Skip to main content

இலவசங்களால் உயிர் வாழ்வது யார்? மக்களா? இல்லை ஆளும் வர்க்கமும் ஆட்சியாளர்களுமா?

அரசு மக்களுக்கு வழங்கிய வண்ணத் தொலைக்காட்சி, மின்விசிறி, கிரைண்டர், மிக்சி, ஆடு, மாடு, கோழி, மருத்துவச் சிகிச்சைக்கான காப்பீட்டுத் திட்டங்கள், நூறு யூனிட் மின்சாரம் மாணவர்களுக்கு சைக்கிள்மடிக்கணினி, புத்தகங்கள், பை, பல்பொடி, செருப்பு, சீருடை உள்ளிட்ட இத்தியாதிகள் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம், வருடாந்திர மானியம், மகளிருக்கான இலவசப் பேருந்துப் பயணம், கருவுற்ற மகளிருக்கான உதவித்திட்டங்கள், மாணவிகளுக்கான உயர்கல்வி உதவித்தொகை, கிராமப்புறங்களில் நூறுநாள் வேலை, இலவசக்கல்வி, இலவச மருத்துவம் இப்படி நீள்கின்றன அரசுகளின் மக்களுக்கான திட்டங்கள். மானியங்கள், விலையில்லாப் பொருட்கள், பரிசுப்பொருட்கள் எனப் பெயரிடப்பட்டாலும் இவைகள் இலவசங்கள் என்றே அழைக்கப்படுகின்றன. இவைகள் எதுவும் மக்கள் கேட்டு அரசுகள் வழங்கியதல்ல; பெரும்பாலும் அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வந்த பின்பு நிறைவேற்றிய தேர்தல் வாக்குறுதிகள் தான்.

இந்த இலவசங்கள் ஆட்சேபனைக்குரியவை என்றும், தவறான முன்னுதாரணங்கள் எனவும், சில அரசியல் தலைவர்கள் கருத்துகளை உதிர்க்கிறார்கள். அவர்கள் இலவசங்கள் நாட்டை அழித்துவிடும் என்றும் எச்சரிக்கிறார்கள். இந்த நாட்டின் பிரதமர் இன்னும் ஒருபடி மேலே போய் நாட்டுக்கும் அதன் வளர்ச்சிக்கும் பேராபத்தாக விளங்கும் இலவசத் திட்டங்கள் குறித்து மக்கள் குறிப்பாக இளைஞர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்கிறார். (இந்து தமிழ்திசை - தலையங்கம் 1-8-2022)

மக்கள் கேட்டுப் பெறாத இந்த இலவசங்கள் அவ்வளவு ஆபத்தானவையா? எனில் ஏன் எல்லா அரசியல் கட்சிகளும் தானாக முன் வந்து தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கிறார்கள்? இவர்களைப் பின்னிருந்து இயக்குகிற ஆளும் வர்க்கத்திற்கு இது தெரியாதா? தெரிந்தும் இவற்றை ஏன் அனுமதிக்கிறார்கள்? இந்த முரணில் தான் எல்லாப் புதிர்களுக்குமான விடை ஒளிந்திருக்கிறது.

உற்பத்தி சாதனங்களான தொழிற்சாலைகள், இயந்திரங்கள், கட்டிடங்கள், நிலம் ஆகியவற்றை உடைமையாகக் கொண்டிருக்கும்  ஆளும் வர்க்கத்திற்கும், தான் உயிர் வாழ்வதற்காகத் தனது உழைப்புச் சக்தியை விற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் உள்ள  உழைக்கும் வர்க்கத்திற்கும் தான் நேரடிப்பகை.

நேரடியான பொருளில் சுரண்டும் முதலாளி சுரண்டலுக்கு ஆளாகும் தொழிலாளி இவர்களுக்கான களம் தான் இது. இங்கே தான்அரசுஎன்றஆளும் வர்க்கத்தின் புலிசமூகத்தை ஒழுங்குபடுத்துகிறேன் பேர் வழி என்று இருவேறு பகைவர்க்கங்களுக்கிடையில் மக்கள் நலன் என்ற பசுத்தோல் போர்த்திக் களத்தைத் தன் பொறுப்பில் எடுத்துக் கொள்கிறது.

