Skip to main content

வரலாற்றின் திருப்புமுனையில் இலங்கை


“...புரட்சியின் முதலாவதும், முதன்மையானதும், அடிப்படையானதுமான அடையாளம் என்னவென்றால் அரசு அதிகாரம் ஒரு வர்க்கத்திடமிருந்து இன்னொரு வர்க்கத்திடம் செல்வதாகும். கறாரான அறிவியல் சார்ந்தும், நடைமுறை அரசியல் சார்ந்தும் புரட்சி என்ற வார்த்தையின் பொருள் இதுதான்.” 

                                -- லெனின், ஏப்ரல் ஆய்வுரை.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து 1948ல் சுதந்திரம்  பெற்ற இலங்கை கடந்த எழுபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்று பொருளாதார நெருக்கடியிலும் அரசியல் நெருக்கடியிலும் சிக்குண்டு உள்ளது. உணவுப் பொருட்களின் கடுமையான விலையேற்றங்கள், சமையலுக்கான எரிவாயு உருளைகள் பற்றாக்குறை, பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்கள் இல்லாமை. மின்சாரத் தட்டுப்பாடு, மருந்துகள் கிடைக்காமை என வாழ்க்கைக்கு இன்றியமையாத அனைத்துப் பொருட்களும் கிடைக்காத நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து ஆட்சியாளர்களை எதிர்த்து மக்கள் பெரும் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இலங்கை முதலாளிகளும் பன்னாட்டு முதலாளிகளும் சேர்ந்து இலங்கையின் வளத்தையும் மக்களையும் ஒட்டச் சுரண்டி ஓட்டாண்டியாக்கி விட்டனர்; மக்களை வறுமையிலும் துயரத்திலும் வேலை இல்லாத் திண்டாட்டத்திலும் ஆழ்த்தி விட்டனர். அதனால் முதலாளிய வர்க்கத்தினுடைய நலன்களுக்காக, அவர்களுடைய ஏஜண்டுகளாக  ஆட்சியில் அமர்ந்து ஆட்சி புரிந்து வந்த  ராஜபக்சே குடும்பத்தின் மீது மக்களின் ஆற்ற முடியாத பெரும் கோபம் திரும்பியுள்ளது. பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்சேவின் பாரம்பரிய வீட்டிற்கு மக்கள் தீ வைத்துக் கொளுத்தித் தங்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.  மே  மாதம் மகிந்த ராஜபக்சே பதவியை விட்டுத் தப்பி ஓடினார். ஆனால் குடியரசுத்  தலைவர் கோத்தபய ராஜபக்சே பதவியிலிருந்து விலகாமல் உடும்புப் பிடியாக ஒட்டிக் கொண்டிருந்த வேளையில் மக்களின் போராட்டம் உச்ச கட்டத்தை அடைந்தது.

ஜூலை 9 ந் தேதி, மக்கள் போராட்டம் தொடங்கி 92  ஆம் நாள், காலிமுகத் திடலில்  கோத்தபய குடும்பம் குடியிருந்த குடியரசுத் தலைவரின் அரண்மனையையும் செயலகத்தையும்  நோக்கி  மக்கள் அலை அலையாகத் திரண்டு சென்றனர்.  கடுமையான இராணுவக் கட்டுப்பாடுகளையும் தடியடிகளையும்  கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும்  துப்பாக்கிச் சூடுகளையும் முறியடித்து மக்கள் அரண்மனைக்குள் நுழைந்தனர். மக்களின் கட்டுப்பாட்டிற்குள் அரண்மனை வந்தது. அருங்காட்சியகம் ஒன்றைப் பார்ப்பது போல மக்கள் அங்கிருக்கும் ஆடம்பரமான பொருட்களையும் வசதிகளையும் பார்த்து மலைத்துப் போய் நிற்கின்றனர். அங்குள்ள விலை உயர்ந்த இருக்கைகளில் அமர்ந்தும், சொகுசுப் படுக்கைகளில் புரண்டும், ஆடம்பரமான நீச்சல் குளத்தில் குதித்தும், வறுமையுற்ற ஒரு நாட்டில், மக்கள் சோற்றுக்கே அல்லாடிக் கொண்டிருகின்ற ஒரு நாட்டில் அதன் அதிபர் எத்தகைய ஆடம்பர வாழ்வில் திளைத்து வருகின்றார் என்பதை நேரில் பார்க்கின்றனர்.

