Skip to main content

பாசிசம் வீழ்த்தப்பட வேண்டும்!

 


1932 ஆகஸ்டு 30ஆம் தேதியன்று நாசிச சக்திகள் வளர்ந்து வரும் சூழலில், கிளாரா ஜெட்கின் (ஜெர்மன் மார்க்சிஸ்ட், ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்) அவர்களால் ரீச்ஸ்டாக்கின் (ஜெர்மனியின் பாராளுமன்றம்) கடைசி அமர்வானது தொடங்கி வைக்கப்பட்டது.

பாராளுமன்றத்தின் மூத்த உறுப்பினர் என்ற முறையில்,  ஜெட்கின் அதன் தலைவராகத்  தொடக்க உரையாற்றும்  உரிமையைக்  கொண்டிருந்தார். அவர் தனது உரையைப் பாசிச அபாயத்தை நொறுக்கவும், முதலாளித்துவ அரசைத் தூக்கியெறியவும், சோசலிசப் புரட்சியை நோக்கி முன்னேறவும் அனைத்து உழைக்கும் மக்களும் ஒடுக்கப்பட்ட மக்களும் ஒன்றுபட வேண்டும் என அழைப்பு விடுக்கப் பயன்படுத்திக் கொண்டார். ஏனெனில் இது (ரீச்ஸ்டாக்)  நாசிச சக்திகளின் வளர்ச்சிக்கு உடந்தையாகவும், ஜெர்மனியின் அரசியலமைப்புச் சட்டத்தை மீறுவதாகவும், பெரும் மந்த நிலைமையின் பயங்கரங்களை எதிர்கொள்ளும்  ஆற்றலற்றதாகவும் இருந்தது. ஏறக்குறைய பார்வையற்ற நிலையில், நடக்க இயலாத நிலை இருந்த போதிலும் (அவரை மேடைக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது), அவரைப் படுகொலை செய்வதற்கான நாசிகளின் அச்சுறுத்தல் இருந்த போதிலும், ஜெட்கின், பாசிசத்தை வீழ்த்துவதற்கான அனைத்துத் தொழிலாளர்களின் ஐக்கிய முன்னணி  என்ற உணர்ச்சி மிக்க மூலவுத்தியை கோடிட்டுக் காட்டும் உரையினை நிகழ்த்தினார்.

பாசிசத்தை வீழ்த்துவதற்கான தொழிலாளர்களின் இயக்கம் வெற்றியடையவில்லை. தொடர்ந்து வந்த ஜனவரியில் ”அதிகாரத்தைக் கைப்பற்றுதல்” நிகழ்ந்தது. ஜனவரி 30 அன்று அதிபர் வொன் ஹிண்டன்பர்க் (vonHindenburg) அடாப் ஹிட்லரை தலைமை அமைச்சராக நியமித்தார். ரீச்ஸ்டாக் கலைக்கப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. அதன் உறுப்பினர்கள் ஒன்று தலைமறைவாகினர், நாடு கடத்தப்பட்டனர், அல்லது சித்திரவதை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர். தொழிலாளர்களின் அமைப்புகள் அழித்தொழிக்கப்பட்டன. ஏறக்குறைய  நூறு  நாசி அல்லாத ரீச்ஸ்டாக் உறுப்பினர்கள் வேட்டையாடப்பட்டுக் கொல்லப்பட்டனர். கிளாரா ஜெட்கின் மாஸ்கோவிற்குத் தப்பிச் சென்றார். அங்கு, தொடர்ந்து வந்த ஜூன் மாதத்தில் அவர் மறைந்தார். தொழிலாளர் வர்க்கத்தின் கம்யூனிசப் புரட்சியின் விளிம்பு நிலையிலிருந்த ஜெர்மனி, பத்தாண்டிற்குள்  ஐரோப்பா முழுவதிலும் போரையும், இன அழிப்பையும் கொண்டு வரும் நாசிச சர்வதிகாரத்திற்குச் சென்றது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள ஜெட்கின் உரை, ரீச்ஸ்டாக் குறிப்பேடுகளில் பதிவு செய்யப்பட்டிருந்ததும், மேலும் சர்வதேசப் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ஜெட்கின்னின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் மற்றும் உரைகளில் இருந்தும்  எடுக்கப்பட்டது ஆகும். இந்த உரை ‘உலாவரும் பட்டாம்பூச்சியின் நாட்குறிப்பு’ (Diary of a Walking Butterfly blog) என்னும் வலைப்பூவில் மறு வெளியீடு செய்யப்பட்டது. ஜெட்கின் உரை ஒலிப்பதிவாக Archive.org இல் உள்ளது.


