Skip to main content

பாசிசத்தின் மீதான தீர்மானம்

 

கிளாராஜெட்கினால் எழுதப்பட்ட இந்தத் தீர்மானம் கம்யூனிச அகிலத்தின் செயற்குழுவின் விரிவுபடுத்தப்பட்ட மூன்றாம் பிளீனத்தால் (பேரவையினால்) 23 ஜூன் 1923ல் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது பாசிசத்தை எதிர்த்து: எவ்வாறு போராடுவது மற்றும் எவ்வாறு வெற்றி பெறுவது (ஹேமார்க்கெட்புக்ஸ், 2017) என்னும் மிக் டேபர் (Mike Taber) மற்றும் ஜான் ரிடல் (John Riddell) தொகுப்புகளிலிருந்து மறுபதிப்பு செய்யப்பட்டது.

 - - - - 

பாசிசம் என்பது தகர்ந்து கொண்டிருக்கும் முதலாளித்துவப் பொருளாதாரம் மற்றும் சிதைந்து வரும் முதலாளித்துவ அரசின் வெளிப்பாடாகும். து இந்தக் காலகட்டத்தில் வீழ்ச்சியின் தனிச் சிறப்பான அறிகுறியாகும். எல்லாவற்றிற்கும் மேலாகப் பாசிசம் என்பது ஏகாதிபத்தியப் போரின் தாக்கம் மற்றும் விரைவாகவும், அதிகரித்த அளவிலும் நிலைகுலைந்து வரும் முதலாளித்துவப் பொருளாதாரம், பரந்த அடுக்கினரான சிறு மற்றும் நடுத்தர முதலாளிகள், சிறு விவசாயிகள் மற்றும் “அறிவுஜீவிகள்” மத்தியில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்திலும் வேர் கொண்டுள்ளது. இந்தப் போக்கானது, இந்த அடுக்கினரின் பழைய வாழ்க்கை நிலைமைகள் மற்றும் அவர்கள் ஏற்கனவே அனுபவித்து வந்த பாதுகாப்பையும் அழித்தொழித்ததன் மூலம் அவர்களின் நம்பிக்கையைத் தகர்த்தது. இந்தச் சமூக அடுக்கில் பலர் சீர்த்திருத்தவாதச் சோசலிசத்தின் மூலம் பெரிய முன்னேற்றம் கிடைக்கும் என்ற தெளிவற்ற எதிர்பார்ப்புகள் நிறைவேறாதது குறித்து ஏமாற்றமடைந்துள்ளனர்.

சீர்த்திருத்தவாதக் கட்சிகளும் தொழிற்சங்கத் தலைவர்களும் புரட்சியைக் காட்டிக் கொடுத்து, முதலாளித்துவத்திற்கு அடிபணிந்து பழையபடி வர்க்க ஆட்சியையும் வர்க்கச் சுரண்டலையும் மீட்டமைக்கும் வகையில் முதலாளித்துவத்துடன் கூட்டணியை உருவாக்கினர். இவையனைத்தையும்ஜனநாயகத்தின் பெயரால் அவர்கள் செய்தார்கள். இதன் விளைவாக, இந்த வகை "அனுதாபிகள்" பாட்டாளி வர்க்கத்தை சோசலிசத்தின் மீதும், விடுதலையைக் கொண்டு வருவதற்கான அதன் திறன் மீதும், சமூகத்தைப் புத்தமைப்பதன் மீதும் சந்தேகம் கொள்ளும் வகையில் வழி நடத்தி வருகின்றனர். சோவியத் ரசியாவிற்கு வெளியே உள்ள மிகப் பரந்த பெரும்பான்மைப் பாட்டாளிவர்க்கத்தினர் இத்தகைய காட்டிக் கொடுப்பை, போராட்டத்தைக் கண்டு அஞ்சும் ஊசலாட்டத்தால் சகித்துக் கொண்டுள்ளனர்; அவர்கள் மீதான சுரண்டல் மற்றும் அடிமைத்தனத்திற்கு ஒப்புக் கொடுக்கின்றனர். இது சிறு, நடுத்தர முதலாளி வர்க்கம் மற்றும் அறிவுஜீவிகளுக்கு மத்தியில் இருக்கும் போராடும் அடுக்கினருக்கு தொழிலாளி வர்க்கம் தீவிர சமூக மாற்றத்திற்கான சக்தி வாய்ந்த பிரதிநிதியாக இருக்கும் என்ற நம்பிக்கையை நொறுக்கியது. அவர்களுடன் அனைத்து அரசியல் கட்சிகளின் நடத்தையின் மீது அதிருப்தியுற்றுள்ள மற்றும் அதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரும் பல பாட்டாளி வர்க்கச் சக்திகள் இணைந்துள்ளன. இத்துடன் பாசிசமானது முன்னாள் அதிகாரிகள் எனும் சமூக அடுக்கினரை ஈர்த்துள்ளது, இவர்கள் யுத்தம் முடிந்தவுடன் தங்கள் பணியை இழந்தவர்கள். தற்பொழுது வருமானம் ஏதுமில்லாத நிலையில் அவர்களின் வர்க்க மூலத்திலிருந்து பிரிக்கப்பட்டு வேரோடு பிடுங்கி எறியப்பட்டதால் ஏமாற்றமடைந்துள்ளனர். இது குறிப்பாக, தோல்வியுற்ற மைய அதிகார நாடுகளில் (ஜெர்மனி மற்றும் ஆஸ்திரிய - ஹங்கேரி) உண்மையாக உள்ளது; அங்கு பாசிசம் வலுவான குடியரசு எதிர்ப்பு நிலையை எடுத்து உள்ளது.

