Skip to main content

இட ஒதுக்கீடு – எளிய மக்களின் எட்டாக் கனி!

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெறப்பட்ட மத்திய அரசின் புள்ளிவிபரங்கள் அதிகார வர்க்கத்தில்  சாதிகளின் பிரதிநிதித்துவம் சமகாலத்தில் எந்த அளவில் இருக்கிறது என்பதை ஆதாரபூர்வமாக தெரிவிக்கின்றன. மத்திய அரசு நிறுவனங்களின் அதிகாரிகளில் முற்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவம் பின்வரும் பட்டியல் வழியாக அறியமுடிகிறது.

இந்திய மேலாண்மை நிறுவனம்(IIM)….99%

மத்திய பல்கலைக்கழகங்கள் 40-ல்….95%

தேசிய வங்கி இயக்குனர்கள் 484பேரில்…100%

இரயில்வேத் துறை….69% / நிதி ஆயோக்கில்…74%

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை உள்ளிட்ட 71 துறைகளில்..63%

குடியரசு தலைவர் மற்றும் துணைத்தலைவர் அலுவலகம்…75%

மத்திய அமைச்சரவை செயலகத்தில்…63% ---இப்படிப் பொதுவாக

மத்திய அரசில் இவர்கள் வகிக்கும் பங்கு என்பது 63% முதல் 90% வரை நீள்கிறது

ஒரு தனிப்பட்ட சாதியாக பிராமணர்களின் பங்கு என்னவாக இருக்கிறது என்று பார்ப்போம்.

இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளில்…(IAS) 72%

மாநில தலைமைச் செயலாளர்களில்……73% /துணை செயலாளர்கள்..62%

உச்ச நீதிமன்ற நீதிபதிகள்..56% / உயர் நீதிமன்ற நீதிபதிகள்...50%

மாவட்ட நீதிபதிகள்..57% / துணை வேந்தர்கள்...51%

ஆளுநர்கள்..48% / அயல்நாட்டுத் தூதுவர்கள்41%

பாராளுமன்ற உறுப்பினர்கள்..35% (190/530)

இதைப் பார்க்கிறபோது மனுநீதியும், வருணாசிரமமும் முதலாளியச் சமூக உருவாக்கத்தில் வேறு வடிவம் கொண்டு இன்னும் மக்கள்தொகையின் மற்ற பிரிவினரின் மேல் அதிகாரம் செலுத்துகிறது என்பது தெளிவாகிறது. நிலப்பிரபுத்துவ மன்னராட்சி காலத்தில் ஆளும் வர்க்கத்தின் பகுதியாக இருந்தவர்கள், அதிகாரத்தில் பங்கு கொண்டிருந்தவர்கள், பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக் காலத்தில் அதிகார வர்க்கத்தின் பகுதியாக இருந்தவர்கள் இன்றைய முதலாளிய ஆட்சியிலும் அதிகாரத்தில் பங்கு கொண்டவர்களாகத் தம்மை நிலைப்படுத்திக் கொண்டார்கள் என்பதுதான் உண்மை.

இதன்பேரில் நமக்கு இன்னும் சில கேள்விகள் எழுகின்றன.

ஒரு நூற்றாண்டுகால சமூக சமத்துவ கோரிக்கையான இட ஒதுக்கீடு 1993லிருந்து அமல்படுத்தப்பட்டு, 29 ஆண்டுகளுக்குப் பின்னாலும் கூட இதுதான் நிலைமையெனில் எதைச் சாதித்திருக்கிறது இந்த இட ஒதுக்கீடு?

அதிகார மையத்தின் உயர் பதவிகளில் முன்னேறிய சாதியினரும், அவர்களுக்கு துணைபுரிகிற அல்லது சேவை செய்கிற கீழ்நிலை பதவிகளில் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சாதியினரும் அமைந்திருப்பது வர்ணாசிரமத்தின் இன்னொரு வடிவம் இல்லையா?