* * *


தாய்மார்களே, கனவான்களே!

தகர்ந்து கொண்டிருக்கும் முதலாளித்துவ நெருக்கடியானது ஜெர்மனியின் பரந்த உழைக்கும் மக்களின் மீது மிகவும் பயங்கரமான துயரங்களை ஆலங்கட்டிப் புயல் போலப் பொழிந்து  கொண்டிருக்கும் நிலையில் ரீச்ஸ்டாக் கூடியுள்ளது. வறியவர்களுக்கான சமூக நலத்திட்ட உதவித்தொகை கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும்  பட்டினி கிடக்கின்ற இலட்சக்கணக்கான  வேலையில்லாதவர்கள் பட்டாளத்தில் கூடுதலாக மேலும் இலட்சக்கணக்கானவர்கள் இலையுதிர் காலம் மற்றும் குளிர்காலத்தில் இணைவர். பட்டினிக் கொடுமையின் அதிகரிப்பு என்பது  சமூகநலத் திட்டத்தினைச் சார்ந்து வாழும் அனைத்து மக்களின் தலைவிதியாக உள்ளது.

கொடுக்கப்படும் குறைந்த கூலியில் வேலை செய்யும் நிலையில், எப்பொழுதும் விரிந்து வரும் தொழில்துறையின் நுணுக்கங்கள் மூலம் உறிஞ்சப்பட்டு வரும் தசை மற்றும் நரம்புகளின் ஆற்றலை  அவர்களால் மீட்டெடுக்க முடியாது; அவர்களுடைய பண்பாட்டுத் தேவைகளையும் நிச்சயம் அடைய முடியாது. கூட்டுப்பேரத்தின் மீதும், தொழிலாளர் சமரசக் குழுக்கள் மீதுமான கட்டுப்பாடுகள் ஏற்கனவே மிகக் குறைந்த அளவில் இருக்கும் ஊதியங்களை மேலும் குறைக்கும்.

கைவினைஞர்கள், சிறுவணிகர்களுடன் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் அழிந்து வருவதும் அதிகரித்து வருகின்றது. சரிந்து வரும் பொருளாதாரமும், சுருங்கி வரும் கலாச்சார நடவடிக்கைகளுக்கான  மானியங்களும் மூளை உழைப்பைச் செலுத்துபவர்களின் இருப்புக்கான பொருளாதார அடிப்படையை அழித்து வருகின்றது.

அவர்களுடைய அறிவுச் செயல்பாட்டிற்கான களமானது தொடர்ந்து சுருங்கி வருகிறது. (ஐரோப்பாவின்) கிழக்கில் தொடங்கியுள்ள  இந்தப் பெரும் நெருப்பு (சோவியத் யூனியனையும் சோசலிசக் கட்டுமானத்தையும் அழிக்கும் பொருட்டு,  பகுதி அளவில், அந்த நெருப்பு மேற்கினால் ஊதிப் பெருக்கப்பட்டு   வருகிறது)   இறுதியாக ஜெர்மனியில்  அழிவையும் பேரச்சத்தையும்   உருவாக்கும். அது முன்பு நடந்த உலக யுத்தத்தினால் ஏற்படுத்தப்பட்ட பேரழிவுகளையும்  சாதாரணமாக்கி விடும் அளவுக்கு இருக்கும். 

இந்த நேரத்தில் ஜெர்மனியின் அரசியல் அதிகாரம் அதிபர் தலைமையிலான மந்திரி சபையினால் கைப்பற்றப்பட்டுள்ளது. இது ரீச்ஸ்டாகை ஒதுக்கி விட்டு ஏகபோக முதலாளித்துவம் மற்றும் பெரிய நிலச்சுவான்தார்களின் நம்பகமான ஊழியனாக, ஜெர்மன் இராணுவத்தின் தளபதிகளின் சக்தியைக் கொண்டு இயங்குகின்றது (கம்யூனிஸ்ட் பிரதிநிதிகள் “அருமை” எனக் குரலெழுப்புகின்றனர்).

சர்வ வல்லமை பொருந்திய அதிபரின் மந்திரிசபை இருந்த போதிலும், உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கையில் தற்பொழுது வரை இது முற்றிலுமாகத் தோல்வியடைந்துள்ளது. இதன் உள்நாட்டுக் கொள்கையானது, இவர்களின் முன்னோடிகளில் இருந்து வேறுபட்டுள்ளது. அவசரச் சட்டங்களின் மூலம், ஏற்கனவே நிலவி வரும் நெருக்கடியைக் காட்டிலும் மேலும் மேலும் நெருக்கடியை உருவாக்கி வருகிறது.