அரசியல் கல்வியும் வரலாற்றுப் புரிதலும் இல்லாததால், சமூக ரீதியாக வேறுபட்ட, அவசரமாக ஒருங்கிணைந்துள்ள பாசிசத்தின் வன்முறைக் குழுக்கள் தங்களுடைய சொந்த உருவாக்கமான அரசு என்ற கருவி மூலம் எல்லாவற்றையும் சரிப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கின்றன. வர்க்கம் மற்றும் கட்சிக்கு அப்பாற்பட்டு நிற்பதாகக் கூறப்படும் இந்த அரசானது அதன் குழப்பமான, முரண்பாடான திட்டங்களை, “ஜனநாயகம்அல்லது சர்வாதிகாரத்தைப் பயன்படுத்தி, முதலாளித்துவச் சட்டத்தின்படியோ முதலாளித்துவச் சட்டத்தை மீறியோ எடுத்துச் செல்கிறது.

பாட்டாளி வர்க்கத்தின் எழுச்சி மற்றும் புரட்சிகரக் கொந்தளிப்பு நிலவும் காலகட்டத்தில் பாசிசமானது பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரக் கோரிக்கைகளுக்குக் குறிப்பிட்ட அளவிற்கு அடிபணிவது போன்று பாசாங்கு செய்கிறது.

பாசிசத்தைப் பின்தொடரும் வெகுமக்கள், உலக வரலாறு சார்ந்த வர்க்க முரண்பாடுகளை மறுப்பது மற்றும் வர்க்கப் போராட்டத்தை ஏற்பது என்ற இரண்டு படைகளுக்கிடையில் ஊசலாடுகின்றனர். இருப்பினும், மிகத் தொடக்கத்திலிருந்து அதன் தலைவர்கள் உறுதியளித்தபடி, முதலாளித்துவ ஆட்சி மீண்டும் உறுதிப்படுத்திய பின்பு, முதலாளித்துவம் பொதுதாக்குதலைத் தொடங்கியபோது பாசிசம் முதலாளித்துவத்தின் பக்கம் உறுதியுடன் வந்து நின்றது.

