகக் காத்திருப்பவர்களில் இருபத்தி ஒன்று வயதுக்கும் மேல் உள்ளவர்கள் இந்தத் திட்டத்தின்படி இராணுவத்தில் சேர முடியாது. இது இளைஞர்கள் மத்தியில் கடுமையான ஏமாற்றத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இளைஞர்களின் கொந்தளிப்புக்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன.  இந்தத் திட்டத்தின்படி, ஆண்டு தோறும் முப்படைகளுக்கும் சேர்த்து 45000 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவர்கள்  நான்காண்டுகள் மட்டுமே படையில் இருக்க முடியும். அதில் ஆறு மாதம் பயிற்சிக்காக ஒதுக்கப்படும். முதலாம் ஆண்டு ரூ.30,000மும், இரண்டாமாண்டு ரூ.33,000மும், மூன்றாமாண்டு 36,500மும் நான்காம் ஆண்டு  ரூ.40,000மும் மாத ஊதியமாக வழங்கப்படும். நிர்ணயித்த ஊதியம் மட்டும் வழங்கப்படும். காலமுறை ஊதிய உயர்வு கிடையாது. அக விலைப்படி கிடையாது. இது வரையிலும் பழைய முறைப்படி  தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு படை வீரருக்கு வழங்கப்படும் சமபளத்தை விட இவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் குறைவாகவே இருக்கும்.

இவர்களுடைய நான்காண்டு பணிக் காலத்தில் மாதம் தோறும் அவர்களுடைய சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடிக்கப்படும். அது சுமார் ரூபாய் ஐந்து இலட்சமாக இருக்கும். அரசும் அவர்களுக்கு அதனுடைய பங்காக ரூபாய் ஐந்து இலட்சம் வழங்கும். நான்காண்டு இறுதியில் பணியிலிருந்து அவர்களை விடுவிக்கும்போது அவர்களுக்கு வட்டித் தொகையுடன் சேர்த்து ரூ.11.71 இலட்சத்தை மட்டும்  வழங்கும். பணிக் கொடை  எதுவும் வழங்கப்படாது. அவர்களுக்கு ஓய்வு ஊதியமும் கிடையாது.

நான்காண்டுகளுக்குப் பிறகு பணியிலிருந்து விடுவிக்கப்படுபவர்களில் 25 விழுக்காட்டினர் மட்டுமே மீண்டும் இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். பணியிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களுக்கு முன்னாள் இராணுவ வீரர்களுக்குக் கிடைக்கும் சலுகைகள்  எதுவும் கிடைக்காது. மருத்துவ வசதி கிடைக்காது. முன்னாள் இராணுவ வீரர்களுக்கான பண்டக சாலைகளில் (canteen stores)  அவர்கள் சலுகை விலைகளில் பொருட்களைப் பெற முடியாது. பொதுவாக, அவர்கள் நாட்டுக்காக சேவை செய்த இராணுவ வீரர்கள் என்ற எந்தப் பெருமையையும் மதிப்பையும் கோர முடியாது.

அவர்கள் நாட்டுக்காக இராணுவத்தில் சேவை புரியும் வீரர்கள்  இல்லை. அவர்கள் ஒப்பந்த அடிப்படையில் குறைந்த சம்பளத்தில் இராணுவத்தில் பணி புரியும் கூலிப் படைகள்தான்.

முதலாளிய வர்க்கம் தமது தொழிற்சாலைகளில் எப்படி ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை வேலைக்கமர்த்தி, உற்பத்திச் செலவைக் குறைத்து   இலாபத்திற்காகத் தொழிலாளர்களைக் கடுமையாகச் சுரண்டி வருகிறதோ அதே போல இந்திய முதலாளிய வர்க்கத்தின் அரசும் ஒப்பந்த அடிப்படையில் படைகளில்  இளைஞர்களைத் தற்காலிகமாகச் சேர்த்துச் செலவைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது.  