அதே சமயத்தில், இந்தப் பாதிப்பை எதிர்த்துப் போராடும் வெகுமக்களின் உரிமையை அமைச்சரவை மறுக்கிறது. பெரிய நிலச்சுவான்தார்கள், திவாலாகிப்போன தொழிலதிபர்கள், பெரிய வங்கியாளர்கள், கப்பல் உரிமையாளர்கள் மற்றும் நேர்மையற்ற ஊகவணிகர்கள் ஆகியோர் இந்த அரசாங்கத்திற்குத் தேவைப்படுபவர்களாக உள்ளனர். அது சிறப்பு உரிமை பெற்ற சிறு குழுக்களுக்கு வெகுமதியாக அளிப்பதற்காக வரி, கட்டணங்கள் மற்றும் வர்த்தக் கொள்கைகள் மூலம் பரந்த அடுக்குகளாக  உள்ள உழைக்கும் மக்களிடமிருந்து பறித்துக் கொள்கிறது.

நுகர்வு மீதும், பண்டங்களின் ஏற்றுமதி இறக்குமதியின் மீதும் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் இந்த நெருக்கடியை மேலும் மோசமாக்குகிறது. இதன் வெளியறவுக் கொள்கை உழைக்கும் மக்களுக்குக் கேடு விளைவிக்கிறது. ("மிகவும் உண்மை" எனக் கம்யூனிஸ்டுகள் குரல் எழுப்புகின்றனர்) இது ஏகாதிபத்தியத் திட்டங்களால் வழி நடத்தப்படுகின்றது; அது வெட்கமற்ற கீழ்ப்படிதலுக்கும் இராணுவ அச்சுறுத்தலுக்கும் இடையே ஜெர்மனியை உறுதியற்ற முறையில் ஊசலாட வைக்கிறது; ஜெர்மனியை மென்மேலும் வெர்செயில் உடன்படிக்கையின் ஆதிக்க சக்திகளை சார்ந்திருக்கச் செய்கின்றது ("மிகவும் உண்மை" எனக் கம்யூனிஸ்டுகள் குரல் எழுப்புகின்றனர்).

அத்தகைய கொள்கையானது, உண்மையான சமாதானக் கொள்கை மற்றும் பொருளாதார ஏற்றத்தின் மூலம் ஜெர்மன் பட்டாளி வர்க்கத்திற்கு ஆதரவு அளிக்கக் கூடிய ஒரே அரசான சோவியத் யூனியனுடனான உறவைப் பாதிக்கிறது (கம்யூனிஸ்டுகள் "எவ்வளவு உண்மையானது" எனக் குரல் எழுப்புகின்றனர்).

நாசி அதிரடித் தாக்குதல் படையினரின் (SA) மீதான தடையை நீக்கியதாலும் மற்றும் பாசிச உள்நாட்டுக் கலகச் சக்திகளுக்கு நலன் பயக்கின்ற அதன் அணுகுமுறையின் காரணமாகவும் கடந்த வாரங்களில் நடந்த படுகொலைகளுக்கு அதிபரின் மந்திரி சபையானது முழுப் பொறுப்புடையதாகிறது. அதன் கூட்டாளிகளுடன் அரசியல் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான சச்சரவின் மூலம், அதனுடைய தார்மீக மற்றும் அரசியல் குற்றத்தை மக்கள் மறக்கச் செய்வதற்கு வீணாக அது முயற்சி செய்கின்றது. ஆனால், சிந்தப்பட்ட இரத்தம் அதைப் பாசிச படுகொலைகளுடன் எப்பொழுதும் பிணைத்து வைத்திருக்கும்.

ரீச்ஸ்டாக்கின் ஆற்றலற்றத் தன்மையும், அதிபர் அமைச்சரவையின் மேலாதிக்கமும் முதலாளித்துவத் தாராளவாதத்தின் வீழ்ச்சியையும்  உற்பத்தி அமைப்பின் தகர்வையும் குறிக்கின்றன. அழுகி வரும் முதலாளித்துவச் சமூக அமைப்பின் அடித்தளத்தின் மீது நிற்கும் சீர்த்திருத்தவாத சமூக ஜனநாயகத்தின்  தத்துவத்திலும் நடைமுறையிலும் இத்தகைய வீழ்ச்சியைக் காணமுடியும்,