முதலாளித்துவம் தனக்குச் சேவை புரிவதற்காகவும், பாட்டாளி வர்க்கத்துடனான போராட்டத்தில் அதனை வீழ்த்தவும், நிரந்தரமாக அடிமையாக்கவும் பாசிசத்தை உடனடியாக பணியமர்த்துகிறது. முதலாளித்துவப் பொருளாதாரத்தின் தகர்வானது காலப்போக்கில் ஆழமாகவும் விரிவடைந்த வண்ணமும் உள்ளது; இதனால் திணிக்கப்படும் சுமைகளும் துயரங்களும் பாட்டாளி வர்க்கம் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்குச் செல்கின்றன. மேலும் உழைக்கும் மக்களின் அழுத்தத்திற்கு எதிராக, சமூக அமைதி, ஜனநாயக வர்க்க ஒத்துழைப்பு பற்றிய சீர்த்திருத்தப் போதனைகள் மூலம் முதலாளித்துவ அமைப்பிற்கு வழங்கப்பட்டு வந்த பதுகாப்பு பயனற்றதாக மாறுகிறது. பாட்டாளி வர்க்கத்திடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக முதலாளித்துவ வர்க்கத்திற்கு உறுதியான, ஆற்றல் மிக்க சக்தி தேவைப்படுகிறது. முதலாளித்துவ அரசின் பழைய மற்றும் வெளித்தோற்றத்தில் "அரசியல் சார்பற்றதாக" உள்ள அடக்குமுறைக் கருவி போதுமான பாதுகாப்பை இனியும் வழங்க முடியாது. முதலாளித்துவம் பாட்டாளி வர்க்கத்திற்கு எதிரான வர்க்கப் போராட்டத்திற்குச் சிறப்புக் குழுக்களை உருவாக்கத் தயாரகிறது. பாசிசம் அத்தகைய துருப்புகளை அளிக்கின்றது. பாசிசமானது அதன் தோற்றத்தில் புரட்சிகரப் போக்குகளுடன் தொடர்பு கொண்டிருந்தாலும் மற்றும் அதற்கு ஆதரவாக இருக்க கூடிய சக்திகளைத் தன்னகத்தே கொண்டிருந்தாலும் - போக்குகள் முதலாளித்துவத்திற்கும் அதன் அரசிற்கும் எதிராகத் திரும்ப முடியும் - இது எதிர்ப்புரட்சிக்கான ஆபத்தான சக்தியாக மாறும். இந்தப் போக்கு இது வெற்றி பெற்ற நாடான இத்தாலியில் தெளிவாகத் தெரிகிறது.

திட்டவட்டமான வரலாற்றுச் சூழலில் ஒவ்வொரு நாட்டிலும் பாசிசமானது வெவ்வேறு குணாம்சங்களை தெளிவாக வெளிப்படுத்துகிறது. ஆனால் இது அனைத்து இடங்களிலும் கொடூரமான, பயங்கரவாத வன்முறையையும் கூட்டாகத் தன்னிடத்தில் கொண்டுள்ளது. இத்துடன் புரட்சிகர ஏமாற்றுச் சொற்றோடர்களின் மூலம் பெருவாரியான உழைக்கும் மக்களின தேவைகளையும் உணர்வுகளையும் கிளர்ச்சிமிக்க சொற்பொழிவுகளால் இணைக்கிறது. இது வரையில் பாசிசமானது அதன் உச்சபட்சமான முதிர்ச்சியின் வெளிப்பாட்டை இத்தாலியில் அடைந்துள்ளது. இங்கு சோசலிசக் கட்சி மற்றும் சீர்த்திருத்தவாதத் தொழிற்சங்கத் தலைவர்களின் செயலற்றதன்மை அனைத்துக் கதவுகளையும் அதற்குத் திறந்து விட்டுள்ளன. அதன் புரட்சிகரப் பேச்சு அதன் வெற்றியைச் சாத்தியமாக்கக் கூடிய பல பாட்டாளி வர்க்க சக்திகளின் ஆதரவை அதற்குப் பெற்றுத் தந்துள்ளது.

இத்தாலியில் 1920 இல் தொழிற்சாலையைக் கைப்பற்றிய தொழிலாளர்களின் போராட்டங்களைக் கொண்டு பாட்டாளி வர்க்கப் போராட்டங்களைத் தீவிரப்படுத்தக் கட்சி மற்றும் தொழிற்சங்கங்களினால் இயலவில்லை; அந்த இயலாமையைப் பாசிசத்தின் வளர்ச்சி வெளிப்படுத்துகிறது. பாசிசத்தின் வெற்றியானது, தொழிலாளர்களின் அனைத்து நடவடிக்கைகளையும், சாதாரண அரசியல் தொடர்பில்லாத ஊதிய உயர்வு கோரிக்கைகளைக் கூட, வன்முறையின் மூலம் தடை செய்கிறது. இத்தாலியில் பாசிசத்தின் வெற்றியானது மற்ற நாடுகளின் முதலாளி வர்க்கம், பாட்டாளி வர்க்கத்தின் மீது அதே பாணியில் தாக்குதல் நிகழ்த்தத் தூண்டுகிறது. உலகம் முழுவதிலுமுள்ள தொழிலாளர் வர்க்கமும் அதன் இத்தாலியச் சகோதரர்களின் விதியினால் அச்சுறுத்தப்படுகிறது.