ஒன்றிய அரசாங்கத்தில் 29 ஆண்டுகள் கடந்தும் இதுவரை பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இட ஒதுக்கீட்டின் மூலம் பயன்பெற்றவர்கள் 12% தான். மீதமுள்ள 88% மக்கள் வாய்ப்பின்றி வெளியே இருப்பவர்கள் எனும்போது இன்னும் எத்தனை காலம் சமூக சமத்துவத்திற்காக இவர்கள் காத்திருக்க வேண்டும்?

இட ஒதுக்கீட்டின் எதிர்மறைகளையும் பரிசீலிக்க வேண்டியதிருக்கிறது. சமூக சமத்துவ இலக்கை எட்டுவதற்காக கொண்டுவரப்பட்ட இட ஒதுக்கீடு இன்னொரு பக்கத்தில் சாதிகளை றுக்கமாக்கி சாதிச் சங்கங்களை உயிர்ப்பித்துவிட்டது. ஒவ்வொரு சாதியிலும் உள்ள மேல்தட்டு வர்க்கங்கள் தாங்கள் பயனடைவதற்காக அந்தந்தச் சாதியிலுள்ள அனைத்து மக்களையும் சாதிக் கூட்டுக்குள் தனித்தனியே அடைக்க முயற்சி செய்கின்றன. அதன் மூலம் வாக்கு வங்கிகளை ஊதிப் பெருக்கிக் காட்டி அரசியல் ஆதாயம் தேடுகின்றன; அதிகாரத்திலும் அரசு வருவாயிலும் பங்கு கொள்ளப் போட்டியிடுகின்றன. அந்தந்தச் சாதிகளில் உள்ள உழைக்கும் அடித்தட்டு மக்களோ இட ஒதுக்கீட்டிற்கு இலவு காத்த கிளியாகக் காத்துக் கிடக்கின்றனர். இட ஒதுக்கீடு அவர்களுக்குக் கைக்கு அகப்படாத மாயக் கனியாகவே உள்ளது.

ஒதுக்கீட்டிற்காக பின்னுக்குத் தள்ளப்பட்ட சாதிகள் என்று பிரகடனப்படுத்திக் கொண்டவர்கள், அந்தஸ்தில் ஆண்ட சாதிகள் என தத்தம் சாதிகளை அறிவித்துக் கொண்டனர். ஏற்கனவே அகமண முறையால் கெட்டிதட்டிப் போயிருக்கும் சாதிகள், சாதிச் சங்கங்களின் மறு கட்டமைப்பால் ஆணவக் கொலைகள், நாடகக் காதல் என்றெல்லாம் சாதி உணர்வுகளில் உச்சத்தை, வெறியை ஏற்படுத்திவிட்டன. தனிப்பட்ட தாய், தந்தையர் தங்கள் மகள் அல்லது மகனின் விருப்பத்தை நிறைவேற்ற முனைந்தால் கூட சாதீய கட்டுப்பாட்டிற்கும், சாதித் தலைவர்கள், பஞ்சாயத்துக்களுக்கும் பயந்து, கும்பலின் மனிதராய் மாறுகிற குரூரமும் - தனிமனிதர்கள் சாதீயப் புறச்சூழலுக்குள் நிர்ப்பந்தமாய்த் தள்ளப்பட்டு விட்டமையும் சமீபகாலமாய் நிறைய நேர்படுகின்றன.