முதலாளிவர்க்கம் தமது இலாபத்தை அதிகரிப்பதற்காகவும் மூலதனத்தைப் பெருக்குவதற்காகவும் மதிப்பைப் படைக்கும் தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்படும் கூலியை எவ்வளவு முடியுமோ அந்தளவிற்கு வெட்டுகிறது. நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. அதன் மூலம் நிரந்தத் தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய காலமுறை ஊதிய உயர்வு, பணிப் பாதுகாப்பு, மருத்துவ வசதி, பணியாளர்களுக்கான சேமநல நிதிப் பாதுகாப்பு போன்ற செலவினங்களைக் குறைத்துத் தமது இலாபத்தைப் பெருக்கிக் கொள்கிறது.  

முதலாளிய வர்க்கத்தினுடைய  அரசும், முதலாளிவர்க்கத்திற்கு வரிச் சலுகைகளும் மான்யங்களும் கடன் தள்ளுபடிகளும் வழங்குவதற்காக தம்முடைய செலவினங்களைக் குறைத்து வருகிறது. அரசு ஊழியர்களின் ஊதியத்தை வெட்டுவதும், மக்களுக்கான நலத்திட்டங்களை நிறுத்துவதும் எனத் தாக்குதல்களைத் தொடுத்து வருகின்றது. புதிய ஓய்வு ஊதியத் திட்டம் என்ற பெயரில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வு ஊதியத்தை ஒழித்து விட்டது. நிரந்தரப் பணியாளர்களின் இடத்தில் ஒப்பந்தப் பணியாளர்களை அரசு நியமித்து வருகிறது. இதில் ஒன்றிய அரசு, மாநில அரசுகள் ஆகியவற்றிற்கு இடையில் எந்த விதமான வேறுபாடும் இல்லை. எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இவற்றைத்தான் நடைமுறைப்படுத்தி வருகின்றன.

இளம் வயதுத்  தொழிலாளர்களை ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு அமர்த்தி உடலில் தெம்பும் வலிமையையும் இருக்கும் வரையிலும்  சக்கையையாய்ப் பிழிந்த பிறகு   முதலாளிகள் விரட்டுவதைப் போன்று  17 முதல் 22 வயது வரையிலான இளம் வயது இளைஞர்களை இராணுவப் பணிக்கு அமர்த்தி அவர்களின் வலிமையையும், இளமைத் துடிப்பையும்,  உயிர் ஆற்றலையும் உறிஞ்சிய பிறகு சக்கையைப் போல வெளியே தள்ளும்  வேலையை இந்திய அரசு செய்ய முனைகின்றது.

இந்திய இராணுவத்தில் 14 இலட்சம் பேர் பணி புரிகின்றார்கள். இந்த ஆண்டு மட்டும்  இராணுவத்திற்கு என ஒதுக்கப்பட்டுள்ள நிதி ரூபாய் 5.25 இலட்சம் கோடி ஆகும். அதில் 1.19 இலட்சம் கோடி ரூபாய் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்திற்குச் செலவாகின்றது. மொத்த தொகையில் 70 விழுக்காடு இராணுவ வீரர்களுக்கான ஊதியம், ஓய்வூதியம், நலத்திட்டங்கள் ஆகியவற்றிற்குச்  செலவிடப்படுகிறது.  இதை வீண் செலவு என அரசு கருதுகிறது.  அதிகத் தொழில்நுட்பம் கொண்ட நவீன ஆயுதங்கள், கருவிகள், தளவாடங்கள் ஆகியவற்றைக் கொண்டு இராணுவத்தை நவீனப்படுத்த வேண்டும் என அரசு கருதுகிறது.  இராணுவ வீரர்களுக்கான நீண்ட காலச் செலவினங்களைக் குறைப்பதன் மூலம் இராணுவத்திற்கு ஒதுக்கப்படும் நிதியின் பெரும் பகுதியை ஆயுதத் தளவாடங்கள் உற்பத்திக்கும், கொள்முதலுக்கும் பயன்படுத்த அரசு முயற்சி செய்கின்றது. அதனுடைய வெளிப்பாடுதான் “அக்கினிப் பாதை’ என்னும் திட்டம்.