இருப்பினும், இத்தாலியில் பாசிசத்தின் வளர்ச்சியானது இதனோடு கூட வேறொன்றையும் வெளிப்படுத்துகிறது. பாசிசம் ஒரு முரண்பாடான பண்பைக் கொண்டுள்ளது; கருத்தியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தகர்வுகளையும் சிதைவுகளையும் கொண்ட பலமான கூறுகளைத் தன்னிடத்தில் கொண்டுள்ளது. அதன் இலக்கு பழைய முதலாளித்துவஜனநாயகஅரசை வன்முறையை அடிப்படையாக கொண்ட பாசிச அரசாக மறு உருவாக்கம் செய்வதாகும். இது முரண்பாடுகளைக் கட்டவிழ்த்து விடுகிறது; ஏற்கனவே நிறுவப்பட்ட பழைய அதிகாரவர்க்கத்திற்கும், புதிய பாசிச அதிகாரவர்க்கத்திற்கும் இடையில்; பழைய நிரந்தர இராணுவம், படைத் தலைமைகளுக்கும் மற்றும் புதிய சேமப் படை, அதன் தலைவர்களுக்கும் இடையில்; பலவந்தமான பாசிச பொருளாதாரக் கொள்கைகள், அதன் அரசுக்கும் மற்றும் இதர தாராளவாத முதலாளித்துவ ஜனநாயகக் கருத்தியலுக்கும் இடையில்; முடியாட்சியாளர்களுக்கும் குடியரசுவாதிகளுக்கும் இடையில்; மெய்யான பாசிஸ்டுகளுக்கும் (கருஞ்சட்டைகாரர்கள்) மற்றும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ள தேசியவாதிகள், அதன் சேமப்படைக்கும் இடையில்; மக்களை ஏமாற்றி வெற்றியை ஈட்டிய பாசிசத்தின் அசல் திட்டத்திற்கும், தொழில்துறை முதலாளி மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக கனரகத் தொழில்துறையின் நலன்களுக்காகச் சேவை புரியும், செயற்கையாக அதற்கு முட்டுக் கொடுக்கும் இன்றைய பாசிச அரசியலுக்கும் இடையில், இது முரண்பாடுகளைக் கட்டவிழ்த்து விடுகின்றது.

இருப்பினும், இந்த முரண்பாடுகள் மற்றும் இதரவற்றிற்கு அடிப்படையாக இருப்பது முதலாளித்துவத்தின் வேறுபட்ட சமூக அடுக்குகளான பெருமுதலாளிகள் மற்றும் சிறு, நடுத்தர முதலாளிவர்க்கத்தினரான சிறு விவசாயிகள் மற்றும் அறிவுஜீவிகளுக்கு இடையில் நிலவும் கடக்க முடியாத மற்றும் சமரசம் செய்ய முடியாத பொருளாதார, கலாச்சார முரண்பாடுகள் ஆகும். அனைத்துக்கும் மேலாக, அனைத்துப் பொருளாதார, சமூக முரண்பாடுகளுக்கும் மேலாக முதலாளித்துவ வர்க்கத்திற்கும் பாட்டாளி வர்க்கத்திற்கும் இடையிலான வர்க்க முரண்பாடு உயர்ந்து நிற்கிறது.

சுட்டிக் காட்டப்பட்டுள்ள முரண்பாடுகள் பாசிசத்தின் கருத்தியல் போண்டித்தனத்தின் வெளிப்பாடுகளில் காணப்படுகின்றன; பாசிசத்தின் நிகழ்ச்சி நிரலுக்கும் அது நிறைவேற்றப்படும் வழிமுறைக்கும் இடையேயான முரண்பாடுகளின் மூலம் வெளிப்படுகின்றன. இந்த முரண்பாடுகள் தீர்க்கப்படுவதை ஒழுங்கமைக்கப்பட்ட இராணுவப்படை மற்றும் மனச்சாட்சியற்ற வன்முறையின் மூலம் குறிப்பிட்ட காலத்திற்குத் தடுக்கமுடியும். இருந்தபோதிலும், இறுதியாக, இந்த முரண்பாடுகள் ஆயுதம் தாங்கிய படையில் வெளிப்படும், பாசிசத்தைத் துடைத்தெறியும்.

