ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் நான் வந்து நிற்கிறேன்
மௌனமான என் காலடி ஓசை யாருக்கும் கேட்கவில்லை
கதவைத் தட்டினாலும் என்னைக் காண்பாரில்லை
ஏனென்றால் நான் இறந்துவிட்டேன்,
வெகு நாட்களுக்கு முன்பாக ஹிரோசிமாவில்
நான் இறந்துவிட்டேன்
அன்றைக்குப் போலவே இப்போதும்
எனக்கு வயது ஏழுதான்
குழந்தைகள் இறந்துவிட்டால் அவர்கள் வளர்வதில்லை
சுழன்றடித்த தீச்சுவாலை எனது முடியைக் கருக்கிவிட்டது
எனது பார்வை மங்கி எனது விழிகள் இருண்டுவிட்டன
மரணம் வந்து எனது எலும்புகளைச் சாம்பலாக்கியது
அதுவும் வீசிய காற்றில் பறந்து பரந்தது
எனக்கு பழம் தேவையில்லை சோறும் தேவையில்லை
இனிப்பும் தேவையில்லை, ரொட்டியும் கூட வேண்டியதில்லை.
எனக்காக நான் எதையும் கேட்கப்போவதில்லை
ஏனென்றால் நான் இறந்துவிட்டேன், நான் இறந்துவிட்டேன்
நான் கேட்பதெல்லாம் அமைதி ஒன்றுதான்
இன்று நீங்கள் போரிடுங்கள்
உலகின் குழந்தைகள் உயிர் வாழவும்
வளரவும் சிரித்து விளையாடவும்.
இன்று நீங்கள் போரிடுங்கள்.
ஆங்கிலத்திலிருந்து
தமிழில்
நிழல்வண்ணன்
நன்றி:
Janatha Weekly.
போரின் கொடூரத்தைப் படம் பிடிக்கும் கவிதை.
ReplyDelete