Skip to main content

ஹோ சி மின் - நான் எவ்வாறு கம்யூனிஸ்டு ஆனேன்

 

முதல் உலகப் போருக்குப் பிறகு, நான் பாரிசில் வசிக்கத் தொடங்கினேன், ஒருபோது புகைப்படக் கலைஞரிடம் புகைப் படங்களைச் சீர்ப்படுத்துபவனாக, ஒருபோதுசீனப் பழம்பொருட்கள்” (ஃபிரான்சில் தயாரிக்கப்பட்டவை!) வண்ணம் பூசுபவனாக வேலை செய்தேன். வியட்நாமில் பிரெஞ்சுக் காலனியவாதிகள் புரிந்த குற்றச் செயல்களைக் கண்டிக்கும் பிரசுரங்களை விநியோகித்தேன்.

அந்த நேரத்தில், உள்ளுணர்வால் மட்டுமே நான் அக்டோபர் புரட்சியை ஆதரித்தேன், அதன் வரலாற்று முக்கியத்துவம் அனைத்தையும் நான் இன்னும் உள்வாங்கிக் கொண்டிருக்கவில்லை. நான் லெனினை நேசித்தேன், போற்றினேன், ஏனென்றால் அவர் தனது நாட்டு மக்களை விடுவித்த மாபெரும் நாட்டுப் பற்றாளராக இருந்தார், அதுவரை நான் அவரது புத்தகங்கள் எதையும் வாசித்திருக்கவில்லை.

பிரெஞ்சு சோசலிசக் கட்சியில் நான் சேர்ந்ததற்குக் காரணம் அந்த தருணத்தில்சீமாட்டிகளும் கனவான்களும்என்று நான் விளித்த அந்தத் தோழர்கள் என்னிடமும் ஒடுக்கப்பட்ட மக்களினங்களின் போராட்டங்களின் பாலும் அனுதாபம் காட்டினர். ஆனால் அப்போது ஒரு கட்சி என்பது என்ன, தொழிற்சங்கம் என்பது என்ன, அல்லது சோசலிசம், கம்யூனிசம் என்பது என்ன என்று புரிந்துகொண்டிருக்கவில்லை.

சோசலிசக் கட்சி இரண்டாம் அகிலத்தில் நீடித்திருக்க வேண்டுமா, இரண்டரையாவது சோசலிச அகிலம் தோற்றுவிக்கப்பட வேண்டுமா, அல்லது சோசலிசக் கட்சி லெனினின் மூன்றாவது அகிலத்தில் சேர்ந்துகொள்ள வேண்டுமா என்ற கேள்வி குறித்து சோசலிசக் கட்சியின் கிளைகளில் காரசாரமான விவாதங்கள் நடந்து கொண்டிருந்தன. வாரத்தில் இரண்டு அல்லது மூன்றுமுறை நான் அந்தக் கூட்டங்களில் தவறாமல் கலந்துகொண்டு கவனத்துடன் விவாதத்தைக் கவனித்தேன். முதலில் என்னால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. இந்த விவாதங்கள் ஏன் இவ்வளவு காரசாரமாக இருந்தன? இரண்டாவது, அல்லது இரண்டரையாவது அல்லது மூன்றாவது அகிலத்தில் சேர்ந்துதான் புரட்சியை நடத்த முடியுமா? முதலாவது அகிலத்தைப் பொருத்தவரை, அதற்கு என்ன ஆனது?

நான் பெரிதும் தெரிந்துகொள்ள விரும்பியதுஇது துல்லியமாக இந்தக் கூட்டங்களில் விவாதிக்கப்படவில்லைஎன்னவென்றால், எந்த அகிலம் காலனிய நாடுகளுடன் நிற்கிறது என்பதே.

ஒரு கூட்டத்தில் நான் இந்தக் கேள்வியை எழுப்பினேன். – எனது கருத்துப்படி இது மிகவும் முக்கியமானதாக இருந்தது.  சில தோழர்கள் இதற்குப் பதிலளித்தனர்: அது மூன்றாவது, இரண்டாவது அல்ல. எல் ஹியூமனைட் வெளியிட்ட லெனினின்தேசிய மற்றும் காலனியப் பிரச்சனைகள் குறித்த ஆய்வுரையைஒரு தோழர் என்னிடம் வாசிக்கக் கொடுத்தார்.

இந்த ஆய்வுரையில் புரிந்துகொள்ளக் கடினமான அரசியல் சொல்லாடல்கள் இருந்தன. ஆனால் அதை மீண்டும் மீண்டும் வாசித்ததன் மூலம், இறுதியாக அதன் முதன்மையான பகுதியை என்னால் உள்வாங்கிக் கொள்ள முடிந்தது என்ன ஓர் உணர்ச்சி, என்ன உற்சாகம், என்ன தெளிவான பார்வை, என்ன ஒரு நம்பிக்கையை அது என்னுள் விதைத்தது! எனது கண்களில் நீர் வரக் களிப்படைந்தேன். எனது அறையில் நான் தனியாக அமர்ந்து கொண்டிருந்தாலும், மிகப் பெரிய கூட்டத்திற்கு முன்பு உரையாற்றிக் கொண்டிருந்தது போல உரக்கக் கத்தினேன். “அன்புத் தியாகிகளே! நாட்டு மக்களே! இதுதான் நமக்குத் தேவை! இதுதான் நமது விடுதலைக்கான பாதை!”