பாசிசம் அழியும் வரையில் பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர முன்னணிப் படை செயலற்ற முறையில் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. மாறாக, அதன் வரலாற்றுக் கடமை இந்த நிகழவுப்போக்கை உணர்வுபூர்வமாகவும் வீரியத்துடனும் விரைந்து முன்னெடுத்துச் செல்வதில் அடங்கியுள்ளது. பாசிசம் குழப்பத்திலும், அறியாமையிலும் உள்ள புரட்சிகரச் சக்திகளை உள்ளடக்கியுள்ளது; அந்தச் சக்திகள் முதலாளி வர்க்கத்தின் கொடூரமான சுரண்டல் மற்றும் அதன் வர்க்க ஆட்சிக்கு எதிரான பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்தோடு இணைவதற்கு வழி நடத்திச் செல்லப்பட வேண்டும். பாசிசத்தின் இராணுவரீதியான தோல்வி என்பது அதனைக் கருத்தியல் ரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் வெற்றி கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட வேண்டும்.

பாட்டாளி வர்க்கத்தின் உணர்வுப்பூர்வமான புரட்சிகர முன்னணிப் படைக்கு, இத்தாலியில் வெற்றி பெற்ற பாசிசத்திற்கும், உலகம் முழுவதும் உருவெடுத்து வரும் பாசிசத்திற்கும் எதிரான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய பணி உள்ளது. பாசிசம் அரசியல்ரீதியாக நிராயுதபாணியாக்கப்பட வேண்டும், வெற்றி கொள்ளப்பட வேண்டும். அதனுடைய வன்முறைச் செயல்பாடுகளுக்கு எதிராக, வலுவான, வெற்றிகரமான தற்காப்புநிலைக்குத் தொழிலாளர்களை அமைப்பாக்க வேண்டும். அதற்காகப் பின்வரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்:

I

பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தை தலைமையேற்று நடத்தக்கூடிய, வெவ்வேறு கண்ணோட்டங்களைக் கொண்ட தொழிலாளர் கட்சிகள் மற்றும் அமைப்புகளாலான, சிறப்பு அமைப்பு அனைத்து நாடுகளிலும் கட்டமைக்கப்பட வேண்டும். இந்த அமைப்பின் பணிகள்:

1. ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பாசிச இயக்கம் குறித்த தரவுகளைச் சேகரிக்க வேண்டும்.

2. பாசிச இயக்கத்தின் பகைமை வர்க்கக் குணாம்சங்கள் குறித்து தொழிலாளர் வர்க்கத்திற்கு முறையான கல்வி செய்தித்தாள் கட்டுரைகள், துண்டறிக்கைகள், சிறு வெளியீடுகள், சுவரொட்டிகள், கூட்டங்கள் மற்றும் இன்னும் பிறவற்றின் வழியாகத் தரப்படவேண்டும்.

3. பாட்டாளி வர்க்கமாகச் சமீபத்தில் மாறுதலடைந்த அல்லது அவர்களின் வாழ்நிலையின் காரணமாக தவிர்க்க முடியாமல் பாட்டாளி வர்க்கமாக மாற்றப்படும் அச்சுறுத்தலில் இருக்கும் வெகுமக்களுக்கு அவர்களின் நிலை பற்றியும் பெரும் முதலாளித்துவத்திற்குத் துணை நிற்கும் பாசிசத்தின் செயல்பாடுகள் குறித்தும் முறையான போதனையை அளிக்க வேண்டும்.

4. பாட்டாளி வர்க்கத்தின் மூலம் அணி திரட்டப்பட்டு, ஆயுத பாணியாக்கப்பட்ட தற்காப்பு இராணுவப் பிரிவுகளைக் கொண்டு தற்காப்புப் போராட்டங்களைக் கட்டமைக்கவேண்டும். இளைஞர்கள் மத்தியிலான பிரச்சாரத்தில் பாசிசம் கவனம் செலுத்தி வருகின்றது; அந்த இளம் தொழிலாளர்களை ஐக்கிய முன்னணிக்குள் கொண்டு வரவேண்டும். 17 வயதிற்கு மேற்பட்ட இளைஞர்கள் அனைவரும் பொதுவான பட்டறை அடிப்படையில் போரிடும் ஆயுதக் குழுவிற்குள் பணியமர்த்தப்பட வேண்டும். பாசிசப் படைகளும் அவர்களுடைய ஆயுதங்களும் வேறு இடங்களுக்குச் செல்வதைத் தடுக்கத் தொழிலாளர்கள் கட்டுப்பாட்டுப் பிரிவு உருவாக்கப்பட வேண்டும். தொழிலாளர்களை அச்சுறுத்தும் மற்றும் அவர்களின் வர்க்கச் செயல்பாடுகளின் வெளிப்பாடுகளைத் தடுக்கும் பாசிஸ்டுகளின் முயற்சிகள் கருணையின்றி ஒடுக்கப்பட வேண்டும்.