அதே சமயத்தில், மகிந்த ராஜபக்சே பதவியிலிருந்து தப்பி ஓடிய பிறகு  அந்த நாட்டின்  பிரதமராக அமர்த்தப்பட்ட ரணில் விக்ரமசிங்கேவும் பதவி விலகக் கோரிப் போராடி வரும் மக்கள்  அவருடைய வீட்டிற்குத் தீ வைத்துள்ளனர்.

ஜூலை 13 ந் தேதி கோத்தபய பதவியை விட்டு விலகுவதாகக் கூறி இருந்தும் அவர் நாட்டை விட்டு ஓடுவதற்கு முன்பு ரணில் விக்கிரமசிங்கேவை தற்காலிகக் குடியரசுத் தலைவராக நியமித்து உள்ளதாகக் கூறி ரணில் பதவிப் பொறுப்பை ஏற்றுள்ளார். அதனால் மக்கள் கோபம் கொண்டு பிரதமரின் அலுவலகத்தில் நுழைந்து அதையும் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். இராணுவமும் போலிசும் முதலில் தாக்குதலில் ஈடுபட்டு மக்களைத் தடுக்க முயன்றாலும் மக்கள் சக்தியை எதிர்கொள்ள முடியாமல் அமைதியாகி விட்டன என்றே செய்திகள் கூறுகின்றன.  

அதிபரின் அரண்மனையும் செயலகமும் பிரதமரின் அலுவலகமும் செயலகமும் மக்களின் ஆளுமையின் கீழ் வந்து விட்டாலும் அதிகாரம் மக்கள் கைக்கு வந்து விட்டது எனக் கூற முடியுமா?

கோத்தபயாவிற்கு எதிராக அனைத்துப் பகுதி மக்களும் கிளர்ந்து எழுந்துள்ளனர். தொழிலாளர்களும், விவசாயிகளும், பல்கலைக்கழக மாணவர்களும் பேராசிரியர்களும், வழக்குரைஞர்களும், கலைஞர்களும், இளைஞர்களும் பெண்களும் ஒன்று சேர்ந்து போராடி வருகின்றனர். கொழும்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு என நாடெங்கும் மக்கள் இன, மத வேறுபாடின்றி ஒன்று திரண்டு போராடி வருகின்றனர். ஆனால் இந்த மாபெரும் மக்கள் போராட்டத்தின் ஒரே முழக்கமாக “கோத்தபயாவே வீட்டுக்குப் போ” என்பது மட்டும்தான் உள்ளது. நிலவுகின்ற முதலாளிய அரசியல் அதிகாரத்திற்கு மாற்றாக மக்களை அதிகாரத்தில் அமர்த்துவதற்கான முழக்கமோ திட்டமோ எதுவும் போராட்டக்காரர்களிடம் இல்லை. அதற்கான அரசியல் திட்டத்தைக் கொண்டுள்ள மக்கள் செல்வாக்குள்ள தலைமை அங்கு இல்லை என்பதையும், போராடும் மக்களுக்கு வழி காட்டும் நிலையில் அது  இல்லை என்பதையும்தான்  எதார்த்தமான நிலைமைகள் தெரிவிக்கின்றன.

முதலாளிய வர்க்கத்தின் அதிகாரத்திற்கு எதிரான போரில், நாட்டில் சமூக உற்பத்தியின்  இதயமாக  இருக்கும் பாட்டாளி வர்க்கத்தினால் மட்டுமே  அனைத்து மக்களுக்கும் உறுதியான தலைமை கொடுத்து சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும். ஆனால் இன்றைய போராட்டத்தின் எதார்த்த நிலைமைகள் அந்த நாட்டில் அரசியல் உணர்வும் வர்க்க உணர்வும் பெற்ற பலமான பாட்டாளி வர்க்கத் தலைமை இல்லை என்பதையே காட்டுகின்றன. 