தொழிலாளி தன் ஒவ்வொரு போராட்டத்தின் போதும் முதலாளிக்கு எந்தவொரு பங்கமும் ஏற்பட்டு விடாமல் குறுக்கே வந்து பாதுகாப்பாக நிற்கிற அரசு என்கிற ஆளும் வர்க்கத்தின் கட்டமைப்பைப் புரிந்து கொள்கிறான்.

ஆனால் சமூகத்தில் பெரும் தொகையில் வாழ்கிற உழைக்கும் மக்கள்திரள் தன்னுடைய உண்மையான வடிவத்தை அறிந்து கொள்ளக் கூடாது என அஞ்சுகின்ற ஆளும்வர்க்கம் எல்லோருக்கும் மேலானபொதுவானபோர்வையில் அரசாகிய தனக்குச் சமூகப்பொறுப்பும் இருப்பதாக காட்டிக் கொள்கிறது; அதற்காகவே  மக்கள் நலத்திட்டங்கள்என்ற பெயரில் சிலவற்றை ஆட்சியாளர்கள் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இப்படியொரு நல்லவன்ங்கிற பட்டத்தை தக்கவைத்துக் கொண்டிருப்பதால் தான் தொழிலாளர் விரோதச் சட்டங்களையும், ஏன் மக்கள் விரோதப் போக்குகளையும் அதே மக்கள் ஆதரவோடு ஆளும் வர்க்கத்துக்கு அணுசரணையாக செய்து கொடுக்க முடிகிறது.

எந்தக் கட்சி  ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை முதலாளிய ஆளும்வர்க்கம் தான் தீர்மானிக்கிறது. அதற்கென்று தனிப்பட்ட அரசியல் கட்சி எதுவுமில்லை. இருப்பதில் எது நிலவுகின்ற சூழலுக்குச் சாதகமானதோ அந்தக் கட்சியை மக்களுடைய ஒப்புதலுடன் ஆட்சியில் அமர்த்த அனைத்துத் தேர்தல் விளையாட்டுகளையும் அது மேற்கொள்கிறது. பொதுமக்கள் கருத்துகளை அந்தக் கட்சிக்குச் சாதகமாக மாற்ற அனைத்து ஊடகங்களையும் பயன்படுத்திக் கொள்கிறது. அனைத்துத் தில்லுமுல்லுகளையும் பயன்படுத்தித் தனக்குச் சாதகமான கட்சியை ஆட்சிக்குக் கொண்டு வருகிறது. ஓட்டளிக்காமலேயே ஆளும் வர்க்கம் தனக்கான ஏஜண்டைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறது.  ஓட்டுரிமை, அது நம் பிறப்புரிமை என்பதெல்லாம் மக்களுக்கு மட்டும் தான். இதற்கு மேல் பி.ஜே.பி.  நீடித்தால் பல தலைமுறைகளாகக் கட்சியைக் காட்டித் தலைமறைவாக வாழும் ஆளும்வர்க்கம் அம்பலமாகிப் போகும் என்று நினைக்கிற அடுத்த நொடியில் காங்கிரஸ் ஆளும் கட்சியாகி விடும். அப்போதும் நமது இடதுசாரிகள்(!) காங்கிரசின்  பாசிசத்தை எதிர்த்துப் போராடிக் கொண்டிருப்பார்கள். (ஆளும் வர்க்கம் நெடுங்கால தலைமறைவாக நீடிப்பதும், அதை அடையாளம் காணமுடியாமல், அவ்வப்போது தலைமறைவுக்குப் போன நமது இடதுசாரிகள் ஆட்சியில் அமர்ந்திருக்கும் கட்சியை மட்டும் எதிர்த்துப் போராடுவதும் வேடிக்கைதான்.)

இப்போது விஷயத்திற்கு வருவோம். ரூபாய் மதிப்பிழப்பு, விலைவாசி ஏற்றம், உச்சபட்சமான வரிகள், இனி இழப்பதற்கு எதுவுமில்லை என்றிருக்கும் மக்களிடம் அரசு இனியேதும் தண்டல் செய்ய முடியாது என்பது நிதர்சனம். இப்போது சந்தை நெருக்கடி முற்றிப் போய் நிலை குலையக் காத்திருக்கும் ஆளும் வர்க்கத்திற்கு அரசு வேறென்ன செய்வது என்பதற்கான விடைதான் நிலவும் நலத்திட்ட ஒதுக்கீடுகளை மடைமாற்றி விடுவது.