சமூக அந்தஸ்தில் முன்னேறியவர்களும், ஆண்ட சாதிகளாகத் தங்களை அறிவித்துக் கொண்டோரும் பிற்பட்டோர் என்ற அளவுகோலுக்குள் நுழைவதற்காக உட்பிரிவை மாற்றிச் சான்று பெறுவதும் மலிந்துவிட்டது. இப்படி வாய்ப்புக்காக சாதி கடந்தவர்களைப் பற்றிச் சாதித் தூய்மை பேசும் சங்கங்கள் வாய்திறப்பதில்லை. பிற்படுத்தப்பட்டோரில் ஆண்டுக்கு 8 லட்சம் வரம்புக்குள் என்பது அந்தந்தச் சாதிகளின் அதிக வருவாய் பெறும் பிரிவினரும், வசதி உள்ளோரும் மட்டுமே இட ஒதுக்கீட்டை முழுமையாக பயன்படுத்திக் கொள்வதும், அந்தக் குடும்பங்களைச் சேர்ந்தோரே மீண்டும் மீண்டும் சுழல்முறையில் பயனாளிகளாவதும் நடைமுறையிலுள்ளது. இதில் அந்தச் சாதிகளில் உள்ள உழைக்கும் மக்களுக்கும், நலிந்த பிரிவினர்க்கும் எங்கே இருக்கின்றன இடங்களும், ஒதுக்கீடுகளும்?

ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டு இப்போது உச்சநீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிற பொருளாதாரத்தில் நலிவடைந்த முன்னேறிய வகுப்பினர்க்கான (Economically Weaker section- EWS)10% இடஒதுக்கீட்டுக்கு வருவோம். புள்ளி விவரப்படி மொத்த மக்கள்தொகையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மக்கள், பழங்குடியினர், அட்டவணை சாதியினர் என அனைத்து மக்களும் சேர்ந்து 69.2% உள்ளனர். முற்பட்ட பிரிவினர் 30.8% உள்ளனர். நாட்டில் உள்ள மொத்த ஏழைகளில் 88% பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பழங்குடிகள், அட்டவணை சாதிகளில் தான் உள்ளனர். ஆனால் அவர்களுக்கான - ஏழைகள் மற்றும் ஏழைகள் அல்லாதோர் என அனைவருக்கும் சேர்ந்து -- ஒட்டு மொத்த ஒதுக்கீடே 50% தான். ஆனால் முன்னேறிய வகுப்புகளில் உள்ள 12% ஏழைகளுக்கு மட்டும் 10% இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இது எந்த விதத்தில் சமூக நீதியாக இருக்க முடியும்?

1951-ல் தொடங்கி இரண்டு ஆணையங்கள் பரிந்துரைத்த பின்பு 42 ஆண்டுகள் கழித்து (1993) வேலைவாய்ப்பிலும் அதற்குப்பிறகு 14 ஆண்டுகள் கழித்து (2007) கல்வியிலும் இடஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தாலும் இன்னமும் 88% பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு எட்டாக் கனியாகவே இருக்கிறது. இந்த EWS ஒதுக்கீடு எந்தக் குழுவும் அமைக்காமல், எதன் பரிந்துரையும் இல்லாமல் எடுத்த எடுப்பில் நாடாளுமன்றத்தால் தீர்மானிக்கப்பட்டு உடனே அமல்படுத்தப்பட்டிருப்பது என்பது சந்தேகத்திற்கிடமின்றி சமூகத்தின் ஒரு பக்கச் சாய்வான உள்நோக்கமுள்ள அறிவிப்பில்லையா?

ஆண்டுக்கு 8 லட்சத்திற்கு மிகாமல் வருமானம் உடையவர்கள் முன்னேறியவர்களில் 10% ஒதுக்கீட்டுக்கு தகுதியானவர்கள் என்பது என்ன விதமான வரையறை? ஆண்டுக்கு 8 லட்சம் என்பது மாத வருமானம் ரூ.66,666/=ம் நாளொன்றுக்கு ரூ.2222/=ம் வருமானமுள்ளவர்கள் என்றாகிறது. மக்கள்தொகையில் 41% வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்கிற ஒரு நாட்டில் அவர்களது மாத வருமானமே ரூ.2000/=த்திற்குள் தான் என்ற நிலையில் பொருளாதாரத்தில் பின்தங்கியோராக 8 லட்சம் என்று நிர்ணயிப்பது கேலிக்கூத்தில்லையா?