கோத்தபய பதவி விலகி விட்டாலும் முதலாளிய அரசியல் அதிகாரத்திற்கான பாராளுமன்ற அமைப்பும் நிர்வாகத்திற்கான அதிகாரவர்க்க அமைப்பும் தொடர்ந்து நீடிக்கும். பாராளுமன்ற ஆட்சிமுறை என்பதே முதலாளிய வர்க்கம் தனது வர்க்கத்தின் ஆட்சி அதிகாரத்திற்காக வரலாற்றில் உருவாக்கிக் கொண்ட ஒரு ஆட்சிமுறைதான். அது சட்டமியற்றும் பாராளுமன்ற அமைப்பையும், சட்டங்களை நிறைவேற்றும் அதிகாரம் கொண்ட அதிகார அமைப்பையும் தனித்தனியே பிரித்து வைக்கும் ஆட்சிமுறை. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சட்டம் இயற்றும் அதிகாரம் மட்டும்தான் இருக்கும். அந்த உறுப்பினர்களையும் முதலாளிய வர்க்கம் தனது பண பலத்தால் விலைக்கு வாங்கித் தனக்குச் சேவை செய்பவர்களாக மாற்றும். ஒரு நாட்டில் பாராளுமன்றம் செயல் இழந்து விட்டாலும் கூட நாட்டின் நிர்வாகத்தை அதிகாரவர்க்கம் தொடர்ந்து நடத்தும். அந்த அதிகார வர்க்கம் பல்வேறு வலைப் பின்னல்கள் மூலம் முதலாளிய வர்க்கத்தால் கட்டுப்படுத்தப்பட்டு வரும். எனவே கோத்தபய என்ற தனி நபர் பதவி விலகினாலும் முதலாளிய வர்க்கத்தின் ஆட்சி தொடரும். கோத்தபயாவிற்குப் பதிலாக இன்று இலங்கையில் முக்கிய எதிர்க் கட்சியாக உள்ள ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜி பிரமதேசா அந்தப் பதவியில் அமர்வார்.  அதுதான் ஒரே வேறுபாடு.

பாராளுமன்ற ஆட்சிமுறை சமூகத்தில் மிகமிகச் சிறுபான்மையாக உள்ள முதலாளிகளுக்கான ஆட்சிமுறை.  ஜனநாயக ஆட்சி என்று அது தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டாலும் அது பெரும்பான்மையாக உள்ள மக்களின் மீதான  முதலாளிய வர்க்கத்தின் சர்வாதிகார ஆட்சியாகும். பாராளுமன்ற ஆட்சிமுறை எப்பொழுதும் பெரும்பான்மையான மக்களுக்கு அதிகாரத்தையும் ஜனநாயகத்தையும் வழங்காது.

உண்மையில் சமூகத்தில் மிக மிகப் பெரும்பான்மையாக உள்ள மக்களுக்கு அதிகாரத்தையும் ஜனநாயகத்தையும் உறுதிப்படுத்தக்கூடிய ஆட்சிமுறை சோவியத் அல்லது கம்யூன் ஆட்சி முறைதான்.. அந்த ஆட்சி முறையை வரலாற்றில் முதன்முறையாக பிரஞ்சு நாட்டில், பாரிஸ் நகரில் உழைக்கும் மக்கள் முதலாளிய வர்க்கத்திற்கு எதிரான தங்களுடைய புரட்சிகரமான எழுச்சியின்போது 1871ல் நிறுவினார்கள். அதை முன் மாதிரியாகக் கொண்டுதான் 1917ல் ரசியாவில் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில்  சோவியத் ஆட்சிமுறை அமைந்தது.. உலகம் முழுவதும் பாராளுமன்ற ஆட்சிமுறை எப்படி முதலாளிய வர்க்கத்திற்கான ஆட்சிமுறையாக வரலாற்றின் வளர்ச்சிக் கட்டத்தில் உருவாக்கப்பட்டதோ, அது போலவே உழைக்கும் மக்களுக்கான ஆட்சிமுறையாக சோவியத் ஆட்சிமுறை வரலாற்றின் வளர்ச்சிக் கட்டத்தில் உருவாக்கப்பட்டது.

சோவியத் ஆட்சி அமைப்பில் மக்கள் பிரதிகள் சட்டங்களை இயற்றும் அதிகாரம்  மட்டுமல்லாமல் அவற்றை நிறைவேற்றும் அதிகாரமும் கொண்டு இருப்பார்கள். பிரதிநிதிகள் தவறு செய்யும்போது அவர்களைத் திருப்பி அழைக்கும் அதிகாரம் மக்களுக்கு இருக்கும். அதிகாரிகளும் நீதிபதிகளும் மக்களால் தேர்ந்தேடுக்கப்படுவார்கள். அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் திறன் பெற்ற ஒரு தொழிலாளருக்கு வழங்கப்படும் ஊதியத்தின் அளவே இருக்கும். நிரந்தரப் படை ஒழிக்கப்படும். அதற்குப் பதிலாக மக்கள் படை மட்டுமே இருக்கும். இத்தகைய ஆட்சிமுறையே அதிகாரவர்க்கத்தின் ஆட்சியை ஒழித்து மக்களின் அதிகாரத்தை நிறுவும். முழுமையான ஜனநாயகத்தை மக்களுக்கு உறுதிப்படுத்தும்.

இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடியிலும், அரசியல் நெருக்கடியிலும் சிக்கியுள்ள இன்றைய நிலையில் அந்த நாட்டின் ஆளும் முதலாளிய வர்க்கத்தின் பெரும் அச்சம் மக்களின் பெரும் போராட்டம் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையின் கீழ் சென்று விடக் கூடாது என்பதுதான். முதலாளிய வர்க்கத்தின் பாராளுமன்ற ஆட்சிமுறையை ஒழித்து விட்டுத் தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையின் கீழ் சோவியத் ஆட்சிமுறைக்குச் சென்று விடக் கூடாது என்பதுதான். உலகம் முழுவதும் உள்ள முதலாளிய நாடுகளின் கவலையும் அதுதான். குறிப்பாக இந்தியாவின் ஆளும் முதலாளிய வர்க்கம் தனக்கு அருகில்  ஒரு க்யூபா உருவாகி விடக் கூடாது என அஞ்சுகிறது. இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியின் விளைவாக எழுந்துள்ள  மக்களின் கொந்தளிப்பு அங்குள்ள முதலாளிய ஆளும் வர்க்கத்தைத் தூக்கி எறிந்து விடக் கூடாது என இந்தியா கருதுகிறது. அவ்வாறு நடந்து விட்டால் இலங்கைச் சந்தையில் கிடைத்து வரும் பெரும் இலாபத்தை இந்திய முதலாளிய வர்க்கம் இழக்க நேரிடும் அல்லவா? அதனால்தான் இலங்கையைப் பொருளாதார நெருக்கடியிலிருந்து காப்பாற்றி விட வேண்டும் எனக் கருதி கடந்த ஆறு மாத காலத்தில் மட்டும் 380 கோடி டாலரை அதாவது 30,400 கோடி ரூபாயைக் கடனாகவும் பொருட்களாகவும் இந்திய முதலாளிகளின் அரசு வாரி வழங்கியுள்ளது. பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கையை மீட்க சர்வதேச நாணய நிதியமும்  கடன் வழங்க முன் வந்துள்ளது. இருப்பினும் ஆட்சியாளர்கள் நினைத்தது போலப் பொருளாதார நெருக்கடியை அவ்வளவு விரைவாகவும் எளிதாகவும் தீர்க்க முடியவில்லை. மக்களின் போராட்ட அலைகளைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.

எனவே முதலாளிய வர்க்கத்தின் அனைத்துக் கட்சிகளும் அமைதியான முறையில் அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காணத் தீவிர முயற்சில் ஈடுபட்டுள்ளன. மக்களின் போராட்டம் முதலாளிய வர்க்கத்தின் ஆட்சி அதிகாரத்தைத் தூக்கி எறியும் அளவுக்குச் சென்று விடக் கூடாது என அஞ்சுகின்றன. முக்கியமான எதிர்க் கட்சியாக உள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜி பிரமதேசா ‘விரைவில் மக்களுடைய போராட்டங்களுக்குத் தீர்வு காண வேண்டும். அதற்காக விரைவில் தேர்தலை நடத்த வேண்டும். அதன் மூலம் மக்களின் ஆதரவைப் பெற்ற அரசாங்கத்தை நிறுவ வேண்டும். இல்லாவிட்டால் விளிம்பு நிலையில் உள்ள சக்திகள் நிலவுகின்ற வெற்றிடத்தைக் கைப்பற்றி விடும்’ என்கிறார். அதாவது இன்று மக்கள் போராட்டம் தலைமை இல்லாமல் தன்னெழுச்சியாக நடந்து வருகிறது. காலதாமதம் செய்தால் முதலாளிய வர்க்கத்திற்கு எதிராகப் பாட்டாளி வர்க்கத்தின் உறுதியான தலைமையின் கீழ் புரட்சிகரமான போராட்டம்  உருவாகி விடும். அது முதலாளிய வர்க்கத்தின் ஆட்சிக்கே முடிவு கட்டி விடும் என அஞ்சுகிறார்.

இலங்கைக்கான அமெரிக்காவின் தூதர் ஜூலி சுங் ‘அதிகாரம் அமைதியான முறையிலும், ஜனநாயக ரீதியிலும் கைமாற அனைத்துக் கட்சிகளும் தீர்வு காண வேண்டும்’ என்கிறார்.