அதற்கு என்ன செய்யலாம்? அதற்குத் தான் அரசும், அதிகார வர்க்கங்களும் கருவியாக ஆளும் வர்க்கத்தின் கைகளில் வந்தமர்கிறது. கொள்கையும், கோட்பாடுமாக இவர்கள் திருவாய் மலர்கிறார்கள் அவர்களுக்காக. சமூகப் பொறுப்புக்கான செலவினங்களை இலவசங்கள் என்று இகழ்வாக்கி அவற்றையும் கார்ப்பரேட், பெருமுதலாளிகளுக்கு அள்ளிக் கொடுப்பது தான் அரசின் நோக்கம். மக்களிடத்தில் இதற்கான பொதுக் கருத்தை உருவாக்கித் தருவதே ஊடகங்கள், அரசியல் கட்சிகள், கூலி அறிஞர்களின் தற்போதைய தலையாய பணி.

2004 தொடங்கி 2014 வரையான காலகட்டத்தில் மத்திய அரசின் மூலதனச் செலவினங்கள் 11% குறைந்து, மானியங்களுக்கான செலவுகள் 7% அதிகரித்து விட்டன. பிரதமர் மோடியின் காலத்தில் தான் குறைவாகிப் போன மூலதனச் செலவினங்கள் 7% ஏற்றம் கண்டிருக்கிறது; மானியங்கள் குறைக்கப்பட்டிருக்கின்றன. (அதே இந்து தலையங்கம்-1-8-2022).

விஷயம் இப்போது தெளிவாகிப் போனது. இந்த மடைமாற்றத்தின் தொடர்ச்சி தான் நூறு நாள் வேலைத் திட்டத்திற்கான 2022-2023 மதிப்பீட்டில் ரூ.25,000 கோடி குறைக்கப்பட்டுள்ளது உட்பட இன்னும் பல மானியக் குறைப்புக்கள்.

மக்களுக்கானவை மட்டுந்தான் இலவசங்களா? அதற்கு வேறு பரிமாணங்கள் ஏதேனுமுண்டா?

ஏன் இல்லை?

இதோ அப்படியான அரசின் அணிவகுக்கும் இலவசங்களின் பட்டியல்.

பன்னாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க சலுகை விலையில் நிலம், அரசின் தொழிற்பேட்டைகளில் (Industrial Estate) அவற்றுக்குக் குறைந்த வாடகையில் இடஒதுக்கீடு, நீண்ட காலக்குத்தகைக்கு ஆகக்குறைந்த விலையில் அரசு நிலம், தொழில் தொடக்கத்தில் பல்லாண்டுகளுக்கு வரிவிலக்கு (Tax Holiday), பெருநிறுவனங்களுக்கான வரி குறைப்புக்கள் (தற்போது கார்ப்பரேட் வரி 30% லிருந்து 20% ஆக குறைக்கப்பட்டுள்ளது), அவர்களுக்கு அரசின் முனைப்பிலான பல லட்சம் கோடி வங்கிக் கடன் ரத்துக்கள். இவைகள் அனைத்தும் அரசே வழங்கினாலும் இவைகளில் எதுவும் இலவசங்களில் இடம் பெறுவதில்லை; இலவசங்கள் என பெயரிடப்படுவதும் இல்லை, ஏன்?

தடையில்லா மின்சாரம், பன்னாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்கத் தாமதமில்லா உடனடி அனுமதிக்கு ஒற்றைச் சாளரமுறை, நிலத்தடி நீர் உறிஞ்ச அனுமதி, பொதுத்துறை நிறுவனங்களைச் சலுகை விலையில் தனியார் முதலாளிகளுக்குத்  தாரை வார்ப்பு என விரிகின்ற சலுகைகள் அனைத்துமே மக்களின் சொத்துக்களை கார்ப்பரேட்களுக்கு அரசு கையளிக்கும் இலவசங்கள் தான்.

மின் உபயோகத்திற்கான நிலக்கரி கொள்முதலில் டன் ஒன்றுக்கு உற்பத்திச்செலவு (லாபம் சேர்த்து) ரூ.22,000 எனும்போது மத்திய அரசு அதானியிடம் ரூ.40,000 விலையில் வாங்கச் சொல்வதாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வெளிப்படையாக விமர்சித்தார். இந்தக் கூடுதல் விலை டன்னுக்கு ரூ.18,000 என்பது இந்தியா முழுமைக்குமான கொள்முதல் எனக் கணக்கிட்டால் பல லட்சம் கோடிகளில் அரசின் துறைகளுக்குச் செலவு பிடிக்குமே? அது யார் பணம்? இந்த பல லட்சம் கோடிகளும் அரசு அதானிக்கு வழங்கும் இலவசம் இல்லையா?