(சமூக ஜனநாயகவாதிகளால் சகித்துக் கொள்ளப்பட்ட) புருனிங் (Bruning) அரசாங்கத்தின் ஒளிவுமறைவற்ற தொடர்ச்சி தான் பாபென்ஸ்கீலீசர் (Papen-Schleicher) அரசாங்கத்தின் கொள்கை. புருனிங் அரசாங்கத்தின் முன்மாதிரியாக அமைந்தது அதற்கு முன்பு இருந்த சமூக ஜனநாயகவாதிகளின் கொள்கையாகும். ("மிகவும் நல்லது" எனக் கம்யூனிஸ்டுகள் குரல் எழுப்புகின்றனர்). “குறைந்ததீமை” என்னும் கொள்கை, பிற்போக்கு சக்திகளின் அதிகார எண்ணத்திற்கு வலுவூட்டுகிறது, அது பெருந்திரள் மக்களின் செயலற்ற தன்மை என்னும் எல்லாத் தீமைகளிலும் பெரிய தீமையை உருவாக்குகிறது.

பாரளுமன்றத்திற்கு வெளியே தங்களின் முழு அதிகாரத்தைப் பயன்படுத்தக் கூடாது என அவர்கள் வலியுறுத்தப்படுகின்றார்கள். பாட்டாளி வர்க்கத்திற்கான வர்க்கப் போராட்டத்தில் பாராளுமன்றத்தின் முக்கியத்துவம் கூட இவ்வாறு குறைக்கப்பட்டது. தொழிலாளர் வர்க்கம் பாராளுமன்றத்திற்கு வெளியே மக்களின் சக்திவாய்ந்த ஆதரவைக் கொண்டிருப்பதால் மட்டுமே, வரையறுக்கப்பட்டுள்ள எல்லைக்குள், இன்று தொழிலாளர்களின் போராட்டத்திற்குப் பாராளுமன்றத்தைப் பயன்படுத்த முடிகிறது.

இன்றைய நாளின் சிறப்புக் கேள்வி நேரத்தை எடுத்துக் கொள்வதற்கு முன், அதன் மையமான பணியை எடுத்துக் கொள்ள வேண்டும்: அரசியலமைப்புச் சட்டத்தை மீறி ரீச் அரசாங்கக் கவிழ்ப்பு என்பது ரீச்ஸ்டாக்கை முழுவதுமாக ஒதுக்கி வைப்பது என்னும் அச்சுறுத்தலாகும். அது  பற்றிய விவாதத்தை மையமான  பணியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

அரசியலமைப்புச் சட்டத்தை மீறிய குற்றத்திற்காக ரீச் அதிபர் மற்றும் ரீச் அமைச்சர்கள் மீது குற்றம்சாட்டவும், மேலும் தொடர்ந்து சட்டமீறல்கள் நடந்தால் அவர்களை லீப்சிக் அரசு நீதிமன்றத்திற்கு முன்னால் நிறுத்தவும் முடியும். எனினும் அவர்களை உயர் நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்துவதானது, பிசாசைப் பற்றி அதன் பாட்டியிடமே முறையிடுவது போன்றதாகும் (கம்யூனிஸ்ட் பிரதிநிதிகள் பகுதியிலிருந்து கரவொலிகளும், "மிகவும் உண்மை"  என்ற ஆரவாரமும் எழுகிறது).

பாசிஸ்டுகளின் பயங்கரவாத அச்சுறுத்தல்,   ரீக்ஸ்வேர் (ஜெர்மன் இராணுவப்படை), முதலாளித்துவ அரசின் மற்ற ஆதரவு முகமைகள், கூடவே  தாராளவாத முதலாளித்துவத்தின் கோழைத்தனம், பாட்டாளி வர்க்கத்தின் பெரும்பான்மையான பகுதிகளின்  செயலற்றதன்மை ஆகியவற்றை    அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ள அதிகாரத்தை பாராளுமன்றத்தின் முடிவுகளால்   உடைக்க முடியாது என்பது வெளிப்படையானது.

ரீச்ஸ்டாக்கில் அரசாங்கத்தைக் கவிழ்ப்பது  என்பது பாராளுமன்றத்திற்கு வெளியே பரந்த மக்கள் திரளை அணி திரட்டுவதற்கும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்குமான சமிக்ஞையாகவே இருக்கமுடியும். (“மிகவும் உண்மை” எனக் கம்யூனிஸ்டுகள் குரல் எழுப்புகின்றனர்). தொழிலாளர்களின் பெரும் எண்ணிக்கையையும்  மற்றும் தொழிலாளர்களின் பொருளாதார மற்றும் சமூகச் செயல்பாடுகளின் முழுப் பலத்தையும் பயன்படுத்துவது   என்பது இந்தப் போராட்டத்தில்  இலக்காக இருக்க வேண்டும்.