கோத்தபய நாட்டை விட்டு ஓடி விட்ட நிலையில், ரணில் விக்கிரமசிங்கே தற்காலிகக் குடியரசுத் தலைவராக அமர்த்தப்பட்டுள்ளார். வரும் 20ந் தேதிக்குள் அனைத்துக் கட்சிகளின் சார்பாக ஒருவரைக் குடியரசுத் தலைவராக அமர்த்த வேண்டும் என்றும், விரைவில் தேர்தல் நடத்தி ஒரு புதிய அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்றும் முதலாளியக் கட்சிகள் திட்டமிட்டுள்ளன. எதிர்க் கட்சிகள் சஜி பிரமதேசாவை இடைக்காலக் குடியரசுத் தலைவராக அமர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இப்பொழுது  உள்ள 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் பிரமதேசாவின் கட்சியைச் சேர்ந்தவர்கள் 50  பேர்தான் உள்ளனர். அதனால் அதிக உறுப்பினர்களைக் கொண்டுள்ள ராஜபக்சே கட்சியினர் அதை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் கோத்தபய தற்காலிகக் குடியரசுத் தலைவராக நியமித்துள்ள ரணில் விக்கிரமசிங்கேவை ஆதரித்தால் இழு பறி நீடிக்கும். விக்கிரமசிங்கேவை மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. போராட்டம் தொடரும். எனவே அரசியல் நெருக்கடிக்கு முதலாளியக் கட்சிகளால் உடனடியாகத் தீர்வு காணப்படுமா அல்லது அதிகாரப் போட்டியினால் இழுபறி நீடிக்குமா என்பது தெரியவில்லை.

முதலாளியக் கட்சிகளின் அதிக பட்ச அரசியல் திட்டமே  சட்டத்தை நிறைவேற்றும் அதிகாரம் கொண்ட அதிபரின் அதிகாரத்தைப் பறித்து மீண்டும் பாராளுமன்றத்தினால் தேர்ந்தெடுக்கப்படும் அமைச்சரவைக்கு அதிகாரத்தைக் கொண்டு வருவதுதான். அதன் மூலம் மக்களின் கோபத்தைத் தடுத்து விடலாம் என்றும், அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு கண்டு விடலாம் என்றும் அக்கட்சிகள் கணக்குப் போடுகின்றன. மற்றபடி, சர்வ தேச நாணய நிதியம், உலக வங்கி ஆகியவற்றிலிருந்து -அவை விதிக்கும் மக்கள் விரோத நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டு- நிதி உதவிகள் பெற்று, இன்றைய பொருளாதார நெருக்கடியைத் தீர்த்துவிடலாம் என்றும், அதன் மூலம் முதலாளிய வர்க்கத்தின் ஆட்சியைக் காப்பாற்றி விடலாம் என்றும் அவை திட்டமிடுகின்றன.

இந்த நிலையில் இலங்கையில் உள்ள நவ சம சமாஜக் கட்சி, ஐக்கிய சோசலிசக் கட்சி போன்ற கட்சிகள் திரிபுவாதத் தலைமையில் உள்ளதால் அந்தக் கட்சிகளும் முதலாளியக் கட்சிகளுடன் இணைந்து நிலவும் முதலாளிய அரசியல் அமைப்புக்குள்ளேயே தீர்வைத் தேடிக் கொண்டிருக்கின்றன. 1971ல் இடது தீவிரப் பாதையில் எழுச்சியை நடத்தித் தோல்வியுற்ற மக்கள் விடுதலைக் (ஜன விமுக்தி பெரமுனா) கட்சியும் பிறகு இனவாதக் கட்சியாகச் சீரழிந்து, முதலாளியக்  கட்சிகளுடன் ஐக்கியமாகி விட்டது.

முன்னிலை சோசலிசக் கட்சி என்ற அமைப்பு மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் ஓரளவு செல்வாக்குப் பெற்றிருந்தாலும் தொழிலாளர்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருப்பதாகத் தெரியவில்லை. ‘மக்களின் பிரதிநிதிகளைத் திருப்பி அழைக்கும் அதிகாரம் மக்களுக்கு வேண்டும்’ பாராளுமன்றத்திற்கு வெளியே இருந்து அதைக் கட்டுப்படுத்தும் ஒரு மக்கள் அதிகார அமைப்பு இருக்க வேண்டும்’ என்று அந்த அமைப்பு கூறினாலும் அதனிடம் முதலாளிய வர்க்கத்தின் அதிகாரத்தைத் தூக்கி எறிந்து, அதற்கு மாற்றாகப் பாட்டாளி வர்க்கத்திற்கான சோவியத் ஆட்சிமுறையை முன் வைக்கும் திட்டமில்லை. புரட்சிகரமான திட்டத்திற்குப் பதிலாக சீர்திருத்தங்களை உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் திட்டமாகவே அதன் திட்டம் உள்ளது.   