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக சமூகரீதியாக ஒடுக்கப்பட்டும், அடக்கப்பட்டும் கிடந்த மக்கள் சமூகத்தின் அனைத்துச் செயல்பாடுகளிலும் பங்கு பெறவும் பிரதிநிதித்துவம் பெறவும் வழி வகுப்பதற்காகக் கொண்டு வரப்பட்டதுதான் இட ஒதுக்கீடு. சமூகரீதியாகவும் கல்வி ரீதியாகவும்  பிற்படுத்தப்பட்ட மக்கள் பகுதியினருக்கு அரசியல் சட்டம் வழங்கிய உரிமை அது. கல்வி, வேலைவாய்ப்பின் மூலம் அதிகாரத்தை முழுக்கத் தானே சுவீகரித்துக்கொண்டு சமூகத்தை ஆட்டிப் படைத்துக்கொண்டிருந்த சிறுபான்மை வகுப்பினரிடம் இருந்து விடுதலை பெற அறிவிக்கப்பட்ட ஒரு உரிமையை, ஒதுக்கீட்டை மீண்டும் சமூகம், கல்வி என்கிற அளவுகோலை அகற்றிவிட்டுப் பொருளாதாரம் என்று பார்ப்பது கொடுத்ததையும் பறித்துக்கொள்ளும் தந்திரம் இல்லையா?

வருமான வரி கட்டுவதற்கான வருவாய் உச்சவரம்பாக ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய் என்று அரசு நிர்ணயம் செய்திருக்கிறது. ஒரு மனிதருக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யப் போதுமான வருவாய் என்றும் அதற்கு மேல் வருமானம் வந்தால் வரி என்பதாக அளவிட்டிருக்கிறது அரசு. இதன்படி மாத வருவாய் என்பது ரூ.20,833/=என்றாகிறது. EWS ஒதுக்கீட்டில் மாத வருமானம் ரூ.66,666/=வரை பயன் பெறலாம் என்று சொன்னால் முன்னேறிய சாதியிலும் மேல்நிலையிலுள்ளவர்கள் தானே பயனாளிகளாவார்கள்? பிறகென்ன நலிவடைந்த பிரிவினருக்கான ஒதுக்கீடு? தற்போது வரி கட்டுவோர் 6.8 கோடி பேர் என்கிறது தரவுகள். இந்த EWS ஒதுக்கீட்டிற்கு வருவாய் உச்சவரம்பாக ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்கு கீழ் அதாவது வருமான வரி வரம்புக்குக் கீழ் என்று அளவீட்டை வைத்திருந்தால் உண்மையில் அது நலிவடைந்த பிரிவினர்க்கான வாய்ப்பாக அமைந்திருக்கும். உண்மையில் இந்த இட ஒதுக்கீட்டை அனுபவிப்பவர்கள் முற்பட்ட பிரிவினர்களில் உள்ள மேல்தட்டு வர்க்கங்கள்தான் என்பதில் எள்ளளவும் நமக்கு ஐயம் தேவையில்லை.

உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சமீபத்தில் தாக்கல் செய்திருக்கிற மனுவில் இந்து மதத்திலிருந்து இஸ்லாம், கிருஸ்துவ மதத்திற்கு மாறிய தலித்துக்களுக்கு எஸ்.சி. அந்தஸ்து தேவையில்லை என்றும், அம்மதங்கள் வெளிநாடுகளைச் சேர்ந்தவை என்றும் கூறியிருக்கிறது. அது மட்டுமல்ல இந்து மதத்தில் பல நூற்றாண்டுகளாக தீண்டாமை இருந்து வருகிறது, அதனால் அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்து மதத்தைப் போல் அம்மதங்களில் தீண்டாமைக் கொடுமையோ, சாதிய நடைமுறையோ கிடையாது என்றும் இதனால் அவர்களுக்கு இடஒதுக்கீடு அவசியமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது. (செய்தி:இந்து தமிழ் திசை 13-11-22 பக்.12)