தொழிலாளர்களின் அனைத்து வர்க்க வெளிப்பாடுகளையும் குண்டாந்தடி மற்றும் இரத்தத்தின்  மூலம் அழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ள  பாசிசத்தை வீழ்த்துவதற்குத் தான் குறிப்பாக இந்த யுத்தம் நடத்தப்பட வேண்டும். பாராளுமன்ற இடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பாட்டாளி வர்க்கத்தின் பலம் மிகக் குறைந்த அளவில் உள்ளதை நமது எதிரிகள் மிக நன்றாகவே தெரிந்து வைத்துள்ளார்கள். அதன் (தொழிலாளர் வர்க்கத்தின்) வலிமையானது அதனுடைய  அரசியல், தொழிற்சங்க மற்றும்  கலாச்சார அமைப்புகளில் நங்கூரமிட்டுள்ளது.

பெல்ஜியத்தின் முன்மாதிரி தொழிலாளர்களுக்கு காட்டுவது என்னவெனில், கடும் பொருளாதார மந்தக் காலத்திலும் கூட, பெருமளவிலான வேலை நிறுத்தமானது சக்தி வாய்ந்த கருவி என நிரூபித்துள்ளது; இந்த வேலை நிறுத்தத்தின் வெற்றிக்குப் பின்னணியாக அமைந்தது   தியாகம் செய்ய விருப்பமும் உறுதியும் கொண்டுள்ள வெகுமக்கள், போராட்டத்தை விரிவுபடுத்துவதிலிருந்து பின்வாங்காமல் தம் சக்தியைப் பயன்படுத்தி   எதிரிகளால் ஒருங்கிணைக்கப்பட்ட சக்திகளை விரட்டியடித்ததாகும். (’மிகவும் உண்மைஎனக் கம்யூனிஸ்ட் பிரதிநிதிகள் குரல் எழுப்புகின்றனர்).

பாராளுமன்றத்திற்கு வெளியே தொழிலாளர்களின் வலிமையைக் காட்டுவது என்பது அரசியலமைப்புச் சட்டத்தை மீறிய அரசாங்கத்தைக் கவிழ்ப்பதோடு மட்டும் நின்று விடக் கூடாது. இத்தருணத்தில் அது இலக்கைத் தாண்டி, முதலாளித்துவ அமைப்பை அடிப்படையாக கொண்டிருக்கும் முதலாளித்துவ அரசைத் தூக்கியெறிவதற்குத் தன்னைத் தயார்  செய்து கொள்ள வேண்டும்.

முதலாளித்துவ அமைப்பு நீடிக்கும் வரையில் நெருக்கடிகளைத் தணிக்கச் செய்யப்படும் அனைத்து முயற்சிகளும் அழிவை மேலும் மோசமாக்கவே செய்யும். அரசின் தலையீடு தோல்வியடைந்து விட்டது; ஏனெனில் முதலாளித்துவ அரசு பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தவில்லை, மாறாக, முதலாளித்துவப் பொருளாதாரமே அரசைக் கட்டுபடுத்துகின்றது (கம்யூனிஸ்ட் பிரதிநிதிகள் மிகவும் உண்மைஎன முழங்குகின்றனர்).

உடைமை வர்க்கத்தின் அதிகார அமைப்பு வெகுமக்களின் உற்பத்தி மற்றும் நுகர்வுச் செயல்பாட்டிலிருந்தே செயல்படவும், பலனடையவும் முடியும். முதலாளித்துவ அடிப்படையில் திட்டமிட்ட பொருளாதாரம் என்பது முரண்பாட்டைக் கொண்டுள்ளது. அத்தகைய முயற்சிகள் அனைத்தும் உற்பத்தி சாதனங்களின் மீதான தனி உடைமையால் முறியடிக்கப்படுகிறது. உற்பத்தி சாதனங்களின் மீதான தனி உடைமையை ஒழித்தால் மட்டுமே திட்டமிட்ட பொருளாதாரம் சாத்தியமாகும்.

பாட்டாளி வர்க்கப் புரட்சி ஒன்றே பொருளாதார நெருக்கடியிலிருந்தும், ஏகாதிபத்தியப் போர் அச்சுறுத்தல்களிலிருந்தும் மீள்வதற்கான வழியாகும்; (கம்யூனிஸ்டுகள்சபாஷ்என முழங்குகின்றனர்) அது உற்பத்திச்  சாதனங்களின் மீதான தனியார் உடைமையை ஒழிக்கும்; திட்டமிட்ட பொருளாதாரத்தை உத்திரவாதப்படுத்தும்.