ஏற்கனவே ஆயுதங்களின் உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது இந்திய அரசு. ஆயுதங்களை வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது. ஆயுதங்களின் உற்பத்தியில் தனியார் முதலாளிய நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. இங்குள்ள முதலாளிகள் அந்நிய நாட்டு முதலாளிகளுடன் கூட்டுச் சேர்ந்தும் ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு சந்தை ஏற்படுத்தித் தர வேண்டும். இந்தியாவில் உள்ள சந்தை இந்திய இராணுவத்தின் ஆயுதத் தேவைதான். இராணுவ வீரர்களுக்கான ஊதியத்தையும், ஓய்வூதியத்தையும் வெட்டுவதன் மூலம் உபரியாகக் கிடைக்கும் பணத்தை இந்திய அரசு தனியார் முதலாளிகளிடமிருந்து ஆயுதங்களை வாங்கப் பயன்படுத்தத் திட்டமிடுகிறது. அதன் மூலம் அந்த முதலாளிகள் கொள்ளை இலாபம் அடிக்க வழிவகை செய்கிறது. பல்லாயிரக்கணக்கான வீரர்களின் நலனை விட ஒரு சில முதலாளிகளின் இலாபமே இந்த முதலாளிய வர்க்கத்தின் அரசுக்கு முக்கியமாகத் தெரிகிறது.    

‘இந்திய இராணுவத்தை இளமைத் துடிப்புக் கொண்டதாக இந்தத் திட்டம் மாற்றும்’ என இந்தியப் படைத் தலைவர்களும் இராணுவ அமைச்சரும் கூறுகின்றனர். ஆனால் இந்தத் திட்டத்தை இராணுவத்தில் உள்ள அதிகாரிகள் மட்டத்தில் கொண்டு வரவில்லை. நேரடியாகக் களத்தில் செயல்படும், போர்க் களத்தில் உயிருக்கு அஞ்சாமல் செயல்படும் படை வீரர்களுக்கு மட்டும்தான் இந்தத் திட்டம். ஆனால் உயர் மட்ட அதிகாரிகளுக்கு இந்தத் திட்டம் இல்லை. அவர்கள்தான் இராணுவத்தில் அனைத்து வசதிகளையும் சலுகைகளையும் அனுபவிப்பவர்கள். அவர்கள் ஓய்வு பெற்ற பிறகும் வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பங்களுக்கும் தேவைக்கும் மேலான தொகை ஓய்வு ஊதியமாக வழங்கப்படுகிறது. வாழ்க்கை வசதிகளும் தொடர்ந்து அளிக்கப்படுகின்றன.

இரவும் பகலும், கடும் குளிரிலும், சுட்டெரிக்கும் வெயிலிலும்   எல்லைகளைப் பாதுகாக்கும் வீரர்களுக்குப் பணி நிரந்தரம் இல்லை; ஓய்வு ஊதியம் இல்லை. ஆனால் இந்த நாட்டில் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களும்  ஐந்தாண்டுகள் பதவியில் இருந்தாலே போதும், அவர்கள் பல தலைமுறைகளுக்கான சொத்துகளுக்கு அதிபதிகளாகி விடுகின்றனர். அவர்களுக்கு ஒய்வூதியமே தேவை இல்லை. ஆனால் அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் வாழ்நாள் முழுவதும் ஓய்வு ஊதியமும் ஏராளமான சலுகைகளும் உண்டு.   

வேலை வாய்ப்புகளே இல்லாத சூழலில், இராணுவத்தில் சேர்வதன் மூலம் இறக்கும் வரை இருந்து வந்த வாழ்க்கைக்கான குறைந்தபட்ச ஓய்வூதியம் என்ற உத்திரவாதமும் இன்று இல்லாமல் செய்யப்பட்டுள்ளதால், நாடு முழுவதுமுள்ள இளைஞர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இது வெறும் இராணுவத்திற்கு  ஆள் சேர்ப்பு அறிவிப்புக்கு எதிரான போராட்டம் மட்டுமல்ல, நீண்ட காலமாக பாஜக அரசின் மக்கள் விரோதப் போக்குகள், வேலை இல்லாத நிலைமை, குறைந்த பட்சக் கூலி கூட கிடைக்காத நிலைமை, கொரானா காலத்தில் ஏற்பட்ட கடும் நெருக்கடிகள், எரிபொருள் விலையேற்றம், அத்தியாவசியப் பொருட்கள் விலையேற்றம், அரசுக் கல்வியும், அரசு மருத்துவமும் தரம் தாழ்ந்து சீரழிந்து வருவது என மக்களை வாட்டிவதைக்கும் நிகழ்வுப்போக்குகளின் ஒட்டுமொத்த வெளிப்பாடே அனைத்து மாநிலங்களிலும் உள்ள  இளைஞர்களின் போராட்டங்கள்.