பொது நிறுவனமான பி.எஸ்.என்.எல்.யை மத்தியஅரசே பலவீனப்படுத்தி விட்டு அலைக்கற்றைகளைத் தனியாரிடம் விற்றதன் மூலம் அவர்கள் மக்களிடம் கொள்ளையிடும் பல லட்சம் கோடிகளும் அரசு தனியாருக்கு வழங்கிய வெகுமதி இல்லையா? அதன் பேர் இலவசம் இல்லையா?

தற்போதைய 5ஜி ஏலத்தின் நிலை என்ன? ஏலம் விடப்பட்ட அலைக்கற்றைகளின் மதிப்பீட்டுத் தொகை 3 லட்சம் கோடி ரூபாய் என்று வரையறுத்து விட்டு வெறும் 1.5 லட்சம் கோடிக்கு ஏலம் விற்பனையாகி இருக்கிறது. அநாமத்துக் கணக்கில் போகும் இந்த 1.5 லட்சம் கோடி ரூபாயும் மத்திய அரசு அம்பானி, அதானி, டாட்டா, மிட்டல்களுக்கு வழங்கியிருக்கும் இலவசங்கள் இல்லையா?

மத்திய அரசின் விளம்பரச் செலவுகள் மட்டுமே ஆண்டுக்கு ஆயிரம் கோடி என்கிறது தரவுகள். இன்னும் மாநில அரசுகள், பொதுத்துறை இவைகளும் சேர்த்தால் பல்லாயிரம் கோடிகளில் ஒளிரும் விளம்பரங்கள். அவைகள் மக்களின் வரிப்பணத்திலிருந்து அரசுகள் தங்களுக்குத் தாங்களே எடுத்துக்கொள்ளும் இலவசம் இல்லையா? அரசியல் கட்சிகள் கார்ப்பரேட்களிடம் கோடிகளில் பெறுகின்ற நிதிகளை எதில் சேர்ப்பது? அவைகள் இலவசங்கள் இல்லையா? மக்கள் பிரதிநிதிகள் என்ற பெயரில் துய்க்கிற சாலை, கடல், வான்வழி கட்டணமில்லாப் பயணங்கள் மக்களின் வியர்வையிலும், இரத்தத்திலும் பெற்ற சலுகை இல்லையா? அதற்கு இலவசம் என்பதில்லாமல் வேறென்ன பெயர்? அவர்களுக்கு வழங்கப்படும் வசதியான வீடுகள், வாகனங்கள், வேலையாட்கள், மின்சாரம், கேஸ் இணைப்புக்கள், தொலைபேசிகள் இவையெல்லாம் கூட எந்தவிதப் பிரதிபலனும் பெறாத மக்கள் இவர்களுக்கு வழங்கும் இனாமும் இலவசமும் தானே?

முன்னேறிய அய்ரோப்பிய நாடுகளில் முதியோர் பென்ஷன், அவர்களுக்கான மருத்துவம், ஓய்வு இல்லங்கள், வேலை வாய்ப்பற்றோர்க்கான உதவித்தொகை அனைத்துக்கும் அரசே பொறுப்பேற்கிறது. ஸ்பெயின் போன்ற நாடுகளில் தொடர்வண்டிப் பயணங்களில் முதியோருக்கு கட்டணமில்லை. வேளாண்மை, கூட்டுறவு, காடுவளர்ப்பு இவைகளுக்கு அரசுமானியம் வழங்குகிறது. பொதுவாக அங்கே கல்வியும், மருத்துவமும் அரசின் கடமையாக இருகிறது. அங்கு இலவசம் என்ற வார்த்தையே பயன்படுத்தப்படுவதில்லை. அவை மக்களுடைய உரிமைகள் எனப் பார்க்கப்படுகின்றன. அரசுகளும், தலைவர்களும் தங்களின் கடமையென்றே அவற்றைச் செயல்படுத்துகிறார்கள். மக்கள் விழிப்புணர்வு அங்கே உயிர்ப்புடன் உள்ளதால் அரசின் சமூகப்பொறுப்பை எவரேனும் இலவசம் என்று சொன்னால் அடுத்த நொடி அவர்கள் பொறுப்பிலிருந்து தூக்கியெறியப்பட்டு விடுவர் என்பதே உண்மை.