இவை அனைத்திற்கும் மாபெரும் வரலாற்றுச் சான்றாக ரசியப் புரட்சி நிகழ்ந்துள்ளது. அது தொழிலாளர்கள், தன் எதிரிகளான உள்நாட்டு முதலாளிகளையும், வெளியில் இருக்கும் ஏகாதிபத்தியக் கொள்ளையர்களையும் தோற்கடிக்கக் கூடிய வலிமையைக் கொண்டுள்ளதை நிரூபித்துள்ளது; வெர்செயில் உடன்படிக்கை போன்ற அடிமை உடன்படிக்கைகளை அது கிழித்தெறிந்தது (”மிகவும் உண்மைஎனக் கம்யூனிஸ்டுகள் முழங்குகின்றனர்).

உற்பத்தி சாதனங்களின் மீதான தனியார் உடைமையை அடிப்படையாகக் கொண்டுள்ள அராஜக உற்பத்தி முறையை அழித்ததன் மூலம், பேரழிவை ஏற்படுத்தக்கூடிய நெருக்கடிகள் இல்லாமல், சமூகத்தின்  உயர்ந்த பொருளாதார வளர்ச்சியைக் கொண்டுள்ள புதிய பொருளாதார அமைப்பைக் கட்டுவதற்கான முதிர்ச்சியைப் பாட்டாளி வர்க்கம் கொண்டுள்ளது என்பதைச் சோவியத் அரசு  நிருபித்துள்ளது.

அதே சமயத்தில், தற்போதைய பேரழிவுகரமான துயரங்களுக்கு எதிரான உழைக்கும் மக்களின் போராட்டம் அவர்களுடைய முழு விடுதலைக்குமான போராட்டமாகும். வெகுமக்களின் பார்வைகள் ஒளிமயமான இந்த இலக்கை நோக்கி உறுதியுடன் வழி நடத்தப்பட வேண்டும்; ஜனநாயகத்தை விடுவிப்பது என்னும் மாயையால் அவை மூடி மறைக்கப்படக் கூடாது. புதிய உலக யுத்தம், பாசிஸ்டுகளின் உள்நாட்டுப் போர் ஆகியவற்றின் மூலம் முதலாளித்துவம் அதனுடைய வாழ்வைத் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் மிருகத்தனமான பலத்தைப் பயன்படுத்தும்; அவற்றைக் கண்டு  பரந்துபட்ட மக்கள் அஞ்சக் கூடாது.

பாசிசத்தை வீழ்த்துவதற்கும் அடிமைப்படுத்தப்பட்டவர்களையும், சுரண்டப்படுபவர்களையும் பாதுகாப்பதற்கும், அவர்களுடைய சொந்த இருத்தலையும் மற்றும் அவர்களுடைய  அமைப்பின் சக்தி  மற்றும் அதிகாரத்தையும் பாதுகாப்பதற்கும்  அதிமுக்கியத்துவம் வாய்ந்ததும் உடனடிக் கடமையுமாக  இருப்பதும் அனைத்துத் தொழிலாளர்களின் ஐக்கிய முன்னணியை அமைப்பதாகும் ("மிகவும் உண்மை" எனக் கம்யூனிஸ்டுகள் முழங்குகின்றனர்).

வலுக்கட்டாயமான இந்த வரலாற்றுரீதியான தேவையின் முன், தடை ஏற்படுத்தக் கூடிய, பிளவுபடுத்தக்  கூடிய  அனைத்து அரசியல் சார்ந்த, தொழிற்சங்கம் சார்ந்த, மதம் சார்ந்த, சித்தாந்தம் சார்ந்த கருத்துகளைத்  துரத்தியடிக்க வேண்டும். யாரெல்லாம் தாங்கள் அச்சுறுத்தபடுவதாக உணருகிறார்களோ, யாரெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கிறார்களோ, யாரெல்லாம் சுதந்திரத்திற்காக நிற்கிறார்களோ அவர்கள் அனைவரும், பாசிசம் மற்றும் அரசாங்கத்தில் இருக்கும் அதன் பிரதிநிதிகளுக்கு எதிராக ஐக்கிய முன்னணியில்  சேர வேண்டும்.