கல்வியிலும், சமூக அந்தஸ்திலும் ஒடுக்கப்பட்டும், பிற்படுத்தப்பட்டும் இருப்பவர்களுக்கான சமூக நிலை மேம்பாட்டுக்கானதும், சமூக சமத்துவத்தை நிலைநாட்டவுமான திட்டம் என்பதும் தான் இட ஒதுக்கீட்டின் சாராம்சம். இதை முன்னேறிய வகுப்பினருக்குமான உரிமையாகக் கோருபவர்கள், அல்லது அந்த மனநிலையில் இருந்து கொண்டு இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் உணரவேண்டும். மற்ற மதங்களை நிராகரிக்கக் கூடிய நிலைபாட்டுக்கு வலு சேர்க்கும் நிர்ப்பந்தம் காரணமாக, பொது வெளியில் சனாதனத்தையும், வர்ணாசிரமத்தையும் இன்றைக்கும் ஆதரித்துப் பேசுகிற மதவாத பி.ஜே.பி. அரசு இந்து மதத்தில் பல நூற்றாண்டுகளாக தீண்டாமை இருந்து வருகிறது என்றும், சாதிய நடைமுறை இருக்கிறது என்றும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறது.

இட ஒதுக்கீட்டிற்கான வாய்ப்புக்கள் என்று பார்க்கிறபோது பொதுத் துறைகள் ஒன்றன்பின் ஒன்றாக மூடப்பட்டு வருகின்றன. விற்பனை செய்தவை போக மிச்சம் மீதி துறைகளின் வேலைவாய்ப்பு சரிபாதிக்குக் கீழாகச் சரிந்துவிட்டது. அதிலும் இடஒதுக்கீடு நேரடி நுழைவில் மட்டுமே (Entry level posts) அமலில் உள்ளது. கடந்த பத்தாண்டு காலத்தில் மட்டும் காலிப் பணியிடங்கள் (19 லட்சம்) முறையாக நிரப்பப்படாமல் இருக்கிறது. இரயில்வே உட்பட அனைத்துப் பொதுத் துறைகளும் பகுதி பகுதியாக தனியாருக்குத் தாரைவார்க்கப்பட்டு வருகிறது. மின்சாரம் உட்பட உற்பத்தி சார்ந்த அத்தியாவசியத் துறைகளும் கூட தனியார்மயமாகிறது. சேவை சார்ந்த அரசின் துறைகளில் உயர் அதிகாரிகள் தவிர்த்த மற்ற தளங்களில், இராணுவம் உட்பட, ஒப்பந்தப் பணிகளாக மாற்றப்படுகின்றன. அதை தனியார்துறை தான் ஏற்று நடத்துகிறது. ஆக எங்கெங்கே இட ஒதுக்கீட்டிற்கான வாய்ப்புக்கள் உள்ளதோ அங்கெல்லாம் ஒதுக்கீடு செய்வதற்கு இடங்களே அருகிப் போய்விட்டன. வாய்ப்புக்கள் குறைவான, அமல்படுத்த முடியாதவைகளாக மாற்றப்பட்டு விட்டதால் வெற்று அரசியலாக, வாக்கு வங்கியை மையப்படுத்திய விளம்பரத்தனமாகவும், ஏமாற்றுத் தந்திரமாகவும் மட்டுமே இட ஒதுக்கீடுகள் எஞ்சி நிற்கின்றன.

முதலாளியத்தின் மற்ற மக்கள் நல அறிவிப்புக்கள் போல இதற்குச் சட்ட அந்தஸ்து மட்டுமே இருக்கும்; அங்கொன்றும், இங்கொன்றுமாக ஓரளவுக்கு வாய்ப்பிருக்குமே தவிர நடைமுறையில் உயிரற்ற நிலையிலேயே வைக்கப்பட்டு இருக்கும். இதற்குச் சான்றாக நிற்பது பிற்படுத்தப்பட்ட பிரிவில் இதுவரையான பயனாளிகள் வெறும் 12%தான் என்பதும், நிறைய நிரப்பப்படாமல் இருக்கிற பட்டியல் இன இடங்களும் தான். கல்வி, வேலை வாய்ப்பு போல அரசியலிலும் ஒதுக்கீடு இருப்பதால் தான் பட்டியல், பழங்குடி இனத்தவர்களுக்கான மக்கள் பிரதிநிதிகள் சட்டமன்ற, பாராளுமன்ற அவைகளில் இடம் பெற்றிருக்கிறார்கள். இல்லாவிடில் உரிய அரசியல் பிரதித்துவம் இல்லாமல் மோசமாக புறக்கணிக்கப்பட்டிருக்கிற இஸ்லாமியர்களைப் போல இவர்களும் புறந்தள்ளப்பட்டிருப்பார்கள்.