அதற்கு மாறாக இங்கே கட்சிகளும், ஊடகங்களும் இலவசம் என்று விஷமப் பிரச்சாரம் செய்வதோடு அவற்றுக்கு எதிரான கருத்தியல் போரைக் கட்டவிழ்க்கும் கயமையையும் செய்கிறார்கள். எதுவுமற்ற இல்லாத மக்களுக்குக் கடுகளவு கடமையாற்றிச் சமூக ஏற்றத்தாழ்வை சிறிதளவாவது குறைக்க எத்தனிக்கும் முயற்சிகளை முளையிலேயே கிள்ளும் இவர்களின் மனக்கோணல்களை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கார்ப்பரேட்கள், பெருமுதலாளிகள் உள்ளிட்ட ஆளும் வர்க்கம் தொழிலாளரிடம் பகுதி உழைப்புக்கு மட்டும் கூலி கொடுத்து விட்டு பெரும் பகுதி உழைப்பை நேரடியாகச் சுரண்டுகிறது. அரசாங்கமோ மக்களிடமிருந்து (மறைமுக, நேர்முக எனப்) பல முனைகளிலும் தண்டல் செய்து சூறையாடிய வரி வருவாயிலிருந்து தங்களை வளப்படுத்திக் கொள்வதோடு அதன் பெரும்பகுதியை ஆளும் வர்க்கத்துக்கு அள்ளிக் கொடுக்கிறது. மிச்சம் மீதியை மக்களுக்குக் கிள்ளிக் கொடுப்பதைத்தான் இவர்கள் இலவசம் என கூச்சலிடுகிறார்கள்.

உண்மையில் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டித்தான் ஆளும் வர்க்கம் உயிர் வாழ்கிறது. அவர்களின் கொடுபடா ஊதியத்தில் தான் இவர்கள் கொழுத்துப் பெருக்கின்றனர். பாதி வருவாய் போக மீதி வருவாயை அரசாங்கம் வரி, வட்டி என்று பிடுங்கிக் கொண்டு பட்ஜெட் போடுகிறது. ஆக தொழிலாளர்களிடமிருந்தும், மக்களிடமிருந்தும் பெற்றுக் கொண்ட வருவாய் எனும் மானியத்திலும், இலவசத்திலும் தான் ஆளும் வர்க்கமும் ஆட்சியாளர்களும் உயிர் வாழ்கின்றனர்.

எங்களது வரியும், வட்டியும் எங்களுக்கானவை; அவை உங்களுக்கான இலவசங்கள் இல்லை எனப் போராடினால் அரசும், ஆளும் வர்க்கமும் துடிதுடித்துப் போகும். அதிகாரம் என்பதே மக்கள் மேல் அரசின் பெயரால் ஆளும் வர்க்கம் எடுத்துக் கொண்ட அதீத வன்முறைஅதிலிருந்து விடுதலையடையப் போராடுவதே புரட்சி. அதற்கு மக்கள் தயாராகும் போது அரசு இன்னும் பல நலத் திட்டங்களைத் தன் சமூக பொறுப்புக்கள் என்று கெளரவமாக அறிவித்து வழங்க முன் வரும். அப்போது மறந்தும் உதட்டளவில் கூட இலவசம் என்று பேசாது.

மொத்தமாக முதலாளித்துவத்தின் ஆதிக்கத்திலிருந்தும் சுரண்டலிலிருந்தும்  விடுபடுதலே வாழ்வாதாரப் பிரச்சினையின் தீர்வு என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இனி உழைக்கும் வர்க்கமாய் திரள்வதில் தான் விடியல் என்று உணர்தல் அவசியம். மூலதனத்துக்கு எதிரான போராட்டமே சமூக ஏற்றத்தாழ்வை முடிவுக்குக் கொண்டு வரும். இதைப் புரிந்து கொண்டு போராடுதலே தற்போதைய நிலைமைகளின் அவசரத் தேவை.

       பாவெல்சூரியன்


Comments

Popular posts from this blog

தொழிலாளர் ஊதியங்கள் ஏன் எப்போதும் மிகவும் குறைவாகவே இருக்கின்றன?