பாசிசத்திற்கு எதிரான தொழிலாளர்களின் சுய உறுதிப்பாடு என்பது  நெருக்கடிகள், ஏகாதிபத்தியப் போர்கள்  மற்றும் அதற்கான காரணங்கள்,  முதலாளித்துவ உற்பத்திச் சாதனங்கள் ஆகியவற்றிற்கு எதிரான ஐக்கிய முன்னணியின் போராட்டத்திற்குத் தவிர்க்க முடியாத முன்நிபந்தனையாக உள்ளது. ஜெர்மனியில் பசி, அடிமைத்தனம், பாசிசப் படுகொலைகள், ஏகாதிபத்தியப் போர்கள் ஆகியவற்றிற்கு எதிரான  இலட்சக்கணக்கான ஆண், பெண் தொழிலாளார்களின் கிளர்ச்சி என்பது உலகம் முழுவதுமான தொழிலாளர்களின் அழிக்க முடியாத  விதியின் வெளிப்பாடாகும்.

சர்வதேச சமூகத்தின் விதியானது உறுதிமிக்க போராடும் சமூகமாக மாறுவதோடு, சோவியத் யூனியனில் உள்ள சகோதர, சகோதரிகளுடைய முன்னணிப் படையோடு அவர்களை இணைக்கின்றது. பல்வேறு நாடுகளில் எழுந்துள்ள வேலை நிறுத்தங்களும், கிளர்ச்சிகளும், ஜெர்மன் போராட்டக்காரர்கள் தனியாக இல்லை என்பதை உணர்த்தும் ஒளியூட்டும் குறியீடுகளாகும். அனைத்து இடங்களிலும் ஒடுக்கப்பட்ட மற்றும் மரபுரிமையற்ற மக்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதை நோக்கிச் செல்லத் துவங்கியுள்ளனர்.

தொழிலாளர்களின் ஐக்கிய முன்னணி, ஜெர்மனியில் கட்டமைக்கப்பட்டுள்ள ஐக்கிய முன்னணியும் கூட, , பாலியல் அடிமைச் சங்கிலியில் பிணைக்கப்பட்டிருக்கும், அதன் காரணமாக மிகவும் ஒடுக்கப்பட்ட அடிமை வர்க்கமாக இருக்கும் இலட்சக்கணக்கான பெண்களைக் கட்டாயம் அணி திரட்ட வேண்டும். (“மிக நல்லது” எனக் கம்யூனிஸ்டுகள் குரல் எழுப்புகின்றனர்) தங்களை வெளிப்படுத்திக் கொள்ளவும், வளர்த்துக் கொள்ளவும் விரும்பும்  இளைஞர்கள்  முன்வரிசையில் நின்று போராட வேண்டும்.

இன்று அவர்கள் உயரதிகாரிகளுக்குக் கண்மூடித்தனமாகக் கீழ்ப்படிதல் மற்றும் கட்டாய உழைப்புச் சேவையில் சுரண்டப்படுவதைத்  தவிர வேறு எந்த வாய்ப்பையும் பெற்றிருக்கவில்லை. தங்களின் மூளை உழைப்பின் மூலம் செல்வத்தைப் பெருக்குபவர்களும், அறிவு மற்றும் விடாமுயற்சி  மூலம்  கலாச்சாரத்தை உயர்த்துபவர்களும்  இன்றைய முதலாளித்துவ சமூகத்தில் தேவையற்றவர்களாகி விட்டதால், அவர்களும் இந்த  ஐக்கிய முன்னணியின் ஒரு பகுதியாக இருப்பர்.

ஊதியம் மற்றும் கூலி அடிமைகள், முதலாளித்துவத்தைச் சார்ந்து அதற்குக் கப்பம் கட்டுபவர்கள், ஒரே  சமயத்தில் முதலாளித்துவத்தைப் காப்பாற்றிக் கொண்டும் அதற்குப் பலியாகிக் கொண்டும் இருப்பவர்கள் ஆகியோரும்  ஐக்கிய முன்னணிக்குள் இருப்பர்.

கௌரவத் தலைவர் என்ற முறையில் இந்தக் காங்கிரசைத் தொடங்கி வைத்து என்னுடைய கடமையை நிறைவு செய்கிறேன்; இப்பொழுது உடல் ரீதியான பலவீனங்கள் எனக்கு இருந்த போதிலும், சோவியத் ஜெர்மனியின் முதல் சோவியத் காங்கிரசைக் கௌரவத் தலைவராகத்  தொடங்கி வைக்கும் நல்வாய்ப்பு எனக்குக் கிடைக்கும் என  நம்புகிறேன்.

- கிளாரா ஜெட்கின்

(தமிழில்: குமணன்)

Comments

Popular posts from this blog

தொழிலாளர் ஊதியங்கள் ஏன் எப்போதும் மிகவும் குறைவாகவே இருக்கின்றன?

