விழித்தெழுந்திட்ட பெண் நான்
எரிக்கப்பட்ட
எனது குழந்தைகளின் சாம்பலினூடாக
உதித்தெழுந்து
புயலானவள் நான்
பீரிட்ட
எனது சகோதரனின் குருதியோடையிலிருந்து
உதித்தெழுந்து
புயலானவள் நான்.
எனது தேசத்தின் சீற்றமே எனக்கு ஆற்றலை அளித்தது
அழிக்கப்பட்ட,
எரிக்கப்பட்ட எனது கிராமங்கள்
எதிரிக்கு
எதிரான வெறுப்பை எனக்குள் நிரப்பின
ஓ, எம் நாட்டு மக்களே!
நான் பலவீனமானவள், திறனற்றவள்
என்று இனியும் கருதாதீர்
விழித்தெழுந்திட்ட
ஆயிரக்கணக்கான பெண்களுடன்
எனது குரல் கலந்துவிட்டது
எனது கரங்கள்
ஆயிரக்கணக்கான
போராளிகளின் கரங்களை
இறுகப்
பற்றிக்கொண்டுள்ளன.
இந்தத்
துயரங்கள் அனைத்தையும் துடைத்தெறிய
அடிமை விலங்குகள் அனைத்தையும் உடைத்தெறிய
விழித்தெழுந்துவிட்ட
பெண் நான்
எனது பாதையை நான் கண்டுகொண்டேன்
ஒருபோதும்
திரும்பமாட்டேன்.
ஆப்கானிஸ்தானத்தின் மகத்தான கவிதாயினி மீனா பெண்விடுதலைக்காகப் போராடி உயிரீந்தவர். 1977 இல் ஆப்கானிஸ்தான் புரட்சிகரப் பெண்கள் சங்கத்தைத் தோற்றுவித்தவர். இசுலாமிய தீவிரவாதிகளுக்கும் இரசிய ஆக்கிரமிப்பாளர்களுக்கும் எதிராகப் பெண்களின் உரிமைகளுக்காகத் தீவிரப் போராட்டங்களில் ஈடுபட்டவர். அவர் 1987 இல் பாகிஸ்தானின் குவெட்டாவில் அடிப்படைவாதிகளால் கொல்லப்பட்டார். அவர் தோற்றுவித்த அமைப்பு அமெரிக்க ஆக்கிரமிப்புக்கும் தலிபான் தீவிரவாதிகளுக்கும் எதிராகத் தொடர்ந்து போராடி வருகிறது. கொல்லப்படுவதற்குச் சில மாதங்களுக்கு முன்பு மீனா எழுதிய கவிதையின் ஒரு பகுதி.
ஆங்கிலத்தில்:
ஷம்சுல் இஸ்லாம்
தமிழில்:
நிழல்வண்ணன்
நன்றி:
countercurrents.org
Comments
Post a Comment