‘அக்கினி பாதை”த் திட்டம் தேசப் பற்றுள்ள இளைஞர்கள் சமூகத்தை  உருவாக்கும் என ஆட்சியாளர்கள் பரப்புரை செய்து வருகின்றனர். ஆனால் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து நாடு மக்கள் கைகளுக்கு  வரவில்லை என்பதையும்,  அது முதலாளிகளின் கைகளுக்குச்  சென்று விட்டது என்பதையும்,  இது முதலாளிகளுக்கான நாடு என்பதையும், மக்களுக்கான நாடு இல்லை என்பதையும், இங்குள்ள அதிகார வர்க்கமும் ஆட்சியில் உள்ள கட்சிகளும் முதலாளிய வர்க்கத்திற்குச் சேவை செய்பவர்களே என்பதையும்  இன்றைய இளைஞர்கள் தெள்ளத் தெளிவாக அறிவார்கள். இங்குள்ள முதலாளிய வர்க்கத்தின் முதலாவது இலட்சியமும், இறுதியான இலட்சியமும் இலாபம்தான் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். எனவே ‘தேசப்பற்று’ என்ற அவர்களின் பம்மாத்து வார்த்தைகளுக்கு இனியும் இளைஞர்கள் மயங்கத் தயாரில்லை என்பதையே நாடெங்கும் நடக்கும் அவர்களின் போராட்டங்கள் வெளிப்படுத்துகின்றன.                                         


-    சோசலிசத் தொழிலாளர் இயக்கம்.    


Comments

  1. மிகச் சிறப்பான பதிவு தோழர்.

    ReplyDelete
  2. அக்னிபாத் எனப்படும் இந்திய அரசாங்கத்தின் திட்டம், இராணுவ வீரர்களுக்கு எதிரான திட்டம் என்பதையும், அது இராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்யும் பெரு முதலாளிகளுடைய நலனுக்காகவே - அவர்களுடைய இலாபத்தைப் பெருக்குவதற்காகவே செய்யப்படுகிறது என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டியிருப்பது மிகச் சரியான கருத்தாகும். மேலும் இந்திய அரசின் சாராம்சம் குறித்து - "இது முதலாளிகளுக்கான நாடு என்பதையும், மக்களுக்கான நாடு இல்லை என்பதையும், இங்குள்ள அதிகார வர்க்கமும் ஆட்சியில் உள்ள கட்சிகளும் முதலாளிய வர்க்கத்திற்குச் சேவை செய்பவர்களே என்பதையும் இன்றைய இளைஞர்கள் தெள்ளத் தெளிவாக அறிவார்கள். இங்குள்ள முதலாளிய வர்க்கத்தின் முதலாவது இலட்சியமும், இறுதியான இலட்சியமும் இலாபம்தான்..." என்று கூறப்பட்டிருப்பது மிகவும் சரியான கருத்தாகும். இந்தக் கருத்தின் அடிப்படையில் இளைஞர்களையும், தொழிலாளிகள் - விவசாயிகளையும் ஒருங்கிணைத்து சமுதாய மாற்றத்தைக் கொண்டு வர வேலை செய்வதே நம்முடைய கடமையாக நம்முன்னே இருக்கிறது...- தொழிலாளர் ஒற்றுமை இயக்கம்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சாம்சங் தொழிலாளர் போராட்டம்: தலைமைக்கு வெற்றி - தொழிலாளர்களுக்கு பின்னடைவு