  உங்கள் உழைப்புக்கு ஏற்ற மதிப்புக் கிடைப்பதில்லை , உங்களுக்குக் கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பை விடப் பலமடங்கு உழைத்திருப்பதாக எப்போதாவது நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா ? கார்ல் மார்க்ஸ் உங்களைப் புரிந்துகொள்கிறார் . ஒட்டுமொத்தத் தொழிலாளர் வர்க்கமும் முதலாளித்துவ வர்க்கத்தால் சுரண்டப்படுகிறது என்று அவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் வாதிட்டார் . இது வெறும் மிகைப்படுத்தல் கூற்று அல்ல , மாறாக ஒரு பொருளாதார உண்மையாகும் . தொழிலாளர்கள் உருவாக்கும் மதிப்பின் ஒரு பகுதியைத் திட்டமிட்ட முறையில் திருடுவதன் மூலம் மிகுதியான செல்வத்தைக் குவிப்பதே   முதலாளித்துவத் தொழில்நிறுவனத்தின் முழுமையான நோக்கமாகும் . இந்தச் செயல்முறையே சுரண்டல் என்று குறிப்பிடப்படுகிறது . தொழிலாளர்களுக்கு அவர்களுடைய தகுதிக்குரிய ஊதியம் அளிக்கப்படுகிறது என்று முதன்மைப்போக்கு பொருளியலாளர்கள் கூறிக்கொள்கின்றனர் . தொழிலாளர்களின் ஊதியங்கள் அவர்களால் உற்பத்திப் பொருளுக்கு “ கூட்டப்படும் மதிப்பை ” குறிக்கின்றன தூரத்து நாடுகளில் பழிபாவத்திற்கு அஞ்சாத முதலாளிகள்

பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் சீர்த்திருத்தவாதத்தில் வீழ்ந்துள்ள இடதுசாரி இயக்கங்கள்

இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இடதுசாரிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் சில அமைப்புகளின் போக்குகள் அவர்களின் சீர்த்திருத்தவாதக் கண்ணோட்டத்தை அம்பலபடுத்தி வருகின்றன. நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த காங்கிரசு கட்சி இந்திய முதலாளி வர்க்கத்தின் வளர்ச்சிக்கும் சுரண்டலுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்தும் , பெரும் மூலதனம் தேவைப்படும் கனரகத் தொழில்களை மக்களுடைய வரிப் பணத்திலிருந்து அமைத்துக் கொடுத்தும், ஆரம்பக் கட்டத்தில் பன்னாட்டு மூலதனங்களின் போட்டியிலிருந்து அவர்களைப் பாதுகாத்தும் , பின்னர் இந்திய முதலாளிகள் சர்வதேச அளவில் சந்தையைப் பிடிக்கவும் , முதலீடு செய்யவும் உலகமயமாக்கல் கொள்கையை முன்னெடுத்தும் தொடர்ந்து சேவை செய்து வந்தது. அதே நேரத்தில் தொழிலாளர்களின் நலனுக்காகவும் , விவசாயிகளின் நலனுக்காகவும் , ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும் போராடிய இடதுசாரிகள் , ஜனநாயக அமைப்புகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி ஒடுக்கி வந்தது. வீரம் செறிந்த தெலுங்கானா மக்களின்

வேலை பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் என்னும் நிறுவனம் ஒசூர் பகுதியில் 1998 முதல் செயல்பட்டு வருகின்றது . இது வெள்ளீயத்தால் ( தகரத்தால் ) ஆன கொள்கலன்களை , தகரக்குவளைகளை உற்பத்தி செய்கின்றது . இந்த ஆலையின் முதலாளி இந்தியாவை பூர்வீமாக கொண்டவராக இருந்தாலும் , தற்பொழுது கென்யாவில் வசித்து வருகின்றார் . தொடக்கம் முதலே இந்த ஆலையானது தொழிலாளர்களின் உழைப்பை வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்து வருகின்றது . வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் நீண்டநாட்கள் பணிபுரிந்து வந்தாலும் அவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யாமலும் , நியாயமான ஊதியம் வழங்காமலும் தொழிலாளர்களை வஞ்சித்து வந்தது . தொழிலாளர்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து 52 தொழிலாளர்கள் மட்டும் நிரந்தரம் செய்யப்பட்டனர் . இவர்களும் ஆறு வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் , பயிற்சித் தொழிலாளர்கள் என மாற்றிமாற்றி அவர்களை வகைபடுத்தி பின்னரே நிரந்தரம் செய்யப்பட்டனர் . அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைக்கப்பட்டுச் சுரண்டப்பட்டு வருகின்றனர் . தற்பொழுது வரை 450 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்பட