அதன் பிறகு, லெனினிடம், மூன்றாவது அகிலத்திடம் முழுமையாக நம்பிக்கை கொண்டேன்.

முன்னதாக, கட்சிக் கிளையின் கூட்டங்களின்போது,  நான் விவாதத்தை மட்டுமே கவனித்தேன்; அனைத்தும்  தர்க்கரீதியாக இருந்தன, யார் சரி, யார் தவறு என்று வேறுபடுத்திக் காண முடியாதவாறு நான் ஒரு தெளிவற்ற நம்பிக்கை கொண்டிருந்தேன். ஆனால் அதிலிருந்து, நானும் விவாதத்தில் குதித்தேன், பேரார்வத்துடன் விவாதித்தேன் இருந்தாலும் எனது சிந்தனைகளைச் சரியான முறையில் வெளிப்படுத்தும் அளவுக்குப் பிரெஞ்சு மொழியில் தேர்ச்சி பெறாமல் இருந்தேன், லெனினையும் மூன்றாவது அகிலத்தையும் தாக்கும் குற்றச்சாட்டுக்களை உத்வேகத்துடன் தகர்த்தெறிந்தேன். எனது ஒரே வாதம்: “நீங்கள் காலனியவாதத்தைக் கண்டிக்க மாட்டீர்கள் என்றால், நீங்கள் காலனிய மக்களின் பக்கம் நிற்கவில்லை என்றால், நீங்கள் என்ன வகையான புரட்சியை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்?”

எனது சொந்தக் கட்சிக் கிளைக் கூட்டங்களில் மட்டுமின்றி, எனதுநிலைப்பாட்டைநிலைநாட்டுவதற்காக கட்சியின் பிற கிளைகளுக்கும் சென்றேன். இப்போது தோழர்கள் மார்சல் காசின், வைலன்ட் கூற்றியர், மன்மூசோ மற்றும் பலர் எனது அறிவை விசாலப்படுத்திக் கொள்ள உதவினார்கள் என்பதைக் கட்டாயம் மீண்டும் கூற வேண்டும்.  இறுதியாக, டூர்ஸ் பேராயத்தில், மூன்றாவது அகிலத்தில் நாங்கள் சேர்ந்து கொள்வதற்கு அவர்களுடன் நானும் வாக்களித்தேன்.

முதலில், நாட்டுப் பற்றுத்தான், கம்யூனிசம் அல்ல, லெனினிடமும் மூன்றாவது அகிலத்திலும் நம்பிக்கை வைப்பதற்கு என்னை இட்டுச் சென்றது. படிப்படியாக, போராட்டத்தினூடாக, நடைமுறைச் செயல்பாடுகளுடன் பங்கேற்று, கூடவே இணையாக மார்க்சிய-லெனினியத்தையும் கற்றுக்கொன்டதன் மூலம், சோசலிசமும் கம்யூனிசமும் மட்டுமே உலகெங்கும் ஒடுக்கப்பட்ட தேசங்களையும் உழைக்கும் மக்களையும் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க முடியும் என்ற உண்மையைக் கண்டடைந்தேன்.

எங்கள் நாட்டிலும் சீனாவிலும் அதிசய அறிவுப் புத்தகம்பற்றிய புராணக் கதை இருக்கிறது. மாபெரும் இடர்ப்பாடுகளை எதிர்கொள்ளூம் போது, ஒருவர் அதைத் திறந்து, இடர்ப்பாட்டிலிருந்து வெளிவரும் ஒரு வழியைக் கண்டுபிடிப்பார். லெனினியம் என்பது அதிசயஅறிவுப் புத்தகம்மட்டுமல்ல, வியட்நாம் புரட்சியாளர்களுக்கும் மக்களுக்கும் ஒரு திசைவழிகாட்டியும் ஆகும். அது இறுதி வெற்றிக்கு, சோசலிசத்துக்கு, கம்யூனிசத்துக்குச் செல்லும் நமது பாதையில் சுடரொளி வீசும் சூரியனுமாகும்

                                                                                       

                                                                        (தமிழில் : நிழல்வண்ணன்)

_______________________________________

1960 இல், கிழக்கின் பிரச்சனைகள் என்ற தலைப்பில் சோவியத் இதழ் ஒன்றில், வெளியிடப்பட்ட கட்டுரைஹோ-சி-மின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புக்கள், தொகுதி 4 (ஹனோய்: அயல்மொழிகள் வெளியீட்டகம், 1962) 


Comments

Popular posts from this blog

தொழிலாளர் ஊதியங்கள் ஏன் எப்போதும் மிகவும் குறைவாகவே இருக்கின்றன?