எப்படி நில உடைமைக்கு உச்சவரம்பு கொண்டுவரப்பட்டதோ அப்படி சொத்திற்கும், வருமானத்திற்கும் உச்சவரம்பை ஏன் நடைமுறைப்படுத்தக் கூடாது? எல்லோருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் ஏன் வழங்கப்படக் கூடாது? தங்களைத் தாங்களே சமூகத்தின் முன்கள அமைப்புக்கள் என்று முடிசூடிக் கொள்கிறவை உட்பட எந்த அமைப்புக்களும் இவற்றைக் கோரிக்கையாகக் கூட ஏன் முன்வைப்பதில்லை?

ஏனெனில் இவர்கள் எவருக்கும் செல்வ சேகரிப்பிலும், தனி உடைமையிலும் எந்த ஆட்சேபனையுமில்லை. அப்படிக் கோரினால் அது ஆளும் வர்க்கத்திற்கும், தனி உடைமைக்கும் எதிரானதாக இருக்கும். அவர்களை எட்டிப்பிடிப்பதே எப்போதும் இவர்களுக்கான இலட்சிய அரசியலாக இருக்கிறது. பெரும்பான்மையினரின் உழைப்பை, அதன் பலனை பறிமுதல் செய்வதில் இவர்கள் எல்லோரும் ஒத்த கருத்துக் கொண்டவர்கள்தான்.

இதுவரை மக்களை வறியவர்களாக்கி அவர்களால் உருவாக்கப்பட்ட சொத்தைக் குவித்துக்கொண்டு, அதில் எந்த இழப்பும் ஏற்பட்டுவிடாமல் நீதி, நிர்வாக அதிகார வர்க்கத்தை காவலுக்கு வைத்துக் கொண்டு வாழ்கிறவர்கள் இவர்கள். இந்த ஆளும் வர்க்கத்தின் அசைவுக்கேற்றபடி ஆடுகிற முதலாளித்துவக் கட்சிகள், பொது இயக்கங்கள் சமூக உழைப்பில் உருவான தனி உடைமைகளை அவற்றை உரியவர்களுக்கே ஒப்படைக்கக் கோரி, சமூக உடைமைகளாக்கக் கோரிப் போராட முன்வருவார்களா? மாட்டார்கள். ஏனெனில் அது ஆளும் வர்க்கத்துக்கு உட்பட்ட போராட்டமாக இருக்காது. ஆளும் வர்க்கத்துக்கு எதிரான போராட்டமாக உருமாறினால் இவர்களின் முதலாளியக் கனவு இழந்த சொர்க்கமாகி விடும்.

இப்படித்தான் முதலாளித்துவக் கட்சிகள் இந்த கண்மூடிச் சண்டையில் அற்ப வாய்ப்புக்களைக் காட்டி மக்களைப் பல கூறுகளாக்கி அவர்களை சண்டைக் களத்தில் எதிரெதிராக நிறுத்தியிருக்கிறார்கள். ஆளும் வர்க்கமோ அரங்கங்களின் மேல்இருக்கைகளில் அமர்ந்துகொண்டு இந்த அடிமைச் சண்டைகளை பார்வையிட்டு மகிழ்கிறார்கள். ரோமானியப் பேரரசின் அடிமைச் சண்டைகளை ரசித்த குரூரங்களின் தொடர்ச்சியல்லவா இது?