5. வேறுபட்ட கண்ணோட்டங்களைக் கொண்ட அனைத்துத் தொழிலாளர்களும் இந்த வர்க்கப் போராட்டத்திற்குள் கொண்டு வரப்படவேண்டும். அனைத்துத் தொழிலாளர் கட்சிகள், தொழிற் சங்கங்கள் மற்றும் பாட்டாளி வர்க்க மக்கள்திரள் அமைப்புகள் பாசிசத்திற்கு எதிரான பொதுவான தற்காப்பு நடவடிக்கையில் சேர அழைக்கப்பட வேண்டும்.

6. பாசிசத்திற்கு எதிரான போராட்டம் பாராளுமன்றம் மற்றும் அனைத்துப் பொது நிறுவனங்களிலும் தேவையாக உள்ளது. புதிய உலகப் போரைத் தூண்டும் அபாயமுள்ள ஏகாதிபத்திய, குறுகிய தேசிய வெறித்தன்மை கொண்ட பாசிசத்திற்கு எதிராக வலுவான அழுத்தம் தரப்பட வேண்டும்.

II

பாசிச சக்திகள் சர்வதேச அளவில் ஒழுங்கமைக்கப்படுகின்றன. எனவே பாசிசத்திற்கு எதிரான தொழிலாளர்களின் போராட்டமும் உலகளவில் ஒழுங்கமைக்கப்படவேண்டும். அதற்காக சர்வதேசத் தொழிலாளர் குழு ஒன்று அவசியம் உருவாக்கப்பட வேண்டும். இந்தக் கமிட்டியின் பணியானது, தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதும் எல்லாவற்றிற்கும் மேலாக இத்தாலிய பாசிசம் மற்றும் அதன் வெளி நாட்டுப் பிரதிநிதிகளுக்கு எதிராகச் சர்வதேசச் செயல்பாடுகளை ஒருங்கமைப்பதும் ஆகும். இந்தப் போராட்டம் பின்வரும் நடவடிக்கைகளைக் கொண்டுள்ளது.

1.தொழிலாளர்கள் மீதான இத்தாலியப் பாசிசத் தலைமையின் ஒட்டுமொத்த வெறுப்பு மற்றும் தொழிலாளர்களின் அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் மீதான அதன் திட்டமிட்ட அழித்தொழிப்பு குறித்துச் செய்தித் தாள்கள், துண்டுப் பிரசுரம், சுவரொட்டி மற்றும் பொதுக்கூட்டங்கள் வாயிலாக சர்வதேசக் கல்வியை பரப்புரை செய்ய வேண்டும்.

2. பாசிசம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இத்தாலியப் பாசிசத்தின் பிரதிநிதிகளுக்கு எதிராகச் சர்வதேசப் பொதுக்கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டும்.

3. பாராளுமன்றத்தில் உள்ள தொழிலாளர் பிரிவுகள் மற்றும் சர்வதேசத் தொழிலாளர் அமைப்புகள், இத்தாலியில் தொழிலாளர் வர்க்கத்தின் நிலைமையை ஆராயக் குழுவை அனுப்ப வேண்டும் எனப் பாராளுமன்றத்தில் கோரிக்கை வைக்க வேண்டும், அதற்காகப் போராடவேண்டும்.

4. கைது செய்யப்பட்டுள்ள அல்லது சிறையிலடைக்கப்பட்டுள்ள கம்யூனிஸ்டுகள், சோசலிஸ்டுகள், கட்சி சாராத தொழிலாளர்கள் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்யக்கோரிப் போராடவேண்டும்.