சோசலிச சமத்துவக் கட்சி என்னும் டிராட்ஸ்கிய அமைப்பு முதலாளிய அமைப்புக்கு மாற்றாக சோசலிசத்திற்கான அரசியல் வேலைத் திட்டத்தையும் பொருளாதாரத் திட்டத்தையும் வைத்து உள்ளது. ஆயினும் அது இலங்கையில் நிலவும் குறிப்பான தேசிய இனப் பிரச்சினையைக் கணக்கில் எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. சிங்கள, தமிழ் இன மக்களுக்கு இடையில் சமத்துவத்தையும் ஜனநாயகத்தையும் உறுதிப்படுத்தக் கூடிய தேசிய இனங்களின் அரசியல் சுயநிர்ணய உரிமையை அந்தத் திட்டம் உள்ளடக்கியதாக இல்லை.

அந்த அமைப்பும் கூட வேர்க்கால் மட்டத்தில் அமைப்புகளைக் கட்டி மக்களுக்குத் தலைமை கொடுக்கும் அளவுக்குப் பலம் கொண்டு இருப்பதாகத் தெரியவில்லை. அமைப்பு ரீதியில் தொழிலாளி வர்க்கம் பலவீனமான நிலையில் உள்ளது; பெரும்பாலான தொழிற்சங்கங்கள் திரிபுவாதக் கட்சிகளின் தலைமையின் கீழ் இருப்பதால் அவை  போதிய அளவு பாட்டாளி வர்க்க உணர்வும் அரசியல் உணர்வும் பெற்றதாக இல்லை. இந்த நிலையில் இப்பொழுது ஏற்பட்டுள்ள அரசியல், பொருளாதார நெருக்கடியில் மக்கள் போராட்டத்திற்குத் தலைமை கொடுத்து அரசியல் அதிகாரத்தைத் தொழிலாளர் வர்க்கத்தால் கைப்பற்ற முடியுமா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.

ஆனால், தொழிலாளர்களும் பிற உழைக்கும் மக்களும் அரசியலைப் பற்றியும் அரசியல் அதிகாரத்தைப் பற்றியும் அமைதியான காலத்தில்  கற்றுக் கொள்வதை விட மிக விரைவாகத் தங்களுடைய நேரடியான  புரட்சிகரமான போராட்டங்களின் போது கற்றுக் கொள்வார்கள். இலங்கை மக்களின் இன்றைய போராட்ட அனுபவங்கள் அரசின் முதலாளிய வர்க்கத்தன்மை பற்றியும், மக்களுக்கு விரோதமான அதன் நடவடிக்கைகள் பற்றியும், மக்களுடைய ஒன்றுபட்ட அமைப்பின் அவசியம் பற்றியும், மக்களுக்கான அதிகாரத்தின் அவசியம் பற்றியும் ஏராளமாகக் கற்றுக் கொடுத்துள்ளன. இந்த அனுபவங்களின் அடிப்படையில் பாட்டாளி வர்க்கம் அமைப்பாகத் திரண்டு மக்கள் அனைவருக்கும் தலைமை கொடுக்கும் ஒரு அரசியல் சக்தியாக மாறினால், விரைவில் முதலாளிய வர்க்கத்தின் அரசியல் அதிகாரத்திற்கு முடிவு கட்டப்படும். 

முதலாளிய வர்க்கம் விரைவில் அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு கண்டாக வேண்டும். அல்லது பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும். இரண்டும் உடனடியாக நடை பெறாவிட்டால், முதலாளியவர்க்கம் தனது ஜனநாயக முகமூடியைக் கழற்றி விட்டு நேரடியாகக் களத்தில் இறங்கும். இராணுவ எதேச்சதிகாரத்தைக் கட்டவிழ்த்து விடும். மக்களுடைய போராட்டத்தைக் கொடூரமாக ஒடுக்கும். இதைத்தான் முதலாளிய வர்க்கம் பா.ஜ.க.வின் சுப்பிரமணிய சுவாமியின் மூலம் வெளிப்படுத்தியுள்ளது. ‘இலங்கை மக்கள் போராட்டத்தை ஒடுக்க இந்தியா இராணுவத்தை அனுப்ப வேண்டும்’ என அவர் ஏற்கனவே கூறியுள்ளது அதைத்தான் வெளிப்படுத்துகிறது. தற்காலிக அதிபராகப் பொறுப்பேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கே, “பாசிச சக்திகளின் அச்சுறுத்தலிலிருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும்’ எனக் கூறி 13ந் தேதி நாட்டில் நெருக்கடி நிலையை அறிவித்துள்ளது அதற்கான முன்னறிவிப்பு எனக் கருதலாம். 