சமூக அடுக்கின் மேல்மட்டத்தில் நிகழும் தங்களுக்கு சற்றும் பலனளிக்காத தற்போதைய இடஒதுக்கீட்டு அரசியலை உழைக்கும் வர்க்கம் உணர்ந்தே இருக்கிறது. ஒதுக்கீட்டின் வழியாக உள்நுழைந்தாலும், பொதுப்பிரிவின் வழி வந்தாலும் அதிகார வர்க்கத்தில் அங்கம் பெறுவதென்பது ஆளும் வர்க்கத்திற்குக் கட்டுப்பட்டு உழைக்கும் மக்களுக்கு எதிரான அதன் ஆணைகளை அமல்படுத்துவதுதான். சமூகத்தில் போல ஒதுக்கீட்டிலும் வெளியே நிறுத்தி உழைக்கும் மக்களை அடிமைகளாக்கி ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்வதற்கு எதற்கு ஒதுக்கீடுகளும், உள் ஒதுக்கீடுகளும்?

கல்வி, வேலை வாய்ப்பை எல்லோருக்குமானதாகக் கோருவதே பாட்டாளி வர்க்கத்தின் நிலைப்பாடு. இதை இலாபமே குறியாகக் கொண்டுள்ள முதலாளித்துவம் வழங்காது; வழங்கவும் முடியாது. அதை மக்கள் நலனைக் குறியாகக் கொண்டுள்ள சோசலிச உற்பத்திமுறைதான் நடைமுறைப்படுத்த முடியும். இப்போது நடக்கும் இடஒதுக்கீட்டிற்கான இருதரப்புச் சண்டையில் உழைக்கும் வர்க்கத்தை அவர்கள் பொருட்படுத்தவேயில்லை. எல்லோருக்கும் சமமான கல்வி, வேலை வாய்ப்பைத்  தர முடியாத முதலாளித்துவம் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பிரிவினரிலும் தனக்கான ஒரு அதிகாரவர்க்க நீட்சியை ஏற்படுத்துவதே இடஒதுக்கீட்டின் சாரம்.

மக்களின் பொருளாதார, வாழ்வியல் வலிகளை மறக்க, அவர்களை அதன் காரணத்திற்குள் போகாமல் வேறுபக்கம் திசைதிருப்பக் காலாவதியாகிப் போன கடந்த கால சமூக கண்ணோட்டத்திற்குள் மக்களை எதிரும், புதிருமாக நிறுத்தி இத்தகைய இடஒதுக்கீடு மற்றும் ஏனைய மத, இன, பிராந்திய, மொழி, விவகாரங்களை முன்வைக்கிறார்கள் முதலாளித்துவவாதிகள். சமூகத்தின் உளவியலை கொதிநிலையில் வைத்துக்கொண்டுதான் முதலாளித்துவம் குளிர்காய எத்தனிக்கிறது. இவற்றை உழைக்கும் வர்க்கத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதுதான் நமது அடிப்படை வேலை, அதைச் செவ்வனே செய்தால் போதும். வரலாற்றை மக்கள் புரிந்துகொண்ட அடுத்த கணமே சமரசமற்ற போராட்டத்தை முன்னெடுத்துப் புதிய வரலாற்றைப் படைப்பார்கள்.

- பாவெல் சூரியன்

Comments

Popular posts from this blog

தொழிலாளர் ஊதியங்கள் ஏன் எப்போதும் மிகவும் குறைவாகவே இருக்கின்றன?