5. இத்தாலிக்கு எதிராகச் சர்வதேச அளவில் அனைத்துத் தொழிலாளர்களும் புறக்கணிப்பை நடத்தவேண்டும். இத்தாலிக்கு கப்பலில் நிலக்கரி ஏற்றுவதற்கு மறுக்க வேண்டும். இத்தாலிக்குப் பொருட்களை ஏற்றவும் மற்றும் இத்தாலியிலிருந்து வெளியே பொருட்களை எடுத்துச் செல்லவும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் மறுப்புத் தெரிவிக்க வேண்டும். அதற்காக, சுரங்கத் தொழிலாளர்கள், மாலுமிகள், ரயில்வே தொழிலாளர்கள் மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் என அனைத்துத் துறைகளிலும் சர்வதேச அளவிலான குழுவை உ ருவாக்கவேண்டும்.

6. நிதி திரட்டல், அகதிகளுக்குத் தங்கும் வசதிகளை ஏற்பாடு செய்து தருதல், வெளிநாடுகளுக்குச் சென்று வேலை செய்ய உதவி புரிதல் ஆகிய வழிகளின் மூலம் பாதிக்கப்பட்ட இத்தாலியத் தொழிலாளர்களுக்குப் பொருளாதாரரீதியாகவும், தார்மீகரீதியாகவும் ஆதரவளித்தல். இந்த வேலைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு சர்வதேசச் செஞ்சேவையை1 (Red Aid) விரிவுபடுத்தவேண்டும். இதற்கு உதவி புரியும் வகையில் தொழிலாளர்களின் கூட்டுறவுகளை ஈடுபடுத்த வேண்டும்.

வர்க்க உணர்வற்ற சக்திகள் பாசிசத்தை நோக்கிச் செல்வதை ஆளும் வர்க்கத்திற்கு எதிரான சக்தி வாய்ந்த புரட்சிகரப் போராட்டங்கள் மூலம் தடுக்கவில்லை எனில், இத்தாலி பாட்டாளி வர்கக்த்தின் தலைவிதிதான் அவர்களுக்கும் வரக்கூடும் என்பதை உள்நாட்டில் உள்ள தொழிலாளர்களின் கவனத்திற்குக் கொண்டு வரவேண்டும். ஆகையினால், முதலாளியத்துவத்திற்கு எதிரான தாக்குதலிலும், சுரண்டல், கடு வட்டி, அடக்குமுறை ஆகியவற்றிலிருந்து உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பரந்துபட்ட மக்கள் திரளைப் பாதுகாப்பதிலும் தொழிலாளர் அமைப்புகள் தங்களுடைய மாபெரும் ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும். இந்த வழியின் மூலமாக அவை உண்மையான உணர்வுடன் அமைப்பாக்கப்பட்ட மக்கள்திரள் போராட்டத்தை பாசிசத்தின் போலிப் புரட்சிகர மற்றும் வாய்ச் சவடால் முழக்கங்களுக்கு எதிராக நிறுத்த முடியும். இதனோடு தங்களுடைய சொந்த நாட்டில் பாசிசத்திற்கு எதிரான ஆற்றல் மிக்க போராட்டத்தின் மூலமே இத்தாலியிலும், சர்வதேச அளவிலும் பாசிசத்தை மிகவும் வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதைக் கவனத்தில் கொண்டு, அவர்கள் சொந்த நாட்டில் பாசிசம் உருக்கொள்வதை அதன் முதன் முயற்சியிலேயே வீழ்த்த வேண்டும்.

-          கிளாரா ஜெட்கின்

(தமிழில் குமணன்)

 - - - - 

அடிக்குறிப்பு;

1.உலகளவில் வர்க்கப் - போராட்டக் கைதிகளைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு 1922 இன் பிற்பகுதியில் கம்யூனிஸ்ட் அகிலத்தினால் 'சர்வதேசச் செஞ்சேவை’ (கம்யூனிஸ்ட்உதவி) (Red Aid) நிறுவப்பட்டது. 1925 முதல் கிளாராஜெட்கின் அதன் தலைவராகப் பணியாற்றினார்.