  தொழிற்சங்க அங்கீகாரத்தை முதன்மைக் கோரிக்கையாகவும் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் 37 நாட்களுக்கும் மேலாக வேலைநிறுத்தம் செய்து வந்த ‘ சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் ’ போராட்டம் , அது முன்வைத்த கோரிக்கைகளில் எதுவும் நிறைவேற்றப்படாமலேயே 15.10.2024 அன்று முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.   போராட்டங்கள் எப்பொழுதும் வெற்றியை மட்டுமே தருவதில்லை , வெற்றி மற்றும் தோல்வி இரண்டுமே மாறி மாறி வரக்கூடியதுதான் போராட்டக்களம். சில நேரங்களில் பெரும் இழப்புகளோடு கூட போராட்டக் களத்திலிருந்து பின்வாங்க வேண்டிய சூழல் ஏற்படும் , அந்தச் சூழலை உணர்ந்து போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டிய தேவையும் ஏற்படும். இதில் ஏற்பட்ட அனுபவத்தைத் தொகுத்துக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதற்கான படிப்பினையை இது கொடுக்கும். ஆனால் , போராட்டத்தின் போக்கு தொழிலாளர்களின் நலனை முன்னிறுத்தாமல் , ஏமாற்றும் போக்கைக் கைக்கொள்ளும் பொழுது அது ஒட்டுமொத்தத் தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்கே எதிராகக் கொண்டு போய் விடுகின்றது.   சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்திற்குத் தலைமை கொடுத்

வேலை பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் என்னும் நிறுவனம் ஒசூர் பகுதியில் 1998 முதல் செயல்பட்டு வருகின்றது . இது வெள்ளீயத்தால் ( தகரத்தால் ) ஆன கொள்கலன்களை , தகரக்குவளைகளை உற்பத்தி செய்கின்றது . இந்த ஆலையின் முதலாளி இந்தியாவை பூர்வீமாக கொண்டவராக இருந்தாலும் , தற்பொழுது கென்யாவில் வசித்து வருகின்றார் . தொடக்கம் முதலே இந்த ஆலையானது தொழிலாளர்களின் உழைப்பை வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்து வருகின்றது . வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் நீண்டநாட்கள் பணிபுரிந்து வந்தாலும் அவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யாமலும் , நியாயமான ஊதியம் வழங்காமலும் தொழிலாளர்களை வஞ்சித்து வந்தது . தொழிலாளர்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து 52 தொழிலாளர்கள் மட்டும் நிரந்தரம் செய்யப்பட்டனர் . இவர்களும் ஆறு வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் , பயிற்சித் தொழிலாளர்கள் என மாற்றிமாற்றி அவர்களை வகைபடுத்தி பின்னரே நிரந்தரம் செய்யப்பட்டனர் . அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைக்கப்பட்டுச் சுரண்டப்பட்டு வருகின்றனர் . தற்பொழுது வரை 450 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்பட

பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் சீர்த்திருத்தவாதத்தில் வீழ்ந்துள்ள இடதுசாரி இயக்கங்கள்

இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இடதுசாரிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் சில அமைப்புகளின் போக்குகள் அவர்களின் சீர்த்திருத்தவாதக் கண்ணோட்டத்தை அம்பலபடுத்தி வருகின்றன. நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த காங்கிரசு கட்சி இந்திய முதலாளி வர்க்கத்தின் வளர்ச்சிக்கும் சுரண்டலுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்தும் , பெரும் மூலதனம் தேவைப்படும் கனரகத் தொழில்களை மக்களுடைய வரிப் பணத்திலிருந்து அமைத்துக் கொடுத்தும், ஆரம்பக் கட்டத்தில் பன்னாட்டு மூலதனங்களின் போட்டியிலிருந்து அவர்களைப் பாதுகாத்தும் , பின்னர் இந்திய முதலாளிகள் சர்வதேச அளவில் சந்தையைப் பிடிக்கவும் , முதலீடு செய்யவும் உலகமயமாக்கல் கொள்கையை முன்னெடுத்தும் தொடர்ந்து சேவை செய்து வந்தது. அதே நேரத்தில் தொழிலாளர்களின் நலனுக்காகவும் , விவசாயிகளின் நலனுக்காகவும் , ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும் போராடிய இடதுசாரிகள் , ஜனநாயக அமைப்புகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி ஒடுக்கி வந்தது. வீரம் செறிந்த தெலுங்கானா மக்களின்