மக்களின் எழுச்சி இன்றைய நிலையில் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாவிட்டாலும் மக்கள் இந்த மாபெரும் போராட்டங்களிலிருந்து அரிய படிப்பினைகளைக் கற்றுக் கொள்வார்கள். இத்தகைய பல்வேறு போராட்டங்களிலிருந்தும் அவற்றின் தோல்விகளிலிருந்தும் கற்றுக் கொண்டுதான் மக்கள் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர். வரலாறும் முன் செல்கிறது.

-    சோசலிசத் தொழிலாளர் இயக்கம்.


Comments

  1. "வரலாற்றின் திருப்பு முனையில் இலங்கை" என்ற இந்த கட்டுரை மிகவும் தெளிவாக, அங்கு நடைபெற்றுவரும் நிகழ்வுகளின் அடிப்படையில் சூழ்நிலையை தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக முதலாளி வர்க்கம் தன்னுடைய நலனைப் பாதுகாத்துக் கொள்வதற்காக எப்படியெல்லாம் மக்களுக்கு எதிராக சதித் திட்டங்களில் ஈடுபட்டு வருகிறது என்பதை விளக்கியிருக்கிறது. இதற்கு உண்மையான மாற்று, சோவியத் அமைப்பு என்ற தொழிலாளிகள் - விவசாயிகளுடைய ஆட்சி அதிகார அமைப்பு தான் என்பதைத் தெள்ளத் தெளிவாக வலியுறுத்தியிருப்பது மிகவும் சிறப்பு.

    ஒரு நாட்டில் ஒரு எழுச்சி நடைபெறுகிறது என்றால், மக்கள் திரண்டு நின்று போராடுகிறார்கள் என்றால், அதன் பின்னால் ஒரு சக்தி இருக்கிறது என்பதும், தன்னெழுச்சியான போராட்டங்கள் தொடர்ந்து நீடிக்க வாய்ப்புகள் மிகவும் அரிது என்பதையும் அரசியல் சிந்தனை கொண்டவர்கள் நன்கு அறிவார்கள். அந்த சக்தி ஏகாதிபத்திய - முதலாளி வர்க்க சக்தியாகவோ அல்லது தொழிலாளிகள் - விவசாயிகளுடைய கட்சி அல்லது இயக்கமாகவோ இருக்கலாம்.

    மத்திய கிழக்குப் பகுதிகளிலும், பிற நாடுகளிலும் நடைபெற்ற ஆரஞ்சு புரட்சி, நீலப்புரட்சி மற்றும் பல்வேறு பெயர்களில் நடைபெற்ற புரட்சிகள், மக்களுடைய அதிருப்தியைப் பயன்படுத்தி ஏகாதிபத்தியத்தால் வழி நடத்தப்பட்ட இயக்கங்கள் என்பதை தெளிவாக நாம் காணலாம். மிகக் கொடிய ஏகாதிபத்திய சக்திகள், தங்களுடைய திட்டங்களுக்கு ஒத்துழைக்காத கட்சிகள் - தலைவர்களை மாற்றி தங்களுக்கு மிகுந்த சேவை செய்யக் கூடிய மிகவும் பிற்போக்கான சக்திகளை அதிகாரத்திற்குக் கொண்டு வருவதற்கு இப்படிப்பட்ட யுக்திகளையும் பயன்படுத்துகிறார்கள் என்பதை நாம் அண்மை ஆண்டுகளில் கண்டு வருகிறோம்.

    இந்த ஆய்வுக் கட்டுரை குறிப்பிட்டிருப்பது போல, இலங்கையில் ஒரு உண்மையான மாற்றம் வர வேண்டுமானால், அது தொழிலாளி - விவசாயிகளின் தலைமையில் திரண்டெழுந்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மூலம் மட்டுமே நடைபெற இயலும் என்பது முற்றிலும் உண்மை.