  உங்கள் உழைப்புக்கு ஏற்ற மதிப்புக் கிடைப்பதில்லை , உங்களுக்குக் கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பை விடப் பலமடங்கு உழைத்திருப்பதாக எப்போதாவது நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா ? கார்ல் மார்க்ஸ் உங்களைப் புரிந்துகொள்கிறார் . ஒட்டுமொத்தத் தொழிலாளர் வர்க்கமும் முதலாளித்துவ வர்க்கத்தால் சுரண்டப்படுகிறது என்று அவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் வாதிட்டார் . இது வெறும் மிகைப்படுத்தல் கூற்று அல்ல , மாறாக ஒரு பொருளாதார உண்மையாகும் . தொழிலாளர்கள் உருவாக்கும் மதிப்பின் ஒரு பகுதியைத் திட்டமிட்ட முறையில் திருடுவதன் மூலம் மிகுதியான செல்வத்தைக் குவிப்பதே   முதலாளித்துவத் தொழில்நிறுவனத்தின் முழுமையான நோக்கமாகும் . இந்தச் செயல்முறையே சுரண்டல் என்று குறிப்பிடப்படுகிறது . தொழிலாளர்களுக்கு அவர்களுடைய தகுதிக்குரிய ஊதியம் அளிக்கப்படுகிறது என்று முதன்மைப்போக்கு பொருளியலாளர்கள் கூறிக்கொள்கின்றனர் . தொழிலாளர்களின் ஊதியங்கள் அவர்களால் உற்பத்திப் பொருளுக்கு “ கூட்டப்படும் மதிப்பை ” குறிக்கின்றன தூரத்து நாடுகளில் பழிபாவத்திற்கு அஞ்சாத முதலாளிகள்

பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் சீர்த்திருத்தவாதத்தில் வீழ்ந்துள்ள இடதுசாரி இயக்கங்கள்

இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இடதுசாரிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் சில அமைப்புகளின் போக்குகள் அவர்களின் சீர்த்திருத்தவாதக் கண்ணோட்டத்தை அம்பலபடுத்தி வருகின்றன. நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த காங்கிரசு கட்சி இந்திய முதலாளி வர்க்கத்தின் வளர்ச்சிக்கும் சுரண்டலுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்தும் , பெரும் மூலதனம் தேவைப்படும் கனரகத் தொழில்களை மக்களுடைய வரிப் பணத்திலிருந்து அமைத்துக் கொடுத்தும், ஆரம்பக் கட்டத்தில் பன்னாட்டு மூலதனங்களின் போட்டியிலிருந்து அவர்களைப் பாதுகாத்தும் , பின்னர் இந்திய முதலாளிகள் சர்வதேச அளவில் சந்தையைப் பிடிக்கவும் , முதலீடு செய்யவும் உலகமயமாக்கல் கொள்கையை முன்னெடுத்தும் தொடர்ந்து சேவை செய்து வந்தது. அதே நேரத்தில் தொழிலாளர்களின் நலனுக்காகவும் , விவசாயிகளின் நலனுக்காகவும் , ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும் போராடிய இடதுசாரிகள் , ஜனநாயக அமைப்புகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி ஒடுக்கி வந்தது. வீரம் செறிந்த தெலுங்கானா மக்களின்

வேலை பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் என்னும் நிறுவனம் ஒசூர் பகுதியில் 1998 முதல் செயல்பட்டு வருகின்றது . இது வெள்ளீயத்தால் ( தகரத்தால் ) ஆன கொள்கலன்களை , தகரக்குவளைகளை உற்பத்தி செய்கின்றது . இந்த ஆலையின் முதலாளி இந்தியாவை பூர்வீமாக கொண்டவராக இருந்தாலும் , தற்பொழுது கென்யாவில் வசித்து வருகின்றார் . தொடக்கம் முதலே இந்த ஆலையானது தொழிலாளர்களின் உழைப்பை வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்து வருகின்றது . வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் நீண்டநாட்கள் பணிபுரிந்து வந்தாலும் அவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யாமலும் , நியாயமான ஊதியம் வழங்காமலும் தொழிலாளர்களை வஞ்சித்து வந்தது . தொழிலாளர்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து 52 தொழிலாளர்கள் மட்டும் நிரந்தரம் செய்யப்பட்டனர் . இவர்களும் ஆறு வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் , பயிற்சித் தொழிலாளர்கள் என மாற்றிமாற்றி அவர்களை வகைபடுத்தி பின்னரே நிரந்தரம் செய்யப்பட்டனர் . அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைக்கப்பட்டுச் சுரண்டப்பட்டு வருகின்றனர் . தற்பொழுது வரை 450 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்பட