  உங்கள் உழைப்புக்கு ஏற்ற மதிப்புக் கிடைப்பதில்லை , உங்களுக்குக் கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பை விடப் பலமடங்கு உழைத்திருப்பதாக எப்போதாவது நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா ? கார்ல் மார்க்ஸ் உங்களைப் புரிந்துகொள்கிறார் . ஒட்டுமொத்தத் தொழிலாளர் வர்க்கமும் முதலாளித்துவ வர்க்கத்தால் சுரண்டப்படுகிறது என்று அவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் வாதிட்டார் . இது வெறும் மிகைப்படுத்தல் கூற்று அல்ல , மாறாக ஒரு பொருளாதார உண்மையாகும் . தொழிலாளர்கள் உருவாக்கும் மதிப்பின் ஒரு பகுதியைத் திட்டமிட்ட முறையில் திருடுவதன் மூலம் மிகுதியான செல்வத்தைக் குவிப்பதே   முதலாளித்துவத் தொழில்நிறுவனத்தின் முழுமையான நோக்கமாகும் . இந்தச் செயல்முறையே சுரண்டல் என்று குறிப்பிடப்படுகிறது . தொழிலாளர்களுக்கு அவர்களுடைய தகுதிக்குரிய ஊதியம் அளிக்கப்படுகிறது என்று முதன்மைப்போக்கு பொருளியலாளர்கள் கூறிக்கொள்கின்றனர் . தொழிலாளர்களின் ஊதியங்கள் அவர்களால் உற்பத்திப் பொருளுக்கு “ கூட்டப்படும் மதிப்பை ” குறிக்கின்றன தூரத்து நாடுகளில் பழிபாவத்திற்கு அஞ்சாத முதலாளிகள்

பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் சீர்த்திருத்தவாதத்தில் வீழ்ந்துள்ள இடதுசாரி இயக்கங்கள்

இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இடதுசாரிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் சில அமைப்புகளின் போக்குகள் அவர்களின் சீர்த்திருத்தவாதக் கண்ணோட்டத்தை அம்பலபடுத்தி வருகின்றன. நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த காங்கிரசு கட்சி இந்திய முதலாளி வர்க்கத்தின் வளர்ச்சிக்கும் சுரண்டலுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்தும் , பெரும் மூலதனம் தேவைப்படும் கனரகத் தொழில்களை மக்களுடைய வரிப் பணத்திலிருந்து அமைத்துக் கொடுத்தும், ஆரம்பக் கட்டத்தில் பன்னாட்டு மூலதனங்களின் போட்டியிலிருந்து அவர்களைப் பாதுகாத்தும் , பின்னர் இந்திய முதலாளிகள் சர்வதேச அளவில் சந்தையைப் பிடிக்கவும் , முதலீடு செய்யவும் உலகமயமாக்கல் கொள்கையை முன்னெடுத்தும் தொடர்ந்து சேவை செய்து வந்தது. அதே நேரத்தில் தொழிலாளர்களின் நலனுக்காகவும் , விவசாயிகளின் நலனுக்காகவும் , ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும் போராடிய இடதுசாரிகள் , ஜனநாயக அமைப்புகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி ஒடுக்கி வந்தது. வீரம் செறிந்த தெலுங்கானா மக்களின்

வேலை பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் என்னும் நிறுவனம் ஒசூர் பகுதியில் 1998 முதல் செயல்பட்டு வருகின்றது . இது வெள்ளீயத்தால் ( தகரத்தால் ) ஆன கொள்கலன்களை , தகரக்குவளைகளை உற்பத்தி செய்கின்றது . இந்த ஆலையின் முதலாளி இந்தியாவை பூர்வீமாக கொண்டவராக இருந்தாலும் , தற்பொழுது கென்யாவில் வசித்து வருகின்றார் . தொடக்கம் முதலே இந்த ஆலையானது தொழிலாளர்களின் உழைப்பை வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்து வருகின்றது . வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் நீண்டநாட்கள் பணிபுரிந்து வந்தாலும் அவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யாமலும் , நியாயமான ஊதியம் வழங்காமலும் தொழிலாளர்களை வஞ்சித்து வந்தது . தொழிலாளர்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து 52 தொழிலாளர்கள் மட்டும் நிரந்தரம் செய்யப்பட்டனர் . இவர்களும் ஆறு வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் , பயிற்சித் தொழிலாளர்கள் என மாற்றிமாற்றி அவர்களை வகைபடுத்தி பின்னரே நிரந்தரம் செய்யப்பட்டனர் . அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைக்கப்பட்டுச் சுரண்டப்பட்டு வருகின்றனர் . தற்பொழுது வரை 450 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்பட