  உங்கள் உழைப்புக்கு ஏற்ற மதிப்புக் கிடைப்பதில்லை , உங்களுக்குக் கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பை விடப் பலமடங்கு உழைத்திருப்பதாக எப்போதாவது நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா ? கார்ல் மார்க்ஸ் உங்களைப் புரிந்துகொள்கிறார் . ஒட்டுமொத்தத் தொழிலாளர் வர்க்கமும் முதலாளித்துவ வர்க்கத்தால் சுரண்டப்படுகிறது என்று அவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் வாதிட்டார் . இது வெறும் மிகைப்படுத்தல் கூற்று அல்ல , மாறாக ஒரு பொருளாதார உண்மையாகும் . தொழிலாளர்கள் உருவாக்கும் மதிப்பின் ஒரு பகுதியைத் திட்டமிட்ட முறையில் திருடுவதன் மூலம் மிகுதியான செல்வத்தைக் குவிப்பதே   முதலாளித்துவத் தொழில்நிறுவனத்தின் முழுமையான நோக்கமாகும் . இந்தச் செயல்முறையே சுரண்டல் என்று குறிப்பிடப்படுகிறது . தொழிலாளர்களுக்கு அவர்களுடைய தகுதிக்குரிய ஊதியம் அளிக்கப்படுகிறது என்று முதன்மைப்போக்கு பொருளியலாளர்கள் கூறிக்கொள்கின்றனர் . தொழிலாளர்களின் ஊதியங்கள் அவர்களால் உற்பத்திப் பொருளுக்கு “ கூட்டப்படும் மதிப்பை ” குறிக்கின்றன தூரத்து நாடுகளில் பழிபாவத்திற்கு அஞ்சாத முதலாளிகள்

பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் சீர்த்திருத்தவாதத்தில் வீழ்ந்துள்ள இடதுசாரி இயக்கங்கள்

இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இடதுசாரிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் சில அமைப்புகளின் போக்குகள் அவர்களின் சீர்த்திருத்தவாதக் கண்ணோட்டத்தை அம்பலபடுத்தி வருகின்றன. நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த காங்கிரசு கட்சி இந்திய முதலாளி வர்க்கத்தின் வளர்ச்சிக்கும் சுரண்டலுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்தும் , பெரும் மூலதனம் தேவைப்படும் கனரகத் தொழில்களை மக்களுடைய வரிப் பணத்திலிருந்து அமைத்துக் கொடுத்தும், ஆரம்பக் கட்டத்தில் பன்னாட்டு மூலதனங்களின் போட்டியிலிருந்து அவர்களைப் பாதுகாத்தும் , பின்னர் இந்திய முதலாளிகள் சர்வதேச அளவில் சந்தையைப் பிடிக்கவும் , முதலீடு செய்யவும் உலகமயமாக்கல் கொள்கையை முன்னெடுத்தும் தொடர்ந்து சேவை செய்து வந்தது. அதே நேரத்தில் தொழிலாளர்களின் நலனுக்காகவும் , விவசாயிகளின் நலனுக்காகவும் , ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும் போராடிய இடதுசாரிகள் , ஜனநாயக அமைப்புகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி ஒடுக்கி வந்தது. வீரம் செறிந்த தெலுங்கானா மக்களின்

வேலை பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் என்னும் நிறுவனம் ஒசூர் பகுதியில் 1998 முதல் செயல்பட்டு வருகின்றது . இது வெள்ளீயத்தால் ( தகரத்தால் ) ஆன கொள்கலன்களை , தகரக்குவளைகளை உற்பத்தி செய்கின்றது . இந்த ஆலையின் முதலாளி இந்தியாவை பூர்வீமாக கொண்டவராக இருந்தாலும் , தற்பொழுது கென்யாவில் வசித்து வருகின்றார் . தொடக்கம் முதலே இந்த ஆலையானது தொழிலாளர்களின் உழைப்பை வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்து வருகின்றது . வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் நீண்டநாட்கள் பணிபுரிந்து வந்தாலும் அவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யாமலும் , நியாயமான ஊதியம் வழங்காமலும் தொழிலாளர்களை வஞ்சித்து வந்தது . தொழிலாளர்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து 52 தொழிலாளர்கள் மட்டும் நிரந்தரம் செய்யப்பட்டனர் . இவர்களும் ஆறு வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் , பயிற்சித் தொழிலாளர்கள் என மாற்றிமாற்றி அவர்களை வகைபடுத்தி பின்னரே நிரந்தரம் செய்யப்பட்டனர் . அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைக்கப்பட்டுச் சுரண்டப்பட்டு வருகின்றனர் . தற்பொழுது வரை 450 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்பட