    இந்தியாவில் எல்லா கம்யூனிஸ்டுகளும் ஒருங்கிணைந்து இந்தியாவில் தொழிலாளி - விவசாயிகளுடைய தலைமையில் புரட்சியை நடத்தி அதிகாரத்தைக் கைப்பற்றுவதே இந்தியாவிலுள்ள நாம், இலங்கை தொழிலாளிகளுக்கும், விவசாயிகளுக்கும், மக்களுக்கும் செய்யக் கூடிய உண்மையான ஆதரவாக இருக்க முடியும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சாம்சங் தொழிலாளர் போராட்டம்: தலைமைக்கு வெற்றி - தொழிலாளர்களுக்கு பின்னடைவு

  தொழிற்சங்க அங்கீகாரத்தை முதன்மைக் கோரிக்கையாகவும் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் 37 நாட்களுக்கும் மேலாக வேலைநிறுத்தம் செய்து வந்த ‘ சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் ’ போராட்டம் , அது முன்வைத்த கோரிக்கைகளில் எதுவும் நிறைவேற்றப்படாமலேயே 15.10.2024 அன்று முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.   போராட்டங்கள் எப்பொழுதும் வெற்றியை மட்டுமே தருவதில்லை , வெற்றி மற்றும் தோல்வி இரண்டுமே மாறி மாறி வரக்கூடியதுதான் போராட்டக்களம். சில நேரங்களில் பெரும் இழப்புகளோடு கூட போராட்டக் களத்திலிருந்து பின்வாங்க வேண்டிய சூழல் ஏற்படும் , அந்தச் சூழலை உணர்ந்து போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டிய தேவையும் ஏற்படும். இதில் ஏற்பட்ட அனுபவத்தைத் தொகுத்துக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதற்கான படிப்பினையை இது கொடுக்கும். ஆனால் , போராட்டத்தின் போக்கு தொழிலாளர்களின் நலனை முன்னிறுத்தாமல் , ஏமாற்றும் போக்கைக் கைக்கொள்ளும் பொழுது அது ஒட்டுமொத்தத் தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்கே எதிராகக் கொண்டு போய் விடுகின்றது.   சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்திற்குத் தலைமை கொடுத்

வேலை பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் என்னும் நிறுவனம் ஒசூர் பகுதியில் 1998 முதல் செயல்பட்டு வருகின்றது . இது வெள்ளீயத்தால் ( தகரத்தால் ) ஆன கொள்கலன்களை , தகரக்குவளைகளை உற்பத்தி செய்கின்றது . இந்த ஆலையின் முதலாளி இந்தியாவை பூர்வீமாக கொண்டவராக இருந்தாலும் , தற்பொழுது கென்யாவில் வசித்து வருகின்றார் . தொடக்கம் முதலே இந்த ஆலையானது தொழிலாளர்களின் உழைப்பை வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்து வருகின்றது . வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் நீண்டநாட்கள் பணிபுரிந்து வந்தாலும் அவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யாமலும் , நியாயமான ஊதியம் வழங்காமலும் தொழிலாளர்களை வஞ்சித்து வந்தது . தொழிலாளர்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து 52 தொழிலாளர்கள் மட்டும் நிரந்தரம் செய்யப்பட்டனர் . இவர்களும் ஆறு வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் , பயிற்சித் தொழிலாளர்கள் என மாற்றிமாற்றி அவர்களை வகைபடுத்தி பின்னரே நிரந்தரம் செய்யப்பட்டனர் . அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைக்கப்பட்டுச் சுரண்டப்பட்டு வருகின்றனர் . தற்பொழுது வரை 450 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்பட

பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் சீர்த்திருத்தவாதத்தில் வீழ்ந்துள்ள இடதுசாரி இயக்கங்கள்

இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இடதுசாரிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் சில அமைப்புகளின் போக்குகள் அவர்களின் சீர்த்திருத்தவாதக் கண்ணோட்டத்தை அம்பலபடுத்தி வருகின்றன. நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த காங்கிரசு கட்சி இந்திய முதலாளி வர்க்கத்தின் வளர்ச்சிக்கும் சுரண்டலுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்தும் , பெரும் மூலதனம் தேவைப்படும் கனரகத் தொழில்களை மக்களுடைய வரிப் பணத்திலிருந்து அமைத்துக் கொடுத்தும், ஆரம்பக் கட்டத்தில் பன்னாட்டு மூலதனங்களின் போட்டியிலிருந்து அவர்களைப் பாதுகாத்தும் , பின்னர் இந்திய முதலாளிகள் சர்வதேச அளவில் சந்தையைப் பிடிக்கவும் , முதலீடு செய்யவும் உலகமயமாக்கல் கொள்கையை முன்னெடுத்தும் தொடர்ந்து சேவை செய்து வந்தது. அதே நேரத்தில் தொழிலாளர்களின் நலனுக்காகவும் , விவசாயிகளின் நலனுக்காகவும் , ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும் போராடிய இடதுசாரிகள் , ஜனநாயக அமைப்புகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி ஒடுக்கி வந்தது. வீரம் செறிந்த தெலுங்கானா மக்களின்