Comments

Popular posts from this blog

சாம்சங் தொழிலாளர் போராட்டம்: தலைமைக்கு வெற்றி - தொழிலாளர்களுக்கு பின்னடைவு

  தொழிற்சங்க அங்கீகாரத்தை முதன்மைக் கோரிக்கையாகவும் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் 37 நாட்களுக்கும் மேலாக வேலைநிறுத்தம் செய்து வந்த ‘ சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் ’ போராட்டம் , அது முன்வைத்த கோரிக்கைகளில் எதுவும் நிறைவேற்றப்படாமலேயே 15.10.2024 அன்று முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.   போராட்டங்கள் எப்பொழுதும் வெற்றியை மட்டுமே தருவதில்லை , வெற்றி மற்றும் தோல்வி இரண்டுமே மாறி மாறி வரக்கூடியதுதான் போராட்டக்களம். சில நேரங்களில் பெரும் இழப்புகளோடு கூட போராட்டக் களத்திலிருந்து பின்வாங்க வேண்டிய சூழல் ஏற்படும் , அந்தச் சூழலை உணர்ந்து போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டிய தேவையும் ஏற்படும். இதில் ஏற்பட்ட அனுபவத்தைத் தொகுத்துக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதற்கான படிப்பினையை இது கொடுக்கும். ஆனால் , போராட்டத்தின் போக்கு தொழிலாளர்களின் நலனை முன்னிறுத்தாமல் , ஏமாற்றும் போக்கைக் கைக்கொள்ளும் பொழுது அது ஒட்டுமொத்தத் தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்கே எதிராகக் கொண்டு போய் விடுகின்றது.   சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்திற்குத் தலைமை கொடுத்

வேலை பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் என்னும் நிறுவனம் ஒசூர் பகுதியில் 1998 முதல் செயல்பட்டு வருகின்றது . இது வெள்ளீயத்தால் ( தகரத்தால் ) ஆன கொள்கலன்களை , தகரக்குவளைகளை உற்பத்தி செய்கின்றது . இந்த ஆலையின் முதலாளி இந்தியாவை பூர்வீமாக கொண்டவராக இருந்தாலும் , தற்பொழுது கென்யாவில் வசித்து வருகின்றார் . தொடக்கம் முதலே இந்த ஆலையானது தொழிலாளர்களின் உழைப்பை வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்து வருகின்றது . வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் நீண்டநாட்கள் பணிபுரிந்து வந்தாலும் அவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யாமலும் , நியாயமான ஊதியம் வழங்காமலும் தொழிலாளர்களை வஞ்சித்து வந்தது . தொழிலாளர்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து 52 தொழிலாளர்கள் மட்டும் நிரந்தரம் செய்யப்பட்டனர் . இவர்களும் ஆறு வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் , பயிற்சித் தொழிலாளர்கள் என மாற்றிமாற்றி அவர்களை வகைபடுத்தி பின்னரே நிரந்தரம் செய்யப்பட்டனர் . அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைக்கப்பட்டுச் சுரண்டப்பட்டு வருகின்றனர் . தற்பொழுது வரை 450 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்பட

பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் சீர்த்திருத்தவாதத்தில் வீழ்ந்துள்ள இடதுசாரி இயக்கங்கள்

இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இடதுசாரிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் சில அமைப்புகளின் போக்குகள் அவர்களின் சீர்த்திருத்தவாதக் கண்ணோட்டத்தை அம்பலபடுத்தி வருகின்றன. நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த காங்கிரசு கட்சி இந்திய முதலாளி வர்க்கத்தின் வளர்ச்சிக்கும் சுரண்டலுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்தும் , பெரும் மூலதனம் தேவைப்படும் கனரகத் தொழில்களை மக்களுடைய வரிப் பணத்திலிருந்து அமைத்துக் கொடுத்தும், ஆரம்பக் கட்டத்தில் பன்னாட்டு மூலதனங்களின் போட்டியிலிருந்து அவர்களைப் பாதுகாத்தும் , பின்னர் இந்திய முதலாளிகள் சர்வதேச அளவில் சந்தையைப் பிடிக்கவும் , முதலீடு செய்யவும் உலகமயமாக்கல் கொள்கையை முன்னெடுத்தும் தொடர்ந்து சேவை செய்து வந்தது. அதே நேரத்தில் தொழிலாளர்களின் நலனுக்காகவும் , விவசாயிகளின் நலனுக்காகவும் , ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும் போராடிய இடதுசாரிகள் , ஜனநாயக அமைப்புகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி ஒடுக்கி வந்தது. வீரம் செறிந்த தெலுங்கானா மக்களின்